search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கடவுளைப் பின்பற்றுவோம்
    X

    கடவுளைப் பின்பற்றுவோம்

    கடவுளோடு இணைந்த வாழ்வு வாழ முற்படுவோம். தன்னலம் துறந்தவர்களாய், எதையும் இழக்கத் துணிந்தவர்களாய், காரணங்கள் கூறி காலந்தாழ்த்தாமல் கடவுளைப் பின்பற்றுவோம்.
    திருமுழுக்கு யோவான் கைது செய்யப்பட்ட பின் ஆண்டவர் இயேசு கிறிஸ்து கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றுவதற்காக கலிலேயாவிற்கு வந்தார். அங்கு கலிலேயா கடலோரமாகச் சென்றபோது சீமோன் பேதுருவையும், அவர் சகோதரனான அந்திரேயாவையும் கண்டார்.

    இருவரும் மீனவர்கள். இவர்கள் மீன்களைப் பிடிப்பதற்காக கடலில் வலைகளை வீசிக்கொண்டிருந்த பொழுது, இறைமகன் இயேசு அவர்களைப் பார்த்து, ‘என் பின்னே வாருங்கள் நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்’ என்றார்.

    உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.

    பின்னர், சிறிது தூரம் போகவே யாக்கோபையும், அவர் சகோதரனான யோவானையும் கண்டார். இருவரும் செபதேயுவின் குமாரர்கள். இவர்களும் மீனவர்கள். இவர்கள் மீன்பிடிக்கப் போகிறதற்கு ஆயத்தமாக படகில் வலைகளைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

    ஆண்டவர் இயேசு அவர்களையும் அழைத்தார். அவர்களும் தங்கள் தகப்பன் செபதேயுவைக் கூலியாள்களோடு படகில் விட்டுவிட்டு அவர் பின்சென்றார்கள்.

    முதல் சீடர்களை அழைத்தல்

    நற்செய்தி மறைபரப்பு பணியின் வழியாக இறையரசின் வருகையைக் குறித்து இறைமகன் இயேசு மக்களுக்கு எடுத்துரைக்கிறார். இறையரசைப் பற்றிய அறைகூவலுக்குப் பின்பு, தன்னைப் பின்பற்ற அழைப்பு விடுவிக்கிறார். இது நற்செய்தியின் முக்கிய பாகம் சீடத்துவம் என்பதை வெளிப் படுத்துகிறது.

    கலிலேயாக் கடல் என்பது சிலரால் ஏரி என அழைக்கப்படுகிறது. ஆனால், பாலஸ்தீன கிறிஸ்தவ மரபில் கடல் என உள்ளதால் மாற்கு நற்செய்தியாளரும் அதனையேப் பின்பற்றினார்.

    இறைமகன் இயேசு சீடர்களை அழைத்த வரலாற்றைப் பார்க்கையில் அழைக்கப்பட்டவர்கள் ஆண்டவருக்கு முன்பின் அறிமுகமற்றவர்கள் போல் தோன்றுகிறது. இது இயேசுவுக்கு மனிதர் மேல் இருந்த அளவற்ற அதிகாரம் எவ்வித கேள்வியுமின்றி ஏற்றுக்கொள்ளப்படுவதே இப்பகுதியின் சிறப்பாகும்.

    என் பின்னே வாருங்கள்

    மீன் பிடிக்கிறவர்கள் மனிதரைப் பிடிக்கிறவர்களாகும்படி அழைக்கப்படுகின்றனர். ‘பின்னே வாருங்கள்’ என்பது சீடத்துவத்தின் முக்கியத் தொடர் ஆகும்.

    யூத ரபிமார்கள் தங்களது சீடர்கள் பின்வர அழைப்பு விடுத்தனர். இது இந்திய சமயங்களிலுள்ள குரு, சீடர் உறவினைக் குறிக்கும். திருச்சபையின் ஆரம்பம் இதுவே.

    ‘மனிதர்களைப் பிடிக்கிறவர்களாக்குவேன்’ (எரேமியா 16:16) என்ற தொடரை பழைய ஏற்பாட்டிலும் காணலாம். சீடர்களின் வாழ்வில் ஏற்படும் மனந் திரும்புதலை இப்பகுதி சித்தரிப்பதாகும்.

    பேதுரு, அந்திரேயா இருவரும் தனது சொந்த வருமானம் தரும் பணியினை விட்டுவிட்டு குருவாகிய இயேசு தரும் பணியினை மேற்கொள்கின்றனர்.

    யோவான், யாக்கோபு இருவரும் பேதுரு, அந்திரேயாவை விட அதிகமான செல்வம் உடையவர்கள் போல் தோன்றுகிறது. ஏனெனில் அவர்கள் தங்கள் வலைகளையும், படகுகளையும் மட்டுமல்ல, கூலியாள்களோடு தங்களுடைய தந்தையையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றுகின்றனர் (மாற்கு1:20).

    இதன் மூலம் சீடர்கள் வேறுபாடின்றி அனைவரும் இயேசுவைப் பின்பற்றுவதில் வெளிப்படுத்திய தியாகத்தைக் காணலாம்.

    பின்பற்றுதலின் முறைகள்

    1. சிலுவையை எடுத்துக்கொண்டு பின்பற்றுதல்: தம்மிடம் வந்த மக்களிடம் இயேசு, ‘என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும்’ (லூக்கா 9:23) என்கிறார்.

    2. உைடமைகளை பகிர்ந்துவிட்டு பின்பற்றுதல்: ஆண்டவர் இயேசுவைப் பின்பற்ற விரும்பிய செல்வரான இளைஞரிடம் இயேசு, ‘நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய், உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்பொழுது விண்ணத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்’ என்றார் (மத்தேயு 19:21).

    3. உடனடியாகப் பின்பற்றுதல்: இறைமகன் இயேசுவைப் பின்பற்ற விரும்பியவர்களிடம் இயேசு, ‘என்னைப் பின்பற்றி வாரும்’ என்கிறார். ‘என் தந்தையை அடக்கம் செய்துவிட்டு வருகிறேன்’ என அனுமதி கேட்டவரிடம் இயேசு, ‘கலப்பையில் கை வைத்த பின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல’ என்கிறார் (லூக்கா 9:62).

    பின்பற்றுதலின் ஆசிகள்

    ‘நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே, எங்களுக்கு என்ன கிடைக்கும்?’, என்று கேட்ட சீடர்களிடம் ஆண்டவர் இயேசு, ‘புதுப்படைப்பின் நாளில் மானிட மகன் தமது மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். அப்போது என்னைப் பின்பற்றிய நீங்களும் இஸ்ரவேல் மக்களின் பன்னிரு குலத்தவருக்கும் நடுவர்களாய்ப் பன்னிரு அரியணையில் வீற்றிருப்பீர்கள் என உறுதியாய் உங்களுக்கு சொல்லுகிறேன்’ என்றார் (மத்தேயு 19:27,28).

    கடவுளைப் பின்பற்றுவோம்

    மனிதனின் வாழ்க்கைத்தரமும், வசதி வாய்ப்புகளும் உயர உயர சுயநலமும், ஆடம்பரத்தின் மீதான மோகமும் அதிகரித்துக் கொண்டே போகிறது. பணம், பதவி, பொருள் அனைத்தும் மனித வாழ்விற்கு அவசியமானதே.

    ஆனால், இவை யாவும் நம்மிடம் நிலைப்பதில்லை. இவைகளை கடவுளுக்கு மேலாகக் கருதுவதும், இந்த ஆசைகளை விட்டுவிட முடியாமல் இறுகப் பற்றிப்பிடித்துப் பின்பற்றுவதும் நமக்கு கடவுள் அருளிய ஆசீர்வாத வாழ்வை கேள்விக்குறியாக்கி விடும்.

    கடவுளோடு இணைந்த வாழ்வு வாழ முற்படுவோம். தன்னலம் துறந்தவர்களாய், எதையும் இழக்கத் துணிந்தவர்களாய், காரணங்கள் கூறி காலந்தாழ்த்தாமல் கடவுளைப் பின்பற்றுவோம்.

    ‘நீங்கள் கடவுளின் அன்பார்ந்த பிள்ளைகளாய் அவரைப் போல் ஆகுங்கள்’ (எபேசியர் 5:1).

    அருட்பணி.ம.பென்னியமின், தூய பவுல் லுத்தரன் ஆலயம், உண்ணாமலைக்கடை.
    Next Story
    ×