என் மலர்tooltip icon

    இஸ்லாம்

    ஹஜ் கடமையை நிறைவேற்றிய பிறகு இந்த உலக வாழ்க்கையில் இருந்தும், அதில் வாழ்பவர்களிடம் இருந்தும் விடைபெறும் அறிகுறிகள் நபிகளாரின் உள்ளத்தில் தோன்றின.
    ஹஜ் கடமையை நிறைவேற்றிய பிறகு இந்த உலக வாழ்க்கையில் இருந்தும், அதில் வாழ்பவர்களிடம் இருந்தும் விடைபெறும் அறிகுறிகள் நபிகளாரின் உள்ளத்தில் தோன்றின.

    முகரம் முடிந்து ஸபர் மாதம் பிறந்தது. அந்த மாதத்தின் தொடக்கத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘உஹத்’ என்ற இடத்திற்குச் சென்றார்கள்.

    உஹத் என்பது மதீனாவுக்கு வடக்கே மூன்று மைல் தொலைவில் அமைந்துள்ள ஒரு மலை. ஹிஜ்ரி 3-ம் ஆண்டு (கி.பி.625) ஷவ்வால் மாதத்தின் மத்தியில் முஸ்லிம் களுக்கும் இறை மறுப்பாளர்களுக்கும் இடையே நடந்த யுத்தம் ‘உஹத் போர்’ எனப்படுகிறது.

    உஹத் யுத்தம் நடந்த இடத்தில், அந்தப்போரில் இறந்தவர்களுக்காக இறைவனிடம் இறைஞ்சித் தொழுதார்கள். நபிகளாரின் இந்தச் செயல், இருப்போருக்கும் இறந்தோருக்கும் விடை கூறுவது போல அமைந்தது.

    பின்பு பள்ளிவாசலுக்கு வந்து சொற்பொழிவு மேடையில் (மிம்பர்) ஏறி நின்று, “நான் உங்களுக்கு முன்பு செல்கிறேன். நான் உங்களுக்குச் சாட்சியாளன். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் தற்போது எனது நீர் தடாகத்தைப் பார்க்கிறேன். எனக்குப் பூமியில் உள்ள பொக்கிஷங்களின் சாவிகள் கொடுக்கப்பட்டன. எனக்குப் பின்பு நீங்கள் இணை வைப்பவர்களாக மாறி விடுவீர்கள் என்று நான் அஞ்சவில்லை. இந்த உலகத்திற்காக நீங்கள் சண்டையிட்டுக் கொள்வீர்களோ என்றுதான் நான் அஞ்சுகிறேன்” என்றார்கள்.

    ஹிஜ்ரி 11-ம் ஆண்டு ஸபர் மாதம் இறுதியில் ஒருநாள். இறந்த ஒருவரின் உடலை நல்லடக்கம் செய்து விட்டு திரும்பும் வழியில் நபிகளாருக்குக் கடுமையான தலைவலி ஏற்பட்டது. உடல் சூடு அதிகமானது. தலையில் கட்டி இருந்த துணிக்கு மேல்புறத்திலும் வெளிப்பட்ட அனலை உடனிருப்போர் உணர முடிந்தது. நோய்வாய்ப்பட்ட நிலையிலேயே சில நாட்கள் மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள்.

    மரணம் அடைவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பு புதன்கிழமை அன்று, அவர்கள் உடல் நெருப்பாய் கொதித்தது. வலியும் அதிகமானது. அன்றைய தினம் நன்றாக குளித்தார்கள். இதனால் சூடு தணியக் கண்டார்கள். தலையில் தடிப்பான துணியைக் கட்டிக் கொண்டு போர்வையைப் போர்த்தியவர்களாகப் பள்ளிவாசல் சென்றார்கள். மேடையில் நின்று சொற்பொழிவு ஆற்றினார்கள். இதுவே அவர்கள் நிகழ்த்திய கடைசி சொற்பொழிவாகும்.

    “இந்த உலகில் உள்ளவற்றை உங்களுக்கு வழங்கட்டுமா? அல்லது மறுமையில் என்னிடம் உள்ளவற்றை உங்களுக்குத் தரட்டுமா? என்று ஓர் அடியாரிடம் இறைவன் கேட்டான். ஆனால் அந்த அடியாரோ மறுமையில் உள்ள இறைக் கொடைகளையே தேர்ந்தெடுத்துக் கொண்டார்” என்று நபிகளார் கூறினார்கள்.

    நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மறைமுகமாக எதைக் குறிப்பிடுகிறார்கள் என்பதைப் புரிந்து கொண்ட நபித்தோழர் அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள் அழத்தொடங்கினார்கள்.

    மேலும் நபிகளார், “தனது நட்பாலும் பொருளாலும் எனக்கு மக்களில் அதிகமதிகம் உபகாரம் செய்தவர் அபூபக்கர் ஆவார். என் இறைவனே! உன்னைத் தவிர மற்ற எவரையும் உற்ற நண்பனாக ஆக்கிக் கொள்வதாக இருந்தால் அபூபக்கரை உற்ற நண்பனாக ஆக்கி இருப்பேன். இருந்த போதிலும் அவருடன் இஸ்லாமிய சகோதரத்துவமும் அதன் நேசமும் எனக்கு இருக்கிறது”.

    “மக்களே! உங்களுக்கு முன்னர் வாழ்ந்த சமுதாயங்கள் தம் இறைத்தூதர்களின் மண்ணறைகளை வணக்கத்தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள். இதோ பாருங்கள், நீங்கள் அத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது. நான் உங்களை அதனை விட்டும் தடுத்துச் செல்கின்றேன்” என்றார்கள்.

    மரணத்திற்கு நான்கு நாட்களுக்கு முன்பு நோயின் கடுமை கொடுமையாக இருந்தபோதிலும், அந்தி நேரத் தொழுகை (மக்ரிப்) வரை அனைத்தையும் நபிகளாரே தொழ வைத்தார்கள். இரவில் நோயின் வேகம் அதிகமானது. இஷா (இரவு நேரத்தொழுகை) தொழுகையில் அவர்களால் கலந்து கொள்ள முடியவில்லை. இதனால் அபூபக்கரை தொழ வைக்கும்படி கூறினார்கள். அதில் இருந்து பதினேழு நேரத்தொழுகைகளை அபூபக்கர் மக்களுக்குத் தொழ வைத்தார்கள்.

    திங்கட்கிழமை அன்று அபூபக்கர் அவர்களைப் பின் தொடர்ந்து ‘சுபுஹு’ (அதிகாலைத் தொழுகை) தொழுகையை முஸ்லிம்கள் தொழுது கொண்டிருந்தனர். அப்போது ஆயிஷா (ரலி) அவர்களின் அறையின் திரையை நபிகளார் விலக்கி, பெருந்திரளான மக்கள் தொழுகையில் நிற்பதைக் கண்டு மகிழ்ச்சி கொண்டார்கள்.

    தொழ வைப்பதற்குத்தான் நபிகளார் வருகிறார்கள் என்று எண்ணிய அபூபக்கர், தொழ வைக்கும் இடத்தில் இருந்து சற்று பின்னால் வரிசையை நோக்கி நகர்ந்தார்கள். நபிகளார் வருகை அவர்களுக்கு ஆனந்தத்தை அளித்தது.

    ஆனால் நபிகளாரோ, “உங்கள் தொழுகையை முழுமைப்படுத்திக் கொள்ளுங்கள்” என்று கூறி விட்டு அறையில் நுழைந்து திரையிட்டுக் கொண்டார்கள். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இன்னொரு தொழுகை நேரம் நபிகளாருக்குக் கிடைக்கவில்லை.

    அன்றைய தினம் முற்பகலில் மகள் பாத்திமா (ரலி) அவர்களை வரவழைத்து நபிகளார் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு கட்டத்தில் பாத்திமா அழுதார்கள். மீண்டும் இன்னொரு செய்தியைக் கூறவே, பாத்திமா சிரித்தார்கள்.

    இதைப் பற்றி பின்னாளில் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:-

    “இந்த நிகழ்ச்சி பற்றி பின்பு ஒருநாள் பாத்திமாவிடம் விசாரித்தோம். எனக்கு ஏற்பட்ட அந்த (நோயின்) வலியால் நான் இறந்து விடுவேன் என்று இறைத்தூதர் கூறியபோது நான் அழுதேன். அவர்களது குடும்பத்தாரில் நான்தான் முதலில் அவர்களைப் பின்தொடர்ந்து (உலகைப் பிரிந்து) செல்ல இருப்பவள் என்ற செய்தியைக் கூறியபோது சிரித்தேன் என்று பாத்திமா பதில் அளித்தார்கள்”.

    பாத்திமா மைந்தன்
    அன்பு, பரிவு, பாசம், கருணை, இரக்கம், இன்பம் இன்னும் பிறவற்றை உணர்ந்து கொள்ளவும் அனுபவிக்கவும் அல்லாஹ்வால் அருளப்பட்ட மிகப்பெரிய பாக்கியம் பெண்மை.
    திருக்குர்ஆனும், நபிகளாரும் பெண்மையைப் போற்றிய அளவிற்கு வேறு யாரும், எந்த வேதமும் பெண்மையின் உரிமையை, உயர்வை, உயர்த்தி உரக்க சொன்னது இல்லை.

    ஒரு மனிதனின் வாழ்வில் மூன்று நிலைகளில் தன்னுடைய ஆதிக்கத்தை பெண் செலுத்துகிறாள். அது-தாய், மனைவி, மகள். இந்த மூன்று நிலைகளிலும் பெண்களுக்குரிய அந்தஸ்தும், அதிகாரமும் எவை என்பது திருக்குர்ஆனில் அருளப்பட்டுள்ளது. இது பெண்களுக்கே உரிய தனிச்சிறப்பு ஆகும்.

    ஆதி காலத்தில் அரபு நாடுகளில் பெண் சிசுக்களை அழிப்பது நடைமுறையில் இருந்தது. அப்போது அவர் களின் மனதில் அன்பையும், பாசத்தையும் விதைத்து பக்குவப்படுத்த இறைவனால் அருளப்பட்டது தான் இந்த இறைவசனம்:

    ‘மனிதர்களே! நீங்கள் வறுமைக்கு பயந்து உங்கள் குழந்தைகளை கொலை செய்து விடாதீர்கள். நாம் தான் அவர்களுக்கும், உங்களுக் கும் உணவளிக்கிறோம். அவர்களை கொலை செய்வது நிச்சயமாக அடாத பெரும் பாவமாகும்’ (திருக்குர்ஆன் 17:31)

    குழந்தையாய் கையில் தவழ்ந்தவள், வளர்ந்து மலர்ந்து மங்கையாய் நிற்கும் போதும் அவளின் தன்மானத்தை தழைத்தோங்கச் செய்ததும் இஸ்லாம் தான். பெண்கள் இல்லாத உலகம் சூனியப்பட்டு போகும். இன விருத்திக்கு ஏற்புடைய சூழ்நிலை இல்லாமல் மனித இனம் மாண்டுபோகும். உலகம் படைக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறாத நிலை உருவாகும். எனவே ஆண்களைப் போன்று பெண்களுக்கும் எல்லா உரிமைகளும் உண்டு என்று 1438 ஆண்டுகளுக்கு முன்பே பறைசாட்டியது இஸ்லாம் என்ற உன்னத மார்க்கம் தான்.

    எந்த மதமும், மார்க்கமும், கொடுக்காத வாரிசு உரிமையை பெண்களுக்கு வழங்கியது இஸ்லாம். ‘சூரத்துல் அன்னிஸா’ என்ற ஓர் அத்தியாயம் பெண்ணுரிமைப் பற்றி மிக தெளிவாக பேசுகிறது.

    ‘இறந்துபோன தாயோ, தந்தையோ, உறவினர்களோ, விட்டுபோன பொருட்களில் அவை அதிகமாகவோ, கொஞ்சமாகவோ இருந்த போதிலும் ஆண்களுக்கும் பாகமுண்டு. அவ்வாறே தாயோ, தந்தையோ, உறவினர்களோ விட்டுச் சென்ற பொருட்களில் அவை அதிகமாகவோ, கொஞ்சமாகவோ இருந்த போதிலும் பெண்களுக்கும் பாகமுண்டு. இது அல்லாஹ்வால் ஏற்படுத்தப்பட்ட பாகமாகும்’. (திருக்குர்ஆன் 4:7)

    சொத்துரிமையை பெண்களுக்கு சட்டபூர்வமாக்கி அதிகாரத்தை வழங்கியதும் இஸ்லாம் தான். அதோடு எத்தனை விகிதத்தில் அது வழங்கப்பட வேண்டும் என்று வரையறுத்து சொல்லியதும் இஸ்லாம் தான்.

    பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்ட நிலையை முறியடித்து ஆணுக்கு இணையான எல்லா கல்வியையும் கற்க வழி வகுத்து தந்தது இஸ்லாம் தான்.

    திருக்குர்ஆனில் இன்னுமொரு இடத்தில், ‘ஆண்கள் சம்பாதித்தவை ஆண்களுக்குரியது. பெண்கள் சம்பாதித்தது பெண்களுக்குரியது. ஆகவே ஆண்-பெண் ஒவ்வொருவரும் உழைப்பின் மூலம் அல்லாஹ்வுடைய அருளைக்கோருங்கள். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்’ (4:32) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த வசனம் நமக்கு சொல்லித்தரும் செய்தி என்னவென்றால், ஆண்களுக்கு இணையாக பெண்களும் தங்கள் வாழ்வாதாரங்களைத் தேடிக்கொள்ளலாம். கணவனின் அனுமதியோடு, ஷரிஅத் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு அது இருக்க வேண்டும். அப்படி அவர்கள் சம்பாதித்தவற்றில் முழு உரிமை அவர்களுக்கு உண்டு.

    அதுபோல, திருமண வயதை அடைந்து விட்டால், பெற்றோர் வழிகாட்டுதலுடன், தனக்கான துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையும் பெண்களுக்கு இஸ்லாம் வழங்கியுள்ளது. அதுபோல, தன் மனதிற்கு பிடிக்காத மணமகனை நிராகரிக்கும் உரிமையும் அவர்களுக்கு உண்டு.

    ஒரு பெண் கணவனோடு வாழ முடியாது என்று கருதும் பட்சத்தில் அவனை விட்டு விலகி மணவிலக்கு பெறும் சட்ட பாதுகாப்பையும் பெண்களுக்கு வழங்கியுள்ளது இஸ்லாம்.

    அது மட்டுமல்ல, ஒரு பெண்ணை ஒரு ஆண் திருமணம் செய்ய விரும்பினால், மணமகளுக்கென விதிக்கப்பட்ட ‘மஹர்’ தொகையைச் செலுத்திய பிறகே அவளை மணமுடிக்க முடியும். அந்த ‘மஹர்’ தொகையை நிர்ணயிக்கும் உரிமை அந்த மணமகளுக்கு உள்ளது.

    இதையே திருக்குர்ஆன் (4:4) ‘நீங்கள் திருமணம் செய்தால் பெண்களுக்கு அவர்களுடைய மஹரை கண்ணியமான முறையில் கொடுத்து விடுங்கள்’ என்று வலியுறுத்திக்கூறுகிறது.

    அதுபோல விதவை மறுமணத்தையும் வலியுறுத்துகிறது இஸ்லாம். இதையே திருக்குர்ஆன் (24:32) இவ்வாறு குறிப்பிடுகிறது:

    ‘ஆணாயினும், பெண்ணாயினும் உங்களில் எவருக்கும் வாழ்க்கைத்துணை இல்லாவிட்டால், அவர்களுக்கும் விதவைகளுக்கும் திருமணம் செய்து வையுங்கள்’.

    அடுத்து, வயதான பெற்றோர்களை குறிப்பாக தாயை எப்படி கண்ணியமாக நடத்த வேண்டும் என்பதை திருக்குர்ஆனும், நபிமொழியும் அழுத்தமாக எடுத்துக்கூறுகிறது.

    ‘உங்களிடம் பெற்றோர்கள் ஒருவரோ, இருவரோ முதுமையில் இருக்கிறார்கள் என்றால், அவர்களைப் பேணி பாதுகாத்துக் கொள்ளுங்கள். ‘உஃப்’, ‘சீ’ என்ற வார்த்தையைக் கூட அவர்களிடம் கூறி விடாதீர்கள்’ என்று திருக்குர்ஆன் எச்சரிக்கிறது.

    ‘உன் பெற்றோரை கண் குளிர, முகமலர்ச்சியோடு பார்ப்பதும் கூட தர்மம் தான்’. ‘உங்கள் இறைவனை வணங்குங்கள், உங்கள் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துங்கள்’ என்றும் திருக்குர்ஆன் வலியுறுத்துகிறது.

    ‘உன் தாயின் காலடியில் தான் உன் சொர்க்கம் அமைந்துள்ளது’ என்ற நபிமொழி எத்தனைப் பெரிய சிறப்பை பெண் இனத்திற்கு வழங்கியுள்ளது. ஒருவர் தன் தாய்க்கு மாறுசெய்தால் அவனுக்கு சொர்க்கமே மறுக்கப்படுகிறது என்றால் அதன் ஆழமான அபாயத்தை உணர வேண்டாமா?

    இப்படி, மகளாக, மனைவியாக, தாயாக எந்த நிலையில் இருந்திட்ட போதிலும் பெண்களுக்கு அத்தனை உரிமைகளும் வழங்கப்பட்டு அவர்கள் போற்றப்படுகிறார்கள் என்றால் அது இஸ்லாம் என்ற உயரிய தத்துவத்தில் மட்டும் தான். திருக்குர்ஆன் வழியில் நாம் அனைவரும் நடந்து பெண்மையை போற்றுவோம், இறைஅருளைப்பெறுவோம்.

    எம். முஹம்மது யூசுப், உடன்குடி.
    மதீனாவாசிகள் ஒவ்வொருவரின் வீட்டிலும் நபிகளாரைப் பற்றியே பேசினர். மதீனாவில் இஸ்லாம் வேகமாகப் பரவியது.
    நபித்துவத்தின் பதினொறாவது ஆண்டு ஹஜ்ஜுடைய காலத்தில் நபி முஹம்மது (ஸல்) மினாவில் ‘அகபா’ என்ற இடத்திற்குச் சென்று அங்கு இஸ்லாமிய அழைப்பை மேற்கொண்டார்கள். கஸ்ரஜ் கிளையைச் சேர்ந்தவர்களிடம் இஸ்லாம் பற்றிய உண்மைகளை எடுத்துக் கூறி அல்லாஹ்வின் பக்கம் அழைத்தார்கள். “கடைசிக் காலத்தில் ஒரு நபி தோன்றுவார். அவருடன் சேர்ந்து உங்களை நாங்கள் கடுமையாகத் துன்புறுத்துவோம், கொலையும் செய்வோம்” என்று யூதர்கள் மதீனாவாசிகளிடம் அச்சுறுத்தியிருந்ததால் அவர்களுக்கு நபிகளார் பற்றிய அறிமுகம் தேவைப்படவில்லை. மதீனாவாசிகளுக்கு ஏற்கெனவே நபி முஹம்மது (ஸல்) அவர்களைப் பற்றித் தெரிந்திருந்தது. அதனால் ஹஜ்ஜுக்கு வந்திருந்த மதீனாவைச் சேர்ந்த கஸ்ரஜ் கிளையினரான ஆறு இளைஞர்கள் அதே இடத்தில் உடனே இஸ்லாமிய அழைப்பை ஏற்றார்கள்.

    இஸ்லாமை ஏற்ற அந்த வாலிபர்கள் அறிஞர்களாக இருந்தனர். மதீனாவில் அவ்வபோது நடக்கும் உட்பூசல்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் ஒரு தீர்வாக அமையுமென்றும், மக்களை ஒன்றிணைக்குமென்றும் அந்த இளைஞர்கள் நம்பினார்கள். ‘இஸ்லாமிய மார்க்கத்தை எங்கள் நகரத்தில் அறிமுகப்படுத்துவோம்’ என்று உறுதியேற்றனர்.

    அதன்படியே மதீனாவாசிகள் ஒவ்வொருவரின் வீட்டிலும் நபிகளாரைப் பற்றியே பேசினர். மதீனாவில் இஸ்லாம் வேகமாகப் பரவியது.

    நபித்துவத்தின் பன்னிரெண்டாம் ஆண்டு அதே ஹஜ் காலத்தில், அதே ‘அகபா’ என்ற இடத்தில் மதீனாவாசிகள் நபிகளாரை சந்தித்து, இஸ்லாமிய ஒப்பந்தம் செய்து கொண்டனர். அந்த ஒப்பந்தமாவது “அல்லாஹ்வுக்கு எப்பொருளையும் இணைவைக்கக் கூடாது. திருடக் கூடாது, விபச்சாரம் செய்யக் கூடாது. தங்கள் பெண் சந்ததிகளைக் கொல்லக் கூடாது.

    அறிந்து கொண்டே பொய்யெனத் தெரிந்தும், கற்பனை செய்து, அவதூறை இட்டுக்கட்டக் கூடாது. நன்மையான காரியத்தில் மாறு செய்யக் கூடாது” எனும் திருக்குர்ஆனின் வசனத்திற்கேற்ப அவர்கள் 'பைஅத்து' அதாவது வாக்குறுதி தந்தார்கள். அத்தருணத்தில் அளிக்கப்பட்ட இறைவசனத்தில் நபிகளார் அந்த வாக்குறுதியை ஏற்று, அவர்களுக்காக அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேட வேண்டுமென்றும் இருந்தது. அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன், மிக்கக் கிருபையுடையவன்.

    இரவில் நடந்த ‘அகபா’ உடன்படிக்கையில் நபி முஹம்மது (ஸல்), “என்னிடம் உறுதிமொழி கொடுத்துள்ளீர்கள். அதை நிறைவேற்றுகிறவருக்குரிய நற்பலனைத் தருவது அல்லாஹ்வின் பொறுப்பாகும். வாக்குறுதி தந்துவிட்டு பின்பு அதில் ஏதேனும் ஒரு குற்றத்தை ஒருவர் செய்து, அதற்காக அவர் இந்த உலகத்திலேயே இஸ்லாமியச் சட்டப்படி தண்டிக்கப்பட்டால், அதுவே அவருக்குப் பரிகாரமாகிவிடும். ஆனால் ஒருவர் குற்றம் செய்து அதனை அல்லாஹ் உலக வாழ்வில் மறைத்துவிட்டால், அவரின் மறுமைநிலையில் அவரை மன்னிப்பதும் தண்டிப்பதும் அல்லாஹ்வின் பொறுத்தத்தைக் கொண்டது” என்று உறுதிமொழி எடுத்தவர்களிடம் சொன்னார்கள்.

    'இஸ்லாத்தில் நாங்கள் நிலைத்திருப்போம்' என அன்சாரிகள் உறுதிமொழி அளித்தனர்.

    இஸ்லாமை ஏற்றுக் கொண்ட மதீனாவாசிகளை அன்சாரிகள் அதாவது உதவியாளர்கள், ஆதரவாளர்கள் என்று திருக்குர்ஆனிலும் நபிமொழிகளிலும் கூறப்பட்டுள்ளது.

    [திருக்குர்ஆன் 60:12 ஸஹீஹ் புகாரி 4:63:3892, சீறா இப்னு ஹிஷாம்]

    - ஜெஸிலா பானு.
    நபி முஹம்மது (ஸல்) அவர்களின் விண்ணுலகப் பயணத்தின்போது வான் எல்லையிலுள்ள இலந்தை மரமான ‘சித்ரத்துல் முன்தஹா’ வரை நபிகளார் கொண்டு செல்லப்பட்டார்கள்.
    நபி முஹம்மது (ஸல்) அவர்களின் விண்ணுலகப் பயணத்தின்போது வான் எல்லையிலுள்ள இலந்தை மரமான ‘சித்ரத்துல் முன்தஹா’ வரை நபிகளார் கொண்டு செல்லப்பட்டார்கள். அந்த மரத்தின் வேர் பகுதியின் அருகேதான்,  பூமியிலிருந்து மேலே கொண்டு செல்லப்படும் மனிதர்கள் உட்பட எல்லா உயிர்களின் செயல்கள் பற்றிய குறிப்புகளும்  சேர்க்கப்படுகிறது. இறைவனிடமிருந்து வரும் இறைக்கட்டளைகள் யாவும் அதே இடத்தில் வந்து சேர்கின்றன.

    அங்கே வானவர்கள் அதனைப் பெற்றுக் கொள்கின்றனர். ‘சித்ரத்துல் முன்தஹா’ எனும் அம்மரத்தை பிரமாண்டமான தங்கத்தாலான விட்டில் பூச்சிகள் சூழ்ந்து கொண்டிருக்கின்றன. அங்கே நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கு மூன்று கட்டளைகள் வழங்கப்பட்டன. ஐந்து வேளை தொழுகைகள் மட்டுமல்லாது திருக்குர்ஆனின் ‘அல்பகரா’ அத்தியாயத்தின் இறுதி மூன்று வசனங்களும், நபி முஹம்மது (ஸல்) அவர்களுடைய சமுதாயத்தாரில் அல்லாஹ்வுக்கு இணையேதும் வைக்காதவர்களுக்குப் பேரழிவை ஏற்படுத்தும் பெரும்பாவங்கள் மன்னிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.

    எந்த மனிதருடனும் அல்லாஹ் நேருக்கு நேர் பேசுவதில்லை. ஆயினும், வஹீயின் அதாவது இறைச்செய்தியின் மூலமோ, திரைக்கு அப்பாலிருந்தோ, ஒரு தூதரை அனுப்பி வைத்துத் தன் அனுமதியின் பேரில் தான் நாடுகின்றவற்றை வேதமாக அறிவிக்கச் செய்வானே தவிர நேரடியாகப் பேசுவதில்லை.  “கண் பார்வைகள் அவனை அடைய முடியாது.

    ஆனால் அவனோ எல்லாவற்றையும் பார்க்கிறான். அவன் நுட்பமானவனும் நன்கறிந்தவனும் ஞானமுடையவனும் ஆவான்” என்ற திருக்குர்ஆனின் வசனத்திற்கேற்ப நபி முஹம்மது (ஸல்) அவர்களின் விண்ணுலகப் பயணத்தின்போது அல்லாஹ்வை நபிகளார் உள்ளத்தால் மட்டுமே உணர்ந்தார்கள். வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்களை அறுநூறு இறக்கைகள் கொண்ட வானவராக நிஜத் தோற்றத்தில் நபி முஹம்மது (ஸல்) பார்த்தார்கள்.

    விண்வெளிப் பயணத்திற்கு மறுநாள் காலையில் நபி (ஸல்) தங்களது கூட்டத்தாரிடம் அல்லாஹ் தனக்குக் காண்பித்த மாபெரும் அத்தாட்சிகளை அறிவித்தார்கள். இதைக் கேட்ட அம்மக்கள் முன்பைவிட அதிகமாக நபி (ஸல்) அவர்களுக்குத் தொந்தரவு கொடுத்து அவர்களைப் ‘பெரும் பொய்யர்’ என்றும் கூறினர். “உங்களது பயணம் உண்மையானதாக இருந்தால் எங்களுக்குப் பைத்துல் முகத்தஸின் அடையாளங்களைக் கூறுங்கள்” என்று கேட்டனர்.

    அல்லாஹ் நபி (ஸல்) அவர்களின் கண்முன் பைத்துல் முகத்தஸைக் காட்சியளிக்கச் செய்தான். அதனைப் பார்த்தபடியே அதன் அடையாளங்களை விவரித்துக் கூறினார்கள். அதில் எதையும் அவர்களால் மறுக்க முடியவில்லை. நபி (ஸல்) அவர்கள் மிஃராஜ் போகும் வழியில் சந்தித்த வியாபாரக் கூட்டத்தைப் பற்றியும், அது எப்போது மக்காவிற்குத் திரும்பி வரும் என்பதைப் பற்றியும், அந்தக் கூட்டத்திற்குச் சொந்தமான ஒட்டகமொன்று காணாமல்போனது குறித்தும் மக்காவாசிகளுக்கு அறிவித்தார்கள். நபி (ஸல்) எவ்வாறு கூறினார்களோ அனைத்தும் அவ்வாறே இருந்தன. இருப்பினும் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளாத அவர்கள் நிராகரிக்கவே செய்தனர். சத்தியத்தை விட்டும் வெகுதூரம் விலகியே சென்றனர்.

    மிஃராஜ் விண்வெளிப் பயணத்திற்கு மறுநாள் நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்காக வானிலிருந்து இறங்கி வந்து வானவர் ஜிப்ரீல் (அலை) தலைமை ஏற்றுத் தொழுவித்தார்கள். நபிகளாருக்கு ஐந்து நேரத் தொழுகைகளையும் ஜிப்ரீல் (அலை) தலைமையேற்று அவர்களுக்குத் தொழும் முறையையும் கற்றுக் கொடுத்தார். தொழுகைக்கான நேரத்தையும், தொழும் முறையையும் ஜிப்ரீல் (அலை) காட்டிவிட்டு “இவ்வாறே நான் உங்களுக்குச் செய்து காட்டுமாறு பணிக்கப்பட்டேன்” என்று நபி முஹம்மது (ஸல்) அவர்களிடம் சொன்னார்கள்.

    ஸஹீஹ் முஸ்லிம் 5:1068, 1069, 1:279, 1:276, ஸஹீஹ் புகாரி 3:59:3232, 3235, திருக்குர்ஆன் 53:1-18, 6:103, 42:51

    - ஜெஸிலா பானு.

    நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் கந்தூரி விழா வருகிற 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    தென் மாவட்டங்களில் உள்ள புகழ்பெற்ற தர்காக்களில் நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் தர்காவும் ஒன்று ஆகும். இங்கு ஆண்டுதோறும் கந்தூரி விழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த விழாவில் நெல்லை மாவட்டத்தில் இருந்து மட்டும் அல்லாமல் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் இருந்தும் ஏராளமானவர்கள் கலந்து கொள்வார்கள்.

    இந்த ஆண்டிற்கான கந்தூரி விழா வருகிற 30-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி அன்று மதியம் 2 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானை மீது கீழுர் ஜமாஅத் நிறைபிறை கொடி ஊர்வலம், வான வேடிக்கையுடன் பொட்டல்புதூர் முக்கிய வீதி வழியாக சென்று மாலையில் பள்ளிவாசலில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெறும்.

    வருகிற 8-ந் தேதி இரவு 8 மணிக்கு பச்சைக்களை ஊர்வலம், 9-ந் தேதி காலை 10 மணிக்கு சுவாமி கம்முத்தவல்லி இனாம்தார் எஸ்.பி.ஷா இல்லத்தில் ராத்திபு நிகழ்ச்சி, மதியம் 12 மணிக்கு அரண்மனை கொடியேற்றம், 2 மணிக்கு மேலூர் ஜமாஅத் சார்பில் 10-ம் இரவு கொடிஊர்வலம் தொடங்கி மாலை 6 மணிக்கு கொடியேற்றம் நடைபெறும். இரவு 10 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானைகள் முன்வர மேள தாளங்கள் முழங்க ரவண சமுத்திரத்தில் இருந்து சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு அதிகாலை 5 மணிக்கு பள்ளிவாசலை வந்தடையும்.

    10-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு பள்ளிவாசலில் இனாம்தார் எஸ்.பி.ஷா மூலஸ்தானத்தில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெறும். மாலை 6 மணிக்கு தீப அலங்காரத்திடலில் தீப அலங்காரம் நடைபெறும்.

    தொடர்ந்து 12-ந் தேதி மாலை, இரவு ராத்திபு ஓதுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வழக்கம் போல் இந்த ஆண்டும் நெல்லை, தென்காசியில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    விழா ஏற்பாடுகளை முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் நிர்வாக கமிட்டி தலைவர் எஸ்.பி.ஷா மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.
    நபி முஹம்மது (ஸல்) அவர்களின் மிஃராஜ் விண்பயணத்தின் போது அவர்கள் எல்லா நபிமார்களையும் வெவ்வேறு வானத்தில் சந்தித்தார்கள்.
    நபி முஹம்மது (ஸல்) அவர்களின் மிஃராஜ் விண்பயணத்தின் போது அவர்கள் எல்லா நபிமார்களையும் வெவ்வேறு வானத்தில் சந்தித்தார்கள். விண்ணுலகப் பயணத்தில் நபிகளார் நபிமார்களை மட்டுமல்ல நரகத்தின் காவலரான வானவர் மாலிக்கையும், இறுதிக் காலத்தில் வரவிருக்கும் பெரும் பொய்யனான தஜ்ஜாலையும் கண்டார்கள்.

    நபி முஹம்மது (ஸல்) சொர்க்கத்தை எட்டிப் பார்த்தபோது அங்கு ஏழைகளே அதிகமாகக் குடியிருந்தனர். சொர்க்கத்தின் மண் கஸ்தூரியாக இருந்தது. நரகத்தை எட்டிப் பார்த்தபோது அதில் பெண்களே அதிகமாக இருந்தனர்.

    நபிகளாருக்கு பல சமுதாயத்தாரின் நிலையும் காட்டப்பட்டன. ஒவ்வொரு நபிகளுடனும் அவருடைய சமுதாயத்தார்கள் இருப்பதைக் கண்டார்கள். சிலருடன் ஒரேயொரு மனிதர் மட்டுமிருந்த இறைத்தூதரும், இரண்டு மனிதர்கள் மட்டுமே தம்முடனிருந்த இறைத்தூதரும், பத்துப் பேர்களுக்குட்பட்ட ஒரு சிறுகூட்டம் மட்டுமே தம்முடன் இருந்த இறைத்தூதரும், தம்முடன் ஒருவருமில்லாத இறைத்தூதரும் கடந்து செல்வதைக் கண்டார்கள்.

    அடிவானத்தை அடைத்திருந்த ஒரு பெரும் கூட்டத்தைக் கண்டார்கள். அது தன்னுடைய சமுதாயமாக இருக்குமென்று எதிர்பார்த்தார்கள். ஆனால் அது மூஸா (அலை) அவர்களின் சமுதாயமென்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது. அப்போது அடிவானத்தையே அடைத்திருந்த ஏராளமான மக்கள் திரளைக் கண்டார்கள். அதுதான் நபி முஹம்மது (ஸல்) அவர்களின் சமுதாயமென்று சொல்லப்பட்டது.

    அதில் விசாரணையின்றி சொர்க்கம் செல்லும் எழுபதாயிரம் பேரும் அடங்குவர் என்றும் சொல்லப்பட்டது. பறவை சகுனம் பார்க்காமல், நோய்க்காகச் சூடிட்டுக் கொள்ளாமல், ஓதிப்பார்க்காமல், தம் இறைவனை மட்டுமே சார்ந்திருப்பவரே விசாரணையின்றி, கேள்விக்கணக்கின்றிச் சொர்க்கம் செல்லபவர்கள்.

    அதன் பிறகு நபிகளாரிடம் இரண்டு பாத்திரங்கள் கொண்டு வரப்பட்டன. அதில் ஒன்றில் பால் இருந்தது, மற்றொன்றில் மது இருந்தது. வானவர் ஜிப்ரீல் (அலை), “இரண்டில் எதை நீங்கள் விரும்புகிறீர்களோ அதைக் குடியுங்கள்” என்று கூறினார்கள். நபிகளார் பாலை எடுத்துக் குடித்தார்கள். அதற்கு ஜிப்ரீல் (அலை) “நீங்கள் இயல்பான பானத்தை எடுத்துக் கொண்டீர்கள். மதுவை நீங்கள் எடுத்திருந்தால் உங்கள் சமுதாயம் வழி தவறிப் போயிருக்கும்” என்று கூறினார்கள்.

    பிறகு நபிகளாருக்கு ‘அல் பைத்துல் மஃமூர்' எனும் 'வளமான இறையில்லம்' காட்டப்பட்டது. அது குறித்து ஜிப்ரீல் (அலை) அவர்களிடம், நபி முஹம்மது (ஸல்) கேட்டார்கள். அதற்கு ஜிப்ரீல் (அலை), “இதுதான் 'அல் பைத்துல் மஃமூர்'. இதில் ஒவ்வொரு நாளும் எழுபதாயிரம் வானவர்கள் தொழுகிறார்கள். அவர்கள் இதிலிருந்து வெளியே சென்றால் திரும்ப இதனிடம் வர மாட்டார்கள். அதுவே அவர்கள் கடைசியாக நுழைந்ததாகி விடும்” என்றார்.

    வான் எல்லையிலுள்ள ‘சித்ரத்துல் முன்தஹா’ எனும் இடத்திற்கு நபிகளார் கொண்டு செல்லப்பட்டார். அதன் பழங்கள் யமனில் உள்ள 'ஹஜ்ர்' எனுமிடத்தின் மண் கூஜாக்கள் போல் பெரியதாக இருந்தன. அதன் இலைகள் யானைகளின் காதுகளைப் போல் இருந்தன. அதன் வேர்ப்பகுதியில் நான்கு நதிகள் ஓடிக் கொண்டு இருந்தன. இரண்டு நதிகள் வெளியேயும், இரண்டு நதிகள் உள்ளேயும் ஓடிக் கொண்டு இருந்தன. வெளியே இருக்கும் இரண்டு நதிகள் நைல் மற்றும் யூப்ரடீஸ் நதிகளாகும். உள்ளே இருக்கும் நதிகள் சொர்க்கத்திலுள்ள ஸல்ஸபீல், கவ்ஸர் ஆகிய இரண்டு நதிகளாகும்.

    கவ்ஸர் ஆற்றின் அருகே அதன் இரண்டு மருங்கிலும் துளையுள்ள முத்துக் கலசங்கள் இருந்தன. அங்கு விண்மீன்களின் எண்ணிக்கையைப் போன்று கணக்கிலடங்கா கோப்பைகள் வைக்கப்பட்டு இருந்தன. தொலைதூர பரப்பளவு கொண்ட அதன் நீர் பாலைவிட வெண்மையானதாகவும், அதன் மணம் கஸ்தூரியைவிட நறுமணம் வாய்ந்ததாகவும் இருந்ததைக் கண்ட நபிகளார் அதன் சிறப்பைப் பற்றி வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்களிடம் கேட்டார்கள். “இதுதான் உங்களுடைய இறைவன் உங்களுக்குச் சிறப்பாக வழங்கிய அல்கவ்ஸர். யார் அதன் நீரை அருந்துகிறார்களோ அவர்கள் ஒருபோதும் தாகமடையமாட்டார்கள்” என்று ஜிப்ரீல் (அலை) விளக்கினார்கள்.

    நபி முஹம்மது (ஸல்) அவர்களின் மீது அவர்களின் சமுதாயத்தாருக்காக ஐம்பது நேரத் தொழுகைகள் கடமையாக்கப்பட்டன. அதனை ஏற்று, நபிகளார் திரும்பி வரும்போது, மூஸா (அலை) அவர்கள் “உங்கள் சமுதாயத்திற்கு அல்லாஹ் எதைக் கடமையாக்கினான்?” எனக் கேட்டார்கள். “ஐம்பது நேரத் தொழுகையைக் கடமையாக்கினான்” என்றார்கள் நபி முஹம்மது (ஸல்).

    “உங்கள் சமூகம் அதற்குச் சக்தி பெறாது. நீங்கள் திரும்பச் சென்று குறைத்துக் கேளுங்கள்” என்றார். நபிகளாரும் திரும்பச் சென்று கொஞ்சம் குறைத்து வந்து மூஸா (அலை) அவர்களிடம் சொன்னபோது. “இல்லை, நீங்கள் மீண்டும் செல்லுங்கள், உங்கள் சமூகம் அதற்குச் சக்தி பெறாது” என்றார்கள். நபி முஹம்மது (ஸல்) மீண்டும் சென்று இன்னும் கொஞ்சம் குறைத்து வந்தார்கள். மூஸா (அலை) மீண்டும் “இதற்கும் உங்கள் சமூகம் சக்தி பெறமாட்டார்கள்” என்றார்கள். இப்படியாக மறுபடி மறுபடி திரும்பச் சென்று இறுதியாக ஐந்து நேரத் தொழுகையைக் கடமையாக்கி வந்தார்கள்.

    ஐந்து நேரத் தொழுகையைத் தரும்போது ‘அது ஐம்பதிற்குச் சமம், ஒரு நற்செயலுக்குப் பத்து நன்மைகளை நான் வழங்குவேன்’ என்று அசரீரியாக அல்லாஹ்வின் தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டது. நபி முஹம்மது (ஸல்) ஐந்து நேரத் தொழுகை ஏற்று வந்தபோது மீண்டும் மூஸா (அலை) அதனைக் குறைத்து வரும்படி சொன்னார்கள். “மேலும் குறைத்துக் கேட்பதற்கு நான் வெட்கப்படுகிறேன். என் சமூகத்தினர் மீது எனக்கு நம்பிக்கையுள்ளது” என்று நபி முஹம்மது (ஸல்) சொல்லிவிட்டார்கள்.

    ஸஹீஹ் புகாரி 4:60:3394, 3396, 3436, 3:59:3241, 6:74:5610, 5:65:4964, 7:81:6449, 6579, 6580, 6581, 3:59:3239, 3:59:3207, 6:76:5752, 1:8:349

    - ஜெஸிலா பானு.
    நம் அறிவு எல்லைக்குள் அடங்காத அத்தனை தடுப்புகளையும் ஓர் அத்தாட்சியாக இறைவன் அமைத்து தந்திருக்கிறான். இவற்றையெல்லாம் அலட்சியம் செய்தால் நாளை மறுமையில் அல்லாஹ்விடம் என்ன பதில் சொல்ல போகிறோம்? சிந்திப்போமா?
    பெரு வெடிப்பில் பிறந்தது தான் இந்த உலகம். பிறந்தவை அத்தனையும் வளர்கின்ற வகையில் மாற்றங்களைப் பெறுகின்றன. அதுபோல் உலகமும் மண்ணாய், கல்லாய், மலையாய், அருவியாய், ஆறாய் பல மாற்றங்களோடு தன்னை உருவகித்துக் கொண்டது. இருந்தாலும், அல்லாஹ் அதில் பல நுட்பங்களை அமைத்து அதனை தன் அருள்மறையில் விளக்கமாகவும் குறிப்பிட்டுள்ளான்.

    அந்த நுட்பங்களில் ஒன்றுதான், ‘கடற்பரப்பில் அல்லாஹ் ஒரு தடுப்பை ஏற்படுத்தியுள்ளான்’ என்று சொல்லும் திருமறை வசனம்.

    கடல்பரப்பு ஒன்று தான், நீர் ஒன்றுதான், இடையில் தடுப்பாய் ஒன்றையும் அமைத்துவிடவில்லை. இருந்தும் உணர முடியாத ஒரு தடுப்பு ஒன்று இருப்பதை மறுக்க முடியாது. தடுப்பு வரை ஓடிவரும் நீர்த்திவலைகள் அந்த எல்லையை இன்றுவரை தாண்டவில்லை.

    இதுதொடர்பாக ஆராய்ச்சிகள் பல மேற்கொள்ளப்பட்டன. உப்பு கரைசல்கள், ரசாயன கலவைகளால் ஒன்றின் தன்மையை மற்றொன்டோடு ஒப்பிட்டு கலக்கச் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அத்தனையும் தோல்வியில் முடிந்தன. அந்த அதிசயம் பற்றி திருக்குர்ஆன் இவ்வாறு சொல்கிறது:

    “இரு கடல்களையும் அவை சந்திக்குமாறு அவனே இணைத்தான், ஆயினும் அவை இரண்டிற்கும் மத்தியில் ஒரு தடுப்புண்டு. அத்தடுப்பை அவை இரண்டும் மீறாது. ஆகவே மனிதர்களே! உங்களுடைய அருட்கொடைகளில் எதனை பொய்யாக்குவீர்கள்”. (55:19-20)

    இது ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பு திருக்குர்ஆன் சொன்ன செய்தி. அன்று அது என்னவென்றே தெரிந்திருக்க முடியாத ஓர் அனுமானம். ஆனால் அது இன்று நிரூபணமான உண்மை.

    கடல்களில் பல இடங்களில் இது போன்ற பல தடுப்புகள் இருக்கின்றன. ஜிப்ரால்டர் ஜல சந்தியில் உவர் நீர், நன்னீர் என்ற இருவகையான, இரு சுவையான நீர் உள்ளது. இவை ஒன்றை ஒன்று சந்தித்துக் கொண்டாலும் ஒன்றோடொன்று கலந்துவிட முடியாத ஓர் மெல்லிய திரையை அல்லாஹ் படைத்திருக்கின்றான்.

    புறக்கண்களால் பார்த்தோ, கரங்களால் தொட்டுணர்ந்தோ கண்டு கொள்ளமுடியாத ஒரு திரையை உருவாக்கிய அல்லாஹ்வின் ஆற்றலை இன்று உலகம் வியந்து நோக்கி கொண்டிருக் கிறது. இருந்தாலும் அது எப்படி முடிந்தது? அது என்னவாக இருக்கின்றது? ஏன் இந்த ஏற்பாடு? எப்படி அல்லாஹ்வின் கட்டளைக்கு இரு கடல்களும் இன்று வரை அடிபணிந்து நடக்கின்றன? கால மாற்றம், தட்ப வெப்பம், சீதோஷ்ண வேறுபாடுகள் இவைகள் எல்லாம் கூட இந்த நிலையை மாற்றி அமைக்க முடியவில்லையே?.

    இதற்கு காரணம் அது அல்லாஹ்வின் கட்டளை. அவன் ஒருவனால் மட்டுமே அதனை மாற்றி அமைக்க முடியும்.

    கடலில் கண்ணிற்கு தெரியாத தடுப்பை ஏற்படுத்தியவன், கரையிலும் இதுவரை கண்டறியா திரை ஒன்றை ஏற்படுத்தியுள்ளான். இதுகுறித்து திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:

    “துல்கர்னைன் அந்த மக்கள் கூட்டத்தை நெருங்கியபோது அவர்கள் ‘யாஜுஸ் மாஜுஸ் என்ற விஷமக்காரர்களின் ஆபத்திலிருந்து எங்களுக்கு ஒரு தடுப்பை ஏற்படுத்தி தாருங்கள்’ என்று கேட்டுக் கொண்டனர். அவரும் அதற்கு சம்மதித்து ‘நீங்கள் அதற்கு தேவையான இரும்பு பாளங்களை என்னிடம் கொண்டு வாருங்கள்’ என்று கூறி அவற்றைக் கொண்டு வந்து இரு மலைகளுக்கிடையில் இருந்த பள்ளத்தை நிறைத்து, இரு மலைகளின் உச்சிக்கு அவை சமமாக உயர்ந்த பின்னர் நெருப்பாக பழுக்கும் வரை அதை ஊதுங்கள்’ என்றார். அதன் பின்னர் செம்பையும் என்னிடம் கொண்டு வாருங்கள் நான் அதை உருக்கி அதன் மீது ஊற்றுவேன் என்றார்”. (திருக்குர்ஆன் : 18:96)

    இப்படிப்பட்ட சக்தி வாய்ந்த உறுதிமிக்க தடுப்பு சுவர் ஒன்றை அமைத்துக் கொடுத்து, இந்த தடுப்பு சுவர் தாண்டி யாஜுஸ் மாஜுஸ் மக்கள் ஊடுருவி வரவோ, துளையிட்டு நுழையவோ முடியாது என்று அவர்களுக்கு ஆறுதல் சொன்னார்.

    அதை தொடர்ந்து துல்கர்னைன் சொன்னார்: “இது என்னுடைய இறைவனுடைய அருள்தான். என் இறைவனின் வாக்குறுதியாகிய யுகமுடிவு வரும் போது இதையும் அல்லாஹ் தூள் தூளாக்கி விடுவான். என் இறைவனின் வாக்குறுதி உண்மையாக இருக்கிறது என்று கூறினார்”. (18:98).

    அல்லாஹ் அவருக்கு அத்தனை சக்தியைக் கொடுத்திருந்த போதும், காரியங்களைச் செய்து முடித்துவிட்டு கர்வத்திலோ, தலைகனத்திலோ தன்னிலை தடுமாறாமல் ‘இது அத்தனையும் என் இறைவன் அருளால் மட்டுமே கை கூடியது’ என்று சொன்னது இறையடியாளர்களின் நற்குணங்களை எடுத்துச் சொல்கிறது என்பதை இந்த வசனம் நமக்கு உணர்த்துவதை புரிந்து கொள்ள வேண்டும்.

    அடுத்தாக அவர் சொல்லும் போது, ‘அல்லாஹ்வின் வாக்குப்படி யுகமுடிவின் அடையாளம் ஏற்படும் அந்த நாளில், அல்லாஹ்தான் இந்த தடுப்பை தூள் தூளாகச் சிதறச் செய்வான்’ என்ற செய்தியையும் கோடிட்டு காட்டுகிறார்.

    விஞ்ஞான ஆற்றலும், அறிவின் வளர்ச்சியும் உச்சத்தை அடைந்துவிட்ட இந்த காலக்கட்டத்தில் மனிதன் பல்வேறு விஞ்ஞான வசதிகளை பெற்றுள்ளான். மிக நுண்ணிய பாக்டீரியாக்களை நுட்பமான மைக்ராஸ்கோப்பால் கண்டு கொள்ளக் கூடிய வல்லமையை மனிதன் பெற்றுள்ளான். கடலின் ஆழத்தில் வசிக்கும் நுண்ணுயிர்களை கூட அறிந்து கொள்ளும் ஆற்றல் கொண்டவன் மனிதன். மலை உச்சிகளில், பனிப் பிரதேசங்களில் கொடிகளை நாட்டிவிடும் சக்தி கொண்டவன் மனிதன். விண்வெளிகளில் உள்ள விவரங்களைக் கூட ஒரு சில வினாடிகளில் அறிந்துகொள்ளும் திறமை கொண்டவன் மனிதன். உயிர்கள் வாழவே முடியாத செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் தேடும் மனிதன், இன்னும் முழுமையாக கண்டுபிடிக்க முடியாத அண்டார்டிகா என்ற கண்டங்களில் கூட பயணம் செய்து பாடங்கள் கற்றுக்கொள்ள முயற்சி செய்பவன் மனிதன்.

    அப்படிப்பட்ட மனிதனால் அல்லாஹ் சொன்ன இந்த தடுப்பை இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த இடத்தில், இன்னபொருளால் தான் அந்த தடுப்பை ஏற்படுத்தி இருக்கிறேன் என்று அருள் மறையில் அல்லாஹ் சொல்லி இருக்கிறான். இருப்பினும் மனிதனால் இன்று வரை அந்த தடுப்பை கண்டுகொள்ள முடிந்ததா?

    இப்படி நம் அறிவு எல்லைக்குள் அடங்காத அத்தனை தடுப்புகளையும் ஓர் அத்தாட்சியாக இறைவன் அமைத்து தந்திருக்கிறான். இவற்றையெல்லாம் அலட்சியம் செய்தால் நாளை மறுமையில் அல்லாஹ்விடம் என்ன பதில் சொல்ல போகிறோம்? சிந்திப்போமா?

    எம். முஹம்மது யூசுப், உடன்குடி.
    கடன் விஷயத்தில் இஸ்லாமிய சட்ட திட்டத்தின்படி நடந்து, மென்மையான போக்கையும், நன்மையான நடைமுறையையும் பின்பற்றி வாழ வல்ல அல்லாஹ் அருள்பாலிப்பானாக.
    கடன் எனும் வார்த்தையையும், கடன் வாழ்க்கையும் ஒவ்வொருவரின் வாழ்விலும் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. உலகமே கடன் மயமாகிவிட்டது. கடனை நம்பித்தான் மனித வாழ்வு அங்குலம் அங்குலமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. கடன் வாங்கும் போது இருக்கும் சந்தோஷம், கடனை திருப்பி கொடுக்கும்போது இருப்பதில்லை. கடன் சுமை, கடன் தொல்லையில் இருந்து விடுபட ஒரு பிரார்த்தனையை நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

    இதுகுறித்து நபித்தோழர் அபு ஸயீத் (ரலி) தெரிவிப்பதாவது:

    ஒரு நபித்தோழரின் பெயர் அபு உமாமா (ரலி). இவர் ஒரு தடவை பள்ளிவாசலுக்குள் நுழைந்தார். இதைக்கண்ட நபி (ஸல்) அவர்கள் ‘அபு உமாமாவே! தொழுகை இல்லாத நேரத்தில் பள்ளியினுள் அமர்ந்துள்ளரே, என்ன விஷயம்?’ என விசாரித்தார்.

    அதற்கு அவர் ‘இறைத்தூதரே! எனது கவலைகளும், கடன் சுமைகளும் தான் இந்த இடத்திற்கு கொண்டு வந்தது’ என விவரித்தார்.

    அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘நான் உமக்கு ஒரு பிரார்த்தனையை கற்றுத்தருகிறேன்; அதை நீர் காலையிலும், மாலையிலும் ஓதிவந்தால், இறைவன் உமது கவலையை போக்கி, உமது கடனை நிறைவேற்ற வழி வகை செய்வான்’ என அரபு மொழியில் அந்த பிரார்த்தனையை கூறினார்கள்.

    அதன் பொருள்: ‘இறைவா, நான் உன்னிடம் கவலை, தூக்கம், இயலாமை, சோம்பேறித்தனம், கோழைத்தனம், கஞ்சத்தனம், கடன் சுமை, மனிதர்களின் அடக்குமுறை ஆகியவற்றில் இருந்து பாதுகாப்பு கோருகிறேன்’ என்பதாகும்.

    இந்த பிரார்த்தனையை அபு உமாமா (ரலி) காலையிலும், மாலையிலும் ஓதி வந்தார். இறைவன் அவரின் கவலையையும், கடனையும் போக்கினான். (ஆதாரம் அபூதாவூத் 1330)

    கடன்பட்டவர்கள் இந்த பிரார்த்தனையை தொடர்ந்து செய்துவந்தால் கவலையும், கடன் சுமையும் தீரும்.

    இஸ்லாமிய மார்க்கத்தை பொறுத்த வரையில் ‘கடன் வழங்கும் திட்டம்’ என்பது மக்கள் நலத்திட்டமாக பாவிக்கிறது. மக்கள் நலன் அனைத்தும் இறைவனுக்கு ஆற்றும் அறமாகவும், இறை நெருக்கத்தை பெற்றுத்தரும் வணக்கமாகவும் கணிக்கப்படுகிறது. இதனால்தான், ‘மக்களுக்கு வழங்கப்படும் கடன், இறைவனுக்கு வழங்கப்படும் அழகிய கடன்’ என்று திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது.

    ‘அல்லாஹ்வுக்கு அழகான கடனாகக்கடன் கொடுப்பவர் யார்? அவருக்கு அவன் பன்மடங்காக வழங்குவான்; அவருக்கு மகத்தான கூலியும் உண்டு’ (57:11).

    அல்லாஹ்வுக்கு கடன் தேவைப்படுமா?, தேவைப்படாது. ‘அல்லாஹ்வுக்கு அழகிய கடன் வழங்குதல்’ என்பதன் அர்த்தம் என்ன?

    பொருளாதாரம் சம்பந்தமாக இறைவனுடன் தொடர்புபடுத்திக் கூறப்படும் கட்டளைகள் அனைத்தும், தேவையுள்ள மனிதர் களுக்கு கொடுத்து உதவுவது தான்.

    தர்மத்தை விட கடன் கொடுப்பது சிறந்தது. கடன் கொடுப்பதன் மூலம் மனித நேயம் மலருகிறது. ஒரு மனிதரின் பிரச்சினை கடன் மூலம் தீர்த்து வைக்கப்படுகிறது. தர்மம் செய்வதினால் யாசிப்பவரின் தேவை முழுமையாக நிறைவேறாது. இதனால்தான் தர்மத்தை விட கடன் சிறந்ததாக அமைந்துவிடுகிறது.

    நபி (ஸல்) அவர்கள் மிஃராஜ் விண்வெளிப் பயணத்தின் போது, சொர்க்கத்தின் வாசலில் ‘ஒரு தர்மம் செய்தால் பத்து மடங்கு கூலி, கடன் கொடுத்தால் பதினெட்டு மடங்கு கூலி’ என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது.

    ‘ஜிப்ரயீலே! இந்த சிறப்பு ஏன்?’ என நபி அவர்கள் கேட்டார்கள். அதற்கு ஜிப்ரயீல் ‘யாசகன் தன்னிடத்தில் உள்ளதை பிறரிடம் கேட்கிறான்; கடனாளி தேவைக்காக இல்லாததை கேட்கிறான்’ என்று விளக்கம் அளித்தார்கள்.

    கடன் வாங்குபவர் கடனை திரும்ப செலுத்திட வேண்டும் எனும் நோக்கத்தில் கடன் பெற வேண்டும். ஏமாற்றும் நோக்கத்திலோ, பாதி செலுத்தி விட்டு மீதியை ஏமாற்ற வேண்டும் நோக்கத்தில் கடன் பெறக்கூடாது. கடன் வாங்கும்போது நடந்து கொள்வதை விட சிறந்த முறையில் கடனை திருப்பிக் கொடுக்கும்போது நடந்து கொள்ள வேண்டும்.

    இதுகுறித்த நபிமொழிகள் வருமாறு:

    ‘எவன் மக்களின் பணத்தை திருப்பி செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ, அவன் சார்பாக அல்லாஹ்வே அதனை திருப்பிச்செலுத்துவான். எவன் திருப்பிச்செலுத்தும் எண்ணமின்றி அதை (ஏமாற்றி) அழித்து விடும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அல்லாஹ்வும் அவனை அழித்து விடுவான்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா (ரலி), புகாரி:2387)

    ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் பிரார்த்திக்கும்போது ‘இறைவா, பாவத்திலிருந்தும், கடனிலிருந்து உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன்’ என்று கூறினார்கள்.

    (இதைசெவியுற்ற) ஒருவர் நபிகளிடம் ‘தங்கள் கடன் பெறுவதிலிருந்து இவ்வளவு அதிகமாக பாதுகாப்பு தேடுவதற்கு காரணமென்ன?’ என வினவினார்.

    ‘மனிதன் கடன் பெறும்போது பொய் பேசுகிறான்; வாக்குறுதி தந்து (அதற்கு) மாறு செய்கிறான்’ என நபி அவர்கள் பதிலளித்தார்கள். (ஆயிஷா (ரலி) புகாரி: 2397)

    ‘எவரொருவர் ஒரு கடனாளிக்கு கால அவகாசம் கொடுத்து எதிர்பார்க்கிறாரோ அல்லது அவரை விட்டு அதனை தள்ளுபடி செய்கிறாரோ, அவருக்கு அல்லாஹ் தனது நிழலில் நிழல் தருவான் என நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன்’. (அறிவிப்பாளர் : கஃப்பின் உமர் (ரலி).

    “ஒருவர் இறந்த பிறகு அவர் மண்ணறையில் அவர் செய்த நன்மை குறித்து இறைவன் விசாரிக்கும்போது, ‘அவர் கடன் கொடுத்த பணக்காரர்களுக்கு கால அவகாசம் கொடுப்பார், ஏழைகளுக்கு கடனை தள்ளுபடி செய்வார்’ என்பதை தெரிவித்த உடன், அவரின் இந்த செயலைக் கண்டு அல்லாஹ் அவரின் பாவத்தை மன்னித்துவிட்டான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

    கொடுத்த கடனுக்கு, கடனை விடவும் கூடுதலாக வாங்குவது வட்டி ஆகும். இது இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ளது. கடன் விஷயத்தில் இஸ்லாமிய சட்ட திட்டத்தின்படி நடந்து, மென்மையான போக்கையும், நன்மையான நடைமுறையையும் பின்பற்றி வாழ வல்ல அல்லாஹ் அருள்பாலிப்பானாக.

    மவுலவி அ.செய்யது அலி மஸ்லஹி,

    பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுன்.
    நபிகளார் சந்தித்த நபிமார்களில் தாம் இப்ராஹீம் (அலை) அவர்களுடைய முகச்சாயலில் இருப்பதை நபிகள் நாயகம் (ஸல்) உணர்ந்தார்கள்.
    நபி முஹம்மது (ஸல்) அவர்கள் இறையில்லமான கஅபாவின் அருகில் ஹத்தீமில் படுத்துக் கொண்டிருந்தபோது அவரிடம் வானவர் ஜிப்ரீல் (அலை) வந்து அவரது நெஞ்சை, காறை எலும்பிலிருந்து அடிவயிறு வரை பிளந்து நபிகளாரின் இதயத்தை வெளியில் எடுத்தார். தங்கத் தட்டு ஒன்று கொண்டு வரப்பட்டு அதில் நபிகளாரின் இதயம் ஸம்ஸம் தண்ணீரால் கழுவப்பட்டது. நபிகளாரின் இதயத்தில் இறை நம்பிக்கையும் ஞானமும் முழுமையாக நிரப்பப்பட்டது. பிறகு பழையபடியே மீண்டும் நபிகளாரின் இதயத்தை வைத்து மூடிவிட்டார் வானவர்.

    அங்கு, கோவேறு கழுதையைவிடச் சிறியதும் கழுதையைவிடப் பெரியதுமான வெள்ளை நிறத்தில் மின்னல் வேக வாகனம் ஒன்று கொண்டு வரப்பட்டது. அதன் பெயர் ‘புராக்’. அந்தப் புராக் வாகனம் பார்வை எட்டுகிற தூரத்திற்கு ஓர் எட்டு வைக்குமளவிற்கு அதிவேகமானது. அந்த வாகனத்தில் நபி முஹம்மது (ஸல்) அவர்கள், பைத்துல் முகத்தஸிற்கு, (ஜெரூசலேம் இறை ஆலயத்திற்கு) அழைத்துச் செல்லப்பட்டார்கள்.

    இந்த நிகழ்வுதான் இஸ்லாத்தில் மிஹ்ராஜ் விண்பயணம் என்று சொல்லப்படுகிறது.

    அங்கிருந்து நபி முஹம்மது (ஸல்) அவர்களை முதல் வானத்திற்குக் கொண்டு சென்றார் வானவர் ஜிப்ரீல். முதல் வானத்தின் கதவைத் திறக்கும்படி ஜிப்ரீல் (அலை) சொல்ல, “யார் அது?” என்று கேட்கப்பட்டது. அதற்கு “ஜிப்ரீல்” என்று பதிலளித்தார்கள். “உங்களுடன் வந்திருப்பவர் யார்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு ஜிப்ரீல் (அலை), “முஹம்மத் (ஸல்)” என்று பதில் தந்ததற்கு “அவரை அழைத்து வரும்படி ஆளனுப்பப்பட்டிருந்ததா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு ஜிப்ரீல் (அலை), “ஆம்” என்றார்கள். அந்த வானத்தின் காவலர் கதவைத் திறந்து “உங்களது வருகை மிக நல்ல வருகை. உங்கள் வரவு நல்வரவாகட்டும்” என்று வாழ்த்தினார்.

    அந்த வானத்தில் இன்னும் மேலே சென்றபோது அங்கே ஒருவர் இருந்தார். அவரின் வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் மக்கள் இருந்தனர். அவர் தன்னுடைய வலப்பக்கம் பார்க்கும்போது சிரித்தார். தன்னுடைய இடப்பக்கம் பார்க்கும்போது அழுதார். அவர் நபி முஹம்மது (ஸல்) அவர்களைப் பார்த்ததும் “நல்ல இறைத்தூதரே வருக! நல்ல மகனே வருக!” என்று வரவேற்றார். “இதுதான் ஆதம் (அலை)” என்று அவரை அறிமுகப்படுத்தினார் ஜிப்ரீல் (அலை). அவருக்கு நபிகளார் சலாம் கூறினார்கள். “வலப்பக்கமும் இடப்பக்கமும் இருப்பது அவருடைய சந்ததிகள். வலப்பக்கமிருப்பவர்கள் சொர்க்கவாசிகள். இடப்பக்கத்தில் இருப்பவர்கள் நரக வாசிகள். எனவேதான், வலப்பக்கம் சொர்க்கவாசிகளைப் பார்க்கும்போது மகிழ்ச்சியால் சிரிக்கிறார். இடப்பக்கம் நரகவாசிகளான தம் மக்களைக் காணும்போது வேதனையில் அழுகிறார்” என்று ஜிப்ரீல் (அலை) விவரித்தார்.

    பிறகு நபி முஹம்மது (ஸல்) அவர்களை அழைத்துக் கொண்டு ஜிப்ரீல் இன்னும் உயரத்திற்கு ஏறிச் சென்றார்கள். இரண்டாம் வானத்திற்கு வந்ததும், அங்கேயும் காவலாளிகள் முதலாமவர் கேட்டதைப் போன்றே கேட்டுவிட்டு திறந்தனர். அங்கே நபி முஹம்மது (ஸல்) சந்தித்தது யஹ்யா (அலை) அவர்களையும் ஈசா (அலை) அவர்களையும். இப்படியாக ஒவ்வொரு வானத்திலும் வெவ்வேறு காலகட்டத்தில் தோன்றிய நபிகளான யூசுப் (அலை), இத்ரீஸ் (அலை), ஹாரூன் (அலை) என்று எல்லோரையும் சந்தித்து 'சலாம்' சொல்லிவிட்டு மேலே உயரும்போது அவர்கள் சந்தித்தது மூஸா (அலை).

    மூஸா (அலை) அவர்களுக்குச் சலாம் சொல்லிவிட்டு அவர்களுடன் பேசுகிறார்கள். மூஸா (அலை) அவர்களைக் கடந்து சென்றபோது அவர்கள் அழுதார்கள். “தங்கள் அழுகைக்கு என்ன காரணம்?” என்று அவர்களிடம் நபி முஹம்மது (ஸல்) கேட்டார்கள். அதற்கு மூஸா (அலை), “என் சமுதாயத்தினரில் சொர்க்கம் புகுபவர்களை விட அதிகமானவர்கள் எனக்குப் பிறகு அனுப்பப்பட்ட நபி முஹம்மது (ஸல்) அவர்களின் சமுதாயத்திலிருந்து சொர்க்கம் புகுவார்கள் என்பதால் அழுகிறேன்” என்று பதிலளித்தார்கள். அதுவொரு சந்தோஷமான அழுகை எனலாம்.

    பிறகு ஏழாவது வானத்திற்குச் சென்றார்கள். அங்கு இப்ராஹீம் (அலை) அவர்களைச் சந்தித்து ஸலாம் கூற, பதில் கூறி நபி (ஸல்) அவர்களை வரவேற்றார்கள். நபிகளார் சந்தித்த நபிமார்களில் தாம் இப்ராஹீம் (அலை) அவர்களுடைய முகச்சாயலில் இருப்பதை நபிகள் நாயகம் (ஸல்) உணர்ந்தார்கள்.

    ஏழு வானங்களில் சந்தித்த அனைத்து இறைத்தூதர்களும் முஹம்மது (ஸல்) அவர்களின் நபித்துவத்தை ஏற்றுக் கொண்டார்கள்.

    ஸஹீஹ் புகாரி 1:8:349, 2:25:1636, 4:60:3342, 4:63:3887, 3:59:3207, 7:97:7517, ஸஹீஹ் முஸ்லிம் 1:259, 1:264

    - ஜெஸிலா பானு.
    அனைத்தும் மெய்யான ஹிஜ்ரத் என்பது நம்மிடமுள்ள, நம்மைச்சுற்றியுள்ள தீமைகளை விலக்கி நடப்பதில் தான் இருக்கிறது. வாருங்கள், நன்மைகளை அள்ளுவோம், தீமைகளைத் தள்ளுவோம்.
    ‘ஹிஜ்ரத்’ என்ற அரபுச்சொல்லிற்கு ‘இடம்மாறுதல்’, ‘விட்டுவிடுதல்’, ‘வெறுத்துவிடுதல்’ என்று பொருள் பலவுண்டு. அரபுநாட்டில் தோன்றிய நபி அவர்கள் ‘இறைவன் ஒருவனே’ என்ற ஓரிறைக்கொள்கையைப் பின்பற்றி தொடர்ந்து பிரசாரம் செய்து வந்தார்கள். ஆனால் மக்கா நகர மக்கள் இதை ஏற்க மறுத்தனர். மேலும் முகமது நபி அவர்கள் இறைத் தூதரல்ல என்று மறுக்கவும், வெறுக்கவும் ஆரம்பித்தார்கள்.

    அப்போது, அல்லாஹ்வின் ஆணைப்படி மக்காவில் இருந்து ஐநூறு மைல்களுக்கு அப்பாலுள்ள மதீனா நகரை நோக்கி புறப்பட்டார்கள் நபியவர்கள். இப்புனிதம் மிகுந்த நகர்வுப்பயணம் தான் ‘ஹிஜ்ரத்’ (புலம் பெயர்ந்து செல்லல்) என்று அழைக்கப்படுகிறது.

    நபிகளாரின் பொற்காலத்தில் ஹிஜ்ரி உட்பட எவ் விதமான வருடக்கணக்கும் வழக்கத்தில் இருக்கவில்லை. முஹர்ரம், ஸஃபர் எனத்தொடங்கி துல்ஹஜ்ஜூ என முடியும் 12 அரபு மாதப்பெயர்கள் மட்டுமே புழக்கத்தில் இருந்தன. இதை இறை மறை வசனம் ஒன்று உறுதிப்படுத்திக்காட்டுகிறது இப்படி:

    ‘நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும். அவற்றில் நான்கு (மாதங்கள் முஹர்ரம் 1, ரஜப்7, துல்கஅதா 11, துல் ஹஜ் 12) புனிதமானவை; இது தான் நேரான மார்க்கமாகும். ஆகவே, அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள்’. (திருக்குர்ஆன் 9:36)

    நபிகளார் காலத்திற்கு பின்னர் உமர் (ரலி) அவர் களின் உன்னதமான ஆட்சிகாலத்தில் கடிதங்கள் பல திசைகளில் இருந்து வருவதும், போவதுமாய் இருந்தன. அன்றொரு நாள் கூஃபா நகரின் ஆளுநர் அபூ மூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்களிடமிருந்து கடிதம் ஒன்று வந்திருந்தது. அதில் இப்படி எழுதப்பட்டிருந்தது:

    ‘ஆண்டுக்கணக்கு என்று எதுவும் நம்மிடம் இல்லாமல் இருப்பதால், அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகள் எதுவும் அது எந்த வருடம் நிகழ்ந்தது என்று தெரியாமல் அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தி விடுகிறது. எனவே வெகுவிரைவாக தாங்கள் இதற்கொரு நல்ல முடிவை எடுக்க வேண்டும்’.

    இதன் அடிப்படையில் தான் ஆலோசனைக் கூட்டம் ஒன்று உமர் (ரலி) தலைமையில் நடைபெற்றது. அதில் மா நபியின் பிறந்த தினம், நபி மரணித்த தினம், நபி பட்டம் பெற்ற தினம், நபி ஹிஜ்ரத் செய்த தினம் என நபிகளாரின் வாழ்க்கையில் ஏற்பட்ட பல்வேறு திருப்புமுனை தினங்கள் இருந்தன. இதில் ஒன்றைத் தேர்வு செய்து அந்நாளிலிருந்து இஸ்லாமிய ஆண்டைத் தொடங்க முன் மொழியப்பட்டன. அவற்றில் அலி (ரலி) யின் கருத்தான ‘ஹிஜ்ரத் தினம்’ தேர்வாகி அன்று முதல் இந்த ‘ஹிஜ்ரத், ஹிஜ்ரி’ என்ற சொல் அனைவரின் உதடுகளிலும் உச்சரிப்புப் பெறத்தொடங்கிற்று.

    ஹிஜ்ரத் வரலாறு நீண்டது, நெடியது. ஆனால் நபிகளார் நமக்கு இன்னொரு ஹிஜ்ரத்தை அறிமுகம் செய்கிறார்கள்:

    ‘எவர் சிறிய, பெரிய பாவங்களை விட்டொழிக் கிறாரோ அவர்தான் மெய்யாலுமே ஹிஜ்ரத் செய்தவர் ஆவார்’ (நூல்: புகாரி)

    இன்றைக்கு நம்மிடையே மிகஅவசியமான ஒன்றும் இதுதானே. எங்கு திரும்பினாலும் பாவம், குற்றம், குறை, தீமை என தவறுகளின் பட்டியல் நீளுகிறது. இந்நிலை முதலில் மாற வேண்டாமா? அப்படியானால் நாம் செய்யவேண்டிய முதல் பணி, நமது பாவங்களை விட்டொழிக்க முயற்சிப்பது தான்.

    நபிகளார் நவின்றார்கள்: ‘உங்களில் எவர் ஒரு குறையை காண்கிறாரோ, முதலில் அவர் தமது கையால் அதை தடுக்கட்டும். இயலாவிட்டால், தமது நாவால் அதை தடுக்கட்டும். அதற்கும் இயலாவிட்டால், தமது மனதால் வருத்தப்படட்டும். இதுதான் இறைவிசுவாசத்தின் இறுதி நிலையாகும்’. (நூல்: முஸ்லிம்)

    தவறுகள் அவ்வப்போது உடனுக்குடன் களையப்படும் போதுதான் நன்மைக்கதவுகள் நமக்கும், நம்மைச்சுற்றி இருப்பவர்களுக்கும் நன்கு விசாலமாகத் திறக்கும்.

    ‘மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும், தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும். இன்னும் அவர்களே வெற்றி பெற்றவர்கள்’ (திருக்குர்ஆன்: 3:104).

    வெற்றிக்கு வழி நன்மையை ஏவுவது மட்டுமல்ல, தீமையை தடுப்பதும் தான் என்கிறது இந்த இறை வசனம்.

    இதனால்தான் இன்னொரு வசனம் இப்படிப்பட்டவர்களை பாராட்டுகிறது இவ்வாறு:

    ‘மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்; இன்னும் அல்லாஹ்வின் மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்’. (3:110)

    நம்மில் சிலர் நன்மையைச் செய்வதும் இல்லை; தீமையைத் தடுப்பதும் இல்லை. இப்படிப்பட்டவர்கள் தான் மிகவும் அபாயத்திற்குரியவர்கள். இறைவனின் சாபத்திற்கு உரியவர்களும் இவர்களே. இதற்கான சான்று திருக்குர்ஆனிலும் உண்டு.

    தாவூத் நபி காலத்தில் வாழ்ந்த மக்களுக்கு ‘நீங்கள் சனிக்கிழமை மட்டும் மீன் பிடிக்க வேண்டாம்’ என்று இறைக்கட்டளை வந்தது. அதை குறுக்கு வழியில் சிலர் வரம்புமீறிய போது, அதைப்பார்த்த ஒருசிலர் அதை தடுக்க முன்வரவில்லை. அவர்கள் தான் அருவருப்பான குரங்குகளாக உருமாற்றப்பட்டார்கள் என்கிறது பின்வரும் இறைவசனம்:

    ‘(நபியே) கடற்கரையிலிருந்த (ஓர்) ஊர் மக்களைப்பற்றி நீர் அவர்களைக் கேளும். அவர்கள் (தடுக்கப்பட்ட) சனிக்கிழமையன்று வரம்பை மீறி (மீன் வேட்டையாடி)க் கொண்டிருந்தார்கள்; ஏனென்றால் அவர்களுடைய சனிக்கிழமையன்று (கடல்) மீன்கள், அவர்களுக்கு(த் தண்ணீருக்குமேலே தலைகளை வெளியாக்கி) கொண்டு வந்தன.

    ஆனால் சனிக் கிழமையல்லாத நாட்களில் அவர்களிடம் (அவ்வாறுவெளியாகி) வருவதில்லை. அவர்கள் செய்து கொண்டிருந்த பாவத்தின் காரணமாக அவர்களை நாம் இவ்வாறு சோதனைக்குள்ளாக்கினோம். அவர்கள் எது குறித்து உபதேசிக்கப்பட்டார்களோ, அதனை அவர்கள் மறந்து விட்டபோது, அவர்களைத் தீமையைவிட்டு விலக்கிக் கொண்டிருந்தவர்களை நாம் காப்பாற்றினோம்; வரம்புமீறி அக்கிரமம் செய்து கொண்டிருந்தவர்களுக்கு, அவர்கள் செய்து வந்த பாவத்தின் காரணமாக கடுமையான வேதனையைக் கொடுத்தோம். தடுக்கப்பட்டிருந்த வரம்பை அவர்கள் மீறிவிடவே, ‘நீங்கள் இழிவடைந்த குரங்குகளாகி விடுங்கள்’ என்று அவர்களுக்கு நாம் கூறினோம்”. (7:163,165,166)

    ஆக, மேற்கண்ட அனைத்தும் மெய்யான ஹிஜ்ரத் என்பது நம்மிடமுள்ள, நம்மைச்சுற்றியுள்ள தீமைகளை விலக்கி நடப்பதில் தான் இருக்கிறது.

    வாருங்கள், நன்மைகளை அள்ளுவோம், தீமைகளைத் தள்ளுவோம்.

    மவுலவி எஸ்.என்.ஆர். ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு.
    நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. உலக வரலாற்றிலேயே சமயம், சமுதாயம், சாம்ராஜ்யம் ஆகிய மூன்றின் நிறுவனராக விளங்கிய பெருமை அவர்களுக்கு மட்டுமே இருக்கிறது.
    கெய்ரோ நகரத்தில் உள்ள ஒரு விடுதியின் மூன்றாவது மாடியில் நின்று, கீழே வீதியில் நடக்கும் நிகழ்வுகளைப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். அங்கே அவரது கண்களையும், கவனத்தையும் கவர்ந்தது ஒரு காட்சி.

    ஒரு முதியவர், வலிமை மிக்க வாலிபர் ஒருவரை தாறுமாறாகப் பேசுகிறார். அதோடு மட்டுமல்லாமல் சரமாரியாகத் தாக்குகிறார். அந்த வாலிபரோ ஏச்சையும் பேச்சையும், அடியையும் தாங்கியபடி மிகுந்த பொறுமையுடன் பதில் அளித்துக் கொண்டிருக்கிறார்.

    இந்த நிகழ்ச்சியை மேலே இருந்து பார்த்துக் கொண்டிருந்த மனிதருக்கு வேதனையாக மட்டுமல்ல, வியப்பாகவும் இருந்தது. கீழே இறங்கி வந்தார்.

    அந்த இளைஞரைப் பார்த்து, “நண்பரே! நீரோ நல்ல உடற்கட்டோடு இருக்கின்ற வாலிபர்; உம்மைத் தாக்கியவரோ வயதானவர். நீர் திருப்பி ஓர் அடி கொடுத்தாலே அவர் சுருண்டு விழுந்து விடுவார். இந்த நிலையில் அவரது ஏச்சையும், பேச்சையும் அவமானத்தையும், அடியையும் ஏன் சகித்துக் கொண்டீர் என்பதை நான் தெரிந்து கொள்ளலாமா?” என்று கேட்டார்.

    அதற்கு அந்த வாலிபர், “நான் அந்தப் பெரியவரிடம் கடன் வாங்கி இருக்கிறேன். என்னால் அவருக்குச் செலுத்த வேண்டிய கடன் தொகையை குறித்த தவணையில் செலுத்த முடியவில்லை. அந்த ஆத்திரத்தில் அவர் என்னை ஏசுகிறார்; தாக்குகிறார். அவர் செய்வதை நான் சகித்துக் கொள்வதுதானே நியாயம்? மேலும் ‘வாங்கிய கடனை முறைப்படி திரும்பச் செலுத்தி விடுங்கள்; முதியவர்களை மதியுங்கள்’ என்று எங்கள் நபி கூறியுள்ளார்கள். அதனால்தான் நான் பொறுமையைக் கடைப்பிடித்தேன்” என்று தெரிவித்தார்.

    1,400 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தீர்க்கதரிசி கூறிய போதனைகள், இருபதாம் நூற்றாண்டிலும் ஒரு வாலிபரின் இதயத்தை இந்த அளவுக்கு பண்படுத்த முடிகிறது என்றால், அந்த நபியின் சொற்கள் எத்துணை ஜீவன் உள்ளவையாய் இருக்க வேண்டும்? என்று ஆச்சரியத்தின் உச்சத்திற்கே சென்றார். இஸ்லாத்தை அறிந்து கொள்ள அதைக் கற்று தெளிவு பெற்றார். அப்படியே இஸ்லாத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

    அவர்தான் திருக்குர்ஆனுக்கு ஆங்கில மொழியில் அற்புதமான மொழிபெயர்ப்பை ஆக்கித்தந்த அறிஞர் முகம்மது மர்மடியூக் பிக்தால்.

    பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மறைந்த ஒரு மாமனிதர் அன்று கூறிய- நடைமுறைப்படுத்திக் காட்டிய அனைத்தையும் அப்படியே பின்பற்றும் ஒரு சமுதாயம் உலகில் இருக்கிறது என்றால், அது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சமுதாயம் மட்டும்தான். வணக்க வழிபாடுகளில் மட்டுமல்லாமல் குடும்ப வாழ்க்கை, தனி மனிதன் சார்ந்த வாழ்க்கை நெறி, கொடுக்கல் வாங்கல் என எந்தப் பிரச்சினையானாலும், செயல் முறையானாலும் நபிகளார் கட்டளையிட்டவாறு நடக்கக்கூடிய சமுதாயம் பதினான்கு நூற்றாண்டுகளைக் கடந்தபோதிலும் இந்த உலகில் இருந்து வருவதைக் கண்கூடாகக் காண முடிகிறது.

    பெற்றோர், உற்றார், மனைவி, குழந்தைகளை விடவும், இன்னும் சொல்லப்போனால் தன் உயிரை விடவும் நபிகளாரை நேசிக்கக் கூடிய கோடிக்கணக்கான பேர் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

    நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. உலக வரலாற்றிலேயே சமயம், சமுதாயம், சாம்ராஜ்யம் ஆகிய மூன்றின் நிறுவனராக விளங்கிய பெருமை அவர்களுக்கு மட்டுமே இருக்கிறது.

    இறைவனால் அனுப்பப்பட்ட எல்லா இறைத்தூதர்களும் ‘இறைவனையே வணங்குங்கள்’ என்று எடுத்துரைக் கிறார்கள். அவர்களின் வழித்தோன்றல்கள், இறைவனை மறந்து அந்த இறைத்தூதர்களையே கடவுளாக்கி வணங்குகிறார்கள். புத்தரின் வரலாறும் அதுதான். கடவுளே இல்லை என்று சொன்ன புத்தரையே அவரது கருத்துக்கு மாறாக கடவுள் ஆக்கி விட்டார்கள். அவர் புத்த ‘பகவான்’ ஆகி விட்டார்.

    ஆனால் ‘இறைவனே பெரியவன்’ என்று சொன்ன நபிகளார், தன்னை சாதாரண மனிதராகவே கருத வேண்டும் என்ற கருத்தில் மிகவும் உறுதியாக இருந்தார்கள். அதில் இமாலய வெற்றியும் பெற்றார்கள். இன்றும் அவர்களது கல்லறை காணக்கூடிய இடமாக இருக்கிறதே தவிர வணங்கக்கூடிய இடமாக இல்லை.

    ஒவ்வொரு நாளும் ஐவேளைத் தொழுகை முஸ்லிம் களுக்குக் கடமை ஆக்கப்பட்டுள்ளது. அந்தத் தொழுகையின்போது ஒவ்வொரு பள்ளிவாசல்களிலும் தொழுகைக்கு வருமாறு தொழுகை அறிவிப்பு (‘பாங்கு’) செய்யப்படுகிறது.

    ‘அல்லாஹ் அக்பர்’ ‘அல்லாஹ் அக்பர்’ (இறைவன் மிகப் பெரியவன்) என்று தொடங்கும் அந்த அறிவிப்பில் ‘அஷ்ஹது அன்ன முகம்மதர் ரசூல்லாஹ்’ (முகம்மது நபி இறைவனின் திருத்தூதர்) என்ற சொற்றொடர் உள்ளது. இதில் நபிகளாரின் திருப்பெயரான ‘முகம்மது’ என்பது இடம் பெற்றுள்ளது. (ரசூல் என்பது இறைத்தூதரைக் குறிக்கும் சொல். நபி என்பதன் மற்றொரு பெயர். முக்கியமான இறைத்தூதர்களை ‘ரசூல்மார்கள்’ என்பர். ‘ரசூல்லாஹ்’ என்பதற்கு இறைத்தூதர் என்று அர்த்தம்.)

    தொழுகைக்கு அழைப்பு விடுப்பவர் இந்தத் தொடரை இருமுறை உச்சரிக்க வேண்டும். மேலும் தொழுகை தொடங்கும்போது ‘இகாமத்’ சொல்லப்படும். ‘இகாமத்’ என்பதற்கு ‘நிலை நாட்டல்’ என்பது பொருள். கூட்டுத் தொழுகை நடைபெறப் போவதாகச் செய்யப்படும் அறிவிப்பை இது குறிக்கும். இது பள்ளிவாசலுக்குள் இருப்பவர்களை கூட்டுத் தொழுகையில் கலந்து கொள்ளுமாறு விடுக்கப்படும் அழைப்பாகும்.

    இதிலும் நபிகளாரின் பெயர் இருமுறை இடம்பெறும். ஆக ஒருநாளில் ஒரு பள்ளிவாசலில் ஐவேளைத் தொழுகையின்போதும் நபிகளாரின் பெயர் இருபது முறை ஒலிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் ஏறத்தாழ 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் இருக்கின்றன. இதைக் கணக்கிட்டால் 4 கோடி முறை நபிகளாரின் திருப்பெயர் ஒலிக்கப்படுகிறது.

    பொழுதுகளை அடிப்படையாகக் கொண்டது தொழுகை. நாட்டுக்கு நாடு, இடத்துக்கு இடம், ஊருக்கு ஊர் தொழுகை நேரம் வேறுபடும். இதன் காரணமாக உலகளாவிய அளவில் எந்த நேரமும் ஏதாவது ஓர் இடத்தில் தொழுகை நடந்து கொண்டிருக்கும். இந்த வகையில் உலகம் முழுவதும் ஒரு நாளில் இரவு-பகல் என்றில்லாமல் எல்லா நேரமும் இடையறாது நபிகளாரின் பெயர் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கிடைத்துள்ள இந்தப் பெருமை உலகில் வேறு எந்த மனிதருக்கும் இல்லை.

    -பாத்திமா மைந்தன்.
    யமன் நாட்டைச் சேர்ந்தவர் மக்காவிற்கு வந்திருந்தபோது அங்குள்ள சில விஷமிகள் அவரிடம் சென்று “இங்கு ஒரு பைத்தியக்காரர், பித்துப் பிடித்தவர் இருக்கிறார். அவர் பெயர் முஹம்மது” என்று சொல்லி வைத்தனர்.
    லிமாத் அஸ்தீ என்பவர் மந்திரித்துப் பார்ப்பவர். யமன் நாட்டைச் சேர்ந்தவர். அவர் மக்காவிற்கு வந்திருந்தபோது அங்குள்ள சில விஷமிகள் அவரிடம் சென்று “இங்கு ஒரு பைத்தியக்காரர், பித்துப் பிடித்தவர் இருக்கிறார். அவர் பெயர் முஹம்மது” என்று சொல்லி வைத்தனர்.

    அதனை நம்பி லிமாத் அஸ்தீயும் முஹம்மது (ஸல்) அவர்களைத் தேடிச் சென்றார். நபிகளாரை சந்தித்து “முஹம்மதே, நான் ஷைத்தானின் சேட்டைகளை நீக்க மந்திரிப்பவன். உனக்கு மந்திரித்துப் பார்க்கவா?” என்று கேட்டார்.

    அதற்கு நபி முஹம்மது (ஸல்) “எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்விடமே உதவி  தேடுவோம், அவனே நேர்வழி காட்டுபவன். அவன் நேர்வழி காட்டியோரை யாரும் வழி கெடுக்க முடியாது. அவன் வழிகேட்டில் விட்டவனை யாரும் நேர்வழிப்படுத்திட இயலாது. வழிப்பாட்டிற்குரியவன். அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அவனுக்கு நிகரானவர் எவருமில்லை என்று நான் சாட்சி அளிக்கிறேன். நிச்சயமாக முஹம்மதாகிய நான் அவனது அடிமையும் அவனது தூதருமென்று சாட்சி கூறுகிறேன்” என்று மொழிந்ததைப் பார்த்து லிமாத் அஸ்தீ வாயடைத்துப் போனார்.

    “நீங்கள் சொன்னதைத் திரும்பச் சொல்லுங்கள்” என்று லிமாத் அஸ்தீ கேட்டார். நபி முஹம்மது (ஸல்) அவர்களும் மூன்று முறை இதையே வார்த்தை மாறாமல் சொன்னார்கள். அதைக் கேட்ட லிமாத் அஸ்தீ “நான் பித்துப் பிடித்தவன், ஜோசியக்காரன், சூனியக்காரன், ஏன் கவிஞர்களின் பேச்சையெல்லாமும் கேட்டிருக்கிறேன்.

    ஆனால் நீங்கள் கூறியது போல் இதற்கு முன் நான் கேட்டதே இல்லை. இவை கருத்தாழமிக்கவை, இதனை சராசரியானவர் மொழியவே முடியாது. உங்களது கையைக் கொடுங்கள் நான் இஸ்லாமை ஏற்கிறேன் என்று நான் இப்போதே ஒப்பந்தம் செய்கிறேன்” என்று ஆச்சர்யம் மாறாமல் கூறி, அந்த நொடியே இஸ்லாமை ஏற்றார்.

    இதைப் போன்றே வெவ்வேறு தருணங்களில். மக்கள் இஸ்லாத்தைத் தழுவினர்

    (ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம், சீறா இப்னு ஹிஷாம், அர்ரஹீக் அல்மக்தூம்)

    - ஜெஸிலா பானு.
    ×