search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிலுவை கற்றுத்தரும் தியாகம்
    X
    சிலுவை கற்றுத்தரும் தியாகம்

    சிலுவை கற்றுத்தரும் தியாகம்

    கிறிஸ்து பிறப்பை சாஸ்திரிகளை வழி நடத்திய நட்சத்திரத்தோடும், இயேசு பிறந்த தொழுவத்தின் நினைவாக குடிலோடும் கொண்டாடுகின்ற நாம், சாஸ்திரிகளின் கேள்விக்கான பதில் கிடைத்த அந்த சிலுவையையும் நினைவுகூருவோம்.
    “நீஎங்கே இருக்கிறாய்”

    மனிதனைப் பார்த்து கடவுள் கேட்ட முதல் கேள்வி.

    வெறுமையாயிருந்த உலகத்திற்கு வெளிச்சம் கொடுத்து, காற்றையும், கடலையும், மரம், செடி கொடிகளையும், விலங்குகளையும் படைத்த கர்த்தர், தன்னுடைய படைப்பின் மகுடமாக மனிதனையும் படைத்தார்.

    ஏதேன் என்னும் தோட்டத்தை உண்டாக்கி, தான் படைத்த எல்லாவற்றின் மீதும் மனிதனுக்கு அதிகாரம் கொடுத்தார். தோட்டத்தின் நடுவிலிருக்கும் மரத்தின் கனியை மாத்திரம் புசிக்கக்கடாது என்னும் கட்டளையையும் கொடுத்தார்.

    ஆனால் மனிதனோ, தந்திரசாலியான சர்ப்பத்தின் சொல்லைக் கேட்டு அந்த மரத்தின் கனியை புசித்தான். விளைவு, தான் நிர்வாணியென்று உணர்ந்தான், பூமியில் முதல் பாவமும் நுழைந்தது.

    பகலில் குளிர்ச்சியான வேளையில் மனிதரோடு பேசலாமென்று வந்த கர்த்தரின் சத்தத்தைக் கேட்ட மனிதன், அவருக்குப் பயந்து, தோட்டத்தின் செடிகளுக்குள்ளே போய் ஒளிந்து கொண்டான்.

    அப்பொழுது கடவுள் ஆதாமிடம் கேட்டதுதான், அந்த கேள்வி, “நீ எங்கே இருக்கிறாய்?”

    ‘நிர்வாணியாயிருப்பதனால் ஒளிந்து கொண்டேன்’ என்று அவன் சொல்கிறான்.

    “நீ நிர்வாணியென்று உனக்கு அறிவித்தவன் யார்?, புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தாயோ?” என்று இன்னும் இரண்டு கேள்விகள் கடவுளிடமிருந்து வருகின்றன.

    உடனே ஏவாளின் மீது பழியைத் தூக்கி போடுகிறான்.

    ஏவாள், சர்ப்பத்தின் மேல் பழியைப் போடுகிறாள்.

    கோபம் கொண்ட கர்த்தர், ‘உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்’ என்று சர்ப்பத்திற்கு சாபத்தைக் கொடுத்தார்.

    “நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன்; வேதனையோடே பிள்ளை பெறுவாய்” என்று ஏவாளுக்கும், “பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய். நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய்” என்று ஆதாமுக்கும் சாபம் கொடுத்து ஏதேன் தோட்டத்தை விட்டும் துரத்தியும் விட்டார்.

    ஆதாம் ஏவாள் தம்பதியருக்கு காயீன், ஆபேல் என இரண்டு பிள்ளைகள் பிறக்கிறார்கள். ஏதேனுக்கு வெளியே வாழ்வதால், காயீன் நிலத்தைப் பயிரிடுகிறவனாகவும், ஆபேல் ஆடுகளை மேய்க்கிறவனுமானான்.

    இப்பொழுது இருவரும் கடவுளுக்கு காணிக்கை செலுத்த வந்தார்கள். ஆபேல் தன்னிடத்திலிருந்த சிறந்த ஆடுகளை படைத்தபடியால், கடவுள் அவன் காணிக்கையை அங்கீகரித்தார். இதனால் எரிச்சலடைந்த காயீன், ஆபேலைக் கொலை செய்து விடுகிறான்.

    இப்பொழுதும் கடவுள் தேடி வருகிறார். “உன் சகோதரனாகிய ஆபேல் எங்கே?” என்று காயீனைப் பார்த்துக் கேட்கின்றார்.

    கடவுளிடம் மன்னிப்புக் கேட்டிருக்க வேண்டிய காயீனோ, “என் சகோதரனுக்கு நான் காவலாளியோ?” என்று கர்த்தரைப் பார்த்தே கேட்டுவிட்டான். தன் தகப்பனைப் போல சாபத்தையும் வாங்கி கொண்டான்.

    ஆனாலும் மனிதர்கள் மேலிருந்த கடவுளின் அக்கறை குறையவேயில்லை. ஆதாம், ஏவாள் தொடங்கி, நோவா, ஆபிரகாம், மோசே, யோசுவா, நியாயாதிபதிகள், தீர்க்கதரிசிகள் என்று பலரோடும், பலர் மூலமும், மனிதரோடு பேசுவதைக் கடவுள் நிறுத்தவேயில்லை.

    ஆனால், மனிதனோ கடவுளை விட்டு விலகி, பாவத்தில் விழுந்துக் கொண்டேயிருந்தான். அவனை பாவத்திலிருந்து மீட்க வேண்டுமென்றால் ஸ்திரீயின் வித்து பாவத்தின் வித்தை நசுக்கியேயாக வேண்டும்.

    இதற்கு முடிவு, தன்னுடைய ஒரே மகனாகிய இயேசுவை இந்த உலகத்தில் மனிதனாக பிறக்க செய்து, அவர் மூலமாக மனிதனை மீட்பதே என்று எண்ணின கர்த்தர், அவரையே இந்த உலகத்தில் குழந்தையாய் பிறக்க செய்தார். அதை தான் நாம், கிறிஸ்துமஸ் என்று அழைக்கிறோம்.

    இயேசு பிறந்தபோது, கிழக்கிலே ஒரு நட்சத்திரம் தோன்றியது. அதைக் கண்ட வான சாஸ்திரிகள், இயேசுவை பணிந்துகொள்ள வந்தார்கள்.

    கடவுளின் மகன், அரண்மனையிலே தான் பிறந்திருக்க வேண்டுமென்று எண்ணின அந்த சாஸ்திரிகள், ஏரோது என்னும் ராஜாவின் அரண்மனையில் போய் ஒரு கேள்வி கேட்டார்கள்.

    இறைமகனைக் குறித்து அவர்கள் கேட்ட அந்தக் கேள்வி, “யூதருக்கு ராஜாவாக பிறந்திருக்கிறவர் எங்கே?” என்பதே.

    ஏரோதாலும், அவனோடிருந்தவர்களாலும் இந்த கேள்விக்கான விடையை அவர்களுக்கு கொடுக்கமுடியவில்லை. வெளியே வந்த அவர்களுக்கு அந்த நட்சத்திரமே வழி காட்டியது.

    பாலனாய் பிறந்த இயேசு, மனிதனாய் வளர்ந்து, தான் வந்த நோக்கமாகிய மனிதன் பாவத்திலிருந்து விடுதலைப் பெற, சிலுவையில் தொங்கி மரித்தார்.

    அந்த சிலுவையில் இவ்வாறாக எழுதப்பட்டிருந்தது “இவன் யூதருடைய ராஜாவாகிய இயேசு” (மத்தேயு 27:37).

    ஆம், கிறிஸ்து பிறப்பை சாஸ்திரிகளை வழி நடத்திய நட்சத்திரத்தோடும், இயேசு பிறந்த தொழுவத்தின் நினைவாக குடிலோடும் கொண்டாடுகின்ற நாம், சாஸ்திரிகளின் கேள்விக்கான பதில் கிடைத்த அந்த சிலுவையையும் நினைவுகூருவோம். அச்சிலுவை நமக்கு கற்றுத்தரும் தியாகத்தையும், அன்பையும் நாம் நம்மில் கொண்டு வாழ்வோம்.

    அன்பர்புரம் சகோ. ஹெசட் காட்சன்
    Next Story
    ×