என் மலர்tooltip icon

    இஸ்லாம்

    நபி ஜக்கரிய்யா (அலை) அவர்களுக்கு நீண்ட காலமாகக் குழந்தை இல்லை.
    நபி ஜக்கரிய்யா (அலை) அவர்களுக்கு நீண்ட காலமாகக் குழந்தை இல்லை. தன்னுடைய திருப்பணியைத் தொடர்வதற்குத் தனக்கு ஒரு வாரிசு வேண்டுமென்று விரும்பினார்கள் ஜக்கரிய்யா (அலை).

    அல்லாஹ்விடம் சிரம் தாழ்த்தி, தாழ்ந்த குரலில் மிக உருக்கமாக அழுது வாரிசு வேண்டி பிரார்த்தித்தார்கள். “அல்லாஹ்! மனதால் உறுதியுடன் இருக்கும் எனக்கு, தலைமுடிகள் நரைத்துவிட்டன, எனது எலும்புகள் பலஹீனமடைந்துவிட்டன. மனதில் இருக்கும் தெம்பு உடலில் இல்லை.  எனக்குப் பின்னர் என் உறவினர்கள் வழி்கெட்டு விடுவார்களோவென்று நான் அஞ்சுகிறேன். நான் செய்து கொண்டிருக்கும் போதனைகளைத் தொடர, மக்களுக்கு நல்வழி் காட்ட எனக்கு வாரிசை ஏற்படுத்தித் தருவாயாக” என்று பிரார்த்தித்தார்கள்.

    இறைவன் ஜக்கரிய்யாவின் பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான். ஜக்கரியாவிற்குப் பேரானந்தம். ஆனால் தான் முதுமையின் தள்ளாத பருவத்தில் இருக்கும் நிலையில் தன் மனைவியும் மலடாக முதுமையில் இருக்கும்போது எவ்வாறு இது சாத்தியமென்று வியந்தார்.
    அதற்கு இறைவன் “இது எனக்கு மிகவும் சுலபமானது, நீர் ஒரு பொருளாக இல்லாதிருந்தபோது, நானே உம்மைப் படைத்தேன்” என்று நினைவுபடுத்தினான்.

    இறைவன் ஜக்கரிய்யாவிற்கு, " `யஹ்யா` எனும் பெயருள்ள ஆண் மகன் பிறப்பான். இதற்கு முன்னர் இப்பெயர் கொண்டவர் எவருமில்லை. அவர் அல்லாஹ்வின் வார்த்தையை மெய்ப்பிப்பவராகவும், கண்ணியமுடையவராகவும், ஒழுக்க நெறி கொண்ட தூயவராகவும், நல்லோர்களிலிருந்தே நபியாகவும் இருப்பார்" என்றும் அறிவித்தான்.

    “என் இறைவா! இதற்கான அறிகுறியை எனக்குக் கொடுத்தருள்வாயாக!” என்று ஜக்கரிய்யா கேட்டார்கள். “நல்ல உடல்நிலையிலிருக்கும் உம்மால் திடீரென மூன்று நாட்கள் பேசமுடியாது போய்விடும். காலையிலும் மாலையிலும் எல்லா நிலைகளிலும் என்னை அதிகமாகத் தியானித்துக் கொண்டிருங்கள்” என்றும் அருளினான்.

    ஜக்கரிய்யா (அலை) இறைவனின் அறிகுறிக்காகக் காத்திருந்தார்கள். வெளியில் வழக்கம்போல் மக்களுக்குப் போதனைகள் செய்ய வாய் திறக்கும்போது அவர்களால் பேச முடியவில்லை. உள்ளுக்குள் பேரானந்தமடைந்த ஜக்கரிய்யா (அலை) அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினார்கள். பேச முடியாத நிலையிலும் சைகையினால் மக்களை காலையிலும் மாலையிலும் அல்லாஹ்வைத் துதித்துப் போற்றுமாறு மக்களுக்கு உணர்த்தினார்கள்.

    இறைவனின் அத்தாட்சியாக மூன்று நாட்கள் ஜக்கரிய்யா (அலை) அவர்களால் பேச முடியவில்லை. அவர்கள் இறைவனை நாள் முழுக்க வணங்கி தொழுது தியானத்தில் மூழ்கினார்கள்.

    இறைவன் நாடினால் அது நடந்தேறிவிடும்.

    திருக்குர்ஆன் 3:38-41, 19:2-11

    - ஜெஸிலா பானு.
    மர்யத்திற்கும் ஜக்கரிய்யா (அலை)க்கும் நடந்த உரையாடலைப்ப பார்க்கலாம்.
    இம்ரான்- ஹன்னா தம்பதியருக்குப் பிறந்த மர்யமை, பைத்துல் முகத்தஸில் தங்கி, சேவை செய்ய அர்ப்பணிக்க வேண்டுமென்று, ஹன்னா தனது சகோதரியின் கணவர் ஜக்கரிய்யா (அலை) அவர்களிடம் ஒப்படைக்கச் சென்றார்கள். குழந்தை பிறப்பதற்கு முன்னதாக இப்படியான நேர்ச்சை செய்துவிட்டதைப் பற்றி ஜக்கரிய்யா (அலை) அவர்களிடம் ஹன்னா தெரிவித்தார். குழந்தை மர்யமை வளர்க்கும் பொறுப்பை ஜக்கரிய்யா ஏற்றுக் கொள்ள முன் வந்தார்.

    குழந்தை மர்யமை பொறுப்பேற்க பலரும் போட்டி போட்டனர். அறிஞர்களுக்கிடையே சில கருத்துவேறுபாடுகளும் இருந்தன. ஆகையால் எல்லோரும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்தார்கள். அவரவர் தமது எழுதுகோலை ஆற்றில் வீச வேண்டும், யாருடைய எழுதுகோல் மூழ்காமல் மிதந்து வருகிறதோ அவரே மர்யமை பொறுப்பேற்பவர் என்று தீர்மானமானது.

    அதன்படி எல்லோரும் தமது எழுதுகோலை ஆற்றில் வீசினர். ஜக்கரிய்யா (அலை) அவர்களின் எழுதுகோலைத் தவிர மற்ற எல்லோருடைய எழுதுகோலும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது. ஆகையால் ஜக்கரிய்யாவே மர்யமை வளர்க்கும் பொறுப்பை ஏற்றார்கள்.

    குழந்தை மர்யமை மிகவும் பொறுப்பாக ஜக்கரிய்யா (அலை) வளர்த்தார்கள். குழந்தையைப் பேணிப் பாதுகாப்பாகப் பார்த்துக் கொண்டார்கள். மிகவும் நேர்மையானவராக, உண்மையாளராக, நம்பிக்கைக்குரியவராக வளர்க்கப்பட்டார். அவருக்கு இறைவனைத் தொழுது வணங்கவும் கற்றுத் தந்தார்கள்.

    மர்யமை சந்திக்கத் தொழும் அறைக்குப் போகும் போதெல்லாம், மர்யமிடம் உணவு இருப்பதைக் கண்டார்கள் ஜக்கரிய்யா (அலை). அதுவும் விதவிதமான கனி வகைகளைக் கண்டு அதிசயித்த ஜக்கரிய்யா (அலை), “மர்யமே! இவ்வுணவானது உனக்கு எங்கிருந்து வந்தது?” என்று கேட்டார்கள். அதற்குச் சிறுமி மர்யம், “இது அல்லாஹ்விடமிருந்து வந்தது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றி உணவளிக்கின்றான்” என்று பதிலளித்தார்கள்.

    அதைக் கேட்ட ஜக்கரிய்யா (அலை) அந்த இடத்திலேயே தமது நீண்ட நாள் விருப்பத்தை இறைவனிடம் பிரார்த்தித்தார். “அல்லாஹ், என் பிரார்த்தனைகளை ஏற்பவனே, உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக. என்னுடைய இத்திருப்பணிகளைத் தொடர்வதற்காவது எனக்கு ஒரு சந்ததியைத் தந்தருள்வாயாக” என்று அழுத வண்ணம் துதித்தார்கள்.
    அல்லாஹ் தான் நாடியதை செய்து முடிகின்றான்.

    திருக்குர்ஆன் 3:35-38

    - ஜெஸிலா பானு.
    அச்சத்தோடும் ஆசையோடும் அல்லாஹ்வைப் பிரார்த்தித்து நன்மை செய்வோருக்கு அவனுடைய அருள் மிகச் சமீபத்தில் இருக்கிறது.
    வேதத்தில் ஒரு பாகம் கொடுக்கப்பட்டவர்களான யூதர்களில் ஒரு பிரிவினர் அதனைப் புறக்கணித்து விலகிக் கொண்டாலும் ஒரு பிரிவினர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழப்படிந்து நடந்தனர். அதில் இம்ரான் என்பவரும் அவருடைய குடும்பத்தினரும் நல்லடியார்களாக இருந்தனர்.

    இம்ரானின் மனைவி ஹன்னா கருவுற்றிருந்தபோது இறைவனிடம் பிரார்த்தித்தார், “என் இறைவா! என் கர்ப்பத்திலுள்ள குழந்தையை உனக்கு சேவை செய்ய முற்றிலும் அர்ப்பணிக்கிறேன்” என்று நேர்ச்சை செய்து கொண்டார்.

    அந்தக் காலத்தில் ஆண் குழந்தையை இப்படி நேர்ச்சை செய்து இறைவழியில் நடக்கவும், இறைவனை வழிபடும் பள்ளியில் தங்கி இறைவனைத் தொழுது வணங்கவும் விட்டுவிடுவர். அந்த வழக்கத்தின்படியே ஹன்னாவும் பிரார்த்தனை செய்தார். ஹன்னா கருவுற்றிருந்தபோதே கணவர் இம்ரான் இறந்து விட்டார். ஹன்னாவும் பிள்ளையைப் பெற்றெடுத்தார். ஆனால் அவர் எதிர்பார்த்தபடி ஆண் குழந்தை பிறக்கவில்லை மாறாகப் பெண் குழந்தை பிறந்தது.

    பெண் குழந்தையைப் பெற்றதும் ஹன்னா, “இறைவா! நீ எனக்குப் பெண் குழந்தையைத் தந்திருக்கிறாய். அவளுக்கு நான் ‘மர்யம்’ என்று பெயரிட்டுள்ளேன். அவளையும், அவள் சந்ததியையும் எல்லா வகையான தீங்குகளிலிருந்தும் காப்பாற்றுவாயாக” என்று பிரார்த்தித்தார்.

    ஹன்னா நேர்ச்சை செய்திருந்தபடி அந்தக் குழந்தையை 'பைத்துல் முகத்தஸு'க்கு எடுத்துச் சென்றார். 'பைத்துல் முகத்தஸ்' பள்ளியில் நம்பிக்கையாளர்கள் காலையிலும் மாலையிலும் தொழுகைகளை நடத்தி வந்தனர். பைத்துல் முகத்தஸின் பொறுப்பாளராக இருந்தது ஹன்னாவின் சகோதரியின் கணவர் ஜக்கரிய்யா (அலை).

    பனீ இஸ்ராயீலர்களை நேர்வழிப்படுத்த ஜக்கரிய்யா (அலை) அவர்களை அல்லாஹ் நபியாக அனுப்பியிருந்தான். ஜக்கரிய்யா (அலை), நபி சுலைமான் (அலை) அவர்களின் சந்ததியில் வந்தவர்கள். தச்சு வேலை செய்து கொண்டே அதிகமான வணக்கத்திலும், மக்களுக்குப் போதனைகள் செய்வதிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட ஜக்கரிய்யா (அலை) அவர்களிடம் ஹன்னா தன்னுடைய நேர்ச்சையைப் பற்றிச் சொல்லி தம் மகள் மர்யமை பைத்துல் முகத்தஸில் தங்கி, சேவை செய்ய அர்ப்பணிப்பதாக ஒப்படைக்கிறார். ஆனால் மர்யமிற்கான பொறுப்பை யார் ஏற்பது என்பதில் குழப்பம் ஏற்படுகிறது.

    அச்சத்தோடும் ஆசையோடும் அல்லாஹ்வைப் பிரார்த்தித்து நன்மை செய்வோருக்கு அவனுடைய அருள் மிகச் சமீபத்தில் இருக்கிறது.

    திருக்குர்ஆன் 3:23, 3:33-36, 7:56

    - ஜெஸிலா பானு.
    ஏர்வாடி தர்கா சந்தனக் கூடு திருவிழாவையொட்டி நடந்த கொடியேற்று விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். 26-ந்தேதி சந்தனக்கூடு ஊர்வலம் நடக்கிறது.
    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி குத்புல் அக்தாப் ஸைய்யது இப்ராகீம் ‌ஷஹீது வலியுல்லாஹ் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா, ஆண்டுதோறும் தேசிய ஒருமைப்பாட்டு விழாவாக நடந்து வருகிறது.

    இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக உள்ள கொடியேற்றம், சந்தனக்கூடு திருவிழா கொடியிறக்கம் நிகழ்ச்சிகளுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். நடப்பாண்டுக்கான விழா கடந்த 4-ந்தேதி மவுலீது (புகழ்மாலை) ஓதப்பட்டு தொடங்கியது.

    நேற்று முன்தினம் தர்கா வளாகத்தில் உள்ள கொடி மேடையில் 40 அடி உயர அடிமரம் ஏற்றப்பட்டது. முன்னதாக உலக மக்களின் அமைதிக்காகவும், நல்லிணக்கம் வேண்டியும் மாவட்ட அரசு காஜி சலாஹூத்தீன் சிறப்பு துஆ (பிரார்த்தனை) செய்தார்.

    இதை தொடர்ந்து நேற்று ஏர்வாடி முஜாபிர் நல்ல இபுறாகிம் மகாலில் இருந்து வாத்தியங்கள், வாண வேடிக்கைகளுடன் யானை, ஒன்பது குதிரைகள் முன் செல்ல அலங்கார ரதத்துடன் கொடி ஊர்வலம் புறப்பட்டது. நான்கு ரத வீதிகளிலும் ஊர்வலத்தில் இந்து இளைஞர்கள் பிறைக் கொடிகளை ஏந்தியபடி அணிவகுத்து வந்தனர்.

    ரத ஊர்வலம் தர்கா வளாகத்தை மூன்று முறை வலம் வந்தது. இரவு 7.20 மணிக்கு பக்தர்களின் ‘நாரே தக்பீர் அல்லாஹூ அக்பர்’ என்ற தக்பீர் முழக்கத்துடன் கொடியேற்றினர். அப்போது இந்து பெண்கள் குலவையிட்டு நல்லிணக்கத்தை வெளிப்படுத்தினர்.

    மாவட்ட அரசு ஹாஜி சலாஹூத்தீன் சிறப்பு பிரார்த்தனை செய்தார். முன்னதாக தர்காவில் பாதுஷா நாயகத்தின் புகழ் மாலையை தர்ஹா ஹக்தார்கள் ஓதினர். கீழக்கரை டி.எஸ்,பி,. மகேஸ்வரி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.

    கொடியேற்றத்தை முன்னிட்டு அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. கீழக்கரை தாசில்தார் தர்மன் உள்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து 26-ந்தேதி சந்தனக்கூடு, 27-ந்தேதி சந்தனம் பூசுதல், செப்.3-ந்தேதி கொடியிறக்கத்துடன், பக்தர்களுக்கு நேர்ச்சி வழங்கப்பட்டு விழா நிறைவடைகிறது.

    தர்கா ஆணையர் ராமராஜன் தலைமையில், தர்ஹா ஹக்தார்கள் அம்ஜத் ஹூசைன், துல்கருணை பாட்சா, செய்யது பாரூக் ஆலிம் அரூஸி, செய்யது சிராஜ்தீன், அசன் இபுராகிம், முகம்மது பாக்கீர் சுல்த்தான், கோட்டை செய்யது அபுபக்கர் பாதுஷா, சோட்டை செய்யது இபுராகிம், அகமது இபுராகிம், அஜ்முல் ரக்மான், ஊராட்சி செயலர் அஜ்மல் கான் உள்பட ஏராளமானோர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
    உலக மாமறையில் தேடுங்கள், உங்களுக்கான வழிகள் ஏராளமாய் அங்கே கொட்டிக் கிடக்கின்றன.
    இன்றைய காலச்சூழ்நிலையில் மனிதன் இயற்கை சார்ந்த வாழ்வியலைத் தொலைத்துவிட்டு, இயந்திர கதியில் இயங்கிக் கொண்டிருக்கின்றான். இந்த வேக வாழ்வின் விளைவாக மனிதனுக்கு கிடைத்தவை- சோர்வு, சோகம், எரிச்சல், கோபம்.

    குடும்ப சூழல், சமூக சூழல், பாலியல் பிரச்சினைகள், பிறரின் அணுகுமுறை, மற்றவர் களின் இடையூறுகள் போன்றவை மனிதர்களிடம் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன. தீர்க்கப்படாத இந்த உணர்வுகள் படிப்படியாய் அழுத்தம் பெற்று, ‘மன அழுத்தம்’ என்ற தடுமாற்ற நிலையை விளைவித்து விடுகிறது. இதற்கு ‘டென்ஷன்’, ‘டிப்ரஷன்’, ‘மனஉளைச்சல்’ என்று உளவியல் வல்லுனர்கள் பெயரிட்டு வகைப்படுத்துகின்றனர்.

    வேலைப்பளு, நேரமின்மை, பதற்றமான சூழ்நிலைகள் போன்றவற்றால் மனிதன் யோசிப்பதற்கே பயப்படுகின்றான். ஒருமுகப்படுத்தப்படாத சிந்தனைகளால் இயல்பு நிலைமாறி மனம் அலைபாயத் தொடங்கும். இதனால் அட்ரனலின் என்ற சுரப்பி அதிகமாக சுரக்கத் தொடங்கும். சரியாய் இயங்கிக் கொண்டிருந்த மூளை இதனால் தடுமாறத் தொடங்கும். மூளையின் மாறுபட்ட செயலால் நரம்பு மண்டலங்களிடையே கட்டளைகள் சரிவர கிடைக்கப் பெறாமல் நரம்பு தளர்ச்சியும் உண்டாகிறது.

    எண்ணங்கள், செயல்பாடுகளின் எதிர்மறை விளைவுகள் மட்டுமே இதற்கு காரணமாய் அமைகின்றன. உளவியல் அடிப்படையில் இளைஞர் களிடையே இது மிக அதிக அளவில் காணப் படுகிறது. அதனை எப்படி கையாளுவது என்பது தெரியாமல் எத்தனையோ உயிரிழப்புகள், சோக முடிவுகள் என்று எங்கும் ஒரு பரிதாப சூழ்நிலை.

    இந்த மன அழுத்தங்களுக்கெல்லாம் திருக்குர்ஆன் மிக அழகிய தீர்வுகளைச் சொல்லித்தருகிறது. முதலாவதாக தொழுகையைச் சொன்னது:

    ‘எத்தகைய கஷ்டத்திலும் நீங்கள் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக் கொண்டும் அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்’ (2:45).

    நபிகள் நாயகம் எந்த பிரச்சினை வந்தாலும் தொழுகையை நோக்கி விரைந்து வருவார்கள்.

    பத்ர் யுத்தம், மிக சொற்பமான வீரர்கள். எதிர்கொள்ள வேண்டியது மிக பலம் பொருந்திய வீரர்கள் நிரம்பிய படை. தோற்றால் இஸ்லாம் மொத்தமாக அழிந்துவிடும் ஆபத்து. எத்தனை மன உளைச்சல் மாநபிக்கு. கலக்கம் கொள்ளவில்லை. அன்று இரவு முழுவதும் நின்று தொழுதார்கள். இறைவன் அருளால் சூரியன் உதித்தான்; இன்னல்கள் அகன்றன. இஸ்லாம் இவ்வுலகம் முழுவதும் ஒளி சிந்தி மிளிர்ந்தது.

    தொழுகையைத் தொடர்ந்து துஆவை கற்றுத்தருகிறது திருக்குர்ஆன். பிரச்சினைகள் இல்லாதவன் என்று ஒருவனுமே இல்லை. எல்லோருக்கும் அவரவர் சக்திக்கு ஏற்றார் போல் பிரச்சினைகளின் அளவுகள் உள்ளன. ஆனால் அந்த பிரச்சினைகள் பகிரப்படாமல் ஒன்றன் மேல் ஒன்று படியத்தொடங்கும் போது மன அழுத்தம் மேலோங்குகிறது.

    ‘உண்மை தான். ஆனால் என்னுடைய பிரச்சினைகளை யாரிடம் சென்று பகிர்ந்து கொள்வது? உறவினரா?, நண்பனா? அங்கே அவனுக்கே ஆயிரம் பிரச்சினைகள் இருக்கிறதே?’.

    அல்லாஹ் சொல்கின்றான்: ‘என்னிடம் வாருங்கள் என்று’.

    இரவின் கடைசி பகுதியில் கீழ்வானத்தில் வந்து அல்லாஹ் மனிதர்களிடம் சொல்கிறான்...

    ‘என்னிடம் வாருங்கள், உங்கள் துக்கங்களைச் சொல்லுங்கள், உங்களுக்கு வேண்டியதை கேளுங்கள், அள்ளித் தர நான் காத்திருக்கிறேன். என் கஜானா என்றுமே குறைந்து விடுவதில்லை. ஆரோக்கியம் வேண்டுமா? ஐஸ்வர்யம் வேண்டுமா? எல்லாம் என் வசமே. கேளுங்கள் தருகிறேன்’ என்கின்றான்.

    அந்த அல்லாஹ்விடம் நம் இரு கைகளை ஏந்தி கேட்பதன் மூலம் நம் மனக்குறைகளை ஒப்படைப்போம். அவன் மனநிம்மதியைத் தருவான். அல்லாஹ்விடம் பகிர்ந்து கொள்ளும் போது பரிகாரம் நிச்சயம் உண்டு.

    அடுத்து திருக்குர்ஆன் கூறுகிறது:

    ‘நேர்வழி பெறும் அவர்கள் எத்தகையோர் என்றால் அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள். மேலும் அல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன. அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க’ (13:28).

    அல்லாஹ்வை ‘திக்ரு’ செய்யுங்கள். இதயங்கள் அமைதி பெறும். மன அழுத்தங்கள் குறைய மனிதன் எந்த நிம்மதியை, அமைதியை நாடுகின்றானோ அது இருக்கும் இடத்தை அடையாளம் காட்டும்.

    அல்லாஹ்வை ‘திக்ரு’ செய்தல் என்பது இறைவனை துதித்தல், தியானித்தல், நினைவு கூர்தல், அவனிடம் வேண்டுதல் என்ற பல பொருளில் வரும். எந்தப் பெயரில் அழைத்தாலும் ‘திக்ர்’ என்ற இதயத்தின் உயிரோட்டம், மனிதனை அல்லாஹ்விடம் நேரடித் தொடர்பில் கொண்டு சேர்க்கும். அல்லாஹ்வின் நினைவுகளால் நிரம்பிய நெஞ்சில் மன அழுத்தத்திற்கு எங்கே இடம் இருக்கும்?

    ஒரு கூட்டம் அல்லாஹ்வை திக்ரு செய்வதற்காக அமர்ந்துவிட்டால் வானவர்கள் அவர்களைச் சூழ்ந்து கொள்வார்கள். அல்லாஹ்வின் அருள் அங்கே பொழிய ஆரம்பிக்கும். அல்லாஹ்வும் அவர்களை நினைவு கூர்வான். (முஸ்லிம்)

    எனவே குர்ஆனை சிரத்தையோடு ஓதுங்கள். மனங் களில் நிம்மதி நிறைவதை உணர்வீர்கள். நாளை மறுமையில் அல்லாஹ்வின் அர்ஸின் நிழல் கிடைக்கும். நிம்மதி மட்டும் கிட்டிவிட்டால் மனங்கள் பேதலிக்க வழியே இல்லாமல் ஆகிவிடும்.

    எனவே மனஉளைச்சல்களை மாற்றிக் கொள்வதற்கு உயிரை மாய்த்துக் கொள்வதோ, மனங்களை மயக்கும் மாற்று வழிகளை தேடுவதோ உகந்ததல்ல. உலக மாமறையில் தேடுங்கள், உங்களுக்கான வழிகள் ஏராளமாய் அங்கே கொட்டிக் கிடக்கின்றன.

    -எம். முஹம்மது யூசுப், உடன்குடி.
    யூனுஸ் (அலை) பொறுமை காக்காமல், அல்லாஹ்வின் ஆணையைப் பெறாமல் தம் சமூகத்தாரை விட்டு வெளியேறினார்கள் என்பதற்காக அவர்களுக்கு நெருக்கடியை அளித்தான் அல்லாஹ்.
    யூனுஸ் (அலை) பொறுமை காக்காமல், அல்லாஹ்வின் ஆணையைப் பெறாமல் தம் சமூகத்தாரை விட்டு வெளியேறினார்கள் என்பதற்காக அவர்களுக்கு நெருக்கடியை அளித்தான் அல்லாஹ்.

    யூனுஸ் (அலை) நைனுவாவைவிட்டு வெளியேறி கப்பலில் பயணிக்கும் போது, பலமான காற்றின் காரணமாக கப்பல் நடுக்கடலில் தடுமாற்றம் கண்டது. கப்பலை லேசாக்க வேண்டுமென்பதற்காக, கப்பலில் உள்ள பொருட்களைக் கடலில் வீசினர். ஒருவரையாவது கடலிலிருந்து வெளியேற்றினால்தான் மற்றவர்கள் தப்பிக்க முடியுமென்ற நிலை ஏற்பட்டது. சீட்டுக் குலுக்கிப் பார்த்ததில் யூனுஸ் (அலை) அவர்களின் பெயர் மும்முறையும் வந்ததால் அவர்களை கடலில் இருந்து வீசினார்கள்.

    வீசப்பட்ட யூனுஸ் நபியை ஒரு பெரிய மீன் விழுங்கிவிட்டது. யூனூஸ் (அலை) அவர்களை உணவாக்கிக் கொள்ளக் கூடாதென்று அந்த மீனுக்கு அல்லாஹ் உத்தரவிட்டான்.

    மீனின் வயிற்றுக்குள் இருட்டில் இருந்ததால், தாம் இறந்து விட்டதாக யூனுஸ் (அலை) அவர்கள் தாமாகவே எண்ணிக் கொண்டார்கள். ஆனால்,  அந்நிலையிலும் அவர்கள் அல்லாஹ்வைத் துதித்த வண்ணம் இருந்தார்கள். பாவ மன்னிப்புக் கேட்டவர்களாக, அல்லாஹ்வைப் புகழ்ந்தவர்களாக ஓதிக் கொண்டே இருந்தார்கள். அவர்களின் பிரார்த்தனையை இறைவன் மட்டும் செவிமடுக்கவில்லை, கடலிலிருந்த உயிரினங்களும் கேட்டன. கூடவே, அந்த உயிரினங்களும் சேர்ந்து அல்லாஹ்வைப் புகழ்ந்து வணங்கின.

    மீன் வயிற்றின் ஆழ்ந்த இருளிலிருந்து யூனுஸ் (அலை) “உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. நீ மிகவும் தூய்மையானவன். நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்”என்று பிரார்த்தித்தார்கள்.

    அல்லாஹ் அவர்களுடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான். யூனுஸ் (அலை) அவர்களை மன்னித்து, அந்த மீனை யூனுஸ் நபியை விடுவிக்கும்படி கட்டளையிட்டான். மீனும் கரையின் பக்கம் வந்து அவர்களை வயிற்றிலிருந்து விடுவித்தது.

    மீன் வயிற்றிலிருந்த சூட்டின் காரணமாக யூனுஸ் (அலை) நோயுற்ற நிலையில் மீன் வயிற்றிலிருந்து வெளியேறி, வெட்ட வெளியில்  நிமிர்ந்து நிற்கவோ, உட்காரவோ முடியாத நிலையில் களைப்புடன் இருந்தார்கள்.

    அல்லாஹ் அவர்கள் அருகில் ஒரு சுரைக் கொடியை முளைப்பித்து அவர்களுக்கு நிழல் கொடுக்கச் செய்தான். அந்த இடத்தில் அவர்களுக்கு உணவு கிடைக்கவும் அருள் புரிந்தான்.

    பல நாட்களுக்குப் பிறகு உடல்நலம் சரியானதும்,  யூனுஸ் (அலை) நைனூவாவிற்குத் திரும்பியபோது மக்கள் இன்முகத்துடன் யூனுஸ் (அலை) அவர்களை வரவேற்றனர். பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு யூனுஸ் (அலை) போதனைகளைச் செய்து அவர்களை நல்வழிப்படுத்தினார்கள். மக்களும் நம்பிக்கை கொண்டார்கள்.

    அல்லாஹ் தாம் நாடியவரை நேர்வழியில் நடத்திச் செல்வான்.

    திருக்குர்ஆன் 10:98, 21:87, 37:139-147

    - ஜெஸிலா பானு
    பொறுமை இழந்தவர்களை இறைவன் நெருக்கடிக்குள்ளாக்கவும் செய்வான், அவர்களை விடுவிக்கவும் செய்வான். ஆற்றல் மிக்கவன் அல்லாஹ் ஒருவனே.
    யூனுஸ் (அலை) அவர்கள் நைனுவா என்னும் இடத்திற்கு நபியாக அனுப்பப்பட்டு, அந்த மக்கள் சிலைகளை வழிபடுவதைத் தடுக்கவும் அவர்களை நேர்வழிப்படுத்தவும் முயன்றார்கள். ஆனால் மக்கள் அவர்களை நிராகரித்தனர். யூனுஸ் (அலை) பொறுமை காக்காமல், அல்லாஹ்வின் ஆணையைப் பெறாமல் தம் சமூகத்தாரை விட்டு வெளியேறினார்கள். இதற்கிடையில் மக்கள் தங்களின் தவறுகளை உணர்ந்து அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோரி மன்றாடினர்.

    இதை அறியாமல் யூனுஸ் (அலை) நைனுவாவைவிட்டு வெளியேறி கப்பலில் பயணிக்க ஏறினார்கள். அவர் பயணித்துக் கொண்டு இருக்கும் போது நடுக்கடலில் காற்று பலமாக வீசத் தொடங்கி, கப்பல் தடுமாற்றமடைந்தது. கப்பலை லேசாக்க வேண்டுமென்பதற்காக, கப்பலில் உள்ள பொருட்களை வீசினர். இருப்பினும் இன்னும் ஒருவரையாவது கடலிலிருந்து வெளியேற்றியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஒருவர் இறங்கினால்தான் மற்றவர்கள் தப்பிக்க முடியுமென்ற நிலை ஏற்பட்டது.

    அப்படி வெளியேற்றாவிட்டால் கப்பல் கவிழ்ந்துவிடுமென்று அஞ்சினார்கள். யாரை வெளியேற்றுவது என்று யோசித்து, அனைத்துப் பயணிகளின் பெயர்களையும் சீட்டில் எழுதி குலுக்கிப் போட்டு யார் பெயர் வருகிறதோ அவர கடலிலிருந்து அப்புறப்படுத்த வேண்டுமென்று ஒருமனதாகத் தீர்மானமானது.

    சீட்டுக் குலுக்கிப் பார்த்ததில் யூனுஸ் (அலை) அவர்கள் பெயரே வந்தது. மறுபடியும் குலுக்கினர். மறுபடியும் அவர்களுடைய பெயரே வந்தது. மூன்றாவது முறை குலுக்கிய போதும் யூனுஸ் (அலை) பெயரே வந்ததால் அவர்கள் கடலில் இருந்து வீசப்பட்டார்கள்.

    பொறுமை இழந்தவர்களை இறைவன் நெருக்கடிக்குள்ளாக்கவும் செய்வான், அவர்களை விடுவிக்கவும் செய்வான். ஆற்றல் மிக்கவன் அல்லாஹ் ஒருவனே.

    திருக்குர்ஆன் 10:98, 21:87, 37:139-142

    -ஜெஸிலா பானு
    யூனுஸ் (அலை) அவர்களுக்கு உருவான நெருக்கடியை பற்றி பார்க்கலாம்.
    நபி யூனுஸ் (அலை) அவர்களை, இராக்கிலுள்ள நைனுவா என்ற ஊருக்கு, நபியாக இறைவன் அனுப்பி வைத்தான். அந்நகரத்தில் மக்கள் பெரும் செல்வந்தர்களாக இருந்தார்கள். ஆனால் அவர்களுக்கு ஓரிறைக் கொள்கையைப் பற்றி எதுவும் தெரியாமல் இருந்தது.

    சிலை வழிபாட்டில் சீரழிந்த அச்சமூக மக்களைச் சீர்திருத்துவதற்காக யூனுஸ் (அலை) மிகவும் பாடுபட்டார்கள். மிகச் சிலரைத் தவிர மற்ற எல்லோரும் தங்கள் கற்பனை தெய்வத்தைக் கைவிடவில்லை. "உங்கள் கையால் செய்யப்பட்ட உயிரற்றவையை வைத்து வணங்குகிறீர்கள். சக்தியில்லாததை விடுத்து ஏக இறைவனை வணங்குங்கள்" என்று போதித்தார்கள்.

    ஆனால் மக்கள் அவர்களுடைய போதனைகளுக்குச் செவிமடுக்கவில்லை. இறைத்தூதரை பொய்யர் என்று தூற்றினர்.

    யூனுஸ் (அலை), நைனுவா மக்களிடம் "நீங்கள் நல்வழிக்குத் திரும்பவில்லையென்றால் அல்லாஹ்வின் கோபப் பார்வை உங்கள் மீது இறங்கிவிடும்" என்று எச்சரித்தார்கள்.

    அதற்கு அந்த நைனுவா மக்கள், இறைவனுக்குப் பயப்படாமல் இறைத்தூதரைக் கிண்டல் செய்தார்கள். இதனால் மனம் வெறுத்து இறைவனின் அனுமதியில்லாமல் யூனுஸ் (அலை) அங்கிருந்து கிளம்பி விடுகிறார்கள்.

    எதிர்பார்த்த நாளில் வேதனை இறங்கவிருக்கிறது என்று அறிந்து கொண்ட மக்கள் சிரம் தலையில் படும்படி தங்களைத் தாழ்த்தி மண்டியிட்டு உள்ளத்தூய்மையுடன் இறைவனிடம் பாவமன்னிப்பு கேட்டு, அவர்கள் மீது இறைவன் கருணை புரியும்படி அழுது மன்றாடினார்கள். இறைவனும் அவர்களை மன்னித்தான்.

    மக்கள் மனம் திருந்திவிட்டார்கள் என்பதை அறியாமல் யூனுஸ் (அலை) அங்கிருந்து கோபமாக வெளியேறிய போது, இறைவன் அவர்களை நெருக்கடிக்கு ஆளாக்க மாட்டான் என்று எண்ணியிருந்தார்கள். ஆனால் அங்கு காட்சி மாறியது. யூனுஸ் (அலை) அவர்களை நெருக்கடி துரத்தியது.

    திருக்குர்ஆன் 10:98, 21:87

    - ஜெஸிலா பானு
    இவ்வுலகத்திற்கு ஏராளமான இறைத்தூதர்களை, அவரவர் சமூகத்தாருக்கு விளக்கிக் கூறுவதற்காக அவர்களுடைய மொழியிலேயே போதிக்கவும் மக்களை நல்வழிப்படுத்தவும் இறைவன் அனுப்பி வைத்தான்.
    இவ்வுலகத்திற்கு ஏராளமான இறைத்தூதர்களை, அவரவர் சமூகத்தாருக்கு விளக்கிக் கூறுவதற்காக அவர்களுடைய மொழியிலேயே போதிக்கவும் மக்களை நல்வழிப்படுத்தவும் இறைவன் அனுப்பி வைத்தான்.

    ஆனால் திருக்குர்ஆனில் இருபத்தைந்து இறைத்தூதர்களின் பெயர்கள் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளன. சில இறைத்தூதர்களின் வரலாறு முழுமையாகக் கூறப்பட்டுள்ளது. சில இறைத்தூதர்களின் பெயர்களோடு சில குறிப்புகள் மட்டுமே காணப்படுகிறது.

    நபி இல்யாஸ் (அலை) அவர்கள் இப்ராஹிம் (அலை) அவர்களின் வழித்தோன்றலில் நபி ஹாரூன் வழி வந்தவர்; ஷாம் அதாவது சிரியா நாட்டிற்கு நபியாக அனுப்பப்பட்டவர் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

    அவர்களுடைய சமூகத்தார் 'பஅல்' என்னும் கற்பனை தெய்வத்தை வணங்கி வந்தனர். அதனால் அந்த நகரம் 'பஅலபக்' என அழைக்கப்பட்டது. இன்று இந்த நகரம் லெபனானில் உள்ளது.

    இல்யாஸ் (அலை) அவர்கள் மக்களிடம், "படைப்பாளர்களில் எல்லாம் மிகச் சிறந்தவனான அல்லாஹ்வை விட்டுவிட்டு உங்கள் கற்பனை தெய்வத்தை வணங்கி உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்கிறீர்கள். இறையச்சம் கொள்ளுங்கள். அல்லாஹ்தான் உங்களுடைய இறைவனும், உங்களுக்கு முன் சென்ற மூதாதையர்களின் இறைவனும் ஆவான்" என்றார்கள். அதற்கு மக்கள் அவரைப் பொய்யர் எனத் தூற்றினார்கள். ஆகையால் மறுமையில் இறைவன் இவர்களைத் தண்டிப்பான்.

    இறைவன் ஒருவன், அவன் நம் கற்பனைக்கு அப்பாற்பட்டவன் என்று நம்புபவர்களுக்கு நற்கூலியுண்டு.

    இறைவன் அவனுடைய தூதர்களை உலகத்திலுள்ள அனைவரை விடவும் மேன்மையாக்கியுள்ளான்.

    இல்யாஸ் (அலை) அவர்களைப் பற்றி வேறு எந்தக் குறிப்பும் திருமறையில் இல்லை.

    இல்யாஸ் (அலை) மீது ஸலாமுண்டாவதாக.

    திருக்குர்ஆன் 14:4, 38:45-48, 6:84-85, 37:123-131

    - ஜெஸிலா பானு.
    நன்றி மறந்து நிராகரித்தோருக்கன்றி வேறெவருக்கும் இத்தகைய கூலியை இறைவன் கொடுப்பதில்லை.
    ஸபா நாட்டினருக்கு இறைவன் வளங்களை வாரி வழங்கியிருந்தான். அந்நகரத்தின் இருப்புறங்களிலும் செழிப்பான சோலைகள் வளரச் செய்து, அதில் அவர்களுக்குத் தேவையான காய்கனிகளை அளித்திருந்தான் இறைவன்.

    ஒருமுறை கடும் மழை பொழிந்தது. மழை வெள்ளம் பயிர்களை நாசமாக்கியது. அதனால் ஸபா நாட்டின் மக்கள் மழைநீரைத் தேக்கி வைக்க அணை அமைத்தார்கள். மழை இல்லாத காலத்தில் அந்நீரை பயிர் விளைச்சலுக்குப் பயன்படுத்தினார்கள். விளைச்சல் அமோகமாக இருந்தது. இதன் காரணமாக அவர்கள் வாழ்வு மேம்பட்டது. அவர்களின் வளம் கூடியது.

    அவ்வூர் மக்களுக்குத் தேவையான காய் மற்றும் கனி வகைகளும் அவர்களுக்குத் திருப்தியாக அந்நகரத்திலேயே கிடைத்தது. எல்லா வளங்களும் கிடைத்து மகிழ்ச்சியுடன் இருக்கும் மக்களுக்கு இறைவன் பற்றிய நினைவில்லாமல், இறையச்சமில்லாமல் இருந்தனர்.

    அந்நாட்டிலுள்ள ஊர்களுக்கிடையில் இறைவன் போக்குவரத்துப் பாதைகளை அமைத்துத் தந்து அவர்களுக்குச் சுலபமாக்கியிருந்தான். அதில் அவர்கள் எந்தப் பயமுமில்லாமல் காலை- இரவு என்று பாராமல் பிரயாணம் செய்தார்கள். ஆனால், அவர்கள் “பிரயாணம் செய்யும் இடங்களுக்கு இடையேயுள்ள தூரம் அதிகமாக இருந்தால், இன்னும் உல்லாசமாக இருந்திருக்கும்” என்று வேண்டி தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டார்கள்.

    வளங்களையும் நல்ல ஆரோக்கியத்தையும் தந்த இறைவனுக்கு நன்றி செலுத்த மறந்துவிட்டனர். ஓரிறைக் கொள்கையைப் புறக்கணித்தார்கள். ஆகவே, இறைவன் அவர்களுக்குத் தக்க தண்டனையை வழங்க அவர்களின் சுவை மிகுந்த கனிகளைக் கொண்ட அவர்களுடைய இரு தோப்புகளும் கடும் கசப்பும், புளிப்பும் கொண்ட பழங்களுடைய மரங்களாக மாற்றினான்.

    மக்களால் கட்டப்பட்ட பெரிய அணையை உடைக்கக் கடும் வெள்ளப் பிரவாகத்தை இறைவன் அவர்களுக்குத் தந்தான். அணை உடைந்து அதிலிருந்து நீர் பெருக்கெடுத்தோடி பயிர்கள் நாசமாகியதோடு, வீடுகள் இருந்த சுவடுகள் இல்லாமல் எல்லாமும் அழிந்து அந்த நாடே காணாமல் போனது. தப்பித்த மக்கள் பல இடங்களுக்குச் சிதறிப் போனார்கள். அழகிய நகரம் அழிந்து போனது.

    நன்றி மறந்து நிராகரித்தோருக்கன்றி வேறெவருக்கும் இத்தகைய கூலியை இறைவன் கொடுப்பதில்லை.

    திருக்குர்ஆன் 34:15-19

    - ஜெஸிலா பானு
    மன்னிப்பளிக்கும் இறைவன் பாவமன்னிப்புக் கேட்காமல் புறக்கணிப்பவர்களைத் தண்டிக்கவும் செய்கிறான்.
    அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர் சுலைமான் (அலை) அவர்கள் மீதும் நம்பிக்கை வைத்து, ஓரிறைக் கொள்கையை ஏற்ற ஸபா நாட்டின் அரசி பல்கீஸ், தனது நாட்டிற்குத் திரும்பிய பின் மக்களுக்கு எடுத்துரைத்து அவர்களை நல்வழிப்படுத்தினார்.

    சூரியனை வணங்குவதைக் கைவிட்டு ஸபா நாட்டு மக்கள் நேர்வழியில் மிகவும் ஒழுக்கமாகவும் நேர்மையாகவும் இறையச்சம் நிறைந்தவர்களாகவும் ஓரிறைக் கொள்கை நெறிகளுக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்தனர்.

    பல காலத்திற்குப் பிறகு, பல்வேறு ஆட்சியாளர்களின் மாற்றம் நிகழ்ந்த பிறகு, பல தலைமுறைகள் கடந்துவந்த பிறகு, மக்களும் கற்றுத் தெரிந்ததை மறந்தார்கள்.

    ஓரிறைக் கொள்கையைக் கைவிட்டவர்களாக, தர்மம் செய்வதைத் துறந்தவர்களாக, அறமில்லாமல் வாழ்ந்தனர்.

    ஸபா நாட்டினருக்கு, அவர்கள் வசித்திருந்த இடத்தில் அதன் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் இரண்டு சோலைகள்
    இருந்தன. மிகவும் வளமிக்க நகரமாக அது திகழ்ந்தது.

    இறைவன் அவர்களுக்காக அளித்துள்ள ஆகாரத்திலிருந்து சாப்பிடும்படியும், இறைவனுக்கு நன்றி செலுத்தும்படியும் கூறப்பட்டிருந்த போதனைகளை அவர்கள் மறந்து, நன்றிகெட்டவர்களாக மாறியிருந்தனர்.

    இறைவனின் கோபப் பார்வை அவர்கள் மீது திரும்பியது.

    மன்னிப்பளிக்கும் இறைவன் பாவமன்னிப்புக் கேட்காமல் புறக்கணிப்பவர்களைத் தண்டிக்கவும் செய்கிறான்.

    திருக்குர்ஆன் 34:15

    - ஜெஸிலா
    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் சந்தனக்கூடு திருவிழா தொடங்குகிறது என்று சந்தனக்கூடு விழாவுக்கான ஆணையர் ராமராஜன் தெரிவித்தார்.
    ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்கா சந்தனக்கூடு திருவிழா, ஆண்டுதோறும் தேசிய ஒருமைப்பாட்டு விழாவாக நடந்து வருகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக உள்ள சந்தனக் கூடு திருவிழாவிற்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்காவிற்கு புதிய நிர்வாக கமிட்டி தேர்வு செய்யப்படுவதில் தொய்வு ஏற்பட்டது. இதை தொடர்ந்து தர்கா ஹக்தார்கள் சுல்தான் செய்யது இபுராகிம், அகமது இபுராகிம் ஆகியோர் சந்தனக்கூடு திருவிழா நடத்துவதற்கு தனி ஆணையரை நியமித்து தருமாறு ராமநாதபுரம் சார்பு நீதி மன்றத்தில் மனு செய்தனர்.

    மனுவை விசாரித்த நீதி பதி திருவிழாக்கால ஆணையராக வக்கீல் ராமராஜன் என்பவரையும் உதவியாக வக்கீல் ரமேஷ் கண்ணன் என்பவரையும் நியமித்தார்.

    ஏர்வாடி பாதுஷா நாய கம் தர்கா சந்தனக்கூடு விழாவுக்கான ஆணையர் ராமராஜன் கூறியதாவது:-

    நடப்பாண்டுக்கான சந்தனக்கூடு திருவிழா வருகிற 4-ந்தேதி மவுலீது (புகழ் மாலை) ஓதப்பட்டு தொடங்குகிறது. 13-ந்தேதி அடிமரம் ஏற்றப்பட்டு, 14ந்தேதி கொடியேற்றம், 26-ந்தேதி சந்தனக்கூடு, 27-ந்தேதி சந்தனம் பூசுதல், செப்., 3-ந்தேதி கொடியிறக்கத்துடன், பக்தர்களுக்கு நேர்ச்சி வழங்கப்பட்டு விழாநிறைவடைகிறது. விழா தொடர்பான கருத்துக்கள் ஹக்தார்களிடம் கேட்டு முடிவு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சந்தனக்கூடு திருவிழாவுக்கான ஏற்பாடுகளை ஆணையர் ராமராஜன் உத்தரவின் பேரில் தர்கா மேலாளர் செய்யது சிராஜ்தீன் செய்து வருகிறார்.

    நிர்வாக கமிட்டி முன்னாள் தலைவர் அம்சத் ஹூசைன், முன்னாள் செயலாளர்கள் துல்கருணை பாட்சா, செய்யது பாரூக் ஆலிம் அரூஸி, உதவி தலைவர் செய்யது சிராஜ் தீன், ஹக்தார்கள் சோட்டை செய்யது அபுபக்கர் பாதுஷா, கலில்ரக்மான், அஜ்முல் ரக்மான் உள்பட தர்கா ஹக்தார்கள் உடன் இருந்தனர்.
    ×