search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நீங்களும் இறைவன் நாமம் சொல்லி உணவருந்துங்கள்
    X

    நீங்களும் இறைவன் நாமம் சொல்லி உணவருந்துங்கள்

    இறை நம்பிக்கையாளராக இருந்தாலும் சரி, இறை மறுப்பாளராக இருந்தாலும் சரி அவர்களுக்கு இறைவன் பாகுபாடு பார்க்காமல் உணவளிக்கிறான் என்பதற்கு இறைத்தூதர் இப்ராகீம் (அலை) அவர்கள் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சியை பார்க்கலாம்.
    இறை நம்பிக்கையாளராக இருந்தாலும் சரி, இறை மறுப்பாளராக இருந்தாலும் சரி அவர்களுக்கு இறைவன் பாகுபாடு பார்க்காமல் உணவளிக்கிறான் என்பதற்கு இறைத்தூதர் இப்ராகீம் (அலை) அவர்கள் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சி.

    நபி இப்ராகீம் அவர்கள் ‘விருந்தினர்களின் தந்தை’ என்று அறியப்படுபவர். எப்போதும் விருந்தோடு மட்டுமே உண்ணக் கூடியவர். ஒருநாள் முன்னறிமுகம் இல்லாத முதியவர் ஒருவர் அவரைத் தேடி வந்தார். அவரை நபி இப்ராகீம் நட்புடன் வரவேற்று தன்னுடன் உணவருந்துமாறு வருந்தி அழைத்தார். இதை ஏற்றுக் கொண்ட அந்த முதியவர் இப்ராகீம் நபியுடன் உணவருந்த அமர்ந்தார். பல வகை உணவுகள் இருவரின் முன்பு படைக்கப்பட்டன. இப்ராகீம் நபி, ‘பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்’ என்று சொல்லி உணவை உண்ண ஆயத்தமானார்.

    இதற்கு ‘அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால் தொடங்குகிறேன்’ என்று அர்த்தம். முஸ்லிம்கள் எந்தக் காரியத்தைத் தொடங்கினாலும் ‘பிஸ்மில்லாஹ்’ சொல்லி தொடங்குவதே வழக்கம். இது ‘அவனின்றி அணுவும் அசையாது’ என்ற அடிப்படையில் இறைவனுக்கு வழங்கும் பணிவான அர்ப்பணிப்பு. மனிதனாக நம்மைப் படைத்துப் பேருதவி களைச் செய்யும் இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும் என்ற நோக்கில் செய்யப்படும் சமர்ப்பணம்.

    அந்த முதியவரிடம் நபி இப்ராகீம், ‘நீங்களும் இறைவன் நாமம் சொல்லி உணவருந்துங்கள்’ என்று கேட்டுக் கொண்டார். ‘என் எழுபது வயது காலத்தில் எவர் பெயரையும் சொல்லி நான் உணவு உண்டதில்லை’ என்று இறைவன் திருப்பெயரைக் கூற அந்தப் பெரியவர் மறுத்து விட்டார்.

    அப்போதுதான் இப்ராகீம் நபிக்கு அந்தப் பெரியவர் இறை மறுப்பாளர் என்ற செய்தி தெரிய வந்தது. இதனால் இப்ராகீம் நபி முகத்தில் கடுமை காட்டியதால் முதியவர் சாப்பிடாமலேயே அங்கிருந்து வெளியேறினார்.

    உடனே இறைவன் தன் ‘உற்ற நண்பரான’ இப்ராகீமிடம் கேட்டான்: “இப்ராகீமே! எழுபது ஆண்டுகளாக என் பெயரைக் கூறாமல் என் அடியானாகிய அவன் என்னை நிராகரித்து வருகிறான். இருந்தபோதிலும் நான் அவனை ஒருநாள்கூட- ஒரு வேளைகூட பட்டினி போட்டதில்லை. ஆனால் நீரோ என் பெயரை ஒருமுறை உச்சரிக்க மறுத்தவனை பட்டினியோடு அனுப்பி விட்டீர்களே!”

    அதிர்ச்சியில் உறைந்து போனார், இப்ராகீம் நபி. வெளியேறிக் கொண்டிருந்த முதியவரிடம் விரைந்து சென்று மன்னிப்புக் கோரி அவரை அழைத்து வந்து உணவைப் பரிமாறினார். ‘என்ன நடந்தது? ஏன் இந்த மாற்றம்?’ என்று முதியவர் வினா எழுப்பினார். அதற்கு நபி இப்ராகீம், இறைவன் தன்னைக் கண்டித்ததை எடுத்துச் சொன்னார்.

    இப்போது அதிர்ந்து போனார், அந்த முதியவர்.

    இது, மனிதர்களுக்கு மட்டுமல்லாமல், கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும், காட்டில் வாழும் மிருகங்களுக்கும், கடலில் தவழும் மீன்களுக்கும், பூமிக்கு அடியில் வாழும் புழுக்களுக்கும் உணவளிப்பவன் இறைவன் என்பதை எடுத்துக் காட்டுகிற வரலாற்றுச் சம்பவம்.

    விருந்தினர்களை எவ்வாறு உபசரிக்க வேண்டும் என்பதை கடந்த அத்தியாயத்தில் கண்டோம். வீட்டுக்கு வரும் விருந்தினர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை இந்த அத்தியாயத்தில் பார்ப்போம்.

    ‘விருந்தும், மருந்தும் மூன்று நாட்கள்’ என்பது பழமொழி. இதையே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் வலியுறுத்தி உள்ளார்கள். ‘முதல் நாள் அன்பளிப்பு தினமாகும்’. அதில் மிக உயர்ந்த உணவை (விருந்தாளிக்கு) ஊட்டி விட வேண்டும். பொதுவாக விருந்து உபசரிப்பின் காலம் மூன்று நாட்களாகும். (அதாவது இரண்டாவது, மூன்றாவது நாட்களில் உபசரிப்பதற்கு அதிக சிரமம் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.) “விருந்தளிப்பவரின் இல்லத்தில் அவரை நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கும் வகையில் விருந்தினர் அங்கு தங்கிக் கொள்வது ஆகுமானதல்ல” என்பது நபிகளாரின் கூற்று.

    இன்னொரு முறை, “ஒரு விருந்தினர், விருந்தளிப்பவரைப் பாவியாக்கும் அளவுக்கு அவரது வீட்டில் தங்கிக் கொள்வது முறையல்ல” என்று நபிகளார் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், “இறைத்தூதர் அவர்களே! அவர் எப்படி பாவி ஆவார்?” என்று கேட்டனர். அதற்கு, “விருந்தளிப்பதற்கு எதுவுமே இல்லாத அளவுக்கு அவர் அங்கு அதிக நாள் தங்கி விடுவதால் அவர் விருந்தளிக்க முடியாத பாவியாகி விடுவார்” என்று நபிகளார் பதில் அளித்தார்கள்.

    விருந்தினர்கள், விருந்து கொடுப்பவரின் வேலைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும். விருந்துக்குச் சென்றிருக்கும் நேரத்தில் அவரது பணிகள் பாதிக்காதவாறு நடந்து கொள்ள வேண்டும்.

    பிறரது இல்லத்துக்கு விருந்தினராகச் செல்லும்போது கைக்குட்டை, டவல், சோப்பு, சீப்பு போன்றவற்றை எடுத்துச் செல்லலாம். இதன் மூலம் விருந்தளிப்பவருக்கு ஏற்படும் சிரமங்களைக் குறைத்துக் கொள்ள முடியும்.

    கிடைக்காத பொருட்களைக் கேட்டு விருந்தளிப் போரைச் சிரமத்திற்கு ஆளாக்கக் கூடாது.

    விருந்தினர்கள், தொடர்ந்து விருந்தினர்களாக மட்டும் அல்லாது பிறரை விருந்துக்கு அழைப்பவராகவும் இருக்க வேண்டும்.

    விருந்தளிப்பவர்களுக்கு குறிப்பாக அவர்களின் குழந்தைகளுக்கு விருந்தினர்கள் தங்கள் வசதிக்கேற்ப ஏதாவது அன்பளிப்புகளை வாங்கிச் செல்ல வேண்டும். அன்பளிப்பு வழங்குவதால் அன்பும் நெருக்கமும் அதிகரிக்கிறது. அன்பளிப்பு செய்வோரின் உள்ளம் விசாலமடைகிறது.

    விருந்துண்ட பிறகு, விருந்தளித்தவரது வாழ்க்கையில் பாக்கியத்தையும் அருளையும் பொழியுமாறு இறைவனிடம் பிரார்த்தனை (துஆ) செய்ய வேண்டும்.

    ஒருமுறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும், அவர்களுடன் சில தோழர்களையும் அபூ ஹுஸைம் (ரலி) அவர்கள் விருந்துக்கு அழைத்தார். அவர்கள் அனைவரும் விருந்துண்ட பிறகு நபிகளார் தம் தோழர்களை நோக்கி, “நீங்கள் உங்கள் சகோதரருக்குப் பகரமாகச் செய்யுங்கள்” என்று கூறினார்கள்.

    இதைக் கேட்ட நபித் தோழர்கள், “இறைத் தூதரே! நாங்கள் எதைப் பகரமாக அளிப்பது?” என்று கேட்டனர். அதற்கு நபிகளார், “ஒருவர் தமது சகோதரரிடம் சென்று அங்கு உண்டு-பருகினால் அவருடைய வாழ்க்கையில், அருளும் பாக்கியமும் பெருக வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்வதே அவருக்கு அளிக்கும் பகரமாகும்” என்று கூறினார்கள்.

    Next Story
    ×