search icon
என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    சனி மகா பிரதோஷ விரதம்.. எந்த ராசிக்காரர் எந்த சிவாலயத்தில் வழிபாடு செய்ய வேண்டும்...
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    சனி மகா பிரதோஷ விரதம்.. எந்த ராசிக்காரர் எந்த சிவாலயத்தில் வழிபாடு செய்ய வேண்டும்...

    • சனிப்பிரதோஷம் சர்வ பாப விமோசனம் என்ற பழமொழி உண்டு
    • எந்த ராசிக்காரர்கள் எந்த சிவனை தரிசனம் செய்யலாம் என பார்க்கலாம்.

    சிவனுக்குரிய வழிபாட்டில் மகா சிவராத்திரிக்கு அடுத்த படியாக முக்கிய இடம் பிடிப்பது பிரதோஷ வழிபாடு. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் வரும் திரியோதசி திதி அன்று மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான காலத்தை பிரதோஷ காலம் என்கிறோம். சிவபெருமான், ஆலகால விஷத்தை குடித்து உலக உயிர்களை காக்க நீலகண்டனாக காட்சி அளித்த சமயத்தில், தேவர்கள் சிவனை வழிபட்டனர். அவர்களுக்கு நந்தியின் இரு நம்புகளுக்கு இடையே சிவன் காட்சி தந்த காலமே பிரதோஷ காலம் எனப்படுகிறது. அனைத்து விதமான பாவங்களையும், தோஷங்களை நீக்கக் கூடிய வழிபாட்டையே பிரதோஷம் என்கிறோம்.

    ஒரு பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்டால் ஒரு வருடம் முழுவதும் சிவாலயத்திற்கு சென்று வழிபட்ட பலனை பெற்று விடலாம். ஒரு சனிப்பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்டால் ஐந்து ஆண்டுகள் சிவாலயத்தில் தரிசித்த பலனை பெற்று விடலாம் என்பார்கள். நாளை சனிக்கிழமை (15.7.23) சனி மகா பிரதோஷம் வருகிறது. திங்கள் கிழமையில் வருவது சோமவார பிரதோஷம் என்றும், சனிக்கிழமையில் வருவது சனி மகா பிரதோஷம் என்றும் சிறப்பு பெறுகின்றன. இதே போன்று ஒவ்வொரு கிழமையிலும் வரும் பிரதோஷத்திற்கு ஒரு தனிச்சிறப்பு, தனி பலன் உண்டு.

    பிரதோஷ விரதம் மேற்கொண்டால் திருமணம் கைகூடும், பிள்ளை பாக்கியம் கிடைக்கும், வறுமை விலகும், நோய்கள் நீங்கும், சகலகாரியங்களில் வெற்றி கிடைக்கும், சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். சனி மகாபிரதோஷம் பல்வேறு சிறப்புகளை கொண்டது. இன்றைய தினம் 12 ராசிக்காரர்களும் சிவ தரிசனம் செய்வது சிறப்பு வாய்ந்தது. எந்த ராசிக்காரர்கள் எந்த சிவனை தரிசனம் செய்யலாம் என பார்க்கலாம்.

    சனிப் பிரதோஷம் சர்வ பாப விமோசனம் என்ற பழமொழி உண்டு. சனிக்கிழமையன்று வருகிற பிரதோஷத்தில் கலந்து கொண்டு, சிவனாருக்கும் நந்திதேவருக்கும் நடைபெறும் பூஜையில் கலந்து கொண்டு தரிசித்தால், சகல பாவங்கள் விலகி புண்ணியங்கள் அதிகரிக்கும். சனி பிரதோஷ நாளில் சிவ ஆலய தரிசனம் செய்தால் திருமண தடை நீங்கும். கடன் சுமை அகலும், மாணவ மாணவிகளுக்கு நினைவாற்றல் கூடும். படிக்கும் ஆர்வம் அதிகரிக்கும்.

    நான்கு வேதங்கள், 64 கலைகள் என அனைத்தையும் படித்து முடித்தவர் நந்தீஸ்வரர். சிவனின் சந்தேகங்களுக்கு விளக்கமளிப்பவரும் நந்தி பகவான் என்று ஐதீகம் கூறுகிறது. எனவேதான் அவருக்கு அனைத்து வேதங்களும், இதிகாசங்களும் தெரியும் என்று கூறப்படுகிறது. மெத்தப் படித்திருந்தாலும் நந்தி பகவான் மிகவும் அடக்கமானவர். சிவன் கோயில்களில் அவர் அமர்ந்திருக்கும் தன்மையே இதனை உணர்த்தும் விதமாக இருக்கிறது. அனைத்தையும் கற்றறிந்த பின்னர் அதனை மனதில் அசைபோடும் வகையில் அவர் அமர்ந்திருப்பது போல் தோன்றும். எனவே, பிரதோஷ பூஜை மேற்கொள்ளும் போது அறிவு வளரும், நினைவாற்றல் பெருகும், தோஷங்கள் நீங்குகிறது.

    நெருப்பு ராசிகள்:

    12 ராசிகளில் நீர் ராசிகள், நில ராசிகள், நெருப்பு ராசிகள், காற்று ராசிகள் என நான்கு விதமாக பிரித்துள்ளனர். மேஷம்,சிம்மம், தனுசு ஆகிய ராசிக்காரர்கள் நெருப்பு தத்துவத்தை தன்னுள்ளே கொண்டுள்ளன. இந்த ராசிக்காரர்கள் பிரதோஷ நாளில் திருவண்ணாமலை அண்ணாமலையாரை தரிசனம் செய்து கிரிவலம் வர நினைத்த காரியங்கள் நிறைவேறும். திருவண்ணாமலை செல்ல முடியாதவர்கள் அருகில் உள்ள சிவ ஆலயம் சென்று அபிஷேகத்திற்கு பழங்கள் வாங்கித்தர பாவங்கள் விலகும்.

    நில ராசிகள்:

    பஞ்ச பூத தத்துவத்தில் நில தத்துவத்தை உணர்த்தும் ராசிகள் ரிஷபம், கன்னி, மகரம். இந்த ராசிக்காரர்கள் காஞ்சி ஏகாம்பரேஸ்வரர், இந்த ஆலயத்தில் பிருத்வி லிங்கத்தை பிரதோஷ தினத்தில் வழிபட நன்மைகள் நடைபெறும். அருகில் உள்ள சிவ ஆலயங்களுக்கு சென்று அபிஷேகத்திற்கு சந்தனம் வாங்கித்தர தோஷங்களும் பாவங்களும் விலகும்.

    காற்று ராசிகள்:

    மிதுனம், துலாம், கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் காற்று ராசிக்காரர்கள். காளகஸ்தியில் உள்ள திருக்காளத்தி நாதரை பிரதோஷ காலத்தில் இந்த ராசிக்காரர்கள் வழிபட புண்ணிய பலன்கள் கிடைக்கும். காளத்தீஸ்வரர் கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள சிவ ஆலயத்திற்கு சென்று பாலபிஷேகம் செய்து வணங்கினால் நோய் நொடிகள் தீரும்.

    நீர் ராசிகள்:

    கடகம் , விருச்சிகம், மீனம் ஆகிய மூன்று ராசிக்காரர்களும் பஞ்சபூத தத்துவத்தில் நீரின் ஆதிக்கத்துக்கு உட்பட்டவர்கள். திருச்சி அருகே திருஆனைக்காவில் எழுந்தருளி இருக்கும் ஜலகண்டேஸ்வரர் ஆலயம்தான் நீர்தலம். இந்த ராசிகளில் பிறந்தவர்கள் பிரதோஷ காலத்தில் திருவானைக்கால் ஜலகண்டேஸ்வரரை தரிசிக்க வறுமை நீங்கி செல்வம் பெருகும். அருகில் உள்ள சிவ ஆலயம் சென்று அபிஷேகத்திற்கு பன்னீர் வாங்கித்தர செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும்.

    ஆகாய தலம்:

    ராசி நட்சத்திரம் தெரியாதவர்கள் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் உள்ள நடராஜரை வழிபட வேண்டும். பஞ்ச பூத தலங்களில் வழிபட்ட புண்ணியம் கிடைக்கும். 27 நட்சத்திரங்களை அடையாளப்படுத்தும் வகையில் 27 தீபங்களை ஏற்றி வழிபடலாம். பஞ்சலிங்கங்களையும், தொடர்ந்து ஐந்து பிரதோஷ தினத்தில் வந்து வழிபடுவது சிறப்பு. சனி மகா பிரதோஷ நாளில் சிவ ஆலய தரிசனம் செய்வது ஆயிரம் ஆண்டுகள் சிவனை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.

    Next Story
    ×