என் மலர்tooltip icon

    இஸ்லாம்

    இறை நெருக்கத்திற்கு தடையாகவும், சகோதரத்துவ வாழ்க்கைக்கு இடையூறாகவும் பல்வேறு துன்பங்களுக்கு காரணமாகவும் உள்ள ‘நான்’ என்ற அகந்தையை நீக்கி வாழப்பழகுவோம்.
    அண்ணல் நபி (ஸல்) அவர்கள் உம்மி நபியாக இருந்தார்கள். ‘உம்மி’ என்றால் ‘எழுதப்படிக்கத் தெரியாதவர்’ என்பது பொருளாகும்.

    இறைவன் அருளிய ‘இதய வெளிச்சம்’ என்ற உள்ளுணர்வு ஆற்றல் காரணமாக எதையும் எளிதில் அறிந்துகொள்ளும் தன்மையை நபிகளார் பெற்றிருந்தார்கள். அதனால் நபிகளார் யாரிடமும் சென்று கல்வி பயில வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.

    தனிமையில் சில காலம் இறை தியானம் செய்வது என்பது - இறைத்தூதர்கள், ஞானிகளின் வழக்கமான செயலாக இருந்துள்ளது. மக்களின் சீர்கேட்டையும், அவநம்பிக்கைகளையும், இனபேதம், குலபேதம் போன்ற முரண்பாடுகளை விட்டும் மனித குலத்தை மீட்டெடுத்து, ‘எல்லோருக்கும் இறைவன் ஒருவனே’, என்ற பொது தத்துவத்தை உலகில் நிலை நாட்டிட வேண்டி நபிகளார் மக்காவில் உள்ள ‘ஹீரா’ என்ற குகையில் இறை தியானத்தில் ஈடுபட்டார்கள்.

    அவர்களது 40-ம் வயது முதல் அவர்களுக்கு திருக்குர்ஆன் அருளப்பட்டது. திருக்குர்ஆன் அருளப்பட்ட முதல் நிகழ்வின் போது வானவர் தூதர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபிகளார் முன் தோன்றி, ‘ஓதுவீராக’ என்று கூறியபோது, ‘எனக்கு ஓதத்தெரியாதே’ என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள். இறைவனின் அருள்துணையின்றி எனக்கு சுயமாக எதுவும் ஓதத்தெரியாதே என்பதைத் தான் நபிகளார் ‘எனக்கு ஓதத்தெரியாதே’ என்றார்கள்.

    அப்போது ஜிப்ரீல் (அலை) அவர்கள் கீழ்கண்ட வசனத்தை கூறியதும் நபிகளார் ஓதத் தொடங்கினார்கள். அதனைத் தொடர்ந்து 23 ஆண்டுகள், சூழ்நிலைக்கும் தேவைகளுக்கும் ஏற்ப திருக்குர்ஆன் இறங்கிக் கொண்டே இருந்தது.

    ஜிப்ரில் (அலை) முதலில் ஓதிக்காட்டிய வசனம் இதுதான்: ‘(நபியே!) உம்முடைய இரட்சகனான (ரப்பின்) திருநாமத்தை (துணைக்) கொண்டு ஓதுவீராக! அவன் எத்தகைய (ஆற்றல் மிக்க)வன் என்றால் (யாவற்றையும் (அவன்) படைத்தவன் (ஆவான்)’ (96-01).

    ‘எனக்கு ஓதத்தெரியாதே’ என்று நபிகளார் கூறியது அறியாமையினால் ஏற்பட்ட வார்த்தை அல்ல. அது இதயப்பூர்வமாக, உண்மையின் உணர்வு நிலையில் சொல்லப்பட்ட புனித வார்த்தையாகும். ‘தெரியாதே’ என்று கூறிய நபிகளாருக்கு, யுக முடிவு நாள் வரை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்து வாழ்வியல் முறைகளும், வழிகாட்டுதலும் கொண்ட திருக்குர்ஆன் அருளப்பட்டது.

    அகந்தையை நீக்கி உண்மையை உணர்ந்து கொள்ள நபிகளார் இவ்வாறு கூறினார்கள்: ‘இறப்பு வருவதற்கு முன் இறந்து விடுங்கள்’.

    மரணமடைந்த ஒரு உடல் எப்படி ‘நான்’ என்று கூற முடியாதோ அப்படி. எப்படி அதே சடலம் எதையும், என்னுடையது என்று உரிமை கொண்டாட முடியாதோ அப்படி.

    எப்படி அந்த உயிரற்ற உடல் தனது மாட்சிமை குறித்து பெருமை பேச முடியாதோ அப்படி. உங்கள் இறப்பு வருவதற்கு முன் உங்களுடைய ‘நான்’ என்ற அகம்பாவம் இறந்து போகட்டும், சுயநலம் சாகட்டும், தற்பெருமை போன்ற இழிகுணங்கள் மரணமடையட்டும் என்பதே ‘இறப்புக்கு முன் இறந்து விடுங்கள்’ என்ற வார்த்தையின் பொருளாகும்.

    இன்று நம் சமுதாயத்தின் நிலை என்ன? நம் சமுதாயம் இவ்வளவு பெரிய இக்கட்டான சூழலில் மாட்டி தவிப்பதற்கு என்ன காரணம்? நம்மிடையே ஒற்றுமை சீர்குலைவு எதனால் ஏற்படுகின்றது? என்பதற்கான ஒரே விடை, நம்மிடமுள்ள ‘நான் என்ற அகம்பாவமே’ ஆகும்.

    அத்தகைய அகந்தை, போலித்தனமாக செயல்படவும், விளம்பரத்தை தேடிக்கொள்ளவுமே ஆசையை தூண்டிவிடுகின்றது. சமுதாயமும் மக்களும் எப்படி போனால் நமக்கு என்ன? தனக்கு சாதகமாக எதையாவது அப்படி இப்படி பேசி தனது புகழுக்கு பெருமை சேர்க்க நம்மை பொய் சொல்ல வைக்கிறது. ‘தற்பெருமை’ என்ற அகந்தை பொய்யான அடக்கத்தையும், பணிவையும் காட்டி மக்களை ஏமாற்றுகின்றது. தன்னை பெரும் தலைவனாக காட்டிக் கொள்ள தூண்டுகிறது.

    இத்தகைய போலித்தனமான அறிஞர்கள் எப்படி செயல்படுவார்கள், அவர்களின் நிலை என்ன என்பது குறித்து திருக்குர்ஆன் (9-34) இவ்வாறு அடையாளப்படுத்துகிறது:

    ‘இறை விசுவாசிகளே! அறிஞர்களிலும் துறவிகளிலும் நிச்சயமாக பெரும்பாலானவர்கள் மக்களின் பொருட்களை தவறாக (வழி) முறையில் புசிக்கின்றனர். இன்னும் (அம்மக்களை) இறைவனின் (நேரான) பாதையை விட்டும் தடுக்கின்றனர். இன்றும் எவர்கள் தங்கத்தையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக் (கொண்டு) அதனை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யவில்லையோ! அவர்களுக்கு நீர் நோவினை தரும் வேதனை உண்டு என்று நன்மாராயம் கூறுவீராக’.

    இறை நெருக்கத்திற்கு தடையாகவும், சகோதரத்துவ வாழ்க்கைக்கு இடையூறாகவும் பல்வேறு துன்பங்களுக்கு காரணமாகவும் உள்ள ‘நான்’ என்ற அகந்தையை நீக்கி வாழப்பழகுவோம். அப்போது தான் இறைவனின் பேரருள் என்றென்றும் நம் மீது உண்டாகும். எல்லாம் வல்ல இறைவன் அதற்கு பேரருள் புரிவானாக. ஆமீன்.

    மு.முகம்மது சலாகுதீன், ஏர்வாடி, திருநெல்வேலி மாவட்டம்.
    “நபியே! நிச்சயமாக நீர் மகத்தான நற்குணம் உடையவராகவே இருக்கின்றீர்” (திருக்குர்ஆன்-68:4) என்ற இறைக் கூற்றுக்கு ஏற்றவராக நபிகளார் விளங்கினார்கள்.
    வார்த்தை களால் வர்ணிக்க முடியாத அழகிய பண்புகளையும் சிறந்த குணங்களையும் கொண்டவர், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். மக்களின் இதயங்களின் ஆழத்தில், நபிகளாரின் கண்ணியம் வேரூன்றி இருந்தது. இறைத்தூதர் ஆவதற்கு முன்னரே அவர்களது வாழ்க்கை தூய்மையானதாகவும் நேர்மையானதாகவும் இருந்தது. இளமைப் பருவத்திலேயே ‘நம்பிக்கையாளர்’ (அல் அமீன்), ‘உண்மையாளர்’ (அஸ்ஸாதிக்) என்று மக்களால் அழைக்கப்பட்டார்கள். எதிரிகள்கூட அவர்களைக் குறை கூறியதில்லை. அவர்களுடைய பரம எதிரி அபூஜஹ்ல் ஒருமுறை, “முகம்மதே! நீர் கொண்டு வந்த மார்க்கத்தைத்தான் நான் பொய்யாகக் கருதுகிறேன். ஆனால் நீர் பொய்யர் அல்லர்” என்று கூறினான்.

    ஒருமுறை ரோம் மன்னர் ஹிர்கல் (ஹெர்குலஸ்) அழைப்பின்பேரில், நபிகளாரின் எதிரிகளில் ஒருவரான அபூ சுபியான் அவரை அவரது அவையில் சந்தித்தார். அப்போது அபூசுபியானிடம், “இஸ்லாத்தைப் பற்றிக் கூறுவதற்கு முன்பு அவர் (முகம்மது நபி) பொய் பேசியுள்ளார் என்று நீங்கள் பழி சுமத்தியுள்ளர்களா?” என்று மன்னர் கேட்டார்.

    அதற்கு அபூ சுபியான் பதில் அளிக்கையில், “அவ்வாறு அவர் ஒருபோதும் பொய் பேசியதில்லை” என்று பதில் அளித்தார்.

    இதன் மூலம் மக்களின் நம்பிக்கைக்குரியவராகவும், வாய்மையாளராகவும் நபிகளார் வாழ்ந்து இருக்கிறார்கள் என்பது புலனாகிறது. நாம் இறைவனையும் அவனது திருமறையையும் ஏற்றுக் கொள்வதற்கு அவர்களது வாய்மையும், வாழ்வின் தூய்மையும் மட்டுமே போதுமானதாகும். ஆட்சித் தலைவராகவும், ஆன்மிகத் தலைவராகவும் மகத்தான அதிகாரமும், செல்வாக்கும் பெற்றிருந்த நபிகளார், இறுதிக் காலம் வரை எளிமையாகவே வாழ்ந்தார்.

    நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவின் ஆட்சியாளராக இருந்த நேரம். அவர்களைச் சந்திப்பதற்காக உமர் (ரலி) அவர்கள் செல்கிறார். அங்கே கண்ட காட்சியை உமர் விவரிக்கிறார். அதை நாமும் கேட்போம்.

    “நபிகள் நாயகம் பாயின் மீது எதையும் விரிக்காமல் படுத்திருந்தார்கள். இதனால் விலாப்புறத்தில் பாயின் அடையாளம் பதிந்திருந்தது. கூளம் நிரப்பப்பட்ட தோல் தலையணையைத் தலைக்குக் கீழே வைத்திருந்தார்கள். அவர்களின் கால்மாட்டில் தோல் பதனிடப் பயன்படும் இலைகள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. தலைப்பகுதியில் தண்ணீர் வைக்கும் பாத்திரம் தொங்க விடப்பட்டிருந்தது. இதைக் கண்டதும் நான் அழுதேன். ‘ஏன் அழுகிறீர்?’ என்று நபிகளார் கேட்டார்கள். ‘(பாரசீக மன்னர்) கிஸ்ராவும், (இத்தாலியின் மன்னர்) கைஸரும் எப்படி எப்படியோ வாழ்க்கையை அனுபவிக்கும்போது அல்லாஹ்வின் தூதராகிய நீங்கள் இப்படி இருக்கிறீர்களே’ என்று நான் கூறினேன். அதற்கு நபிகளார், ‘இவ்வுலகம் அவர்களுக்கும், மறுமை வாழ்வு நமக்கும் கிடைப்பது உமக்குத் திருப்தி அளிக்க வில்லையா?’ என்று திருப்பிக் கேட்டார்கள்”.

    வலிமை மிக்க வல்லரசின் அதிபர் வாழ்ந்த வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டும் உண்மை நிகழ்வு இது.

    நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மற்றவர்களை விட அதிகம் பணிவுடையவர்களாக இருந்தார்கள். மன்னர் வரும்போது அவர் முன்பு மக்கள் எழுந்து நிற்பதைப் போன்று தனக்கு முன் எழுந்து நிற்பதைத் தடை செய்தார்கள். நலிந்தோர்களையும் நோயாளிகளையும் நலம் விசாரிப்பதை அன்றாட நடவடிக்கையாக வைத்திருந்தார்கள். ஏழைகளோடு ஏழைகளாகச் சேர்ந்திருப்பார்கள். தோழர்களுடன் அவர் களில் ஒருவராக அமர்ந்திருப்பார்கள். அடிமைகள் விருந்திற்கு அழைத்தாலும் இன்முகத்தோடு ஏற்றுக் கொள்வார்கள்.

    தனது காலணிகளையும் ஆடைகளையும் அவர்களே தைத்துக் கொள்வார்கள். தனது ஆடைகளை அவர்களே சுத்தம் செய்வார்கள். ஆட்டில் அவர்களே பால் கறப்பார்கள். உங்களில் ஒருவர் வீட்டு வேலைகளைச் செய்வது போன்று நபிகளாரும் தனது வீட்டில் வேலை செய்வார்கள்.

    தோழர்களோடு தாமும் ஒருவராகப் பணிகளைப் பகிர்ந்து கொள்வார். ஒரு பயணத்தின்போது சமையல் வேலை தொடங்கியது. ஆளுக்கொரு வேலையில் அவர்கள் ஈடுபட்டனர். அப்போது நபிகளார் விறகுகளைச் சேகரித்து வரப் புறப்பட்டார். இதை அறிந்த தோழர்கள், “இறைவனின் தூதரே! உங்களுக்கு ஏன் இந்தச் சிரமம்? நாங்களே இதைச் செய்து கொள்கிறோம்” என்றனர்.

    உடனே நபிகளார், “உங்களால் செய்ய முடியும் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். இருந்தாலும் உங்களில் என்னைத் தனியே உயர்த்திக் காட்ட நான் விரும்பவில்லை. ஏனெனில் ஒருவர் தனது தோழர்களில் தனியாக வேறு படுத்திக் காட்டுவதை இறைவன் வெறுக்கிறான்” என்று கூறி விறகு சேகரிக்கச் சென்றார்கள்.

    மக்கா மாநகருக்கு தென் கிழக்கே சுமார் எழுபது மைல் தூரத்தில் உள்ள ‘தாயிப்’ நகருக்கு இஸ்லாத்தை எடுத் துரைக்க, தன்னுடைய வளர்ப்பு மகன் ஜைது (ரலி) அவர்களை அழைத்துக் கொண்டு நபிகளார் சென்றார்கள். அங்கு செல்வாக்கு மிக்க குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர் களைச் சந்தித்து இஸ்லாத்தைப் பற்றி எடுத்துக் கூறினார்கள். அவர்கள் நபிகளாரை கேலியும் கிண்டலும் செய்தனர். அதோடு அவர்கள் நிற்கவில்லை. சிறுவர்களை ஏவி நபிகளாரை கற்களாலும் சொற்களாலும் தாக்கினார்கள். இவ்வாறு பத்து நாட்கள் பாடாய்ப்படுத்தினார்கள். பதினோறாம் நாள் அவர்கள் இருவரும் தாயிப் நகரத்தைவிட்டு வெளியேறினார்கள். அப்போதும் அந்தக் கொடிய மனம் கொண்டோர் ஓட ஓட விரட்டினார்கள். அவர்கள் நபிகளாரை கல்லால் அடித்தார்கள். அவர்கள் உடலில் காயங்கள் ஏற்பட்டன. ரத்தம் பெருக்கெடுத்து ஓடியது. அருகில் தென்பட்ட ஒரு தோட்டத்திற்குள் இருவரும் தஞ்சம் புகுந்தனர். வேதனையைப் பொறுக்க முடியாமல் நபிகளார் கீழே சாய்ந்தார்கள். பக்கத்தில் இருந்த ஜைத் அவர்களைத் தாங்கியபடி, “நாசக்காரர்கள் நாசமடைய இறைவனைப் பிரார்த்தித்தால் என்ன?” என்று கேட்டார்கள்.

    அதற்கு நபிகளார், “நான் மக்களிடம் அன்பு பாராட்டவும், அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யவும் அனுப்பப்பட்டிருக்கிறேன். அவர்களுக்கு வேதனையை வழங்குவதற்காக அனுப்பப்படவில்லை. இன்றில்லாவிட்டாலும் நாளை இவர்கள் நேர்வழியில் வருவார்கள். இவர்கள் வராவிட்டாலும் இவர் களுடைய வழித்தோன்றல்கள் நிச்சயம் இஸ்லாத்தை ஏற்பார்கள்” என்றார்கள்.

    “நபியே! நிச்சயமாக நீர் மகத்தான நற்குணம் உடையவராகவே இருக்கின்றீர்” (திருக்குர்ஆன்-68:4) என்ற இறைக் கூற்றுக்கு ஏற்றவராக நபிகளார் விளங்கினார்கள்.

    பாத்திமா மைந்தன்
    நபி முஹம்மது (ஸல்) அவர்களைக் கொல்வதற்காக, குறைஷிகள் அலைந்து கொண்டிருந்தனர். இறைவன் நபிகளாரையும் அவர்களுடைய தோழரையும் பார்க்க முடியாமல் செய்தார்.
    நபி முஹம்மது (ஸல்) அவர்களைக் கொல்வதற்காக, குறைஷிகள் அலைந்து கொண்டிருந்தனர். நபிகளார் மறைந்திருந்த குகைக்கு மிக அருகில் வந்தும், நபிகளாரையும் அவர்களுடைய தோழரையும் பார்க்க முடியாமல் இறைவன் செய்தமையால் அவர்கள் திரும்பி விட்டனர். குறைஷிகள் தேடித் தேடி சோர்வடைந்தனர். தேடும் வேட்கையும் தணிந்தது. இதனை அறிந்து கொண்ட நபி (ஸல்) அவர்கள் தமது தோழர் அபூ பக்கருடன் அங்கிருந்து புறப்பட்டார்கள்.

    போகும் பாதையில் வெப்பம் அதிகரிக்கவே, நிழல் படர்ந்த இடத்தைத் தேடினர். அப்படியான ஒரிடத்தில் அபூ பக்கர் (ரலி) ஒரு தோலை விரித்து, அதில் நபிகளாரை உறங்கி ஓய்வெடுக்கச் சொன்னார்கள். நபிகளார் உறங்கும்போது கண்காணித்த வண்ணம் இருந்தார்கள். அங்கு ஆட்டிடையன் ஒருவன் தன் ஆடுகளுடன் ஓய்வெடுக்க அதே பாறைக்கு அருகில் வந்தான்.

    அபூ பக்கர் (ரலி) அவர்கள் அந்த ஆட்டிடையனிடம் “உன் ஆடுகளிடம் பால் இருக்கிறதா?” என்று கேட்டார்கள். அவன் "பால்  இருக்கிறது"   என்று தெரிவித்தவுடன் அபூ பக்கர் (ரலி), ஆட்டின் மடியிலிருந்து மண்ணையும், முடியையும், தூசுகளையும் நீக்கி உதறிவிட்டு பால் கறக்க உத்தரவிட்டார்கள். அதன்படியே கறந்த பாலை அருந்தி, தாகத்தைத் தணித்துக் கொண்டு, நபி முஹம்மது (ஸல்) உறக்கத்திலிருந்து எழுந்து வரும்வரை காத்திருந்து அப்பாலை தந்தார்கள். நபிகளாரும் திருப்தியடையும் வரை பருகினார்கள். அதன்பின் பயணம் தொடர்ந்தது.

    குறைஷிகளில் ஒருவரான சுராக்கா இப்னு மாலிக் இப்னி நபிகளாரையும் அவர்களது தோழரையும் குதிரையில் பின்தொடர்ந்து வந்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அக்குதிரை வீரரை திரும்பிப் பார்த்துவிட்டு, 'இறைவா! அவரைக் கீழே விழச் செய்!' என்று பிரார்த்தித்தார்கள். உடனே குதிரை அவரைக் கீழே தள்ளிவிட்டது. பிறகு குதிரை கனைத்துக் கொண்டே எழுந்து நின்றது. நபிகளாரின் பிரார்த்தனையின் சக்தியைப் புரிந்து கொண்ட சுராக்கா உடனே மனம் திருந்தியவராக, "இறைத்தூதர் அவர்களே! நீங்கள் விரும்பியதை எனக்கு உத்தரவிடுங்கள்" என்று கூறினார்.

    அதற்கு நபி(ஸல்) அவர்கள், “இங்கேயே நின்று கண்காணியுங்கள். எங்களை யாரும் பின் தொடராமல் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று கேட்டுக் கொண்டார்கள். சுராக்கா முற்பகலில் இறைத்தூதர் நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கு எதிராகப் போரிடுபவராக இருந்தார். பிற்பகலில் நபியைக் காக்கும் ஆயுதமாக மாறினார். பிறகு, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கருங்கற்கள் நிறைந்த 'ஹர்ரா' பகுதியில் தங்கினார்கள். ஹர்ராவின் பொதுப் பெயர்தான் குபா.  பின்னாட்களில் குபாவில்தான் ஒரு பள்ளி வாசலை நபி முஹம்மது (ஸல்) கட்டச் செய்தார்கள். பிறகு, குபாவிலிருந்து கொண்டு மதீனாவாசிகளான அன்சாரிகளிடம் ஆளனுப்பினார்கள்.

    அன்சாரிகள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமும், அபூ பக்ர்(ரலி) அவர்களிடமும் வந்தடைந்தனர். 'இப்போது நீங்கள் இருவரும் அச்சமற்றவர்களாகவும், ஆணையிடும் அதிகாரம் படைத்தவர்களாவும் பயணம் செய்யலாம்' என்று அன்சாரிகள் கூறினர். இறைத்தூதர்(ஸல்) அவர்களும், அபூ பக்ர்(ரலி) அவர்களும் மதீனா நோக்கிப் பயணமாயினர்.

    ஸஹீஹ் புகாரி 4:61:3615, 4:63:3906, 4:63:3911

    - ஜெஸிலா பானு.
    நிராகரிப்போரின் முயற்சிகள் வீணானது, வாக்குகள் கீழானது. அல்லாஹ்வின் வாக்குதான் எப்போதும் மேலானது. அல்லாஹ் மிகைத்தவன், ஞானமிக்கவன்.
    நபி முஹம்மது (ஸல்), பிறந்த மண்ணான மக்காவைத் துறந்து மனவருத்தத்தோடு வெளியேறினார்கள். ‘தவ்ர்’ என்ற மலை குகைக்கு வந்தபோது நபித் தோழர் அபூ பக்கர் (ரலி) முதலில் குகையில் நுழைந்து அங்கு ஏதும் பூச்சியோ அல்லது விஷ ஜந்தோ உள்ளதா என்று தம் கைகளால் தடவிப் பார்த்து, அதன் பின் நபி (ஸல்) அவர்களைக் குகைக்கு உள்ளே வரச் சொன்னார்கள்.

    நபிகளார் மக்காவிலில்லை என்று அறிந்த குறைஷிகள் எல்லாப் பக்கமும் ஆட்களை அனுப்பித் தேடினர். நபிகளாரைப் பிடித்து வருபவருக்கு நூறு ஒட்டகங்கள் பரிசு என்று அறிவித்தனர். ஆகையால் நபி முஹம்மது (ஸல்) மற்றும் அபூ பக்கர் (ரலி) இருவரும் அந்தக் குகையிலேயே கிட்டத்தட்ட மூன்று நாட்கள் தங்கும்படியாக ஆகிவிட்டது. ஊருக்குள் நடப்பவை பற்றி அபூ பர்க்கர் (ரலி) அவர்களின் மகன் அப்துல்லாஹ் தகவல் தந்த வண்ணம் இருந்தார்கள். அவர்கள் வந்து போகும் கால் தடங்களை அழிக்கவே ஒரு பணியாள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தார். அவர் தம் ஆடுகளை எடுத்துக் கொண்டு அப்துல்லாஹ்வின் பின்னேயே சென்று சுவடுகளை அழிப்பார்.

    நபிகளார் மற்றும் அபூ பக்கர் (ரலி) இருவருக்கான பயண உணவை, அபூ பக்கர் (ரலி) அவர்களின் வீட்டில் தயாரித்து, தண்ணீர் தோல் பையை ஒட்டகத்தில் வைத்து கட்டிக் கொண்டு வந்திருந்தனர். உணவையும் தண்ணீரையும் ஒட்டகத்தில் வைத்துக் கட்டுவதற்கு அபூ பக்கர் (ரலி) அவர்களின் மகள் அஸ்மாவிற்குத் தனது இடுப்புக் கச்சையைத் தவிர வேறு எதுவும் கிடைக்கவில்லை. இடுப்புக் கச்சையை இரண்டாகக் கிழித்து, ஒன்றினால் தண்ணீர் தோல் பையையும், மற்றொன்றினால் பயண உணவையும் கட்டினார். இதனால் அஸ்மாவுக்கு ‘இரட்டைக் கச்சைக்காரர்’ என்று பட்டப் பெயரும் வந்தது. இப்படி அபூ பக்கரின் ஒட்டுமொத்தக் குடும்பமும் ஏதாவது ஒரு வகையில் நபிகளார் ஹிஜ்ரத் செய்வதற்கு உதவினர்.

    குகையில் அபூ பக்கரின் மடியில் நபிகளார் தலையைச் சாய்த்துத் தூங்கினார்கள். அப்போது அபூ பக்கர் (ரலி) அவர்களை ஏதோ தீண்டிவிட்டதால் அவர் தாங்க முடியாத வலியில் இருந்தார்கள். இருப்பினும் நபிகளார் விழித்துவிடக் கூடாதென்று வலியைத் தாங்கிக் கொண்டு அசையாமல் இருந்தார்கள். வலியின் காரணமாக அவர்களின் கண்களில் கண்ணீர் வழிந்தோடி ஒரு சொட்டுக் கண்ணீர் நபிகளாரின் கன்னத்தில் விழுந்தது. உடனே விழித்துக் கொண்ட நபி முஹம்மது (ஸல்) “அபூ பக்கரே, ஏன் கலங்குகிறீர்கள்?” என்று கேட்டார்கள். வலியில் இருந்த அபூ பக்கர் (ரலி) தம்மை ஏதோ தீண்டியதைப் பற்றிச் சொன்னார்கள். நபிகளார் தமது உமிழ்நீரை எடுத்து, தீண்டிய இடத்தில் தடவியவுடன் அபூ பக்கர் (ரலி) அவர்களின் வலி நீங்கியது.

    இருவரும் குகையில் இருந்தபோது விரோதிகளின் நடமாட்டம் வெளியில் தெரிந்தது. எதிரிகள் குகைவாசலை வந்தடைந்தனர். அபூ பக்கர் (ரலி) மெல்லிய குரலில் நபிகளாரிடம் “யா ரசூலல்லாஹ்! அவர்கள் குனிந்தாலேபோதும் நாம் குகைக்குள் இருப்பதைத் தெரிந்து கொள்வார்கள்” என்று கூறியவுடன், அதற்கு நபி முஹம்மது (ஸல்) சொன்னார்கள், “கவலைப்படாதீர்கள், இங்கு நாம் இருவர் மட்டுமல்ல. நம்மோடு மூன்றாமவனாக அல்லாஹ்வும் நம்முடன் இருக்கிறான்” என்று உறுதியான நம்பிக்கையுடன் கூறினார்கள்.

    அல்லாஹ்வின் உதவியால் குகையின் வாயிலில் சிலந்தி வலை கட்ட ஆரம்பித்தது. அங்கு ஒரு பறவையின் முட்டையும் தென்பட்டது. யாருமில்லாத இடத்தில்தான் பறவை முட்டையிடும், சிலந்தி வலை அறுந்திருந்தால் உள்ளே யாரும் சென்றிருப்பார்கள் என்று சந்தேகம் வரும், ஆகையால் எதிரிகள் பார்க்க முடியாத படைகளைக் கொண்டு காரியத்தைப் பலப்படுத்தினான் இறைவன். நிராகரிப்போரின் முயற்சிகள் வீணானது, வாக்குகள் கீழானது. அல்லாஹ்வின் வாக்குதான் எப்போதும் மேலானது. அல்லாஹ் மிகைத்தவன், ஞானமிக்கவன்.

    ஸஹீஹ் புகாரி 2:42:2138, 3:56:2979, 4:62:3651, 4:62:3653, திருக்குர்ஆன் 9:40

    - ஜெஸிலா பானு.
    பெருமானார் (ஸல்) அவர்களுடைய வாழ்வில் இதற்கான பாடம் உள்ளது. ஏற்படவிருந்த ஒரு பெரும் இனக்கலவரத்தை அண்ணலார் (ஸல்) அவர்கள் எவ்வாறு தீர்த்து வைத்தார்கள் என்பது நமக்கான பாடமும் படிப்பினையும்.
    தவறுகளைக் கண்டால் அவற்றை எவ்வாறு கையாள்வது என்பது ஒரு கலை. ஒவ்வொரு வாசலுக்கும் ஒவ்வொரு தனித்தனித் திறவுகோல் இருப்பதைப் போன்றே, ஒவ்வொரு தவறையும் தனித்தனியாகக் கையாள்வது ஒரு கலை. முடிந்தவரை அதனைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

    பெருமானார் (ஸல்) அவர்களுடைய வாழ்வில் இதற்கான பாடம் உள்ளது. ஏற்படவிருந்த ஒரு பெரும் இனக்கலவரத்தை அண்ணலார் (ஸல்) அவர்கள் எவ்வாறு தீர்த்து வைத்தார்கள் என்பது நமக்கான பாடமும் படிப்பினையும்.

    பனூமுஸ்தலக் போருக்காக தமது தோழர்களுடன் நபி (ஸல்) அவர்கள் சென்றிருந்தார்கள். போரிலிருந்து திரும்பி வரும் வழியில் ஓரிடத்தில் தங்கி அனைவரும் ஓய்வெடுத்தனர். அப்போது முஹாஜிர்கள் தங்களது பணியாளரான ஜஹ்ஜாஹ் பின் மஸ்ஊத் என்பவரைத் தண்ணீர் எடுத்து வருமாறு அனுப்பி வைத்தனர். அதேவேளை அன்சாரிகளும் தங்களது பணியாளரான ஸினான் பின் வபர் என்பவரைத் தண்ணீர் எடுத்து வருமாறு அனுப்பி வைத்தனர்.

    தண்ணீர் இருக்கும் கிணற்றுக்கு அருகே பணியாளர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதில் ஒருவர் மற்றவரை அடிக்க, அடிபட்டவர், ‘அன்சாரிகளே..!’ என்று பெரும் சப்தத்துடன் தமது மக்களை உதவிக்கு அழைத்தார். உடனே அடுத்தவரும், ‘முஹாஜிர்களே..!’ என்று அழைக்கத் துவங்கினார்.

    அன்சாரிகள் வேக வேகமாக அங்கு வந்தனர். முஹாஜிர்களும் ஆவேசத்துடன் அங்கு வந்தனர். இரு கூட்டத்தினரும் போரிலிருந்து திரும்பி வந்துகொண்டிருக்கும் சூழல். ஆயுதம் தரித்த நிலை. இரு கூட்டத்தினரும் மோதிக்கொள்ளும் ஆபத்து மெள்ள மெள்ள தலைகாட்டியது.

    நடந்த விஷயம் அறிந்து வேகமாக அங்கு வந்த பெருமானார் (ஸல்) அவர்கள் இரு கூட்டத்தினரையும் சமாதானம் செய்துவைத்தார்கள். அவர்களைச் சாந்திபெறச் செய்தார்கள். அனைவரும் அங்கிருந்து சென்றனர்.

    நயவஞ்சகர்களின் தலைவனான அப்துல்லாஹ் பின் உபைக்கு அந்த நிகழ்வு நெஞ்சில் வெறுப்புத் தீயை மூட்டியது. நடந்த நிகழ்வை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தமது கூட்டத்தினரான மதீனாவாசிகளிடம் வேகமாகவும் கோபமாகவும் வந்து கூறினான்:

    ‘இது உங்களுக்கு நீங்களே தேடிக்கொண்ட வினை. உங்கள் நாட்டை அவர் களுக்கு விட்டுக்கொடுத்தீர்கள். உங்கள் பொருட்களை அவர்களுக்கு பங்கு வைத்துக் கொடுத்தீர்கள். நான் அல்லாஹ் மீது ஆணையிட்டுக் கூறுகின்றேன்! இனிமேல் உங்கள் பொருட்களை அவர்களுக்கு நீங்கள் கொடுக்காமல் இருந்தால் வேறு நாட்டைத் தேடி அவர்கள் சென்றுவிடுவார்கள்’.

    அந்த மக்கள் கூட்டத்தில் ஸைத் பின் அர்கம் எனும் இளைஞர் ஒருவரும் இருந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று நடந்தவற்றை ஒன்றுவிடாமல் அவர் கூறினார். அப்போது அங்கிருந்த உமர் (ரலி) அவர்கள் துள்ளி எழுந்தார்கள். அந்த நயவஞ்சகன் கொலை செய்யப்பட வேண்டும். அதுவும் அன்சாரிகளில் இருந்து ஒருவர் கொலை செய்வதே சிறப்பாக இருக்கும் என்று கருதிய உமர் (ரலி) அவர்கள், பெருமானார் (ஸல்) அவர்களிடம், ‘அல்லாஹ்வின் தூதரே! அந்த நயவஞ்சகனைக் கொலை செய்யுமாறு உப்பாதா பின் பிஷ்ர் அவர்களுக்கு ஆணையிடுங்கள்!’ என்று கூறினார்.

    பெருமானார் (ஸல்) அவர்களோ ஆழ்ந்த யோசனையில் ஈடுபட்டார்கள். பழிவாங்கும் நேரம் இதுவல்ல. அனைவரிடத்திலும் ஆயுதம் இருக்கிறது. போரிலிருந்து திரும்பி வரும் நேரம் வேறு. மக்களுக்கு மத்தியில் இந்த செய்தி பரவினால் பெரும் விஷமத் தீயும் குழப்பமும் பரவத் துவங்கும். இரு கூட்டரும் ஒருவருக்கொருவர் ஆயுதம் ஏந்தும் சூழல் ஏற்படும். என்ன செய்வது..?

    அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும் இடையே இது சம்பந்தமாக பெரும் பிரச்சினை வெடிக்கப்போகிறது எனும் சமிக்ஞையை பெருமானார் (ஸல்) உணரத் துவங்கினார்கள். ஆகவே அவர்களுடைய கவனத்தை வேறுதிசையில் திருப்ப நாடினார்கள். நடந்த விஷயம் குறித்து பேசித்தீர்ப்பதற்காக தோழர்கள் ஓய்வை எதிர்பார்த்தனர். ஆனால், பெருமானாரோ ஓய்வின்றி நடந்துகொண்டே இருந்தார்கள்.

    நடை.. நடை.. தொடர் நடை.. அன்றைய தினத்தின் பகல் முழுவதும் விடாமல் நடந்துகொண்டே இருந்தனர். சூரியன் மறையத் துவங்கியது. தொழுகைக்காக ஓரிடத்தில் தங்குவோம், அப்போது கண்டிப்பாக ஓய்வு கிடைக்கும் என்று மக்கள் நம்பினர். ஆனால் விரல் விட்டும் எண்ணும் ஒருசில நிமிடங்கள் மட்டுமே தொழுகைக்கென நேரம் ஒதுக்கப்பட்டது. தொழுகை முடிந்ததும் உடனடியாக மீண்டும் நடை தொடர்ந்தது. இரவு முழுவதும் நடந்தனர். அதிகாலைத் தொழுகைக்கு நேரம் ஒதுக்கப்பட்டது. தொழுகை முடிந்ததும் மீண்டும் நடை தொடர்ந்தது. சூரியன் சுடத்துவங்கியது. ஆயினும் நடையை நிறுத்தவில்லை. ஒன்றரை நாள் தொடர் நடை. அனைவரும் களைப்படைந்தனர். வெயில் ஒருபக்கம் வாட்டி வதைத்தது. பிரச்சினையைப் பேசுவதற்கோ ஊதிப் பெருசு படுத்துவதற்கோ எவரிடமும் அப்போது சக்தியும் இருக்கவில்லை, மனமும் இருக்கவில்லை. தற்போது அனைவருக்கும் தேவை ஓய்வு.. ஓய்வு.. ஓய்வு மட்டுமே.

    இறுதியில் கொஞ்ச நேரம் ஓய்வெடுக்குமாறு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். அவ்வளவுதான்... முதுகு தரையில் பட்டதும் அனைவரும் தங்களை அறியாமலேயே உடனடியாகத் தூங்கிவிட்டனர். பேசுவதற்கு நேரம் கிடைக்கவில்லை. கொஞ்ச நேரம் தூங்கியபின் மீண்டும் நடை தொடர்ந்தது. மதீனா வந்தடைந்தனர். மதீனாவுக்குள் வந்ததும் அனைவரும் தத்தமது வீடுகளுக்குப் பிரிந்து சென்றனர்.

    நடந்த நிகழ்வை மையமாக வைத்து இந்த சூழ்நிலையில்தான் ‘முனாஃபிகூன்’ என்ற அத்தியாயம் இறங்கியது. அதன் வசனங்களை நபி (ஸல்) அவர்கள் அனைவருக்கும் ஓதிக் காட்டினார்கள். உண்மை நிலையைப் புரிந்துகொண்ட நபித்தோழர்கள் அப்துல்லாஹ் பின் உபை என்ற அந்த நயவஞ்சகரை சபிக்கவும் திட்டவும் துவங்கினர். அந்தக் காட்சியை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பார்த்துக்கொண்டே இருந்தார்கள்.

    உமர் (ரலி) அவர்களை அழைத்து பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘உமரே! அன்றுமட்டும் இவனை நீங்கள் கொலை செய்திருந்தால்.. இந்த மக்கள் ரோஷம் கொண்டு இவனுக்காகப் பழிக்குப்பழி வாங்குவதற்குத் தயாராக இருந்திருப்பார்கள். ஆனால் இன்றோ நிலைமையைப் பாருங்கள். அவனைக் கொலை செய்யுங்கள் என்று இந்த மக்களுக்கு இப்போது நான் ஆணையிட்டால் அனைவரும் சேர்ந்து அவனைக் கொலை செய்துவிடுவார்கள்’.

    அவ்வாறு அந்தப் பிரச்சினை முடிவுக்கு வந்தது. ‘பித்னா’ எனும் பெரும் குழப்பத் தீ பரவாமல் நபி (ஸல்) அவர்கள் மிகவும் சாதுர்யமாகத் தடுத்துவிட்டார்கள். இதுதான் ராஜதந்திரம்.

    மவுலவி நூஹ் மஹ்லரி, குளச்சல்.
    நபிகள் நாயகம் (ஸல்), பிறந்த மண்ணான மக்காவைத் துறந்து மதீனாவுக்குச் செல்லும் இந்த நிகழ்வு இஸ்லாமிய வரலாற்றில் ஒரு முக்கியமான திருப்புமுனையாக, மறுமலர்ச்சியாக அமைந்த சம்பவம்.
    நபி முஹம்மது (ஸல்) அவர்களை, கொலை செய்ய, குறைஷிகள் தீர்மானித்தனர். நள்ளிரவில் நபிகளார் தமது வீட்டிலிருந்து வெளியே வரும்போது, பள்ளி வாசலுக்குச் செல்லும் போது குறைஷிகள் தங்களது சதித்திட்டத்தை நிறைவேற்றக் காத்திருந்து விழித்திருந்தனர்.

    குறைஷிகள் தங்களது திட்டத்தை நிறைவேற்ற எதிர்பார்த்திருந்தாலும் அவர்கள் கண்முன்னே நபி முஹம்மது (ஸல்) அவர்களது வீட்டிலிருந்து வெளியே கூட்டத்தைப் பிளந்து கொண்டு வந்து, தரையிலிருந்து ஒரு கையளவு மண்ணை எடுத்து அங்கிருந்தவர்களது தலையில் தூவிவிட்டுச் சென்றார்கள். நபிகளாருக்கு முன்புறம் ஒரு சுவரும், பின்புறம் ஒரு சுவருமாக ஆக்கி எதிரிகள் நபி (ஸல்) அவர்களைப் பார்க்க முடியாதவாறு அல்லாஹ் செய்துவிட்டான். இச்சம்பவம் திருக்குர்ஆனில் ஸூரத்து யாஸீனில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    நேரம் செல்லச் செல்ல, குறைஷிகளுக்கு எங்கோ ஏதோ தவறு நடந்துள்ளது என்று தெரிந்தது. தமது திட்டம் நிறைவேறவில்லை என்று புரிந்துக் கொண்டவர்களாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். இவர்கள் நபிகளாரின் வீட்டிற்கு முன்பு கூடியிருந்ததைக் கவனித்த ஒருவர், “நீங்கள் நபி முஹம்மது (ஸல்) அவர்களையா தேடுகிறீர்? இப்போதுதான் முஹம்மது (ஸல்) உங்களைக் கடந்து சென்று, உங்களது தலையில் மண்ணைத் தூவி விட்டுச் சென்றாரே” என்றார்.

    தலையில் மண்ணைத் தட்டிவிட்டவர்களாகக் கோபத்தில் அங்கிருந்து கலைந்து செல்வதற்கு முன் நம்பிக்கை இல்லாமல் நபிகளாரின் வீட்டுக் கதவின் இடைவெளியில் வீட்டிற்குள் பார்த்தனர். அங்கு போர்த்திக் கொண்டு படுத்திருப்பவரைப் பார்த்து “அந்த நபர் தவறாகச் சொல்கிறார், முஹம்மது இங்குதான் தூங்குகிறார்” என்று கூறி, அங்கேயே வெளியில் விடியும்வரை காத்து நின்றனர்.

    காலையில் போர்வைக்குளிருந்து அலீ (ரலி) எழுந்து வெளியே வந்ததைப் பார்த்து, அதிர்ச்சியடைந்து நபிகளாரைப் பற்றி அலீ (ரலி) அவர்களிடம் விசாரிக்க. தமக்கு எதுவுமே தெரியாது என்று அலீ (ரலி) மறுத்துவிட்டார்கள்.

    இதற்கிடையில் நபி முஹம்மது (ஸல்) மற்றும் அவர்களது தோழர் அபூ பக்கர் (ரலி) விடிவதற்கு முன்பே மக்காவை விட்டுப் புறப்பட்டிருந்தார்கள். குறைஷிகள் தங்களைத் தேடுவார்கள், அதனால் மக்காவிலிருந்து மதீனாவிற்குச் செல்லும் வழக்கமான பாதையில் செல்லாமல், அந்தப் பாதைக்கு முற்றிலும் எதிரான திசையில் யமன் நாட்டை நோக்கிச் செல்லும் தெற்கு திசை பாதையில் பயணித்து வழியில் ‘தவ்ர்’ மலைக்குகையை அடைந்தனர்.

    நபிகள் நாயகம் (ஸல்), பிறந்த மண்ணான மக்காவைத் துறந்து மதீனாவுக்குச் செல்லும் இந்த நிகழ்வு இஸ்லாமிய வரலாற்றில் ஒரு முக்கியமான திருப்புமுனையாக,  மறுமலர்ச்சியாக அமைந்த சம்பவம். இதனையே ‘ஹிஜ்ரத்’ என்பர். இந்த நிகழ்வுதான் இஸ்லாமிய ஆண்டின் தொடக்கக் காலமாகவும், ஹிஜ்ரத் என்ற சொல்லே ஹிஜ்ரி ஆண்டின் பெயராகவும் மாறியது.

    திருக்குர்ஆன் 36:9, சீறா இப்னு ஹிஷாம், அர்ரஹீக் அல்மக்தூம்

    - ஜெஸிலா பானு.
    ‘ஹிஜ்ரா’ அல்லது ‘ஹிஜ்ரத்’ என்பது இறைவனின் மார்க்கத்தைப் பூரணமாகப் பின்பற்ற நெருக்கடி தரும் ஓர் இடத்தை விட்டு, வேறு இடத்திற்குச் செல்வதாகும்.
    நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நபித்துவம் பெற்று ஏறத்தாழ 5 ஆண்டுகள் ஆகி இருந்தன. முஸ்லிம்களுக்குக் குரைஷிகள் அளித்த தொல்லைகள் எல்லை மீறி போவதை நபிகளார் உணர்ந்தார்கள்.

    எந்த நிலையிலும் அவர்கள் இஸ்லாத்தைக் கைவிட மாட்டார்கள் என்றபோதிலும், அவர்கள் படும் இன்னல்கள் குறித்து நபிகளார் பெரிதும் கவலை கொண்டார்கள்.

    இதனால் இன்னல்களுக்கு ஆளான முஸ்லிம்கள் மக்காவைத் துறந்து அபிசீனியாவுக்குச் செல்லட்டும் என்று நபிகளார் முடிவு செய்தார்கள். இதன்படி பன்னிரண்டு ஆண்களும், நான்கு பெண்களும் அபிசீனியா சென்றனர். இதுவே இஸ்லாத்தின் முதல் ‘ஹிஜ்ரத்’ ஆகும்.

    ‘ஹிஜ்ரத்’ என்ற அரபுச் சொல்லுக்கு இடம் மாறுதல், புலம் பெயர்தல், விட்டு விடுதல், வெறுத்து விடுதல் என்று அர்த்தம். ‘ஹிஜ்ரா’ அல்லது ‘ஹிஜ்ரத்’ என்பது இறைவனின் மார்க்கத்தைப் பூரணமாகப் பின்பற்ற நெருக்கடி தரும் ஓர் இடத்தை விட்டு, வேறு இடத்திற்குச் செல்வதாகும்.

    நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், பதிமூன்று ஆண்டு காலம் பல இன்னல்களுக்கு இடையே மக்காவில் ஓரிறைக் கொள்கையைப் பிரசாரம் செய்து வந்தார்கள். அவர்களைக் கொல்ல குரைஷிகள் திட்டம் தீட்டினார்கள்.

    இதனால் இறைவன் கட்டளையை ஏற்று நபிகளார் யாருக்கும் தெரியாமல் இரவோடு இரவாக தோழர் அபூபக்கர் (ரலி) அவர்களுடன் மக்காவை விட்டு மதீனா நோக்கி புறப்பட்டார்கள். இதுவே இஸ்லாத்தின் இரண்டாவது ‘புலம் பெயர்வு’ ஆகும்.

    கரிய இருள். பயணம் செல்லும் பாதையெங்கும் கரடு முரடான கற்கள். வழியில் மக்கா மாநகரில் இருந்து மூன்று மைல் தொலைவில் இருந்த ‘தவ்ர்’ மலையில் இருவரும் தங்கினார்கள்.

    இதற்கிடையே தோழரோடு முகம்மது நபி தப்பி விட்டார் என்பதை அறிந்ததும், குரைஷிகள் அவரைத்தேடி அந்தக் குகை வாசல் அருகே வந்து விட்டனர்.

    “இருவரும் இதை விட்டு ஓரடியும் தாண்டவில்லை; குகைக்குள்ளேதான் அவர்கள் பதுங்கி இருக்க வேண்டும்” என்று மக்காவின் மந்திரக்காரன் அபூகர்ஸ் உரத்தக் குரலில் உரைத்தான்.

    இதைக் கேட்டதும், அபூபக்கர் அவர்களின் உடல் தளர்ந்தது; உள்ளம் சோர்ந்தது. “இப்போது நபிகளார் எதிரிகள் கையில் சிக்கினால்...” அவரால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. கண்களில் நீர் சுரந்தது. கண்களில் பெருக்கெடுத்த கண்ணீர் கரைபுரண்டு வழிந்தது.

    இதைக் கண்ணுற்ற நபிகளார், “ஏன் கலங்கு கிறீர்கள், அபூபக்கரே!” என்று கேட்டார்கள்.

    “இறைத் தூதரே! அங்கே பாருங்கள். அவர்கள் பலர் இருக்கிறார்கள். இங்கே நாம் இருவர் மட்டுமே” என்றார், அபூபக்கர்.

    “அஞ்சாதீர். நாம் இருவர் அல்லர், மூவர். நிச்சயமாக அல்லாஹ்வும் நம்மோடு இருக்கின்றான்” என்றார்கள்.

    மீண்டும் குரைஷிகளின் உரையாடல் தொடங்கியது, “வாருங்கள், நாம் குகையின் உள்ளே சென்று பார்ப்போம்” என்றான் அவர்களில் ஒருவன்.

    “குகை வாசலில் பின்னப்பட்டிருக்கும் சிலந்தி வலையைப் பார். இது முகம்மது பிறப்பதற்கு முன்பே பின்னப்பட்டது போலத் தெரியவில்லையா? நாம் ஏன் உள்ளே சென்று நம்மை நாமே முட்டாளாக்கிக் கொள்ள வேண்டும்” என்று இன்னொருவன் கூற அவர்கள் அந்த இடத்தை விட்டு அகன்றார்கள்.

    அவர்கள் மூன்று இரவுகள் அங்கே தங்கி இருந்தார்கள். அபூபக்கர் (ரலி) அவர்களுடைய மகன் அப்துல்லாஹ்வும் அங்கு சென்று இரவு தங்குவார். அவர் இரவின் இறுதிப் பகுதியில் வெளியேறி விடிவதற்குள் மக்கா வந்து விடுவார். அவர்கள் இருவரைப் பற்றி ஏதேனும் செய்திகளை மக்காவில் கேட்டால், அதை நினைவில் வைத்துக் கொண்டு இருள் சூழ்ந்தவுடன் இருவரிடமும் சென்று அந்தச் செய்தியை எடுத்துரைப்பார்.

    அபூபக்கரின் பணியாளர் ஆமிர் இப்னு புகைரா அங்கு ஆடுகளை மேய்த்து விட்டு பொழுது சாய்ந்தவுடன் இருவருக்கும் ஆட்டுப் பாலை கறந்து கொடுப்பார். இவ்வாறு மூன்று இரவுகள் அவர் இப்படிச் செய்து கொண்டிருந்தார்.

    நான்காம் நாள் நபிகளார் ‘தவ்ர்’ குகையில் இருந்து அபூபக்கரோடு வெளியேறினார்கள். பயணத்திற்காக இரண்டு ஒட்டகங்களை அபூபக்கர் ஏற்பாடு செய் திருந்தார். தடை பல கடந்து 8-வது நாள் அவர்கள் ‘குபா’ என்ற இடத்தை அடைந்தார்கள்.

    இந்த ஊர் மதீனாவில் இருந்து மூன்று மைல் தொலைவில் உள்ளது. இங்கு அன்சாரிகளான மதீனாவாசிகள் பலரின் குடும்பங்கள் வசித்து வந்தன.

    அவர்களிடையே அம்ர் பின் அவ்ப் (ரலி) அவர் களின் குடும்பம் மிகவும் சிறப்புற்றதாக விளங்கியது. குல்தும் பின் ஹதம் என்பவர் அதன் தலைவராக விளங்கினார். அவர்கள் வீட்டில் நான்கு நாட்கள் தங்கி இருந்தார்கள். இதற்கிடையே அலி (ரலி) அவர் களும் மக்காவைத் துறந்து குபா வந்து நபிகளாருடன் இணைந்து கொண்டார்கள்.

    குபாவில் தங்கி இருந்தபோது நபிகளார் செய்த முதல் பணி அங்கு ஓர் இறை இல்லத்தை நிர்மாணித்து அதில் தொழ வைத்தார்கள். குபாவில் கட்டப்பட்ட அந்த இறை இல்லமே, நபித்துவத்திற்குப் பிறகு இறையச்சத்தோடு கட்டப்பட்ட முதல் பள்ளியாகும்.

    மறுநாள் வெள்ளிக்கிழமை அன்று அங்கிருந்து புறப்பட்டார்கள். வழியில் ‘லுஹர்’ (பகல் நேரத் தொழுகை) தொழுகைக்கான நேரம் வந்து விட்டது.

    ‘பத்னுல் வாதி’ என்ற இடத்தில் அனைவரையும் ஒன்று சேர்த்து ‘ஜும்மா’ தொழுகையை நிறைவேற்றி மக்களிடையே நபிகளார் பேருரை நிகழ்த்தினார்கள். இதுவே முஸ்லிம்களின் முதல் ஜும்மா தொழுகை (வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகை) ஆகும். இந்தத் தொழுகையில் 100 பேர் பங்கேற்றனர்.
    நபி முஹம்மது இரவில் நடுநிசையில் தொழுகைக்காக வீட்டைவிட்டு வெளியேறி, பள்ளிக்குச் செல்லும்போது அவர் மீது பாய்ந்து அவரது கதையை முடிக்கக் குறைஷிகள் சதித்திட்டம் செய்திருந்தனர்.
    குறைஷிகளின் கொடுமையிலிருந்து தப்பிக்க ஒவ்வொரு முஸ்லிமும் நாடு துறந்து நழுவி மதீனாவிற்கு இடம்பெயர்ந்தனர். வியாபாரக் கூட்டங்கள் யமன் நாட்டிற்கோ ஷாம் (சிரியா) நாட்டிற்கோ செங்கடலின் கரை வழியாகச் செல்ல மதீனாவைத் தாண்டிச் சென்றே ஆக வேண்டும். வியாபாரத்தின் தலைநகராக விளங்கிய மதீனா பாதுகாப்பானதாகத் திகழ்ந்தது, வெவ்வேறு வகையில் முக்கியத்துவம் வாய்ந்த மதீனாவில் இஸ்லாமியர்கள் ஒன்று கூடுவது தங்களுக்கு மாபெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று குறைஷிகள் பயந்தனர்.

    இதற்கெல்லாம் மூலக் காரணமான நபி முஹம்மது (ஸல்) அவர்களை ஒழித்துக்கட்டத் தீர்மானித்தனர். நபித்துவத்தின் பதினான்காம் ஆண்டு நிறைவடைந்திருந்த நிலையில் நபிகளாரின் சகாப்தத்தை அஸ்தமிக்கக் குறைஷிகள் திட்டம் தீட்டினர். குறைஷிகளின் முக்கியப் பிரமுகர்கள் ஒன்றுகூடி ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆலோசனை வழங்கினர். ஒருவர் நபிகளாரை ஊரைவிட்டு வெளியேற்றி, தொலைதூரத்தில் விட்டுவிடுவோமென்றார்.

    அந்த யோசனை சரியல்ல “அந்த இடத்திலும் இஸ்லாமை பரப்பிவிடுவார்” என்று ஒருசிலர் மறுத்தனர். மற்றொருவர் “நபிகளாரைக் கடத்தி, ஓர் அறையில் அடைத்து, சாகும் வரை அப்படியே விட்டுவிடுவோம்” என்று ஆலோசனை கூறினார். அதையும் சிலர் மறுத்து, “அவருடைய தோழர்கள் கண்டுபிடித்து, நம்மை அழித்து அவரை விடுவித்துவிடுவர்” என்று கூறி வேண்டாமென்றனர்

    கொடிய எண்ணத்தின் உருவான அபூ ஜஹ்ல் கூறினான் “ஒரு நபர் முஹம்மத்தைக் கொன்றால்தானே பிரச்சனை? நாம் ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் ஒரு வீரனைத் தேர்வு செய்து, அவர்கள் அனைவருமாகச் சேர்ந்து முஹம்மதை கொன்றுவிட்டால், கொலை செய்தவர் பல கோத்திரத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் அவன் தோழர்களும் உறவினர்களும் முஹம்மதைக் கொன்ற முழு அரபு சமுதாயத்தினரையும் பழிவாங்க இயலாது. நாளடைவில் அவர்கள் மறந்தே போய்விடுவார்கள்” என்று அவன் சொன்ன திட்டத்தை அனைவரும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டனர். அதை எப்படி, எங்கு நிறைவேற்றுவது என்று பேசி திட்டமிட்ட பின் கலைந்து சென்றனர்.

    அல்லாஹ் ஜிப்ரீல் (அலை) அவர்களை, நபி முஹம்மது (ஸல்) அவர்களிடம் அனுப்பினான். “நபியே, நீங்கள் நாடு துறந்து ‘ஹிஜ்ரா’ செல்ல அல்லாஹ் அனுமதி தந்துவிட்டான். இன்று இரவு நீங்கள் வழக்கமாகத் தூங்கும் விரிப்பில் தூங்க வேண்டாம்” என்று நபிகளார் மக்காவைவிட்டு வெளியேறும் நேரத்தையும் அதற்கான வழிமுறைகளையும் வானவர் ஜிப்ரீல் கூறினார்.

    நபி முஹம்மது (ஸல்) முகத்தை மறைத்தவராக அபூ பக்கர் (ரலி) அவர்களின் வீட்டுக்கு வந்து, அபூ பக்கரின் அனுமதி பெற்று அவர்களின் வீட்டில் நுழைந்தார்கள். தங்களது பயணத் திட்டத்தைக் குறித்து விரிவாகச் சொன்னார்கள். உடனே அபூ பக்கர் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! நானும் உங்களுடன் வருகிறேன்” என்று கூறினார். நபிகளாரும் சரியென்று ஒப்புக் கொண்டார்கள்.

    அன்றிரவு நபிகளார் வழக்கமாகத் தூங்கும் விரிப்பில் அலீ (ரலி) அவர்களைப் படுக்கச் செய்து நபிகளாரது போர்வையைப் போர்த்திக் கொள்ளச் செய்தார்கள். அலீ (ரலி) அவர்களுக்கு எந்த ஆபத்தும் நேராது என்றும் நபிகளார் வாக்களித்தார்கள்.

    நபி முஹம்மது இரவில் நடுநிசையில் தொழுகைக்காக வீட்டைவிட்டு வெளியேறி, பள்ளிக்குச் செல்லும்போது அவர் மீது பாய்ந்து அவரது கதையை முடிக்கக் குறைஷிகள் சதித்திட்டம் செய்திருந்தனர்.

    “நபியே! உங்களைச் சிறைப்படுத்தவோ அல்லது உங்களைக் கொலை செய்யவோ அல்லது உங்களை ஊரைவிட்டு அப்புறப்படுத்தவோ நிராகரிப்பவர்கள் சூழ்ச்சி செய்து கொண்டிருந்த நேரத்தை நினைத்துப் பாருங்கள். அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர், அவர்களுக்கெதிராக அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். ஆனால், சூழ்ச்சி செய்பவர்களிலெல்லாம் அல்லாஹ்வே மிக மேலானவன்” என்ற திருக்குர்ஆனின் இறை வசனம் அருளப்பட்டது.

    அல்லாஹ் தான் நாடியதை செய்யும் ஆற்றல் உடையவன். அவனே பாதுகாப்பளிப்பவன்.
     
    திருக்குர்ஆன் 8:30, சீறா இப்னு ஹிஷாம்

    - ஜெஸிலா பானு.
    அதிகமான வணக்க வழிபாடு புரிபவர்களை கண்டும், தர்மங்களை தாராளமாக செய்பவர்களை கண்டும், இதை விட அதிகமாக நானும் இறைவழியில் ஈடுபடுவேன் என பொறாமைப்படவே இஸ்லாம் அனுமதிக்கின்றது.
    இல்லாமை, கல்லாமை, அறியாமை போன்ற துன்பம் தரும் ஆமைகளில், பெரும் தீங்கை தரும் ஆமை பொறாமையாகும்!

    இந்த பொறாமை வஞ்சக எண்ணத்தினால் ஏற்படுகிறது. உலக உண்மைகளைப் புரியாத வர்கள் பொறாமை என்ற நெருப்பில் விழுந்து விடுகிறார்கள்.

    நல்லறம் சார்ந்த வாழ்க்கையில் இருந்தும் பொறாமை மனிதனை புரட்டி போட்டுவிடுகின்றது; பொறாமைக்காரனின் நன்மைகள் கூட பொறாமையினால் அழிந்து போகின்றது என்பதை அண்ணலார் குறிப்பிடும்போது ‘நெருப்பு விறகை எரித்து கரித்து விடுவதைப் போன்று பொறாமை (என்ற நெருப்பு) நன்மைகளை அழித்து இல்லாமல் ஆக்கி விடுகின்றது’ என்றார்கள்.

    பொறாமை கொள்வது என்பது தன்னைத்தானே அழிவில் போட்டு கொள்வதோடு, அதனால் மற்றவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே தான் இறைவன் தனது திரு மறையில் இவ்வாறு பாதுகாவல் தேடச்சொல்கின்றான்:

    “இறைவா பொறாமைக்காரன் பொறாமைக் கொள்ளும் போது (ஏற்படும்) தீங்கைவிட்டும் (உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்)” (113:5).

    பொறாமையின் காரணமாகவும், எப்படியாவது முன்னேற வேண்டும் என்ற அடிப்படையில் யாரை வேண்டுமானாலும் இடித்து தள்ளிவிட்டு சாதிக்க வேண்டும் என்று முயல் வதுதான் இன்று எங்கு பார்த்தாலும் குற்றங்கள் அதிகமாகிவிட்டது.

    செல்வமும், செல்வாக்கும், அதிகாரமும், தவறான ஒன்றல்ல. ஆனால் அதனை நாம் நல்லவழியில் பெற வேண்டும். இல்லையென்றால் அது அழிவை கொண்டுவந்துவிடும்.

    உலக இச்சைகள் யாவும் எதனால் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது என்பதை அருள்மறை குர்ஆன் இவ்வாறு சுட்டிக் காட்டுகின்றது:

    ‘பெண்கள், ஆண்மக்கள், பொன், வெள்ளியினால் ஆன குவியல்கள், அடையாளமிடப்பட்ட குதிரைகள் (வாகனங்கள்), (ஆடு, மாடு, ஒட்டகம்) போன்ற கால்நடைகள், வேளாண்மை ஆகிய இச்சையூட்டும் (அம்சங்களை) நேசிப்பது மனிதர்களுக்கு அலங்காரமாக ஆக்கப்பட்டுள்ளது. இவை (யாவும்) உலக வாழ்வின் சுகப்பொருட்கள் ஆகும். ஆனால் ‘அல்லாஹ்’ அவனிடத்தில் தான் அழகிய தங்குமிடம் உள்ளது’ (திருக்குர்ஆன் 3:14)

    இதில் கூறப்பட்டுள்ள அலங்காரப் பொருட்கள் அனைத்தும் பல்வேறு வடிவங்களாக காட்சி தந்தாலும், அவற்றின் மூலம் மண் என்பதை மறந்துவிடக்கூடாது. மண்ணில் இருந்து தான் பல வகை வடிவங்களாக இப்பொருட்களை இறைவன் மாற்றி தந்துள்ளான். மீண்டும் அவைகள் மண்ணாகி போகும். எனவே இப்பொருட்களின் மீது நமது கவனத்தை அதிகப்படுத்தாமல் அதனை படைத்த இறைவனிடத்திலே நிலையான தங்குமிடத்தை பெறவே இவ்வுலகில் நாம் பாடுபடவேண்டும். இந்தக்கருத்தையே இந்த வசனம் நமக்கு அறிவுறுத்தி தருகின்றது.

    அழிந்து விடும் பொருட்களுக்காக ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்ள கூடாது. இன்னும் அதனை அடைந்தவர்களை கண்டு பொறாமைப்படவும் கூடாது. பொறாமை என்பது மனிதர்களை கொல்லும் நஞ்சாகவே உள்ளது.

    அத்தகைய பொல்லாங்கு மிக்க பொறாமையை யார் கைவிடுகிறார்களோ, அவர்கள் சொர்க்கவாதிகளாக மாறிவிடுகிறார்கள் என்பதற்கான வரலாற்று நிகழ்வு இது.

    ஒரு அன்சாரி தோழர் ஒளூ (கை, கால், முகம் ஆகியவற்றை சுத்தம்) செய்துவிட்டு, நனைந்த தாடியுடன் தனது இடக்கையில் செருப்பை பிடித்தவராக வந்து கொண்டிருந்தார். அவரைப் பார்த்த அண்ணலார் தன் அருகிலிருந்த தோழர்களிடம் கூறினார்கள், ‘நீங்கள் சொர்க்கவாதியை காண விரும்பினால் அவரை பார்த்துக் கொள்ளுங்கள். அவர் ஒரு சொர்க்கவாதி ஆவார்’ என்றார்கள்,

    அதனைக் கேட்ட அப்துல்லாஹ் இப்னு அமர் என்ற நபித்தோழர் ‘இத்தகைய பெரும் பாக்கியத்தை பெற அவர் எத்தகைய வணக்கம் புரிகிறார்’ என்பதை அறிய விரும்பினார்.

    அதனால் அவரது அனுமதியோடு அவருடன் சில நாட்கள் தங்கி அவரை கவனித்து வந்தார். வழக்கமாக வணக்கத்தை தவிர சிறப்பான எந்த வணக்க வழிபாடுகளையும் அவரிடத்தில் காணமுடியவில்லை. எனவே அந்த அன்சாரி தோழரிடமே அவரது உயர் தகுதிக்கான காரணத்தை கேட்டபோது அவர் கூறினார், ‘நான் எந்த முஸ்லிம் மீதும் வஞ்சக எண்ணம் (கபடம்) வைப்பதில்லை. இன்னும் யாருக்காவது இறைவன் தனது பாக்கியத்தை (செல்வத்தை) அதிகம் அளித்திருந்தால் அதைக் கண்டு நான் பொறாமை கொள்வதுமில்லை. இது என் வழக்கத்தில் உள்ள ஒன்றாகும்’ என்றார்கள்.

    அதுகேட்டு அப்துல்லாஹ் (ரலி), ‘இந்த வழக்கத்தின் காரணமாகவே நீர் சொர்க்கவாதி என்ற உயர்ந்த பாக்கியத்தை அடையப் பெற்றீர்’ என்றார்கள்.

    பொறாமை தான் சொர்க்கத்தை அடைய பெரும் தடையாக உள்ளது என்பதை இதன் மூலம் நாம் அறிந்து கொள்ள முடிகின்றது.

    அதிகமான வணக்க வழிபாடு புரிபவர்களை கண்டும், தர்மங்களை தாராளமாக செய்பவர்களை கண்டும், இதை விட அதிகமாக நானும் இறைவழியில் ஈடுபடுவேன் என பொறாமைப்படவே இஸ்லாம் அனுமதிக்கின்றது. கேடு விளைவிக்கும் பொறாமைகள் அனைத்தையும் கைவிடவே இஸ்லாம் வலியுறுத்துகின்றது.

    அன்பை இதயத்தில் நிறைத்து விடும் போது பொறாமை என்பது இருந்த இடம் தெரியாமல் போய்விடுகின்றது. அன்பு அதிகமானால் எதற்கெடுத்தாலும் எதிர்த்து நிற்கும் தன்மை ஏற்படாது. இன்னும் பிறரிடத்தில் அதிக எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தாது.

    மு. முகம்மது சலாகுதீன், ஏர்வாடி, நெல்லை மாவட்டம்.
    நபி (ஸல்) அவர்களும் ஹிஜ்ராவிற்குண்டான எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு அல்லாஹ்வின் கட்டளையை எதிர்பார்த்திருந்தார்கள்.
    அகபாவின் இரண்டாவது உடன்படிக்கைக்குப் பிறகு மக்காவில் முஸ்லிம்களில் நிலை மேலும் மோசமடைந்தது. ஒருவர் இஸ்லாமை ஏற்றுக் கொண்டார் என்று தெரிந்தாலே அவரைக் குறைஷிகள் துன்புறுத்தத் தொடங்கினர். இஸ்லாமை ஏற்றுக் கொண்டதோடு மட்டுமல்லாமல் நாடு துறந்து செல்கிறார்கள் என்று தெரிந்து கொண்டால் அவர்களைத் தடுத்து, குறைஷிகள் அவர்களுக்குப் பல கொடுமைகளை நிகழ்த்தினர்.

    தங்களுடைய மார்க்கத்தைக் காப்பாற்றிக் கொள்ள மக்கள் தம் சொந்த மண்ணை விட்டு வெளியேறினர். போகுமிடத்தில் எதிர்கொள்ள வேண்டியவைகளைப் பற்றிக் கவலைப்படாமல் இறைவனின் மீது நம்பிக்கை வைத்து, தாங்கள் சம்பாதித்த எல்லா உடைமைகளையும் விட்டுவிட்டு, சொந்த நாட்டைத் துறந்து சென்றனர்.

    உமர் இப்னு கத்தாப் மற்றும் அய்யாஷ் இப்னு அபூ ரபீஆ இருவரும் மக்காவிலிருந்து வெளியேறி குபாவென்ற இடத்தில் தங்கியிருந்தனர். அதை அறிந்து கொண்ட இணை வைப்பாளரான அபூ ஜஹ்ல் அங்கு வந்து, தனது தாய் வழி சகோதரரான அய்யாஷிடம் “உன் தாய் உன்னைக் காணாமல் தவிக்கிறார். நீ வந்தால்தான் தன் தலை முடியைக் கட்டுவேன் என்று சபதமெடுத்துச் சத்தியம் செய்து, உன் வரவை எதிர்பார்த்து காத்திருக்கிறாள்” என்று கூறினார். அபூ ஜஹ்ல் சொன்னதை அப்படியே நம்பிய அய்யாஷ் தன்னைக் காணாமல் தவிக்கும் தாயிடம் திரும்பிச் செல்லத் தயாரானார். இதில் ஏதோ சதி திட்டமுள்ளது என்று உமர் (ரலி) அய்யாஷை எச்சரித்து தடுத்துப் பார்த்தார். ஆனால் அய்யாஷ், தன் தாய் மீதான பிரியத்தில் எதையும் சந்திக்கத் தயாரென்பது போல் அபூ ஜஹ்லுடன் சென்றுவிட்டார்.

    போகும் வழியிலேயே அய்யாஷின் மீது அபூ ஜஹல் பாய்ந்து, அவரைக் கட்டி வைத்து சித்தரவதைப்படுத்தினார். இணை வைக்கும் குறைஷிகள் அய்யாஷை மக்காவின் வீதிக்கு மீண்டும் கொண்டு வந்து “மக்களே, இஸ்லாமை ஏற்று ‘ஹிஜ்ரா’ அதாவது நாடு துறப்பவரின் நிலை இதுதான்” என்று மற்ற மக்காவாசிகளிடம் எச்சரிக்கை விடுத்தனர்.

    அய்யாஷைப் போலவே ஹிஷாமும் குறைஷிகளின் பிடியில் சிக்கிக் கொண்டார். யாராவது ஹிஜ்ரா செய்கிறார் என்று தெரிந்தாலே அவர்களைப் பிடித்துத் துன்புறுத்தி வந்தனர் குறைஷிகள். இவ்வளவு தொந்தரவுகள் இருந்தும் முஸ்லிம்கள் ஒவ்வொருவராக நழுவி மதீனாவைச் சென்றடைந்தனர். இப்படியாக அகபாவின் இரண்டாவது உடன்படிக்கைக்குப் பிறகு பல முஸ்லிம்கள் மக்காவைவிட்டு வெளியேறி மதீனாவிற்குச் சென்றனர். ஹபஷாவிற்குச் சென்றிருந்த முஸ்லிம்களும் மதீனாவிற்குத் திரும்பினர்.

    உலகமெல்லாம் நபியவர்களைப் பொய்யர் எனக் கூறிய போது உண்மையாளர் என்று ஏற்றவர் அபூ பக்கர் (ரலி) அவர்கள். முஸ்லிம் சமுதாயத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அபூ பக்கர் (ரலி) நேசித்த அளவுக்கு வேறு எவரும் நேசிக்க முடியாத அளவுக்கு நபியவர்களுக்கு நெருக்கமானவர். அதனால் அபூ பக்கர் ஹிஜ்ரா செய்யாமல் நபிகளாருடன் மக்காவில் இருந்தார்கள்.

    இந்த நேசத்துடன் நெருக்கமான சொந்தமும் ஏற்பட வேண்டும் என்ற காரணத்தால் அபூ பக்கர்(ரலி), தம் மகள் ஆயிஷா (ரலி) அவர்களை மனமகிழ்வுடன் நபிகளாருக்குத் திருமணம் செய்து வைத்தார்கள். நபி முஹம்மது (ஸல்) அவர்களுடன் அபூ பக்கர் (ரலி), அலீ (ரலி) மற்றும் சிலரே மக்காவில் இருந்தனர். அவர்களும் மக்காவைவிட்டு வெளியேற எல்லாத் தயாரிப்புகளுடனும் நபிகளாரின் கட்டளைக்காகக் காத்திருந்தனர்.

    நபி (ஸல்) அவர்களும் ஹிஜ்ராவிற்குண்டான எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு அல்லாஹ்வின் கட்டளையை எதிர்பார்த்திருந்தார்கள்.

    (ஆதாரம்: சீறா இப்னு ஹிஷாம், அர்ரஹீக் அல்மக்தூம்)

    - ஜெஸிலா பானு.
    “நபி (ஸல்) அவர்கள் மரணம் அடைந்து விட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ் என்றென்றும் உயிருடன் இருப்பவன்; மரணிக்க மாட்டான்”
    நபிகளாருக்கு ஏற்பட்ட கடுமையான நிலைமையைக் கண்ட பாத்திமா (ரலி) அவர்கள், “என் தந்தைக்கு ஏற்பட்ட கஷ்டமே” என்று வேதனைப்பட்டார்கள். “உன் தந்தைக்கு இன்றைக்குப் பிறகு கஷ்டமே இருக்காது” என்று நபிகளார் ஆறுதல் கூறினார்கள்.

    நபிகளார் தன் பேரன்மார்கள் ஹசன், ஹுசைனை வர வழைத்து அவர்களை முத்தமிட்டார்கள். அவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ளுமாறு பாத்திமாவை அறிவுறுத்தினார்கள். பின்னர் மனைவிமார்களை அழைத்து அவர்களுக்கு உபதேசமும், அறிவுரையும் நல்கினார்கள்.

    சற்று நேரத்தில் ஆயிஷாவின் சகோதரர் அப்துல் ரஹ்மான் (ரலி) வந்தார்கள். அவர் கையில் பல் துலக்கும் ஈரமான (பேரிச்சங்)குச்சி இருந்தது. அந்தக் குச்சியால் நபிகளார் பல் துலக்கி முடித்தவுடன், தம் கையை உயர்த்தினார்கள். அவர்களது பார்வை முகட்டை நோக்கியது. அவர்களது உதடுகள் அசைந்தன. அவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை ஆயிஷா செவி தாழ்த்திக் கேட்டார்கள்.

    நபிகளார், ‘இறைவா! என்னை மன்னித்து எனக்குக் கருணை புரிவாயாக! (சொர்க்கத்தில்) என்னை (உயர்ந்த) தோழர்களுடன் சேர்த்தருள்வாயாக!” என்று கூறினார்கள்.

    அப்போது உயர்த்திய அவர்களின் கைகள் சாய்ந்தன. உயர்ந்தோனிடன் அவர்கள் சென்றார்கள். ஆயிஷா (ரலி) அவர்களின் முகவாய்க்கும் நெஞ்சுக்கும் இடையே தலை சாய்ந்தபடி நபிகளார் மரணம் அடைந்தார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் - நாம் இறைவனிடம் இருந்தே வந்தோம்; அவனிடமே செல்ல வேண்டியவர்களாக இருக்கிறோம்.)

    ஹிஜ்ரி 11-ம் ஆண்டு ரபியுல் அவ்வல் பிறை 12 திங்கட் கிழமை முற்பகல் முடியும் நேரத்தில் அவர்களுக்கு மரணம் ஏற்பட்டது. அப்போது நபிகளாருக்கு 63 வயது 4 நாட்கள் ஆகி இருந்தன.

    நபிகளார் மரணம் அடைந்த செய்தி எங்கும் பரவியது. ஒளி விளக்கு அணைந்ததால், மதீனா மாநகரம் இருண்டது.

    செய்தி கேட்ட உமர் (ரலி) அவர்கள் எழுந்து நின்று, “சில நயவஞ்சகர்கள் நபி (ஸல்) இறந்து விட்டதாக நினைக்கின்றனர். நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் மரணிக்கவில்லை. நபி மூஸா (அலை) அவர்கள் இறைவனைச் சந்திக்கச் சென்று நாற்பது நாட்கள் தமது சமூகத்தாரை விட்டு மறைந்திருந்தபோது மூஸா மரணம் அடைந்து விட்டதாக எண்ணினார்கள். ஆனால் நபி மூஸா திரும்பி வந்தார்கள். அவ்வாறே நபிகளாரும் இறைவனைச் சந்திக்க சென்று இருக்கிறார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! நபி (ஸல்) நிச்சயம் திரும்ப வருவார்கள். தான் மரணித்து விட்டதாகக் கூறியவர்களின் கைகளையும், கால்களையும் வெட்டுவார்கள்” என்று கூறினார்கள்.

    இந்த சமயத்தில் அபூபக்கர் (ரலி) அவர்கள் ‘மஸ்ஜிதுந் நபவி’ (நபிகளார் கட்டிய மசூதி) பள்ளிவாசலில் இருந்து சற்று தூரத்தில் உள்ள வீட்டில் தங்கி இருந்தார்கள். இந்த துக்கமான செய்தியைக் கேட்டவுடன், தனது குதிரையில் ஏறி அங்கு வந்தார்கள். யாரிடமும் பேசாமல் நபிகளாரைக் காண்பதற்காக ஆயிஷாவின் அறை நோக்கி நடந்தார்கள்.

    நபிகளாரின் உடல் யமன் நாட்டு ஆடை ஒன்றால் போர்த்தப்பட்டிருந்தது. நபிகளாரின் முகத்தில் இருந்த துணியை நீக்கி, அவர்களின் முகத்தின் மீது தன் தலையைக் கவிழ்த்து அவர்களை அபூபக்கர் முத்தமிட்டு அழுதார்கள். “என் தாயும் தந்தையும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். அல்லாஹ் தங்களுக்கு இரண்டு மரணத்தைத் தரமாட்டான். அல்லாஹ் உங்களுக்கு விதித்த முதல் மரணத்தையே நீங்கள் அடைந்து கொண்டீர்கள்” என்று கூறினார்கள்.

    பின்னர் அறையில் இருந்து வெளியேறி பள்ளிவாசலுக்கு வந்தார்கள். அங்கு உமர் (ரலி) மக்களிடம், ‘நபிகளார் இறக்கவில்லை’ என்று கோபமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். இதைக் கன்டதும் “உமரே! அமருங்கள்” என்று அபூபக்கர் கூறியும் அவர் உட்கார மறுத்து விட்டார்.

    அபூபக்கர் சொற்பொழிவு மேடையில் ஏறி, “நபி (ஸல்) அவர்கள் மரணம் அடைந்து விட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ் என்றென்றும் உயிருடன் இருப்பவன்; மரணிக்க மாட்டான்” என்று கூறினார்கள்.

    தொடர்ந்து, “முகம்மது (நபி) ஒரு தூதரேயன்றி (இறக்காமல் இருக்கக் கூடிய இறைவன்) அல்ல. அவருக்கு முன்னரும் (இவ்வாறே) பல தூதர்கள் சென்றிருக்கின்றனர். அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டால் நீங்கள் புறங்காட்டிச் சென்று விடுவீர்களோ? (அவ்வாறு) எவரேனும் புறங்காட்டி சென்று விட்டால் அதனால் அவன், அல்லாஹ்வுக்கு ஒன்றும் நஷ்டம் உண்டாக்கி விடமாட்டான். நன்றி அறிபவர்களுக்கு அல்லாஹ் அதி சீக்கிரத்தில் (நற்)கூலியைத் தருவான்” (திருக்குர்ஆன்-3:144) என்ற இறை வசனத்தை எடுத்துச் சொன்னார்கள்.

    இதைக் கேட்டதும் அங்கு கூடி இருந்த மக்களும் அந்த இறை வசனத்தைத் திரும்பத் திரும்ப ஓதிக்கொண்டே இருந்தார்கள்.

    நபிகளாரை அடக்கம் செய்வதற்கு முன்னதாக ‘கலீபா’வை (ஜனாதிபதி) நியமிக்கும் பணி நடைபெற்றது. ஒருமனதாக அபூபக்கர் (ரலி) அவர்கள் கலீபாவாக தேர்வு செய்யப்பட்டார்கள். இந்தப் பணியில் திங்கட்கிழமை கழிந்தது. அதுவரை நபிகளாரின் உடல் இருந்த அறையை அவரது குடும்பத்தார் மூடி வைத்திருந்தனர்.

    மறுநாள் செவ்வாய்க்கிழமை பகலில், இலந்தை இலை கலந்த நீரால் மும்முறை குளிப்பாட்டினார்கள். நபிகளாரை வெள்ளை நிற யமன் நாட்டு பருத்தி ஆடையினால் (கபன்) போர்த்தினார்கள். அதில் தைக்கப்பட்ட சட்டையோ, தலைப்பாகையோ எதுவும் இல்லை.

    நபிகளாரை எங்கு அடக்கம் செய்வது என்ற கேள்வி எழுந்தது. அப்போது அபூபக்கர் (ரலி) அவர்கள், “இறைத்தூதர் களின் உயிர் எங்கு பிரிகிறதோ அங்குதான் அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள் என்று நபி (ஸல்) கூற நான் கேட்டிருக்கிறேன்” என்றார்கள்.

    இதன்படி நபிகளார் மரணித்த இடத்தில் உள்ள விரிப்பை அகற்றி அங்கே குழி தோண்டினார்கள். இதன்பிறகு குடும்பத்தாரும், நபித்தோழர்களும், பெண்களும், சிறுவர்களும் பத்து பத்து பேர்களாகச் சென்று நபிகளாரின் அறையில் ‘ஜனாஸா’ தொழுகையை (இறந்தோருக்காக தொழுவிக்கப்படும் இறுதித் தொழுகை) தொழுதார்கள். பின்னர் நபிகளாரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
    மதீனாவில் வாழும் முஸ்லிம்கள் மக்காவில் வாழும் தன் முஸ்லிம் சகோதரன் துன்புறுத்தப்படுகிறான் என்பதை அறிந்தால் அவருக்காகப் பதறினர், வேதனைப்பட்டனர்.
    மதீனாவைச் சேர்ந்த கஸ்ரஜ் கிளையினருடன் இரவில் இரகசியமாக நடந்த உடன்படிக்கையைப் பற்றி அறிந்து கொண்ட மக்காவாசிகள் வேதனையடைந்தனர். அதுபோன்ற உடன்படிக்கைகள் ஏற்பட்டால் அதன் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என்று அஞ்சினர். இந்த உடன்படிக்கையின் மீதான எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் மறுநாள் காலையில் மக்காவாசிகள் கூடினர்.

    “எங்கள் மீது போர் தொடுக்க நீங்கள் உடன்படிக்கை செய்கின்றீர்களா?” என்று மக்காவாசிகள் நேரடியாகக் கேட்க, மதீனாவாசிகளில் இரவில் நடந்த ஒப்பந்தம் குறித்து எதுவும் அறியாத இணை வைப்பவர்கள் “அப்படி எந்த உடன்படிக்கையும் நடக்கவில்லை. நீங்கள் ஏதோ தவறான செய்தியைக் கேட்டுள்ளீர்கள்” என்று சொன்னதைக் கேட்டு மக்காவாசிகள் திரும்பினாலும், அவர்களுக்குச் சந்தேகம் இருந்துவந்தது.

    இஸ்லாமைத் தழுவியவர்களை அடையாளம் கண்டு கொண்டு அவர்களைப் பிடிப்பதற்கு விரைந்தனர். ஆனால் நபிகள் நாயம் (ஸல்) அவர்களின் கட்டளையின்படி அவர்கள் மக்காவை விட்டுத் தங்கள் நகரத்திற்கு விரைந்து கொண்டிருந்தனர். அதில் ஸஅது (ரலி) என்பவர் மட்டும் குறைஷிகளின் பிடியில் சிக்கிக் கொண்டார். அவரை வாகனத்தின் பின் கட்டி இழுத்தபடி கொண்டுவந்து அடித்துத் துன்புறுத்தினர். குறைஷிகளில் ஒருவர், ஸஅத்துடன் நெடுங்கால வியாபார நட்பில் இருந்ததைச் சொல்லி அவரை விடுவித்து அனுப்பி வைத்தார்.

    இதற்கிடையே, ஸஅதைக் காணவில்லை என்பதை அறிந்த மதீனாவாசிகள், அவரை மீட்க நடவடிக்கை எடுத்துக் கொண்டிருந்தனர். ஆனால் அடிபட்டவராக ஸஅது (ரலி) மதீனா நகரம் வந்து சேர்ந்தார்.

    அகபாவின் மாபெரும் உடன்படிக்கை முஸ்லிம்களை ஒன்றிணைத்தது. மதீனாவில் வாழும் முஸ்லிம்கள் மக்காவில் வாழும் தன் முஸ்லிம் சகோதரன் துன்புறுத்தப்படுகிறான் என்பதை அறிந்தால் அவருக்காகப் பதறினர், வேதனைப்பட்டனர்.

    இறைநம்பிக்கை என்ற ஒற்றைப் புள்ளி அவர்களை இணைத்தது.

    -ஜெஸிலா பானு.
    ×