search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    குரு ஜான் ஜோசப் ஸ்டேனிஸ் சாம்பல் வழங்கிய போது எடுத்த படம்.
    X
    குரு ஜான் ஜோசப் ஸ்டேனிஸ் சாம்பல் வழங்கிய போது எடுத்த படம்.

    கிறிஸ்தவ ஆலயங்களில் ‘சாம்பல் புதன்' சிறப்பு பிரார்த்தனை

    கோவையில் கிறிஸ்தவ ஆலயங்களில் சாம்பல் புதன் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. கொரோனா அச்சம் காரணமாக அனைவரும் முக கவசம் அணிந்து இருந்தனர்.
    இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட தினத்தை புனித வெள்ளி யாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கின்றனர். இதனை தொடர்ந்து சிலுவையில் அறையப்பட்ட 3-வது நாளில் இயேசு உயிர்த்தெழுந்த தினம் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அதற்கு முந்தைய 40 நாட்களை, இயேசுவின் சிலுவைப்பாடுகளை நினைவு கூறும் வகையில் தவக்காலமாக கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கின்றனர்.

    இந்த தவக்காலத்தின் தொடக்கமாக கோவையில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் நேற்று காலை சிறப்பு பிரார்த்தனை, திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். கொரோனா அச்சம் காரணமாக அனைவரும் முக கவசம் அணிந்து இருந்தனர்.

    கோவை பெரியகடை வீதியில் உள்ள புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் நேற்று காலை தவக்கால தொடக்க திருப்பலி மற்றும் சிறப்பு பிரார்த்தனை மறை மாவட்ட முதன்மை குரு ஜான் ஜோசப் ஸ்டேனிஸ் தலைமையில் நடைபெற்றது. மாலையில் மறை மாவட்ட பிஷப் தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் நடைபெற்றது.

    இதில் ஆலய பங்கு குரு ஜான் தனசேகரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆண்டுதோறும் சாம்பல் புதனை குறிக்கும் வகையில் கிறிஸ்தவர்களின் நெற்றியில் சாம்பல் கொண்டு சிலுவை அடையாளம் இடப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்று அச்சம் காரணமாக சாம்பல் கையில் வழங்கப்பட்டன. அதன்பின்னர் கிறிஸ்தவர்கள் தங்களது நெற்றியில் அந்த சாம்பலை கொண்டு சிலுவை அடையாளமிட்டனர்.“மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய், மண்ணுக்கே திரும்புவாய் மறவாதே“ என்பதை நினைவுபடுத்தி இந்த நிகழ்ச்சி நடந்தது.

    இதேபோல் சேரன்மாநகர் வேளாங்கன்னி ஆலயத்தில் பாதிரியார்கள் லாரன்ஸ், தேவதாஸ் தலைமையில் திருப்பலி நடந்தது. கோவை புலியகுளம் புனித அந்தோணியார் ஆலயத்தில் பாதிரியார் ராயப்பன் தலைமையிலும், ராமநாதபுரம் உயிர்த்த ஆண்டவர் ஆலயத்தில் பாதிரியார்கள் உபகாரம்,ஜெரோம் தலைமையிலும், மற்றும் காட்டூர் கிறிஸ்து அரசர் ஆலயம், கோவைப்புதூர் குழந்தை ஏசு ஆலயம் உள்ளிட்ட கிறிஸ்தவ ஆலயங்களில் சாம்பல் புதன் திருப்பலி நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து தவக்காலத்தையொட்டி ஆலயங்களில் சிலுவைப்பாதை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. தொடர்ந்து வருகிற ஏப்ரல் 2-ந் தேதி புனித வெள்ளியும், 4-ந் தேதி ஈஸ்டர் பண்டிகையும் நடைபெறுகிறது.
    Next Story
    ×