search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    யோனா
    X
    யோனா

    பைபிள் கூறும் வரலாறு: யோனா

    கடவுள், யோனாவிடம் சொன்னார். ‘நீ உழைக்காமல், நீரூற்றாமல் முளைத்து வளர்ந்து ஒரே ஒரு நாள் வாழ்ந்த ஆமணக்கு செடிக்காக நீ இரங்குகிறாயே, நான் படைத்த இந்த பல லட்சம் மக்களுக்காக நான் இரங்க மாட்டேனா?’
    விவிலியத்திலுள்ள நூல்களில் மிகப் பிரபலமான நூல்களில் ஒன்று ‘யோனா’.

    நான்கே நான்கு அதிகாரங்களும், 481 வசனங்களும், 1321 வார்த்தைகளும் தான் இந்த நூலில் உள்ளன. ஆனாலும் இது சொல்கின்ற செய்தி மிகவும் வலிமையானது.

    யோனாவின் நூல் மிகப்பிரபலமாக இரண்டு முக்கியமான காரணங்கள் உண்டு.

    ஒன்று யோனா நூலில் வருகின்ற அதிசயச் செயல்கள். அதிலும் குறிப்பாக பெரிய மீன் ஒன்றின் வயிற்றில் யோனா மூன்று நாட்கள் உயிரோடு இருக்கும் நிகழ்வு.

    இன்னொன்று. இறைமகன் இயேசு தன்னோடு ஒப்பிட்ட ஒரே ஒரு இறைவாக்கினர் இந்த யோனா தான் எனும் சிறப்பு.

    அமித்தாய் என்பவருடைய மகனான யோனாவுக்கு கடவுளின் அழைப்பு வருகிறது. நினிவே நகருக்குச் சென்று “பாவத்தில் வாழ்கின்ற உங்களுக்கு அழிவு வரப் போகிறது” என அறிவிக்க வேண்டும். இந்த பணி யோனாவுக்குப் பிடிக்கவில்லை.

    நினிவேயில் வாழ்ந்த மக்கள் அசீரியர்கள். அவர்கள் யூதர் அல்லாத பிற இன மக்கள்.

    இறைவனின் செய்தியை பிற இனத்தாருக்கு அறிவிக்க யோனாவுக்கு மனமில்லை.

    ‘நான் போய் மக்களை எச்சரித்து, அவர்கள் மனம் திரும்புவதை விட, இறைவன் அவர்களை அழிப்பதே நல்லது’ என்பதே அவருடைய சிந்தனை.

    வரலாற்று ஆய்வாளர்களின் கட்டுரைகள் அசீரியர்களை கொடுங்கோலர்களாகச் சித்தரிக்கின்றன. போர்க்கைதிகளை அவர்கள் குற்றுயிரும் கொலையுயிருமாய் சாகடித்து ரசிப்பவர்கள். உயிரோடு இருக்கும் போதே கைதிகளின் கண்களைப் பிடுங்கி, மூக்கை அறுத்து, காதுகளை வெட்டி ரசிப்பார்கள். அதனால் அசீரியர்கள் என்றாலே உலக நாடுகளுக்கு கொலை நடுக்கம் எழும்.

    அசீரியர்கள் ஒரு நாட்டை முற்றுகையிடுகிறார்கள் என்றால் நாடு நிலைகுலைந்து விடும். அசீரியர்களிடம் மாட்டிக் கொள்வதை விட தற்கொலை செய்து கூண்டோடு அழிந்து போவோம் எனும் நிலையை நாடுகள் எடுப்பதுண்டு. அத்தகைய கொடுங்கோலர்கள் தான் அசீரியர்கள். அவர்களிடம் தான் யோனா செல்லவேண்டும்.

    கிழக்கே இருந்த நினிவேவுக்குச் செல்ல கடவுள் சொன்னார். யோனாவோ மேற்கே இருந்த தர்சீசை நோக்கிக் கடல் பயணம் மேற்கொண்டார். அந்தக் காலத்தில் மேற்கு எல்லையாக தர்சீசு தான் இருந்தது. அதைத் தாண்டி நாடுகள் இல்லை.

    கடவுளோ கடலை கொந்தளிக்கச் செய்தார். கப்பல் பேயாட்டம் ஆடியது. கப்பலில் இருந்தவர்களெல்லாம் அவரவர் கடவுளிடம் மன்றாட, யோனாவோ கீழ்த்தளத்தில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தார்.

    கப்பலில் இருந்தவர்கள் பொருட்களையெல்லாம் கடலில் எறிந்து பார்த்தார்கள், என்னென்னவோ செய்து பார்த்தார்கள். கடைசியில் இந்த கொந்தளிப்புக்குக் காரணம் யார் என அறிய சீட்டுப் போட்டார்கள், அதில் யோனாவின் பெயர் வந்தது.

    யோனா விஷயத்தைச் சொல்கிறார். தன்னைக் கடலில் எறிந்தால் கொந்தளிப்பு அடங்கும் என்கிறார். அவர்கள் அப்படியே செய் கிறார்கள், கொந்தளிப்பு அடங்குகிறது.

    கடலில் விழுந்த யோனாவை கடவுள் அனுப்பி வைத்த ஒரு பெயர் தெரியா ராட்சத மீன் விழுங்குகிறது. மூன்று நாட்கள் மீனின் வயிற்றில் கிடந்த யோனா, பின்னர் கடவுளை நோக்கி மன்றாடுகிறார். பாட்டுப் பாடுகிறார், நன்றி செலுத்துகிறார். அவருடைய மன்றாட்டு பைபிளிலுள்ள சங்கீத நூலின் அடிப்படையில் அமைகிறது.

    கடவுள் மீனுக்குக் கட்டளையிட மீன் யோனாவை ஒரு கரையில் கக்கியது. அந்த இடம் நினிவே. கப்பல் பயணத்தில் வர விரும்பாதவனை மீனின் வயிற்றில் பயணிக்க வைத்தார் கடவுள்.

    யோனா எழுந்தார், அந்த மிகப்பெரிய நினிவே நகரில் சென்று “கடவுள் உங்களை அழிக்கப் போகிறார்” என அறிவித்தார்.

    மக்களோ மனம் மாறினர். மன்னன் மனம் மாறினான். எல்லோரும் உண்ணா நோன்பிருந்து கடவுளை நோக்கி மன்றாடினார்கள். கடவுள் மனம் இரங்கினார். மக்களை அழிப்பதில்லை எனும் முடிவுக்கு வந்தார்.

    யோனாவுக்கு இது கடும் கோபத்தை உருவாக்கியது. தனது நற்செய்தி அறிவித்தல் மிகப்பெரிய வெற்றியடைந்ததற்காய் கோபப்பட்ட ஒரே ஒரு இறைவாக்கினர் இவர் தான்.

    ‘இந்த மக்களை அழிக்காவிட்டால், என்னை அழியும்’ என கடவுளிடம் அவர் முறையிட்டார். பின்னர் ஊருக்கு வெளியே ஒரு கூடாரமடித்து நகரின் அழிவைக் காண ஆவலாய் காத்துக் கொண்டிருந்தார்.

    கடவுள் அவருக்கு அருகே ஒரு ஆமணக்கு செடியை வளரச் செய்தார். அது சட்டென ஒரு இரவில் சடசடவென வளர்ந்து அவருக்கு நிழல் கொடுத்தது, மறு இரவில் கடவுள் அனுப்பிய ஒரு புழு அதை அழித்தது. யோனாவின் கோபம் இப்போது பல மடங்காகியது.

    கடவுள், யோனாவிடம் சொன்னார். ‘நீ உழைக்காமல், நீரூற்றாமல் முளைத்து வளர்ந்து ஒரே ஒரு நாள் வாழ்ந்த ஆமணக்கு செடிக்காக நீ இரங்குகிறாயே, நான் படைத்த இந்த பல லட்சம் மக்களுக்காக நான் இரங்க மாட்டேனா?’

    யோனாவின் நூல், கடவுளின் பேரன்பையும், கடவுளை விட்டு விலகி ஓடி ஒளிய முடியாது எனும் பாடத்தையும் நமக்குச் சொல்கிறது.

    சேவியர்.
    Next Story
    ×