search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    புனித ரமலானில் நோன்பு நோற்பது கடமை
    X
    புனித ரமலானில் நோன்பு நோற்பது கடமை

    கட்டுப்பாடுகள் நிறைந்த வாழ்க்கை

    புனித ரமலானில் நோன்பு நோற்பது கடமை. அது ஏன் கடமையாக்கப்பட்டது? மனக்கட்டுப்பாட்டை வாழ்வில் செயல்படுத்த தான் நோன்பு விதியாக்கப்பட்டு இருக்கிறது.
    மகத்துவம் பொருந்திய ரமலானுக்கு ‘ஷஹ்ருத் தாஅத்’ - ‘கட்டுப்பாடு மிக்க மாதம்’ எனும் தத்துவப் பெயரும் உண்டு.

    மனித வாழ்வில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு போன்றவை அவசியமானது. ஒவ்வொருவரின் வாழ்விலும் கடமை உணர்வு இருக்க வேண்டும்; கண்ணியம் காக்கப்பட வேண்டும்; கட்டுப்பாடுடன் செயல்பட வேண்டும்.

    அந்தக்கட்டுப்பாடு, நன்மைகள் புரியவும், நற்செயல்கள் செய்யவும் பயன்படும் வகையில் இருக்கவேண்டும். தீமைக்கும், தீய செயல்களுக்கும் நாம் கட்டுப்பட்டு நடக்க கூடாது. கடமையில்லா உணர்வும், கண்ணியக் குறைவும், கட்டுப்பாடற்ற வாழ்வும் பயன்தராது.

    புனித ரமலானில் நோன்பு நோற்பது கடமை. அது ஏன் கடமையாக்கப்பட்டது? மனக்கட்டுப்பாட்டை வாழ்வில் செயல்படுத்த தான் நோன்பு விதியாக்கப்பட்டு இருக்கிறது.

    ஒருவர் தனிமையில் இருக்கும் போது, அருகில் உணவும், நீரும் இருக்கும். பசியும், தாகமும் அவரை பாடாய்படுத்தும். அவரை கட்டுப்படுத்துவதற்கு யாருமே இல்லை. இந்நிலையில், தான் நோன்பிருக்கும் போது உண்ணக்கூடாது, பருகக்கூடாது என அவரின் மனசாட்சி கூறும்.

    பகல் நேரத்தில் உணவு, தண்ணீர், உடல் இச்சை போன்றவற்றை ஒரு நோன்பாளி தமது மனக்கட்டுப்பாட்டாலும், மனவலிமையாலும் விட்டுவிடுகிறார். ரமலான் மாதம் முழுவதும் தமது உடலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய எத்தனையோ செயல்களை விட்டு ஒரு நோன்பாளி விலகிவிடுகிறார். அதுபோல பிறரை புண்படுத்தும் தீய செயல்பாடுகளையும் தமது மனக்கட்டுப்பாட்டால் விட்டுவிடுகிறார்.

    ‘அல்லாஹ்வுக்கும், அவனின் திருத்தூதருக்கும் எவர் கட்டுப்படுகிறாரோ, அவர் மகத்தான வெற்றி பெற்று விட்டார்’ என்று திருக்குர்ஆன் (33:71) குறிப்பிடுகிறது.

    இதுகுறித்த நபிமொழி வருமாறு:

    ‘அல்லாஹ்வின் (சட்ட) வரம்புகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பவனுக்கும், அவற்றை மீறி நடப்பவனுக்கும் உவமை ஒரு சமுதாயத்தைப் போன்றதாகும். அவர்கள் கப்பலில் (தங்களுக்கு இடம் பிடிப்பதற்காகச்) சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். அதன்படி அவர்களில் சிலருக்குக் கப்பலின் மேல் தளத்திலும், சிலருக்குக் கீழ்த் தளத்திலும் இடம் கிடைத்தது. கீழ்த்தளத்தில் இருந்தவர்களுக்குத் தண்ணீர் தேவைப்பட்ட போது (அதைக் கொண்டு வர) அவர்கள் மேல்தளத்தில் இருப் பவர்களைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. அதனால் மேலே இருந்தவர்களுக்குச் சிரமம் ஏற்பட்டது. அப்போது, கீழ்த்தளத்தில் இருந்தவர்கள் நாம் நீருக்காக நமது பங்கில் கீழ்த்தளத்தில் ஓட்டையிட்டுக் கொள்வோம்; மேலே இருப்பவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என பேசிக்கொண்டனர். அவர்கள் விரும்பியபடி செய்து கொள்ள மேல்தளத்தில் உள்ளவர்கள் விட்டுவிட்டால் கப்பலில் இருப்போர் யாவரும் அழிந்து போவர். ஓட்டையிட விடாமல் அவர்களின் கரத்தைப் பிடித்தால், அவர்களும் பிழைத்துக் கொண்டு, மற்றவரும் பிழைத்துக் கொள்வார்கள்’. (அறிவிப்பாளர்: நுஅமான் பின் பசீர் (ரலி), நூல்: புகாரி)

    இவ்வாறு, இறைவனுக்குக் கட்டுப்பட்டு நடப்பவர், கட்டுப்பாடற்று நடப்பவரை அவ்வாறு விட்டு விடாமல், அவரை திருத்த முயற்சிக்க வேண்டும். இல்லையேல் அழிவு அவருக்கு மட்டுமல்ல, அது நமக்கும்தான். இந்த கட்டுப்பாட்டை ரமலானையும் தாண்டி வாழ்நாள் முழுவதும் பேணவேண்டும். இவ்வாறு பயிற்சி அளிக்கும் இம்மாதத்தில் முழு பயிற்சியையும் பெற நாம் முயற்சிக்க வேண்டும்.

    மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.

    இப்தார்: மாலை 6.38 மணி

    நாளை சஹர் முடிவு: அதிகாலை 4.33 மணி
    Next Story
    ×