search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    செக்கரியா
    X
    செக்கரியா

    பைபிள் கூறும் வரலாறு: செக்கரியா

    செக்கரியா எனும் பெயருக்கு, ‘கடவுள் நினைவு கூர்கிறார்’ என்பது பொருள். செக்கரியா இறைவாக்கினர், சிறிய இறைவாக்கினர்களின் பட்டியலில் வருகின்ற ஒரு நபர்.
    செக்கரியா எனும் பெயருக்கு, ‘கடவுள் நினைவு கூர்கிறார்’ என்பது பொருள். செக்கரியா இறைவாக்கினர், சிறிய இறைவாக்கினர்களின் பட்டியலில் வருகின்ற ஒரு நபர். இந்த நூல் 14 அதிகாரங்களையும், 211 வசனங்களையும், 6444 வார்த்தைகளையும் கொண்டிருக்கிறது. இந்த நூல் கி.மு. 480-க்கும், 470-க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டிருக்கலாம் எனத்தெரிகிறது.

    செக்கரியா என்பது அந்த காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்த பெயர்களில் ஒன்று. இந்த இறைவாக்கினர், குருத்துவ வழி மரபில் வந்தவர். பாபிலோனில் இருந்து யூதேயா விற்கு வந்த முதல் கூட்டமான 50 ஆயிரம் பேரில் ஒருவராக இருந்தவர். முதல் கூட்டத்தினரில் 15 பேருக்கு 2 பேர் குருக்களாகவே இருந்தார்கள். காரணம் அவர்களுடைய நோக்கம் எருசலேமுக்கு வந்ததும் இறைவனின் ஆலயத்தைக் கட்டி எழுப்ப வேண்டும் என்பதாக இருந்தது.

    கி.மு. 520-ம் ஆண்டில் இறைவாக்கு உரைப்பதற்காக இறைவனால் அழைக்கப்பட்டவர். இவர் ஆலயத்துக்கும் பலிபீடத்துக் கும் இடையே கொல்லப்பட்டிருக்கிறார் என்பதை “திருக்கோவிலுக்கும் பலிபீடத்திற்கும் நடுவே நீங்கள் கொன்ற பரக்கியாவின் மகன் ெசக்கரியாவின் ரத்தம் வரை” (மத்தேயு 23:25) எனும் விவிலிய வாசகம் நமக்கு விளக்குகிறது.

    ஆகாய் இறைவாக்கினர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர் இவர். இருவருமே சம காலத்தில் இறைவாக்கு உரைத்தார்கள். ஆனால் ஆகாய் இறைவாக்கினருக்குப் பின்பும் இவருடைய இறைவாக்குரைக்கும் பணி தொடர்ந்தது. இருவருமே தங்களது இறைவாக்கின் காலத்தைக் கவனமாய்ப் பதிவு செய்து வைத்துள்ளனர். இருவருமே எருசலேம் தேவாலயம் மீண்டும் கட்டியெழுப்பப் படவேண்டுமென எருசலேமிலிருந்து இறைவாக்குரைத்தவர்கள். ஆகாய் இறைவாக்கினரின் பணி ஒரே ஒரு மாதத்தோடு முடிவடைய, செக்கரியாவின் பணியோ நீண்ட காலம் தொடர்ந்தது.

    இந்த நூலை இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். முதல் எட்டு அதிகாரங்களும் யூதாவுக்குத் திரும்பிய இஸ்ரேல் மக்களுக்கு ஊக்கமூட்டும் வகையில் எழுதப்பட்டுள்ளது. ஆலயத்தைத் திரும்பக் கட்டும் மக்களை செக்கரியா உற்சாகமூட்டுகிறார். கடைசி ஆறு அதிகாரங்களும் எதிர்கால தீர்க்க தரி சனங்களாகவும், மெசியாவின் வருகையை முன்மொழியும் இறைவாக்குகளாகவும் அமைந்திருக்கின்றன.

    இந்த நூலில் அமைந்துள்ள எட்டு காட்சிகள் மிக முக்கியமானவை. கடவுளே அனைத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார், இஸ்ரேலை எதிர்க்கும் நாடுகள் அழியும், இஸ்ரேல் மீண்டும் கட்டியெழுப்பப்படும், இஸ்ரேல் ஒரு புனித குருத்துவ தேசமாய் மாறும், இஸ்ரேல் வலிமையான தலைமையின் கீழ் அமையும், கட்டளையை மீறுபவர்கள் வேரோடு பிடுங்கி எறியப்படுவார்கள், பாவமான அமைப்பு முழுமையாய் விலக்கப்படும், உலகில் நடக்கும் செயல்கள் அனைத்தையும் கடவுளே தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். போன்றவையே அந்த எட்டு காட்சிகள் சொல்லும் செய்திகள்.

    செக்கரியாவின் நூல் கவிதைகளால் கட்டமைக்கப்பட்டுள்ளது. புரிந்து கொள்வதற்கு சற்றுக் கடினமாகவும், குறியீடுகளாலும் காட்சிகளாலும் இவருடைய நூல் அமைந்துள்ளது. பிற்காலத்தில் நிகழும் விஷயங்களை ஆயிரக்கணக்கான ஆண்டு களுக்கு முன்பே அவர் கூறியிருந்தார். கொஞ்சம் தானியேல், கொஞ்சம் எசேக்கியேல், கொஞ்சம் திருவெளிப்பாடு என பல நூல்களின் சில குணாதிசயங்களை இந்த நூலில் காணலாம்.

    இறைவாக்கினர்களுக்கு பதிலாக குருக்களே இனி கோலோச்சுவார்கள். அவர்களே தலைவர்களாக இருப்பார்கள் எனும் சிந்தனையும், குருக்களே அரசர்களைப் போல ஆள்வார்கள் எனும் சிந்தனையும் இவருடைய நூலில் காணலாம். செக்கரியா வெள்ளியாலும் பொன்னாலும் ஒரு கிரீடம் செய்து அதை யோசுவாவின் தலையில் சூட்டுகிறார். மன்னராகவும், குருவாகவும் பழைய ஏற்பாட்டில் மெல்கிசெதேக்குப் பிறகு சித்தரிக்கப்பட்டவர் இவர் தான்.

    இந்த இறைவாக்கின் காலத்துக்குப் பின் நானூறு ஆண்டுகள் இறைவனின் வார்த்தை மக்களுக்குக் கொடுக்கப்படவில்லை. அதன்பின் திருமுழுக்கு யோவான் வருகிறார். அவருடன் மனித வடிவ வார்த்தையாக இறைமகன் இயேசுவும் வருகிறார். இயேசு அரசவையின் அரசராக இல்லாமல், மெல்கிசெதேக்கின் முறைப்படி குருவாகவும், இறையரசை நிறுவும் அரசராகவும் வருகிறார். இப்படி இந்த இறைவாக்குகள் மீட்பை நோக்கி நீட்சியடைகின்றன.

    இரண்டாயிரம் ஆண்டைய ஆபிரகாம் முதல் இயேசு வரையிலான இஸ்ரேலர்களின் வாழ்க்கையை நான்காகப் பிரித்தால் முதல் ஐநூறு ஆண்டுகள் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு மற்றும் யோசேப்பின் ஆட்சிக்காலம். அடுத்த ஐநூறு ஆண்டுகள் இறைவாக்கினர்களின் ஆட்சிக்காலம். அதன் பிறகு ஐநூறு ஆண்டுகள் அரசர்களின் ஆட்சிக்காலம். அதன் பின் இயேசுவின் வருகை வரையிலான ஐநூறு ஆண்டு காலம் குருக்களின் ஆட்சிக்காலம் என அமைகிறது.

    அவருடைய நூலின் இரண்டாவது காலமான எதிர்கால தீர்க்கதரிசனங்கள் மிகவும் சிக்கலானவையாக அமைந்துள்ளன. இவை எதுவும் வரிசையாக அமையாமல் புதிர்களின் குவியலாக அமைந்துள்ளது. இறுதிக்காலத்தின் ரகசியங்களை புதைத்து வைத்தவையாகவும் அமைகிறது.

    “மகளே சீயோன், மகிழ்ந்து களிகூரு; மகளே எருசலேம், ஆர்ப்பரி. இதோ, உன் அரசர் உன்னிடம் வருகிறார். அவர் நீதியுள்ளவர்; வெற்றிவேந்தர்; எளிமையுள்ளவர்; கழுதையின்மேல், கழுதைக் குட்டியாகிய மறியின்மேல் ஏறி வருகிறவர்” என அவர் இயேசுவைக் குறித்து எழுதியுள்ளது மிகப்பிரபலம்.

    தவற விடாமல் வாசிக்க வேண்டிய இறைவாக்கு நூல்களின் பட்டியலில் செக்கரியாவுக்கு தனி இடம் உண்டு.

    சேவியர்
    Next Story
    ×