என் மலர்tooltip icon

    இஸ்லாம்

    நன்மைகளையும், நல்லவைகளையும் செய்யவேண்டும் என்பதையே எந்தவொரு நோன்பும் நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறது. அந்தவகையில் இந்த ஆசூரா நோன்பும் இதைத்தான் எதிர்பார்க்கிறது.
    காலச்சக்கரம் வெகுவேகமாகத்தான் சுழல்கிறது. மீண்டும் ஒரு ஹிஜ்ரிப் புத்தாண்டை சந்தித்திருக்கிறோம். புத்தாண்டின் தொடக்கமான முஹர்ரம் மாதம் பிறந்துவிட்டது. இந்த மாதத்தில் தான் பிறை ஒன்பது, பத்து அல்லது பத்து, பதினொன்று ஆகிய தினங்களில் இஸ்லாமியர்கள் நோன்பு நோற்பது நபி வழியாகும்.

    நபிகளார் மக்கா நகரை விட்டு மதீனா நகருக்கு வந்தபின் அங்குள்ள யூதர்கள் நோன்பு பிடிப்பதைக்கண்டு, ‘இவர்கள் எதற்காக நோன்பு பிடிக்கிறார்கள்?’ என்று மக்களிடம் விசாரித்தார்கள்.

    அன்றைய பனூ இஸ்ரவேலர்கள், எகிப்தின் அரசன் பிர்அவ்ன் என்பவனின் கொடுமைகளிலிருந்து இறைவன் அருளால் மூசா நபி மூலம் காப்பாற்றப்பட்ட நாள் இந்நாள் தான். அதன் நினைவாகத்தான் இவர்கள் நோன்பு நோற்று வருகிறார்கள் என்று மக்கள் கூறினார்கள்.

    இதைக்கேட்ட நபிகள் நாயகம் அவர்கள், ‘அந்த தினத்தை நாமல்லவா வெகு விமரிசையாகக் கொண்டாட வேண்டும். அதன் முழுத்தகுதியும் நமக்கல்லவா இருக்கிறது. பத்தாம் நாள் மட்டும் தான் அவர்கள் நோன்பு வைக்கிறார்கள், இன்ஷா அல் லாஹ், வரும் வருடங்களில் நாம் அத்துடன் ஒரு நோன்பை (முன்போ, பின்போ) சேர்த்து வைக்க வேண்டும்’ என்று கட்டளையிட்டார்கள்.

    முஹர்ரம் மாதத்தின் புனித இரண்டு நாள் நோன்புகள் இப்படி உருவானது தான்.

    ‘ஆசூரா நோன்பின் சிறப்பு என்ன?’ என்று நபிகளாரிடம் கேட்கப்பட்ட போது ‘அது கடந்தகாலப் பாவங்களுக்கு பரிகாரமாகும்’ என்று பதிலளித்தார்கள். (நூல்: முஸ்லிம்). (‘ஆசூரா’ என்ற அரபுச்சொல்லுக்கு ‘பத்தாவது நாள்’ என்று பொருள்)

    நமது பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டும் என்பதுதானே நம்முடைய ஒரேகுறிக்கோள். பாவ மூட்டைகளுடன் நம்மால் எப்படி பரிசுத்த சுவனத்திற்குள் நுழைய முடியும்? அந்தப்பாவ மூட்டைகளை இறக்கி வைப்பதற்கு அற்புதமான வழி இந்த முஹர்ரம் பிறை பத்தின் நோன்பு தான் என்றால் அது மிகையல்ல.

    இஸ்லாமியப் புத்தாண்டு நோன்பிலிருந்து தொடங்குவது கவனிக்கத்தக்கது. நோன்பின் அசல் நோக்கம் நாம் கட்டுப்பாட்டுடனும், இறையச்சத்துடனும் இருக்க வேண்டும் என்பது தான். இவ்விரண்டு பண்புகளும் நம் வாழ்வில் வருடம் முழுவதும் நீடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நோன்பு நமக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடமையாக்கப்பட்டி ருக்கிறது.

    இஸ்லாமிய ஆண்டுக்கு ‘ஹிஜ்ரி ஆண்டு’ என்று பெயர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். ‘ஹிஜ்ரி’ என்பதற்கு ‘விடுதல்’, ‘துறத்தல்’, ‘வெறுத்தல்’ என்றெல்லாம் பொருள் பல உண்டு.

    நமக்கு தேவையில்லாதவைகளை, நமது பாவங்களை விட்டொழிக்கிற போது தான் நமது ஹிஜ்ரியாண்டு உண்மையிலேயே மகத்துவமிக்க ஆண்டாக, மதிப்புமிக்க ஆண்டாக நமக்கு இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

    ‘ஹிஜ்ரத்’ என்பது நாடு துறப்பது மட்டுமல்ல, நமது பாவங்களை துறப்பதும் ஹிஜ்ரத் தான். இன்றைக்கு நாம் செய்ய வேண்டிய ஹிஜ்ரத்தும் இது தான்.

    இன்றைக்கு பாவங்களும், பாவச்செயல்களும் அதிகரித் துவிட்டன. இந்த பாவங்களில் இருந்து விடுதலை பெற உதவுகிறது ‘தவ்பா’ என்னும் பாவமன்னிப்பு.

    ‘ஆதமின் மக்கள் அனைவரும் தவறு செய்பவர்கள்; அவர் களில் தவ்பா செய்பவர்களே சிறந்தவர்கள்’ என்று நபியவர்கள் கூறியது இன்றும் என்றும் நினைத்துப் பார்க்கத்தக்கது.

    ஆக, இஸ்லாமியப் புத்தாண்டு என்பது உண்மையில் நிறைய அர்த்தங்களை தன்னுள் அடக்கி வைத்திருக்கிறது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை. எந்த ஒரு காரியமும் அதன் தொடக்கம் சரியாக இருந்தால் அதன் முடிவும் நிச்சயம் சரியாகத்தான் இருக்கும்.

    நோன்பு நோற்று, இறையச்சத்தில் தொடங்கும் இஸ்லாமியப் புத்தாண்டு, ஒரு உயிரைக் கொடுத்து தியாகம் செய்யும் ஒரு குர்பானியின் வழியே முடிகிறது. ஒரு மனிதனின் சுயவாழ்வில் இறையச்சமும், நிறை தியாகமும் இருந்து விட்டால் அவனது வாழ்க்கை நிச்சயம் சீரும், சிறப்புமாக இருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

    இதனால் தான் இப்ராகிம் நபிகள் இப்படி சொன்னார்கள்: “நிச்சயமாக என்னுடைய தொழுகையும், என்னுடைய (மற்ற) வணக்கங்களும், என் வாழ்வும், என் மரணமும் உலகத்தாரை படைத்து வளர்த்து பரிபக்குவப்படுத்தும் அல்லாஹ்வுக்கே உரியவை”. (திருக்குர்ஆன் 6:162)

    ‘எதுவும் எனக்குரியதல்ல. எல்லாம் அவனுக்குரியதே’ என்ற எண்ணம் நமக்குள் வராதவரை நாம் அவனை அடைய முடியாது என்பது தான் இப் புத்தாண்டின் பத்தாம் நாளான ஆசூரா நமக்கு உணர்த்தும் உண்மை.

    இந்த நாளில் இந்த நோன்பைத் தவிர புனிதமான செயல்கள் என்று வேறு எதுவுமில்லை. ஏனெனில் நோன்பு தான் இறையச்சத்தைத் தரும் ஆடையாகவும், சாத்தானின் செயல்களுக்கு கேடயமாகவும் இருக்கிறது. எனவே இதைவிட வேறு நல்ல அமல் எதுவும் இல்லை. அப்படி இருந்திருந்தால், அதை நபிகள் நாயகம் கட்டாயம் நமக்கு கற்றுக் கொடுத்திருப்பார்கள்.

    எனவே, இந்த இருநாட்களில் நாம் நோன்பு நோற்பது பெரிதல்ல. அதை சரியாக, முறையாக நோற்க வேண்டும். அதை கண்ணியப்படுத்த வேண்டும். உண்ணாமல், பருகாமல் வெறும் பட்டினி கிடப்பதல்ல நோன்பு. முழு இறையச்சத்தோடும், நிறையச்சத்தோடும் வாழ்வது தான் நோன்பு.

    நோன்பு வைத்துக் கொண்டு பொய், புறம், கோள் சொல்வது கூடாது. வீண் பேச்சுக்கள் பேசக்கூடாது. சண்டை, சச்சரவு செய்யக் கூடாது. தீய பார்வை தீயகேள்வி, தீயசுவை, தீய உணர்வு, தீயநுகர்வு போன்றவை கூடாது. ஆக தீமைகளையும், தீயவைகளையும் செய்யக் கூடாது.

    நன்மைகளையும், நல்லவைகளையும் செய்யவேண்டும் என்பதையே எந்தவொரு நோன்பும் நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறது. அந்தவகையில் இந்த ஆசூரா நோன்பும் இதைத்தான் எதிர்பார்க்கிறது.

    வாருங்கள் நமது நோன்பினை போற்றுவோம்...!

    நமது மாண்பினை வளர்ப்போம்...!

    மவுலவி எஸ்.என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3. 
    திருக்குர்ஆனில் சொல்லப் பட்ட சரித்திரங்களை முழுமையாக தெரிந்து கொண்டு, அதன் படிப்பினைகளை நம் வாழ்வில் பின்பற்றி வாழ்வதே சிறப்பு.
    மன்னர் துல்கர்னைன் வரலாறு பற்றி திருக்குர்ஆனில் சூரத்துல் அல்கஹ்பு என்ற அத்தியாயத்தில் (வசனங்கள் 83 முதல் 99 வரை) மிக தெளிவாக கூறப்பட்டுள்ளது. திருக்குர்ஆனுக்கு விளக்கம் சொல்லும் மார்க்க அறிஞர்கள் சிலர், அவரை அல்லாஹ் வின் நபி என்றும், சிலர் அவர் நபி அல்ல என்றும், நீதி நேர்மையுடன் இறைகட்டளைக்கு அடிபணிந்து ஆட்சி செய்த நேர்மையான அரசர் என்றும் கூறுகின்றனர்.

    இவருக்கு, ‘இரண்டு கொம்புடையவர்’ என்ற பெயரும் உண்டு. அவர் கிழக்கிலிருந்து மேற்கு வரை ஆட்சி செய்ததினால் அவருக்கு காரணப்பெயராக அது ஏற்பட்டது என்றும் சொல்வதுண்டு.

    மாவீரர் துல்கர்னைனனும், இப்ராகிம் நபி காலத்தில் வாழ்ந்தவர் என்று வரலாறு கூறுகிறது. இவர் நீதி, நேர்மை கோலோச்சும் பேரரசர். உலகின் கிழக்கு திசையிலிருந்து மேற்கு திசையின் எல்லை வரை வெற்றி கொண்டு ஆட்சியை நிலைநாட்டியவர். பின்பு வெற்றி வாகை சூடிக்கொண்டே தெற்கு திசையின் கோஹஸ்தான் வரை தன் படையை வழிநடத்தி சென்றவர் என்ற விவரங்கள் வரலாற்று குறிப்புகளில் மிகத்தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    திருக்குர்ஆனில், மன்னர் துல்கர்னைன் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளதற்கு பின்னணியில் உள்ள வரலாறு குறித்து அறிந்துகொள்வோம், வாருங்கள்.

    அண்ணல் எம் பெரு மானார் (ஸல்) அவர்கள் மதீனத்து மண்ணிலே ஏகத் துவ கொள்கையை நிலை நாட்டி, தன்னை இறை வனின் திருத்தூதர் என்று பிரகடனப்படுத்திய கா லகட்டம் அது. நபிகளார் பிறப்பதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே அவர்கள் குறித்த அடை யாளங்கள் ‘தவ்ராத்’ வேதத் தில் குறிப்பிடப்பட்டு இருந் தது. ‘தவ்ராத்’ வேதத்தை கற்றறிந்த யூதர்கள், தங்கள் ே்வதத்தில் குறிப்பிடப்ப ட்டுள்ள அங்க அடையா ளங்களைக் கொண்டவர் மதீனத்தில் உள்ள முகம் மது நபிகள் தான் என்பதை அறிந்து கொண்டனர்.

    இருந்தாலும், அங்க அடையாளங்களை மட்டும் வைத்தே அண்ணலாரை இறைவனின் தூதராக ஏற்றுக்கொள்ள அவர்கள் மனம் இடம் கொடுக்கவி ல்லை. எனவே அண்ண லாரை சோதித்துப் பார்க்க முடிவு செய்தனர். இதைய டுத்து, ‘அண்ணலாரிடம் குகைவாசிகள் என்றால் யார்?, துல்கர்னைன் என் பவர் யார்?’ என்ற வினாவை எழுப்பினார்கள். மேலும், ‘இதற்கு சரியான பதிலை சொன்னால் எங்களது வேதத்தில் குறிப்பிட்டுள்ள இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) என்பவர் நீங்கள் தான் என்பதை ஏற்றுக்கொள்கிறோம்’ என்றார்கள்.

    ஒரு வேளை, அண்ணல் எம் பெருமானார் (ஸல்) அவர்களால் இந்தக்கேள்விகளுக்கு சரியான பதில் கூற முடியாமல் போனால், அவர் உண்மையான நபி அல்ல, திருக்குர்ஆன் உண்மையான இறைவேதம் அல்ல என நிரூபித்து விடலாம் என்ற நப்பாசையில் யூதர்கள் இந்த கேள்விகளை கேட்டனர்.

    ஆனால் நடந்தது வேறு. அல்லாஹ் திருக்குர்ஆனில் சூரா அல்கஹ்பு என்ற அத்தியாயத்திம் மூலம், குகைவாசிகள் மட்டுமின்றி துல்கர்னைன் என்பவர் பற்றிய முழு விவரங்களையும் விரிவாகவே நபி களாருக்கு கற்றுக்கொடுத்து விட்டான்.

    “நபியே, துல்கர்னைன் பற்றி யூதர்களாகிய அவர்கள் உங்களிடம் கேட்கின்றனர். ‘அவரு டைய சரித்திரத்தில் சிறிது நான் உங்களுக்கு ஓதி காண்பிக்கின்றேன்’ என்று நீங்கள் கூறுங்கள்”.

    “துல்கர்னைனுக்கு நாம் பூமியில் ஆதிக்கத்தை கொடுத்து, வளமிக்க வசதி வாய்ப்பையும் கொடுத்தோம். ஒவ்வொரு பொருளையும் தன் இஷ்டப்படி செய்யக்கூடிய வழியையும் நாம் அவருக்கு அறிவித்தி ருந்தோம்”. (திருக்குர்ஆன் 18:83-84)

    “சூரியன் மறையும் மேற்கு திசையை அவர் அடைந்த போது சேற்றுக்கடலில் சூரியன் மறைவதுபோல் அவர் கண்டார். அங்கு அவர் ஒருவகையான மக்களை கண்டார். இறைவன் அவரை நோக்கி, “துல்கர்னைனே! நீங்கள் இந்த மக்களை தண்டித்து வேதனை செய்ய அல்லது அவர்களுக்கு வேண்டிய நன்மையை செய்ய உங்களுக்கு முழு அதிகாரம் அளிக்கிறேன்” என்று திருக்குர்ஆன் (18:86) குறிப்பிடுகிறது.

    “எனவே துல்கர்னைன் அம்மக்களை நோக்கி, எவன் என் கட்டளையை மீறி அநி யாயம் செய்கிறானோ அவனை நானும் தண்டி த்து வேதனை செய்வேன். பின் தன் இறை வனிடம் சென்று அங்கும் அவன் வேதனை செய்யப்படுவான்”. (திருக்குர்ஆன் 18:87)

    “ஆனால் எவர் நம்பிக்கை கொண்டு நான் கூறுகின்ற நற்செயல்களை செய்கிறாரோ அவருக்கு இறைவனிடத்தில் அழகான கூலி உண்டு’’ என்று சொல்லி அந்த கூட் டத்தா ரையே முழுமையாக மாற்றி ஏக இறைக் கொள்கையை ஏற்றுக்கொள்ளச் செய்தார்கள்.

    பின்பு கிழக்குத் திசையிலும் ஒரு கூட்டத்தாரை கண்டு அவர்களுக்கும் உபதேசம் செய்து சூரிய வெப்பத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளக்கூடிய தடுப்புகளை ஏற்படுத்துகின்ற ஞானத்தை அவர்களுக்கு கற்றுக்கொடுத்து, காட்டுமிராண்டிகளாக இருந்த மக்களுக்கு அறிவு சுடரை ஏற்றி வைத்தார்கள்.

    பின்பு தெற்கு திசையில் பயணித்த போது அங்கு இரு மலைகளுக்குடையே உள்ள இடைவெளியில் சில மக்களைக்கண்டார். அவர்களின் பேச்சு எளிதில் புரிந்து கொள்ள முடியாத நிலையில் இருப்பதை அவர்கள் உணர்ந்தார்கள்.

    அம்மக்கள், கை சாடையாக அவரிடம் பேச முற்பட்டனர். “யாஜூஜ், மாஜூஜ் என்ற குள்ள இன மக்கள் எங்களிடையே அநியாயம் செய்து பெரும் நஷ்டத்தை ஏற்படுத்துகிறார்கள். அவர்களின் தீமை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. எனவே தாங்கள் எங்களுக்கும் அவர்களுக்கும் இடையே ஒரு தடுப்பை ஏற்படுத்தி தர முடியுமா? அதற்கான ஒரு தொகையை நாங்கள் தாங்களுக்கு தரட்டுமா?’’ என்று வினவினார்கள்.

    அதற்கு துல்கர்னைன் “என் இறைவன் எனக்கு கொடுத்ததே எனக்கு போதுமானது, மிக்க மேலானது. உங்கள் பொருள் எனக்கு தேவையில்லை. ஆனால் உங்கள் உழைப் பைக் கொண்டு எனக்கு உதவி செய்தால் அவர்களுக்கும் உங்களுக்கும் இடையில் ஒரு உறுதியான தடுப்புச்சுவரை நான் ஏற்படுத்தி தர முடியும்’’ என்றும் கூறினார்.

    “நீங்கள் அதற்கு தேவையான இரும்பு பாளங்களை கொண்டு இரண்டு மலைகளுக்கும் இடையில் உள்ள இடைவெளியை இட்டு நிரப்புங்கள். அதன் பின் தீயிட்டு கொளுத்தி அது நன்றாக உருகும் வரை காத்திருங்கள். இரும்பு பாளங்கள் உருகிய பிறகு அதன் மீது பழுக்க காய்ச்சிய செம்பு உலோகத்தை ஊற்றுங்கள். அது குளிர்ந்ததும் உறுதியான ஒரு தடுப்பு சுவராகிவிடும். அதன் பக்கவாட்டில் யாரும் துளையிடவும் முடியாது. அதன் உயரத்தில் யாரும் ஏறவும் முடியாது. உங்களுக்கு அநியாயம் செய்யும் யாஜூஜ், மாஜூஜ் மக்கள் அந்த கரையிலேயே அடைபட்டு கிடப்பார்கள். நீங்கள் இக்கரையில் சுகமாக வாழலாம்” என்று கூறி, அந்த தடுப்பு சுவரை எழுப்பினார்.

    இவ்வாறு தடுப்பு இரும்பு சுவர் தயாராகி விட்டதும், “இது என் இறைவனுடைய அருள், இறைவனுடைய வாக்குறுதியாகிய யுக முடிவு வரும் காலத்தில் இறைவன் இதனையும் தூள் தூளாக்கி விடுவான் என்ற இறைவனின் வாக்குறுதி முற்றிலும் உண்மையானதே” என்று கூறினார்.

    இப்படிப்பட்ட ஒரு இரும்பு சுவர் இன்ன இடத் தில் இருக்கிறது என்றும், அதனை யுகமுடிவு நாளில் தான் அறியச்செய்வேன் என்றும் அல்லாஹ் அருள்மறையில் கூறு கிறான்.

    இன்று அறிவியல் தன் முழு வீச்சை எட்டிய நிலையிலும், வான்கோள்களில் உள்ள விபரங்களை நுண்கருவிகள் மூலம் தெளிவாக அறிந்து கொள்கின்றபோதும் இந்த இரும்புச்சுவர் பற்றி இன்றுவரை எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. அல்லாஹ்வின் கூற்றுப்படி அது உலக முடிவு நாளில் தான் தெரியவருமோ என்னவோ?

    திருக்குர்ஆன் விரிவுரையாளர்கள், இது திருக்குர்ஆன் கூறும் அறிவியல் செய்திகளில் ஒன்று என்று விளக்கம் தருகின்றனர்.

    அண்ணல் எம் பெருமானார் (ஸல்) அவர்கள் இறைவனின் அருளால் மன்னர் துல்கர்னைன் சரித்திரத்தை முழுமையான கூறியதைக் கண்டு யூதர்கள் வெட்கித் தலைகுனிந்தனர். அண்ணலார் (ஸல்) அவர்கள் தான் உண்மைத் தூதர் என்பதை புரிந்து கொண்டனர்.

    இது போன்று திருக்குர்ஆனில் சொல்லப் பட்ட சரித்திரங்களை முழுமையாக தெரிந்து கொண்டு, அதன் படிப்பினைகளை நம் வாழ்வில் பின்பற்றி வாழ்வதே சிறப்பு. 
    எல்லா நல்ல குணங்களும் நம்மிடம் இருந்தாலும், பொறாமை என்னும் தீய குணத்தால் இறைவனின் கோபத்திற்கு ஆளாவதுடன், அவன் அருளைப் பெறுவதில் இருந்தும் நம்மை நாமே தடுத்துக் கொள்கிறோம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
    பொதுவாக யார் பொய் சொல்லும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறாரோ, அதன் காரணமாக, அவரிடம் மற்ற கெட்ட குணங்களும் இருக்கும். பொய்யினைப் போலவே பொறாமையும் மற்ற தீய குணங்களுடன் சேர்ந்தே ஒருவரிடம் குடி கொண்டுள்ளது.

    செல்வம், அழகு, கல்வி, புகழ், அறிவு போன்றவற்றுள் ஏதேனும் ஒன்றோ, அல்லது பலவோ ஒருவருக்கு அதிகமாகக் கொடுக்கப்படுவது இறைவனின் அருளாகும். இது அவரின் மீது மற்றவர்கள் பொறாமை கொள்ளக் காரணமாக அமைகிறது.

    பொறாமைப்படுபவர்கள் தாம் பொறாமை கொள்ளும் மனிதர்கள் மீது பொறாமையின் காரணமாக முதலில் வெறுப்பை வளர்த்துக் கொள்கிறார்கள். வெறுப்பின் காரணமாக அவர்களின் மீது காரணமின்றி கோபம் கொள்கிறார்கள். இன்னும், தாங்கள் பொறாமை கொள்ளும் மனிதர்களைப் பற்றி வதந்தி மற்றும் அவதூறுகளைப் பரப்பி அவர்களின் நற்பெயரைக் கெடுப்பதற்கு தம்மால் ஆன எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வர்.

    இன்னும் யார் மீது பொறாமை ஏற்படுகிறதோ அவர் மீதே முழு கவனமும் செலுத்துவர். அவர் குறித்த ஒவ்வொரு விஷயத்தையும் உற்று நோக்குவர். தங்களுக்கு நல்லது நடந்தால் அடையும் சந்தோஷத்தை விட அவர்களுக்கு துன்பம் நேரும்பொழுது மகிழ்ச்சி கொள்வர்.

    பொதுவாக நமக்குத் தெரிந்தவர்கள், இன்னும் கூடவே இருப்பவர்கள்தாம் பொறாமை கொள்பவர்களாக இருக்கிறார்கள். பள்ளிகளில், கல்லூரிகளில் மற்றும் வேலை செய்யும் இடங்களில் கூட பொறாமை கொள்பவர்கள் இருக்கிறார்கள்.

    நபி யாகூப் (அலை) தன் மகன்களில், நபி யூசுப் (அலை) அவர்களை அதிகம் நேசிப்பதாகக் கருதிய மற்ற சகோதரர்கள், பொறாமையின் காரணமாக, யூசுப் (அலை) அவர்களை பாழும் கிணற்றில் தள்ளி விட்டதை திருமறையின் அத்தியாயம் யூசுப் நமக்கு விளக்குகிறது.

    நண்பர்களுக்குள் இந்த பொறாமை ஏற்பட்டாலும், பெரும் தீங்கை விளைவிக்கிறது. நட்பில் விரிசலை உண்டாக்குகிறது. நண்பர்கள் போல் இருந்து கொண்டே பொறாமை கொள்ளும் மனிதர்கள், நட்பு கொண்ட மனிதர்களிடம் உறவாடி அவர்களின் குடியைக் கெடுக்கிறார்கள்.

    இந்த மாதிரியான ‘முகமூடி’ நண்பர்களிடம் பழகுபவர்கள் அவர்களைப் பற்றி அறிந்து கொண்டு அவர்களை, தங்களிடம் இருந்து விலக்கிக் கொள்வதே அவர்களுக்கு நன்மை பயக்கும். கடுமையான எதிரியை நம்பலாம். இப்படிப்பட்டவர்களை எந்த காலத்திலும் நம்புதல் கூடாது.

    பொறாமையினால் விளையும் கேடுகள் மற்றும் பொறாமை குணம் கொள்ளாதிருத்தலால் விளையும் நன்மைகள் குறித்தும் திருவள்ளுவர் ‘அழுக்காறாமை’ என்ற அதிகாரத்தில் விளக்கியுள்ளார்.

    கூடவே இருந்தோ அல்லது விலகி இருந்தோ பொறாமை கொள்பவர்களின் தீய எண்ணங்கள் அவர்கள் பொறாமை கொள்ளும் மனிதர்களைப் பாதிக்கும். பொறாமை மாதிரியான கெட்ட எண்ணங்களை சைத்தானே மனதில் போட்டு மனிதர்களைத் தவறு செய்யத் தூண்டுகிறான்.

    எனவே நாம் இறைவனிடம் பொறாமைத் தீங்கிலிருந்து அடிக்கடி பாதுகாப்புத் தேடிக் கொள்பவர்களாக இருக்க வேண்டும். இத்தகைய மக்களின் தீங்கில் இருந்து பாதுகாப்புப் பெற அல்லாஹ் தன் வசனங்களை அருளியுள்ளான்.

    ‘’பொறாமைக்காரன் பொறாமைப்படும்போது அவனின் தீங்கை விட்டும் பாதுகாக்கக் கோருகின்றேன்’’ (திருக்குர்ஆன் 113:5)

    எல்லாவிதமான தீங்குகளிலிருந்தும் பாதுகாப்புப் பெறுவதற்கு இறைமறையின் கடைசி மூன்று அத்தியாயங்களை அடிக்கடி ஓதி வருதல் நலம்.

    விறகினை நெருப்பு எரித்து சாம்பலாக்குவதைப் போல் மற்றவர்கள் மீது பொறாமை கொள்பவர்களின் நல்ல அமல்களை அவர்களின் பொறாமைக் குணம் அழித்து விடும் என்பது நபி (ஸல்) அவர்களின் வாக்காகும்.

    பொறாமை தீய குணம் என்றாலும், இரண்டு விஷயங்களைத் தவிர வேறெதற்காகவும் பொறாமை கொள்வது கூடாது.

    1. ஒரு மனிதருக்கு அல்லாஹ் குர்ஆனின் அறிவை வழங்கியுள்ளான். அவர் அதை காலையும், மாலையும் ஓதி வருகிறார். (இதைக் காணும்) மற்றொருவர் இவருக்குக் கொடுக்கப்பட்டுள்ளது போன்று எனக்கும் கொடுக்கப்பட்டிருந்தால் இவர் செய்வதைப் போன்று நானும் செய்திருப்பேன் என்று (ஆதங்கத்துடன்) சொல்கிறார்.

    2. மற்றொரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்கியுள்ளான். அவர் அதை உரிய வழியில் செலவிடுகிறார். (இதைக் காணும்) மற்றொருவர் இவருக்குக் கொடுக்கப்பட்டதைப் போன்று எனக்கும் கொடுக்கப்பட்டிருந்தால் இவர் செய்வதைப் போன்று நானும் செய்திருப்பேன் என்று (ஆதங்கத்துடன்) சொல்கிறார், என அபூ ஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்.

    வாழ்க்கையின் எல்லா நலன்களையும் அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு, தான் விரும்பிய வண்ணம் குறைவாகவோ அல்லது நிறைவாகவோ அளிக்கிறான். நமக்கு கொடுக்கப்பட்டவைகளைப் பற்றி அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டு அவனுக்கு நன்றி செலுத்தக் கூடிய மக்களாக நாம் இருக்க வேண்டும்.

    நம்மிடம் இல்லாதவை மற்றவர்களிடம் இருப்பதைப் பார்க்கும்பொழுது எந்நிலையிலும் அவர்கள் மீது பொறாமை கொள்ளாமல், அவர்களாவது நன்றாக இருக்கட்டும் என்று நினைப்பதுடன், அவர்களின் நல்வாழ்வுக்காக நாம் இறைவனிடம் பிரார்த்தனை புரிய வேண்டும்.

    எல்லா நல்ல குணங்களும் நம்மிடம் இருந்தாலும், பொறாமை என்னும் தீய குணத்தால் இறைவனின் கோபத்திற்கு ஆளாவதுடன், அவன் அருளைப் பெறுவதில் இருந்தும் நம்மை நாமே தடுத்துக் கொள்கிறோம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். பொறாமை என்னும் தீய குணத்தில் இருந்து நம்மைக் காத்து, நமது நல்ல அமல்களின் பலன்களை, நம்மைப் படைத்த இறைவனிடம் இருந்து பரிபூரணமாகப் பெற்றுக் கொள்வதற்கு இறைவனின் அருளை வேண்டுவோமாக.

    ம. அஹமது நவ்ரோஸ் பேகம், சென்னை-84. 
    சத்தியமும், உண்மையும் நிறைந்த திருக்குர்ஆன் வசனங்கள் மக்கள் சிந்தனையை தூண்டியது. இஸ்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மனதில் வேரூன்ற ஆரம்பித்தது.
    “இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்” என்று சேர்த்துச் சொன்னால்) அன்றி; தவிர, (இதை) நீர் மறந்து விடுங்கால் உம் இறைவனை நினைவு படுத்திக் கொள்வீராக; இன்னும், “என்னுடைய இறைவன், நேர் வழியில் இதை விட இன்னும் நெருங்கிய (விஷயத்)தை எனக்கு அறிவிக்கக்கூடும்” என்றும் கூறுவீராக. (திருக்குர்ஆன் 18:24)

    அண்ணல் எம் பெருமானார் (ஸல்) அவர்கள் ‘ஹிஜ்ரத்’ செய்து மக்காவில் இருந்து மதீனாவை சென்றடைந்து ஏகத்துவ பிரச்சாரத்தில் ஈடுபட்டார்கள். ‘இறைவன் ஒருவனே, அவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாரும் இல்லை’ என்ற நபிகளாரின் பிரச்சாரத்தில் இருந்த உண்மையும், சத்தியமும் உலக மக்களை வெகுவாக கவர்ந்தது.

    சத்தியமும், உண்மையும் நிறைந்த திருக்குர்ஆன் வசனங்கள் மக்கள் சிந்தனையை தூண்டியது. இஸ்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மனதில் வேரூன்ற ஆரம்பித்தது. பகுத்தறிவின் பாதையில் மக்களின் சிந்தனையை கிளரச்செய்த எம் பெருமானாரை பின்தொடர்ந்து மக்கள் சாரைசாரையாக இஸ்லாத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

    இஸ்லாமின் இந்த அசுர வளர்ச்சியை, யூதர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. யூதர்களின் ‘தவ்ராத்’ வேதத்தில், முஹம்மது நபி அவர்களின் வருகை பற்றியும், அவரது அங்க அடையாளம் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதன்படி முஹம்மது நபி அவர்கள் தான் தங்கள் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ‘அஹ்மத்’ என்ற முஹம்மது என்பதை தவ்ராத் வேதத்தை நன்றாக கற்று அறிந்த யூத அறிஞர்கள் உணர்ந்திருந்தனர். இருந்தாலும் நபிகளாரை சோதிக்கவே அவர்கள் விரும்பினார்கள். மேலும், அவர் உண்மையான நபி அல்ல என்று விஷமப்பிரச்சாரம் செய்யவே அவர்கள் திட்டமிட்டனர்.

    இதையடுத்து நயீர் இப்னு ஹாரிஸ், அஜபா இப்னு முஇயீத் என்பவர்கள் நபிகளாரை அணுகி கீழ்க்கண்ட மூன்று கேள்விகள் கேட்டனர். ‘தவ்ராத் வேதத்தில் உள்ள இந்த மூன்று கேள்விகளுக்கும் நீங்கள் சரியான பதிலை சொல்லிவிட்டால் நீங்கள் தான் உண்மையான இறைத்தூதர் என்று நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். சரியான பதிலைக்கூறவில்லை என்றால் உங்கள் ஏகத்துவப்பிரச்சாரத்தை உடனே நிறுத்த வேண்டும்’ என்று தெரிவித்தனர்.

    அவர்கள் கேட்ட அந்த கேள்விள் இதுதான்..

    1) ‘ரூஹ்’ என்றால் என்ன?

    2) குகைவாசிகள் யார்? அவர்கள் செய்தி என்ன?

    3) உலகம் முழுவதும் சுற்றிவந்த துல்கர்னைன் என்பவர் யார்?

    நபிகளார் இந்த சவாலை ஏற்றுக்கொண்டார்கள். வானவர் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் அடிக்கடி அண்ணலாரிடம் வந்து இறைவசனங்களை தெரிவித்துக் கொண்டிருந்த காலகட்டம் அது. எனவே அவர்களிடம் கேட்டு இதற்குண்டான பதிலை சொல்லி விடலாம் என்று எண்ணிய நபிகளார் சற்றும் சிந்திக்காமல், ‘நாளை வாருங்கள், இதற்கான பதிலைச் சொல்கிறேன்’ என்பதாக கூறினார்கள்.

    எந்த ஒரு செயலும் இறைவன் விரும்பினால், அவனது அருள் இருந்தால் தான் நடைபெறும் என்ற நம்பிக்கை இஸ்லாத்தில் உள்ளது. எனவே எந்த ஒரு செயல் பற்றி குறிப்பிடும் போது ‘இறைவன் நாடினால்’ என்ற பொருள் தரும் ‘இன்ஷா அல்லாஹ்’ என்ற சொல்லைச்சேர்த்தே குறிப்பிட வேண்டும். ஆனால் இதை நபிகளார் மறந்துவிட்டார்கள். இதையடுத்து இறைவனின் சோதனை இறங்கியது.

    நபிகளார் எதிர்பார்த்தபடி அடுத்த நாள் வந்தது, ஆனால் ஜிப்ரீல் (அலை) வரவில்லை. இவ்வாறு பதினைந்து நாட்கள் கடந்தன, ஆனால் இறைச்செய்தி வந்தபாடில்லை.

    யூதர்களும் மற்றவர்களும் இதை தங்களுக்கு சாதகமாக பயன் படுத்திக்கொண்டார்கள். நபிகளாருக்கு எதிராக தங்கள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தினார்கள். ‘முஹம்மது பொய்யர். அவர் இறைத்தூதர் இல்லை. எங்களின் கேள்விக்கு அவரால் பதில் சொல்ல முடியவில்லை. அவர் உண்மையாளராய் இருந்தால் தவ்ராத்தில் குறிப்பிட்ட நிகழ்ச்சிகள் அவருக்கு அறிவிக்கப்பட்டிருக்க வேண்டுமே?’, என்று கேள்வி எழுப்பினார்கள்.

    ஒவ்வொரு நாளும், ‘முஹம்மது இன்று பதில் சொல்லி விட்டாரா?’ என்று மக்களும் ஆர்வத்துடன் கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.

    பதினைந்து நாட்கள் கடந்த பின்னர் வானவர் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் ‘வஹி’யோடு இறங்கினார்கள். “அண்ணலே! இனி எந்த ஒரு காரியத்தைச் செய்தாலும் ‘இன்ஷா அல்லாஹ்’ என்று சொல்லியே தொடங்குங்கள்” என்ற அறிவுரையோடு, சூரா கஹ்ஃபு (குகை) என்ற பகுதியில் உள்ள வசனங்களை கூறினார்கள்.

    “நபியே! அஸ்ஹாபுல் கஹ்ஃபு என்னும் குகைவாசிகளைப் பற்றி யூதர்கள் உங்களிடம் கேட்கிறார்கள். எந்த குகையுடையவர்களும், சாசனத்தையுடையவர்களும் நிச்சயமாக நம்முடைய அத்தாட்சிகளில் ஆச்சரியமானவர்களாக இருந்தனர் என்று எண்ணுகிறீர்களோ! அவர்களின் சரித்திரத்தை உங்களுக்கு நாம் கூறுகிறோம்’’ (திருக்குர்ஆன் 18:9)

    இந்த குகைவாசிகள் குறித்து திருக்குர்ஆன் வசனம் தெரிவிக்கும் கருத்துக்கள் இதோ...

    மேற்காசியாவில் உள்ள நகரம் இபிஸியஸ். கி.பி. 249 - கி.பி. 251 வரை அந்த நகரை டிஷியஸ் என்ற மன்னன் ஆட்சி செய்துவந்தான். இவன் சிலை வணக்கம் செய்பவனாக இருந்தான். அப்போது சில இளைஞர்கள் சிலை வணக்கத்தை எதிர்த்தனர். அவர்கள் ஏக இறைவனை வணங்கினார்கள். (அந்த வாலிபர்களின் எண்ணிக்கை 3, 5 மற்றும் 7 என்று பலவிதமாக கூறப்படு கிறது).

    இதை அறிந்த மன்னன் அந்த வாலிபர்களை கண்டித்தான், தண்டித்தான். அரசனின் தொல்லைகள் அளவுக்கு மீறிச் செல்லவே வாலிபர்கள் அந்நகரைவிட்டு வெளியேறினார்கள். அருகில் உள்ள மலையில் சென்று அங்குள்ள குகை ஒன்றில் வசித்து அங்கு தங்களின் இறைவழிபாட்டை தொடங்கினார்கள். “எங்கள் இறைவனே! உன் அருளை எங்களுக்கு வழங்குவாயாக. நீ எங்களுக்கு நேரான வழியையும் சுலபமாக்கி விடுவாயாக’’ என்று பிராத்தித்தார்கள்.

    இறைவன் அவர்களின் துஆவை ஏற்றுக்கொண்டு அவர்களை அப்படியே ஆழ்ந்த நித்திரையில் ஆழ்த்தினான். அல்லாஹ் கூறுகிறான், “அக்குகையில் உள்ளவர்கள் நித்திரை செய்த போதிலும் அவர்களை காணும் நீங்கள் அவர்கள் விழித்துக் கொண்டிருப்பதாகவே எண்ணுவீர்கள். ஏனென்றால் அவர்களை நாம் வலப்பக்கமாகவும் இடப்பக்கமாகவும் மாற்றி மாற்றி திருப்பிக் கொண்டேயிருந்தோம்.” (திருக்குர்ஆன் 18:8)

    இவ்வாறு நித்திரை செய்யும் அவர்களை அல்லாஹ் எழுப்பினான். எவ்வளவு காலம் நாம் உறக்கத்தில் இருந்தோம் என்பதை அவர்கள் எண்ணியபோது ஒரு நாளின் ஒரு சிறுபகுதி அல்லது ஒரு நாள் நித்திரை செய்திருப்போம் என்று தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.

    அவர்களுக்குப் பசி எடுத்தது. எனவே அவர்களில் ஒருவரிடம் தங்களிடமிருந்த வெள்ளிக்காசுகளில் சிலவற்றைக் கொடுத்து அருகில் உள்ள ஊருக்குச்சென்று உணவு பொருட்களை வாங்கி வருமாறு அனுப்பினார்கள். கடையில் சென்று உணவினை வாங்கிய போது கடைக்காரர் வந்த வாலிபரின் தோற்றத்தையும் அவர் கொடுத்த அந்த வெள்ளிக் காசுகளையும் நோட்டமிட்டவராக, ‘இது மாபெரும் விசித்திரமாக இருக்கிறதே. இந்த வெள்ளிக்காசு எல்லாம் 300 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் புழக்கத்தில் இருந்த காசுகள் அல்லவா?’ என்று ஆச்சரியப்பட்டு அவரிடம் விசாரித்தார். இதையடுத்து அந்த வாலிபர் மீண்டும் குகைக்கு திரும்பினார். அப்போது தான் தாங்கள் முன்னூறு ஆண்டுகாலங் களுக்கும் மேலாக நித்திரையிலேயே மூழ்கி விட்டோம் என்ற உண்மையை அந்த வாலிபர்கள் உணர்ந்து கொண்டார்கள்.

    இந்த அதிசய சம்பவம் அப்போது ஆட்சி பொறுப்பில் இருந்த தியோஷியஸ் என்ற அரசருக்கு தெரிவிக்கப்பட்டது. அவரும் அந்த வாலிபர் களைத் தேடி குகைக்கு வந்த போது அந்த குகைவாசல் மூடப்பட்டு கிடந்தது.

    எனவே அவர்கள் பற்றி முழு விவரங்கள் கிடைக்கப் பெறாதவர்களாக தங்களுக்குள் தர்க்கித்து கொண்டு, ‘இவர்களை இறைவன் தான் நன்கறிவான். இவர்கள் இருந்த இடத்தில் ஞாபகர்த்தமாக ஒரு மினராவை எழுப்புங்கள்’ என்றார்கள்.

    இந்த சரித்திரத்திலிருந்து இரண்டு விஷயங்கள் நம் அறிவிற்கு தெள்ளத் தெளிவாகப் புலப்படுகிறது. ஒன்று இறைவன் தான் படைப்பினங்களைப் படைப்பவன். அவன் நாடினால் அதனை மரணிக்கச் செய்து மீண்டும் உயிர் கொடுத்து எழுப்புவான். காலங்கள் பல கடந்தாலும் அதே வாலிபர்களாக எழுப்ப இறைவனால் மட்டுமே முடியும். வாலிபமும், முதுமையும் கூட இறைவனின் ஆளுமையில் தான் இருக்கிறது என்பதும் தெள்ளத்தெளிவாகப் புலப்படுகிறது.

    அண்ணல் எம் பெருமானார் (ஸல்) அவர்கள் இந்த தகவல்கள் அனைத்தையும் யூதர்களிடம் கூறி அவர்கள் கேட்ட 3 கேள்விகளுக்கும் பதில் அளித்தார்கள். இந்த செய்தி அரேபியா முழுவதும் பரவியது. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) என்பது நிரு பணம் ஆனது. அண்ணலார் தான் உண்மையான நபி என்பதும் உறுதியானது. மக்கள் முன்பைவிட அதிகமாக இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டினார்கள். 
    ஒருசிலருக்கு எல்லாவற்றிலும் அவசரம். ஒருவரைத் திருத்துவதிலும் அவசரம். ஒரே உபதேசத்தின் மூலம் தவறு செய்பவர் திருந்திவிட வேண்டும், மனிதப் புனிதராக மாறிவிடவேண்டும் என்று எதிர்ப்பார்க்கின்றனர்.
    ஒருசிலருக்கு எப்போதும் அவசரம். எல்லாவற்றிலும் அவசரம். பொருள் சம்பாதிப்பதில் அவசரம். வாழ்வாதாரங்களையும் வசதி வாய்ப்புகளையும் உருவாக்குவதில் அவசரம். பதவிகளைப் பெறுவதில் அவசரம். வணக்க வழிபாடுகளிலும்கூட அவசரம்.

    அவ்வளவு ஏன் இறைவனிடம் வேண்டும் பிரார்த்தனையிலும் அவசரப்படுகின்றான் மனிதன். ஆம், கேட்டவை அனைத்தும் உடனே கிடைத்துவிட வேண்டும், அனைத்தையும் உடனே இறைவன் அங்கீகரித்துவிட வேண்டும் என்று அவசரப்படுகின்றான் மனிதன்.

    “மனிதன் பெரிதும் அவசரக்காரனாக இருக்கின்றான்” (17:11) என்ற திருக்குர் ஆனின் கூற்று எவ்வளவு உண்மை என்பதைச் சிலருடைய செயல்களில் இருந்து புரிந்துகொள்ளலாம்.

    ஒரு சிலர் தொழுகையைக்கூட அவசர அவசரமாகத் தொழுகின்றனர். ஏன் இந்த அவசரம்? உணவுத் துகள்களைக் கோழி கொத்துவதைப் போன்று அவசர அவசரமாக குனிந்து நிமிர்ந்துவிட்டு பள்ளிவாசலை விட்டு ஒரே ஓட்டமாக வெளியே ஓடிவிடுகின்றனர். யாரைத் திருப்திப்படுத்த இந்தத் தொழுகை?, யாரை ஏமாற்ற இந்தத் தொழுகை?

    ‘நிதானமே பிரதானம்’ என்பது பொதுவிதி. அவசரம் சைத்தானுடைய பண்பு. எதில் அவசரப்பட வேண்டும், எதில் அவசரப்படக்கூடாது என்று யோசித்து செயல்படுவதே புத்திசாலித்தனம். நல்ல விஷயங்களில் அவசரப்படுவதை இஸ்லாம் ஊக்குவிக்கிறது. அதேநேரம் தீய விஷயங்களில் அவசரப்படுவதை இஸ்லாம் கண்டிக்கிறது.

    மனிதனோ தலைகீழாக இருக்கின்றான். நல்லவற்றில் நத்தை போன்று மெதுவாகவும், அல்லாதவற்றில் எலியைப் போன்று அவசரமாகவும் செயல்படுகின்றான்.

    ‘படிமுறை விதி’ என்பது பிரபஞ்சத்தின் மாறாத நியதிகளில் ஒன்றாகும். கருவில் மனிதனின் உருவாக்கம் ஒரே இரவில் நடப்பதில்லை. பத்து மாதம் என்ற படிமுறையில் தான் அமைந்துள்ளது. இந்த உலகத்தையும் இறைவன் படிமுறை அமைப்பிலேயே படைத்துள்ளான். வானம் பூமியை ஆறு நாட்களில் படைத்துள்ளதாக இறைவன் குறிப்பிடுகின்றான்.

    ‘ஆகுக’ என்ற ஒற்றைச்சொல் மூலம் அனைத்தையும் படைக்க சக்தி பெற்ற ஆண்டவன் எதற்கு ஆறு நாட்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்? அவசரமின்மையே காரணம்.

    இஸ்லாமியச் சட்ட விதிகளான; ஹலால் (அனுமதிக்கப்பட்டவை), ஹராம் (தடை செய்யப்பட்டவை), வணக்க வழிபாடுகள் அனைத்தும் படிமுறை அமைப்பிலேயே சட்ட முறைமையாக்கப்பட்டன எனும் உண்மையை திருக்குர்ஆன் வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.

    உதாரணமாக, நோன்பு குறித்து பேசிய ஆரம்ப வசனம் இப்படிக் கூறுகிறது: “நோன்பு நோற்க சக்தி பெற்றிருப்பவர்கள் (நோற்காமல் விட்டுவிட்டால் அவர்கள்) மீது ‘பித்யா’ (பரி காரம்) கடமையாகின்றது. அது (ஒரு நோன்புக்குரிய பரிகாரம்) ஓர் ஏழைக்கு உணவளிப்பதாகும். ஆனால் எவரேனும் விரும்பி அதிக நன்மை செய்தால், அது அவருக்கே சிறந்ததாகும்” (2:184)

    இதற்குப்பின்னரே நோன்பு கடமையாக்கப்பட்டுவிட்டது எனும் பின்வரும் வசனம் இறங்கியது: “எனவே இனி உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம் மாதம் முழுவதும் நோன்பு நோற்க வேண்டும்”. (2:185)

    கடமைகள் இவ்வாறு படிமுறை ஒழுங்கில் விதிக்கப்பட்டதுபோன்று, தடை செய்யப்பட்டவையும் படிமுறை ஒழுங்கிலேயே விதிக்கப்பட்டன. மதுபானத் தடைச்சட்டம் இதற்கு சிறந்த உதாரணமாகும். மதுபானத்தைத் தடை செய்யும் வசனங்கள் குர்ஆனில் மூன்று கட்டங்களாக இறங்கியுள்ளன. மூன்றாம் கட்டமாக இறங்கிய பின்வரும் வசனமே ‘மதுவை நெருங்க வேண்டாம்’ என்று அறிவித்தது.

    “மது மற்றும் சூதாட்டத்தின் வாயிலாக உங்களுக்கிடையில் பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தி அல்லாஹ்வை நினைவுகூர்வதிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்துவிடவே சைத்தான் விரும்புகிறான். இதற்குப் பிறகாவது நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்வீர்களா?” (திருக்குர்ஆன் 5:91)

    இறைவனின் இந்த வேண்டுகோளுக்கு இறைநம்பிக்கையாளர்களின் பதில் இவ்வாறு இருந்தது: “இறைவா! நாங்கள் தவிர்ந்துகொண்டோம். இறைவா! நாங்கள் தவிர்ந்துகொண்டோம்”.

    இந்த இறைவசனம் இறங்கிய பின்னர் இறைநம்பிக்கையாளர் நடந்துகொண்ட விதம் உண்மையில் ஆச்சரியமானது. கையில் மதுக் கோப்பையுடன் இருக்கும் ஒருவர், பாதி அருந்திய நிலையில் இந்த வசனத்தைச் செவியுறுகின்றார், உடனடியாக அவருடைய கையில் இருக்கும் அந்தக் கோப்பையை மண்ணில் கொட்டிவிடுகின்றார். வீட்டில் இருக்கும் மதுக் கோப்பைகளை வீதிக்குக் கொண்டுவந்து கொட்டிவிடுகின்றனர்.

    ஒருசிலருக்கு எல்லாவற்றிலும் அவசரம். ஒருவரைத் திருத்துவதிலும் அவசரம். ஒரே உபதேசத்தின் மூலம் தவறு செய்பவர் திருந்திவிட வேண்டும், மனிதப் புனிதராக மாறிவிடவேண்டும் என்று எதிர்ப்பார்க்கின்றனர்.

    மனிதர்கள் அவசரப்படு வதைப் போன்று ஆண்ட வனும் அவசரப்பட்டால் விளைவு என்னவாகும்? தவறு செய்பவர் களுக்கு உலகிலேயே உடனடித் தண்டனை எனும் செயல்திட்டத்தை இறைவன் செயல் படுத்தியிருந்தால் ஒருவருமே மிஞ்சமாட்டார்கள். ஆயினும் ஆண்டவன் விட்டுப்பிடிக்கின்றான். இதுவும் அவனது கருணையே.

    இது குறித்து இறைவன் இவ்வாறு கூறுகின்றான்:

    “மனிதர்கள் (உலகின்) நன்மைகளைக் கோருவதில் எந்த அளவு அவசரப்படுகின்றார்களோ, அந்த அளவு மனிதர்களுக்குத் தீங்கிழைப்பதில் அல்லாஹ்வும் அவசரங்காட்டினால், அவர்களின் செயல்பாட்டிற்கான அவகாசம் என்றைக்கோ முடிக்கப்பட்டு விட்டிருக்கும். (ஆனால் இது நமது நியதி அல்ல)” (திருக்குர்ஆன் 10:11)

    உமர் பின் அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்கள் பெரும் அரசியல் குழப்பங்கள், ஊழல் மோசடிகள், பிரச்சினைகள் நிறைந்த சூழலிலேயே கலீபா பதவியை ஏற்றார்கள். எனினும் அப்பிரச்சினைகளையும் மோசடிகளையும் உடனடியாக முற்றுமுழுதாக மாற்றும் முயற்சியில் அல்லது தடுக்கும் செயல்பாட்டில் அவர் இறங்கவில்லை. படிப்படியாகவே அவற்றை ஒழித்தார்கள்.

    ஒருமுறை உமர் பின் அப்துல் அஸீஸ் அவர்களிடம் அவருடைய மகன் கேட்டார்: “தந்தையே எதற்காக நீங்கள் தயங்குகின்றீர்கள்? பிரச்சினைகளை உடனடியாக முடிக்க வேண்டியதுதானே. உடனுக்குடன் தீர்த்து வைப்பதில் என்ன தயக்கம்?”.

    தந்தை கூறினார்: “அருமை மகனே! நீ அவசரப்படுகின்றாய். மதுபானத்தை அல்லாஹ் இருமுறை இழிவுபடுத்தினான். பின்னர் மூன்றாம் முறையே அதனைத் தடை செய்தான். ஒரு விஷயம் உண்மையாகவே இருந்தாலும் மக்களின் மீது திணிப்பதை நான் பயப்படுகின்றேன். அவ்வாறு திணித்தால் மக்கள் ஒரேயடியாக மறுத்துவிடலாம் என்று நான் அஞ்சுகிறேன்”.

    உண்மைதான்... அவசரம் அவசரமாக அடுத்தவர் மீது அனைத்தையும் நாம் திணிக்கின்றோம். திணிப்பு தீர்வாகாது என்பதை மறந்துவிடுகின்றோம்.

    -மவுலவி நூஹ் மஹ்ழரி, குளச்சல்.
    எல்லாம் வல்ல அல்லாஹ், மனிதர்கள் காலக்கணக்கை அறிந்து கொள்வதற்காக மாதங்களைப் பற்றிய விவரங்களை திருக்குர்ஆனில் விவரித்து சொல்லப்பட்டுள்ளது.
    எல்லாம் வல்ல அல்லாஹ், மனிதர்கள் காலக்கணக்கை அறிந்து கொள்வதற்காக மாதங்களைப் பற்றிய விவரங்களை திருக்குர்ஆனில் விவரித்து சொல்லப்பட்டுள்ளது.

    மாதங்களின் எண்ணிக்கையைப் பனிரெண்டாகச் சொன்னான், அதன் முதல் மாதமாக முஹர்ரம் மாதத்தைச் சொல்கின்றான். அந்த முஹர்ரம் மாதம், அல்லாஹ்விடத்தில் சிறப்புள்ள மாதங்கள் நான்கில் ஒன்றென சொல்கின்றான்.

    ‘நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை ஓர் ஆண்டுக்கு பனிரெண்டு தான். இவ்வாறே வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்து அல்லாஹ்வின் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் நான்கு மாதங்கள் சிறப்புற்றவை’. (திருக்குர்ஆன் 9:36)

    அல்லாஹ் காலக்கணக்கை வானங்கள், பூமி படைக்கப்பட்ட நாளிலேயே நிர்ணயம் செய்ததாக சொல்கின்றான். சூரிய சந்திர ஓடு பாதைகளையும் இரவு, பகல் மாறி மாறி வருவதைக் கொண்டு அதனை நிர்ணயம் செய்து அப்போதே பதிவு செய்துள்ளான் என்று அருள்மறை சொல்வது அறிவியலின் முன்னோடியாகத் தன்னை நிரூபித்துள்ளது. சிறப்புற்ற மாதங்கள் நான்கு என்று சொன்னவன், அம்மாதங்களில் போர் செய்வதையும் தடை செய்துள்ளான்.

    ‘போர் செய்வது தடுக்கப்பட்டுள்ள, ரஜப், துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம், ஆகிய சிறப்புற்ற மாதங்களுக்கு சிறப்புற்ற மாதங்களே ஈடாகும்’ (2:194)

    சிறப்புற்ற இந்த நான்கு மாதங்களிலும் சிறப்பான நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளதையும் பற்றி பரவலாக பல இடங்களில் வான்மறையில் குறிப்பிடுகின்றான். அதிலும் குறிப்பாக முஹர்ரம் மாதத்தில் நபிமார்கள் வாழ்வில் நிகழ்ந்த பல வரலாற்று சரிதைகளை அண்ணல் எம்பெருமானார் (ஸல்) அவர்கள் வழியாக அறிவிக்கின்றான்.

    இறைவனால் தடுக்கப்பட்ட பழத்தை சாப்பிட்டதால் சொர்க்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆதம்-ஹவ்வா ஆகியோர் தங்கள் செயலுக்கு மனம் வருந்தி இறைவனிடம் மன்னிப்பு கேட்டனர். அல்லாஹ், அவர்களை மன்னித்து தூய்மைப்படுத்தியது இந்த முஹர்ரம் மாதத்தின் பத்தாவது நாளாக அமைந்துள்ளது.

    ‘பின்னர் ஆதம் சில வாக்கியங்களை தன் இறைவனிடமிருந்து கற்றுக்கொண்டார். அவ்வாக்கியங்களை கொண்டு அவர் பிரார்த்தனை செய்த வண்ணமாகவே இருந்தார். அதனால் அல்லாஹ் அவரை மன்னித்துவிட்டான். நிச்சயமாக அவன்தான் மிக்க மன்னிப்பவன். மிக்க கருணையுடையவன் ஆவான்’ (திருக்குர்ஆன் 2 :37)

    அடுத்து சொல்லும் போது, நூஹ் நபிகளின் கூட்டத்தாரைப் பற்றி விவரித்து கூறுகிறான் அல்லாஹ். கிட்டத்தட்ட 990 ஆண்டுகள் ‘அல்லாஹ் ஒருவன் தான் வணக்கத்திற்குரிய இறைவன்’ என்ற தாரக மந்திரத்தை உபதேசித்தும், அந்த மக்களில் சிலரைத் தவிர பெரும் பான்மையினர் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, நூஹ் நபிகள் அல்லாஹ்விடம், ‘இறைவா, நீண்ட நெடுங்காலம் இந்த மக்களிடம் உன் ஏகத்துவத்தை எடுத்தியம்பி விட்டேன். ஆனால் ஒரு சிலரைத்தவிர மற்றவர்கள் ஏற்க மறுக்கிறார்கள். உனக்கு மாறு செய்கிறார்கள். எனவே இந்த மக்களை நீ அழித்துவிடு’ என்று கேட்டுக்கொண்டார்கள்.

    அல்லாஹ்வும் இந்த பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு ஆறுதல் சொன்னான். ‘நீங்கள் என் கட்டளைப்படி ஒரு கப்பலைச் செய்து, அதில் எல்லா உயிரினங்களிலும் ஒரு ஜோடியை ஏற்றிக்கொள்ளுங்கள். என் கட்டளைப்படி வான்மழை பொழிந்து இந்த உலகத்தை அழித்துவிடும், என்றான். இதையே திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

    ‘பின்னர் பூமியை! நீ உன் தண்ணீரை விழுங்கிவிடு. வானமே மழை பொழிவதை நிறுத்திக்கொள் என்று கட்டளை பிறப்பிக்கப்படவே தண்ணீர் வற்றிவிட்டது. இதற்குள் அவர்கள் அழிந்து அவர்களுடைய காரியம் முடிந்துவிட்டது. அக்கப்பலும் ஜூதி என்ற மலையில் தங்கியது’. (திருக்குர்ஆன் 11.44)

    இந்த சிறப்பான திருப்பம் நிகழ்ந்த நாளும் முஹர்ரம் மாதத்தின் பத்தாவது இரவில் தான்.

    பிரவுன் என்ற கொடுங்கோல் மன்னனை எதிர்த்து மூஸா நபிகள் போராடினார்கள். ‘நான் தான் கடவுள்’ என்று இஸ்ரவேலர்களை அடிமைப்படுத்தி வாழ்ந்து வந்தான், பிரவுன். பெரும் போராட்டத்திற்குப்பின் மூஸா நபிகள் இஸ்ரவேலர்களை காப்பாற்றி அழைத்துச் சென்றார்கள். பிரவுன் படையும் அவர்களைப்பின் தொடர்ந்து விரட்டியது.

    இடையே கடல் குறுக்கிடவே அல்லாஹ்வின் கட்டளைப்படி மூஸா நபியும், இஸ்ரவேலர்களும் கடலில் இறங்கினார்கள். கடலும் பிளந்து அவர்களுக்கு வழி அமைத்து கொடுத்தது. பின்தொடர்ந்து வந்த பிரவுனும் அவனது படையும் கடலில் இறங்கின. மூஸா நபியின் கூட்டம் கரையேறியதும், பிரவுனும் அவன் படையும் அல்லாஹ்வின் கட்டளைப்படி கடலில் மூழ்கி அழிந்து போயினர்.

    மூஸா நபியையும், இஸ்ரவேலர்களையும் கடலைப் பிளந்து காப்பாற்றிய அந்த நிகழ்வும் முஹர்ரம் மாதம் 10-ம் இரவில் நடந்ததாக குறிப்புகள் உள்ளன.

    ஒருமுறை நபிகள் நாயகம் மதினத்து நகரத்து வீதியில் உலா வரும்போது, யூதர்கள் அனைவரும் அன்று நோன்பு இருப்பதை அறிந்தார்கள். ஏன் எல்லோரும் நோன்பு இருக்கிறீர்கள் என்று வினவிய போது, ‘மூஸா நபியவர்களும் எங்களது முன்னோர்களும் அல்லாஹ்வால் கடலை பிளந்து காப்பாற்றப்பட்ட முஹர்ரம் 10-ம் நாளை அவர்கள் நினைவு கொண்டு நன்றி செலுத்துவதற்காக நாங்கள் நோன்பு இருக்கிறோம்’ என்றார்கள்.

    உடனே பெருமானார் (ஸல்) அவர்கள், ‘உங்களை விட மூஸா நபியை உரிமை கொண்டாட முஸ்லிம்களுக் குத்தான் அதிக முன் னுரிமை உண்டு. எனவே இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) வரும் ஆண்டு நான் உயிரோடிருந்தால் உங்களை விட அதிகமான 2 நாட்கள் நோன்பு இருப்பேன்’ என்றார்கள்.

    ஆனால் அடுத்த ஆண்டு அவர்கள் இறைவனடி சேர்ந்து விட்டார்கள். அண்ணலார் சொன்னதை நினைவு கொண்டு எல்லா இஸ்லாமியரும் முஹர்ரம் மாதத்தில் இரு நாட்கள் நோன்பிருந்து வருகிறார்கள்.

    ஐயூப் நபியவர்கள் இவ்வுலகத்திற்கு நபியாக அனுப்பப்பட்டிருந்தாலும் அவர்களும் சோதனையை சந்தித்தார்கள். தனது ே்நாயை தீர்க்க இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்கள். அவரது பிரார்த்தனையை ஏற்றுக்கொண்ட அல்லாஹ் நோயிலிருந்து முழு நிவாரணம் அளித்தான். இது குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

    ‘நாம், உமது காலை பூமியில் தட்டுவீராக’, என்று கூறினோம். அவர் தட்டவே, ஓர் ஊற்று வழிந்தோடியது. அவரை நோக்கி ‘இதோ குளிப்பதற்கான குளிர்ந்த நீர். இதுவே உமது பானமும் ஆகும்’ என்று கூறினோம். அதனால் அவருடைய நோய்கள் குணமாகிவிட்டன. (திருக்குர்ஆன் 38:42)

    ஐயூப் நபியின் நோய் நீங்கிய அந்த நல்ல நாளும் முஹர்ரம் 10-ம் நாள் தான்.

    மீன் வயிற்றில் குடியிருந்த யூனூஸ் நபியவர்கள் மீண்டும் உலகில் வந்து அவதரித்த நாளும் முஹர்ரம் 10-ம் நாள் தான். இதுபோன்று இன்னும் பல சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் இந்த நாளில் நிகழ்ந்ததாக வரலாற்று குறிப்புகள் உண்டு.

    இத்தகைய மிகவும் சிறப்பு வாய்ந்த முஹர்ரம் மாதத்தின் 10-ம் நாட்களை நினைவு கொண்டு போற்றுவதற்கு நபிகள் சொல்லித் தந்த வழிமுறையை பின்பற்றுவோம். யூதர்களுக்கு மாற்றம் செய்யும் வகையில், 9, 10 அல்லது 10,11 ஆகிய இரு தினங்கள் நோன்பு இருப்போம். அதனால் நமக்கு வரவிருக்கின்ற இடர்களிலிருந்து இறைவனிடம் பாதுகாப்பு பெற்றுக்கொள்வோம். 

    மு.முஹம்மது யூசுப், உடன்குடி.
    கடனை விட்டு ஓடவும், ஒளியவும் முடியாத சூழலை தெரிந்தோ, தெரியாமலோ நாம் ஏற்படுத்திக் கொண்டோம். கடனை சாட்சிகளை வைத்து வாங்கினால், நம் உண்மைத்தன்மையும், உறவுகளும், நட்புகளும் பாதுகாக்கப்படும்.
    கடனில்லாமல் வாழ்வது என்பது பெரும் பாக்கியம். அப்படி வாழ்க்கை அமைவதென்பது பெரிய சவால். கடன் என்பது மனித வாழ்வின் முக்கிய அங்கமாக மாறிவிட்டது. கடனில்லா மனிதனைப் பார்ப்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக மாறிவிட்டது.

    கடனை விட்டு ஓடவும், ஒளியவும் முடியாத சூழலை தெரிந்தோ, தெரியாமலோ நாம் ஏற்படுத்திக் கொண்டோம். கடனை சாட்சிகளை வைத்து வாங்கினால், நம் உண்மைத்தன்மையும், உறவுகளும், நட்புகளும் பாதுகாக்கப்படும்.

    அவசியத் தேவைக்கு கடன்

    நம் வாழ்வின் அடிப்படைத்தேவைகளான, உணவு, ஆடை, குடிநீர் மற்றும் திருமணம் போன்றவற்றுக்குக் கடன் வாங்குவதில் தவறு இல்லை. அப்படியில்லாமல் ஆடம்பர விழாக்களுக்கும், தன்னைச் செல்வந்தன் போன்று காட்டிக்கொள்ளவும் கடன் வாங்கினால், அந்தக்கடன் நம்மை நடுவீதியில் நிறுத்தி விடும்.

    அவசியத் தேவைக்கு கடன் வாங்கும் நாம், அதனை உரிய காலத்தில் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வாங்குதல் அவசியமாகும். பணத்தை வாங்கிவிட்டு ஏமாற்றிவிடலாம் என்று கடன் வாங்குவது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட ஒன்று.

    ‘திருப்பிக்கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கடன் வாங்கினால், அந்த பணத்தை திரும்பச் செலுத்த இறைவன் முழு உதவி செய்கிறான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். கடன் பெற்று, திருப்பிச் செலுத்தாமல் இழுத்தடிப்பது, ஏமாற்றுவது குற்றமாகும்.

    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “செல்வந்தன் (வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாமல் தவணைக் கேட்டு) இழுத்தடிப்பது அநியாயமாகும். உங்களில் ஒருவரது கடன் ஒரு செல்வந்தன் மீது மாற்றப்பட்டால் அவர் (அதற்கு) ஒத்துக்கொள்ளட்டும்”. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)

    வசதியுள்ளவர் கடனை திருப்பிக்கொடுக்காமல் இருப்பது அவரது மானத்தை(பங்கப்படுத்துவதை)யும், அவரை தண்டிப்பதையும் ஆகுமானதாக்கிவிடும் என்றும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்கள்: நஸாஈ, அபூதாவூத்).

    கடன் கொடுக்கும், வாங்கும் முறை

    ஒரு காலத்தில் கடன் கொடுக்கும் நபர்களைவிட, கடன் கேட்கும் ஆட்கள் தான் அதிகம். ஆனால், தற்போது தேடிச்சென்று கடன் கொடுக்கும் ஆட்களும் அதிகமாகப் பெருகிவிட்டார்கள்.

    ஆனால் எப்படி கடன் கொடுக்க வேண்டும், எப்படி வாங்க வேண்டுமென்ற எந்த வரைமுறையும் இல்லாமல், கடன் கொடுக்கல்-வாங்கல் இருப்பதால் பல பிரச்சினைகள் உருவாகி, உறவுகள், நட்புகள் இரண்டாகப் பிரிகின்றன. அதற்கான, சரியான சட்டதிட்டங்களை இறைவன் கீழ்க்கண்ட திருக்குர்ஆன் (2:282) வசனங்களின் மூலம் விளக்கிக் கூறுகின்றான்.

    “நம்பிக்கை கொண்டோரே, குறிப்பிட்ட தவணைக்கு நீங்கள் கடன் கொடுத்தால், அதனை எழுதிக்கொள்ளுங்கள். உங்களுக்கு மத்தியில் எழுதுபவர் நீதமாக எழுதட்டும்.

    எழுதுபவர் அல்லாஹ் தனக்குக் கற்றுக்கொடுத்தவாறு எழுத மறுக்க வேண்டாம். எனவே, அவர் எழுதட்டும்.

    எவர் மீது கடன் பொறுப்பு இருக்கிறதோ அவர் வாசகங் களைக் கூறட்டும். மேலும் அதில் எதையும் குறைத்துவிடாது தனது இரட்சகனாகிய அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளட்டும்.

    கடன் பொறுப்புள்ளவர், விவரமற்றவராகவோ அல்லது பலவீனராகவோ அல்லது வாசகத்தைக் கூற இயலாதவ ராகவோ இருந்தால் அவரது பொறுப்பாளர் நீதமாக வாசகத்தைக் கூறவும்.

    மேலும், உங்கள் ஆண்களில் இருந்து இரு சாட்சியாளர்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். ஆண்கள் இருவர் இல்லையென்றால் சாட்சிகளில் நீங்கள் பொருந்திக் கொள்ளக் கூடியவர்களிலிருந்து ஆண் ஒருவரையும், பெண்கள் இருவரையும் (சாட்சிகளாக எடுத்துக் கொள்ளுங்கள்.) ஏனெனில், அவ்விருவரில் ஒருத்தி தவறிவிட்டால் அவர்களில் ஒருத்தி மற்றவளுக்கு நினைவூட்டுவாள். சாட்சியாளர்கள் (சாட்சிக்காக) அழைக்கப்பட்டால் மறுக்க வேண்டாம்”.

    கடன் இருக்கும் நிலையில் மரணம் ஏற்பட்டால்

    கடன் இருக்கும் நிலையில் ஒருவர் மரணித்துவிட்டால், அவர் மீது இருக்கும் கடனை அடைத்த பின்னரே, அவரின் சொத்துக்களை பாகப்பிரிவினை செய்யவேண்டும் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

    ஒருவர் விட்டுச் சென்ற சொத்தில் யார் யாருக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதை விவரித்துவிட்டு, “(இவ்வாறு பிரித்துக் கொடுப்பது) அவர் செய்துள்ள மரண சாசனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர்தான்” என்று திருக்குர்ஆன் 4:12 வலியுறுத்துகிறது.

    இஸ்லாம் கூறுவது போன்று, மரணித்தவர் வாங்கிய கடனை முழுமையாக செலுத்திய பின்னரே பாகப்பிரிவினை செய்வது சிறந்த முறையாகும்.

    கூர்மையான ஆயுதத்தில் நடப்பது போன்றது கடன். அதனை, கவனமாக கையாளத் தெரிந்து இருத்தல் வேண்டும். இல்லையென்றால், நம் அடையாளத்தை அழித்து விடும். கடன் எப்படி வாங்க வேண்டும், எப்போது வாங்க வேண்டும், கடனை எவ்வாறு திருப்பிச்செலுத்த வேண்டும் என்று இஸ்லாம் தெளிவாக கூறுவதை நாம் பின்பற்றுதல் நன்று.

    பிரச்சினைகள் இல்லாமல் இருக்க, இறைவன் கூற்றுப்படி நாம், கடன் கொடுக்கல், வாங்கல் வைத்துக் கொள்வது நம் மீது கடமையாகும்.

    ஏ.எச். யாசிர் அரபாத் ஹசனி, லால்பேட்டை.
    “நன்மையோ, தீமையோ அது ஒரு கடுகின் அளவு இருந்தாலும் அதற்கும் நாளை மறுமையில் கேள்வி கணக்கு கேட்கப்படும்” (திருக்குர்ஆன் 31:16).
    அல்லாஹ்வால் படைக்கப்பட்ட மிக சிறந்த ஞானவான்கள் பலர் இருப்பினும், அவர்களில் இரு வரைப் பற்றிய குறிப்புகள் மட்டுமே திருக்குர்ஆனில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ஒருவர் ‘கித்ர்’ என்ற மகான். மூஸா நபி காலத்தில் இவர் வாழ்ந்தவர். மற்றொருவர் ‘லுக்மான்’. இவர் தாவூது நபி காலத்தில் வாழ்ந்தவர்.

    லுக்மான் அபீசீனியா நாட்டைச் சார்ந்தவர். கருப்பர் இனத்தில் பிறந்தவர். அல்லாஹ்வின் மிகப்பெரும் கருணையினால் ஞானம் பெற்றவர். அவரைப் பற்றிய செய்தியைச் சொல்வதற்காக ஒரு சூராவையே திருக்குர்ஆனில் இறக்கி அருளினான் அல்லாஹ். கித்ர் மகானைப் பற்றி சூரா கவ்ப்பில் ஒரு பகுதியாக இறைவன் சொல்லி இருக்கிறான். லுக்மான் அறிஞராக மாறியது குறித்த வரலாறு இதோ...

    அல்லாஹ், லுக்மானிடம் தன் மலக்குகளை அனுப்பி இவ்வாறு கூறச்செய்தான்...

    “உங்கள் முன் இரண்டு நன்மைகளை அமைத்து அதில் ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் என்று இறைவன் கட்டளையிட்டுள்ளான். முதலாவதாக உங்களை இந்த நாட்டின் மன்னனாக நியமித்து நீதி தவறாமல் ஆட்சி செய்யும் பொறுப்பை வழங்குகின்றான். அதனை நீங்கள் விரும்பவில்லை என்றால் உங்களை அறிவில் சிறந்த ஞானியாக, கல்வியைப் போதிக்கும் மிக சிறந்த மகானாக நியமிக்க இறைவன் விரும்புகிறான். நீங்கள் எதனை விரும்புகின்றீர்கள்?”

    இவ்வாறு இறைவனின் கட்டளையை லுக்மானிடம் மலக்குகள் தெரிவித்தனர்.

    அதற்கு லுக்மான் ஹக்கீம் இவ்வாறு பதில் கூறினார்:

    “அல்லாஹ் எனக்கு அரச பதவியை வழங்குவதாய் இருந்தால் அதனை நான் ஏற்றுக்கொள்கிறேன். இல்லை, இரண்டில் ஒன்றை நானே தேர்ந்தெடுத்து கொள்வதற்கு எனக்கு அனுமதி வழங்கினால், நான் அறிவில் சிறந்த ஞானியாகவே விரும்புகிறேன்”.

    மலக்குகள் அவரை நோக்கி “சிறந்த அரச பதவியை புறம் தள்ளிவிட்டு சாதாரண ஞானியாகவே நீங்கள் விரும்புகிறீர்களா?” என்றார்கள். இதற்கு லுக்மான் கீழ்க்கண்டவாறு நீண்ட விளக்கம் அளித்தார்:

    “அரச பதவி என்பது அல்லாஹ்வால் கொடுக்கப்பட்டால், அதன் மூலம் அல்லாஹ்வின் உதவி கிடைக்கும். நீதியான அரசாட்சியை நிலைபெறச் செய்து விடலாம். ஆனால் எந்த பதவியையும் நாமே தேடிப்போனால் அல்லாஹ்வின் உதவி கிடைக்காது. நாமே நம் திறமையைக் கொண்டு செயல்பட வேண்டிய கட்டாயம் நிலவும். ஒன்றை அரவணைக்கும் போது இன்னுமொன்றை நிராகரிக்க வேண்டி வரும். அதனால் பகைமை வளரும். அதுமட்டுமல்ல அல்லாஹ் தந்த இந்த வாழ்க்கையை அவன் சொன்ன வழியில் நின்று நன்மைகள் செய்து வாழ்ந்தால் மட்டுமே மறுமையில் சொர்க்கம் செல்லலாம். வாழ்நாள் எல்லாம் இந்த உலகத்திற்காகவே செலவிட்டு விட்டால் நாளை மறுமை கடுமையாகி விடும். மேலும், எளிய வாழ்க்கை தான் இம்மையையும், மறுமையையும் ஒரு சேர பெற்றுக்கொள்ள வழி வகை செய்யும். எனவே, நான் ஞான வாழ்க்கையை தேர்வு செய்தேன்”.

    அதன்பிறகு, அல்லாஹ் தான் கூறிய வாக்குறுதியின்படி அவருக்கு ‘ஹிக்மத்’ எனும் ஞானத்தை அளித்தான். இதைத்தொடர்ந்து அறிவிற் சிறந்த அறிஞராய் லுக்மான் மாறினார். பலருக்கு கல்வி ஞானத்தை போதித்து வந்தார்.

    ஒரு முறை லுக்மான் ஹக்கீம் அவர்களைச் சுற்றி பலர் அமர்ந் திருந்தனர். அவர்களுக்கு போதனை செய்து கொண்டிருந்தார். அப்போது அவர்களை கடந்து சென்ற ஒருவர் லுக்மான் சொன்ன போதனைகளில் ஈர்க்கப்பட்டு நெருங்கி வந்து பார்த்தார். இவர் ஏற்கனவே நமக்கு தெரிந்தவர் போல் இருக்கிறது. ஆனால் அவருக்கு இத்தனை ஞானம் இருக்க வாய்ப்பில்லை என்று எண்ணியவராக, லுக்மானிடமே தனது சந்தேகத்தை கேட்டார். இதோ அந்த உரையாடல்...

    ‘நீங்கள் கொஞ்ச காலங்களுக்கு முன்பாக ஒருவரிடம் அடிமையாக இருந்தீர்கள் அல்லவா?’.

    ‘ஆம், நான் அடிமையாகத் தான் இருந்தேன்’.

    ‘அப்போது மலையடிவாரத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தது நீங்கள் தானே?’.

    ‘ஆம்! நான் அதே மனிதன் தான்’.

    ‘அப்படியானால் இத்தனை ஞானத்தை எவ்வாறு பெற்றுக்கொண்டீர்கள்?’

    ‘அல்லாஹ்தான் எனக்கு இந்த ஞானத்தை அருளினான்’.

    ‘அல்லாஹ் அப்படி அருள்வதற்கு உங்களிடம் இருந்த பண்புகள் தான் என்ன?’

    ‘அதனை அல்லாஹ்வே அறிந்தவனாக இருக்கின்றான். எந்த நற்குணத்தைக் கொண்டு என்னை ஏற்றுக்கொண்டானோ நான் அறியேன். ஆனால் என்னிடம் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய சிறந்த நான்கு பண்புகள் உண்டு. 1) அல்லாஹ்வின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை, நடப்பது எல்லாம் அவனால் தான் என்று ஏற்றுக்கொள்வது, தவறு செய்தால் இறைவன் மிகவும் கடுமையாக தண்டிப்பான் என்ற அச்ச உணர்வுகொண்டிருத்தல், 2) வாக்கில் சத்தியம், வாழ்வில் உண்மைத்தன்மை, பொய் கலக்காத உயர்ந்த வாழ்வு, 3) அமானிதத்தைப் பாதுகாத்தல். அது பொருளாக இருந்தாலும், செய்தியாக இருந்தாலும், ரகசியமோ, பிறரின் வாழ்க்கைப் பிரச்சினையோ, எதுவாக இருந்தாலும் அமானிதத்தைப் பேணி பாதுகாத்தல், 4) அல்லாஹ்வின் நினைவை மறக்கச் செய்யும், அறிவை மழுங்கச் செய்யும் வீணான செயல்களில் இருந்து தவிர்த்திருந்தல்... இந்த நான்கு பண்புகளையும் நான் கடைப் பிடித்து வருகிறேன்’.

    இவ்வாறு லுக்மான் கூறினார்.

    இதுகுறித்து திருக்குர்ஆனில் அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடு கிறான்:

    “லுக்மானுக்கு நாம் ஞானத்தைக் கொடுத்து அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும்படி கூறினோம். ஏனென்றால், எவர் நன்றி செலுத்துகிறாரோ அவர் தன் நன்மைக்காகவே நன்றி செலுத்துகிறார். எவன் (அதனை) நிராகரிக்கிறானோ (அவன் தனக்கு தீங்கு தேடிக் கொள்கிறான். அதனால் அல்லாஹ்வுக்கு ஒன்றும் நஷ்டமில்லை. ஏனென்றால்) நிச்சயமாக அல்லாஹ் தேவையற்றவனும், புகழுடையவனாகவும் இருக் கிறான்”. (திருக்குர்ஆன் 31:12)

    “லுக்மான் தனது மகனுக்கு நல்லுபதேசம் செய்யக் கருதிய சமயத்தில் அவரை நோக்கி ‘என் அருமை மைந்தனே, நீ அல்லாஹ்வுக்கு (ஒன்றையுமே) இணையாக்காதே. ஏனென்றால், இணைவைப்பது நிச்சயமாக மிகப்பெரும் அநியாயமாகும்’ என்று கூறினார்” (திருக்குர்ஆன் 31:13).

    “தன் தாய் தந்தைக்கு நன்றி செய்யும் படி நாம் மனிதனுக்கு நல்லுபதேசம் செய்தோம்” (திருக்குர்ஆன் 31:14).

    “நன்மையோ, தீமையோ அது ஒரு கடுகின் அளவு இருந்தாலும் அதற்கும் நாளை மறுமையில் கேள்வி கணக்கு கேட்கப்படும்” (திருக்குர்ஆன் 31:16).

    “தொழுகையை கடைப்பிடித்தொழுகு. நன்மையான காரியங்களை கொண்டு ஏவி, பாவமான காரியங்களிலிருந்து மனிதர்களை விலக்கிவா. அதனால் உனக்கேற்படும் கஷ்டங்களை பொறுமையுடன் நீ சகித்து கொள். இது எல்லாக் காரியங்களிலும் வீரமிக்க செயலாகும்”(திருக்குர்ஆன் 31:17).

    “பெருமை கொண்டு உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே” (திருக்குர்ஆன் 31:18).

    “உன் நடையில் பெருமையும் கர்வமும் இன்றி மத்திய தரத்தை விரும்பு. உன் சப்தத்தையும் தாழ்த்திக் கொள்” (திருக்குர்ஆன் 31:19).

    இவ்வாறு பல நல்ல செய்திகளை திருமறைச் சொல்லித் தருகிறது. இதுதவிர லுக்மான் போதனைகள் ஹதீஸ் கிரந்தங்களிலும் நிரம்பவே நிறைந்துள்ளது. அதனைப் பின்பற்றி வாழ்ந்து இம்மையிலும் மறுமையிலும் நாம் ஈடேற்றம் பெற்றுக்கொள்வோம், ஆமின்.

    முகம்மது யூசுப், உடன்குடி.
    ஹஜ்ஜில் மட்டுமல்ல தொழுகை, நோன்பு, ஜகாத் என அனைத்திலும் இறையச்சத்தைத் தான் முன்னிறுத்துகிறது. காரணம் இறையச்சமில்லாத எந்தவொரு செயலும் இறைவனிடத்தில் முழுமையான அங்கீகாரத்தை பெறுவது இல்லை.
    ‘ஹஜ்’ என்ற அரபுச்சொல்லிற்கு நாடுதல், தரிசித்தல், சந்தித்தல் என்று பல பொருள் உண்டு.

    சகல வசதிகளைப் பெற்றவர் மக்கா நகர் சென்று, அங்குள்ள இறைவனின் ஆலயமான ‘கஅபா’வை வலம் வந்து, ‘ஸபா-மர்வா’ மலைக்குன்றுகளுக்கு இடையே ‘சயீ’ எனும் சீரோட்டம் ஓடி, ‘அரபா’ மைதானத்தில் தங்கிய பின் குர்பானி கொடுத்து, நிறைவாக தன் முடிகளைக் களைந்து, மீண்டும் இறுதியாய் ‘கஅபா’வை வலம் வந்த பின் ஊர் திரும்பும் நிகழ்வு தான் ஹஜ் ஆகும்.

    இது குறித்த இறைவசனம் வருமாறு: ‘அங்கு தெளிவான அத்தாட்சிகள் உள்ளன. (உதாரணமாக, இப்ராகிம் நின்ற இடமான) மகாமு இப்ராகிம் இருக்கின்றது; மேலும் எவர் அதில் நுழைகிறாரோ அவர் (அச்சம் தீர்ந்தவராகப்) பாதுகாப்பும் பெறுகிறார்; இன்னும் அதற்கு(ச் செல்வதற்கு)ரிய பாதையில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும். ஆனால், எவரேனும் இதை நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்குக் குறை ஏற்படப்போவதில்லை; ஏனெனில்)- நிச்சயமாக அல்லாஹ் உலகத்தில் எவரின் தேவையும் அற்றவனாக இருக்கின்றான். (திருக்குர்ஆன் 3:97)

    ‘ஹஜ்ஜையும், உம்ராவையும் நீங்கள் அல்லாஹ்வுக்காக பூர்த்தியாக்குங்கள்’. (2:196)

    ஹஜ்ஜு (செய்வது அதற்கெனக்) குறிப்பிட்ட (ஷவ்வால், துல்கஅதா, துல்ஹஜ்ஜு ஆகிய) மாதங்களில் தான். ஆகவே அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜை தன் மீது கடமையாக்கிக் கொண்டால் ஹஜ்ஜு (மாதத்தின் பத்தாம் தேதி) வரையில் வீடு கூடுதல், தீஞ்சொல் பேசுதல், சச்சரவு செய்துகொள்ளுதல் கூடாது. நீங்கள் என்ன நன்மை செய்த போதிலும் நிச்சயமாக அல்லாஹ் அதனை அறி(ந்து அதற்குரிய கூலியைத் தரு)வான். தவிர, (ஹஜ்ஜுடைய பயணத்திற்கு வேண்டிய) உணவுகளை (முன்னதாகவே) தயார்படுத்திக் கொள்ளுங்கள். ஆனால், நிச்சயமாக (நீங்கள்) தயார்படுத்திக் கொள்ள வேண்டியவைகளில் எல்லாம் மிக மேலானது இறை அச்சத்தைத் தான். ஆதலால் அறிவாளிகளே, நீங்கள் (குறிப்பாக ஹஜ்ஜுடைய காலத்தில்) எனக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள். (திருக்குர்ஆன் 2:197)

    ஒரு ஹாஜி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை இவ்வசனம் மிகத்தெளிவாக சொல்லிக்காட்டுகிறது. குறிப்பாக ஒரு ஹாஜியிடம் எப்போதும் இருக்க வேண்டியது, இறையச்சம் தான் என்கிறது. உண்ணும் உணவை விட முதலில் தயார்படுத்தப் படவேண்டியது இந்த இறையச்சம் தான் என்றும் எச்சரிக்கிறது இஸ்லாம்.

    ஹஜ்ஜில் மட்டுமல்ல தொழுகை, நோன்பு, ஜகாத் என அனைத்திலும் இறையச்சத்தைத் தான் முன்னிறுத்துகிறது. காரணம் இறையச்சமில்லாத எந்தவொரு செயலும் இறைவனிடத்தில் முழுமையான அங்கீகாரத்தை பெறுவது இல்லை. எனவே தான் இஸ்லாம் எல்லாச் செயல்பாடுகளிலும் உள்ளச்சம் தரும் இறையச்சத்தை அவசியம், கட்டாயம் என்கிறது.

    பின் வரும் வான்மறை வசனம் ஹஜ்ஜை முடித்துக் கொண்டு ஊர் திரும்பிய பின் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இவ்வாறு விவரிக்கிறது:

    ‘(ஹஜ்ஜுக்குச் சென்ற) நீங்கள் உங்களுடைய (ஹஜ்ஜின்) கடமைகளை நிறைவேற்றிவிட்டால், நீங்கள் (இஸ்லாமிற்குமுன்) உங்கள் மூதாதை(யர் பெயர்)களை (சப்தமிட்டு பெருமையாகக்) கூறி வந்ததைப் போல் அல்லது அதனை விட அதிகமாக அல்லாஹ்வைத் ‘திக்ரு’ (செய்து உங்களுக்கு வேண்டியவைகளையும் அவனிடம் கேட்டுப் பிரார்த்தனை) செய்யுங்கள். (பிரார்த்தனையில்) ‘எங்கள் இறைவனே, எங்களுக்கு (வேண்டியவைகளை எல்லாம்) இம்மையிலேயே தந்து விடுவாயாக’ என்று கோருபவர்களும் மனிதர்களில் உண்டு.

    ஆனால், இத்தகையவர்களுக்கு மறுமையில் யாதொரு பாக்கியமுமில்லை. அன்றி ‘எங்கள் இறைவனே, எங்களுக்கு நீ இம்மையிலும் நன்மை அளிப்பாயாக, மறுமையிலும் நன்மையளிப்பாயாக. (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் எங்களை நீ பாதுகாப்பாயாக’ எனக்கோருபவர்களும் மனிதர்களில் உண்டு. தாங்கள் செய்த (நற்) செயல்களின் (பயனை இம்மையிலும் மறுமையிலும் அடையும்) பாக்கியம் இவர்களுக்குத் தான் உண்டு. தவிர, (சிரமமேற்படாத வண்ணம் இவர்களின் செயலைப் பற்றி மறுமையில்) அல்லாஹ் விரைவாகக் (கேள்வி) கணக்கெடுப்பான். (அவனுக்கு அது சிரமமன்று). (திருக்குர்ஆன் 2:200-202)‏

    ஹஜ் எனும் புனிதப் பயணத்தை ஒரு ஹாஜியார் முடித்துக் கொண்டு ஊர் வந்த பின் அவர் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய முதற்காரியம் இத்தகைய பாக்கியத்தை தனக்கும் கிடைக்கச் செய்த அந்த அல்லாஹ்வை எப்போதும் நினைத்துக் கொண்டே இருப்பது தான்.

    அடுத்து நாம் செய்ய வேண்டியது, நமது இம்மை, மறுமையின் ஈருலக வாழ்க்கைக்காக தொடர்ந்து அவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டே இருக்க வேண்டும்.

    சுருக்கமாக, ஹஜ் நமக்கு தியாக மனப்பான்மையை, ஒற்றுமையை, விட்டுக்கொடுத்தலை, பொறுமையை சகிப்புத்தன்மையை, ஆடம்பரமற்ற வாழ்க்கையை, பன்முகச் சமூக சந்திப்பை, இன, நிற, மொழியில் வேற்றுமையற்ற தன்மையை, மறு உலகப்பயண நினைவூட்டலை, இடம், உடல், உடை, உள்ளத்தூய்மையை என அனைத்தையும் கற்றுத்தருகிறது எனலாம்.

    மவுலவி எஸ்.என்.ஆர். ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3. 
    எத்தகைய துன்பம் வந்தாலும் அல்லாஹ்வின் மீது மட்டுமே அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு, பொறுமையை கையாள வேண்டும் என்ற படிப்பினையை அய்யூப் நபியின் வாழ்க்கை மூலம் நாம் அறியலாம்.
    உலக மக்களை நேர்வழிப்படுத்த அல்லாஹ் பல நபிமார்களை அனுப்பினான். ஒவ்வொரு காலகட்டத்திலும் அனுப்பப்பட்ட நபிகள் ஒவ்வொருவருக்கும் தனி சிறப்பையும், அந்தஸ்தையும் அளித்தான்.

    அந்த வரிசையில் அனுப்பப்பட்ட அய்யூப் நபிகளை உலகின் மிக செல்வந்தராக, பெரும் ஆட்சி அதிகாரங்களோடு வாழச்செய்தான். மிக உயர்ந்த நிலையில் இருந்த போதும் அய்யூப் நபிகள் ஒரு வினாடி நேரம் கூட அல்லாஹ்வை மறக்கவில்லை. எப்பொழுதுமே இறைவன் நினைப்பில் அவனை துதிசெய்து கொண்டே இருந்தார். இது சைத்தானுக்குப் பிடிக்கவே இல்லை. அல்லாஹ்விடம் இதுபற்றி வாக்குவாதம் செய்தான் சைத்தான்.

    ‘இறைவனே, உன் அடியானுக்கு சகல வசதிகளையும் நீ கொடுத்திருக்கும் போது அவன் உன்னை வணங்குவதில் என்ன ஆச்சரியம் உள்ளது. அவனுக்கு நீ சோதனையை, வேதனையைக் கொடு. அப்போது தான் அவனது இறைபக்தி எந்த அளவுக்கு உண்மையாக இருக்கிறது என்பதை நீ அறிய முடியும். எனக்கு நீ அனுமதி கொடுத்தால் அவனுக்கு சோதனைகளைக்கொடுத்து உன் நினைவில் வாழும் அவரை மாற்றிக்காட்ட என்னால் முடியும்?’ என்றான்.

    அல்லாஹ் கூறினான்: “அய்யூப்பின் இறைபக்தியை நீ அவ்வளவு எளிதாக எண்ணி விடாதே. உனக்கு அனுமதி தருகிறேன், அவரை எல்லா நிலைகளிலும் சோதித்துப் பார். அவரின் நம்பிக்கையை மாற்ற உன்னால் மாற்ற முடியாது என்பது எனக்குத் தெரியும்”.

    ஆனால், சைத்தான் ‘என்னால் முடியும்’ என்றான்.

    அதன் பின்னர் சைத்தான், அய்யூப் நபியிடம் சென்று தனது துர்போதனைகளை தொடங்கினான். ‘உன் விதியின்படி எழுதப்பட்ட அனைத்து நன்மைகளும் உனக்கு கிடைத்துள்ளது. இதில் இறைவனின் பங்கு என்ன உள்ளது? ஏன் எப்போதும் இறைவனை நினைத்துக்கொண்டு இருக்கிறாய்?’.

    அய்யூப் நபிகள், “விரட்டப்பட்ட சைத்தானின் அத்தனை கேடுகளிலிருந்தும் அல்லாஹ்வே உன்னிடமே நான் உதவி தேடுகிறேன்” என்று சொல்லியவர்களாக, “ஏ சைத்தானே! என்னை விட்டுச் சென்று விடு. இனிமேலும் என் முன்னால் வந்தால் மிகவும் கடுமையான தண்டனையை எதிர்நோக்க வேண்டியதிருக்கும்” என்றார்கள்.

    “அய்யூபே! நீங்கள் என்னை ஒதுக்கினாலும், நானே உங்களுக்கு பெரும் சோதனையைத் தரமுடியும். பொறுத்திருந்து பாருங்கள்” என்று சொல்லி விட்டு சைத்தான் கோபமாய் வெளியேறி விட்டான்.

    அல்லாஹ் தனக்கு வழங்கிய அனுமதியைக் கொண்டு, அய்யூப் நபிகளை சோதிக்கத்தொடங்கினான் சைத்தான். அவரது செல்வங்கள் அத்தனையுமே நெருப்பின் துணை கொண்டு எரித்து சாம்பலாக்கி விட்டான். ஒரே நாளில் எல்லாம் இழந்து ஏழையாய் நடுவீதிக்கு வந்து விட்டார் அய்யூப் நபிகள்.

    இத்தனை பாதிப்பு ஏற்பட்ட போதும் அய்யூப் நபிகள் கொஞ்சம் கூட கவலை கொள்ளவில்லை, கலங்கவில்லை. “அத்தனையுமே அல்லாஹ் கொடுத்தது. அவனிடமே திரும்பிச் சென்றிருக்கிறது. அல்லாஹ் நாடினால் மீண்டும் திரும்ப வரலாம்” என்றார்கள். அல்லாஹ்வின் நினைப்பில் இருந்து அவர்கள் கொஞ்சம் கூட விலகவில்லை. வணக்க வழிபாடுகள் முன்பைவிட அதிகமாகியதே தவிர குறையவில்லை.

    அய்யூப் நபியவர்களுக்கு பதினான்கு பிள்ளைகள் இருந்தனர். ஒவ்வொரு பிள்ளையாக அத்தனைப் பேரையும் சைத்தான் மரணிக்கச் செய்தான். அடுத்தடுத்து பிள்ளைகளை இழந்து துயரத்தில் தவித்தாலும், அய்யூப் நபிகளின் மனம் இறைவனை விட்டு விலகவில்லை. அல்லாஹ்வின் மீது நம்பிக்கை அதிகரித்தது.

    எதற்கும் கலங்காத அய்யூப் நபியின் உறுதியைக் கண்டு கடும் கோபம் கொண்ட சைத்தான், தீராத நோயைக்கொண்டு அவரை சோதித்தான். கடுமையான அந்த நோய் தாக்குதலிலும் அய்யூப் நபிகள் பொறுமை காத்தார்கள். இறைவன் மீது கொஞ்சமும் நம்பிக்கையை இழக்கவில்லை.

    அய்யூப் நபியின் தீராத வியாதியைப் பற்றி அறிந்த ஊர் மக்கள், அந்த நோய் நம்மையும் பாதித்து விடுமோ என்ற பயத்தில் அவரை ஊர் எல்லையான கடற்கரையில் ஒதுங்கி இருக்குமாறு கூறினார்கள்.

    அய்யூப் நபிகள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது எழுபது ஆண்டு காலம். ஆனால் நோய்வாய்ப்பட்டுக் கஷ்டப்பட்டது பதினான்கு ஆண்டு காலம். நாளுக்கு நாள் சிரமம் கடுமையாகி கொண்டே போனது. அந்த நிலையிலும் இறைவனை வணங்குவதில் அவர்கள் பின்தங்கவில்லை. கஷ்டங்கள் எந்த அளவுக்கு அதிகமானதோ அந்த அளவுக்கு இறையச்சமும், வணக்க வழிபாடுகளும் அதிகரித்தது.

    “இறைவா! எனது உடல் முழுவதும் நோயால் பாதிக்கப்பட்டு விட்டாலும் அவை ஒன்றும் உன்னை ‘திக்ரு’ செய்வதில் இருந்து என்னை திசை திருப்பவில்லை. ஆனால் என் நாவை பாதிக்கச் செய்து விடாதே. அதன் மூலம் தானே நான் உன்னை போற்றி புகழ வேண்டும்” என்றார்கள்.

    அய்யூப் நபி அவர்களின் மனைவியோ தன் கணவருக்கு தொண்டு செய்வதை பாக்கியமாக கருதினார்கள். ஊரில் உள்ள வீடுகளுக்குச் சென்று வீட்டு வேலை செய்து கிடைக்கும் அற்ப தொகையின் மூலம் அன்றாட வாழ்க்கையைத் தள்ளினார்கள். அதனையும் தடை செய்தான் சைத்தான். தொற்று நோய் இருக்கும் கணவரிடம் இருந்து வருவதால் அவர்களும் நோய் பரவ காரணமாகி விடுவார்கள் என்று சொல்லி அவர்களின் வேலை வாய்ப்பையும் பறித்து விட்டான்.

    ஒரு நாள் கடுமையான பசி. ஊருக்குள் சென்ற மனைவி, அந்த காலத்தில் வணிகப் பொருளாய் கருதப்பட்டு வந்த தன் தலைமுடியை இழந்து உணவை வாங்கி வந்தார்கள். கடைசி வாய்ப்பு அதுவும் பயன்படுத்தப்பட்டு விட்டது. இதற்கு மேல் என்ன செய்வது என்ற நிலையில் சைத்தான் மீண்டும் மனைவியை அணுகினான்.

    “பதினான்கு ஆண்டு காலம் உன் கணவனுக்கு பணிவிடை செய்து விட்டாய். இனி மேலும் அவருக்கு சுகம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்லை. என்னிடம் ஒரு மருந்து இருக்கிறது. அதனை உட்கொண்டால் உடனே சுகம் கிடைக்கும். ஆனால் ஒரு நிபந்தனை, ‘இந்த நோய் இறைவனால் அல்ல, இந்த மருந்தால் தான் குணமாகியது’ என்று உன் கணவன் சொல்ல வேண்டும்” என்றான்.

    மனைவியின் மனம் சற்று தளர்ந்தது. கணவனிடம் சென்று முறையிட்டார்கள். அய்யூப் நபிகள் கோபத்தின் எல்லைக்கே சென்று விட்டார்கள். ‘மருந்தைக் கொண்டு இறைவனுக்கு இணை வைக்கச் சொல்கிறாயா? நோயைத் தருபவனும் அவனே, அதனை நிவர்த்தி செய்பவனும் அவனே’ என்று சொல்லிவிட்டு இறைவனை நோக்கி, “நிச்சயமாக நோய் என்னைப் பிடித்து கொண்டது, அதை நீக்கி விடு. நீயோ கிருபையாளர்களில் எல்லாம் மகா கிருபையாளன்” என்று பிரார்த்தனை செய்தார். (திருக்குர்ஆன் 21:83)

    அதைத் தொடர்ந்து, “இறைவா, நிச்சயமாக சைத்தான் எனக்கு துன்பத்தையும் வேதனையையும் கொடுத்து விட்டான்” என்று கூறினார். (திருக்குர்ஆன் 38:41)

    தனது அடியானின் பிரார்த்தனையை ஏற்ற இறைவன் அவருக்கு உடனே அருள்புரிந்தான். இதை திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

    (அதற்கு நாம்) “உங்களுடைய காலை(ப் பூமியில்) தட்டுங்கள்” (என்று கூறினோம். அவர் தட்டவே ஓர் ஊற்று உதித்தோடியது. அவரை நோக்கி) “இதோ நீங்கள் குளிப்பதற்கான குளிர்ந்த நீர். (இதுவே உங்களது) பானமுமாகும்” என்று கூறினோம். (அதனால் அவருடைய நோய்கள் குணமாகி விட்டன.) (திருக்குர்ஆன் 38:42).

    “பின்னர் நம்முடைய அருளாகவும், அறிவுடையவர்கள் நல்லுணர்ச்சி பெறுவதற்காகவும் நாம் அவருக்கு பிரிந்திருந்த குடும்பத்தையும் அதைப் போன்றதையும் கொடுத்து அருள் புரிந்தோம்” (திருக்குர்ஆன் 38:43)

    சைத்தானின் அத்தனை முயற்சிகளும் தோற்று விட்டன. அய்யூப் நபியின் உறுதிப்பாட்டை அவனால் குலைக்க முடியவில்லை. எத்தனை கஷ்டங்களைச் சந்தித்தாலும் அல்லாஹ்வின் நினைப்பிலிருந்து அய்யூப் நபிகள் விலகவில்லை. இறைநம்பிக்கையில் உறுதியாய் இருந்தார்கள்.

    அல்லாஹ் அந்த நிகழ்வைப் பற்றி குறிப்பிடும் போது ‘நபிமார்களிலேயே இத்தனை கடுமையான நோய்வாய்ப்பட்டிருந்தும் கொஞ்சம் கூட கலங்காமல் பொறுமை காத்தார், பொறுமையின் பொக்கிஷம் அய்யூப் நபிகள்’ என்று பெருமிதத்தோடு குறிப்பிடுகிறான்.

    சோதனைகள் வரும்போது, அதை ஏற்றுக்கொண்டு, இறைவனை முழுமையாக நம்பி பொறுமையாக இருக்காமல், இறை சிந்தனையை விட்டு விலகும் குணம் கொண்டவர்கள் தான் அதிகம் உள்ளனர். எத்தகைய துன்பம் வந்தாலும் அல்லாஹ்வின் மீது மட்டுமே அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு, பொறுமையை கையாள வேண்டும் என்ற படிப்பினையை அய்யூப் நபியின் வாழ்க்கை மூலம் நாம் அறியலாம். 
    நாடு முழுவதும் இன்று பக்ரீத் கொண்டாடப்படுவதையொட்டி மசூதிகள் மற்றும் பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன. #EidAlAdha #Bakrid #EidMubarak
    சென்னை:

    இறைத்தூதர் இபுறாஹீம் நபியின் புனிதமும், அர்ப்பணிப்பும் ஒருங்கே கலந்த தன்னலமற்ற தியாக வாழ்வின் மேன்மையைப் போற்றும் நன்னாளே பக்ரீத் திருநாளாகும்.

    ஈதுல் அதா என்றும் அழைக்கப்படும் இந்த பக்ரீத் திருநாளின்போது இறைத்தூதர் இபுறாஹீம் நபியின் வழியில் உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்கள் ஆடு, மாடு, ஒட்டகங்களை ‘குர்பானி’ என்ற புனிதப்பலி தந்து சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். வெவ்வேறு நாட்டினர் இந்த பண்டிகையை துல்ஹஜ் மாதம் பத்தாம் பிறையிலிருந்து பதிமூன்றாம் பிறை வரையில் கொண்டாடுவது வழக்கம். ஹஜ் பெருநாள் என்றும், தியாக திருநாள் என்றும் இந்த பண்டிகை அழைக்கப்படுகிறது.



    அவ்வகையில் இந்தியாவில் இந்த ஆண்டு இன்று பக்ரீத் பண்டிகை இஸ்லாமிய மக்களால் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதிலும் உள்ள மசூதிகள் உள்பட பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன.

    இந்த நாளில் ஆடு, மாடு, ஒட்டகம் உள்ளிட்டவற்றை குர்பானி கொடுக்கும் இஸ்லாமியர்கள், அவற்றின் இறைச்சியை ஏழைகள், நண்பர்களுக்கு பகிர்ந்தளிக்கின்றனர்.

    பக்ரீத் பண்டிகையையொட்டி இஸ்லாமிய மக்களுக்கு பல்வேறு  அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். #EidAlAdha #Bakrid #EidMubarak
    இஸ்லாமியப் பண்டிகை என்பது கொண்டாடுவோருக்கு மட்டும் அல்ல மகிழ்ச்சி, அவர்களை சுற்றியிருப்போருக்கும் மகிழ்ச்சியே. இதுதான் இஸ்லாமியப் பண்டிகைகளின் எழுச்சி.
    அரபி மாதங்களில் பனிரெண்டாவது மாதம் துல்ஹஜ் ஆகும். இந்த மாதத்தின் பொருள் ‘ஹஜ் செய்யும் மாதம்’ என்பதாகும். இந்த மாதத்தின் ஒன்பதாம் நாள் ‘அரபா தினம்’ ஆகும். இந்த நாளில் நோன்பு இருப்பது சிறப்பு வாய்ந்ததாகும்.

    அரபா நாளின் நோன்பு குறித்து நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘அது கடந்து போன ஓராண்டு, மற்றும் எதிர்வரும் ஓராண்டு நிகழும் சிறுபாவங்களுக்கு பரிகாரமாக அமையும்’ எனக்கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூகதாதா (ரலி), நூல்: முஸ்லிம்)

    இஸ்லாமியர்களின் பெருநாட்கள் இரண்டு. 1) நோன்புப் பெருநாள், 2) ஹஜ் பெருநாள். ரமலான் மாதம் முப்பது நாட்கள் நோன்பிருந்த பிறகு கொண்டாடப்படுவது நோன்புப் பெருநாள் ஆகும். துல்ஹஜ் மாதம் பிறை ஒன்றிலிருந்து பத்து நாட்கள் வரை ஹஜ்ஜின் கிரியைகளை நிறைவேற்றிய பிறகு கொண்டாடப்படுவதற்கு ஹஜ் பெருநாள் ஆகும்.

    ஹஜ் பெருநாள் ‘ஈதுல் அள்ஹா’ (தியாகத் திருநாள்) என்று அரபியிலும், பக்ரீத் பண்டிகை (ஆட்டை பலியிடுதல்) என்று உருது மொழியிலும் அழைக்கப்படுகிறது.

    இறைவனின் கட்டளையை ஏற்று, இப்ராகிம் (அலை) அவர்கள் தமது அன்பு மகனை பலியிடத்துணிந்த ஒப்பற்ற தியாகத்தை நினைவுகூரும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் துல்ஹஜ் மாதம் பிறை பத்தாம் நாளன்று தியாகத் திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

    ஹஜ் செய்யும் ஹாஜிகள் தங்களது புனிதப் பயணத்தின் கடமைகளில் இறுதியாக நிறைவேற்றும் காரியம் இறைவனுக்காக கால்நடைகளில் ஏதேனும் ஒன்றை பலியிடுவதாகும். இது நடைபெறும் தினம் துல்ஹஜ் 10-ம் நாளாகும். ஹஜ் பயணம் மேற்கொள்ளாதவர்களில் வசதி வாய்ப்பை பெற்றுக்கொண்டவர்களும் தங்களின் இல்லங்களில் பெருநாள் தினம் அன்று கால்நடைகளில் ஒன்றை இறைவனுக்காக பலியிடுவார்கள்.

    தியாகத் திருநாள் அன்று முஸ்லிம்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய அம்சம் சிறப்புத்தொழுகை மற்றும் குர்பானி கொடுத்தல் ஆகும். தொழுகைக்கு பின்புதான் ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற கால்நடைகளில் அவரவர் வசதிக்கேற்ப குர்பானி கொடுக்கவேண்டும்.

    ‘தொழுகைக்கு முன்பே குர்பானிப் பிராணியை அறுப்பவர் தமக்காகவே அதை அறுக்கிறார். தொழுகைக்குப் பிறகு அதை அறுப்பவரின் வழிபாடு முழுமையடைந்து விட்டது. அவர் முஸ்லிம்களின் வழிமுறையைப் பின்பற்றிவிட்டார்’ என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: பராஉபின் ஆஸிப் (ரலி), நூல்: முஸ்லிம்)

    ‘எனவே உமது இறைவனைத் தொழுது, அவனுக்காக அறுப்பீராக’ என்பது திருக்குர்ஆன் (108:2) வசனமாகும்.

    இதன்மூலம், பெருநாள் தொழுகைக்குப் பிறகுதான் குர்பானி கொடுக்க வேண்டும் என்பது திருக்குர்ஆன் வசனத்திலிருந்தும், நபிமொழியிலிருந்தும் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிகிறது. பெருநாள் தினத்தன்று குர்பானி கொடுப்பதைவிடச் சிறந்ததொரு காரியம் வேறெதுவும் கிடையாது.

    ‘துல்ஹஜ் 10-ம் நாளன்று ஆதமின் மகன் செய்யும் செயல்களில் இறைவனுக்கு மிகவும் விருப்பமானது கால்நடைகளின் ரத்தத்தை ஓட்டுவதாகும். அது மறுமைநாளில் தமது கொம்புகளுடனும், ரோமங்களுடனும், குளம்புகளுடனும் வருகை தரும். அவற்றின் ரத்தம் பூமியில் விழும் முன்பே இறைவனிடம் சிறந்த ஒரு நிலையை அடைந்து விடுகிறது. எனவே அவற்றில் மனதுக்கு பிடித்தமானதை தேர்வு செய்யுங்கள்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), திர்மிதி)

    குர்பானி கொடுக்கப்படும் கால்நடைகளின் மாமிசங்களை ஏழை எளியோருக்கும், அண்டை வீட்டாருக்கும், சொந்த பந்தங்களுக்கும் பங்கீடு செய்து வழங்கிட வேண்டும். குர்பானியின் மாமிசங்களை மதம் கடந்து அனைத்து ஏழை எளியோருக்கும், தேவையுடைய வசதி படைத்தோருக்கும் வழங்கலாம். இது திருக்குர்ஆன் வழிகாட்டும் நெறிமுறை, நபிவழியின் வழிமுறை.

    ‘அதிலிருந்து நீங்களும் உண்ணுங்கள். கஷ்டப்படும் ஏழைகளுக்கும் உண்ணக் கொடுங்கள்’ (திருக்குர்ஆன் 22:28)

    ‘அவற்றிலிருந்து நீங்களும் உண்ணுங்கள். (வறுமையிலும் கையேந்தாமல் இருப்பதைக் கொண்டு) திருப்தியாய் இருப்போருக்கும், இரப்போருக்கும் உண்ணக்கொடுங்கள்’ (திருக்குர்ஆன் 22:36)

    மாமிசங்களை மட்டுமல்ல, அவற்றின் தோல்களையும், அவற்றின் கடிவாளங்களையும் ஏழைகளுக்கு தானமாக வழங்கிட வேண்டும். அறுத்து, தோலுரிப்பவர்களுக்கு தோல்களை கூலியாக வழங்கக்கூடாது. அதன் மாமிசங்களையும் கூலியாக வழங்கக்கூடாது. கட்டிட நிதிக்காகவோ, மராமத்து பணிக்காகவோ, இறையில்லப் பணியாளர்களின் ஊதியமாகவோ அவற்றின் தோல்களின் நிதியை பயன்படுத்தக்கூடாது. இவ்வாறு பயன்படுத்தினால் அது குர்பானியாக இறைவனிடம் ஏற்றுக்கொள்ளப்படாது; அது வெறும் மாமிசங்களுக்காக மட்டுமே அறுக்கப்பட்டவைகளாக ஆகிவிடும்.

    ‘நபி (ஸல்) அவர்கள் தமது இறுதி ஹஜ்ஜில் நூறு ஒட்டகங்களை குர்பானி கொடுத்தார்கள். அவற்றில் 63 ஒட்டகங்களை தமது திருக்கரத்தால் அறுத்தார்கள். பிறகு அவற்றின் தோல்களையும், மாமிசங்களையும், கடிவாளங்களையும் ஏழைகளுக்கு பங்கீடு செய்யும்படி என்னை நபியவர்கள் வேண்ட, நானும் அவ்வாறு செய்தேன்’. (அறிவிப்பாளர்: அலி (ரலி), திர்மிதி)

    ‘யாரிடம் அவர் அறுப்பதற்கான குர்பானிப் பிராணி இருந்து, துல்ஹஜ் பிறை காணப்பட்டு விட்டால், அவர் குர்பானி கொடுக்காதவரை தமது தலைமுடிகளையோ, நகங்களையோ சிறிதும் வெட்ட வேண்டாம்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: உம்மு சலமா (ரலி), முஸ்லிம்)

    தியாயகத் திருநாளின் மகிழ்ச்சியான கொண்டாட்டம் உலக முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, உலகில் வாழும் அனைத்து ஏழை எளியோருக்கும் பொருந்தும். ஏழைகளின் நிலை அறிந்து, அவர்களின் வலி உணர்ந்து, அவர்களையும் நலமாகவும், வளமாகவும் வாழ வழி வகுப்பதுதான் இஸ்லாமியப் பண்டிகைகளின் முதன்மையான நோக்கம்.

    இஸ்லாமியப் பண்டிகை என்பது கொண்டாடுவோருக்கு மட்டும் அல்ல மகிழ்ச்சி, அவர்களை சுற்றியிருப்போருக்கும் மகிழ்ச்சியே. இதுதான் இஸ்லாமியப் பண்டிகைகளின் எழுச்சி.

    மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல் வேலி டவுன். 
    ×