search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    உங்களைக் காயப்படுத்துகிறவர்களுக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள்
    X

    உங்களைக் காயப்படுத்துகிறவர்களுக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள்

    “உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்” என்ற போதனைகளை அறியாதோர் இருக்க முடியாது.
    ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மலைப்பிரசங்கத்தை அறியாதவர்கள் இருக்க முடியாது என்று சொல்லலாம். ஒருவேளை மலைப்பிரசங்கத்தையும் அதில் காணப்படும் ஒரு சில போதனைகளையும் முழுமையாக சிலர் அறியாமலிருக்கலாம்.

    ஆனால், “உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்” என்ற போதனைகளை அறியாதோர் இருக்க முடியாது.

    ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த வாக்கியங்களைக் கூறியபிறகு, “உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம் பண்ணுங்கள்” என்கிறார்.

    ‘நிந்திக்கிறவர்கள்’ என்கிற வார்த்தை காயப்படுத்துவதை, அல்லது புண்படுத்துவதைக் குறிக்கிறது. காயப்படுவதும், புண்படுவதும் நம்மில் அநேகர் அனுதினமும் வாழ்க்கையில் அனுபவிக்கும் ஒரு கொடுமை என்று சொல்லலாம்.

    நம்முடைய கருத்துக்கு எதிர் கருத்துக்கொண்டவர்கள், நமது வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படுகிறவர்கள், நமது ஒழுக்கமான வாழ்க்கையை வெறுப்பவர்கள், நம்மைப் பகைக்கிறவர்கள், நமது உயர்வை, அல்லது வெற்றியை விரும்பாதவர்கள் என நம்மைக் காயப்படுத்தும் மக்கள் அநேகர் உண்டு.

    அப்படிப்பட்டவர்கள் நாம் பணிபுரியும் இடங்களில் இருக்கலாம், பயிலும் இடங்களில் இருக்கலாம், பக்கத்து வீட்டில், அல்லது எதிர்வீட்டில் வசிக்கலாம். ஏன், நம் வீட்டிலும், குடும்பத்திலும்கூட இப்படிப்பட்டவர்கள் காணப்படலாம். இவர்கள் தங்களது சொல்லாலும் செயலாலும் நம்மை எப்போதும் காயப்படுத்திக்கொண்டே இருக்கலாம்.

    உலகத்தில் வழக்கமாக இரண்டு வகை மக்கள் உண்டு. முதலாவது, தங்களை நேசிக்கிறவர்களையும், காயப்படுத்துபவர்கள், அல்லது புண்படுத்துபவர்கள். இரண்டாவது, தங்களைக் காயப்படுத்துகிறவர்களைக் காயப் படுத்து பவர்கள்.

    ஆனால், தம்மைப் பின்பற்றுகிறவர்கள் மூன்றாவது வகையாக இருக்கவேண்டுமென்று ஆண்டவர் இயேசு விரும்புகிறார். அது என்னவெனில், தம்மைக் காயப்படுத்துகிறவர் களுக்காகப் பிரார்த்தனை செய்வது.

    இவ்வாறு செய்யமுடியுமா? என்கிற கேள்வி ஒரு சிலருக்குள் எழும்பலாம். இப்படிச் செய்வது மிகவும் சிரமமான ஒன்றுதான். ஆயினும், நம்மால் இயலாத ஒன்றல்ல.

    ஏனெனில், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தம்மைக் காயப்படுத்தின, புண்படுத்தின மக்களை மன்னித்து, நமக்கு நல்ல மாதிரியை முன்வைத்துப் போயிருக்கிறார். என்னைக் காயப்படுத்துகிறவர்களுக்காக நான் பிரார்த்தனை செய்வதால் எனக்கென்ன நன்மை என்று சிலர் நினைக்கலாம்.

    முதலாவது, அப்படிப்பட்டவர்களுக்காக நாம் பிரார்த்தனை செய்யும்போது அவர்களுக்கு விரோதமாக நம்முடைய மனதில் காணப்படும் எரிச்சல், கோபம் மறைவது மட்டுமன்றி, அவர்கள் செய்த, அல்லது பேசின காரியத்துக்காக பழிவாங்க வேண்டும் என்கிற தீமையான எண்ணம் நம்மைவிட்டு அகலுகிறது.

    மனிதனுக்குள் காணப்படும் “நான்”, “சுயம்”, “பெருமை” போன்ற எண்ணங்களே வழக்கமாக பதிலடி கொடுக்கும்படி அவனைத் தூண்டுகிறது.

    ஆனால், ஆண்டவராகிய இயேசு, “நீ தீமையினால் வெல்லப்படாமல், தீமையை நன்மை யினால் வெல்லு” என்று கூறுகிறார்.

    நம்மைக் காயப்படுத்துகிறவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வதைப்போன்ற ஒரு நன்மை இருக்கமுடியுமா? நீங்களே சிந்தித்துப் பாருங்கள்.

    இப்படிப்பட்ட நன்மையை நம்மைக் காயப்படுத்துகிறவர்களுக்காகச் செய்யும்போது, அந்த நன்மையின் பலனை நாம் நிச்சயம் அனுபவிப்போம். அதுமட்டுமல்ல, அப்படிப்பட்ட செயல் நமக்குச் சமாதானத்தையும், மகிழ்ச்சியையும் கொடுப்பது மட்டுமன்றி, நமது அன்றாட அலுவல்களில் தீவிர கவனம் செலுத்தவும் உதவும்.

    இரண்டாவதாக, நம்மை நிந்திக்கிறவர்களுக்காக, துன்புறுத்துகிறவர் களுக்காக, வேதனைப்படுத்துகிறவர்களுக்காக, காயப்படுத்துகிறவர் களுக்காக, புண்படுத்துகிறவர்களுக்காக நாம் வேண்டிக்கொள்ளும்போது நம்முடைய பரம தகப்பனைப்போல நடந்துகொள்ளுகிறோம் என்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கூறுகிறார்.

    சுருக்கமாகச் சொன்னால், இறைவனின் பிள்ளைகள் அவருடைய குண லட்சணங்களை வெளிக்காட்டவேண்டும் என்று ஆண்டவர் இயேசு கூறுவதைக் காண்கிறோம்.

    பரம தகப்பனுடைய தன்மைகளை நாம் வெளிப்படுத்தி வாழும்போது, நமது வாழ்வு செழிக்கிறது. நாம் வாழும் உலகம் நம்மால் நன்மையடைகிறது. எல்லாவற்றுக்குமேலாக, கடவுளின் திருநாமம் எல்லாராலும் போற்றப்படுகிறது.

    ஜோசப் வில்லியம், சென்னை-106
    Next Story
    ×