என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இஸ்லாம்
    X
    இஸ்லாம்

    நட்புறவை வளர்ப்போம்

    குடும்ப உறவுகளை போலவே நமது நட்புறவும் மிகமுக்கியமான ஒன்று. ரமலான் நோன்பு அந்த நட்புறவை வளர்க்க வழிவகை செய்கிறது.
    குடும்ப உறவுகளை போலவே நமது நட்புறவும் மிகமுக்கியமான ஒன்று. ரமலான் நோன்பு அந்த நட்புறவை வளர்க்க வழிவகை செய்கிறது. ஒருவர் வீட்டை விட்டு வெளியேறினால் அவர் சந்திக்கும் முதல் சந்திப்பே நட்புறவாக தான்  இருக்கிறது. இதுகுறித்து குர்ஆன் இப்படி கூறுகிறது:

    ஒருவனுக்கு நேரான வழியில் அழைக்கக்கூடிய நண்பர்கள் இருந்து அவனை அவர்கள் தம்மிடம் வா என  அழைத்து கொண்டிருக்க அவன் (அவ்வழியில் செல்லாது) ஷைத்தானுடைய ஏமாற்றத்தில் சிக்கி பூமியில் அலைந்து திரிபவனாக ஆகிவிட்டானே அவனுக்கு ஒப்பானவனாகி விட்டான். (திருக்குர்ஆன் 6:71)

    நண்பர்கள் எப்போதும் நல்வழிக்கு தான் நம்மை அழைப்பார்கள். ஆனால் இன்றைக்கு நன்பர்களையே நல்லவர், தீயர் என்று பிரிக்கும் நிலைமைக்கு நாம் ஆளாகிவிட்டோம். பின்வரும் வான்மறை வசனம் அதை நிரூபிக்கிறது:

    நிச்சயமாக அநியாயக்காரர்களுள் சிலர் (அவர்களில்) சிலருக்கு தான் நண்பர்கள். (நம்பிக்கையாளர்களுக்கு அல்ல) அல்லாஹ், இறை அச்சமுடைய பரிசுத்தவான்களுக்கு நண்பன். (திருக்குர்ஆன் 45:19)

    இவ்வசனத்தில் அல்லாஹ் தன்னை நல்லோர்களின் நண்பன் என்று கூறி இருப்பது கூர்ந்து கவனிக்கத்தக்கது. இந்த நட்பில் இறையச்சமும், பரிசுத்தமும் இருக்க வேண்டும் என்றும் அந்த வசனம் அடையாளப்படுத்துவதையும் நாம் மறந்து விடக்கூடாது.

    உண்மையில் எந்தப்பிரதிபலனும் எதிர்பாராமல் தொடரும் நமது நட்புறவுகள் தான் காலம் கடந்து நிற்கும் என்பதை பின் வரும் நபிமொழிகள் நிரூபிக்கின்றன.

    நபிகள் நாயகம் கூறினார்கள்: ஒருவர் நட்பு கொள்ளும் முன் தான் யாருடன் நட்புகொள்ளப்போகிறோம் என்பதை ஒரு கணம் சிந்தித்து செயல்படட்டும் (நூல்:அபூதாவூது)

    நல்லோர்களை தவிர வேறு எவருடனும் நீர் தோழமை கொள்ள வேண்டாம்( நூல்:திர்மிதி)

    யார் யாரை நேசிக்கிறாரோ அவர் அவருடன் (மறுமையில்) இருப்பார். (நூல்:புகாரி, முஸ்லிம்)

    ஒருமுறை ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்கள் உம்ரா பயணம் செல்ல அண்ணலாரிடம் அனுமதி கேட்டபோது அன்புத் தோழரே துஆவில் என்னை மறந்து விடாதீர் என நபிகள் நாயகம் கூறினார்கள். பிறகு ஹஜ்ரத் உமர்(ரலி) கூறினார்கள்: உலகத்திலேயே என்னை மிகவும் சந்தோஷப்படுத்தியது  அந்த ஒன்றை வார்த்தையை தவிர வேறொன்றும் இல்லை. (நூல்:திர்மிதி)

    இப்படியாக எண்ணற்ற செய்திகள் பல உண்டு. எனவே நமது நட்புறவை நாம் மிகச்சரியாக பராமரிக்க வேண்டும். இந்த நட்புறவு சாதாரணமானதல்ல. ரமலான் போன்ற இனிய தருணங்களில் நமது நட்பின் வெளிப்பாடுகளை மிகச்சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வாய்ப்புகள் வாசலுக்கே வரும் போது நழுவவிடலாமா என்ன?

    ஆகவே நமது நட்புறவுகளை நன்றாக வளர்போமாக

    மவுலவி எஸ்,என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3 
    Next Story
    ×