search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருப்பதி ஏழுமலை
    X
    திருப்பதி ஏழுமலை

    கோடி புண்ணியம் தரும் திருப்பதி ஏழுமலைகளுக்கான மந்திரம்

    பாதயாத்திரையாக 7 மலைகளை கடந்து செல்பவர்கள் ஒவ்வொரு மலையை அடையும் போதும் இந்த மந்திரத்தை உச்சரித்து செல்பவர்களின் பாவங்கள் நீக்கப்பட்டு கோடி புண்ணியம் ஏற்படும்.
    ஏழு மலைகளை தாண்டி இறைவனை தரிசிக்க செல்ல வேண்டும் என்பதால் அந்த பெருமாளை ‘ஏழுமலையான்’ என்று அழைக்கின்றோம். பெருமாள் குடிகொண்டிருக்கும் திருப்பதியில் ஏழு மலைகள் உள்ளது என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று. இந்த ஏழு மலைகளுடன் சேர்த்து மற்ற ஏழு சிறப்புகளை பற்றியும், ஏழு மலைகளுக்கு உண்டான மந்திரத்தை பற்றியும் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

    ஏழுமலையின் பெயர்கள்: கருடாத்ரி, விருஷபாத்ரி, அஞ்சனாத்ரி, நீலாத்ரி, சேஷாத்ரி, வேங்கடாத்ரி, நாராயணாத்ரி

    நீலாத்ரி

    நீலப்பெருவரையை மேவும் நெடுமாலை,
    மூலப்பொருளை, முழுமையினை- கோலத்
    துளப மணிமார்பின் தூயோனை, நெஞ்சில்
    உளனை ஒருவனையே நம்பு.

    அஞ்சனாத்ரி:

    மைக்குன்றம் கொண்டானை, மாசு மனத்தகத்தே
    பொய்கின்ற வாறு புரிந்தானை – மெய்க்கென்றும்
    வித்தாகி நின்றானை வேங்கடத்து மாமணியை
    எத்தாலும் நெஞ்சமே ஏத்து.

    கருடாத்ரி:

    பருந்தின் வரையுடையான் பாவனனெம் நெஞ்சில்
    இருந்து நிறைந்த இயல்பில் – பொருந்தியாம்
    அற்றேம் மனப்பிணிகள், உற்றேமே
    இன்பமெலாம் பெற்றேரும் பெறற்கரிய பேறு.

    சேஷாத்ரி:

    பார்தாங்கும் பாந்தள் பெருநாகத் துற்றானைச்
    சார்வாரைத் துன்பங்கள் சாராவாம் – சீர்பெற்றிம் மண்ணிலுறை
    வானோர் போல் வாழ்வாராம் மாநிலத்தீர்
    உண்மையிது கேளீர் உவந்து.

    வ்ருஷபாத்ரி:

    இடபப் பெருமலையில் ஏறியவர்க்கு (உ)ண்டோ
    இடரும் பிறவித் தொடரும் – சுடரும்
    திருவாழி கைக்கொண்ட தெய்வத்தைப்
    பற்றீர் பெருவாழ்வு பெற்றீர் பெரிது.

    வேங்கடாத்ரி:

    வேங்கடவன் நாமம் விளங்கு திருமலையில்
    ஓங்கு புகழ் தேங்கு முயர் பதியி – னூங்கு
    திருவும் எழிலுடனும் தெய்வீகமும்
    சேரும் ஒருபதியும் உண்டோ உரை.

    நாராயணாத்ரி:

    நாரணனின் நாமம் நமைக்காத்துப் பொய்யுறவு
    தீருமுழி உய்க்கும் திகழ்தருமால் – பாருளீர்
    கள்ளச் சகடம் கடிந்தானைப் போற்றுமினோ
    உள்ளம் நிலைபேறு (உ)றற்கு.

    தசாவதார வந்தனம்:

    வேதங்கள் காத்து வியனுலகைத் தாங்கியொரு
    பாதகனைக் கொன்றடக்கிப் பாரளந்து – தீதழிய
    வில்லும் மழுவும் உழுபடையும் நேமியொடு
    தொல்வாள் எடுத்தான் துணை.

    பாதயாத்திரையாக 7 மலைகளை கடந்து செல்பவர்கள் ஒவ்வொரு மலையை அடையும் போதும் இந்த மந்திரத்தை உச்சரித்து செல்பவர்களின் பாவங்கள் நீக்கப்பட்டு கோடி புண்ணியம் ஏற்படும். உங்களின் துன்பங்கள் எல்லாம் நீங்க திருப்பதிக்கு சென்று பெருமாளை தரிசிப்பவர்களுக்கு திருப்பம் ஏற்பட இந்த மந்திரம் உதவியாக இருக்கும்.
    Next Story
    ×