search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஒப்பற்ற செல்வம் இயேசு
    X

    ஒப்பற்ற செல்வம் இயேசு

    வாழ்வும், வழியும், உண்மையுமாகிய இயேசுவின் வழியில் நடக்கின்ற போது, எதிர்வரும் துன்பங்களையும், சிலுவைகளையும் மனஉறுதியோடு ஏற்போம்.
    இயேசுவை பற்றிய அறிவே இவ்வுலகச்செல்வங்களை விட மேலானது என்பது தூய பவுலடியாரின் ஆழமான நம்பிக்கை. இயேசுவை அறிதல் என்பது, அறிவு சார்ந்த ஒன்றாக மட்டுமல்லாது, அது அவரோடு இணைந்த அனுபவமாகவும் அமைய வேண்டும். அத்தகைய அனுபவத்தின் மூலமாகத்தான் துச்சமென அனைத்தையும் நாம் தூக்கி எறிய முடியும்.

    தூய பவுலடியார், இயேசு குறித்து கொண்டிருந்த அறிவு அனுபவப்பூர்வமானது. “நீ துன்புறுத்தும் இயேசு நானே” (தி.ப. 9:5) என்ற ஆண்டவரின் வார்த்தையை கேட்டு தூய பவுலடியார் மனம் மாறினார். கிறிஸ்துவின் மீது தான் கொண்டிருந்த நம்பிக்கைக்காக பல்வேறு துன்பங்களை ஏற்றுக்கொண்டார். சிறையில் அடைத்த போதும், சாட்டையால் அடிக்கப்பட்ட போதும், கல்லெறியப்பட்டபோதும், கப்பல் சிதைவில் சிக்கிய போதும், சொந்த மக்களாலும், பிற மக்களாலும் இடர்களுக்கு ஆளானபோதும் அவர் மனந்தளரவில்லை. மாறாக, தாம் பெற்றிருந்த அழைப்பில் உறுதியாக நின்று, இயேசுவின் உயிருள்ள சாட்சியாக வாழ்ந்தார்.

    இயேசுவுடன் அவர் கொண்டிருந்த ஆழமான உறவு, இயேசுவின் தோழமையை, தாழ்ச்சியை, தன்னையே அர்ப்பணித்ததை அவருக்கு தெளிவாக உணர்த்தியது. ஆகவேதான், தான் பற்றிக்கொண்டிருந்த அனைத்தையும் அவர் இழக்க முன் வருகிறார். கிறிஸ்துவை அறிந்து கொள்ள முயலும் போது ஏற்படும் எந்த இழப்பும், குப்பைக்கு சமமானதாக கருதினார் தூய பவுலடியார்.

    இந்த தவக்காலத்தில் உண்மையான செல்வமாகிய இயேசுவின் மீது நமது மனங்களை திருப்ப நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். நிலையற்றவைகளில் நமது பற்றினை களைந்து, நிலையானவற்றில் பற்று கொள்ள நம்மை தூண்டும் காலம் இது. புகழ், பதவி, பணம் இவற்றில் நம்பிக்கை கொள்ளாமல் வாழ்வில் வரும் சிலுவைகளை சுமந்து கொண்டு, அவருக்கு உண்மையான சாட்சிகளாக வாழ முற்படுவோம்.

    இயேசுவோடு இணைந்திருந்து அவரின் உடனிருப்பை உணர்வோம். வாழ்வும், வழியும், உண்மையுமாகிய இயேசுவின் வழியில் நடக்கின்ற போது, எதிர்வரும் துன்பங்களையும், சிலுவைகளையும் மனஉறுதியோடு ஏற்போம். ஏனெனில் நம் ஆண்டவர் நம்பிக்கைக்கு உரியவர். ஆகவே மனமாற்றம் பெற்று புதுவாழ்வு வாழ இத்தவக்காலம் நமக்கு உறுதுணையாக இருக்கட்டும்.

    அருட்பணி. தா.சகாயராஜ், பங்குத்தந்தை, மேற்கு மரியநாதபுரம், திண்டுக்கல். 
    Next Story
    ×