search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முத்துக்குமாரசுவாமி
    X
    முத்துக்குமாரசுவாமி

    விசாக நட்சத்திரக்காரர்களுக்கு வாழ்வில் திருப்பம் தரும் முத்துக்குமாரசுவாமி

    விசாக நட்சத்திரத்தினர் திருமலை முத்துக்குமார சுவாமி கோவிலுக்கு சென்று முருகனை வழிபட்டுவந்தால் வாழ்வில் திருப்பம் ஏற்படும்.
    தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை நகரில் இருந்து வடக்கு திசையில் 8 கிலோமீட்டர் தொலைவில் பண்பொழி (பைம்பொழில்) என்ற ஊர் உள்ளது. இங்கு இயற்கை அழகு கொஞ்சித் தவழும் மேற்குத்தொடர்ச்சி மலைத் தொடர்களின் சிறிய குன்றில் திருமலை முத்துக்குமார சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு மூலவராக இருந்து முருகப்பெருமான் அருள்பாலித்து வருகிறார். இவரை ‘முத்துக்குமாரசுவாமி’ என்றும், ‘குமாரசாமி’ என்றும் அழைக்கின்றனர்.

    கோவிலுக்கு செல்ல சுமார் 600 படிக்கட்டுகள் ஏற வேண்டும். அந்த படிக்கட்டுகள் ஸ்கந்த கோஷ்டப் பித்ருக்கள் வசிக்கும் தேவ படிக்கட்டுக்கள் எனச் சொல்லப்படுகிறது. ஆகையால், இந்த தலத்திற்கு வந்து முன்னோருக்கு தர்ப்பணம் செய்தால், நம் சந்ததிகளுக்கு நல்ல சிறப்பான வாழ்வு அமையும். நல்ல வாரிசுகள் உருவாகும் என்பது ஐதீகம்.

    முருகப்பெருமான் அவதரித்த விசாக நட்சத்திரத்திற்கு உகந்த கோவிலாக திருமலை முத்துக்குமரசுவாமி கோவில் உள்ளது. இதனால் விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், இந்தக் கோவிலுக்கு வாழ்வில் ஒரு முறையாவது வந்து செல்ல வேண்டும்.

    ‘வி' என்றால் ‘மேலான' என்றும், ‘சாகம்' என்றால் ‘ஜோதி' என்றும் பொருள்படும். விசாக நட்சத்திரம் விமலசாகம், விபவசாகம், விபுலசாகம் என்ற மூவகை ஒளிக்கிரகணங்களைக் கொண்டது. இந்த கிரகணங்கள் அனைத்தும் இம்மலையில் படுவதால், விசாக நட்சத்திரத்தினர் இங்கு சென்று வழிபட்டுவந்தால் வாழ்வில் திருப்பம் ஏற்படும்.

    ‘ஓம்’ என்ற வடிவம் கொண்ட உயர்ந்த குன்றில் அமைந்துள்ள, இந்தக் கோவிலின் தீர்த்தத்தை ‘பூஞ்சுனை’ என்று அழைக்கின்றனர். இது அகத்திய முனிவரால் உருவாக்கப்பட்டது. நாள்தோறும் ஒரு தாமரை மலர் இந்தச் சுனையில் மலரும். அதைப் பறித்து, இந்திராதி தேவர்களும், சப்த கன்னியர்களும் முருகனுக்குச் சூட்டி வழிபடுவதாக நம்பிக்கை நிலவுகிறது. இத்தகைய அற்புதமான இந்த ஆலயத் தீர்த்தத்தில் நீராடினால் பலவித நோய்கள் நீங்குவதாக சொல்கிறார்கள். இங்குள்ள தீர்த்தக்கரையில் சப்த கன்னியர்களும் வாசம் செய்கின்றனர்.

    கேரள மாநிலத்தின் எல்லையில் இக்கோவில் அமைந்துள்ளது. பழனி தண்டாயுதபாணி கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் இங்கு வந்து தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றி செல்கின்றனர்.

    செங்கோட்டையில் இருந்து வடமேற்கில் 10 கிலோமீட்டர் தொலைவில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. 
    Next Story
    ×