search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வீசப்பட வேண்டிய தேவையற்ற தன்மைகள்
    X
    வீசப்பட வேண்டிய தேவையற்ற தன்மைகள்

    வீசப்பட வேண்டிய தேவையற்ற தன்மைகள்

    நேர்மையின் வழியில் நடந்தால், அதற்கேற்ற எதிர்ப்புகளையும், அநீதி வழிகளில் நடந்தால் அதன் மூலம் எதிர்கொள்ள வேண்டிய பிரதிபலன்களையும் சந்தித்தே ஆக வேண்டும்.
    உலகில் எப்படிப்பட்ட வாழ்க்கை முறையை தேர்ந்தெடுத்து வாழ்ந்தாலும் அதில் போராட்டம் உண்டு. நேர்மையின் வழியில் நடந்தால், அதற்கேற்ற எதிர்ப்புகளையும், அநீதி வழிகளில் நடந்தால் அதன் மூலம் எதிர்கொள்ள வேண்டிய பிரதிபலன்களையும் சந்தித்தே ஆக வேண்டும். இந்த இரண்டு வகையான வாழ்க்கை முறைக்கும் திட்டமிட்டு செயல்படுதல் அவசியம்.

    இறை பக்தர்கள் இதை வெகுவாக உணர முடியும். பக்தியில் இருந்து பிறழச் செய்யக்கூடிய நட்பு, உறவுகளை எவ்வளவு தூரத்தில் வைக்க வேண்டும்?, யாருடன் நெருக்கம் காட்ட வேண்டும்?, எந்தெந்த இடத்தில் யாரிடம் எதைப் பேச வேண்டும்?, பழைய பாவங்கள் மீண்டும் ஒட்டாமல் இருப்பதற்கு மனம், உடல் ரீதியாக எப்படி விலக வேண்டும்? போன்ற பல்வேறு அம்சங்களில் பக்தர்கள் மிகச்சரியாக திட்டமிட்டு செயல்படுகின்றனர்.

    இதுபோன்றவற்றில் சரியான திட்டமிடல் இல்லாத பக்தன், பக்திக்கென்று அனுமதிக்கப்படும் சோதனைகளில் விழுந்துபோகிறான். பேச்சு, பார்வை, செயல்பாடு, நோக்கம் ஆகியவற்றில் சுயநலம் இல்லாமல், பக்திக்கேற்ற நேர்மையும், சுத்தமும் இருப்பதற்கேற்ப திட்டமிட்டு வாழ்ந்தால் மட்டுமே, பாவங்களுக்கு தப்பி, அந்தந்த காலத்தில் இறைவன் அருளும் பல்வேறு நன்மைகளை தடையின்றி பெற்றுக்கொள்ள முடியும்.

    பக்தியின் நன்மைகளை அடைவதற்காக திட்டமிட்டு செயல்படுவதன் அவசியம் பற்றி இயேசு வாழ்ந்த காலகட்டத்தில் நடந்த சம்பவம் ஒன்றின் மூலம் அறிந்துகொள்ள முடியும்.

    இயேசு செய்த அற்புதங்களை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். இயேசு இருக்கும் இடத்துக்குச் சென்று அவரை சந்தித்து அற்புதங்களை மக்கள் பெற்றது ஒரு வகை. இயேசு செல்லும் வழியில் அவரை சந்தித்து அற்புதம் பெற்றது மற்றொரு வகை. இயேசுவே நேரில் பார்க்காமலேயே மற்றவரின் வேண்டுதல் மூலம் அற்புதம் பெற்றது மூன்றாம் வகை.

    ஆனால் இயேசு என்பவர் யார் என்று தெரியாமலேயே நோய் நீங்கி சுகம் பெற்றவரும் உண்டு என்பது இன்னொரு வகையாகும். இந்த வகையில் நன்மையைப் பெற்ற நோயாளிக்கு நடந்த சம்பவத்தை ஆய்வு செய்யலாம்.

    எருசலேமில் இருந்த பெதஸ்தா என்ற குளத்தின் கரையோரத்தில் ஏராளமான ஊனமுற்றவர்களுடன் நோயாளி ஒருவன் 38 ஆண்டுகளாக வசித்து வந்தான். தேவதூதனால் அந்தக் குளம் கலக்கப்படும்போது அதில் முதலில் இறங்கும் நோயாளி அப்போதே சுகம் பெற்றுச் செல்வான்.

    அப்படி சுகம் பெறுவதற்காக 38 ஆண்டுகளாக காத்திருந்த அவனிடம் இயேசு வந்து கேட்டகேள்வி அவனை அதிரச் செய்தது. “சொஸ்தமாக வேண்டுமென்று விரும்பு கிறாயா?’’ என்பதுதான் அந்தக்கேள்வி (யோவான்5:6).

    இயேசுவின் இந்தக்கேள்வியில் ஆழமான அர்த்தம் உள்ளது. இயேசு கேட்ட கேள்வி அந்த நோயாளியை நோக்கியதாகும். ஆனால் அவன் அளித்த பதில், ‘கலக்கப்படும்போது என்னை குளத்தில் கொண்டுபோய்விட யாரும் இல்லை. என்னை மற்றொருவன் முந்திவிடுகிறான்’ என்று மற்றவர்களைப் பற்றியதாக உள்ளன.

    அதாவது, மற்றவர்களால்தான் தனக்கு நோய் நீங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது என்ற அர்த்தத்தில் பதிலளிக்கிறான்.

    ஆனால் இயேசு கேட்ட கேள்வி, அவனது திட்டமிட்டு செயல்படாத நிலையை சுட்டிக்காட்டுவதற்காக கேட்கப்பட்டதாகும். கேள்வி கேட்பதற்கு முன்பு அவனை படுக்கையில் படுத்துக்கிடந்தவனாக இயேசு பார்த்தார் என்று வசனம் கூறுகிறது.

    படுத்துக்கிடந்தால், குளம் கலக்கப்படுவது உடனடியாகத் தெரியாது. குளத்தையே பார்த்துக்கொண்டிருந்தால்தான் அது கலக்கப்படுவதை உடனே கண்டறிய முடியும். படுத்தபடியே கிடந்தால், குளத்துக்கு முதல் ஆளாக செல்ல முடியாததோடு, அடுத்த முறை முதலில் செல்வதற்காக புதிதாக திட்டமிடவும் முடியாது.

    ஆனால், குளத்தை பார்க்காமல் படுக்கையில் கிடந்து, ‘எவனாவது வந்து உதவி செய்வானா?’ என்று அங்குமிங்கும் பார்த்துக் கொண்டிருந்தால், எத்தனை ஆண்டுகளானாலும் சுகமடைய வாய்ப்பு கிடைக்காது. இதை சுட்டிக்காட்டுவதற்காகத்தான் இயேசு அப்படி ஒரு கேள்வியைக் கேட்டார்.

    அதாவது, உண்மையிலேயே நோய் நீங்கி சுகமடைய விரும்பும் ஒருவன், குளத்தில் முதலில் இறங்குவதற்காக ஒவ்வொரு முறையும் திட்டமிட்டபடி விழிப்புடன் இருப்பான். ஆனால் அவனிடம் அப்படியொன்றும் காணப்படவில்லையே என்பதால்தான் அதை உணர்த்தவே இயேசு, ‘உண்மையிலேயே சுகமடைய உனக்கு விருப்பம் இருக்கிறதா?’ என்ற அர்த்தமுள்ள, உள்ளத்தில் உரைக்கும்படியான கேள்வியைக் கேட்டார்.

    ‘நான் போவதற்குள்’ என்று அவன் சொல்வதால், அவனை அசைவற்று முடங்கிக்கிடக்கும் நோயாளியாக கருத முடியாது. குளத்துக்கு தனியாக போகும் தகுதியைக் கொண்டவன் அவன். ஆனால் அங்கு போவதற்கு காலதாமதம் ஆவதை சரிசெய்ய திட்டமிடாமல் இருந்ததுதான் அவனது பிரச்சினை. நோய் குணமாவதில் அவன் பின்தங்கி இருந்ததுபோலவே, பக்திக்கேற்ற வகையில் ஆத்மா சீரடைவதை திட்ட மிடாமல் நாம் பின்தங்கி இருக்கிறோம்.

    இயேசுவின் வழியைப் பின்பற்ற நடைமுறையில் முயற்சிக்காமல், போதனைகளை கேட்பதிலேயே பலரும் நின்றுவிடுகிறோம்.

    பகைப்பவனை மன்னித்தல், பறித்தவனுக்கு விட்டுக்கொடுத்தல், திருடியதை திருப்பிக்கொடுத்தல், அநீதியாக பெற்ற கல்வி, வேலை, செல்வங்களை திரும்ப ஒப்படைத்தல், அடுத்தவனின் நலனுக்காக ஜெபித்தல் என எவ்வளவோ நீதிபோதனைகளை பின்பற்ற திட்டமிடாமல், படுக்கையில் கிடந்த 38 ஆண்டு நோயாளியைப்போல, ஊழியர்களின் போதனையைக் கேட்பதோடு நின்றுவிடுவதுதான் அபத்தம்.

    அந்த நோயாளியிடம் ‘நீ அற்புத சுகமடைந்துவிட்டாய்’ என்று இயேசு கூறவில்லை. மாறாக, ‘படுக்கையை எடுத்துக்கொண்டு நட’ என்றுதான் கூறினார். அந்த படுக்கையை எடுக்க முன்வந்த பின்னர்தான் அவன் சுகமடைந்தான்.

    எனவே இயேசு காட்டிய ஆன்மிகத்துக்குள் வர விரும்புகிறவர்களும், மேற்கூறிய அவரது போதனைகளை அன்றாட வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும். போதனைகளை கேட்பதோடு நின்று விடும், அதாவது படுத்துக்கிடக்கும் நிலையை மாற்றி, தேவையற்ற அந்தப் படுக்கையை வீசிவிட விளைவோமாக.

    ஜெனட், காட்டாங்குளத்தூர்.
    Next Story
    ×