search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நாகாத்தம்மன்
    X
    நாகாத்தம்மன்

    சர்ப்ப தோஷம் போக்கும் நாகாத்தம்மன்

    சென்னை மயிலாப்பூர் மசூதித் தெருவில் பிரதான சாலையில் அமைந்துள்ளது, சுயம்பு நாகாத்தம்மன் ஆலயம். சர்ப்ப தோஷம், திருமண பாக்கியம், குழந்தை வரம் கிடைக்க இங்கு வந்து வழிபடுகிறார்கள்.
    சென்னை மயிலாப்பூர் மசூதித் தெருவில் பிரதான சாலையில் அமைந்துள்ளது, சுயம்பு நாகாத்தம்மன் ஆலயம். இந்தத் தெருவில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு எதிரே இந்த ஆலயம் அமைந்துள்ளது.

    1915-ம் ஆண்டு மயிலைப் பகுதியைச் சார்ந்து மரங்கள் அடர்ந்து நிறைந்த ஒரு பகுதியை ஒருவர் குத்தகைக்கு எடுத்து சேமிப்பு கிடங்காக பயன்படுத்தி வந்தார். அங்கு ஒரு அரச மரம் இருந்தது. அந்த மரத்தின் அடியில் தினமும் ஒரு நாகம் வந்து செல்வதை குத்தகைதாரர் பார்த்தார். அந்த நாகத்தை எதுவும் செய்ய விரும்பாத அவர், அதற்கு தீங்கு வராமல் பாதுகாத்து, வணங்கி வந்தார்.

    பின்னர் அந்த இடத்திற்கு நாகம் ஒன்று வந்து செல்வது பற்றி, நிலத்தின் உரிமையாளரிடம், குத்தகைதாரர் கூறினார். ஆனால் உரிமையாளர் இதுபற்றி அலட்டிக் கொள்ளவில்லை. நில உரிமையாளர் தான் சொன்னதை ஒரு பொருட்டாகவே கருதாததால், நாகத்தை அங்கிருந்து அகற்ற வேண்டுமா? அல்லது அங்கேயே தங்கச் செய்து வணங்கலாமா? என்பது புரியாமல் குத்தகைதாரர் விழி பிதுங்கி நின்றார்.

    இந்த நிலையில் நிலத்தின் உரிமையாளர் மனைவிக்கு ஒரு குழந்தை பிறந்தது. அது மனித தலையுடனும், சர்ப்ப உடலுடனும் பிறந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், தனது நிலத்தில் தெய்வ சக்தி ஒன்று இருப்பதை உணர்ந்து குத்தகைதாரரிடமே, தன்னுடைய நிலத்தை கொடுத்து அதில் ஒரு நாகாத்தம்மன் ஆலயம் அமைக்கும்படி பணித்தார்.

    அதன்படி குத்தகைதாரர் அந்த இடத்தில் சிறிய குடிசை போட்டு, ஆலயம் அமைக்கப்பட்டது. பிறகு ஆலயம் விரிவாக்கம் செய்யப்பட்டு, அரசமரத்தடியில் சுயம்புவாக தோன்றிய நாகாத்தம்மனை குடிகொள்ளச் செய்தனர்.

    ஆலயத்தின் கருவறைக்கு முன்பாக வலதுபுறம் விநாயகரும், இடதுபுறம் முருகப்பெருமான் அருள்கின்றனர். கருவறையில் அரசமரத்தை ஒட்டி, நாகாத்தம்மன் அருள்காட்சி தருகிறார். கருவறை முன்பு சிம்ம வாகனம் உள்ளது. அமர்ந்த கோலத்தில் ஒரு காலை மடித்துக் கொண்டும், மற்றொரு காலை தொங்கவிட்டபடியும் இருக்கும் அன்னைக்கு ஐந்து தலை நாகம் குடை பிடிக்கிறது. நான்கு கரங்களில் இடது கரங்களில் திரிசூலம், வரதஹஸ்த முத்திரையும், வலது கரங்களில் கத்தி மற்றும் அங்குச பாசத்துடன் அன்னை காட்சி தருகிறார். இந்த சன்னிதியில் உற்சவ மூர்த்திகளும் எழுந்தருளியுள்ளனர்.

    கருவறை பின்புறம் உள்ள அரசமரத்தடியில் நாகர்கள் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் இங்குள்ள புற்றை வழிபாடு செய்கின்றனர். சர்ப்ப தோஷம், திருமண பாக்கியம், குழந்தை வரம் கிடைக்க இங்கு வந்து வழிபடுகிறார்கள்.

    மு.வெ.சம்பத்
    Next Story
    ×