search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கிறிஸ்தவ ஆலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி இன்று மாலை நடக்கிறது
    X

    கிறிஸ்தவ ஆலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி இன்று மாலை நடக்கிறது

    பெரிய வியாழனை முன்னிட்டு கிறிஸ்தவ ஆலயங்களில் பக்தர்களின் பாதம் கழுவும் நிகழ்ச்சி இன்று மாலை நடக்கிறது.
    கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பெருவிழா வருகிற 21-ந் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கடந்த 14-ந் தேதி குருத்தோலை திருநாள் கொண்டாடப்பட்டது. அன்று முதல் ஈஸ்டர் பெருவிழா வரை புனித வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

    இந்த புனித வாரத்தில் பெரிய வியாழன் முக்கிய நாளாக அனுசரிக்கப்படுகிறது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு இறப்பதற்கு முந்தைய நாள் தன்னுடைய 12 சீடர்களுடன் பாஸ்கா விருந்து (கடைசி இரவு உணவு) உண்டார். அப்போது அவர் ஒரு துண்டை எடுத்து தனது இடுப்பில் கட்டிக்கொண்டு 12 சீடர்களின் பாதங்களை தண்ணீரால் கழுவினார்.

    பின்னர் அவர் “நான் செய்தது போல் நீங்களும் செய்யுமாறு உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்” என்று தனது சீடர்களிடம் கூறினார். அதன் நினைவாக இன்று கிறிஸ்தவ ஆலயங்களில் 12 பக்தர்களின் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடக்கிறது. இன்று மாலை நடைபெறும் சிறப்பு வழிபாடுகளில் ஆயர்கள், பங்கு அருட்பணியாளர்கள் இயேசுவின் 12 சீடர்களை குறிக்கும் வகையில் 12 பேரின் பாதங்களை கழுவுகிறார்கள்.

    மேலும் பாஸ்கா விருந்து அன்று இயேசு கிறிஸ்து அப்பத்தை எடுத்து இறைபுகழ் கூறி “இது என் உடல். இதை வாங்கி உண்ணுங்கள்” என்றும், திராட்சை ரசம் நிறைந்த கிண்ணத்தை எடுத்து “இது என் ரத்தம். இதை வாங்கி குடியுங்கள்” என்றும் கூறி சீடர்களிடம் கொடுத்தார்.

    இதனால் இயேசு கிறிஸ்து நற்கருணையை ஏற்படுத்திய புனித நாளாக பெரிய வியாழன் கருதப்படுகிறது. எனவே இன்று பாதம் கழுவும் சடங்கு முடிந்த பின்பு ஆலயங்களில் நள்ளிரவு வரை நற்கருணை ஆராதனை நடைபெறும். பெரிய வியாழனான இன்று மாலை நடைபெறும் திருப்பலியில் ‘உன்னதங்களிலே’ என்ற பாடல் பாடப்படும் போது ஆலய மணிகள் ஒலிக்கப்படும். அதன் பிறகு ஈஸ்டர் நள்ளிரவு திருப்பலி வரை ஆலய மணிகளோ அல்லது இசைக்கருவிகளோ ஒலிக்காது. மீண்டும் இயேசுவின் உயிர்ப்பின் போதுதான் அவை ஒலிக்கும்.
    Next Story
    ×