search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நவசக்திகளுக்கான விரத வழிபாடு
    X
    நவசக்திகளுக்கான விரத வழிபாடு

    நவசக்திகளுக்கான விரத வழிபாடு

    புரட்டாசி மாத வளர்பிறைப் பிரதமையில் தொடங்கி விஜயதசமியில் நவராத்திரி முடிகிறது. முதல் ஒன்பது நாட்களில் முப்பெரும் தேவியரை விரதம் இருந்து வழிபடவேண்டும்...
    புரட்டாசி மாத வளர்பிறைப் பிரதமையில் தொடங்கி விஜயதசமியில் நவராத்திரி முடிகிறது. முதல் ஒன்பது நாட்களில் முப்பெரும் தேவியரை விரதம் இருந்து வழிபடவேண்டும். முதல் மூன்று நாட்கள் துர்க்கையின் வழிபாடு. நடுவில் உள்ள மூன்று நாட்கள் லட்சுமி வழிபாடு. கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி வழிபாடு. முப்பெரும் சக்திகளில், ஒவ்வொரு சக்திக்கும் மும்மூன்று அம்சங்கள் உள்ளன. துர்க்கை: 1. மகேசுவரி, 2. கௌமாரி , 3. வராகி. இலட்சுமி: 4. மாகலெட்சுமி 5. வைஷ்ணவி 6. இந்திராணி. சரஸ்வதி : 7. சரஸ்வதி 8. நாரசிம்மி , 9. சாமுண்டி. நவராத்திரியின் போது இந்த ஒன்பது தேவியர்களையும் முறையாக வழிபடுகிறோம். ஒரு தேவியை முதன்மையாகவும், மற்றவர்களைப் பரிவார தெய்வங்களாகவும் கொள்ளவேண்டும்.

    வீரம் தரும் துர்க்கை

    துர்க்கையானவள் வீரத்தின் தெய்வம். வீரர்களின் தொடக்கத்திலும், முடிவிலும் வழிப்படும் தெய்வம் இவள் நெருப்பின் அழகுடன் ஆவேசப் பார்வை கொண்டவள் சிவபிரியையான துர்க்கை இச்சா சக்தி. ‘’கொற்றவை ‘’ என்றும் ‘’காளி’’ என்றும் குறிப்பிடுவர். வன துர்க்கை, சூலினி துர்க்கை , ஜாதவே தோதுர்க்கை, ஜ்வாலா துர்க்கை, சாந்தி துர்க்கை சபரி துர்க்கை, தீப் துர்க்கை, சூரி துர்க்கை லவண துர்க்கை இவர்கள் துர்க்கையின் அம்சங்கள்.

    செல்வம் தரும் லட்சுமி

    இலட்சுமி தேவி செல்வத்தின் தெய்வம். மலரின் மென்மையுடன் அருள் பார்வையுடன் அழகாக விளங்குகிறாள். இவள் விஷ்ணு பிரியை, கிரியா சக்தி. இலட்சுமி அமுதத்துடன் தோன்றியவள். அமுத மயமானவள். பொன்னிற மேனியுடன் கமலாசனத்தில் வீற்றிருக்கிறாள். இவளை நான்கு யானைகள் எப்போதும் நீராட்டுகிறது. முக்கியமாக, இவள் செல்வ வளம் தந்து வறுமையை அகற்றி அருள் புரிபவள். இவளுக்குத் தனிக் கோயில் இருக்குமிடம் திருப்பதியிலுள்ள திருச்சானூர். அஷ்ட இலட்சுமியாக அருள் பாலிக்கிறாள் ஆதி லட்சுமி, மாக இலட்சுமி, தன இலட்சுமி, தானிய இலட்சுமி , சந்தான இலட்சுமி, வீர இலட்சுமி, விஜய இலட்சுமி , கஜ லட்சுமி . இவர்கள் இலட்சுமியின் அம்சங்கள்.

    சகல வித்தை தரும் சரஸ்வதி

    சரஸ்வதி தேவி கல்வியின் தெய்வம். இவள் அமைதிப் பார்வையுடன் வைரத்தின் அழகுடன் அழகாகப் பிரகாசிக்கிறாள்.. பிரம்பிரியை. ஞான சக்தி. நவராத்திரியின் ஆறாவது, ஏழாவது நாளில் மூல நட்சத்திரம் உச்சமாக இருக்கும்போது, சரஸ்வதியை வாகனம் செய்வது முறையாகும். இது தேவியின் அவதார நாள். சரஸ்வதி பூஜை சிரவணம் என்ற நட்சத்திரம் உச்சமாகும் நாளில் நிறைவு பெறுகிறது. ஆயுதபூஜையாகவும் கொண்டாடுகின்றனர்.

    சமுதாயத்தில் தொழில், புலமை என்ற இரண்டே பிரிவுகளில் அடங்குகிறது. ஒன்று புலமை ஞானம், இரண்டு தொழில் ஞானம். புலமை பெறுவதும் ஒரு தொழில்தான், இது ஞானத்துடன் தொடர்புடையது. எனவே, ஞானத்தின் தெய்வமான சரஸ்வதியைப் பூஜிப்பது சரஸ்வதி பூஜை. சரஸ்வதி தேவியும் வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா, கீர்த்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி, கடசரஸ்வதி, நீலசரஸ்வதி, கினி சரஸ்வதி என அஷ்ட சரஸ்வதியாக போற்றப்படுகிறாள்.

    விஜயதசமி


    நவராத்திரியின் எட்டாம் நாளை மகா அஷ்டமி அதாவது துர்க்காஷ்டமி என்றும், ஒன்பதாம் நாளை மகா நவமி என்றும் குறிப்பிடுவது வழக்கம். இவை மேலான நாட்களாகும். ஒன்பது நாட்கள் மகிஷாசுரனுடன் போரிட்ட தேவி, பத்தாம் நாள் அவனை அம்பெய்து வதம் செய்தாள். இந்நாளே விஜயதசமி - வெற்றி தருகிற நாள். பல குழந்தைகள் கல்வியினை இன்றுதான் ஆரம்பிப்பார்கள். இன்று தொடங்கும் அனைத்துநற்காரியங்களும் வெற்றி தரும் என்பது நம்பிக்கை.
    Next Story
    ×