search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இறை நிராகரிப்பாளர்களின் தோல்வியும் நம்பிக்கையாளர்களின் வெற்றியும்
    X

    இறை நிராகரிப்பாளர்களின் தோல்வியும் நம்பிக்கையாளர்களின் வெற்றியும்

    பத்ர் போரில் சம்பந்தப்பட்ட பல சம்பவங்கள் வரலாற்றுக் குறிப்புகளாக ஸஹீஹ் புகாரி மற்றும் ஸஹீஹ் முஸ்லிமில் இடம்பெற்றுள்ளன. இப்போரில் இறைநிராகரிப்பாளர்களுக்குப் படுதோல்வியும் இறைநம்பிக்கையாளர்களுக்குப் பெரும் வெற்றியும் கிடைத்தது.
    இறைத்தூதர்(ஸல்) அவர்கள் குறைஷியரை இஸ்லாத்திற்கு வருமாறு அழைத்தார்கள். ஆனால், அவர்கள் ஏற்கவில்லை. அதனால் அவர்களுக்கு, பஞ்சம் நிறைந்த ஆண்டுகளைத் தர நபிகளார் பிரார்த்தித்தார்கள். அதன்படி அவர்களைப் பஞ்சம் வாட்டியது. அது அனைத்தையும் அழித்துவிட்டது. எந்த அளவிற்கென்றால், பஞ்சத்தின் கோரப் பிடியினால் அவர்கள் பிணத்தையும், பிராணிகளின் தோல்களையும் உண்டார்கள்.

    மேலும், கடும் பசியினால் கண் பஞ்சடைந்து காணப்பட்டனர். திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறினான் “நபியே! தெளிவானதொரு புகை வானத்திலிருந்து வரும் நாளை நீங்கள் எதிர்பார்த்திருங்கள். மனிதர்களை அது சூழ்ந்துகொள்ளும். அது துன்புறுத்தும் வேதனையாகும்” என்று. உடனே குறைஷியர், 'எங்கள் இறைவனே! எங்களைவிட்டு இவ்வேதனையை நீக்கிவிடு; நிச்சயமாக நாங்கள் உன்னை விசுவாசிக்கிறோம்' என்று வேண்டினர்.

    ஆனால், அல்லாஹ்வின் தூதரை அவர்கள் புறக்கணித்தனர். நபிகளாரைப் பற்றி, 'இவர் எவராலோ பயிற்றுவிக்கப்பட்ட ஒரு பைத்தியக்காரர்தாம்' என்று கூறினர். இருப்பினும் நபி(ஸல்) அவர்கள் குறைஷியர்களுக்காகப் பிரார்த்தித்தார்கள். நபிகளாரின் வேண்டுதலால் அவர்களைவிட்டுப் பஞ்சம் அகன்றது. குறைஷிகள் திருந்தக் கூடுமென்று அவ்வேதனையைச் சிறிது காலத்திற்கு இறைவன் நீக்கி வைத்தான். “அவர்கள் பாவம் செய்யவே மீளுகிறார்கள்” என்ற இறை வசனத்திற்கேற்ப மீண்டும் அவர்கள் இறைமறுப்பிற்கே திரும்பினர். எனவே, அல்லாஹ் அவர்களைப் பத்ர் போரின்போது கடுமையாகப் பிடித்தான்.

    அறுக்கப்பட்ட ஒட்டகத்தின் கர்ப்பப்பையை முஹம்மது நபி (ஸல்) "ஸஜ்தா" செய்யும்போது அதாவது அல்லாஹ்வை சிரம் தாழ்த்திப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தபோது அவர்களுடைய முதுகில் போட்டு சிரித்த அத்தனை அநியாயக்காரர்களும் பத்ருப் போரில் செத்து மடிந்தனர்.

    மக்காவில் அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டு மதீனாவிற்கு நாடு துறந்து வந்தவர்கள் தமது கோபத்தைத் தீர்த்துக் கொள்ளும் களமாகப் பத்ர் போரில் தமது நெருங்கிய சொந்தங்களையே வெட்டிச் சாய்த்தனர். தந்தை மகனுக்கு எதிராகவும், மகன் தந்தைக்கு எதிராகவும் நின்று தமது கொள்கைகளுக்காக உயிர் துறந்தனர்.



    போர் முடிவடைந்த பிறகு இறைநிராகரிப்பவர்களின் பிணங்களை ஓரிடத்தில் போட்டுக் கொண்டிருந்தனர். உத்பா இப்னு ரபீஆவின் பிணத்தை இழுத்து வரும்போது, அவனது மகனார் அபூஹுதைஃபா (ரலி) அதனைப் பார்த்து வருத்தமடைந்தார்கள். அதைக் கவனித்த நபி முஹம்மது (ஸல்), “அபூஹுதைஃபாவே உமது தந்தைக்காகக் கவலைப்படுகிறீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கவர், “எனது தந்தையார் அறிவுத்திறன் கொண்ட சிறந்தவர். அவர் கண்டிப்பாக அல்லாஹ்வை ஏற்பார் என்று நம்பியிருந்தேன். அவர் நிராகரிப்பிலேயே மரணித்ததை நினைத்து வருந்துகிறேனே தவிர அவர் கொலை செய்யப்பட்டதில் எனக்கு எந்தக் கவலையுமில்லை” என்றார்.

    அப்துர் ரஹ்மான் (ரலி), உமய்யா இப்னு கலஃப்பிடம் ‘மக்காவிலுள்ள தன் உறவினர்களையும் சொத்துக்களையும் உமய்யா பாதுகாத்தால் தாம் மதீனாவிலுள்ள அவருடைய உறவினர்களையும் சொத்துக்களையும் பாதுகாப்பேன்’ என்று வாக்குறுதி தந்து போர் முடிந்த இரவு உமய்யாவை அழைத்து வரும்போது பிலால்(ரலி) பார்த்துவிட்டார். பிலாலுக்கு எஜமானாக இருந்து பிலாலை சித்திரவதை செய்தவன் உமய்யா.

    அதனால் உமய்யா தப்பிப்பதை பிலால் (ரலி) விரும்பவில்லை, ‘இதோ உமய்யா இப்னு கலஃப்!’ என்று சத்தமிட்டு அழைத்தபோது அன்ஸாரிகளில் ஒரு கூட்டத்தினர் அவர்களைத் துரத்தினர். உமய்யாவால் ஓட முடியவில்லை. அப்துர் ரஹ்மான்(ரலி), உமய்யாவைக் காப்பாற்ற அவரைக் குப்புறப்படுக்கச் சொல்லி அவர் மீது படுத்துத் தடுத்தார்கள். ஆனால் அன்ஸாரிகள் கீழ்ப்புறமாக வாளைச் செலுத்தி உமய்யாவை கொன்றுவிட்டனர். அப்போது அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்களின் பாதமும் வெட்டுப்பட்டது.

    பத்ர் போரின் போது நபி முஹம்மது (ஸல்) அவர்களின் மகள் ருகய்யா(ரலி) அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்தார்கள். அதனால் அவருடைய கணவர் உஸ்மான்(ரலி) அவர்கள் பத்ர் போரில் பங்கேற்க முடியவில்லை. உங்களுடைய மனைவியைக் கவனித்துக் கொண்டாலே மறுமைக்குரிய பலன் கிடைக்கும் என்றார்கள் நபி முஹம்மது(ஸல்).

    பத்ர் போரில் சம்பந்தப்பட்ட பல சம்பவங்கள் வரலாற்றுக் குறிப்புகளாக ஸஹீஹ் புகாரி மற்றும் ஸஹீஹ் முஸ்லிமில் இடம்பெற்றுள்ளன.

    இப்போரில் இறைநிராகரிப்பாளர்களுக்குப் படுதோல்வியும் இறைநம்பிக்கையாளர்களுக்குப் பெரும் வெற்றியும் கிடைத்தது.

    ஸஹீஹ் புகாரி 4:62:3699, 5:65:4809, 2:40:2301, திருக்குர்ஆன் 44:10-16

    - ஜெஸிலா பானு.
    Next Story
    ×