என் மலர்tooltip icon

    இஸ்லாம்

    நபிகள் நாயகம் தங்களது இறுதிப் பத்தாண்டுகளில் பெரும் பேரும் புகழும் பெற்றதற்கு காரணம் அவர்களது மன்னிக்கும் மனப்பான்மை தான் என்றால் அது மிகையல்ல.
    மனிதன் சில நேரங்களில் அவன் அறிந்தோ, அறியாமலோ பிறருக்கு தீங்கிழைத்து விடுவதுண்டு. அல்லது அடுத்தவர்களின் இன்னல்களுக்கு சிலர் ஆளாகிவிடுவதும் உண்டு. இதுபோன்ற நேரங்களில் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று திருக்குர்ஆன் இவ்வாறு நல்வழி காட்டித் தருகிறது:

    ‘அந்த (பயபக்தியாளர்கள்) எத்தகையவர்களென்றால் மனிதர்க(ளின்தவறுக)ளை மன்னிப்பவர்கள். அல்லாஹ் (இவ்வாறு) நன்மை செய்கிறவர்களையே நேசிக்கிறான்’ (3:134).

    ‘நீங்கள் மன்னித்து விடுவது இறை பக்திக்கு மிக நெருக்கமானதாகும்’ (2:237).

    ‘எனவே (தவறு செய்தவர்களை) அவர்கள் மன்னித்து விடவும். அல்லாஹ் உங்களுக்கு மன்னிப்பதை நீங்கள் விரும்ப மாட்டீர்களா? மேலும் அல்லாஹ் மிக்க மன்னிக்கிறவன்; மிகக்கிருபையுடையவன்’ (24:22).

    அல்லாஹ் தரும் அற்புதமான மன்னிப்பை நாம் அழுது, தொழுது பெற்றுக்கொள்வது போல நாமும் நமக்கு தீங்கு செய்தவர்களின் குற்றங்குறைகளை மனதார மன்னிக்க முன்வரவேண்டும். ‘மன்னித்தல்’ என்பது அல்லாஹ்வுக்கு மிகமிக பிடித்தமான ஒருகுணம். அதுமட்டுமல்ல இதன்மூலம் நமது ‘தக்வா’ (பயபக்தியும்) பலம் பெறுகிறது.

    திருக்குர்ஆனின் வழியாக நாம் தக்வாவைப் பெறுவது போல் நாம் அடுத்தவர்களுக்கு அளிக்கும் ‘அஃப்வு’ (மன்னிப்பு வழங்குதல்) என்ற அற்புத நற்குணத்தின் மூலமும் இறையச்சத்தை நாம் பெறமுடியும்.

    புனித திருக்குர்ஆன், ‘மன்னியுங்கள், மன்னித்து விடுங்கள்’ என்று இதைத்தானே அடிக்கடி நமக்கு போதித்துக் கொண்டே இருக்கிறது.

    மன்னிப்பதற்கு முதலில் மனம் வர வேண்டும். உதட்டளவில் ‘உன்னை நான் மன்னித்து விட்டேன்’ என்று சொல்லிவிட்டு, மனம் முழுவதும் விரோதங்களை அடுக்கி வைத்திருப்பதில் எவ்வித அர்த்தமும் இல்லை. இந்தநிலை நம்மிடம் இருந்து நீங்க அற்புதமான வழி, நமது பகைவர்களை மன்னித்து, அவர்களின் குற்றங்குறைகளை முற்றிலுமாக மறந்துவிடுவது தான்.

    நமது கோபத்தை அடக்கினால் மட்டும் போதாது. கூடவே நமது மன்னிப்பையும் அதனுடன் சேர்த்தே வெளிப்படுத்தவேண்டும் என்பது திருக்குர்ஆன் கூறும் வழியாகும்.

    ‘அவர்கள் தமது கோபத்தை மென்று விழுங்கி விடுபவர்கள்; மனிதர்(களின் தவறு)களை மன்னிப்பவர்கள்’ (3:134).



    திருக்குர்ஆனில் இவ்வாறு கோபத்தை மென்று விழுங்குவது பற்றிச் சொன்ன அல்லாஹ், தொடர்ந்து கூறுகிறான், ‘மக்களின் குற்றங்களை மன்னிக்க வேண்டும்’. இதன் மூலம் கோபத்தை கைவிடுவதுடன், மன்னிக்கவும் வேண்டும் என்று வற்புறுத்துகிறான் இறைவன்.

    ஒருவருக்கொருவர் மன்னித்துக் கொள்கிறபோதுதான் நமக்குள் சமத்துவம், சகோதரத்துவம், சமாதானம் வளரும். பகை, வெறுப்பு, வஞ்சம், வைராக்கியம், சண்டை, சச்சரவு, விரோதம், குரோதம் என்பன போன்ற தீய எண்ணங்கள் ஒழியும்.

    மேலும் இதுபோன்ற கெட்ட எண்ணங்களை நெஞ்சம் நிறைய நிரப்பிவைத்திருக்கிற போது அந்நெஞ்சத்தில் இருந்து மன்னிப்பை நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்? பிறரை நாம் மன்னிப்பதால் நமது தரம் ஒன்றும் குறைந்து விடப் போவதில்லை. சொல்லப்போனால், நமது உயர்வின் தரப்பட்டியல் ‘பயபக்தியாளர்’ என பதவி உயர்வு பெற்று விடுகிறது. இதைவிட வேறு என்ன உயர் பதவி வேண்டும் நமக்கு.

    அருளாளன் அல்லாஹ் ‘மன்னிப்பவன்’ என புனித குர்ஆனில் சுமார் எழுபது இடங்களுக்கும் மேல் இடம்பெற்றுள்ளது. ‘எழுபது தாய்மார்களை விட கிருபையுள்ளவன் அவன்’ என்கிறது இன்னொரு நபிமொழி.

    ஒரு தாயின் கிருபையே, தவறு செய்து விட்ட தன் பிள்ளைகளை முற்றிலும் மறந்து மனப்பூர்வமாக மன்னிப்பது தானே. அப்படியானால் நாம் ஏன் நம்மைச் சுற்றியிருப்பவர்களை மன்னிக்க முயற்சிக்கக் கூடாது?.

    நமது உறவினர்கள், அல்லது நண்பர்களில் சிலரது உறவை ஏதோவொரு சிறு பிரச்சினையினால் நீண்டகாலமாக புறக்கணித்திருக்கலாம். அன்றைக்கே அவற்றை மறந்து மன்னித்திருந்தால் இன்றைக்கு நமது நட்புறவும், நல்லுறவும் இன்னும் சற்று மேம்பட்டிருக்கும் அல்லவா?.

    இப்போதும் கூட காலம் ஒன்றும் கடந்து விடவில்லை, ஏதோ ஒரு நன்னாள், பண்டிகை நாள், சுபநாள், பிறப்பு, இறப்பு தினங்கள், வீட்டு விசேஷங்கள் போன்றவற்றை முன் வைத்து ஒருவருக்கொருவர் மனம் விட்டுப்பேசி உறவைப்பேணலாம். வாழ்கிற நாட்களை அற்பமாக வாழாமல் மிக அற்புதமாக வாழலாமே.

    யாராவது செய்துவிட்ட தமது தவறுகளை நினைத்து வருந்தி நம்மிடம் மன்னிப்புக்கேட்டால், நிச்சயம் நாமும் அவற்றை மறந்து, மனப்பூர்வமாக நமது மன்னிப்பை வழங்க வேண்டும். இதுதான் ஒரு இறையடியாரின் இன்னழகு.

    மனம் முழுவதும் அவரவர்களின் குற்றங்களை பட்டியல் போட்டு வைத்திருப்பதில் நமக்கு என்ன பலன்?. நல்ல முறையில் அவர்களை மன்னித்தால் அல்லவா நமக்கு நல்லதொரு பலன் கிடைக்கும்.

    நீங்கள் ஒருமுறை மன்னித்துப் பாருங்கள். மன்னிப்பின் பலன் புரியவரும் உங்களுக்கு. அதுபோல, நீங்கள் செய்து விட்ட தவறுக்காக நீங்கள் யாரிடமாவது மன்னிப்பை பெற்றுப் பாருங்கள். அப்போதுதான் உங்களுக்கு மன்னிப்பின் அருமை புரியும்.

    இன்றைக்கு தேசமெங்கும் பல குடும்பங்களில் விவாகரத்துப் பிரச்சினைகள் தலைதூக்கி நிற்பதற்கு மூலகாரணம் கணவன்-மனைவி இருவரும் தங்களுக்குள் விட்டுக்கொடுப்பதில்லை; மன்னிப்பதில்லை என்பதுதான். இந்த குற்றச்சாட்டுகள் தான் முதன்மை பெற்றிருப்பதை பல புள்ளிவிவரங்கள் புலப்படுத்துகின்றன.

    எனவே முதலில் திருமணத் தம்பதியர் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டியது, மன்னிப்பு என்ற மகத்தான பண்புதான். இந்த குணம் மட்டும் நம்மிடம் வந்துவிட்டால் நிச்சயம் நாம் தான் மேம்பட்டவர்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. நபிகள் நாயகம் தங்களது இறுதிப் பத்தாண்டுகளில் பெரும் பேரும் புகழும் பெற்றதற்கு காரணம் அவர்களது மன்னிக்கும் மனப்பான்மை தான் என்றால் அது மிகையல்ல. அவ்வாறு தான் அவர்களது தோழர்களும் வாழ்ந்தார்கள். அவர்களை அடியொற்றி வாழையடி வாழையாக வந்தவர்களும் வாழ்ந்தார்கள். எனவே நாமும் அவ்வாறே மாற்றார் யாராயினும் அவரவரின் குற்றங்குறைகளை மனதார மன்னித்து வாழ்வோமாக.

    வாருங்கள், நமது தவறுகளை தவிர்ப்போம், பிறர் தவறுகளை மன்னிப்போம்.

    மவுலவி எஸ்.என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு.
    இறை நினைவுச் சபையில் நாம் ஒதுங்குவதும், அந்த இடத்தை பூர்த்தி செய்வதும் இறைவனை அடைவதும், சொர்க்கத்தில் இடத்தை முன்பதிவு செய்வதும் ஆகும் என்பது நபி மொழி கூறும் உண்மைச்சான்றாகும்.
    சபைகளில் சிறந்த சபை, உயர்ந்த சபை, புனித சபை, நன்மை தரும் சபை, அமைதி சபை, ஆன்மிக சபை, அருட்சபை, திருச்சபை, சுவனசபை எது?

    எந்த சபையில் இறைவனைப் பற்றி நினைவு கூரப்படுகிறதோ அந்த சபை சிறந்த சபை, அதுமட்டுமல்ல... அது சுவன பூஞ்சோலையாகவும் மாறிவிடுகிறது.

    இதுதொடர்பான நபி மொழி குறித்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்கள்:

    ‘நீங்கள் சுவன பூஞ்சோலைகளை கடந்து சென்றால், நன்றாக மேய்ந்து கொள்ளுங்கள்’ என நபி (ஸல்) கூறினார்கள்.

    ‘இறைத்தூதரே, சுவன பூஞ்சோலை என்றால் என்ன?’ என நபி தோழர்கள் கேட்டனர்.

    ‘அது இறைவனை நினைவு கூரப்படும் சபை’ என நபி (ஸல்) பதில் அளித்தார்கள்’.

    நன்மையும், இறையருளும், மன அமைதியும் கிடைக்கும் இறைநினைவு திருச்சபையில் நாம் கலந்து கொள்ளும் போது அங்கே கிடைக்கும் இடத்தை பாக்கியமாக கருதி, அந்த இடத்தை நாம் பூர்த்தி செய்ய வேண்டும். இது போன்ற சபையில் நாம் வெட்கப்பட்டு ஒதுங்கினாலோ, புறக்கணித்தாலோ, இறைவனும், இறையருளும் நம்மை விட்டும் புறக்கணிக்கப்படும்.

    இறை நினைவுச் சபையில் நாம் ஒதுங்குவதும், அந்த இடத்தை பூர்த்தி செய்வதும் இறைவனை அடைவதும், சொர்க்கத்தில் இடத்தை முன்பதிவு செய்வதும் ஆகும் என்பது நபி மொழி கூறும் உண்மைச்சான்றாகும்.

    ‘ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் மக்களுடன் இறையில்லத்தில் அமர்ந்திருக்கும் பொழுது மூன்று நபர்கள் முன்னோக்கி வந்தார்கள். அவர்களில் இருவர் நபி (ஸல்) அவர்களை நோக்கினர்; மூன்றாம் நபர் பின்னோக்கிச் சென்றுவிட்டார். முன்னோக்கிய இருவரில் ஒருவர் சபையில் இடைவெளியை கண்டு கொண்டு அங்கே அமர்ந்து கொண்டார். மற்றொருவர் சபையினருக்கு பின்னால் அமர்ந்து கொண்டார். மூன்றாமவர் சபையை புறக்கணித்து விட்டார்.

    சபை முடிந்த பிறகு ‘இம்மூவரைப் பற்றி நான் உங்களுக்கு சில தகவலை அறிவிக்கட்டுமா?’ என நபி (ஸல்) கேட்டார்கள். முதலாம் நபர் அல்லாஹ்வின் பக்கம் ஒதுங்கிக்கொண்டார்; அல்லாஹ்வும் அவரை தன் அருளின் பக்கம் இழுத்துக் கொண்டான். இரண்டாமவர் கூட்ட நெரிசலைக் கண்டு வெட்கப்பட்டு பின்னால் அமர்ந்து கொண்டார். அல்லாஹ்வும் அவரைக் கண்டு வெட்கப்பட்டு விலகிக் கொண்டான். மூன்றாம் நபர் சபையை புறக்கணித்தார்; அல்லாஹ்வும் தனது அருளை விட்டும் அவரை புறக்கணித்து விட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (நூல்: புகாரி, முஸ்லிம்: அறிவிப்பாளர் அபூவாகித் (ரலி).

    ‘இறைவிசுவாசிகளே, சபைகளில் ‘நகர்ந்து இடங்கொடுங்கள்’ என்று உங்களுக்குச் சொல்லப்பட்டால் நகர்ந்து இடம் கொடுங்கள்; அல்லாஹ் உங்களுக்கு இடம் கொடுப்பான்; தவிர ‘எழுந்திருங்கள்’ என்று கூறப்பட்டால் உடனே எழுந்திருங்கள். (திருக்குர்ஆன்: 58:11)

    இறைவனின் திருச்சபையில் அனைவரும் சமமானவர்களே. அங்கே படித்தவன்–பாமரன், ஆண்டி–அரசன், முதலாளி–தொழிலாளி, உயர்ந்தவன்–தாழ்ந்தவன், ஏழை–பணக்காரன், சிறியவன்–பெரியவன் போன்ற பாகுபாடு கிடையாது.

    சாதாரண ஒருவரை எழுப்பிவிட்டு அவர் இடத்தில் உயர்வான அந்தஸ்தில் இருப்பவரை அமர வைப்பதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. எனினும் கொஞ்சம் நகர்ந்து சென்று இடம் தாருங்கள் என்று கூறலாமே தவிர, இடத்தை காலி செய்யுங்கள் என்று கூற அனுமதி கிடையாது. இதுதான் இஸ்லாம் கூறும் சபை நாகரிகம் ஆகும்.

    சபை நாகரிகம் கருதி அமர்ந்திருப்பவர்கள் கொஞ்சம் விலகி மற்றவர்களுக்கு இடம் அளிக்கும்போது அவருக்கு இறைவனின் கருணை கிடைக்கிறது.

    ‘இரு நபர்களின் அனுமதியின்றி அவர்களுக்கிடையில் விலக்கி வைப்பதை நபி (ஸல்) அவர்கள் எவருக்கும் ஆகுமாக்கி வைக்கவில்லை’ (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ்பின் அமர் (ரலி) அஹ்மது).



    இது போன்ற நாகரிகமான சபையின் மரபுகளை இஸ்லாம் அறிவுறுத்தி, சபையின் புனிதத்தை காக்கிறது. சபையின் புனிதம் காக்க இஸ்லாம் பல்வேறு விதமான சபை ஒழுங்குகளை போதிக் கிறது. அந்த சபை ஒழுக்கங்கள் வருமாறு:–

    1. சபைக்கு வருபவர் முற்பகுதி காலியாக இருக்கும் போது, பிற்பகுதியில் அமராமல் முற்பகுதியை பூர்த்தி செய்யவேண்டும்.

    2. ஒருவர் சபையில் நிரந்தரமாக ஓரிடத்தை சொந்தமாக்கிக் கொள்ளக் கூடாது.

    3. சபையில் அமர்ந்திருப்பவரை எழுப்பி அந்த இடத்தில் மற்றொருவர் அமரக்கூடாது.

    4. ஒருவர் எழுந்திருக்கும் போது, தமது சார்பாக அடுத்தவரை அமர்த்தக்கூடாது.

    5. ஒருவர் தான் இருந்த இடத்திலிருந்து எழுந்து விட்டு சென்ற பிறகு, திரும்பவும் சபைக்கு வருகை புரிந்தால், முதலில் அமர்ந்த இடத்தில் மீண்டும் அமர அவருக்கு முழு உரிமை உள்ளது.

    6. சபையில் அமர்ந்தால் அங்கும் இங்கும் பார்க்கக் கூடாது.

    7. சபையின் சப்தத்தை உயர்த்தி பேசக்கூடாது.

    8. சபையில் பேசப்படுவதை செவிதாழ்த்திக் கேட்க வேண்டும்.

    9. ஒரு சபை நடக்கும்போது போட்டி சபையோ மாற்று சபையோ நடத்தக்கூடாது.

    10. சபையில் வைத்து கொட்டாவி விடக்கூடாது.

    11. சபையில் ஒருவரை தாண்டி ஒருவர் செல்லக் கூடாது. இடையில் இடம் இருந்தால், அருகில் உள்ளவர் அந்த இடத்தை நிரப்பி, பின் வருபவருக்கு வசதியாக இடம் கொடுக்க வேண்டும்.

    12. சபையில் தூங்கக்கூடாது; தூக்கம் மிகைத்தால், இடத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.

    13. சபையில் இருக்கும்போது, கையை மூக்கில் வைப்பதும், காது குடைவதும், கண்ணை நோண்டுவதும், இதுபோன்ற ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபடக்கூடாது.

    14. சபையில் இரண்டு நபர்களுக்கு மத்தியில் அவர்களின் அனுமதியின்றி பிரிவை ஏற்படுத்தக்கூடாது.

    15. சபை நிறைவு பெற்றால், யாருக்கும் இடையூறு இல்லாமல் அமைதியாக கலைந்துவிட வேண்டும்.

    மவுலவி அ.செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து,
    திருநெல்வேலி டவுண்.
    வழிகளில் நல்ல வழி, கெட்ட வழி என்று இரண்டு வகை உண்டு. அல்லாஹ்வும் அவனது ரசூலும் காட்டிய வழி நல்வழி. அதற்கு எதிரானது தான் ஷைத்தான் நம்மை ஏமாற்றிக் காட்டிக்கெடுக்கும் தீயவழி.
    வழிகளில் நல்ல வழி, கெட்ட வழி என்று இரண்டு வகை உண்டு. அல்லாஹ்வும் அவனது ரசூலும் காட்டிய வழி நல்வழி. அதற்கு எதிரானது தான் ஷைத்தான் நம்மை ஏமாற்றிக் காட்டிக்கெடுக்கும் தீயவழி.

    அல்லாஹ் திருக்குர்ஆனில் இவ்வாறு கூறுகிறான்: 'இறை நம்பிக்கையாளர்களே! இஸ்லாமில் முழுமையாக நீங்கள் நுழைந்து விடுங்கள்; தவிர ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; நிச்சயமாக அவன் உங்களுடைய பகிரங்கமான பகைவனாக இருக்கிறான்'. (2:208)

    'நிச்சயமாக ஷைத்தான் அடியார்களுக்கு மத்தியில் குழப்பம் செய்திடுவான்; நிச்சயமாக ஷைத்தான் மனிதனுக்கு பகிரங்கமான விரோதியாக இருக்கிறான்'. (17:53)
    'ஓரிறை நம்பிக்கையாளர்களே! ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர் கள்; எவர் ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறாரோ அப்பொழுது நிச்சயமாக அவன் மானக்கேடானதைக் கொண்டும், வெறுக்கப்பட்டதைக் கொண்டும் ஏவுவான்'. (24:21)

    'நபியே நீர் கூறுவீராக! என் இறைவா ஷைத்தான்களின் தூண்டுதல்களை விட்டும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன்'. (23:97)

    நாம் நேரான பாதைகளில் செல்கிறபோது, நம் மனம் தவறுகளை நோக்கி திரும்புகிறது என்றால், இதன் பின்னணியில் இருப்பது ஷைத்தான் தான் என்பதை நாம் உணர்ந்து கொள்ளவேண்டும். அதனால் தான் எந்த ஒரு நற்செயலை செய்யத் தொடங்கும் முன்னர் 'அஊது பில்லாஹி மினஷ்ஷைத்தா னிர்ரஜீம்' (இறைவா தூக்கி வீசப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்) என்று ஓதிக்கொள்ள அல்லாஹ்வும், அவனது ரசூலும் கட்டளையிட்டுள்ளார்கள்.

    'நீங்கள் உணவு சாப்பிடும் முன்பு 'பிஸ்மில்லாஹ்' என்று சொல்லிக்கொள்ளுங்கள்; இல்லையெனில், உம்முடன் ஷைத்தானும் சேர்ந்து (அவ்வுணவிலுள்ள பரகத் எனும் இறையருளை) சாப்பிடுகிறான்'. (நூல்: ஷரஹ் சுன்னா)

    'நிதானம் அல்லாஹ்விற்குரியது, அவசரம் ஷைத்தானுக்குரியது'. (நூல் : திர்மிதி)

    நம்மை வழிகெடுக்கும் ஷைத்தானைக் குறித்தும், அவனை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுவது குறித்தும் ஏராளமான பதிவுகள் உள்ளன. அவை அனைத்தும் நாம் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகின்றன.

    நமது வாழ்நாள் முழுவதும் ஷைத்தானின் வழியில் இருந்து விலகி இருக்க, திருக்குர்ஆன் காட்டும் திருவழியிலும், நபிகளார் காட்டும் நல் வழியிலும் என்றும் நடப்போம், அளவில்லா நன்மைகள் பெறுவோம்.
    வானத்தைப் போலவே பூமியிலும் பல அடுக்குகள் இருப்பதாகக் கூறிய இறை வசனத்தை மெய்ப்பிக்கும் வகையில் இன்றைய விஞ்ஞானிகள் ஆய்வும் அமைந்துள்ளது.
    “அல்லாஹ்தான் ஏழு வானங்களையும் இன்னும் பூமியில் இருந்தும் அவற்றைப் போலவும் படைத்தான். அவற்றின் (வானங்கள், பூமியின்) இடையே அவன் கட்டளை இறங்கிக் கொண்டே இருக்கிறது” (திருக்குர்ஆன்-65:12).

    ஏழு வானங்களையும், பூமியில் அவற்றைப் போலவும் படைத்ததாகத் திருமறையில் இறைவன் கூறுகின்றான்.

    நாம் வாழ்கின்ற இந்தப் பூமியைப் போல, பிரபஞ்சத்தில் மேலும் ஆறு பூமிகள் இருப்பதாக இந்த வசனத்திற்குப் பொருள் கொள்ளக்கூடாது.

    எவ்வாறு விண்ணில் ஏழு வானங்கள் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளதோ, அவ்வாறே பூமியும் அதுபோன்று படைக்கப்பட்டுள்ளது என்றே பொருள் கொள்ள வேண்டும். இதனால் நாம் வாழும் பூமி ஒன்றின் மேல் ஒன்றாகப் பல அடுக்குகளைக் கொண்டது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

    ‘பூமி முழுவதும் ஒரே திடப்பொருளால் ஆனது’ என்றே மனிதர்களும் அறிவியல் அறிஞர்களும் கருதி வந்தனர். இப்போதுதான் பூமியில் பல அடுக்குகள் இருக்கின்றன என்பதை விஞ்ஞான உலகம் ஒப்புக் கொண்டுள்ளது.

    இதன்படி பூமியின் கட்டமைப்பு மூன்று முக்கிய அடுக்குகளைக் கொண்டுள்ளது. இவை மேல் அடுக்கான பூமித்தட்டு, அதற்குக் கீழே அமைந்துள்ள ‘மேன்டில்’ எனப்படும் இரண்டாம் அடுக்கு, உட்கரு எனப்படும் மைய அடுக்கு ஆகும்.

    இந்த மூன்று அடுக்குகள் குறித்து சுருக்கமாகப் பார்ப்போம்.

    உட்கரு எனப்படும் மைய அடுக்கு (கோர்):-

    இந்த அடுக்கு கனம் வாய்ந்த இரும்பு, நிக்கல் ஆகிய உலோகப் பொருட்களால் நிரம்பியுள்ளது. பூமி தோன்றி ஆரம்ப காலத்தில் இது ஒரு நெருப்புக் கோளத்தைப் போல் அதிக வெப்ப நிலையில் இருந்தது. இந்த வெப்ப ஆற்றலின் காரணமாக பூமியின் உள்புறத்தில் இருந்த கனிம, உலோகப் பொருட்கள் உருகிக் குழம்பாகிப் போய் இருந்தன.

    பூமியின் மையத்தில் நிலவும் ஈர்ப்பு ஆற்றலின் காரணமாக கனமான உலோகப் பொருட்கள் மையப்பகுதியை நோக்கி ஈர்க்கப்பட்டன. மற்ற மூலக்கூறுகள், பாறைகள் ஆகியவை தத்தம் கனத்திற்கு ஏற்றபடி முறையே மேல் அடுக்குகளில் வெவ்வேறு ஆழத்தில் படிந்து விட்டன. ‘உட்கரு’ எனப்படும் மைய அடுக்கு, உள்மையம், வெளி மையம் என மேலும் இரண்டு கிளை அடுக்குகளாகப் பிரிந்துள்ளது. இரும்பு, நிக்கல் ஆகிய உலோகப் பொருட்கள் உள் மையத்தில் திடத்தன்மையிலும், வெளி மையத்தில் திரவத் தன்மையிலும் அமைந்துள்ளன.

    ‘மேன்டில்’ எனப்படும் இரண்டாம் அடுக்கு:-

    இது பூமியின் மேல் அடுக்கு, மைய அடுக்கு இரண்டிற்கும் இடையே உள்ள அடுக்கு ஆகும். இந்த அடுக்கில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக இங்குள்ள உலோகக் கனிமப்பொருட்களும் உருகிக் குழம்பு போன்ற நிலையில் உள்ளன. எரிமலைச் சீற்றத்தின்போது இந்த அடுக்கில் உள்ள பாறைக் குழம்புகளே மேல் அடுக்கைப் பிளந்து கொண்டு சீற்றத்துடன் வெளியேறுகின்றன.

    பூமித்தட்டு எனப்படும் பூமியின் மேல் அடுக்கு (கிரஸ்ட்):-

    இது பூமி கோளத்தைப் போர்வை போல் மூடியுள்ள மேல் ஓடு ஆகும். இது பூமித்தட்டு என்றும் அழைக்கப்படும். பூமி தோன்றிய பிறகு, குளிர்வடைந்து கெட்டியானதால் இதன் மேற்பரப்பு திடத்தன்மை பெற்றுள்ளது. பூமியின் மேற்பகுதி சுமார் 70 சதவீத (கடல்) நீராலும், 30 சதவீதம் நிலத்தாலும் சூழப்பட்டுள்ளது.

    வானத்தைப் போலவே பூமியிலும் பல அடுக்குகள் இருப்பதாகக் கூறிய இறை வசனத்தை மெய்ப்பிக்கும் வகையில் இன்றைய விஞ்ஞானிகள் ஆய்வும் அமைந்துள்ளது.

    “நாம் பூமியைப் பல்வேறு திசைகளில் இருந்தும் குறைத்துக் கொண்டே வருகிறோம் என்பது இவர்களுக்குத் தென்படவில்லையா?” (திருக்குர்ஆன்-21:44) என்ற வசனம் பூமியின் ஓரங்கள் குறைந்து வருவதைக் கூறுகிறது.

    பூமியின் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், துருவப் பகுதிகளின் பனிக்கட்டிகள், உயர்ந்த மலைச் சிகரங்களின் பனிப்பாறைகள் ஆகியவை அளவுக்கதிகமாக உருகிக் கடலில் கலந்து விடுகின்றன. இதனால் கடலின் நீர் மட்டம் உயர்ந்து நிலப்பரப்பைச் சிறிது சிறிதாக விழுங்கிக் கொண்டிருக்கிறது. நிலப்பரப்பு சிறிது சிறிதாகக் கடலால் விழுங்கப்பட்டு குறைந்து வருவதை அண்மைக் காலத்தில் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது குர்ஆனின் குரலை வழிமொழிவதாக அமைந்துள்ளது.

    “பூமியைத் தொட்டிலாகவும், மலைகளை முளைகளாகவும் நாம் ஆக்கவில்லையா?” (திருக்குர்ஆன்-78:6).

    “அவனே பூமியை உங்களுக்குத் தொட்டிலாக அமைத்தான். நீங்கள் வழிகளை அடைவதற்காக அதில் பல பாதைகளை அமைத்தான்” (திருக்குர்ஆன்-43:10).

    மேற்கண்ட வசனங்களில் நாம் வாழும் பூமியைத் தொட்டிலாக ஆக்கி இருப்பதாக இறைவன் கூறுகின்றான்.

    இந்தப் பிரபஞ்சம் ஒரு நியதிக்குட்பட்டு காலங்காலமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. சூரியன் காலையில் கிழக்கே உதித்து மாலையில் மேற்கில் மறைவது; இதன் காரணமாக இரவு-பகல் ஏற்படுவது; கோள்கள், நட்சத்திரங்கள் ஆகியவை வானில் வலம் வந்து கொண்டிருப்பது ஆகிய அனைத்தும் இந்த இயக்கங்களின் வெளிப்பாடு ஆகும்.

    இந்தச் சீரான இயக்கத்திற்கு ஈர்ப்பு ஆற்றலே காரணமாகும். இந்த பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு பொருளும் ஈர்ப்பு ஆற்றலைப் பெற்றுள்ளன.

    நாம் ஒரு கயிற்றில் கல்லைக் கட்டிக் கொண்டு அதன் மறுமுனையைப் பிடித்துக் கொண்டு சுழற்றினால் என்ன நிகழும்? கயிற்றில் கட்டப்பட்டுள்ள கல் வட்ட வடிவத்தில் நம்மைச் சுற்றி சுழன்று கொண்டிருக்கும் அல்லவா? கயிற்றின் வழியே இது நம்முடன் ஒரு ஆற்றலால் பிணைக்கப்பட்டுள்ளது. இதனை ‘ஈர்ப்பு ஆற்றல்’ என்று அழைக்கிறோம்.

    மேலே குறிப்பிட்டதைப் போல பூமியின் மையத்தில் செயல்படும் ஈர்ப்பு ஆற்றலே, பூமியின் மேற்பரப்பில் உள்ள அனைத்தையும் பிடித்து வைத்துள்ளது. இந்த ஈர்ப்பு ஆற்றல் இல்லாது போனால் நாம் விண்ணிற்கு வீசி எறியப்பட்டிருப்போம்.

    பூமி, சூரியனால் ஈர்க்கப்பட்டு சூரியனை விட்டு விலகாமல், ரங்கராட்டினம் போல சுற்றி வருகிறது.

    மேற்கண்ட வசனத்தில் இந்தப் பூமியைத் தொட்டிலாக அமைத்திருப்பதாக இறைவன் கூறுவதன் மூலம், புவி ஈர்ப்பு விசை பற்றிய கருத்து இங்கே மறைமுகமாகக் கூறப்பட்டுள்ளது என்று கொள்ளலாம்.
    பத்ர் போரில் சம்பந்தப்பட்ட பல சம்பவங்கள் வரலாற்றுக் குறிப்புகளாக ஸஹீஹ் புகாரி மற்றும் ஸஹீஹ் முஸ்லிமில் இடம்பெற்றுள்ளன. இப்போரில் இறைநிராகரிப்பாளர்களுக்குப் படுதோல்வியும் இறைநம்பிக்கையாளர்களுக்குப் பெரும் வெற்றியும் கிடைத்தது.
    இறைத்தூதர்(ஸல்) அவர்கள் குறைஷியரை இஸ்லாத்திற்கு வருமாறு அழைத்தார்கள். ஆனால், அவர்கள் ஏற்கவில்லை. அதனால் அவர்களுக்கு, பஞ்சம் நிறைந்த ஆண்டுகளைத் தர நபிகளார் பிரார்த்தித்தார்கள். அதன்படி அவர்களைப் பஞ்சம் வாட்டியது. அது அனைத்தையும் அழித்துவிட்டது. எந்த அளவிற்கென்றால், பஞ்சத்தின் கோரப் பிடியினால் அவர்கள் பிணத்தையும், பிராணிகளின் தோல்களையும் உண்டார்கள்.

    மேலும், கடும் பசியினால் கண் பஞ்சடைந்து காணப்பட்டனர். திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறினான் “நபியே! தெளிவானதொரு புகை வானத்திலிருந்து வரும் நாளை நீங்கள் எதிர்பார்த்திருங்கள். மனிதர்களை அது சூழ்ந்துகொள்ளும். அது துன்புறுத்தும் வேதனையாகும்” என்று. உடனே குறைஷியர், 'எங்கள் இறைவனே! எங்களைவிட்டு இவ்வேதனையை நீக்கிவிடு; நிச்சயமாக நாங்கள் உன்னை விசுவாசிக்கிறோம்' என்று வேண்டினர்.

    ஆனால், அல்லாஹ்வின் தூதரை அவர்கள் புறக்கணித்தனர். நபிகளாரைப் பற்றி, 'இவர் எவராலோ பயிற்றுவிக்கப்பட்ட ஒரு பைத்தியக்காரர்தாம்' என்று கூறினர். இருப்பினும் நபி(ஸல்) அவர்கள் குறைஷியர்களுக்காகப் பிரார்த்தித்தார்கள். நபிகளாரின் வேண்டுதலால் அவர்களைவிட்டுப் பஞ்சம் அகன்றது. குறைஷிகள் திருந்தக் கூடுமென்று அவ்வேதனையைச் சிறிது காலத்திற்கு இறைவன் நீக்கி வைத்தான். “அவர்கள் பாவம் செய்யவே மீளுகிறார்கள்” என்ற இறை வசனத்திற்கேற்ப மீண்டும் அவர்கள் இறைமறுப்பிற்கே திரும்பினர். எனவே, அல்லாஹ் அவர்களைப் பத்ர் போரின்போது கடுமையாகப் பிடித்தான்.

    அறுக்கப்பட்ட ஒட்டகத்தின் கர்ப்பப்பையை முஹம்மது நபி (ஸல்) "ஸஜ்தா" செய்யும்போது அதாவது அல்லாஹ்வை சிரம் தாழ்த்திப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தபோது அவர்களுடைய முதுகில் போட்டு சிரித்த அத்தனை அநியாயக்காரர்களும் பத்ருப் போரில் செத்து மடிந்தனர்.

    மக்காவில் அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டு மதீனாவிற்கு நாடு துறந்து வந்தவர்கள் தமது கோபத்தைத் தீர்த்துக் கொள்ளும் களமாகப் பத்ர் போரில் தமது நெருங்கிய சொந்தங்களையே வெட்டிச் சாய்த்தனர். தந்தை மகனுக்கு எதிராகவும், மகன் தந்தைக்கு எதிராகவும் நின்று தமது கொள்கைகளுக்காக உயிர் துறந்தனர்.



    போர் முடிவடைந்த பிறகு இறைநிராகரிப்பவர்களின் பிணங்களை ஓரிடத்தில் போட்டுக் கொண்டிருந்தனர். உத்பா இப்னு ரபீஆவின் பிணத்தை இழுத்து வரும்போது, அவனது மகனார் அபூஹுதைஃபா (ரலி) அதனைப் பார்த்து வருத்தமடைந்தார்கள். அதைக் கவனித்த நபி முஹம்மது (ஸல்), “அபூஹுதைஃபாவே உமது தந்தைக்காகக் கவலைப்படுகிறீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கவர், “எனது தந்தையார் அறிவுத்திறன் கொண்ட சிறந்தவர். அவர் கண்டிப்பாக அல்லாஹ்வை ஏற்பார் என்று நம்பியிருந்தேன். அவர் நிராகரிப்பிலேயே மரணித்ததை நினைத்து வருந்துகிறேனே தவிர அவர் கொலை செய்யப்பட்டதில் எனக்கு எந்தக் கவலையுமில்லை” என்றார்.

    அப்துர் ரஹ்மான் (ரலி), உமய்யா இப்னு கலஃப்பிடம் ‘மக்காவிலுள்ள தன் உறவினர்களையும் சொத்துக்களையும் உமய்யா பாதுகாத்தால் தாம் மதீனாவிலுள்ள அவருடைய உறவினர்களையும் சொத்துக்களையும் பாதுகாப்பேன்’ என்று வாக்குறுதி தந்து போர் முடிந்த இரவு உமய்யாவை அழைத்து வரும்போது பிலால்(ரலி) பார்த்துவிட்டார். பிலாலுக்கு எஜமானாக இருந்து பிலாலை சித்திரவதை செய்தவன் உமய்யா.

    அதனால் உமய்யா தப்பிப்பதை பிலால் (ரலி) விரும்பவில்லை, ‘இதோ உமய்யா இப்னு கலஃப்!’ என்று சத்தமிட்டு அழைத்தபோது அன்ஸாரிகளில் ஒரு கூட்டத்தினர் அவர்களைத் துரத்தினர். உமய்யாவால் ஓட முடியவில்லை. அப்துர் ரஹ்மான்(ரலி), உமய்யாவைக் காப்பாற்ற அவரைக் குப்புறப்படுக்கச் சொல்லி அவர் மீது படுத்துத் தடுத்தார்கள். ஆனால் அன்ஸாரிகள் கீழ்ப்புறமாக வாளைச் செலுத்தி உமய்யாவை கொன்றுவிட்டனர். அப்போது அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்களின் பாதமும் வெட்டுப்பட்டது.

    பத்ர் போரின் போது நபி முஹம்மது (ஸல்) அவர்களின் மகள் ருகய்யா(ரலி) அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்தார்கள். அதனால் அவருடைய கணவர் உஸ்மான்(ரலி) அவர்கள் பத்ர் போரில் பங்கேற்க முடியவில்லை. உங்களுடைய மனைவியைக் கவனித்துக் கொண்டாலே மறுமைக்குரிய பலன் கிடைக்கும் என்றார்கள் நபி முஹம்மது(ஸல்).

    பத்ர் போரில் சம்பந்தப்பட்ட பல சம்பவங்கள் வரலாற்றுக் குறிப்புகளாக ஸஹீஹ் புகாரி மற்றும் ஸஹீஹ் முஸ்லிமில் இடம்பெற்றுள்ளன.

    இப்போரில் இறைநிராகரிப்பாளர்களுக்குப் படுதோல்வியும் இறைநம்பிக்கையாளர்களுக்குப் பெரும் வெற்றியும் கிடைத்தது.

    ஸஹீஹ் புகாரி 4:62:3699, 5:65:4809, 2:40:2301, திருக்குர்ஆன் 44:10-16

    - ஜெஸிலா பானு.
    நாகூர் தர்கா கந்தூரி விழாவில் நடந்த சந்தனம் பூசும் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
    நாகையை அடுத்த நாகூரில் உலக புகழ்பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாக விளங்கும் இந்த நாகூர் தர்காவில் நாகூர் ஆண்டவர் என போற்றி அழைக்கப்படும் சாகுல்அமீதுகாதிர்நாயகம் மறைந்த நினைவு நாள் கந்தூரி விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு 460-வது கந்தூரி விழா கடந்த மாதம் 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. சந்தனக்கூடு நாகை சர் அகமது தெருவில் இருந்து இரவு 7 மணி அளவில் தாரை, தப்பட்டை உள்ளிட்ட வாத்திய முழக்கங்களுடன் புறப்பட்டது. இதில் சாம்பிராணிசட்டி ரதம், செட்டிப்பல்லாக்கு, நகராமேடை மற்றும் பல்வேறு மின் அலங்கார தட்டிகள் சந்தன கூட்டின் முன்னும், பின்னுமாக அணிவகுத்து சென்றன.

    நாகை புதுப்பள்ளிதெரு வழியாக யாஹுசைன் தெரு, நூல்கடைத் தெரு, வெங்காயகடைத் தெரு, பெரிய கடைத் தெரு, சர்அகமதுதெரு உள்ளிட்ட தெருக்களில் சந்தனக்கூடு பவனி வந்தது. பின்னர் அண்ணாசிலை, பப்ளிக்ஆபீஸ் ரோடு வழியாக நாகூர் எல்லையை அடைந்தது. சந்தனக்கூடு நாகை வீதிகளில் ஊர்வலமாக சென்ற போது வீட்டு மாடிகளில் நின்றபடியும், வீதிகளில் நின்றபடியும் ஏராளமான பொதுமக்கள் திரண்டு நின்று சந்தன கூட்டின் மீது பூக்களை வீசி பிரார்த்தனை செய்தனர்.



    சந்தனக்கூடு ஊர்வலம் நாகூர் மெயின்ரோட்டை வந்தடைந்ததும் அங்குள்ள கூட்டுப்பாத்திகா மண்டபத்தில் பாத்திகா ஓதும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நாகூர் பெரிய கடைத்தெரு, குஞ்சாலி மரைக்காயர் தெரு, மியான் தெரு, ரெயிலடி தெரு, நூல் கடைத்தெருவை அடைந்தது. பின்னர் மினரா வடப்புறத் தெரு, அலங்கார வாசல், செய்யது பள்ளித்தெரு வழியாக ஊர்வலம் வந்தடைந்தது.

    பின்னர் நியூ பஜார் லைன் வழியாக தர்காவின் கால்மாட்டு வாசல் வழியாக சந்தனக்குடம் தர்காவின் உள்ளே கொண்டு செல்லப்பட்டது. சந்தன குடத்தை இறக்கியதும் கூடு மீண்டும் தர்காவின் அலங்கார வாசலை சென்றடைந்தது. இதையடுத்து அதிகாலை 5 மணியளவில் சந்தனகுடங்கள் தர்காவில் உள்ள ஆண்டவரின் சமாதி அறைக்கு கொண்டு செல்லப்பட்டன.

    அங்கு தர்கா பரம்பரை கலிபா மஸ்தான்சாகிபு துவா செய்து ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசினார். விழாவில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இன, மத பேதமின்றி ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
    “உண்ணுங்கள், பருகுங்கள் வீண்விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் வீண் விரயம் செய்பவர்களை இறைவன் நேசிப்பதில்லை” என்பது திருக்குர்ஆன் (7:31) வசனமாகும்.
    ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 16-ந் தேதி உலக உணவு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளை கொண்டாடுவதின் நோக்கம்: ‘உலகில் வாழும் அனைவருக்கும் உணவு கிடைத்திட வேண்டும். உணவு இல்லாமல் யாரும் மரணம் அடையக்கூடாது. மேலும் வறுமையையும், பசிக்கொடுமையையும் முற்றாக ஒழித்திட வேண்டும்’.

    ஆண்டுதோறும் உணவு தினத்தை உலக நாடுகள் கொண்டாடி வருவது ஒருபுறம் இருந்தாலும், ஒவ்வொரு வருடமும் உணவு கிடைக்காமல் பலகோடி பேர் திண்டாடிக் கொண்டு இருப்பதும் நடக்கத்தான் செய்கிறது.

    உலகம் முழுவதும் 100 கோடி மக்கள் பட்டினியில் பரிதவித்துக் கொண்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை அமைப்பு ஒன்று வெளியிட்ட அறிக்கையில் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளது.

    சத்தான உணவு கிடைக்காமல் சோமாலியாவில் பிறக்கும் ஐந்து குழந்தைகளில் ஒன்று இறந்துவிடுகிறது. இந்த நிலைமை ஆப்பிரிக்கா முழுவதும் நீடிக்கிறது.

    பசி என்றால் என்னவென்று தெரியாதவர்களால் எப்படி பிறரின் பசியை தீர்க்கமுடியும்? சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பவர்கள், குளிரூட்டப்பட்ட அறையில் கூடி ‘பசியை தீர்ப்பது எப்படி?’ என்று விவாதிப்பது எந்தவித பலனையும் தராது.

    உலகமயம், தாராளமயம் எனும் கோஷமும், செயல் வடிவமும் உலகளாவிய அளவிற்கு கோலோச்சும் இந்த தருணத்தில் உணவை ஏன் உலக மயமாக ஆக்கவில்லை? அதை ஏன் தாராளமயமாக ஆக்கவில்லை? உணவு பண்டங்கள் ஒருவரிடம் மட்டும் குவிந்து விடாமல், அதை அனைவருக்கும் பரவலாக்க வேண்டும் எனும் திட்டம் ஏன் செயல்படுத்தப்படவில்லை? இதற்கான விடை: இவர்கள் பசிக்கொடுமையை ஒரு போதும் பார்த்திராதவர்கள்.

    மக்களுடன் மழையிலும், வெயிலிலும் கலந்துறவாடி அவர்களின் பசிக்கொடுமையை கண்ணால் கண்டு, அதை தானும் அனுபவித்து, பசிக்கொடுமையை நன்றாக உணர்ந்து, வறுமையில் வாடி வதைந்து போன ஒருவரால் மட்டுமே பசியை போக்க முடியும். பசியின் கொடுமைக்கு ஒரு விடியலை கொண்டு வர முடியும். இப்படிப்பட்ட ஒரு மனிதரை உலகில் காணமுடியுமா? ஆம், இப்படிப்பட்ட ஒரு மனிதரை உலகம் கண்டுள்ளது. அவர்தாம் மாமனிதர் நபிகளார் முகம்மது (ஸல்) அவர்கள்.

    “நபிகள் நாயகம் முகம்மது (ஸல்) அவர்கள் இறக்கும் வரை, அவர்களின் குடும்பத்தார் (தொடர்ந்து) மூன்று நாட்கள் வயிறு நிரம்ப உண்டதில்லை”. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி:5374).

    “இரண்டு மாதங்கள் நபி (ஸல்) அவர்களின் வீடுகளில் அடுப்பு மூட்டப்படவில்லை! என ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்தபோது அவர்களின் சகோதரியின் மகன் உர்வா (ரலி) அவர்கள் “உங்களின் வாழ்க்கை எவ்வாறு கழிந்தது?” என சிற்றன்னையை நோக்கி கேட்டார். “இரண்டு கருப்பு வண்ணங்களால் (அதாவது பேரீத்தம்பழம், நீர்) வாழ்க்கை கழிந்தது” என அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் தெரிவித்தார்கள். (புகாரி)

    சில நபித்தோழர்கள், நபி (ஸல்) அவர்களிடம் வருகை புரிந்து “இறைத்தூதர் அவர்களே! நாங்கள் உண்ணுகிறோம் என்றாலும் வயிறு நிரம் பாதவர்களாக இருக்கின்றோம்” என்று முறையிட்டார்கள்.

    இதை கேட்ட நபி (ஸல்) அவர்கள் “நீங்கள் பிரிந்தவாறு சாப்பிட்டீர்களா?” எனக்கேட்டார்கள்.

    அதற்கு நபித்தோழர்கள் “ஆம்” என பதில் கூறினார்கள்.



    இதற்கான தீர்வை நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு தெரிவித்தார்கள்:

    ‘நீங்கள் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுங்கள்; பிரிந்து விடாதீர்கள். ஏனெனில், நிச்சயமாக ஒருவரின் உணவு இருவருக்குப் போதுமானதாகும். இருவரின் உணவு மூவருக்குப் போது மானதாகும். மேலும், நால்வருக்குக்கூட போதுமானது. அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுங்கள். பிரிந்து விடாதீர்கள். அபிவிருத்தி என்பது ஒரு கூட்டமைப்பில்தான் உள்ளது’.

    “இருவரின் உணவு மூவருக்குப் போதுமானதாகும். மூவரின் உணவு நால்வருக்குப் போதுமானதாகும் என நபி (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்” (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி:5392).

    ‘ஒருவரின் உணவு இருவருக்குப் போது மானது. இருவரின் உணவு நால்வருக்குப் போதுமானது. நால்வரின் உணவு எட்டு நபருக்குப் போதுமானது’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி) அவர்கள் (முஸ்லிம்).

    உலகம் முழுவதும் 100 கோடி மக்கள் உணவின்றி பட்டினியால் வாடுகிறார்கள். இவர் களின் பசியைப் போக்க மாநபியின் மகத்தான திட்டம் நிச்சயம் கை கொடுக்கும்.

    ஒருவரின் உணவை மற்றவருக்கும் பகிர்ந்து அளித்து சாப்பிட்டால் இந்த கொடுமையான நிலைமை ஏற்பட்டிருக்காது. உலக மக்கள் தொகை 600 கோடியையும் தாண்டி வளர்ச்சி அடைந்து வருகிறது.

    100 கோடி மக்களின் உணவு 200 கோடி மக்களுக்குப் போதுமானதாகும். இவ்வாறு அனைத்து மக்களும் தங்களுக்குள் உணவை பகிர்ந்து அளித்து சாப்பிடும் முறையை கடைப் பிடித்து வாழ்ந்தால் பட்டினியால் பரிதவிக்கும் மக்களின் பசிப்பிணியை போக்கலாம்.

    100 கோடி மக்கள் தங்களின் உணவு முறையில் மாற்றம் கொண்டு வந்தால் நிச்சயம் பசியில்லாத உலகை கட்டி அமைக்கலாம். தங்களின் தேவைக்கு உணவை உண்ண வேண்டும். வாங்கிச் சாப்பிட வேண்டும். தங்களிடம் மித மிஞ்சிய பணம் கையில் இருக்கிறது என்பதற்காக கண்டபடி உணவு பண்டங்களை வாங்கி சமைத்து சாப்பிட்டு, மீதமுள்ளதை குப்பையில் கொட்டும் பழக்கத்தை கைவிட வேண்டும்.

    நீங்கள் குப்பையில் கொட்டும் உணவு பண்டங்கள் பிறரின் உணவு என்பதை மறந்து விடக்கூடாது. பிறரின் உணவையும், நீங்கள் ஆக்கிரமித்து, வீண் விரயம் செய்து பாழாக்கி விட்டீர்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பாழாக்கும் உணவை பிறருக்கும் கிடைத்திட பரவலாக்கினால் 100 கோடி மக்களின் பசியை நீக்கலாம்.

    “உண்ணுங்கள், பருகுங்கள் வீண்விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் வீண் விரயம் செய்பவர்களை இறைவன் நேசிப்பதில்லை” என்பது திருக்குர்ஆன் (7:31) வசனமாகும்.

    உணவு தானம் உன்னதமானது. உணவை தானம் செய்வீர், வீண் விரயம் செய்வதை தவிர்ப்பீர்.

    மவுலவி அ. சைய்யது அலி மஸ்லஹி,

    பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுன்.
    “அதிசீக்கிரத்தில் இந்தக் கூட்டம் சிதறடிக்கப்பட்டுப் புறங்காட்டி ஓடுவார்கள்” என்ற இறை வசனத்தை நபிகளார் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்ததைக் கண்ட முஸ்லிம்கள் கூடுதல் உற்சாகம் பெற்றனர்.
    அல்லாஹ்வின் துணையால் முஸ்லிம்கள் பத்ரு போரில் மிகத் துணிவுடன் முன்னேறிக் கொண்டிருந்தனர். “அதிசீக்கிரத்தில் இந்தக் கூட்டம் சிதறடிக்கப்பட்டுப் புறங்காட்டி ஓடுவார்கள்” என்ற இறை வசனத்தை நபிகளார் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்ததைக் கண்ட முஸ்லிம்கள் கூடுதல் உற்சாகம் பெற்றனர்.

    அவ்ஃப் இப்னு ஹாரிஸ் (ரலி), துணிந்து முன்னேறி வீர மரணத்தைத் தழுவினார். குறைஷிகளைச் சேர்ந்த அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப் கைது செய்யப்பட்டு நபிகளாரிடம் கொண்டு வரப்பட்டார். முஸ்லிம்கள் வாளை தூக்கினாலே எதிரிகள் மடிந்து சாய்ந்தனர். வானவர்கள் முஸ்லிம் வீரர்களுக்குப் பின்னிருந்து இயக்குவதை எதிரிகள் விளங்கிக் கொண்டனர்.

    “இன்று மனிதர்களில் உங்களை வெற்றி கொள்வோர் எவருமில்லை; மெய்யாக நான் உங்களுக்குத் துணையாக இருக்கின்றேன்!” என்று போரின் ஆரம்பத்தில் ஷைத்தான் கூறினான். குறைஷிகளை வழிகெடுத்த ஷைத்தான், இரு படைகளும் நேருக்கு நேர் சந்தித்தபோது புறங்காட்டிப் பின்சென்று, “மெய்யாக நான் உங்களை விட்டு விலகிக் கொண்டேன்; நீங்கள் பார்க்க முடியாததை நான் பார்க்கின்றேன்; நிச்சயமாக நான் அல்லாஹ்வுக்குப் பயப்படுகிறேன்; அல்லாஹ் தண்டனை கொடுப்பதில் கடினமானவன்” என்று ஓடி மறைந்தான். இதுவும் திருக்குர்ஆனில் தெள்ளத்தெளிவாக வந்துள்ள வசனமாகும்.

    எதிரிகளின் அணியில் பயம் தொற்றிக் கொண்டது. சலசலப்பும், திகிலும் தோல்வியின் அடையாளங்களாக வெளிப்பட்டன. ஆனால் அபூஜஹ்லின் வீம்பு, அந்த ஷைத்தானின் குணம் மாறாமல் அப்படியே பெருமையுடன் குறைஷிகளைச் சமாதானப்படுத்திக் கொண்டும், உற்சாகப்படுத்திக் கொண்டும் இருந்தான். “இறந்தவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் முன்னேறிச் செல்லுங்கள்.

    முஸ்லிம்களைக் கொல்லக்கூட வேண்டாம் கைதிகளாக்கி பிடித்து வாருங்கள் போதும்” என்று குதிரையின் மீது அமர்ந்தபடி கட்டளையிட்டுக் கொண்டிருந்தான். அப்போது இளம் வயது அன்சாரி  சிறுவர்களான முஆத் பின் அம்ர் பின் அல்ஜமூஹ் (ரலி) மற்றும் முஆத் பின் அஃப்ரா (ரலி) இருவரும் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களிடம் “எங்களுக்கு யார் அபூஜஹ்ல் என்று காட்டுவீர்களா?” என்று கேட்டனர். “எதற்காகக் கேட்கிறீர்கள்” என்று வியப்பாக அப்துர் ரஹ்மான் (ரலி) கேட்க, அதற்கு அச்சிறுவர்கள் “நபிகளாரை வசைபாடும் அவனை எங்கள் கைகளால் வெட்டிச் சாய்க்க வேண்டும்.

    அவன் மரணிக்கும்வரை அவனுடன் போரிட்டுக் கொண்டேயிருப்போம்” என்றனர். மக்களிடையே பம்பரமாகச் சுற்றித் திரியும் அபூஜஹ்லை அப்துர் ரஹ்மான் அடையாளம் காட்டியதுதான் தாமதம், இருவரும் போட்டி போட்டுக் கொண்டு அபூஜஹ்லை நோக்கிச் சென்று அவன் சுதாரிக்கும் முன் தம்மிடமிருந்த வாட்களால் அவனை வெட்டிச் சாய்த்தனர்.

    அரண் அமைத்து யாரும் நெருங்க முடியாத இடத்திலிருந்த அபூஜஹ்லை கரண்டைக் கால்களில் வெட்டித் தகர்த்து வீழ்த்தியதை அபூஜஹ்லின் மகன் இக்மா பார்த்துவிட்டு பாய்ந்து முஆத் பின் அஃப்ரா (ரலி) அவர்களை வெட்டினான். இருப்பினும் உயிரைப் பிடித்துக் கொண்டு போராடி. அபூஜஹ்லைக் கொன்றுவிட்ட செய்தியை நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களிடம் சென்று தெரிவித்தனர்.

    அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களில் யார் அவனைக் கொன்றார்?" என்று கேட்டார்கள். இருவருமே "நான்தான் கொன்றேன்" என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்கள் வாட்களில் படிந்த அவனது இரத்தக் கறைகளைத் துடைத்துவிட்டீர்களா?" என்று கேட்டார்கள். அவர்கள் இருவரும் "இல்லை" என்று பதிலுரைத்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்விரு வாட்களையும் கூர்ந்து பார்த்துவிட்டு, "நீங்கள் இருவருமே அவனை வெட்டிக் கொன்றிருக்கிறீர்கள்" என்று கூறினார்கள்.

    முதலில் வெட்டியவர் என்ற அடிப்படையில் முஆத் பின் அம்ர் பின் அல்ஜமூஹுக்கே அபூஜஹ்லின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட பொருட்கள் என்று உரியவையைத் தந்தார்கள். முஆத் பின் அஃப்ரா (ரலி) வீரமரணம் அடைந்தார்.

    குறைஷிகள் தங்களது இறைமறுப்பாளர்களின் தலைவர்களைக் கொன்றவுடன் சிதறி ஓடிப் பதுங்கினர். முஸ்லிம்கள் அவர்களைப் பின்தொடர்ந்து கைது செய்தனர். உடனே அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி சலூலும் அவருடனிருந்த இணைவைப்பாளர்களும், சிலைவணங்கிகளும் 'இஸ்லாம் எனும் இந்த விஷயம் மேலோங்கிவிட்டது. எனவே, இந்த இறைத் தூதரிடம் இஸ்லாத்தை ஏற்றோமென உறுதி மொழியளித்து விடுங்கள்' என்று கூறி வெளித்தோற்றத்தில் இஸ்லாத்தை எற்றனர்.

    இவ்வாறு இணைவைக்கும் எதிரிகள் போரில் பெரும் தோல்வியடைந்தனர்.

    திருக்குர்ஆன் 8:48, ஸஹீஹ் முஸ்லிம் 32:3605, ஸஹீஹ் புகாரி 3:57:3141, 5:65:4566

    - ஜெஸிலா பானு.
    வானவர்கள் முஸ்லிம்களுக்குப் பின்னாலிருந்து உதவிபுரிந்தனர். முஸ்லிம்களை இறைவன் பலப்படுத்தினான். ஆயுதமில்லாத முஸ்லிம்கள் கற்களை ஆயுதமாக்கி, “முகங்கள் மாறட்டும்” என்று பொடிக்கற்கள் நிறைந்த மண்ணைப் படை எதிரிகளின் முகத்தில் எறிந்தனர்.
    பத்ர் போரின் தொடக்கத்திலேயே குதிரை வீரர்களான ரபிஆவின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களையும், தளபதி அஸ்வத்தையும் குறைஷிகள் இழந்து நின்றனர். இதனால் அவர்கள் முஸ்லிம்களின் மீது கட்டுக்கடங்காத கடுங்கோபத்துடன் பாய்ந்தனர். முஸ்லிம்கள் ‘அல்லாஹ் ஒருவனே, அஹ்த்! அஹ்த்!’ என்று சொல்லிக் கொண்டே எதிரிகளை எதிர்கொண்டனர்.

    “இந்தப் போரில் சகிப்புத் தன்மையுடனும், நன்மையை மட்டும் எதிர்பார்த்தும், புறமுதுகு காட்டாமல் எதிரிகளை எதிர்த்தவராக யார் கொலை செய்யப்படுகிறாரோ அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் நுழைவிப்பான். வானங்கள் மற்றும் பூமியின் பரப்பளவு கொண்ட சொர்க்கத்திற்கு எழுந்து தயாராகுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) கூறி, போருக்கு ஆர்வமூட்டினார்கள்.

    அதற்கு உமைர் பின் அல்ஹுமாம் அல் அன்சாரி (ரலி) “ஆஹா, சொர்க்கவாசிகளில் நானும் ஒருவனாக இருக்க வேண்டும் என்பது என் ஆசை” என்றார். அதற்கு நபிகளார் “நீங்களும் சொர்க்கவாசிகளில் ஒருவர்தாம்” என்று கூறினார்கள். உமைர் அம்புக் கூட்டிலிருந்து பேரீச்சம் பழங்களை எடுத்து, உண்ணத் தொடங்கியபடி “இந்தப் பேரீச்சம் பழங்களை உண்டு முடிக்கும் வரை நான் உயிர் வாழ்ந்தால் அதுவேயொரு நீண்ட வாழ்க்கையாகிவிடுமே!” என்று கூறியபடி எதிரிகளை நோக்கிச் சென்று அவர்களுடன் போரிட்டு வீர மரணம் அடைந்தார்.

    போர் சூடுபிடித்தபோது, நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) இறைவனிடம் மன்றாடத் தொடங்கினார்கள். “யா அல்லாஹ்! நீ எங்களுக்கு வாக்களித்ததை நிறைவேற்றுவாயாக. உன்னை நம்பி வந்த கூட்டத்தை இழந்துவிட்டால் உன்னை வணங்க இப்பூமியில் யாருமே இருக்க மாட்டார்கள். உன்னை நம்பி வந்தவர்களைக்  கைவிட்டுவிடாதே” என்று கைகளை உயர்த்திப் பிரார்த்தித்தார்கள்.



    இறைத்தூதரின் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொண்டான். “அணி அணியாக உங்களைப் பின்பற்றி வரக்கூடிய ஓராயிரம் மலக்குகளைக் கொண்டு நிச்சயமாக உங்களுக்கு உதவி புரிவேன்” என்று அருளிய இறைவன், மலக்குகளை நோக்கி, “நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன். ஆகவே, நீங்கள் முஸ்லிம்களை உறுதிப்படுத்துங்கள். நிராகரிப்போரின் இருதயங்களில் நான் திகிலை உண்டாக்கி விடுவேன், நீங்கள் அவர்கள் பிடரிகளின் மீது வெட்டுங்கள், அவர்களுடைய விரல் நுனிகளையும் வெட்டி விடுங்கள்”

    வானவர்கள் முஸ்லிம்களுக்குப் பின்னாலிருந்து உதவிபுரிந்தனர். முஸ்லிம்களை இறைவன் பலப்படுத்தினான். ஆயுதமில்லாத முஸ்லிம்கள் கற்களை ஆயுதமாக்கி, “முகங்கள் மாறட்டும்” என்று பொடிக்கற்கள் நிறைந்த மண்ணைப் படை எதிரிகளின் முகத்தில் எறிந்தனர்.  

    “பத்ரு போரில் எதிரிகளை வெட்டியவர்கள் நீங்கள் அல்ல - அல்லாஹ்தான் அவர்களை வெட்டினான்; பகைவர்கள் மீது மண்ணை நீர் எறிந்தபோது அதனை நீர் எறியவில்லை, அல்லாஹ்தான் எறிந்தான்; முஃமின்களை அழகான முறையில் சோதிப்பதற்காகவே அல்லாஹ் இவ்வாறு செய்தான்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றையும் செவி ஏற்பவனாகவும், எல்லாம் அறிபவனாகவும் இருக்கின்றான்.

    அதிசீக்கிரத்தில் இக்கூட்டத்தினர் சிதறடிக்கப்பட்டுப் புறங்காட்டி ஓடுவர்” என்று இறை வசனங்களே முஸ்லிம்களின் வெற்றிக்கு சாட்சியானது.

    திருக்குர்ஆன் 8:9, 8:12, 54:45, 8:17, ஸஹீஹ் முஸ்லிம் 33:3858

    - ஜெஸிலா பானு.
    எவர் இறைவனை நிராகரிக்கிறார்களோ அவர்களுக்கு நெருப்பினாலான ஆடைகள் தயாரிக்கப்படும், கொதிக்கும் நீர் அவர்களின் தலைகளின் மீது ஊற்றப்படும்” என்ற இறைவசனம் அருளப்பட்டது.
    பத்ர் போருக்கு நபி முஹம்மது (ஸல்) அவர்களின் அணியினரும் எதிர் தரப்பு குறைஷி அணியினரும் ஆயத்தமாயினர்.

    குறைஷி படையைச் சேர்ந்த அஸ்வத் இப்னு அப்துல் அஸது மக்ஜூமி என்பவன் முஸ்லிம்களின் அருகில் இருக்கும் நீர்நிலையை உடைத்தெறிய வேண்டுமென்று போரின் தீ கங்குகளை மூட்டி, நீர் தடாகத்தை நோக்கி பாய்ந்து வந்தான். ஹம்ஸா (ரலி) வாளால் அவனுடைய பாதத்தைப் பதம் பார்த்தார்கள். நீர்நிலையைப் பாழ் செய்ய வேண்டுமென்று முடிவெடுத்தவனாக அஸ்வத் பாய்ந்து நீர்நிலைக்குள் விழுந்தான். அதே இடத்தில் ஹம்ஸா (ரலி), அவன் மீது தாக்குதல் புரிந்து அவனை வெட்டிச் சாய்த்தார்கள்.

    இதைக் கண்ட குறைஷிகள் கொந்தளித்தனர். அவர்களிடமிருந்த குதிரை வீரர்களான ரபிஆவின் மகன்களான உத்பா, ஷைபா மற்றும் உத்பாவின் மகன் வலீது மூவரும் முன்னால் வந்தனர். அம்மூவரை எதிர்க்க வந்த முஸ்லிம்களைப் பார்த்து “நீங்கள் மதீனாவாசிகள், உங்களுக்கும் எங்களுக்கும் எந்த விரோதமும் இல்லை, நாங்கள் நாடி வந்திருப்பது எங்கள் தந்தையின் சகோதரர்களின் மக்களை. முஹம்மதே! எங்களுக்கு நிகரான, எங்கள் இனத்தவரை அனுப்பும்!” என்று சத்தமாகக் கத்தினர்.



    உடனே நபி முஹம்மது (ஸல்), அவர்களுக்கு இணையான ஹம்ஸா (ரலி), அலீ (ரலி) மற்றும் உபைதா (ரலி) அவர்களை அனுப்பினார்கள். அவர்களை எதிர்கொண்டு நின்ற மாத்திரத்தில் ஹம்ஸா (ரலி), உத்பாவை தவிர மற்ற இருவரையும் வீழ்த்தி திரும்பும் போது உபைதா (ரலி) அவர்கள் அடிப்பட்டுக் கிடந்ததைப் பார்த்து, பாய்ந்து உத்பாவையும் வீழ்த்தி, உபைதாவை தமது தோளில் சுமந்து படைக்குத் திரும்பினர். ஆனால் உபைதா (ரலி) சில நாட்களில் இறந்துவிட்டார்.

    “இறைநம்பிக்கையாளர்களும், இறைநிராகரிப்பாளர்களும் இறைவனைப் பற்றித் தர்க்கிக்கின்றனர். ஆனால் எவர் இறைவனை நிராகரிக்கிறார்களோ அவர்களுக்கு நெருப்பினாலான ஆடைகள் தயாரிக்கப்படும், கொதிக்கும் நீர் அவர்களின் தலைகளின் மீது ஊற்றப்படும்” என்ற இறைவசனம் அருளப்பட்டது.

    திருக்குர்ஆன் 22:19, இப்னு ஹிஷாம்

    - ஜெஸிலா பானு
    மகப்பேறு என்பது ஒரு பெண்ணுக்கு கிடைத்த பெரும்பேறு என்பதும், பிரசவ வேதனை பெண்ணுக்கு பெருமிதம் தரும் பெருமை என்பதும், அதனால்தான் பெற்றோருடன் பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளுமாறும் திருமறையில் இறைவன் கூறுகின்றான்.
    பெண்மையை-தாய்மையைப் போற்றுகின்ற மார்க்கமாக இஸ்லாம் திகழ்கிறது.

    “பெற்றோரின் உரிமைகளைப் பேணி நடக்குமாறு நாம் மனிதனுக்கு உபதேசித்துள்ளோம். அவனுடைய தாயோ பலவீனத்தின் மீது பலவீனத்தைச் சுமந்தவளாக அவனை வயிற்றில் சுமந்தாள். பால்குடி மறப்பதற்கோ இரண்டு வருடங்கள் ஆகிப்போனது. (இதன் காரணமாகவே) எனக்கு நன்றி செலுத்துமாறும், பெற்றோர்களுக்கு நன்றி செலுத்து மாறும் (அவனுக்கு உபதேசித்தோம்.) என்னிடமே (ஒருநாள்) நீ மீண்டு வர வேண்டியிருக்கும்”. (திருக்குர்ஆன்-31:14)

    “பெற்றோரிடம் பெருந்தன்மையோடு நடந்து கொள்ளுமாறு நாம் மனிதனுக்கு உபதேசித்தோம். அவனுடைய தாய் அவனைக் கஷ்டப்பட்டு அவனைக் கருவில் சுமந்திருந்தாள்; கஷ்டப்பட்டு அவனைப் பிரசவித்தாள். கருவில் சுமந்த காலமும் பால்குடி காலமும் முப்பது மாதங்களாகும்”. (திருக்குர்ஆன்-46:15)

    ‘பிரசவ வேதனை பெண்களுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை’ என்ற பிரகடனத்தை குர்ஆனின் மேற்கண்ட வசனம் தவறு என்று சுட்டிக்காட்டுகிறது.

    மகப்பேறு என்பது ஒரு பெண்ணுக்கு கிடைத்த பெரும்பேறு என்பதும், பிரசவ வேதனை பெண்ணுக்கு பெருமிதம் தரும் பெருமை என்பதும், அதனால்தான் பெற்றோருடன் பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளுமாறும் திருமறையில் இறைவன் கூறுகின்றான்.

    கடமைகளிலோ, அவர்கள் மீது சுமத்தப்பட்ட பொறுப்புகளிலோ பெண்களுக்கு இஸ்லாம் எந்தவிதமான பாகுபாட்டையும் வைக்கவில்லை. தொழுவதும், நோன்பு நோற்பதும், ஜகாத் கொடுப்பதும் ஆண்கள் மீது கடமையாக உள்ளதைப்போல பெண்கள் மீதும் கடமையாக உள்ளது.

    “உங்களில் ஆணோ, பெண்ணோ எவர் (நற்செயல் செய்தாலும்) அவர் செய்த செயலை நிச்சயமாக வீணாக்க மாட்டேன். (ஏனெனில் ஆணாகவோ, பெண்ணாகவோ இருப்பினும்) நீங்கள் ஒருவர் மற்றொருவரில் உள்ளவர் தாம்” (திருக்குர்ஆன்-3:195)

    “ஆணாயினும், பெண்ணாயினும் நம்பிக்கையாளராக இருந்து யார் (சன்மார்க்கத்திற்கு இணக்கமான) நற்செயல் களைச் செய்தாலும் நிச்சயமாக நாம் அவர்களை (இவ்வுலகில்) மணமிக்க தூய வாழ்க்கையில் வாழச்செய்வோம். இன்னும் (மறுமையில்) அவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றில் இருந்து மிகவும் அழகான கூலியை நிச்சயமாக நாம் கொடுப்போம்” (திருக்குர்ஆன்-16:97)

    ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையே எந்தவித வேறுபாட்டையும் இஸ்லாம் விதைக்கவில்லை என்பதை மேற்கண்ட வசனங்கள் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.

    பெண்களுக்கு இஸ்லாம் எந்தெந்த உரிமைகளை வழங்கி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள நபிகளார் பிறப்பதற்கு முன்புள்ள அரேபியாவின் அறியாமைக் காலத்தில் நடந்தவைகளை அறிந்து கொள்வது அவசியம்.

    இஸ்லாத்திற்கு முந்தைய அரேபியாவின் ஒரு நூற்றாண்டு காலத்தை ‘அறியாமைக் காலம்’ என்றே சரித்திர ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். அப்போது அங்கு பெண்களின் நிலை மிகவும் மோசமாக இருந்தது. பெண்கள் சந்தைகளில் அடிமைகளாக விற்கப்பட்டனர்.

    ஆண்கள் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் மணந்து கொள்ளலாம்; ஒரு பெண்ணைப் பல ஆண்கள் வைத்துக் கொள்ளலாம் என்ற நிலை இருந்தது.

    பெண் குழந்தை பிறந்தால் வறுமை வரும்; கவுரவம் குறையும் என்று கருதினார்கள். அதனால் பெண் குழந்தை பிறந்ததும் அதை உயிரோடு குழி தோண்டிப் புதைத்தனர். இத்தகைய பழக்கங்கள் நபிகளாரின் வருகைக்குப் பிறகு குழி தோண்டி புதைக்கப்பட்டன.

    அரேபியாவில் மட்டுமல்ல, இந்தியாவிலும் பெண்களுக்கு எதிரான மூடப்பழக்கங்கள் இருந்தன. கணவன் இறந்தால், அவன் சடலம் எரியும் ‘சிதை’ யில் அவனுடன் ‘உடன்கட்டை’ ஏறும் வழக்கம் இருந்தது. இதற்கு ‘சதி’ என்று பெயர். இது பெண்களுக்கு எதிரான மிகப் பெரிய சதியாகும். விதவைகள் அபசகுனமாகப் பார்க்கப்பட்டனர். மாதவிலக்கின்போது அவர்களை வீட்டை விட்டே விலக்கி வைத்தனர். தமிழ்நாட்டில் சில இடங்களில் பெண் குழந்தை பிறந்தால் ‘கள்ளிப்பால்’ கொடுத்து கொல்லும் பழக்கம் இருந்தது.

    இன்றும் பெண் குழந்தை பிறந்தால் கவலை கொள்ளும் பெற்றோர்களும் இருக்கிறார்கள். பெண் குழந்தைகளைப் பெற்று அவர்கள் மீது அன்பும் பாசமும் காட்டி வளர்த்து ஆளாக்குபவர்களுக்கு இறைவனிடத்தில் பெரும் பரிசு காத்திருக்கிறது.

    “எவருக்கு மூன்று பெண் மக்கள் இருந்து அவர்களை அரவணைத்து தேவைகளை நிறைவேற்றி கருணை காட்டி வருவாரோ அவருக்குச் சொர்க்கம் உறுதியாகி விட்டது” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர், “இரு பெண் மக்கள் இருந்தாலுமா?” என்று கேட்டார். அதற்கு நபிகளார், “ஆம்! இரு பெண் மக்கள் இருந்தாலும்” என்று பதில் அளித்தார்கள்.

    மேலும், ‘ஒருவர் வீட்டில் பெண் குழந்தை பிறந்தால் இறைவன் அங்கு வானவர்களை அனுப்பி வைக்கின்றான். அவர்கள் அந்த வீட்டை அடைந்து கூறுகின்றனர்: ‘உங்கள் மீது சாந்தி நிலவட்டும்’ என்று! பிறகு அந்த பெண் குழந்தையைச் சிறகால் மூடுகிறார்கள். அதன் தலையைத் தம் கைகளால் தடவியவாறு கூறுகிறார்கள்: ‘இது பலவீனமான உயிர்; எனவே இந்தப் பெண் குழந்தையை எவர் கண்காணித்து வளர்க்கின்றாரோ, அவருக்கு மறுமை நாளில் இறைவனின் உதவி கிடைக்கும்’.

    குழந்தை பிறப்பதற்கு முன்போ அல்லது பிறந்த பிறகோ அதைக் கொலை செய்வது பெரும் பாவமாகும்.

    “எவர்கள் தம் குழந்தைகளை அறியாமையாலும் மூடத்தனத்தாலும் கொன்று விட்டார்களோ; மேலும் அல்லாஹ்வின் மீது பழி சுமத்தி, அவர்களுக்கு வழங்கி இருந்தவற்றைத் தாங்களாகவே தடை செய்து கொண்டார்களோ அவர்கள் நிச்சயமாக பேரிழப்புக்கு ஆளாகி விட்டார்கள்” என்று திருக்குர்ஆன் (6:140) கூறுகிறது.

    “வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள். அவர்களைக் கொலை செய்வது பெரும் பாவமாகும்” (17:31) என்று திருமறையில் இறைவன் கூறுகின்றான்.

    மேற்கண்ட நபிமொழிகளும், இறை மறை வசனங்களும், பெண் குழந்தை பிறந்தால் அஞ்சத் தேவை இல்லை என்பதைச் சொல்லும் அருஞ்சொற்கள்.

    எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக, “தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது” என்ற நபிகளாரின் முத்தான சொல், பெண்ணின் பெருமையைப் பறை சாற்றுவதாக உள்ளது.
    குர்ஆனை கொண்டு நேர்வழி பெற வேண்டுமானால் இறையச்சம் அவசியம் என்பதையும் குர்ஆனின் கருத்துக்களை உள்ளபடி அறிந்து கொள்ளவும், இறையச்சம் அவசியம் என்பதையும் மேலே சொன்ன வசனம் நமக்கு தெளிவு படுத்துகிறது.
    எப்போதும் ஒரு வகையான பயம், நம்முள் இருந்து கொண்டேதான் இருக்கின்றது. பல்வேறு வகையான பயம் நொடிக்கு நொடி மாறி மாறி நம்மை சுற்றி வந்துக்கொண்டே இருக்கிறது. எதிர்காலத்தைப் பற்றிய பயம், உலகைப் பற்றிய பயம், வயோதிகத்தில் குடும்பம் நம்மை கை விட்டுவிடுமோ என்ற பயம், மரணத்தைப் பற்றிய பயம், அதற்குப் பின்னால் வரும் சொர்க்கம், நரகம் பற்றிய பயம்... இவ்வாறு பலவிதமான பயங்கள் சிலநேரங்களில் மனதில் தோன்றலாம்.

    இதற்கெல்லாம் காரணம் என்ன?. நம்மையும் இந்த உலகத்தையும் படைத்து ஆளுகின்ற இறைவனை நாம் அஞ்சி வாழாமல் மறந்து நடப்பதால் தான் இத்தகைய பயம் நம்மில் தோன்றுகிறது. இன்னும் உலகின் மீது பற்றுடன் கூடிய ஆசை வைப்பதும் இத்தகைய பயத்தை அதிகப்படுத்துகின்றது.

    சர்வ ஆற்றல் மிக்க இறைவனுக்கு பயந்தும், அவனது தண்டனைக்கு அஞ்சியும் நடப்பதால் பயபக்தியுடைய இறைவிசுவாசிகள் உலகத்தில் ஏற்படும் சோதனைகளையும், வேதனைகளையும் கண்டு அஞ்சவோ, கவலைப்படுவதோ இல்லை என்பதை அருள்மறை குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது:

    ‘அறிந்து கொள்ளுங்கள், நிச்சயமாக அல்லாஹ்வின் நேசர்களுக்கு (இவ்வுலகில்) அவர்கள் மீது எவ்வித பயமும் இல்லை. இன்னும் அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்’ (10:62).

    ‘உங்களில் இறையச்சம் உடையவர்களே சிறந்தவர்கள் ஆவார்கள்’ என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

    வெளிப்படையாகவும், அந்தரங்கமாகவும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதரின் கட்டளைக்கும் மாறு செய்யாமல் இணங்கி நடப்பதே இறையச்சம் ஆகும்.

    இறையச்சம் உடையவர்களுக்கு மட்டுமே அருள்மறை குர்ஆன் வழிகாட்டும் என்று கீழ்கண்ட வசனம் இவ்வாறு கூறுகின்றது:

    ‘இது அல்லாஹ்வின் திருவேதமாகும். இதில் எவ்வித சந்தேகமும் அறவே இல்லை. இறையச்சம் உடைய பயபக்தியாளர்களுக்கு இவ் வேதம் நேர்வழி காட்டும். (2.2)

    குர்ஆனை கொண்டு நேர்வழி பெற வேண்டுமானால் இறையச்சம் அவசியம் என்பதையும் குர்ஆனின் கருத்துக்களை உள்ளபடி அறிந்து கொள்ளவும், இறையச்சம் அவசியம் என்பதையும் மேலே சொன்ன வசனம் நமக்கு தெளிவு படுத்துகிறது.

    இறையச்சம் உடைய அவனது நேசர்கள் கீழ்கண்டவற்றில் உறுதியாக செயல்படு கிறார்கள்:

    ‘இறைவன் தன்மீது விதியாக்கியதை தன்னைத் தவிர வேறு எவராலும் அடைய முடியாது என்றும், இறைவனைக் கொண்ட தன் ஜீவன் தன் உடலில் நிலைத்திருக்கிறது என்றும், இறைவன் நாடினால் அன்றி மற்றவர்களால் நன்மையோ, தீமையோ செய்ய முடியாது என்றும், (ஹலாலான) நேர்வழியில் பொருள் ஈட்டுவதை ஈமானின் அடையாளம் என்றும், பரிசுத்தமான கலப்பற்ற தூய எண்ணத்தோடு, இறைவனை வணங்கி வாழ்வதால் நிலையான நிம்மதியை பெறமுடியும் என்றும் இறையச்சம் உள்ளவர்கள் உளமார நம்பி நடக்கின்றார்கள்’.

    இறையச்சம் நிறைந்த வெற்றியாளர்கள் குறித்து அருள்மறை குர்ஆன் இவ்வாறு பேசுகிறது:

    ‘இறையச்சம் நிறைந்த மூமீன்களே, நீங்கள் பொறுமையை கடைப்பிடியுங்கள், (துன்பங்களை) சகித்துக் கொள்ளுங்கள், (ஒற்றுமையுடன் உங்களை) பலப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் வெற்றியடையும் பொருட்டு அல்லாஹ்வை அஞ்சிக் (நடந்து) கொள்ளுங்கள்’. (3.200)

    இறையச்சமுடைய மக்கள் தேவையற்ற காரியங்களில் ஈடுபடுவதை விட்டும், வீண் பேச்சை விட்டும், வஞ்ச எண்ணம் கொண்ட தீயோர்களை விட்டும் இறைவன் அருளால் தங்களை பாதுகாத்துக் கொள்கிறார்கள்.

    நாளும் நமது மனதை நோட்டமிட்டு அந்த மனதிற்குள் இறையச்சம் இருக்கின்றதா என்பதை நமக்கு நாமே சுயபரிசோதனை செய்து கொள்ளும்போது நம்முடைய ஈமான் (இறை நம்பிக்கை) பிரகாசமடைகின்றது.

    இந்த இறையச்சத்தில் (தக்வாவில்) ஏதேனும் குறை ஏற்படும்போது அந்த பாதிப்பை நீக்கிட ‘தவ்பா’ என்ற பாவமன்னிப்பை கொண்டு பரிகாரம் செய்து நம்மை சீர்செய்து கொள்ளவேண்டுமென நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு அறிவுரை கூறியுள்ளார்கள்.

    அனைத்தையும் அடக்கி ஆள்பவன் இறைவனே. வானத்திலும், பூமியிலும் அவனது ஆட்சியே சர்வ சதாகாலமும் நடந்துகொண்டு இருக்கிறது. திட்டமிடுவதும், தீர்மானிப்பதும் அது எதுவாக இருப்பினும் அவனது நாட்டம் இன்றி எதுவும் நடைபெறாது என்பதை குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது:

    ‘நபியே! நீர் கூறுவீராக, அல்லாஹ்வே ஆட்சியின் அதிபதியே! நீ நாடுபவர்களுக்கு ஆட்சியை கொடுத்தாய்! நீ நாடுபவர்களிடமிருந்து ஆட்சியை எடுத்தும் விடுகிறாய். இன்னும் நீ நாடியவரை கண்ணியப்படுத்துகிறாய். நீ நாடியவரை இழிவு படுத்துகிறாய். நன்மை, தீமை யாவும் உன் கைவசமே உள்ளது. நிச்சயமாக நீ எல்லாப் பொருட்களின் மீதும் சக்தி பெற்றவன்’. (3.26)

    கீழ் இருப்பதை மேலாக்குவதும், மேல் இருப்பதை கீழாக்குவதும் சர்வ சகதியுமுள்ள இறைவனின் நாட்டப்படியே நடக்கின்றது என்பதை இந்த வசனம் நமக்கு தெளிவுபடுத்துகின்றது.

    நம் ஆன்மாவிற்கு இவ்வுலகில் வாழ ஒரே ஒரு முறைதான் வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதனை இறையச்சத்தால் நிறைவுடைய தாக்கி மகிழ்வது வேண்டியது நம் ஒவ்வொருவருடைய கடமையாகும்.

    நாம் இழுத்துவிடும் மூச்சு நின்று போகும் முன்பு ஈமானின் அடிப்படையில் உள்ள நற்காரி யங்களை தாமதமின்றி இறையச்சத்தோடு நிறைவேற்றி பழகும் போது, வெற்றி என்னும் இறைவனின் அருள் நம்மை தேடிவரும்.

    மு. முகம்மது சலாகுதீன்,

    ஏர்வாடி, நெல்லை மாவட்டம்.
    ×