search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தவக்கால சிந்தனை: புனித வெள்ளி
    X

    தவக்கால சிந்தனை: புனித வெள்ளி

    இந்த தவகாலங்களில் நாம் எடுத்த தீர்மானத்தின் படி ஒரு புது மனிதனாக, புதிய வாழ்க்கையோடு மரித்த இயேசு உயர்த்தெழுந்த நாளை ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாட தேவன்தாமே கிருபை செய்வாராக ஆமென்.
    இந்த உலகில் வாழும் எல்லா மனிதர்களுமே இன்றைக்கு எதையோ நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் சூழ்நிலை நிலவுகிறது.

    ஆம், தேவ பிள்ளைகளே நாம் இந்த உலகத்தில் எதை பெற்றுக்கொண்டாலும் நம்முடைய வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் தான் வாழ்ந்து கொண்டிருக்கி றோம். யோவான்: 14-6-ல் இயேசுவே வழியும், சத்தியமும், ஜீவனுமாய் இருக்கிறார் என்று சொல்லப்பட்டுள்ளது. எனவே எந்த ஒரு மனிதனும் இந்த மாயமான உலக காரியங்களை விட்டு கடவுளை தேடும் போது, அவனுக்கு புது வாழ்க்கையை பரலோகத்தில் இயேசுவோடு நித்திய, நித்தியமான வாழ்க்கையை பெற முடியும். எரிகோ பட்டணத்தில் சகேயு என்ற மனிதன் வரி வசூல் செய்பவனும், மிகவும் செல்வந்தனாகவும் இருந்தான்.

    அப்போது இயேசு எரிகோ பட்டணத்திற்கு சென்ற போது அவரை எப்படியாவது பார்க்க நினைத்தான். அப்போது சகேயு மிகவும் குள்ளமாக இருந்தபடியால் அங்கிருந்த காட்டத்தி மரத்தின் மீது ஏறி இயேசு வருவதை தேடிக் கொண்டிருந்தான். அப்போது அவன் அருகில் வந்த இயேசுவோ, மரத்தின் மேல் இருந்த சகேயுவை பார்த்து, கீழே இறங்கி வா, இன்றைக்கு உன் வீட்டிலே தங்க வேண்டும் என்று கூறினார். ஆனால் அங்கிருந்தவர்கள் இவன் எவ்வளவு பாவம் செய்தவன், இவனுடைய வீட்டில் இயேசு தங்க வேண்டும் என்று கூறுகிறாரே என்று முனுமுனுத் தார்கள்.

    அப்போது சகேயு இயேசுவிடம் என் ஆஸ்தியில் பாதியை ஏழைகளுக்கு கொடுத்து விடுகிறேன். மேலும் நான் யாரிடமாவது அறியாமல் வாங்கினது உண்டானால் அதையும் 4-ந்தவணையாக திருப்பி கொடுத்து விடுகிறேன் என்று தன் பாவத்தை உணர்ந்தவனாய், இயேசுவிக்கு தன் மனதிலேயும், வீட்டிலேயும் இடம் கொடுத்தான். என்ன ஒரு மனமாற்றம் பாருங்கள். உடனே இயேசுவும் சகேயுவை பார்த்து, இந்த வீட்டிற்கு ரட்சிப்பு வந்தது என்று சொல்கிறார். இதைப்பார்த்த சகேயுவுக்கு மனதிலே சந்தோஷம் தாங்க முடியவில்லை அன்றிலிருந்து தன் பழைய பாவ வாழ்க்கையை விட்டு விட்டு புது வாழ்க்கை வாழ ஆரம்பித்தான்.இந்த நாட்களில் சகேயுவை போல இயேசுவை காண நாமும் தேடுகிறோமா? அல்லது இந்த பாவ உலகில் ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறோமா? என்று சிந்தித்து பார்க்க வேண்டும்.

    இயேசு இந்த உலகத்தில் பல்வேறு பாடுகளை பட்டு கல்வாரி சிலுவையிலே மரித்தார். இதை நினைவு கூறும் தினமாக இன்று புனித வெள்ளியாக அனுசரிக்கிறோம். இயேசு சிலுவையில் சொன்ன 7 வார்த்தைகளை பற்றி ஒவ்வொரு கிறிஸ்தவர்களும் தியானிக்க இருக்கிறோம். இப்படி இந்த நாளில் மட்டும் தியானித்து விட்டு அதை அப்படியே விட்டு விடாமல் நம்முடைய வாழ்க்கையில் அதை கடைபிடித்து இயேசுவுக்கு கீழ்படிந்த பிள்ளைகளாக நம்முடைய வாழ்க்கையை மாற்றுவோம்.

    எனக்காக அவர் மரித்து விட்டார். நான் இனி தேவனுடைய பிள்ளை என்று இன்றே தீர்மானம் எடுப்போம். இயேசுவை நாம் காண வேண்டும் என்று முழு மனதோடு அவரை தேடி இன்றுமுதல் நம்முடைய புது வாழ்க்கையை தொடங்குவோம். அப்போது நம்முடைய வாழ்விலும் இயேசு வருவார். நம்முடைய வீட்டிலும் தங்குவார். எனவே தேவ பிள்ளைகளே இந்த தவகாலங்களில் நாம் எடுத்த தீர்மானத்தின் படி ஒரு புது மனிதனாக, புதிய வாழ்க்கையோடு மரித்த இயேசு உயர்த்தெழுந்த நாளை ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாட தேவன்தாமே கிருபை செய்வாராக ஆமென்.

    சகோ.ஜாஸ்பர் பிலிப், திருப்பூர்.
    Next Story
    ×