என் மலர்tooltip icon

    இஸ்லாம்

    மாநபி வழங்கிய நற்சான்றின்படி, உயிரையும், உடைமைகளையும் தியாகம் செய்த முகைரிக் என்றும் சிறந்தவராகவே உலக வரலாற்றில் கருதப்படுகிறார்.
    மக்கத்து நிராகரிப்பாளர்களுக்கு பத்ரு போரில் ஏற்பட்ட தோல்வி என்பது அவர்களை நிலைகுலையச் செய்து விட்டது. பல முக்கிய தலைவர்கள் அதில் இறந்து போனதும் அவர்களின் பழிவாங்கும் எண்ணத்தை இன்னும் அதிகமாக்கியது.

    எனவே நிராகரிப்பளர்களான சப்வான், உமைர் ஆகிய இருவரும் நபிகளாரை எப்படி பழி தீர்ப்பது என்பது குறித்து மக்கா நகரில் திட்டம் தீட்டினார்கள். உமைரின் மகன் பத்ரு யுத்தத்தில் யுத்த கைதியாக மதீனாவில் சிறை வைக்கப்பட்டிருந்தார். இது உமைரின் மனதை பெரும் வேதனைக்குள்ளாக்கியது.

    உமைர் சப்வானிடம் கூறினார், ‘நான் பெரிதும் கடன் சுமைகளால் பாதிக்கப்பட்டுள்ளேன். மேலும், நான் இல்லையென்றால் எனது குடும்பம் கவனிப்பார் அற்றதாக போய்விடுமோ என்ற அச்சத்தாலும் நான் எதுவும் செய்யமுடியாமல் இருக்கின்றேன். இந்த இரண்டு விஷயங்களுக்கும் யாராவது பொறுப்பேற்றுக் கொண்டால் நான் பொதுநலன் கருதி என்னுயிரை தியாகம் செய்து முஹம்மதுவை கொலை செய்யத் தயாராக இருக்கின்றேன்’ என்றார்.

    ‘உமைரே! நீர் கவலைப்படவேண்டாம். நீர் சொன்ன அவ்விரண்டு விஷயங்களுக்கும் நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்’ என்று சப்வான் உறுதி கூறினார்.

    இத்திட்டம் நடக்கும் வரை அதனை ரகசியமாக வைத்துக் கொள்வது எனவும் இருவரும் முடிவு செய்து கொண்டனர்.

    பின்னர் உமைர் விஷம் தோய்ந்த கூர்மையான வாளை எடுத்துக் கொண்டு தனது மகனை விடுவிக்கின்ற சாக்கில் மதீனா புறப்பட்டார்.

    உமைர் மதீனாவை அடைந்தபோது நபி களார் பள்ளிவாசலில் அமர்ந்திருந்தார்கள். உமைர் வாளுடன் நபியை நோக்கி வருவதைக் கண்ட உமர் (ரலி) அவரை உள்ளே வரவிடாமல் தடுத்தார்கள். எனினும் நபிகளார் உமைரை தன்னிடம் வரவிடுமாறு கூறினார்கள்.

    உமைர் அருகில் வந்ததும் அவரது வருகைக் குறித்த காரணம் அவரிடம் வினவப்பட்டது. தனது மகனின் விடுதலைக்காகவே வந்ததாக வஞ்சகமாக கூறினார்.

    ‘அப்படியானால் ஏன் வாள் எடுத்து வந்துள்ளர்?’ என்றார் நபிகளார்.

    ‘எங்களது வாள்களை எல்லாம் இறைவன் சபிக்கட்டும். அதனால் எங்களுக்கு எந்த நன்மையும் ஏற்படவில்லையே’ என்றார் உமைர்.

    அப்போது அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சப்வானும் உமைரும் மக்காவில் பேசிக்கொண்ட வார்த்தைகளை ஒரு வரி விடாமல் கூறியதும் திகைத்து போனார் உமைர்.

    ‘உமைரே! நீர் என்னைக் கொல்வதற்காகவே உமது கடன் சுமைகளையும், குடும்பத்தினரையும் சப்வானிடம் பொறுப்பு சாட்டிவிட்டு தானே வந்திருக்கிறீர்?’ என்று நபிகளார் கூறினார்கள்.

    உடனே ‘முஹம்மதே! இச்செய்தியை உமக்கு கூறியது யார்?’ என்றார் உமைர்.

    ‘இறைவன் மீது ஆணையாக நாங்கள் இருவரும் சதி திட்டம் தீட்டி பேசும்போது எங்கள் இருவரைத்தவிர அங்கு மூன்றாம் நபர் வேறு யாரும் இல்லையே! இது சாதாரண மனிதருக்கு சாத்தியமில்லையே?’ என்று உணர்ந்தார் உமைர்.

    இதற்கு அண்ணலார் அமைதியாக பதில் அளித்தார். ‘எனக்கு ஜிப்ரியல் மூலம் இறைவன் அறிவித்துக் கொடுத்தான்’ என்றார்கள்.

    இந்த அருள்மிகு வார்த்தைகள் உமைரின் உள்ளத்தை மீண்டும் உலுக்கியது.

    ‘வானலோகத்தில் இருந்து உமக்கு இறைச்செய்தி வருவதாக நீர் கூறியபோது, நாங்கள் எமது அறியாமையின் காரணத்தால் உம்மை பொய்யர் என்று கூறினோம். ஆனால் இப்போது எங்கள் இருவர் விஷயத்தில் நாங்கள் யாருக்குமே வெளிபடுத்தாத ரகசியத்தை இறைவன் உமக்கு வெளிப்படுத்திக் காட்டியுள்ளான். முஹம்மதே! நீங்கள் உண்மை உரைத்தீர்கள்’ என்று உமைர் கூறினார்.

    ‘இஸ்லாத்தில் நுழைய எனக்கு வழிகாட்டிய அல்லாஹ்வை தவிர வேறு யாரும் இல்லை, முஹம்மத் அவனுடைய தூதராய் இருக்கின்றார் என்று நான் சாட்சி கூறுகின்றேன்’ என்று உளமார மொழிந்தார்.

    அண்ணலாரின் அருள்மொழியானது கொலை செய்ய வந்த உமைரின் உள்ளத்தை திசை மாறச் செய்ததோடு ஈமானை (இறை விசுவாசத்தை) ஏற்றுக்கொள்ள வைத்தது.

    அண்ணலாரின் அன்பு உள்ளம், உயிருக்கு உலை வைக்க வந்த உமைரின் மனதை இறைவனின் அருளால் தன்வசம் ஈர்த்துக் கொண்டுவிட்டது.

    இதுபோன்று மனித மனம்கவர்ந்த மாநபியின் மற்றொரு நிகழ்வு இது:-

    உஹத் போரின் போது மரணித்தவர்கள் மத்தியில் இனம் தெரியாத ஒருவரது உடலும் இருந்தது. அவரைப்பற்றி விசாரித்த போது, அவர் தலாபா கோத்திரத்தை சார்ந்த கல்வியறிவு மிக்க யூத ஆசிரியர் என்றும் அவரது பெயர் முகைரிக் என்றும் அறியப்பட்டது.

    பின்னர் அவரைப்பற்றி விசாரித்த போது கீழ்க்கண்ட தகவல்கள் கிடைத்தன.

    முகைரிக், உஹத் யுத்த தினத்தின் அதிகாலையில் தமது மக்களை எல்லாம் ஒன்றுதிரட்டி இவ்வாறு ஒரு பொது அறிவிப்பு செய்தார்.

    “நபிகளாருடன் யூதர்கள் செய்து கொண்ட உடன்படிக்கையின்படி உஹத் யுத்தத்தில் நாம் அனைவரும் கலந்து கொண்டு போர் புரிந்திருக்க வேண்டும். ஆனால் ‘ஸப்பத்’ என்று விரதம் பூணும் ஓய்வு தினத்தை காரணமாக காட்டி போரில் கலந்து கொள்ளாமல் உடன்படிக்கைக்கு மாற்றமாக நடந்துகொண்டோம்”.

    “இது உண்மையாகவே ஸப்பத் விரதம் மேற்கொள்பவர்களின் நடவடிக்கையாக இருக்காது. நீங்கள் வராவிட்டாலும், நான் ஒருவனாவது உடன்படிக்கையை காப்பாற்ற வேண்டி தனியாக சென்று உஹது போரில் கலந்து கொள்ளப்போகிறேன். அதில் ஒருவேளை நான் இறக்க நேரிட்டால் எனது சொத்துக்கள் அனைத்தும் முஹம் மதுவுக்கே சொந்தமாகும். எனது உடமைகளுக்கு முஹம்மதையே வாரிசாக்குகிறேன். இதற்கு நீங்கள் அனைவரும் சாட்சியாக இருங்கள். முஹம்மத் எனது சொத்துகளை இறைவன் காட்டும் வழியில் செலவு செய்வார்”.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் அவர் போர் தளவாட கருவிகளுடன் உஹத் நோக்கி சென்றார். அங்கு முகைரிக் தனது உயிரை இழக்கும் வரை போராடியுள்ளார்.

    இதை அறிந்து கொண்ட அண்ணலார், ‘முகைரிக் யூதர்கள் அனைவரிலும் சிறந்தவர்’ என்று நற்சான்று வழங்கினார்கள்.

    நபிகளார் மதீனாவில் மேற்கொண்ட ஏராளமான தர்ம காரியங்களுக்கு முகைரிக்கிடமிருந்து பெறப்பட்ட வளமான ஈச்சந் தோட்டத்தின் வருவாயே காரணமாக அமைந்தது. மாநபி வழங்கிய நற்சான்றின்படி, உயிரையும், உடைமைகளையும் தியாகம் செய்த முகைரிக் என்றும் சிறந்தவராகவே உலக வரலாற்றில் கருதப்படுகிறார்.

    மு. முகம்மது சலாகுதீன், ஏர்வாடி, நெல்லை மாவட்டம்.
    இறை நம்பிக்கையாளராக இருந்தாலும் சரி, இறை மறுப்பாளராக இருந்தாலும் சரி அவர்களுக்கு இறைவன் பாகுபாடு பார்க்காமல் உணவளிக்கிறான் என்பதற்கு இறைத்தூதர் இப்ராகீம் (அலை) அவர்கள் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சியை பார்க்கலாம்.
    இறை நம்பிக்கையாளராக இருந்தாலும் சரி, இறை மறுப்பாளராக இருந்தாலும் சரி அவர்களுக்கு இறைவன் பாகுபாடு பார்க்காமல் உணவளிக்கிறான் என்பதற்கு இறைத்தூதர் இப்ராகீம் (அலை) அவர்கள் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சி.

    நபி இப்ராகீம் அவர்கள் ‘விருந்தினர்களின் தந்தை’ என்று அறியப்படுபவர். எப்போதும் விருந்தோடு மட்டுமே உண்ணக் கூடியவர். ஒருநாள் முன்னறிமுகம் இல்லாத முதியவர் ஒருவர் அவரைத் தேடி வந்தார். அவரை நபி இப்ராகீம் நட்புடன் வரவேற்று தன்னுடன் உணவருந்துமாறு வருந்தி அழைத்தார். இதை ஏற்றுக் கொண்ட அந்த முதியவர் இப்ராகீம் நபியுடன் உணவருந்த அமர்ந்தார். பல வகை உணவுகள் இருவரின் முன்பு படைக்கப்பட்டன. இப்ராகீம் நபி, ‘பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்’ என்று சொல்லி உணவை உண்ண ஆயத்தமானார்.

    இதற்கு ‘அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால் தொடங்குகிறேன்’ என்று அர்த்தம். முஸ்லிம்கள் எந்தக் காரியத்தைத் தொடங்கினாலும் ‘பிஸ்மில்லாஹ்’ சொல்லி தொடங்குவதே வழக்கம். இது ‘அவனின்றி அணுவும் அசையாது’ என்ற அடிப்படையில் இறைவனுக்கு வழங்கும் பணிவான அர்ப்பணிப்பு. மனிதனாக நம்மைப் படைத்துப் பேருதவி களைச் செய்யும் இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும் என்ற நோக்கில் செய்யப்படும் சமர்ப்பணம்.

    அந்த முதியவரிடம் நபி இப்ராகீம், ‘நீங்களும் இறைவன் நாமம் சொல்லி உணவருந்துங்கள்’ என்று கேட்டுக் கொண்டார். ‘என் எழுபது வயது காலத்தில் எவர் பெயரையும் சொல்லி நான் உணவு உண்டதில்லை’ என்று இறைவன் திருப்பெயரைக் கூற அந்தப் பெரியவர் மறுத்து விட்டார்.

    அப்போதுதான் இப்ராகீம் நபிக்கு அந்தப் பெரியவர் இறை மறுப்பாளர் என்ற செய்தி தெரிய வந்தது. இதனால் இப்ராகீம் நபி முகத்தில் கடுமை காட்டியதால் முதியவர் சாப்பிடாமலேயே அங்கிருந்து வெளியேறினார்.

    உடனே இறைவன் தன் ‘உற்ற நண்பரான’ இப்ராகீமிடம் கேட்டான்: “இப்ராகீமே! எழுபது ஆண்டுகளாக என் பெயரைக் கூறாமல் என் அடியானாகிய அவன் என்னை நிராகரித்து வருகிறான். இருந்தபோதிலும் நான் அவனை ஒருநாள்கூட- ஒரு வேளைகூட பட்டினி போட்டதில்லை. ஆனால் நீரோ என் பெயரை ஒருமுறை உச்சரிக்க மறுத்தவனை பட்டினியோடு அனுப்பி விட்டீர்களே!”

    அதிர்ச்சியில் உறைந்து போனார், இப்ராகீம் நபி. வெளியேறிக் கொண்டிருந்த முதியவரிடம் விரைந்து சென்று மன்னிப்புக் கோரி அவரை அழைத்து வந்து உணவைப் பரிமாறினார். ‘என்ன நடந்தது? ஏன் இந்த மாற்றம்?’ என்று முதியவர் வினா எழுப்பினார். அதற்கு நபி இப்ராகீம், இறைவன் தன்னைக் கண்டித்ததை எடுத்துச் சொன்னார்.

    இப்போது அதிர்ந்து போனார், அந்த முதியவர்.

    இது, மனிதர்களுக்கு மட்டுமல்லாமல், கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும், காட்டில் வாழும் மிருகங்களுக்கும், கடலில் தவழும் மீன்களுக்கும், பூமிக்கு அடியில் வாழும் புழுக்களுக்கும் உணவளிப்பவன் இறைவன் என்பதை எடுத்துக் காட்டுகிற வரலாற்றுச் சம்பவம்.

    விருந்தினர்களை எவ்வாறு உபசரிக்க வேண்டும் என்பதை கடந்த அத்தியாயத்தில் கண்டோம். வீட்டுக்கு வரும் விருந்தினர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை இந்த அத்தியாயத்தில் பார்ப்போம்.

    ‘விருந்தும், மருந்தும் மூன்று நாட்கள்’ என்பது பழமொழி. இதையே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் வலியுறுத்தி உள்ளார்கள். ‘முதல் நாள் அன்பளிப்பு தினமாகும்’. அதில் மிக உயர்ந்த உணவை (விருந்தாளிக்கு) ஊட்டி விட வேண்டும். பொதுவாக விருந்து உபசரிப்பின் காலம் மூன்று நாட்களாகும். (அதாவது இரண்டாவது, மூன்றாவது நாட்களில் உபசரிப்பதற்கு அதிக சிரமம் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.) “விருந்தளிப்பவரின் இல்லத்தில் அவரை நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கும் வகையில் விருந்தினர் அங்கு தங்கிக் கொள்வது ஆகுமானதல்ல” என்பது நபிகளாரின் கூற்று.

    இன்னொரு முறை, “ஒரு விருந்தினர், விருந்தளிப்பவரைப் பாவியாக்கும் அளவுக்கு அவரது வீட்டில் தங்கிக் கொள்வது முறையல்ல” என்று நபிகளார் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், “இறைத்தூதர் அவர்களே! அவர் எப்படி பாவி ஆவார்?” என்று கேட்டனர். அதற்கு, “விருந்தளிப்பதற்கு எதுவுமே இல்லாத அளவுக்கு அவர் அங்கு அதிக நாள் தங்கி விடுவதால் அவர் விருந்தளிக்க முடியாத பாவியாகி விடுவார்” என்று நபிகளார் பதில் அளித்தார்கள்.

    விருந்தினர்கள், விருந்து கொடுப்பவரின் வேலைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும். விருந்துக்குச் சென்றிருக்கும் நேரத்தில் அவரது பணிகள் பாதிக்காதவாறு நடந்து கொள்ள வேண்டும்.

    பிறரது இல்லத்துக்கு விருந்தினராகச் செல்லும்போது கைக்குட்டை, டவல், சோப்பு, சீப்பு போன்றவற்றை எடுத்துச் செல்லலாம். இதன் மூலம் விருந்தளிப்பவருக்கு ஏற்படும் சிரமங்களைக் குறைத்துக் கொள்ள முடியும்.

    கிடைக்காத பொருட்களைக் கேட்டு விருந்தளிப் போரைச் சிரமத்திற்கு ஆளாக்கக் கூடாது.

    விருந்தினர்கள், தொடர்ந்து விருந்தினர்களாக மட்டும் அல்லாது பிறரை விருந்துக்கு அழைப்பவராகவும் இருக்க வேண்டும்.

    விருந்தளிப்பவர்களுக்கு குறிப்பாக அவர்களின் குழந்தைகளுக்கு விருந்தினர்கள் தங்கள் வசதிக்கேற்ப ஏதாவது அன்பளிப்புகளை வாங்கிச் செல்ல வேண்டும். அன்பளிப்பு வழங்குவதால் அன்பும் நெருக்கமும் அதிகரிக்கிறது. அன்பளிப்பு செய்வோரின் உள்ளம் விசாலமடைகிறது.

    விருந்துண்ட பிறகு, விருந்தளித்தவரது வாழ்க்கையில் பாக்கியத்தையும் அருளையும் பொழியுமாறு இறைவனிடம் பிரார்த்தனை (துஆ) செய்ய வேண்டும்.

    ஒருமுறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும், அவர்களுடன் சில தோழர்களையும் அபூ ஹுஸைம் (ரலி) அவர்கள் விருந்துக்கு அழைத்தார். அவர்கள் அனைவரும் விருந்துண்ட பிறகு நபிகளார் தம் தோழர்களை நோக்கி, “நீங்கள் உங்கள் சகோதரருக்குப் பகரமாகச் செய்யுங்கள்” என்று கூறினார்கள்.

    இதைக் கேட்ட நபித் தோழர்கள், “இறைத் தூதரே! நாங்கள் எதைப் பகரமாக அளிப்பது?” என்று கேட்டனர். அதற்கு நபிகளார், “ஒருவர் தமது சகோதரரிடம் சென்று அங்கு உண்டு-பருகினால் அவருடைய வாழ்க்கையில், அருளும் பாக்கியமும் பெருக வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்வதே அவருக்கு அளிக்கும் பகரமாகும்” என்று கூறினார்கள்.

    சகோதரத்துவத்தால் மக்களிடையே விரோதங்களும், வேற்றுமைகளும், மனக் கசப்புகளும் அகன்றது. ஒருங்கிணைந்த இஸ்லாமிய ஒற்றுமையும் ஒருமைப்பாடும் மலர்ந்தது.
    “வேதத்தையுடையோரில் சிலர் இருக்கிறார்கள்; அவர்களிடம் நீர் ஒரு பொற் குவியலை ஒப்படைத்தாலும், அவர்கள் அதை ஒரு குறையும் இல்லாமல், கேட்கும்போது உம்மிடம் திருப்பிக் கொடுத்து விடுவார்கள். அவர்களில் இன்னும் சிலர் இருக்கிறார்கள், அவர்களிடம் ஒரு நாணயத்தை (தினாரை) ஒப்படைத்தாலும், நீர் அவர்களிடம் தொடர்ந்து நின்று கேட்டாலொழிய, அவர்கள் அதை உமக்குத் திருப்பிக் கொடுக்கமாட்டார்கள்; அதற்குக் காரணம், ‘பாமரர்களிடம் இருந்து நாம் எதைக் கைப்பற்றிக் கொண்டாலும் நம்மைக் குற்றம் பிடிக்க அவர்களுக்கு வழியில்லை’ என்று அவர்கள் கூறுவதுதான். மேலும், அவர்கள் அறிந்து கொண்டே அல்லாஹ்வின் பேரில் பொய் கூறுகிறார்கள்” என்ற திருக்குர்ஆனின் இறை வசனத்திற்கேற்ப உள்ளத்தில் இறைநிராகரிப்பை மறைத்து வைத்திருந்த யூதர்கள் நடந்து கொண்டார்கள்.

    யூதர்கள் தங்களது மார்க்கத்தைப் பரப்ப வேண்டுமென்று தீவிரம் காட்டவில்லை மாறாகப் பதவியும் பொருளும் மட்டுமே அவர்களின் குறிக்கோளாக இருந்தது. அதற்காகப் பலவகையான சூழ்ச்சிகளை மேற்கொண்டனர். இவர்கள் திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ள அப்பாவி முஸ்லிம்களையும் பயன்படுத்திக் கொண்டனர். அரேபியர்கள் இஸ்லாமை ஏற்றுக் கொண்டால் அவர்களிடையே ஒற்றுமை ஏற்பட்டுவிடுமென்றும் அஞ்சினர்.

    யூதர்களைப் போலவே மக்காவிலுள்ள குறைஷிகளும் இஸ்லாமிற்கும் முஸ்லிம்களுக்கும் மிகப்பெரிய எதிரிகளாகத் திகழ்ந்தனர். மக்காவைவிட்டு மதீனாவிற்குத் தஞ்சம் புகுந்தவர்களின் சொத்துக்களையும், வீடுகளையும், நிலங்களையும் பறிமுதல் செய்து மக்களுக்கு நெருக்கடி தந்தனர். மதீனாவில் அவர்கள் தமக்கான ஒரு சமுதாயத்தை உருவாக்குவதை அவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. மதீனாவில் 'மஸ்ஜிதுன் நபவி'யை நிறுவிய பின் அந்தப் பள்ளிவாசலில் இறை வணக்கம் மட்டுமல்லாது, மார்க்கக் கல்வியும் போதனைகளும் நிறைந்திருந்தது, தொழுகைக்கான அழைப்பான ‘பாங்கும்’ ஒலித்த வண்ணமிருந்ததால், அவர்களால் பொறுத்துக் கொள்ள இயலவில்லை. இதையெல்லாம் முடிவுக்குக் கொண்டுவர அவர்கள் திட்டங்களைத் தீட்டினர்.

    அதற்கு நேர்மாறாக நபிகள் நாயாகம் முஹம்மது (ஸல்), ‘இனி அல்லாஹ்வுடைய வேதக் கட்டளைப்படி உங்கள் உறவினர்களில் உள்ளவர்களே ஒருவர் மற்றவருக்கு நெருக்கமானவர்கள். எவர்கள் இறைநம்பிக்கையின் காரணமாகத் தம் ஊரைத் துறந்து வந்தார்களோ, அவர்கள் உங்களைச் சேர்ந்தவர்கள். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்’ என்ற இறை வசனத்திற்கேற்ப இறைநம்பிக்கையாளர்களுக்கிடையில் சகோதரத்துவ உடன்படிக்கையை அமைத்து அதில் உறுதியாக இருக்க வேண்டுமென்று வலியுறுத்தி வந்தார்கள். நபிகளாரின் சகோதரத்துவத்தின் அடிப்படை நோக்கமானது மக்கள் அறியாமைக் காலத்து பாகுபாடின்றி, குலப் பெருமை பேசாமல், செல்வந்தர் ஏழை என்று பாராமல், நிறம் இனமென்று பிரிக்காமல் அனைவரும் ஒற்றுமையாக ஓர் இனமாக இஸ்லாமை மட்டும் முன்னிறுத்தி அந்தப் பிணைப்போடு செயல்பட வேண்டுமென்பதை வலியுறுத்துவதாக இருந்தது

    இந்தச் சகோதரத்துவத்தால் மக்களிடையே விரோதங்களும், வேற்றுமைகளும், மனக் கசப்புகளும் அகன்றது. ஒருங்கிணைந்த இஸ்லாமிய ஒற்றுமையும் ஒருமைப்பாடும் மலர்ந்தது.

    திருக்குர்ஆன் 3:75, 8:75 அர்ரஹீக் அல்மக்தூம்

    - ஜெஸிலா.
    “இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் போதையுடன் இருக்கும் நிலையில் தொழுகையை நெருங்காதீர்கள். நீங்கள் என்ன கூறுகிறீர்கள் என்பதை அறிகிறபோதுதான் தொழ வேண்டும்” (4:43) என்கிறது, இறைமறை வசனம்.
    மனித சமுதாயம் நேர்வழி பெற்று இவ்வுலக, மறுவுலக வாழ்வில் வெற்றி பெற இஸ்லாம் வழிகாட்டுகிறது. உணவு உண்பதில்கூட இஸ்லாம் சில வரையறைகளை வகுத்துள்ளது என்பதையும், அனுமதிக்கப்பட்டது ‘ஹலால்’ என்றும், தடை செய்யப்பட்டவை ‘ஹராம்’ என்றும் இஸ்லாம் கூறுவதை முந்தைய அத்தியாயத்தில் விரிவாகப் படித்தோம்.

    இவை தவிர இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டவை ஏராளம்.

    எல்லாவிதமான போதைப்பொருட்களும், மதுபானங்களும், சூதாட்டமும் மனிதனுக்குத் தடுக்கப்பட்டவை.

    “மது மற்றும் சூதாட்டம் (இவற்றுக்குரிய கட்டளைகள்) பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறுவீராக: “இவ்விரண்டிலும் பெருங்கேடு இருக்கிறது. அவற்றில் மக்களுக்கு சிறிது பயன் இருப்பினும் அவற்றினால் ஏற்படும் பாவம் அவற்றின் பயனை விட அதிகமாக இருக்கின்றது” என்று திருக்குர்ஆனில் (2:219) இறைவன் கூறுகின்றான்.

    “இறை நம்பிக்கை கொண்டவர்களே! மது, சூதாட்டம் ஆகியவை அருவருக்கத்தக்க ஷைத்தானியச் செயல்களாகும். அவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்” (5:90) என்றும்,

    “மது மற்றும் சூதாட்டத்தின் வாயிலாக உங்களுக்கு இடையில் பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தி அல்லாஹ்வை நினைவு கூர்வதில் இருந்தும், தொழுகையில் இருந்தும் உங்களைத் தடுத்து விடவே ஷைத்தான் விரும்பு கிறான். இதற்குப் பிறகாவது நீங்கள் அவற்றைத் தவிர்த்துக் கொள்வீர்களா?” (5:91) என்றும்,

    “இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் போதையுடன் இருக்கும் நிலையில் தொழுகையை நெருங்காதீர்கள். நீங்கள் என்ன கூறுகிறீர்கள் என்பதை அறிகிறபோதுதான் தொழ வேண்டும்” (4:43) என்கிறது, இறைமறை வசனம்.

    மனிதனின் கண்ணியம், மானம், மரியாதையையும் அவனது சந்ததிகளையும் பாதுகாப்பது இஸ்லாத்தின் நோக்கங்களில் ஒன்றாக இருப்பதால் விபசாரத்தை இஸ்லாம் தடை செய்துள்ளது.

    “விபசாரத்தின் அருகில்கூட நெருங்காதீர்கள். திண்ணமாக அது மானங்கெட்ட செயலாகவும், மிகத் தீய வழியாகவும் இருக்கிறது” (17:32) என்று இறைவன் திருமறையில் கூறுகின்றான்.

    மேலும் வட்டியை இஸ்லாம் தடை செய்துள்ளது. “உண்மையில் அல்லாஹ் வியாபாரத்தை (ஹலால்) அனுமதிக்கப்பட்டதாகவும், வட்டியை (ஹராம்) தடுக்கப்பட்டதாகவும் ஆக்கியுள்ளான்” (2:275) என்றும், “இறைநம்பிக்கை கொண்டவர்களே! பன்மடங்காகப் பெருகி வளரும் வட்டியை உண்ணாதீர்கள்” (3:130) என்றும் திருமறை கூறு கிறது.

    வட்டி வாங்குபவர்கள் மீதும், வட்டி கொடுப்பவர்கள் மீதும், அவ்விருவருக்கும் சாட்சியாக இருப்பவர்கள் மீதும், வட்டிக் கணக்கு எழுதுபவர்கள் மீதும் நபிகளார் சாபமிட்டார்கள் என்று இப்னு மஸ்ஊத் (ரலி) அறிவித்துள்ளார்கள்.

    தங்க நகை மற்றும் பட்டாடை அணிவது ஆண்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. “பட்டும் தங்கமும் என் சமுதாயத்தில் பெண்களுக்கு ஆகுமாக்கப்பட்டுள்ளன. அவை ஆண்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன” என்பது நபிகளாரின் கூற்றாகும்.

    ஒரு மனிதரின் கைகளில் தங்க மோதிரத்தைக் கண்ட நபிகளார், அதைக் கழற்றி எறிந்து விட்டு, “உங்களில் யாரேனும் தீக்கங்கை எடுத்து அதைத் தன் கையில் வளையமாக அணிவதை விரும்புவாரா?” என்று கேட்டார்கள்.

    நபிகளார் சென்ற பிறகு அந்த மோதிரத்தை எடுத்து வேறு வழியில் பயன்படுத்திக் கொள் என்று அந்த மனிதரிடம் சொல்லப்பட்டது. அதற்கு அவர், “அல்லாஹ்வின் தூதர் தூர எறிந்திருக்க அதை ஒருபோதும் நான் எடுக்க மாட்டேன்” என்று கூறி விட்டார்.

    மேலும் பெண்கள் அணியக்கூடிய நகைகள், வளையங்கள், காலணிகள், காதணிகள், ஆடைகள் போன்றவற்றை ஆண்கள் அணிவது கூடாது. அது போன்றே ஆண்களுக்குரிய ஆடையை பெண்கள் அணிவதும் கூடாது.

    “பெண்களுடைய ஆடையை அணிகின்ற ஆணையும், ஆணுடைய ஆடையை அணிகின்ற பெண்ணையும் அல்லாஹ் சபிப்பானாக” என்று நபிகளார் கூறினார்கள்.

    தங்கம், வெள்ளி பாத்திரங்களில் உண்பது மற்றும் பானம் அருந்துவது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.

    “நிச்சயமாக தங்கம், வெள்ளி பாத்திரங்களில் உண்பவன் அல்லது பானம் அருந்துபவன் தன் வயிற்றுக்குள் நரக நெருப்பையே நிரப்புகிறான்” என்பது நபிமொழி.

    தடை செய்யப்பட்டவைகளில் சூனியம், ஜோதிடம், குறி பார்த்தல் ஆகியவையும் அடங்கும்.

    சூனியம் செய்வது நாசத்தைத் தரக்கூடிய ஏழு பாவங்களில் ஒன்றாகும். அதில் தீமை இருக்கிறதே தவிர நன்மை இல்லை.

    சூனியத்தைக் கற்றுக்கொள்வதைப் பற்றி, “(உண்மையில்) தங்களுக்குத் தீங்கிழைப்பதையும் எந்தவித நன்மையையும் தராததையுமே கற்றுக் கொண்டார்கள்” (2:102) என்று திருமறையில் இறைவன் கூறுகின்றான்.

    இஸ்லாத்தில் விலக்கப்பட்டவைகளில்-தடுக்கப்பட்டவைகளில் பொதுவாக ‘இணைவைத்தலே’ மிகப்பெரியதாகும்.

    “பெரும்பாவங்களில் மிகப்பெரும்பாவத்தை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூன்று முறை கேட்டார்கள். அதற்கு நாங்கள், “இறைத்தூதரே! அறிவியுங்கள்” என்றோம். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வுக்கு இணை வைப்பது, பெற்றோரை நோவினை செய்வது” என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூபக்ரா நுபைஉ பின் ஹாரிஸ் (ரலி) அவர்கள்)

    “இறைத்தூதர் எதை உங்களுக்குக் கொடுக்கிறாரோ, அதைப் பெற்றுக்கொள்ளுங்கள். அவர் எதனை விட்டும் உங்களைத் தடுக்கிறாரோ அதனை விட்டு விலகி இருங்கள். மேலும் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். திண்ணமாக அல்லாஹ் கடும் தண்டனை அளிப்பவனாக இருக்கின்றான்” (59:7) என்பது திருமறை வசனம்.

    இறைவன் மனிதன் மீது விதித்துள்ள எல்லாத் தடைகளும் இறைவன் நம் மீது கொண்டுள்ள கருணையின் பிரதிபலிப்பே ஆகும்.
    ஒற்றுமையைக் குலைத்து அதில் குளிர்காய்வதே யூதர்களின் வேலையாக இருந்ததால், அவர்களுக்கு இந்த மாற்றத்தில் கோபமும் வன்மமும் நிறைந்திருந்தது.
    முஸ்லிம்கள் மக்காவிலிருந்து மதீனாவிற்கு நாடு துறந்து வந்ததற்கான காரணம், அவர்களுக்கு மக்காவில் பாதுகாப்பின்மை மட்டுமல்ல அவர்களுக்குப் பாதுகாப்பான ஓர் இடத்தில் புதிய சமுதாயத்தைக் கட்டமைக்க வேண்டுமென்பதற்காகவும்தான். இஸ்லாமிய அழைப்புப் பணி மதீனா மக்களை நல்வழிப்படுத்தியது. அவர்கள் தூய்மையாளர்களாக, ஒழுக்கசீலர்களாக மாறி ஒற்றுமையாக வாழ்ந்து திளைத்தார்கள். ஒற்றுமையைக் குலைத்து அதில் குளிர்காய்வதே யூதர்களின் வேலையாக இருந்ததால், அவர்களுக்கு இந்த மாற்றத்தில் கோபமும் வன்மமும் நிறைந்திருந்தது.

    மதீனாவிலிருந்த யூதர்கள் வெவ்வேறு அரபு குலத்தவர்களுக்கிடையில் சண்டையை ஏற்படுத்தி, போர்களைத் தூண்டி, அந்தப் போருக்குத் தேவையான பொருளாதாரத்தைக் கடனாகத் தந்து பயனடைந்து வந்தனர். அப்படியானவர்களுக்கு மதீனா மக்களிடம் ஏற்பட்ட மாற்றங்களை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவர்களின் வியாபாரங்கள் நலிந்துவிடுமென்று பயந்ததோடு மட்டுமின்றி நபி முகமது (ஸல்) அவர்கள் தங்களது இனத்தில் அனுப்பப்படவில்லை என்பதாலும் யூதர்களுக்கு இஸ்லாமின் மீது கடும் கோபம் இருந்து வந்தது.

    அந்த நேரத்தில் யூதர்களில் ஒருவரான அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரலி) அவர்களுக்கு நபி முகம்மது மதீனாவுக்கு வந்த செய்தி எட்டியது. உடனே அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் விரைந்துவந்து, “தங்களிடம் நான் மூன்று விஷயங்களைப் பற்றிக் கேட்கப் போகிறேன். அவற்றைப் பற்றி ஓர் இறைத் தூதர் மட்டுமே அறிவார்” என்று கூறினார்.

    முதலாவதாக அவர் கேட்டது, இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது எது? என்று. அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், “இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம் ஒரு நெருப்பாகும். அது மக்களைக் கிழக்கிலிருந்து துரத்திக் கொண்டு வந்து மேற்குத் திசையில் ஒன்று திரட்டும்” என்றார்கள்.

    இரண்டாவதாகக் கேட்கப்பட்ட கேள்வியான, “சொர்க்கவாசி முதலில் உண்ணும் உணவு எது?” என்பதற்கும் “சொர்க்கவாசிகள் முதலில் உண்ணும் உணவு பெரிய மீனின் ஈரல் பகுதியில் உள்ள அதிகப்படியான சதையாகும்” என்று தாமதிக்காமல் நபிகளார் பதில் சொன்னார்கள்.

    அப்துல்லாஹ் இப்னு ஸலாம் , “குழந்தை தன் தாய் அல்லது தந்தையின் சாயலில் ஒத்திருப்பது எதனால்? சமயங்களில் குழந்தை தன் தாயின் சகோதரர்களை ஒத்திருப்பது எதனால்?” என்று மூன்றாவது மற்றும் இறுதிக் கேள்வியைக் கேட்டார். புன்முறுவலுடன் நபிகளார் “சற்று முன்புதான் வானவர் ஜிப்ரீல் (அலை) என்னிடம் இவற்றைக் குறித்து விளக்கம் தெரிவித்தார்” என்று சொல்லி விட்டு, தொடர்ந்தார்கள். “குழந்தையிடம் காணப்படும் தாயின் அல்லது தந்தையின் சாயலுக்குக் காரணம், ஆண் மனைவியுடன் உடலுறவு கொள்ளும்போது அவனுடைய நீர் விந்து உயிரணு முந்தினால் குழந்தை அவனுடைய சாயலில் பிறக்கிறது. பெண்ணின் நீர் கருமுட்டை உயிரணு முந்தினால் குழந்தை அவளுடைய சாயலில் பிறக்கிறது' என்று பதிலளித்தார்கள்.

    உடனே, அப்துல்லாஹ் இப்னு ஸலாம்(ரலி), “தாங்கள் இறைத்தூதர் தாம் என நான் சாட்சி கூறுகிறேன்” என்று கூறினார். பிறகு, “இறைத்தூதர் அவர்களே! யூதர்கள் பொய்யில் ஊறித் திளைத்த சமுதாயத்தினர் ஆவர். தாங்கள் என்னைப் பற்றி அவர்களிடம் கேட்கும் முன்பாக, அவர்கள் நான் இஸ்லாத்தை ஏற்றதை அறிந்தால் என்னைப் பற்றித் தவறாகப் பேசுவார்கள்” என்று கூறினார். அப்போது யூதர்கள், நபி(ஸல்) அவர்களிடம் வந்தனர். உடனே, அப்துல்லாஹ் இப்னு ஸலாம்(ரலி) வீட்டினுள் மறைந்து கொண்டார்கள்.

    இறைத்தூதர்(ஸல்) யூதர்களிடம், “உங்களில் அப்துல்லாஹ் இப்னு ஸலாம் எத்தைகைய மனிதர்?” என்று பொதுவாகக் கேட்பதுபோல் கேட்டார்கள். அதற்கு அவர்கள், “அவர் எங்களில் அனுபவமும் விவரமும் மிக்கவரும், மார்க்க அறிவு மிக்கவரும், மார்க்க அறிவு மிக்கவரின் மகனும் ஆவார்” என்று உற்சாகத்துடன் பதிலளித்தார்கள். உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள், “அப்துல்லாஹ் இப்னு ஸலாம் இஸ்லாத்தை ஏற்றார் என்றால் நீங்கள் என்ன நினைப்பீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “இறைவன் அவரை அதிலிருந்து காப்பாற்றுவானாக!” என்று கூறினார்கள். உடனே வீட்டினுள் மறைந்து இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அப்துல்லாஹ் இப்னு ஸலாம்(ரலி) வெளியே வந்து, “வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை என்று நான் சாட்சியம் கூறுகிறேன். மேலும், முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதரவார்கள் என்றும் நான் சாட்சியம் கூறுகிறேன்” என்று கூறினார்கள்.

    உடனே யூதர்கள், “இவர் எங்களில் கெட்ட வரும் எங்களில் கெட்டவரின் மகனும் ஆவார்” என்று சொல்லிவிட்டு அவரைக் குறித்து இல்லாத குற்றங்களைச் சுமத்தி அவதூறு பேசி அங்கிருந்து வெளியேறினர்.

    எல்லாரும் இஸ்லாமை ஏற்றுக் கொண்டால், அவர்களுக்கிடையே ஒற்றுமை ஏற்பட்டுவிட்டால், விழிப்புணர்வு ஏற்பட்டு விட்டால் யூதர்களின் பொருளாதாரத்தின் அடைப்படையான வட்டித் தொழிலின் மூலம் அவர்களிடமிருந்து அபகரித்த சொத்துக்களை மீட்டுக் கொள்வார்கள் என்று அஞ்சினர்.

    ஸஹீஹ் புகாரி 4:60:3329

    - ஜெஸிலா பானு.
    பெற்றோரைப் பேணுவதன் மூலம் இவ்வுலகில் உறவுகளையும், நன்மைகளையும் பெற்றுக்கொள்ளலாம். மறுமையில் அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றுக் கொள்ளலாம்.
    மனிதன் வாழ தகுதியானதாக பூமியை இறைவன் படைத்தான். வெப்பத்திற்காகவும் ஒளிக்காகவும் சூரியனைப் படைத்தான். பூமி உயிர் பெற்று மனிதன் வாழத்தேவையான அனைத்தையும் பெற மழையைத் தேர்ந்தெடுத்தான்.

    மனிதன் பூமியில் வாழ எல்லா வசதிகளையும் ஏற்பாடு செய்த இறைவன், தன் மாபெரும் கருணையினால் மனிதனுக்கு பாச உணர்வும், இரக்க உணர்வும் மிகுந்த பெற்றோர்களைக் கொடுத்தான். அதிலும் குறிப்பாக அன்பு, இரக்கம், கருணை, பாசம், தியாகம் என்று அனைத்துக் குணங்களையும் ஒருங்கே தன்னகத்தே கொண்ட தாயை உலகுக்கு அளித்து பெருமைப்படுத்தினான்.

    தாய் தனது குழந்தையை ஏறக்குறைய பத்து மாதங்கள் வயிற்றில் சுமந்து, பல்வேறு இன்னல்களைச் சகித்துக் கொள்கிறாள். சுமப்பதைக்கூட சுகமாகவும், இன்பமாகவும், மகிழ்ச்சியாகவும் ஏற்றுக்கொள்கிறாள்.

    அல்லாஹ் கூறுகின்றான்: “நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி உபதேசித்தோம். அவனுடைய தாய் பலவீனத்தின் மீது பல வீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனைச் சுமந்தாள்”. (திருக்குர்ஆன்-31:14)

    சிரமத்தோடு குழந்தையைச் சுமக்கும் தாய், தான் விரும்பி உண்ணும் உணவைக் கொண்டு தன் குழந்தைக்கு தீங்கு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அந்த உணவுகளைத் தவிர்த்து விடுவாள். தான் நினைத்தபடி உறங்கினால் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று கருதி தூக்கத்திலும் குழந்தை பாதிக்காமல் பார்த்துக் கொள்வாள்.

    தன் குழந்தைக்காக உணவு, உறக்கம் என அனைத்தையும் மாற்றிக்கொள்வாள். இவ்வளவு இரக்கத்தையும், அன்பையும், தியாகத்தையும் வேறு எவராலும் வழங்க முடியாத உன்னத உறவாக ‘தாய்’ இருக்கிறாள்.

    “தன்னைத் தவிர வேறு யாரையும் வணங்கக் கூடாது என்றும், பெற்றோர்களிடம் நல்லமுறையில் நடந்து கொள்ள வேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்துள்ளான்” (திருக்குர்ஆன்-17:23).

    இதில் ‘இறைவன் ஒருவனே’ என்னும் ஏகத்துவத்திற்கு அடுத்தபடியாகச் சொல்லப்படும் கட்டளை, பெற்றோர்களுக்கு மனிதர்கள் கொடுக்க வேண்டிய கண்ணியம். மேலும் தந்தையை விட தாய்க்கு சேவை செய்வதில் இஸ்லாம் அதிக கவனம் செலுத்துகிறது.

    அல்லாஹ் கூறுகின்றான்: “மனிதன் தன் பெற்றோருக்கு நன்மை செய்யும்படி நாம் உபதேசித்தோம். அவனுடைய தாய் வெகு சிரமத்துடனேயே அவனைச் சுமந்து வெகு சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுக்கிறாள். (கர்ப்பத்தில்) அவனைச் சுமப்பதும், அவனுக்கு பால்குடி மறக்கச் செய்வதும் (மொத்தம்) முப்பது மாதங்களாகும்” (திருக்குர்ஆன்-46:15).

    தன் ரத்தத்தையே பாலாக குழந்தைக்கு ஊட்டுவதாலும், தந்தையை விட குழந்தைக்கு நெருக்கமாக இருப்பதாலும் அதிக உரிமை பெற்றவளாக தாய் இருக்கிறாள்.

    ஒரு தோழர், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம், ‘நான் சேவை செய்வதில் முதல் தகுதி யாருக்கு?’ என்று கேட்டார். அதற்கு நபிகளார், ‘உமது தாய்க்கு’ என்றார்கள். ‘அடுத்த தகுதி யாருக்கு?’ என்றார், அந்தத் தோழர். நபி (ஸல்) அவர்கள் மீண்டும், ‘உமது தாய்க்கு’ என்றார்கள். ‘அதற்கடுத்த தகுதி யாருக்கு?’ என்று மூன்றாம் முறையும் கேட்டார்கள். ‘உமது தாய்க்கு’ என்பதே நபிகளாரின் பதில். மறுபடியும் அந்தத் தோழர், ‘அதற்கடுத்த தகுதி யாருக்கு?’ என்று கேட்க, அண்ணல் நபி அவர்கள், ‘உமது தந்தைக்கு’ என்றார்கள். (அறிவிப்பவர்:அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம்: முஸ்லிம்)

    “தாயாருக்குச் சேவை செய்வதை உமது கடமை ஆக்கிக் கொள்ளும்”, “தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது” என்ற நபிகளாரின் வாசகங்கள் தாயின் மேன்மையை பறை சாற்றும் சொற்களாகும்.

    ஆனால் நம்மில் பலர் வளர்ந்து பெரியவன் ஆனதும், தாயை இழிவுபடுத்தியும், அதிகாரத் தோரணையுடனும் நடந்து கொள்கிறார்கள். இன்னும் சிலர் வார்த்தைகளால் நோவினை செய்வதோடு மட்டுமல்லாமல், உறவைத் துண்டித்தும் வாழ்கிறார்கள்.

    தன் தேவைகளை தான் சுயமாக நிறைவேற்றிக் கொள்ள சக்தியற்றிருந்த அந்தக் குழந்தைப் பருவத்தில், தன்னுடைய தாயார் தன் மீது பாசத்தோடும், இரக்கத்தோடும் நடந்து கொண்டதை மறந்து விடுகிறார்கள்.

    கடுமையான பசியுடன் இரு குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஒரு தாய், ஆயிஷா (ரலி) அவர்களிடம் வந்தார். அவரிடம் மூன்று பேரீச்சம் பழங்களைக் கொடுத்தார், ஆயிஷா (ரலி) அவர்கள்.

    அதைப் பெற்றுக் கொண்ட அந்தப் பெண், இரு குழந்தைகளுக்கும் இரண்டு பழங்களைக் கொடுத்து விட்டு ஒன்றைத் தான் சாப்பிட எடுத்தார். பசியோடு இருந்ததால் இரு குழந்தைகளும் வேகமாக பேரீச்சம் பழங்களைச் சாப்பிட்டு விட்டு, தாயின் கையில் இருந்த பழத்தை நோக்கின. உடனே அந்தத் தாய், அந்தப் பழத்தை இரண்டாகப் பிரித்து, இரு குழந்தைகளுக்கும் வழங்கி மகிழ்ந்தாள்.

    இந்தச் செய்தியை ஆயிஷா (ரலி) அவர்கள், நபிகளாரிடம் கூறினார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘அந்தத் தாய் தன் இரு குழந்தைகள் மீது காட்டிய இரக்கத்தால், அல்லாஹ் அந்தப் பெண் மீது இரக்கம் காட்டி விட்டான்’ என்றார்கள்.

    ‘நீ எனக்கு நன்றி செலுத்து; உன் தாய், தந்தைக்கும் நன்றி செலுத்து’ என்கிறது, திருமறை குர்ஆன். குழந்தைகள் மீது தாய் செலுத்தும் பாசம் அளவில்லாதது; நிகரற்றது.

    “அல்லாஹ் எல்லாப் பாவங்களையும் மன்னித்து விடுகிறான். பெற்றோருக்கு மாறு செய்வதை மன்னிப்பதில்லை. அதற்கான தண்டனையை உலகிலேயே தந்து விடுவான்” என்று நபிகளார் கூறினார்கள். (ஆதாரம்: மிஷ்காத்)

    “பெற்றோரில் ஒருவரோ, இருவருமோ முதுமை அடைந்து விட்ட நிலையில் உம்மிடம் இருந்தால் அவர்களை ‘சீ’ என்றுகூட கூறாதீர். அவர்களைக் கடிந்து பேசாதீர். மேலும் அவர்களிடம் கண்ணியமாகப் பேசுவீராக” என்று திருமறையில் (17: 23) இறைவன் கூறுகின்றான்.

    பெற்றோரோடு நல்லுணர்வைப் பேணும் மனிதனுக்கு, ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜின் நன்மை எழுதப்படுகிறது. பெற்றோரைப் பேணுவதன் மூலம் இவ்வுலகில் உறவுகளையும், நன்மைகளையும் பெற்றுக்கொள்ளலாம். மறுமையில் அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றுக் கொள்ளலாம்.

    - ஆலிமா ஏ.ஆர்.கமருன்னிசா ஜாபர்அலி,

    கோவை.
    நாம் நமது அன்றாடப் பணிகளை செவ்வனே திட்டமிட்டு அமைத்துக்கொண்டால் நம் வாழ்வும் நிச்சயம் வளமாய், நலமாய் இருக்கும் என்பது திண்ணம்.
    ‘திட்டமிட்ட வாழ்க்கையே தெவிட்டாத இன்பம்’ என்பது அனுபவ மொழி. நாம் நமது அன்றாடப் பணிகளை செவ்வனே திட்டமிட்டு அமைத்துக்கொண்டால் நம் வாழ்வும் நிச்சயம் வளமாய், நலமாய் இருக்கும் என்பது திண்ணம். நாம் நமது செயல்பாடுகளை திட்டமிட்டு அமைத்துக்கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் எதிர்பார்க்கிறது.

    நபிகள் நாயகம் தமது எந்த ஒரு பணியையும் திட்டமிட்டு செய்பவர்களாகத் தான் இருந்தார்கள்.

    ‘(நபியே) எல்லாக் காரியங்களிலும் அவர்களுடன் கலந்து ஆலோசித்தே வாருங்கள்! (எதாவது செய்ய) நீங்கள் முடிவு செய்தால், அல்லாஹ்விடமே பொறுப்பை ஒப்படையுங்கள்! ஏனெனில், நிச்சயமாக அல்லாஹ் (தன்னிடம்) பொறுப்பு சாட்டுபவர்களை நேசிக்கிறான்’. (திருக்குர்ஆன் 3:159)

    நாம் எப்படி வாழவேண்டும் என்பதை நபியின் வழியாக இந்த வசனம் நமக்கு கற்றுக்கொடுக்கிறதல்லவா?

    ஆலோசனை என்பதும், திட்டம் என்பதும் ஒன்றுதான். இதை அரபி மொழியில் ‘மசூரா’ என்று கூறுகிறோம். எந்த ஒரு திட்டத்தையும் தொடங்கி வைப்பது தான் நமது தொடக்கப்பணியே தவிர அதைமுழுமையாக முடித்து வைப்பது என்பது இறைவனின் முடிவாகும். எனவே நாம் திட்டமிட்டு செயல்பட வேண்டும் என்பது தான் இறைவனின் இனியதொரு நிறைவான திட்டம்.

    ஆதிமனிதர் ஆதம் முதல் இறுதித்தூதர் முகமதுநபி வரை இவ்வுலகில் தோன்றிய இறைத் தூதர்கள் அனைவரும் தங்களது ஓரிறைக் கொள்கைச் செய்தியை நன்கு திட்டமிட்டுத்தான் மக்களிடையே பரப்பினார்கள். அதனால் தான் அவர்கள் வெகு எளிதில் வெற்றி பெற்றார்கள்.

    ‘(நம்பிக்கையாளர்கள்) அவர்கள் தங்களுடைய ஒவ்வொரு காரியத்தையும் தங்களுக்குள் ஆலோசனைக்குக் கொண்டு வருவார்கள்’ (திருக்குர்ஆன் 42:38).

    இவ்வாறு இறை வசனம் கூறுவதில் இருந்து ஆலோசனைத் திட்டத்தின் அவசியத்தை நாம் நன்கு அளவீடு செய்து கொள்ள முடியும். இன்றைக்கு நமது திட்டமிடல் எப்படியிருக்கிறது? எதையும் நாம் திட்டமிட்டுச் செய்கிறோமா? இல்லை நமது மனம் போன போக்கிலா?

    யோசித்துப் பார்க்கையில் நாம் முன்யோசனை இல்லாமல், திட்டமிடாமல் செய்து அல்லல்பட்டு, அனுபவப்பட்ட காரியங்கள் பல நம் வாழ்வில் நடந்திருக்கக்கூடும்.

    நபிகள் நாயகம் அன்றாடம் தங்களது வீட்டுத்தேவைகளை திட்டமிட்டுத் தான் செயல்படுத்துவார்கள் என நபியுடன் இருந்த தோழர்கள் பலர் கூறியுள்ளனர். அது மட்டுமல்ல, நபியவர்கள் தங்களது பயணம், வணிகம், கொடுக்கல், வாங்கல், சொற்பொழிவு, இஸ்லாமிய அழைப்புக் கடிதங்கள், வணக்க வழிபாடுகள், இறைதியானப் பயிற்சிகள் என எந்தவொன்றையும் நன்கு திட்டமிட்டுத்தான் செயல்படுத்தினார்கள்.

    எனவே நாமும் நமது அன்றாடப்பணிகள் எதுவாயினும் அவற்றை திட்டமிட்டுத்தான் செய்ய வேண்டும். அதில் தான் மனநிம்மதியும், மட்டற்ற மகிழ்ச்சியும் இருக்கிறது என்பது நாம் அனுப வித்துப்புரிய வேண்டிய ஒன்று.

    நபிகளாருக்கு மக்கா நகரில் ஓரிறைச் செய்திகளை பரப்ப முடியாத நிலை ஏற்பட்டபோது, அங்கிருந்து நானூறு மைல் தொலைவிலுள்ள மதீனா நகருக்கு நகர்ந்து செல்ல அவர்கள் தீட்டியிருந்த அற்புதத்திட்டம் வரலாற்றுப் பக்கங்களில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை. அப்படிச் செல்லும் போது தமது அருமை மருமகனாரிடம், தன்னிடம் கொடுத்து வைக்கப்பட்டிருந்த யூதர்களின் அமானிதப் பொருட்களை அவரவர்களிடம் உரியமுறையில் கொடுத்துவிட்டுத்தான் நீங்கள் மதீனா நகருக்கு வரவேண்டும் என கட்டளை பிறப்பித்தார்கள்.

    இக்கட்டான இச்சூழ்நிலையிலும், அவை எதிரி களின் பொருள்தானே என்று பாரபட்சம் பார்க்காமல் அதை ஒப்படைப்பதற்கான முழுஏற்பாட்டையும் திட்டமிட்டுச் செய்து கொடுத்துவிட்டுத்தான் சென்றார்கள் என்றால், அவர்களது திட்டமிடல் எந்த அளவுக்கு மிகத்துல்லியமாய் இருந்திருக்கிறது என்பதை இதன் மூலம் நாம் நன்கு தெரிந்து கொள்ளமுடியும்.

    நாம் எதையும் சரியான முன்திட்டமின்றி செய்யும் போதுதான் வசமாய் மாட்டிக்கொள்கிறோம். இது ஒரு இறை விசுவாசிக்கு நல்லழகல்ல என்பதால் அவன் எந்தவொன்றையும் திட்டமிட்டுத்தான் செயல்படுத்திட வேண்டும் என நபிகளார் நமக்கு எச்சரிக்கிறார்கள்.

    ‘நீங்கள் நல்லது செய்தால் அது உங்களுக்குத்தான் நல்லது’ (17:07) என திருக்குர்ஆன் அழுத்தமாகக் கூறுகிறது.

    ‘எண்ணங்கள் சரியாக இருந்தால் எல்லாமே மிகச்சரியாக இருக்கும்’ என்பது நபிகளாரின் நன்மொழி. இதில் நமது அன்றாடத் திட்டங்களும் உள்ளடங்கும் என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை

    இன்றைக்கு நமது பல்வேறு திட்டங்கள் நிறைவேறாமல் போவதற்கு முழு முதற்காரணம் நமது நம்பிக்கையற்ற தீய எண்ணங்கள் தான் என்றால் அது மிகையல்ல. நமது திட்டங்களின் பின்புலத்தில் இறையச்சமும், நல்லெண்ணமும் இருப்பின் நிச்சயம் அவைநிறைவாக, வெகு விரைவாக நிறைவேறும் என்பதில் சந்தேகமில்லை.

    ஆனால் நாம் தான் எந்தவொரு நலத் திட்டங்களை தொடங்கும் போதும் மாறுபட்ட எண்ணத்துடன் தான் தொடங்குகிறோம். அதனாலேயே அவை வெற்றி இலக்கை எட்டாமலேயே துவண்டுபோய் தோல்விநிலை கண்டு நின்று விடுகின்றன.

    எனவே முதலில் நாம் நமது நல்லெண்ணங் களுக்கும் நற்திட்டமொன்றை வகுக்க வேண்டும். இல்லையெனில் நமது திட்டங்கள் யாவும் வெற்றி இலக்கை அடையாது வெற்றுத்திட்டங்களாகிப் போய்விடும்.

    திட்டங்கள் தீட்டுவது பெரிதல்ல. அவை அனைத்தும் வெற்றிபெறவேண்டும் என்பதுதான் அனைவரின் ஆசை. அதற்கு நல்லெண்ணமும் வேண்டும். கூடவே நற்செயல் திட்டங்களும் வேண்டும்.

    வாருங்கள்! தூய திட்டங்களை ஆற்றுவோம்! தீய திட்டங்களை மாற்றுவோம்!

    மவுலவி எஸ்.என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3.
    குடும்பத் தலைவராக, போதகராக, போர்ப்படைத் தளபதியாக, அப்பழுக்கற்ற ஆட்சியாளராக, இறைவனின் இறுதித் தூதராக விளங்கிய நபிகளார், வாழ்வின் எல்லாத் துறைகளிலும் முன்மாதிரியாக வாழ்ந்து காட்டினார்கள்.
    நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கள் மீது அன்பும் பாசமும் கருணையும் கொண்டவர்களாக இருந்தார்கள். அவர்களுடன் மிக அழகிய முறையில் ஒழுக்கத்துடன் நடந்து கொண்டார்கள்.

    மக்களில் மிக உன்னதமான குணத்தை அவர்கள் பெற்றிருந்தார்கள். அவர்களிடம் எந்தக் கெட்ட குணமும் இருந்ததில்லை. அவர்கள் இயற்கையாகவோ செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவராக இருந்ததில்லை.

    “உங்களில் சிறந்தவர் உங்களில் நற்குணமுடையவரே” என்று அவர்கள் கூறுவார்கள். குழந்தைகள் முதல் அனைவருக்கும் அவர்களே முதலில் ஸலாம் கூறுவார்கள். பெரியவர் களுக்கு கண்ணியமும், சிறுவர்களுக்கு இரக்கமும் காட்டுவார்கள்.

    தேவையுடையோருக்கு உதவி செய்வார்கள். புதியவர்களுடன் நட்புடன் நடந்து கொள்வார்கள். தனது பணியாளரை ‘சீ’ என்ற சொல்லால்கூட சுட்டியதில்லை. ஒரு செயலைச் செய்ததற்காகவோ செய்யாமல் போனதற்காகவோ யாரையும் கண்டித்ததும் இல்லை; கடிந்து கொண்டதும் இல்லை.

    நபிகளார் தெள்ளத்தெளிவாக இலக்கிய நயத்துடன் பேசுபவர்களாக இருந்தார்கள். அவர்கள் ஒரு விஷயத்தைப் பேசு கிறார்கள் என்றால், அதை (வார்த்தை வார்த்தையாக, எழுத்து எழுத்தாக கணக்கிட்டு) எண்ணக்கூடியவர் எண்ணியிருந்தால், ஒன்று விடாமல் எண்ணியிருக்கலாம். அந்த அளவுக்கு நிறுத்தி நிதானமாக பேசி வந்தார்கள். இதனால் மக்களில் மிக உயர்ந்த அந்தஸ்தில் இருந்தார்கள்.

    இரண்டு விஷயங்களில் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி அவர்களுக்கு இரண்டு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டால் அதில் நபிகளார் மிக எளிதானவற்றையே எடுத்துக் கொள்வார்கள். ஆனால் அது பாவமாக இருக்கக் கூடாது. அது பாவமானதாக இருந்தால் அதை விட்டு வெகுதூரம் சென்று விடுவார்கள்.

    நபிகளார் கணக்கிடமுடியாத அளவுக்கு தான, தர்மங்களை வழங்கி வந்தார்கள். வறுமைக்கு அஞ்சாமல், ஏழை எளியோருக்கும் தேவையுடையோருக்கும் செலவு செய்தார்கள். அவர்கள் மக்களில் மிகக் கொடைத் தன்மை உடையவர் களாக இருந்தார்கள்.

    நபிகளாரிடம் ஏதாவது ஒன்று கேட்கப்பட்டு, அவர்கள் அதை ‘இல்லை’ என்று சொன்னதில்லை. தன்னைப் பின்பற்றியவர்களை ‘தொண்டர்கள்’, ‘சீடர்கள்’ என்ற அடைமொழி களால் அழைக்காமல், ‘தோழர்கள்’ என்று வாஞ்சையோடு அழைத்தார்கள். அந்தத் தோழர்களுடன் அளப்பரிய நேசத்துடன் பழகுவார்கள்.

    அவர்களில் யாராவது மரணித்து விட்டால், அவர்களது ‘ஜனாஸா’க்களில் (இறுதி நிகழ்ச்சிகளில்) தவறாது பங்கேற்பார்கள். ஏழையை அவர்களது இல்லாமை காரணமாக இளக்காரமாகப் பார்க்க மாட்டார்கள்.

    நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாக்குறுதி கொடுத்தால் அதை மீற மாட்டார்கள். அவர்கள் எந்த உணவையும் ஒரு போதும் குறை கூறியதில்லை. அவர்கள் அதை விரும்பினால் உண்பார்கள். இல்லையென்றால் விட்டு விடுவார்கள்.

    கல்வி, கண்ணியம், பொறுமை, சகிப்புத் தன்மை, வெட்கம், நம்பிக்கை அனைத்தும் நிறைந்ததாக நபிகளாரின் சபை இருந்தது. அங்கு உரத்த குரல்கள் ஒலிக்காது. கண்ணியத்திற்குப் பங்கம் வராது.

    நபிகளார் நன்மையானவற்றைத் தவிர வேறெதையும் பேச மாட்டார்கள். அவர்கள் பேசினால் சபையோர் அமைதி காப்பார்கள். நபிகளார் அமைதியானால் தோழர்கள் பேசுவார்கள். அப்போது தோழர்கள் பேசுவதற்குப் போட்டி போட மாட்டார்கள். யாராவது பேசத் தொடங்கினால் அவர் முடிக்கும் வரை அவருக்காக அமைதி காப்பார்கள். சபைகளில் கண்ணியத்திற்குரியவர்களாகக் காட்சியளிப்பார்கள்.

    தங்களது உடல் உறுப்புகளில் எதையும் வெளிக்காட்ட மாட்டார்கள். தேவையற்றதைப் பேச மாட்டார்கள். அதிகமதிகம் மவுனம் காப்பார்கள். அவர்களின் பேச்சு தெளிவானதாக இருக்கும். தேவையை விட அதிகமாகவோ குறைவானதாகவோ இருக்காது.

    சகித்துக் கொள்வதும், பொறுத்துப் போவதும், சக்தியிருந்து மன்னிப்பதும், இன்னல்களை இன்முகத்தோடு ஏற்றுக் கொள்வதும் நபிகளாருக்கு இறைவன் வழங்கிய இயற்கைப் பண்புகளாகும்.

    அவர்கள் வீரமும் ஈர நெஞ்சமும் கொண்டவர்கள். போர்க் களத்தில் மலை குலைந்தாலும், நிலைகுலையாதவர்களாக இருந்தார்கள். தடுமாற்றம் இல்லாமல், புறமுதுகு காட்டாமல் எதிரிகளை எதிர்த்து நின்றார்கள்.

    திரை மறைவில் உள்ள கன்னிப் பெண்களை விட அதிக நாணம் உள்ளவர்களாக நபிகளார் இருந்தார்கள். எவரது முகத்தையும் அவர்கள் ஆழமாக உற்று நோக்கியதில்லை. பார்வையைக் கீழ் நோக்கி வைத்திருப்பார்கள். வெட்கத்தினாலும் உயர் பண்பின் காரணத்தாலும் யாரையும் வெறுப்பூட்டும்படி பேச மாட்டார்கள்.

    ஒருவரைப் பற்றி விரும்பாத செய்தி கிடைத்தால், ‘அவர் ஏன் இவ்வாறு செய்கிறார்?’ என்று கேட்பார்கள். அவரது பெயரை குறிப்பிட்டு சங்கடப்படுத்த மாட்டார்கள்.

    உயர் பதவியில் இருப்போர் தனது குடும்ப உறுப்பினர் களுக்கும், உறவினர்களுக்கும் சலுகைகள் வழங்குவது என்பது காலங்காலமாக இருந்து வரும் நடைமுறையாகும். உயர் பதவியில் இருந்தாலும் பொது நிதியில் இருந்து ஒரு பேரீச்சம்பழத்தைக்கூட எடுக்கக் கூடாது என்ற கொள்கையில் நபிகளார் உறுதியாக இருந்தார்கள்.

    ஏழை-பணக்காரன், உயர் ஜாதி-தாழ்த்தப்பட்ட ஜாதி, முஸ்லிம்-முஸ்லிம் அல்லாதோர் என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் சமநீதி வழங்கினார்கள். மொத்தத்தில் நபிகள் நாயகம், நற்குணத்தின் தாயகமாகவே திகழ்ந்தார்கள்.

    “அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி இருக் கிறது” (திருக்குர்ஆன்-33:21) என்பது இறை வாக்கு.

    குடும்பத் தலைவராக, போதகராக, போர்ப்படைத் தளபதியாக, அப்பழுக்கற்ற ஆட்சியாளராக, இறைவனின் இறுதித் தூதராக விளங்கிய நபிகளார், வாழ்வின் எல்லாத் துறைகளிலும் முன்மாதிரியாக வாழ்ந்து காட்டினார்கள்.

    ‘குர்ஆன் கூறும் அனைத்துப் போதனைகளுக்கும் அவர்களது வாழ்க்கையே ஒரு சான்றாக இருந்தது’ என்ற ஆயிஷா (ரலி) அவர்களின் கூற்று நூற்றுக்கு நூறு உண்மை ஆகும்.

    உண்மையான முஸ்லிம்கள் யாரென்றால், அல்லாஹ்வின் பெயரை அவர்கள் முன் கூறினால், அவர்களுடைய இருதயங்கள் பயந்து நடுங்கிவிடும்.
    நபி (ஸல்) மதீனாவில் தங்கிவிட்டதால் மதீனாவாசிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். சில நாட்களிலேயே நபிகளாரின் மனைவி ஸவ்தா (ரலி), தம் மகள்களை அழைத்துக் கொண்டு, அபூ பக்கர் (ரலி) அவர்களின் குடும்பத்தாருடன் மதீனா வந்தடைந்தார்கள் நபிகளாரின் மற்றொரு மகள் ஸைனபைத் தவிர. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள் ஆயிஷாவும் மதீனா வந்தடைந்தார்.

    அந்தச் சமயம் மதீனா நகரில் ஒரு நோய் பரவிக் கொண்டிருந்தது. அதன் காரணமாக அபூ பக்கர் (ரலி) மற்றும் பிலால் (ரலி) இருவருக்கும் காய்ச்சல் அதிகரித்தது. ‘மரணம் தன்னுடைய செருப்பு வாரை விடச் சமீபத்தில் மிக அருகில் இருக்கும் நிலையில் ஒவ்வொரு மனிதனும் தன் குடும்பத்தாருடன் காலைப் பொழுதை அடைகிறான்!’ என்று கவிதை கூறினார்கள் அபூ பக்கர் (ரலி) அவர்கள்.

    பிலால் (ரலி) காய்ச்சல் சிறிது குறைந்ததும், தனது வேதனைக் குரலை உயர்த்தி, ‘இத்கிர், ஜலீல் எனும் இரு புல் வகைகள் என்னைச் சூழ்ந்திருக்க, அது போன்றதொரு பள்ளத்தாக்கில் ஓர் இரவு பொழுதை மட்டுமாவது நான் கழிப்பேனா? ‘மஜின்னா’ எனும் சுனையின் இனிப்பான நீரை நான் அருந்துவேனா? ஷாமா, தஃபீல் எனும் இரண்டு மலைகள் எனக்குத் தென்படுமா?’ என்ற கவிதையைக் கூறினார்.

    இதையெல்லாம் கேட்ட நபி முகம்மது (ஸல்) அவர்கள், “இறைவா! நாங்கள் மக்காவை நேசித்தது போல் அல்லது அதைவிட அதிகமாக மதீனாவை எங்கள் நேசத்திற்குரியதாக ஆக்கி வைப்பாயாக! யா அல்லாஹ், எங்களுடைய உணவில் எங்களுக்குப் பரக்கத் செய்வாயாக (செல்வத்தை அதிகரிப்பாயாக)! இவ்வூரை எங்களுக்கு ஆரோக்கியமானதாக ஆக்கித் தருவாயாக. இங்குள்ள காய்ச்சலைப் போக்கிவிடு!” என்று மனம் உருகிப் பிரார்த்தித்தார்கள்.

    அல்லாஹ், நபிகளாரின் பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான். அவர்களின் பிரார்த்தனையின்படி அந்த நோய் மதீனாவிலிருந்து வெளியேறியது. மதீனாவின் தட்பவெப்பத்தினால் சிரமப்பட்டுக் கொண்டிருந்த நபித் தோழர்கள் அல்லாஹ்வின் அருளால் முற்றிலும் குணமடைந்தார்கள்.

    நபி (ஸல்) அவர்களின் தூதுவத்தின் அடிப்படை நோக்கம் இஸ்லாமியச் சமுதாயத்தை நல்ல முறையில் உருவாக்குவதுதான். அந்த வகையில் மதீனாவாசிகள் நபி (ஸல்) அவர்களின் கட்டளைக்குக் கீழ்ப்பணிந்து முறையாக நடந்து கொண்டனர். அவர்களின் குலத் தொழிலான வட்டித் தொழிலையும் துறந்தனர்.

    உண்மையான முஸ்லிம்கள் யாரென்றால், அல்லாஹ்வின் பெயரை அவர்கள் முன் கூறினால், அவர்களுடைய இருதயங்கள் பயந்து நடுங்கிவிடும். அல்லாஹ்வுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால் அவர்களுடைய இறைநம்பிக்கை மென்மேலும் அதிகரிக்கும். அவர்கள் தங்கள் இறைவனையே முற்றிலும் நம்பியிருப்பார்கள்” எனும் திருக்குர்ஆனின் வசனத்தை நபிகளார் ஓதிக் காட்டினார்கள்.

    ஸஹீஹ் புகாரி 63:3926, 2:29:1889, ஸஹீஹ் முஸ்லிம் 15:2667, திருக்குர்ஆன் 8:2

    - ஜெஸிலா பானு.
    இஸ்லாம் கூறும் விருந்தோம்பல் கருத்துகள், எல்லோராலும் விரும்பக் கூடியவை என்பது மட்டுமல்ல; விழுமிய கருத்துகளாகும்.
    ‘அல்லாஹ் மீதும், மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டவர்கள் தம் விருந்தினரை நன்றாக உபசரித்துக் கொள்ளட்டும்’ என்பது நபிமொழியாகும்.

    விருந்தினரை உபசரித்தல் என்பது பல பரந்த அர்த்தங்களைக் கொண்டது. விருந்தினர்களுக்கு உணவளிப்பது மட்டுமல்ல; அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதும் உபசரிப்பில் அடங்கும்.

    உங்கள் வீட்டுக்கு விருந்தினர் வந்தால் முதலில் அவருக்கு ‘ஸலாம்’ கூறி வரவேற்று அவருக்காக இறைவனிடம் பிரார்த்தித்து, நலம் விசாரித்துக் கொள்ளுங்கள்.

    இதை திருக்குர்ஆனும் இவ்வாறுதான் அறிவுறுத்து கிறது:

    “(நபியே!) இப்ராகீமிடம் வந்த கண்ணியத்திற்குரிய விருந்தாளிகளின் செய்தி உமக்குக் கிடைத்ததா? அவர்கள் அவரிடம் வந்தபோது, ‘உம்மீது சாந்தி நிலவட்டும்’ என்று அவர்கள் கூறினார்கள். அவர் கூறினார்: ‘உங்கள் மீதும் சாந்தி நிலவுக” (51:24).

    விருந்தினர்கள் நம் வீட்டுக்கு வரும்போது, மகிழ்ச்சியுடனும், முகமலர்ச்சியுடனும் வரவேற்க வேண்டும்.

    விருந்தினர்கள் வீட்டுக்கு வந்தவுடன் நபி இப்ராகீம், அவர்களுக்குத் தேவையான உணவுக்கு ஏற்பாடு செய்தார்கள். ஒரு காளைக் கன்றைப் பொரித்து விருந்தினர்களுக்கு வைத்தார்கள்.

    இது குறித்து திருமறை கூறுகிறது: “... அறிமுகம் இல்லாத ஆட்களாக இருக்கிறார்களே (என்று எண்ணினார்) பின்னர், அவர் சந்தடியில்லாமல் தம் வீட்டாரிடம் சென்றார்; (பொரிக்கப்பட்ட) கொழுத்த காளைக்கன்றைக் கொண்டு வந்து அதை விருந்தினர் முன் வைத்தார்”. (51:25)

    விருந்தினர்களுக்குத் தெரியாமல் தன் இல்லத்தாரிடம் விருந்து உபசரிப்பை மறைமுகமாக இப்ராகீம் நபி மேற்கொள்ளச் சொன்னார் என்பது இந்த வசனத்தின் வரிகள் மூலம் விளங்குகிறது. நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதை அறிந்தால், விருந்தினர்கள் மறுத்து விடக்கூடும் என்பதால் இந்த ரகசிய ஏற்பாடு.

    விருந்தினர்களுக்குப் பிடித்தமான உணவு வகைகளை தயாரித்துக் கொடுப்பதில் இருந்து தங்குவதற்கு ஏற்பாடு செய்வது வரை தனிக் கவனம் செலுத்த வேண்டும். விருந்தினர்களின் வருகையை அறிந்து அவர்களுக்குத் தேவையான உணவு வகைகளை முன்கூட்டியே தயார் செய்து விட வேண்டும். சமையல் வேலைகள் அனைத்தும் முடிந்தால்தான் விருந்தினர்களுடன் அதிக நேரம் உரையாடி மகிழ முடியும்.

    விருந்தினர்களுக்கு உணவை நாமே எடுத்து வைக்க வேண்டும்; வேலையாட்களைக் கொண்டு பரிமாறக் கூடாது.

    யாராவது விருந்தினர்கள் வீட்டுக்கு வந்தால், அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே நேரில் உபசரிப்பது வழக்கமாகும். விருந்தினர்கள் உணவருந்தும்போது தாமும் அவர்களோடு அமர்ந்து கொண்டு, “இன்னும் கொஞ்சம் உண்ணுங்கள்; இன்னும் கொஞ்சம் உண்ணுங்கள்” என்று நபிகளார் கூறிக்கொண்டே இருப்பார்கள்.

    விருந்தினர்கள் திருப்தியாக சாப்பிட்டு முடித்து விட்டு எப்போது ‘போதும்’ என்று மறுக்கிறார்களோ அப்போது நபிகளாரும் வற்புறுத்துவதை விட்டு விடுவார்கள்.

    விருந்தினர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் உணவைப் பரிமாற வேண்டும். அவர்கள் அருகே இருந்து உணவருந்தும் நாம் அவசர அவசரமாக சாப்பிட்டு முடித்து விடக் கூடாது. அப்படி நாம் விரைவாகச் சாப்பிட்டு முடித்தால் விருந்தினர்கள் அரைகுறையாக சாப்பிட்டு எழும் நிலை ஏற்படும். இதனால் நாம் மெதுவாகச் சாப்பிட வேண்டும். அல்லது அவர்கள் சாப்பிட்டு முடிக்கும் வரை காத்திருக்க வேண்டும். அவர்கள் கை அலம்பிய பிறகே நாம் கை அலம்ப வேண்டும்.

    வீட்டுக்கு வரும் விருந்தினர்களை நாம் கண்ணியப் படுத்த வேண்டும். நீங்கள் அவர்களைக் கண்ணியப்படுத்துவது உண்மையில் நீங்கள் உங்களைக் கண்ணியப் படுத்திக் கொள்வதாகும். அவர்களுக்கு ஏதாவது கண்ணியக் குறைவு ஏற்பட்டால் அதைக் களைய துணிவுடன் களம் இறங்க வேண்டும்.

    இறைத்தூதர் லூத் (அலை) அவர்களிடம் விருந்தினர்கள் வந்தபோது அவர்களுடைய சமூகத்தார் அவர்களை இழிவுபடுத்த முயன்றனர். அப்போது லூத் சிறிதளவும் விட்டுக் கொடுக்கவில்லை. விருந்தினர்களை இழிவு படுத்துவது தன்னை இழிவுபடுத்துவதாகும் என்று கருதினார்கள்.

    லூத் கூறினார்: “(சகோதரர்களே!) இவர்கள் என்னுடைய விருந்தாளிகள். என்னை அவமானப்படுத்தி விடாதீர்கள். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். என்னை இழிவுபடுத்தி விடாதீர்கள்”. (திருக்குர்ஆன்-15:68)

    விருந்தினர்களை வீட்டிற்கு வெளியே வந்து வரவேற்று அழைத்துச் செல்வதும், அவர்கள் திரும்பிச் செல்லும்போது வாசல் வரை சென்று வழியனுப்பி வைப்பதும் சிறந்தது.

    உங்கள் வீட்டிற்கு விருந்தினர்கள் வருகிறார்கள் என்றால், அவர்கள் இறைவன் விதித்த விதிப்படி உங்கள் வீட்டுப்படியை மிதிக்கிறார்கள் என்று பொருள். ஒவ்வொரு மனிதருக்கும் அவரது உணவு அன்றைய தினம் எங்கே இருக்கிறது என்பதை இறைவன் ஏற்கனவே முடிவு செய்து வைத்திருக்கின்றான்.

    ‘ஒவ்வொரு அரிசியிலும் உனது பெயர் எழுதப்பட்டிருக்கும்’ என்பது அழகிய பழமொழி. இதில் அறிவார்ந்த கருத்துகள் அடங்கியுள்ளன. இன்று நாம் சென்னையில் இருக்கலாம்; நாளை சொந்தங்களைப் பார்ப்பதற்காகச் சொந்த ஊருக்குச் செல்லலாம். அதற்கு அடுத்த நாள் வெளிநாட்டுக்குப் போகலாம்.

    நாம் எங்கு செல்கிறோமோ அங்கே நமது பெயர் எழுதப்பட்ட அரிசியோ அல்லது உணவு தானியமோ நமக்காகக் காத்திருக்கும். அந்தத் தானியங்களில் பெயர் எழுதப்படவில்லை என்றால், அந்த மனிதரின் இந்த உலக வாழ்வு நிறைவு பெற்றதாக அர்த்தம். இத்தகைய அர்த்தங்களை உள்ளடக்கிய பொன்மொழி அது.

    உலகில் பிறந்த அனைத்து ஜீவராசிகளுக்கும் இறைவனே உணவளிக்கின்றான். “எந்த உயிரினமும் அதற்கான உணவு அல்லாஹ்வின் மீது (பொறுப்பாக) இருந்ததே தவிர பூமியில் (வாழ்வது) இல்லை. இன்னும் அவை தங்கும் இடத்தையும், அவை அடங்கும் இடத்தையும் அவன் அறிவான்” (11:6).

    “வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்; நாமே உங்களுக்கும் உணவு அளிக்கிறோம். அவர்களுக்கும் அளிப்போம்” (6:151).

    மேற்கண்டவை திருமறையின் இறை வசனங்கள்.
    நபிகளார் வருகையில் மனம் மகிழ்ந்த மதீனாவாசிகள் ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் நபி முஹம்மது (ஸல்) தங்கவேண்டுமென விரும்பினர்.
    நபிகளார் வருகையில் மனம் மகிழ்ந்த மதீனாவாசிகள் ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் நபி முஹம்மது (ஸல்) தங்கவேண்டுமென விரும்பினர். ஆனால் நபிகளாரின் வாகனம் ஒவ்வொரு வீடாகக் கடந்து சென்று இறுதியில் ஓர் இடத்தில் மண்டியிட்டது. நபிகளார் ஒட்டகத்திலிருந்து இறங்கினார்கள்.

    அபூ அய்யூப் (ரலி) என்பவர் நபி முஹம்மது (ஸல்) அவர்களின் வாகனத்திலிருந்து அவர்களின் உடைமைகளை அவரது வீட்டிற்கு எடுத்துச் சென்றார். நபிகளாரும் அபூ அய்யூப்பின் வீட்டிலேயே தங்குவதற்கு சம்மதம் தெரிவித்தார்கள். மதீனாவை அடைந்ததும் ஒட்டகம் மண்டியிட்ட இடத்தில்தான் நபி (ஸல்) அவர்களின் ‘மஸ்ஜிதுன் நபவி’ பள்ளிவாசல் நிறுவப்பட்டது.

    நபிகளார் மதீனாவிற்கு வந்து சேரும் முன் மக்காவிலிருந்து மதீனாவிற்கு வந்துவிட்டவர்களைச் சந்தித்தார்கள். அப்போதுதான் அய்யாஷ், ஹிஷாம் மற்றும் ஹிஜ்ராவின் போது அபூ ஜஹல் பிடியில் சிக்கியவர்களுக்காக அல்லாஹ்விடம் அவர்களின் நலன்வேண்டி பிரார்த்தனை செய்தார்கள். அத்தோடு குறைஷிகளில் சிலரைக் குறிப்பிட்டு “இன்னார், இன்னாரை உன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவாயாக” என்றும் பிரார்த்தித்தார்கள். அதற்கு விடையாக அல்லாஹ் 'அவர்களை அல்லாஹ் மன்னிக்கும்வரை, அல்லது அவர்கள் அக்கிரமக்காரர்களாக இருப்பதால் அவர்களை அவன் வேதனை செய்யும்வரை அவர்களுக்குத் தண்டனை வழங்குமாறு கூற, நபியே உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை' எனும் இறைவன் வசனம் அருளப்பட்டது.

    மதீனாவில், மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்த முஸ்லிம்கள், நபிகளாரையும் இஸ்லாத்தின் சட்டத்திட்டங்களையும் அறிந்து இஸ்லாமை விரும்பி ஏற்றவர்கள், முஸ்லிம் அல்லாதவர்கள், யூதர்களென்று எல்லாம் கலந்த பலதரப்பட்ட நகரமாக விளங்கியது. அவர்களுக்கு, கல்வி அறிவில்லாத நபி முஹம்மது (ஸல்) அவர்களை அல்லாஹ் தேர்ந்தெடுத்து இறைத்தூதராக அனுப்பி, மக்களுக்கு ஒழுக்கம், கல்வி, சட்டத்திட்டம், வியாபார அறன், ஈகை பண்பென்று எல்லாவற்றையும் கற்றுத் தந்து நெறிப்படுத்திச் செயல்படுத்த வைத்தான் இறைவன்.

    “எழுத்தறிவில்லா அரபு மக்களிடம் அவர்களில் ஒருவராகத் தமது இறைத்தூதரை அனுப்பி, அவனுடைய வசனங்களை ஓதிக்காட்டி, மிகவும் தவறான பாதையில் இருந்தவர்களைப் பரிசுத்தமாக்கி, அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுக்கின்றார்” என்ற இறை வசனமும் அப்போது அருளப்பட்டது.

    ஸஹீஹ் புகாரி 5:65:4560, திருக்குர்ஆன் 3:128, 62:2

    - ஜெஸிலா பானு.
    தானத்தின் வகைகள் பல உண்டு. தானங்களில் இஸ்லாம் தேர்ந்தெடுத்த சிறந்த தானமாக ‘நீர்தானம்’ திகழ்கிறது. இது குறித்த நபிமொழிகள் வருமாறு
    தானத்தின் வகைகள் பல உண்டு. அன்னதானம், பொருள் தானம், பணம் தானம், கண் தானம், ரத்த தானம், உடலுறுப்பு தானம் போன்றவற்றில் ‘நீர் தானமும்’ சேர்த்துக் கொள்ளப்படுகிறது.

    இத்தகைய தானங்களில் இஸ்லாம் தேர்ந்தெடுத்த சிறந்த தானமாக ‘நீர்தானம்’ திகழ்கிறது. இது குறித்த நபிமொழிகள் வருமாறு:

    ஹள்ரத் ஸஃத் பின் உப்பாதா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது:

    “நான் நபி (ஸல்) அவர்களிடம் ‘அல்லாஹ்வின் தூதர் அவர்களே! எனது தாயார் இறந்து விட்டார்கள். அவர்களுக்காக நான் தர்மம் செய்யலாமா?’ என்று கேட்டேன். ‘ஆம்’ என நபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள். ‘சரி தர்மத்தில் சிறந்தது எது?’ என மீண்டும் நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘நீர் புகட்டுவது’ என விளக்கமளித்தார்கள்” (நூல்: அஹ்மது நஸயீ-3666)

    “ஹள்ரத் ஸஃதுபின் உப்பாதா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் ‘அல்லாஹ்வின் தூதர் அவர்களே! எனது தாயார் தர்மம் செய்வதை பிரியப்படுவார். எனவே, நான் அவர்களின் சார்பாக தர்மம் செய்தால் அது அவருக்கு பயனளிக்குமா?’ என கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘ஆம் பயன் தரும், தண்ணீரை தர்மம் செய்வதை அவசியமாக்கிக் கொள்ளுங்கள்’ என்று கூறினார்கள்”.

    தண்ணீர் சிறந்த தானமாக தேர்ந்தெடுக்கப்பட்டதின் பின்னணி என்ன? ஏன்? எதற்கு? என ஆய்வு செய்யும்போது நீரில்லாமல் உலகம் இயங்க முடியாது. இந்த கூற்று உண்மையானது!

    “உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்தே அமைத்தோம்” (21:30) என்பது திருமறையின் கூற்றாகும்.

    நீரில்லாமல் உயிர்கள் இல்லை, நீரில்லாமல் உலகம் இல்லை. நீரை நம்பித்தான் உயிரும், உலகமும் உருவாக் கப்பட்டிருக்கிறது.

    ஒவ்வொரு உயிரினத்திற்கும் அடிப்படையானது நீர் ஆதாரம். இது மனித இனத்திற்கு மட்டும் முக்கியமல்ல, அனைத்து உயிரினங்களுக்கும் அடிப்படையானது. மரம், செடி, கொடி, தாவரம், வனவிலங்கு, வீட்டு வளர்ப்புப் பிராணி, கால்நடை, ஊர்வன, பறப்பன, நடப்பன, மிதப்பன போன்ற அனைத்து உயிரினங்களில் ஆரம்பித்து மனித கண்களுக்கு புலப்படாத ‘ஜின் இனம்’ வரைக்கும் உயிர் வாழ நீர் ஆதாரம் அவசியம்.

    “ஒருவர் ஒரு கிணற்றை தோண்டுகிறார். அதிலிருந்து ஜின் இனம், மனித இனம், பறவை இனம் போன்ற உயிரினம் நீர் அருந்துவதால் அவருக்கு மறுமை நாளில் இறைவன் கூலி கொடுக்காமல் இருப்பதில்லை” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி)

    மரணத்திற்கு பிறகும் நன்மை தரும் நீர் தானம்

    “ஒரு இறைவிசுவாசி மரணித்த பிறகும் அவரை வந்து அடையக்கூடிய நற்செயல்களில் முக்கியமானவை:

    1. கல்வி: அதை அவர் கற்றுக்கொடுத்து பரப்பவும் செய்கிறார்.

    2. நல்ல குழந்தையை அவர் விட்டுச் சென்றிருக்கிறார்.

    3) ஒரு புத்தகத்தை அவர் வாரிசு பொருளாக விட்டுச் சென்றிருக்கிறார்.

    4) ஒரு பள்ளிவாசலை அவர் கட்டியுள்ளார்.

    5) வழிப்போக்கருக்காக ஒரு தங்குமிடத்தைக் கட்டியுள்ளார்.

    6) ஓடக்கூடிய ஒரு நீர் நிலையை உருவாக்கி இருக்கிறார்.

    7) தமது செல்வத்திலிருந்து, ஆரோக்கியமாக வாழும் போது தர்மம் செய்திருக்கிறார்.

    இவை அனைத்தும் அவரின் மரணத்திற்கு பிறகும் அவரை வந்தடையும் நன்மை பயக்கும் நற்செயல்களாக திகழ்கின்றன” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: இப்னுமாஜா)

    ஒருவர் தமது மரணத்திற்கு பின்பும் தமக்கு நன்மை வந்து அடைய வேண்டும் என நினைத்தால், அதிகமாக நீர் தானங்களை நிறைவேற்றுவதுடன், நிரந்தரமான நீர் தேக்கங்களையோ அல்லது நீர் தொட்டிகளையோ அல்லது நீர் நிலைகளையோ ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

    வாயில்லாத ஜீவனும், நீர் தானமும்

    “ஒரு மனிதர் பாதையில் கடந்து செல்லும்போது அவருக்கு கடுமையான தாகம் ஏற்பட்டது. அருகிலுள்ள ஒரு கிணற்றில் இறங்கி அதன் நீரை பருகி மேலே வரும்போது ஒரு நாய் தாகத்தால் ஈரமண்ணை நக்கிக் கொண்டிருப்பதை காணுகிறார்.

    தமக்கு ஏற்பட்ட தாகத்தை போன்று நாய்க்கும் ஏற்பட்டிருப்பதாக தனக்குள் பேசிக்கொள்கிறார். பிறகு கிணற்றில் இறங்கி தமது காலணியை கிணற்றில் முக்கி தண்ணீரை நிரப்பி காலணியை தமது வாயால் பிடித்துக் கொண்டு மேலே ஏறி வந்து நாய்க்கு நீர் புகட்டுகிறார். இதனைக் கண்ட இறைவன் அவரை நன்றி பாராட்டி அவரின் பாவத்தை மன்னித்தான்.

    இதைக்கேள்விப்பட்ட நபித்தோழர்கள் ‘அல்லாஹ்வின் தூதர் அவர்களே, உயிரினங்கள் மீது கருணை காட்டுவதாலுமா நற்கூலி கிடைக்கும்?’ என வினவினார்கள். ‘ஆம், ஒவ்வொரு உயிரினத்தின் மீதும் கருணை காட்டுவதாலும் நற்கூலி கிடைக்கும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்”. அறிவிப்பாளர்: ஹள்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி-2363; முஸ்லிம்- 2244)

    வாயில்லாத ஜீவனுக்கு நீர் புகட்டுவதால் இறைவனே மனமுவந்து பாராட்டி பாவத்தை மன்னிக்கும்போது மனிதன் சக மனிதனுக்கு நீர் புகட்டுவதால் எவ்வளவு நன்மை கிடைக்கும்? இறைவன் அதைவிட எந்தளவு பாராட்டுவான்? என்பதை கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

    ஹதீஸ் கலை வல்லுனர் இமாம் ஹள்ரத் ஹாகிம் (ரஹ்) அவர் களின் முகத்தில் ஒரு காயம் இருந்தது. அது ஏறக்குறைய ஒரு ஆண்டு காலமாக இருந்தது. “உங்களின் நோய்க்கு தர்மத்தைக் கொண்டு சிகிச்சை பெறுங்கள்” என்ற நபிமொழியை அவர்கள் கேள்விப்படுகிறார்கள்.

    தர்மத்தில் சிறந்தது நீர் தர்மம். எனவே, இமாம் ஹள்ரத் ஹாகிம் (ரஹ்) முஸ்லிம்களின் வீடுகளின் வாசலுக்கு முன் நீர் தொட்டியை அமைத்து கொடுத்தார்கள். அதிலிருந்து மக்களும், அங்கு வந்து செல்வோரும் நீரைப் பருகினார்கள். இந்த செயலால் அவர்களுக்கு ஒரு வாரத்திலேயே நிவாரணம் கிடைத்தது.

    ஒரு மனிதர், ஹள்ரத் இப்னு முபாரக் (ரஹ்) அவர்களிடம் வந்து, “எனது முட்டுக்காலில் ஒரு காயம் ஏற்பட்டுவிட்டது. அதற்கு நான் பல மருத்துவர்களிடம் சிகிச்சை குறித்து ஆலோசனைகளை கேட்டு, மருந்திட்டு வந்தேன். கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளாகியும் அது குணமாகவில்லை” என்றார்.

    அதற்கு ஹள்ரத் இப்னு முபாரக் (ரஹ்) அவர்கள் அவரைப் பார்த்து “நீங்கள் மக்களுக்கு நீர் தேவைப்படும் இடத்தில் ஒரு கிணற்றை ஏற்படுத்துங்கள். இவ்வாறு ஏற்பாடு செய்தால் உனது மூட்டுவலி குணமாகும்” என்றார்கள். அவரும் அவ்வாறே செய்தார். அவரின் மூட்டுவலியும் குணமாகியது (பைஹகீ).

    தர்மம் செய்வதினால் நன்மை கிடைக்கும். எனினும் தண்ணீரை தர்மம் செய்தால் நன்மைகள் மட்டுமல்ல. நமது உடலில் உள்ள பிணியும் அதனால் நீங்கி விடுகிறது.

    தண்ணீரை விட மிகச் சிறந்த தர்மம் ஏதுமில்லை. ‘தமக்கு போக மீதமுள்ள தண்ணீரை பிறருக்கு வழங்கிட வேண்டும்’ என இஸ்லாம் கூறுகிறது. தண்ணீர் அல்லாஹ்வின் அருட்கொடை. அது மக்களின் பொது சொத்து. அது ஒரு குறிப்பிட்ட நாட்டுக்கோ ஒரு குறிப்பிட்ட இனத்துக்கோ சொந்தமானதல்ல.

    ஒருவரின் தேவைக்கேற்ப நீரை பயன்படுத்திக் கொள்ளலாம். அனாவசியமாக அதை வீண் விரயம் செய்யக் கூடாது. தேவைக்கு மிஞ்சியதை தண்ணீரின்றி அவதிப் படும் மக்களுக்கு இலவசமாக வழங்கிட வேண்டும். இதுதான் இஸ்லாம் கூறும் இறுதியான உறுதியான தீர்வு.

    மவுலவி அ. சைய்யது அலி மஸ்லஹி,

    பாட்டப்பத்து, நெல்லை டவுன்.
    ×