என் மலர்

  ஆன்மிகம்

  உலகளாவிய சமத்துவ மாநாடு
  X

  உலகளாவிய சமத்துவ மாநாடு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இஸ்லாம் கூறும் ஈமான் (இறை நம்பிக்கை), தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் ஆகிய ஐம்பெரும் கடமைகளும் சமத்துவத்தை இந்த உலகில் நிச்சயம் உலவ விட முடியும் என்பதை உணர்த்துகின்றன.
  இஸ்லாம் கட்டிக் காத்து வரும் சமத்துவ நெறி மணக்கும் சமுதாய அமைப்புக்கு மகுடமாகத் திகழ்கிறது, ஐந்தாம் கடமையான ‘ஹஜ்’.

  நாடு, இனம், மொழி, நிறம், குலம், கோத்திரம், அந்தஸ்து போன்ற எல்லாவிதமான வேற்றுமைகளையும் களைந்து விட்டு, உலக மக்கள் ஒரே நிறமாம் வெள்ளுடையை அணிந்து கொள்கிறார்கள்.

  நாடுகளாலும், மொழிகளாலும், நிறத்தாலும் வேறுபட்ட லட்சக்கணக்கான மக்கள், ஒரே உடையில், ஒரே சிந்தனையில், ஒரே குரலில், ‘‘லப்பைக்க அல்லாஹும்ம, லப்பைக்க’’ (இதோ வந்து விட்டேன் இறைவா; நான் வந்து விட்டேன்) என்று முழக்கமிடுகிறார்கள்.

  ஆண்டுதோறும் நடைபெறும் உலகளாவிய மாநாடு இது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

  ‘‘இறைவன் முன்பு எந்த ஏற்றத் தாழ்வுகளும் இல்லை; இறைவன் எந்த ஏற்றத் தாழ்வுகளையும் ஏற்றுக் கொள்வ தில்லை’’ என்பதைப் பறை சாற்றும் சமத்துவ மாநாடு இது என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை.

  இறைக் கட்டளையை ஏற்று மக்கா நகரில் கூடியுள்ள மக்கள் அனைவரும் ஒரே நோக்கத்தோடு, ஒரே லட்சியத்தோடு, ஒரே முழக்கத்தோடு, ஒரேவிதமான உடை களோடு, ஒரே செயலைப் பின்பற்றி ஏக இறைவன் முன்பு நிற்கும் அரிய காட்சியை வேறெங்கும் காண முடியாது.

  ‘‘இம்மாதங்களில் எவரேனும் ஹஜ் கடமையை நிறைவேற்ற நாடினால், ஹஜ்ஜின்போது இச்சைகளைத் தூண்டக்கூடிய சொல், செயல் மற்றும் தீவினை, சண்டை, சச்சரவு ஆகியவற்றில் ஈடுபடக் கூடாது’’ (2:197) என்று இறைவன் திருமறையில் கூறுகின்றான்.

  இதன் அடிப்படையில் ஹஜ் கடமையின்போது ஒழுக்கமும், ஒழுங்கும் மட்டுமின்றி அமைதியும் மிக முக்கியமானதாகும்.

  இறைவனோடு அமைதிப்படுதல், தனது ஆன்மாவோடு அமைதிப்படுதல், பிற மக்களோடு அமைதியாக இருத்தல், பிற உயிர்களிடத்தில் அமைதியாக இருத்தல் என்பதாக அமையும்.

  அந்த வகையில் ஹஜ் என்பது மனித வரலாற்றில் எங்கும் காண முடியாத மிகப்பெரிய அமைதி மாநாடாகும்.

  இறுதித் தீர்ப்பு நாளில் இறைவன் முன்பு இப்படித்தான் மனிதர்கள் அனைவரும் எந்தப் பாகுபாடுமின்றி, ஏற்றத் தாழ்வுகளின்றி தங்களது தீர்ப்புகளுக்காகக் காத்திருப்பார்கள் என்பதை நினைவுறுத்தும் செயலாகவும் விளங்குகின்றது, ஹஜ்.

  ஆக மொத்தத்தில், இஸ்லாம் கூறும் ஈமான் (இறை நம்பிக்கை), தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் ஆகிய ஐம்பெரும் கடமைகளும் சமத்துவத்தை இந்த உலகில் நிச்சயம் உலவ விட முடியும் என்பதை உணர்த்துகின்றன.

  இஹ்ராம்

  ‘இஹ்ராம்’ என்றால் விலக்கிக்கொள்ளல் என்று பொருள். ‘இஹ்ராம்’ என்பது மக்காவுக்கு ‘ஹஜ்’ அல்லது ‘உம்ரா’ செல்லும் பயணிகள் கடைப்பிடிக்க வேண்டிய சில கட்டுப்பாடுகள் ஆகும். புனிதப் பயணத்தில் ஒரு குறிப்பிட்ட எல்லையில் இருந்து, ஹஜ் கடமையை நிறைவேற்றி முடிப்பது வரை அவர்களின் உடை, நடத்தை, சிந்தனை ஆகியவற்றில் கட்டுப்பாடுகளுடன் இருக்க வேண்டும். இதற்கு ‘இஹ்ராம்’ என்று பெயர்.

  ‘‘உடல் இச்சையைத் தூண்டும் செயல்களில் ஈடுபடக் கூடாது; தலை முடி, நகங்களைக் களையக் கூடாது; நாவாலோ, கரத்தாலோ பிறருக்குத் தொந்தரவு செய்யக் கூடாது.; தரையில் வேட்டை பிராணிகளை வேட்டையாடக் கூடாது’’ என்பன போன்றவை ‘இஹ்ராம்’ கட்டுப்பாடுகளாகும்.

  குளித்து தூய்மையாகி இஹ்ராமுடைய ஆடையை அணிந்த பிறகு, ஹஜ் கடமையை நிறைவேற்றுவதாக மனதில் நினைத்து (நிய்யத்) கொள்ள வேண்டும்.

  அந்தக் குறிப்பிட்ட எல்லையை அடைந்ததும், தையலிடப்பட்ட ஆடைகளைக் களைந்து ‘இஹ்ராமின்’ இரு ஆடைகளை மட்டும் ஆண்கள் அணிய வேண்டும். உடலின் மேல் பகுதியை (தலையைத் தவிர) மறைக்கும் துணியும், கீழ்ப் பகுதியை மறைக்கும் துணியும் ‘இஹ்ராம்’ ஆடைகளாகும். இவை இரண்டும் வெள்ளை நிற ஆடைகளாக இருப்பது சிறப்பாகும். மேலும் இஹ்ராமின் போது செருப்பு அணிந்திருப்பதும் விரும்பத்தக்க செயலாகும்.

  பெண்கள் தங்கள் வழக்கமான ஆடைகளில் ‘இஹ்ராம்’ தரித்துக் கொள்ளலாம். முகமும், மணிக்கட்டு வரை இரு கைகளும் தெரியும்படி எந்த உடையையும் அணியலாம். ‘‘(ஹஜ் பயணத்தை மேற்கொண்டிருக்கும்) பெண் முகத்தைத் திரையிட்டு மறைக்கக் கூடாது. மேலும் கையுறைகளை அணியக்கூடாது’’ என்பது நபி மொழியாகும்.

  Next Story
  ×