search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    உள்ளத்தில் மாற்றம் தரும் இறைவனை உணர்வது எப்படி?
    X
    உள்ளத்தில் மாற்றம் தரும் இறைவனை உணர்வது எப்படி?

    உள்ளத்தில் மாற்றம் தரும் இறைவனை உணர்வது எப்படி?

    ஒவ்வொரு காரியத்திலும் இறைநோக்கத்தின்படி எப்படி செயல்பட வேண்டும்? என்ற தூண்டுதலை உணராதவன், இயல்பானவனே என்பதில் சந்தேகம் இல்லை. இதனடிப்படையில் நம்மை நாம் ஆராய்வோமாக.
    இறைவனால் வடிவமைக்கப்பட்டவன் மனிதன். ஆனால் அவரை மட்டுமே வணங்காமல் தீயசக்திக்கும் கீழ்ப்படிந்தவன் என்பதால் தீயகுணங்களும் அவனை ஒட்டிக்கொண்டுள்ளன. அந்த வகையில் முதல் மனிதனிடம் இருந்து பரம்பரை பரம்பரையாக மனிதர்களிடம் தீயகுணங்கள் வந்துகொண்டே இருக்கின்றன.

    இயல்பாக வரும் பிறவிக் குணங்களையும், அவற்றின் அடிப்படையிலான பகை, கோபம், எரிச்சல், கவுரவம், கர்வம், பொறாமை போன்றவற்றை எவராலும் சுயமாக விட்டுவிட முடியாது.

    பலவிதமான இச்சைகளை நாடுவது, பாகுபாடு பார்ப்பது, மத, சாதி துவேஷம் கொண்டு உதவி செய்தலை மறுப்பது, அநியாயமாக குற்றஞ்சாட்டுவது, அதிகாரத்தை சுயலாபத்துக்காக பயன்படுத்துவது, அநியாய சம்பாத்தியத்தை நாடுவது, பொய், பாரபட்சம், குற்றத்தை மறைத்தல் என எத்தனையோ பாவங்கள், உலகத்தில் சாதி, மதம், இனம் கடந்து அனைத்து மக்களிடமும் உள்ளன.

    சந்தர்ப்பங்களில் எல்லாருமே இதுபோன்ற குணங்களை இயல்பாக வெளிப்படுத்துகின்றனர். ஒருவன் தன்னைத்தானே இந்தத் தீயகுணங்களில் இருந்து விடுவிக்க முடியாத நிலையில், அவற்றோடுதான் உலகத்தில் வாழ்ந்து முடிக்க வேண்டுமா? இல்லை என்றால், அந்த தீயகுணங்களை அவனிடம் இருந்து நீக்கக் கூடியவர் யார்? அவர் எப்படி செயல்படுவார்? அதை எப்படி அறிய முடியும்? என்பவை, உண்மையான பக்திக்குள் வர விரும்புபவனின் கேள்விகளாக இருக்கும்.

    எல்லோருமே பெற்றோர் அறிமுகம் செய்த இறைவனை வழிபடுவதோடு, இயல்பான குணங்களின்படியே வாழ்கிறோம். நாம் செல்லும் வழிபாட்டு தலங்கள்தான் வெவ்வேறானவை என்பது தவிர, இயல்பான குணங்களின் அடிப்படையில் சாதி-மத வேறுபாடில்லாமல் எல்லோருமே ஒன்றுதான். இயல்பு குணம் நீக்கப்படுதலே பக்தியாகும். இயல்பு குணங்கள் மாறாமல் தங்களை பக்தர்களாக நினைத்துக்கொள்ளும் மக்கள், அனைத்து மார்க்கத்திலும் உள்ளனர்.

    தீயகுணங்களை நீக்கி ஒருவனை பக்தனாக மாற்றுவதற்கு, அவனைப்படைத்த இறைவன் அல்லது கடவுளால் மட்டுமே முடியும். மனிதப்படைப்பு பற்றி பல கருத்துகள் கூறப்பட்டாலும், உலகம் முழுவதும் பிறக்கும் மனிதர்கள் ஒரே சாயலில் (ஒரு தலை, இரண்டு கண், இரண்டு காது, ஒரே மனசாட்சி போன்றவை) இருப்பதால், அவர்களை படைத்த கடவுள் ஒருவரே என்பது தெளிவு.

    அவர் யார்? கடவுள் என்றால் ‘கடந்து உள்’ளே (உள்ளத்துக்குள்) வரக்கூடியவர் என்று அர்த்தம். ஒருவனை உருவாக்கியவர் மட்டும்தான் அவனை மாற்றுவதற்காக அவனது உள்ளத்துக்குள் நுழைய முடியும். அப்படி கடந்து வரும் இறைவன், அவனை தனது நற்குணத்தின்படி படிப்படியாக தன்னைப்போல மாற்றுகிறார் என்பதுதான் இதிலுள்ள தத்துவம். அதற்கேற்ற சூழ்நிலைகளை இறைவன் உருவாக்கி அவனை அதில் கடந்துபோகச் செய்கிறார். அதிலே அவன் பக்தி நடத்தையை கற்றுக்கொள்கிறான்.

    அதன்பிறகு தீயகுணங்களை அவன் செயல்படுத்த விரும்பாமல், இறைவனைப்போலவே படிப்படியாக நற்குணசாலியாக மாறுகிறான். எந்த சூழ்நிலையிலும் இறைகுணங்களான மன்னிப்பு, பகை மறுப்பு, பாகுபாடு தவிர்ப்பு, இச்சையை விலக்குவது போன்றவற்றை செயல்படுத்த நாடுகிறான்.

    உள்ளத்துக்குள் வரக்கூடிய இறைவன் யாராக இருக்க முடியும்?. உதாரணமாக, ஒரு பொருள் கெட்டுப்போகும்போது, அதைப் படைத்தவர் அதை அறிந்துகொள்கிறார். அது எதனால் கெட்டது? அதை சரியாக்க எந்த பாகத்தைத் தொட வேண்டும்? என்ற விபரங்கள் எல்லாமே அந்தப் பொருளை உருவாக்கியவருக்கு மட்டுமே தெரியும். அதை முன்னிருந்தபடி சீர்படுத்தவும் அதை படைத்தவரால் மட்டுமே முடியும்.

    தீமையால் சூழப்பட்டு அழிந்துவிடாதபடி, தீயகுணங்களில் இருந்து விடுவித்து அவனை தன்னைப்போல மாற்ற வேண்டும் என்பதுதான் அவனைப் படைத்த இறைவனின் ஆசையாகும் (மத்.5:48).

    ஆனால் உள்ளத்துக்குள் இறைவனை எப்படி கொண்டு வர முடியும்? என்ற கேள்விக்கு கிறிஸ்தவம்தான் பதிலளிக்கிறது.

    பாவம் செய்வதை விட்டுவிட்டு, யாருக்கு எதிராக என்னென்ன பாவங்களை செய்தோமோ, அவர்களிடம் சென்று மன்னிப்பைக் கேட்டுவிட்டு, இயேசு காட்டியுள்ள வழியில் நடப்பதற்கு ஒருவன் உளப்பூர்வமாக முடிவு செய்தால் அவன் உள்ளத்துக்குள் இறைவன் தனது ஆவியை அனுப்புகிறார். இந்த ஆவியைப் பெறாமல், மற்ற எந்தவித வழியைப் பின்பற்றினாலும் எவராலும் தனது இயல்பு குணத்தை மாற்ற முடியாது.

    இறைஆவியால்தான், உடல் ரீதியாக செய்யும் தப்புகள், பிறவிக்குணங்களின் அடிப்படையில் செய்யக்கூடிய குற்றங்கள், உள்ளத்தில் இருந்து புறப்பட்டு வரும் தீயசிந்தனை போன்ற பாவங்கள் ஆகிய 3 அம்சங்களில் இருந்தும் அவன் முற்றிலும் விடுபட ஏவுதல் கிடைக்கிறது. பாவ தூண்டுதல்களில் இருந்து மனிதனை விடுவித்து, செய்திருக்கும் பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் அவனை படைத்த இறைவனிடம் மட்டும்தான் உள்ளது.

    இறைவனின் ஆவி தன்னுள் இருக்கிறதா? என்பதை ஒருவன் தனது செயல்பாட்டின் மூலமாக அறிந்துகொள்ள முடியும். உதாரணமாக, அவமானத்தையும், இழப்பையும் ஏற்படுத்தியவனுக்கு பதிலுக்கு அதுபோல செய் என்று உள்ளம் ஏவினால், அது இயல்பான குணத்தைக்கொண்ட உள்ளமாகும். அப்படி செயல்பட முற்படும்போது, ’குற்றவாளியை மன்னித்துவிடு, பதிலுக்கு எதுவும் செய்யாதே’ என்று மனம் தூண்டப்பட்டால், அதுதான் இயேசு காட்டிய இறைவழியில் செல்லத் தூண்டும் இறைவன் அருளிய ஆவியாகும்.

    இப்படி ஒவ்வொரு காரியத்திலும் இறைநோக்கத்தின்படி எப்படி செயல்பட வேண்டும்? என்ற தூண்டுதலை உணராதவன், இயல்பானவனே என்பதில் சந்தேகம் இல்லை. இதனடிப்படையில் நம்மை நாம் ஆராய்வோமாக.

    ஜெனட், காட்டாங்குளத்தூர்.

    Next Story
    ×