search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வீர அனுமன்
    X
    வீர அனுமன்

    திருமணத்தடை மற்றும் நோய் தீர்க்கும் கோவில்

    வழக்குகளில் வெற்றி, கல்வியில் வெற்றி, வியாபாரத்தில் வெற்றி வழங்கும் ஆலயமாகவும், திருமணத்தடை மற்றும் நோய் தீர்க்கும் ஆலயமாகவும் இந்த வீர அனுமன் கோவில் இருக்கிறது.
    ஸ்ரீவில்லிபுத்தூர், ஆண்டாள் நாச்சியார் பிறந்த புண்ணிய பூமியாகும். இங்குள்ள ஆண்டாள் திருக்கோவில் 6-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்று சொல்லப்படுகிறது. இது கட்டிடக் கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகவும் உள்ளது. 14-ம் நூற்றாண்டில் ஆண்டாள் தாயாரை வழிபடுவதற்காக, வடக்கு பகுதியில் இருந்து வியாசராஜர் வருகை தந்தார். இவர் இந்தியாவில் 100 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து பல்வேறு நூல்களை இயற்றியவர்.

    சிறந்த அனுமன் பக்தரான இவர், இந்தியா முழுவதும் 700 அனுமன் விக்கிரகங்களை பிரதிஷ்டை செய்திருக்கிறார். இவர் பிரதிஷ்டை செய்யும் அனுமன் சிலைகளில், வாலின் நுனிப்பகுதியில் மணி, சங்கு, சக்கரம், இடுப்பில் கத்தி ஆகியவை இருக்கும். அப்படிப்பட்ட அனுமன் பக்தரான வியாசராஜர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ஆலயத்திற்கு வந்தார். பின்னர் அங்குள்ள குளத்தில் நீராடி, அதன் வடகரையில் அனுமனை நினைத்து, தூப கரி துண்டுகளை வைத்து பாறையில் வரைந்தார். அப்போது அனுமன், அந்த சிற்பத்தில் இருந்து தோன்றி வியாசராஜருக்கு காட்சியளித்து மறைந்தார்.

    பின்னர் கரி கொண்டு வரையப்பட்ட அனுமன் சிற்பம் இருந்த இடத்தில், பாறையில் ஒரு சிற்பத்தைச் செதுக்கினார். அதற்கு ‘வீர அனுமன்’ என்று பெயரிட்டார். ஆண்டாள் நீராடிய திருக்குளத்தின் வடகரையில் இந்த வீர அனுமன் கோவில் அமைந்திருக்கிறது. இந்த அனுமனுக்கு, சுலோகம் ஒன்றையும் வியாசராஜர் இயற்றி இருக்கிறார். இந்தக் கோவிலில் உள்ள அனுமனுக்கு வடை மாலை, துளசி மாலை, பழ மாலை, முறுக்கு மாலை, மல்லிகைப்பூ மாலை, வெற்றிலை மாலை ஆகியவை அணிவிக்கப்படுகிறது.

    வழக்குகளில் வெற்றி, கல்வியில் வெற்றி, வியாபாரத்தில் வெற்றி வழங்கும் ஆலயமாகவும், திருமணத்தடை மற்றும் நோய் தீர்க்கும் ஆலயமாகவும் இந்த வீர அனுமன் கோவில் இருக்கிறது. கரித்துண்டால் வரையப்பட்ட சிற்பத்தில் அனுமன் காட்சி கொடுத்ததால், சிலர் தங்கள் நெற்றியில் திலகம் இடும்போது கருப்பு நிறத்தில் கோடுகளை வரைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×