என் மலர்

  ஆன்மிகம்

  நபிகளாரின் கூச்ச சுபாவமும் மன வேதனையும்
  X

  நபிகளாரின் கூச்ச சுபாவமும் மன வேதனையும்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நபி(ஸல்) அவர்கள் வழக்கம் போல் தம் துணைவியரின் அறைகளை நோக்கி அவர்களுக்கு சலாம் கூறிப் பிரார்த்திப்பதற்காகப் புறப்பட்டுச் சென்றார்கள்.
  நபி(ஸல்) அவர்கள் ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அவர்களை மணமுடித்து மணாளராக இருந்தபோது, அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களின் தாயார் உம்மு சுலைம்(ரலி), இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாகப் பேரீச்சம் பழம், நெய், பாலாடைக் கட்டி ஆகியவற்றை வைத்து ‘ஹைஸ்’ எனும் ஒருவகைப் பண்டத்தைத் தயாரித்து அதை நபி(ஸல்) அவர்களுக்குக் கொடுத்தனுப்பினார்கள்.

  நபி(ஸல்) அவர்கள், தனது மணவிருந்தில் ரொட்டியுடனும், ஆட்டு இறைச்சியுடனும் அந்தப் பண்டத்தையும் வைத்து மக்களை அழைத்து விருந்து வைத்தார்கள். நபிகளாரின் இல்லம் மக்களால் நிரம்பியிருந்தது.

  உமர்(ரலி) அவர்கள், முஹம்மது நபி(ஸல்) அவர்களிடம், “தங்களிடம் நல்லவரும் கெட்டவரும் வருகின்றனர். எனவே, தாங்கள் இறை நம்பிக்கையாளர்களான தங்களின் துணைவியரான அன்னையரை பர்தா அணியும்படி கட்டளையிட்டால் நன்றாயிருக்குமே!” என்று சொல்லி சென்றார்கள்.

  அப்போது நபி(ஸல்) அவர்கள் தம்மிரு கைகளையும் அந்தப் பண்டத்தின் மீது வைத்துப் பிரார்த்தனை சொற்களை மொழிந்து அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள். பிறகு அதனை உண்பதற்காக அங்கிருந்த மக்களைப் பத்து பத்து பேராக அழைக்கலானார்கள். அவர்களிடம், 'அல்லாஹ்வின் பெயரைக் கூறுங்கள்! ஒவ்வொருவரும் அவரவர் கைக்கு அருகிலிருக்கும் பகுதியிலிருந்து உண்ணுங்கள்!'' என்று கூறினார்கள். அவர்கள் அனைவரும் அதனைச் சாப்பிட்டுவிட்டு கலைந்து சென்றனர். இனி அழைப்பதற்கு ஒருவரும் இல்லாத நிலையில், அனஸ்(ரலி) அவர்களிடம் 'உங்கள் உணவை எடுத்துச் செல்லுங்கள்! என்றார்கள் நபிகளார். விருந்து முடிந்தும் மூன்று பேர் மட்டும் அங்கேயே வீட்டில் பேசிக்கொண்டே இருந்தனர்.

  பிறகு, நபி(ஸல்) அவர்கள் வழக்கம் போல் தம் துணைவியரின் அறைகளை நோக்கி அவர்களுக்கு சலாம் கூறிப் பிரார்த்திப்பதற்காகப் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்களுக்குப் பின்னால் அனஸ்(ரலி) அவர்களும் போனார்கள். எல்லாருக்கும் சலாம் கூறினார்கள், அதற்கு அவருடைய மனைவிமார்களும் பிரதி முகமனும் 'பாரக்கல்லாஹ் (அல்லாஹ் தங்களுக்கு சுபிட்சம் வழங்கட்டும்!)' என்று மணவாழ்த்தும் கூறினார்கள்.  பிறகு நபி(ஸல்) அவர்கள் புதுமணப் பெண் ஸைனப்(ரலி) அவர்களிடம் திரும்பி வர, அப்போதும் வீட்டில் அந்த மூன்று பேரும் பேசிக்கொண்டிருந்தனர். நபி(ஸல்) அவர்களோ அதிக வெட்க சுபாவம் உடையவர்களாய் இருந்தார்கள். எனவே, அவர்களைச் சீக்கிரம் போகச் சொல்லாமல், மீண்டும் வேறு அறைக்குச் சென்றார்கள். அந்த மூவரும் வெளியேறிவிட்டார்கள். அவர்கள் போய்விட்டதை அனஸ்(ரலி) கூறியபோது, நபி(ஸல்) அவர்கள் திரும்பி வந்து ஸைனப்(ரலி) அவர்களின் இல்லத்திற்குள் சென்று திரையைத் தொங்கவிட்டார்கள். அப்போது அனஸ்(ரலி) அந்த அறையிலேயே நின்று கொண்டிருந்தார்கள்.

  அப்போது நபி(ஸல்) அவர்கள் தமக்கு அருளப்பெற்ற திருக்குர்ஆன் வசனத்தை ஓதினார்கள்: “இறைநம்பிக்கையாளர்களே! நபியின் இல்லங்களில் அழைப்பின்றி நுழையாதீர்கள். அவ்வாறு நபியின் இல்லத்தில் நடக்கும் விருந்துக்காக உங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டாலும், அப்போதும் கூட உணவு தயாராவதை எதிர்பார்த்து அங்கே காத்து இராதீர்கள்.

  மாறாக, ‘உணவு தயார், வாருங்கள்’ என நீங்கள் அழைக்கப்படும்போது நுழையுங்கள். சாப்பிட்டு முடித்ததும் கலைந்து சென்று விடுங்கள். பேசிக்கொண்டிருப்பதில் ஆர்வமாய் இருந்துவிடாதீர்கள். நிச்சயமாக உங்களின் இச்செயல் நபிக்கு வேதனை அளிக்கிறது. ஆயினும், இதனை உங்களிடம் கூற அவர் வெட்கப்படுகிறார். ஆனால், அல்லாஹ்வோ சத்தியத்தைக் கூற வெட்கப்படுவதில்லை.

  நபியுடைய மனைவிகளிடம் ஏதாவது ஒரு பொருளை அவசியப்பட்டுக் கேட்டால், திரைக்கு அப்பாலிருந்தே அவர்களைக் கேளுங்கள். அதுவே உங்கள் இதயங்களையும் அவர்களின் இதயங்களையும் தூய்மையாக்கி வைக்கும். அல்லாஹ்வின் தூதரை நோவினை செய்வது உங்களுக்குத் தகுமானதல்ல” என்ற இறைவசனத்தைக் கேட்டபோது அனஸ்(ரலி) அங்கிருந்து வெளியேறினார்கள்.

  பர்தா சட்டம் இத்தருணத்தில்தான் தோன்றியது.

  ஆதாரம்: ஸஹீஹ் புகாரி 67:5163, 5:65:4790, 4792, 4793, 5:67:5154,5163,5171 திருக்குர்ஆன் 33:53-55

  - ஜெஸிலா பானு.
  Next Story
  ×