என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    கடந்த காலங்களில் செய்தவை அனைத்தையும் மறந்துவிட்டு, வருகின்ற காலங்களில் இறைவனுக்கு உகந்தவர்களாக வாழ அழைப்பு கொடுக்கப்படுகிறது.
    மனம் மாறுங்கள் புதுவாழ்வு பெறுங்கள் என்ற செய்தி நம் இதயங்களுக்கு ஆறுதல் தருகின்ற, நம்பிக்கையை ஊட்டுகின்ற செய்தியாக இருக்கிறது. அதாவது கடந்த காலங்களில் செய்தவை அனைத்தையும் மறந்துவிட்டு, வருகின்ற காலங்களில் இறைவனுக்கு உகந்தவர்களாக வாழ அழைப்பு கொடுக்கப்படுகிறது. முன்பு நடந்தவற்றை மறந்துவிடுங்கள்.

    இதோ புதுச்செயல் செய்கிறேன் ( எசா 43:18-19) என பழைய வாழ்க்கை தவறுகளை கணக்கு பார்த்துக் கொண்டு இருக்காமல், அனைத்து கடன்களையும் அழித்துவிட்டு, புதுபயணம் தொடர அழைப்பு விடுக்கிறார். நன்மைகளையே செய்தேன், உன் வாழ்வில் புதுமைகளையே கொடுத்தேன் (எசா 43:11-12, 16-17) என தன் பங்கை பட்டியலிட்டு, தீமைகளையே வாழ்வாகக் கொண்டிருந்தீர்கள் என நம் தவறுகளை சுட்டிக் காட்டினாலும் (எசா 43:22-28) முன்பு நடந்தவற்றை மறந்துவிடுங்கள் (எசா 43:18) எனும் ஒரு வார்த்தையில் தன் தாயுணர்வையும், தந்தைக்குரிய பரிவையும் இறைவன் காட்டுகிறார்.



    * சமாரியப் பெண்ணின் பழைய வாழ்வு பாவ வாழ்வு, விபசார வாழ்வு. ஆயினும் வாழ்வுதரும் தண்ணீர் வழியாக புதுவாழ்வு பெற்று புதுபடைப்பாகின்றார் (யோவா 4:1-26)

    * பாவியான பெண்ணொருத்தி தனது கண்ணீரால் ஏசுவின் பாதங்களை கழுவி, கூந்தலால் துடைத்து தைலம் பூசி முத்தம் கொடுத்ததாக பார்க்கின்றோம். இங்கே தனது கடந்த கால வாழ்வை மறந்து, கடந்து புதுவாழ்வு வாழ்கிறார்.

    * எப்படியும் வாழலாம் என வாழ்ந்து ஏழைகளை சுரண்டி வாழ்ந்த சக்கேயு, ஏசுவை சந்தித்த மறுகனமே மறுவாழ்வு பெற்று புதுபடைப்பாகின்றார்.

    * யாரிடம் செல்வோம் இறைவா வாழ்வுதரும் வார்த்தைகள் உம்மிடம் தானே உள்ளன என விசுவாசஅறிக்கையிட்ட பேதுருகூட ஏசுவை மறுதலிக்கிறார். ஆயினும் பழையது மறந்து கண்ணீர் வடித்து, மனம் மாற்றம் பெற்று புதுபடைப்பாக மாறுகிறார்.

    * கடந்த வாழ்வைப் பற்றி கவலைப்பட வேண்டாம். மறந்துவிடுங்கள். புதுப்படைப்பாக மாற முயலுங்கள் என்கிறார். எனவே பாவம் செய்துவிட்டேனே என மனதை குத்திக் கொண்டிராமல், அவைகளை களைந்துவிட, மனம் வருந்தி மீண்டும் கிறிஸ்துவில் புதுப்படைப்பாக மாற தொடர்ந்து முயல்வோம்.

    -அருட்தந்தை அல்போன்ஸ், பூண்டி
    உப்பளம் புனித சவேரியார் ஆலய ஆண்டு பெருவிழாவினை முன்னிட்டு விழாவின் 9-ம் நாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு புனித சவேரியார் ஆடம்பர தேர் பவனி நடக்கிறது.
    புதுவை உப்பளம் புனித பிரான்சிஸ்கு சவேரியார் பங்கு ஆலய ஆண்டு பெருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    ஆண்டு விழாவையொட்டி தினந்தோறும் காலையில் திருப்பலியும், மாலையில் தேர்பவனியும் நடந்தது. இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு திருப்பலி நடந்தது. தொடர்ந்து இன்று மாலை 5.30 மணிக்கு சிலுவைப்பாதை, தேர்பவனி ஆகியவை நடந்தது.

    விழாவின் 9-ம் நாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு பங்குதந்தை ஆரோக்கிய நாதன் பெருவிழா திருப்பலி நடத்துகிறார். அன்றைய தினம் மாலை 5.30 மணிக்கு புதுவை-கடலூர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர் கூட்டு பாடல் திருப்பலி நடத்துகிறார்.

    இரவு 7 மணிக்கு புனித சவேரியார் ஆடம்பர தேர் பவனி நடக்கிறது. மறுநாள் 13-ந்தேதி காலை 6 மணிக்கு திருப்பலிக்கு பின் கொடியிறக்கப்பட்டு விழா நிறைவடைகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை ஆலய பங்கு தந்தை மற்றும் பங்கு மக்கள் செய்துள்ளனர்.
    ‘ஆண்டவராகிய கடவுள் நிலத்தின் மண்ணால் மனிதனை உருவாக்கி, அவன் நாசிகளில் உயிர் மூச்சை ஊத, மனிதன் உயிர் உள்ளவன் ஆனான்’ என தொடக்கநூல் (2:7) கூறுகிறது.
    நாம் யாரோடு இணைந்திருக்கிறோம் என்பதை வைத்து, நாம் எப்படிப்பட்டவர்கள் என்பதை உலகம் அறிந்து கொள்ளும்.

    இறைமகன் இயேசுவோடு இணைந்திருந்தால் நமது வாழ்க்கையே அதை பறைசாற்றிவிடும். இயேசுவின் மரணம் உயிர்ப்புக்குப் பின்பு, சோர்ந்து கிடந்த சீடர்கள் துணிச்சலுடன் போதிக்க ஆரம்பித்தனர். அதைக் கன்டு தலைமைச் சங்கத்தினர் அதிர்ந்தனர்.

    “பேதுருவும் யோவானும் கல்வியறிவற்றவர்கள் என்பதைத் தலைமைச் சங்கத்தார் அறிந்திருந்ததால், அவர்களது துணிவைக் கண்டு வியப்படைந்தனர்; அவர்கள் இயேசுவோடு இருந்தவர்கள் என்பதையும் உணர்ந்து கொண்டனர்” (திருத்தூதர் பணிகள் 4:13) என்கிறது பைபிள்.

    இயேசு நமது வாழ்வின் துடிப்பாக, நமது வாழ்வின் பாடலாக இருக்கிறார். நமக்கு வாழ்வை வழங்குபவர் அவரே.

    ‘ஆண்டவராகிய கடவுள் நிலத்தின் மண்ணால் மனிதனை உருவாக்கி, அவன் நாசிகளில் உயிர் மூச்சை ஊத, மனிதன் உயிர் உள்ளவன் ஆனான்’ என தொடக்கநூல் (2:7) கூறுகிறது.

    வாழ்வு என்பது கடவுள் தருகின்ற கொடை, இறைவனைத் தவிர யாரும் அதைத் தர முடியாது.

    நமது வாழ்க்கை இறைவனை நோக்கி அமைய வேண்டும் என்பதற்காக தரப்பட்டவை தான் விவிலியத்திலுள்ள இறைவார்த்தைகள். இந்த இறைவார்த்தைகள் நம்மை இறைவன் விரும்பும் வாழ்க்கைக்குள் அழைத்துச் செல்கின்றன.

    பழைய ஏற்பாட்டில் இறைவாக்கினர்கள், நீதித்தலைவர்கள், அரசர்கள் போன்றோர் மக்களை ஒன்றிணைத்து இறைவனை நோக்கி மக்களை திருப்பினார்கள். இறைவாக்கினர்களின் முதன்மையான பணி அதுவாகத்தான் இருந்தது.

    தவறான வாழ்க்கையை விட்டு இறைவனுக்கு நேராக மக்களை வழி நடத்துவதும், நம்மை மீட்க மேசியா ஒருவர் வருவார் எனும் உறுதியை வழங்குவதுமே அவர்களின் போதனைகளின் மையம். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில், இறைவனுக்கு நேராய் மனுக்குலம் திரும்ப வேண்டும் என்பதே அவர்களுடைய இறைவாக்குகளின் மையம்.

    இறைவன் அதை விடப் பெரிய திட்டம் ஒன்றை வைத்திருந்தார். அதன் விளைவாக இறை மகன் இயேசுவை மனிதனாக உலகிற்கு அனுப்பினார். மனுக்குலம் தன்னை நோக்கி வருவதில் அல்ல, தானே மனுக்குலத்தை நோக்கிப் போவதில் அவருடைய உயரிய அன்பு வெளிப்பட்டது.

    மக்கள் கடவுளிடத்தில் வருவதில் அல்ல, கடவுள் மக்களிடத்தில் வருவதில் இறைவன் தரும் வாழ்வு அமைந்திருக்கிறது. கிறிஸ்துவில் இது முழுமையடைகிறது. ‘மானிட மகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்’ என விவிலியம் அதை விளக்குகிறது.

    கிறிஸ்துவுக்கு உள்ளே இருக்கும் போது தான் நமக்கு புதிய வாழ்வு கிடைக்கிறது. ‘ஒருவர் கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்போது அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராய் இருக்கிறார்’ (2 கொரி 7) என்கிறது விவிலியம்.

    கிறிஸ்துவுக்குள் இருப்பது நமது வாழ்க்கையை கனி தரும் வாழ்வாக மாற்றுகிறது. ‘ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது’ என்கிறார் இயேசு.

    கிறிஸ்தவர்கள் இறக்கும் போது, ‘அவர் கிறிஸ்துவுக்குள் வாழ்ந்து, கிறிஸ்துவுக்குள் இறந்திருக்கிறார்’ என்போம். ஒருவர் கிறிஸ்துவுக்குள் தான் இறந்திருக்கிறார் என்பதை உறுதிப்படுத்த அவர் வாழும் போது கிறிஸ்துவுக்குள் வாழ்ந்தாரா என்பதே அளவுகோலாகிறது.



    கிறிஸ்துவுக்குள் வாழ்வது என்பது புதியவாழ்வாகவும், கனி தரும் வாழ்வாகவும் அமை கிறது. கிறிஸ்துவில் வாழும்போது அந்த வாழ்க்கை நிலை வாழ்வாக மாறிவிடுகிறது.

    செடியில் நிலைத்திருக்கும் போது மட்டுமே திராட்சைச் செடி மிகுந்த கனி தருகிறது. கடவுள் கிளைகளைச் செப்பனிடுகிறார். தேவையற்றவற்றை நறுக்கி விடுகிறார். இது ஒரு வலி மிகுந்த செயல், ஆனால் இதுவே வலிமை மிகுந்ததாகவும், கனி மிகுந்ததாகவும் மாறிவிடுகிறது.

    நாம் செடியில் நிலைத்திருப்பதும், இறைவனால் செப்பனிடப்படுவதும், மிகுந்த கனி தருவதும் ஒரு நோக்கத்திற்காக. அதுவரை எனது வாழ்வை இறைவன் செப்பனிட்டுக் கொண்டே இருக்கிறார், சுத்திகரித்துக் கொண்டே இருந்தார்கள். இறைவனின் சித்தத்தை நிறைவேற்றி முடிக்க வேண்டும் என்பதற்காக.

    சமாரியப் பெண் ஒருவரை இயேசு சந்திக்கிறார். பிற இனத்தவரான அவரை மீட்புக்குள் அழைத்து வருகிறார். ‘நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கும் எவருக்கும் என்றுமே தாகம் எடுக்காது; நான் கொடுக்கும் தண்ணீர் அதைக் குடிப்பவருக்குள் பொங்கி எழும் ஊற்றாக மாறி நிலைவாழ்வு அளிக்கும்’ என்கிறார். நிலைவாழ்வுக்குள் அந்த பெண் இறைவனால் அழைத்து வரப்படுகிறார்.

    ஒரு தனி மனிதரை அங்கே இயேசு சந்திக்கிறார். அவரை மீட்புக்குள் கொண்டு வருகிறார். அவர் படிப்படியாக மீட்புக்குள் வருகிறார். முதலில் இயேசுவைப் பார்த்து ‘நீர் யூதர்; நானோ சமாரியப் பெண்’ என்கிறார். பின்பு ‘ஐயா’ என்று மரியாதைக்கு தாவுகிறார். அதன் பின் ‘நீர் ஓர் இறைவாக்கினர்’ என்கிறார். கடைசியில் ‘அவர் மெசியாவாய் இருப்பாரோ?’ எனும் கேள்வியை எழுப்பி, அவரை மெசியாவாய் ஏற்றுக் கொண்டு மீட்படைகிறார்.

    நாம் இறைவனோடு பயணிக்கும் பயணத்தில் இத்தகைய படிப்படியான மாற்றங்களை உணர்ந்து கொள்ள முடியும்.

    இலேகியோன் எனும் பேய் பிடித்தவனை சுகமாக்கச் செல்லும் போது பேய் அவரை நோக்கி, ‘இயேசுவே, உன்னத கடவுளின் மகனே, உமக்கு இங்கு என்ன வேலை?’ என கேள்வி எழுப்புகிறது.

    அவனுக்குள் இருந்த அத்தனை பேய்களின் விருப்பத்தையும் நிறைவேற்றும் கொடுமையான, அலைக்கழிக்கப்பட்ட வாழ்க்கை அந்த மனிதனுக்கு இருந்தது.

    இயேசு அவனை சந்தித்து அவனது வாழ்க்கையை மாற்றினார். பின் அவனை நோக்கி, ‘உம்முடைய வீட்டிற்குத் திரும்பிப்போம்; கடவுள் உமக்குச் செய்ததையெல்லாம் எடுத்துக் கூறும்’ என அவனை கனி கொடுப்பவனாகவும், ஒரு நோக்கத்தைச் செயல்படுத்தக் கூடியவனாகவும் மாற்றினார்.

    “இனி ‘நான்’ அல்ல, ‘கிறிஸ்துவே’ என்னில் செயலாற்றுகிறார்” எனும் பவுலின் வாசகம் போல உறுதியான பந்தமாய் மாற வேண்டும்.

    இத்தகைய மாற்றங்களை நமது வாழ்க்கையில் ஏற்றுக் கொள்வோம். புதுப்பிறப்பெடுப்போம், கனி கொடுப்போம், இறை நோக்கத்தை நிறைவேற்றுவோம். இறை ஆசீர் உங்களை நிரப்பட்டும்.

    ஞா.வெலிங்டன் ஜேசுதாஸ்,

    நல்மேய்ப்பர் ஆலயம், வேளச்சேரி, சென்னை.
    கிறிஸ்தவர்கள் தவக்காலத்தில் 40 நாட்கள் செபத்திலும், தவத்திலும் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு தர்மம் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.
    தவக்காலத்தில் நோன்பை கடைப்பிடித்தல் என்பது அவசியமானது. இஸ்லாமியர் ரம்ஜான் காலத்தில் 30 நாட்கள் நோன்பு இருக்கிறார்கள். அதுபோல யூதர்களும் சில நாட்கள் நோன்பு இருக்கிறார்கள். கிறிஸ்தவர்கள் தவக்காலத்தில் 40 நாட்கள் செபத்திலும், தவத்திலும் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு தர்மம் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    ஒருசந்தி, உபவாசம் இருக்க ஒவ்வொரு மதமும் வலியுறுத்தும் வழிமுறைகள் வெவ்வேறாக இருக்கிறது. ஆனால் நோக்கம் ஒன்றுதான். மக்கள் தவத்தின் அடையாளமாக செபமாலை அணிந்து, காவி உடை உடுத்துகிறார்கள். இந்து மதத்தில் திருப்பாவை வலியுறுத்துவது, “பால் உண்ணோம், நெய்யுண்ணோம்“. அவ்வாறு உண்ணாது இருக்கும் போது பசியின் அனுபவத்தை பெறுகிறோம். அந்த அனுபவம் பசியாக வாடுவோருக்கு உணவு கொடுக்க நம்மை தூண்டுகிறது. நோன்பின் உன்னதமான நிலையிது.



    பசித்தவர்க்கு உணவு கொடுக்கவில்லை என்றால் நாம் கடைபிடிக்கும் சடங்கு பயனற்றதாகும். அதுபோல ஆடை இல்லாதவர்களுக்கு ஆடை வழங்குதல் வேண்டும். ஏழைகள் மீது இரக்கம் காட்ட பயிற்சி பெற்று, இறைவன் திருவுளத்தை செபத்தால் தெரிந்து அதன்படி நடப்பது நோன்பின் உண்மைத்தன்மையின் வெளிப்பாடு. நம் வாழ்வின் நலனுக்காகவும், பிறர் வாழ்வின் நலனுக்காகவும் நாம் நோன்பைக் கடைபிடிப்போம்.

    நோன்பு என்பது உடல் நோய் நீங்க நல்லதொரு பயிற்சியாக இருக்கிறது. புலன்களை கட்டுப்படுத்தி இறைவனை நோக்கி பயணிக்க உதவுகிறது. சோதனைகளை எதிர்கொள்ள சக்தியை தருகிறது. தவக்காலத்தில் அதிகமாக உண்ணுதல், இன்பங்கள், சுகங்கள், பொழுது போக்குதலில் நேரத்தை, காலத்தை வீணாக்குவதை குறைத்து கொள்ள வேண்டும். அதுபோன்ற சூழல்கள், பொருட்கள், இடங்கள், ஆட்களை தவக்காலத்தில் தவிர்க்க வேண்டும்.

    இதுவே தவக்காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய அம்சங்களாகும். அதற்கான முயற்சியை மேற்கொள்வோம். இறையாசீர் பெறுவோம்.

    அருட்திரு. அமலதாஸ், பங்குத்தந்தை,

    நல்லமநாயக்கன்பட்டி.
    இயேசுவின் சிந்தனை இவ்வுலகத்தோடு முடிந்து விடுவதில்லை. விண்ணக வாழ்வை எடுத்துரைக்கின்றது. விண்ணக வாழ்வைத்தான், பேரின்ப வாழ்வு என்று நாம் கூறுகின்றோம்.
    ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயேசு பிரான் இவ்வுலகில் தோன்றினார் என்பது ஒரு வரலாற்று நிகழ்வாகும். அவரின் தோற்றமும் செயல்பாடுகளும், நற்செய்திகளாக எடுத்துரைக்கப்படுகின்றன. ‘மாற்கு’, ‘மத்தேயு’, ‘யோவான்’, ‘லூக்கா’ ஆகிய நற்செய்தியாளர்கள், இதை தெரிவித்துள்ளனர்.

    இயேசு பிரான் இவ்வுலகில் வாழ்ந்தபோது, பல அற்புதங்களைச் செய்தார் என்பதை, நற்செய்தி வாயிலாக அறிகிறோம்.

    ஏழை, எளிய மக்களோடு இயேசு பிரான் வாழ்ந்தார் என்பதுதான் அவரின் தனித்தன்மையாகும். அக்காலத்தில் வாழ்ந்த மக்களுக்கு அவர் உவமைகளை எடுத்துக் கூறி போதித்தார். உவமைகள் வழியாக, உண்மைகளை உணர்த்தினார். மக்களின் பாவங்களைப் போக்கி, அவர்களை மீட்டு, விண்ணுலகு செல்ல வழிகாட்டினார்.

    ‘இவர் யார்? இவர்தான் இறை மகன்’- இதுதான் கிறிஸ்தவத்தின் தத்துவம்.

    இயேசு பிரான் இவ்வுலகில் போதிக்கும்போது உவமைகளை எப்படிக் கையாண்டார் என்பதை நோக்குவோம்.

    இயேசு வழக்கம்போல, கடற்கரை ஓரம் சென்றார். மக்கள் கூட்டம் திரண்டிருப்பதைக் கண்டார். கடலில் நின்று கொண்டிருந்த ஒரு படகில் ஏறினார். அவருடைய பேச்சைக் கேட்க மக்கள் ஆர்வமுடன் இருந்தனர்.

    ‘இதோ! கேளுங்கள்...’ என்று பேச்சைத் தொடங்கினார்.

    “விதை விதைக்கும் ஒருவர் விதைக்கப் புறப்பட்டார். விதைகளை விதைத்தார். விதைக்கும்போது சில விதைகள் வழியோரத்தில் விழுந்தன. விழுந்த விதைகளைப் பறவைகள் பறந்து வந்து உண்டு சென்றன. சில விதைகள் பாறைகளில் விழுந்தன. அவை முளைத்தன. மண்ணும் ஈரமும் இல்லாததால் வெயிலில் காய்ந்து கருகி விட்டன.

    வேறு சில முட்செடிகளின் நடுவே விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து, முளைத்தவைகளை அமுக்கி விட்டன. ஆகவே அவையும் சரிவர வளரவில்லை.

    ஆனால் சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவை முளைத்தன. சில முப்பது மடங்காகவும், சில அறுபது மடங்காகவும், சில நூறு மடங்காகவும் விளைந்து விளைச்சலைக் கொடுத்தன. ஆகவே கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்” என்றார்.

    அங்கிருந்தவர்களுக்கு விதை பற்றிய செய்திகள் விளங்கின. ஆனால் அதன் உட்பொருள் என்ன என்பதை அவர்களால் அறிய முடியவில்லை. அதை அறிந்த இயேசு பிரான், அதன் உட்பொருளை விளக்கினார்.

    ‘இறைவனின் வார்த்தையை சொல்பவர், ‘விதைப்பவர்’ ஆவார். வழியோரத்தில் விழுந்த விதைகளைப் போல, சிலர் அந்த வார்த்தைகளைக் கேட்கின்றனர். சிறிது நேரத்தில் சாத்தான்கள் உள்ளே புகுந்து, பறவைகளைப் போல, அந்த வார்த்தைகளை, எடுத்துச் சென்று விடுகின்றன. பாறையில் விதைக்கப்பட்ட விதைகளைப் போல, சிலர் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறார்கள்.



    விதைகள், வேர் பிடிக்க இயலாததால், இவ்வார்த்தைகள் சிறிது காலத்தில் உள்ளத்தில் இருந்து வெளியேறி விடுகிறது. முட்செடிகளுக்கு இடையிலே விளைந்த விதைகளைப் போல, வார்த்தைகளைக் கேட்டவர்கள், உலகக் கவலையில் மூழ்கி, அவற்றில் இருந்து விடுபட முடியாமல், விட்டு விடுகின்றனர். நல்ல நிலத்தில் விழுந்த விதைகளைப் போல, சிலர் இறை வார்த்தையை ஏற்றுக் கொண்டு, பயனளிக்கின்றனர்’ என்று கூறினார்.

    மக்கள் அவரின் உவமைப் பேச்சைப் புரிந்து கொண்டனர். எவ்வளவு ஆழமான கருத்தையும், எளிய உவமைகளால் விளக்க முடியும் என்பதற்கு ‘விதைக் கதை’ ஒரு சான்றாகிறது.

    புனித மாற்கு என்ற நற்செய்தியாளர் இச்செய்தியை எடுத்துரைக்கிறார்.

    இனி ‘வழியோரம்’, ‘கற்பாறை’, முட்புதர்’, ‘நல்ல நிலம்’ என்ற நான்கு இடங்களையும் ஆராய்வோம்.

    வழியோரம்: வழியோரம் விழுந்த விதைக்கு ஒப்பானவர்கள் யார்? இவர்கள் இறை வார்த்தையைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் இல்லாதவர்கள். இன்னும் சொல்லப் போனால், இவ்வார்த்தை நமக்குத் தேவையில்லை என்றும் கருதுபவர்கள். ஆகவே ‘சாத்தான்’ இவர்களை எளிதாக அடிமைப்படுத்தி விடுகிறது.

    கற்பாறை: அடுத்து கற்பாறையுள்ள இடத்தை எடுத்துக் கொள்வோம். இவ்விதைகளுக்கு ஒப்பானவர்கள் யார்? இவர்கள் கடின மனம் கொண்டவர்கள். முழு நம்பிக்கை இல்லாதவர்கள். இறை வார்த்தையை ஆர்வத்துடன் கேட்பார்கள். துன்பங்கள், சவால்கள் போன்றவற்றை எதிர் கொள்ள மாட்டார்கள். ஆணவத்தாலும் அகங்காரத்தாலும் கருகி விடுவார்கள்.

    முட்புதர்: முட்புதர்களின் நடுவே விழுந்த விதைக்கு ஒப்பானவர்கள் யார்? இவர்கள், இறை வார்த்தையை ஏற்றுக் கொண்டு வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் ஆர்வம் இல்லாதவர்கள். அதிகமான ஆசைகளை வளர்த்துக் கொள்பவர்கள். ஆடம்பர வாழ்க்கையை விரும்புபவர்கள். இறை வார்த்தை இவ்வித எண்ணங்களால் அமுக்கப்படுகின்றன.

    நல்ல நிலம்: நம்பிக்கையும், மன உறுதியும் கொண்டவர்கள், நல்ல நிலத்தில் விழுந்த விதைகளைப் போன்றவர்கள். இவர் கள் கைக்கொண்ட உறுதிப்பாட்டால், நல்ல பலனைத் தரு கிறார்கள்.

    இவ்விதமான உவமைகளால், இயேசு பிரான் மக்களுக்குப் போதித்து அவர்களை நல்வழிபடுத்தினார். புரிந்து கொள்ள இயலாத மக்களை புரிந்து கொள்ள வைக்க, அவரின் எளிய, நடைமுறை உவமைகள் கை கொடுத்தன.

    சிந்தனை: இந்த நான்கு வகை நிலங்களில் நாம் எந்த வகை நிலமாக இருக்கப்போகிறோம். இவ்வுலக வாழ்வில், உலகத்தோடு ஒத்துப்போக, நம் மனம் விரும்புகிறது. உலகத்தோடு ஒத்துப் போவது எளிமையானது என்று தோன்றுகிறது.

    இயேசுவின் சிந்தனை இவ்வுலகத்தோடு முடிந்து விடுவதில்லை. விண்ணக வாழ்வை எடுத்துரைக்கின்றது. விண்ணக வாழ்வைத்தான், பேரின்ப வாழ்வு என்று நாம் கூறுகின்றோம். அப்பேரின்ப வாழ்வை வாழ்வதற்கு இவ்வுலக வாழ்க்கையில் கறை படிய விடாமல் காத்துக் கொள்ள வேண்டும். நல்ல நிலத்தில் விழுந்த விதைகளைப் போல நூறு மடங்காகப் பயன் தருதல் வேண்டும் இப்புரிதலை உணர்ந்து கொண்டால் எது நல்லது என்பது புலனாகும்.
    இயேசு பிரானின் போதனைப்படி நடந்தால் இவ்வுலகில் வெற்றி பெற்றவர்களாகவும், விண்ணுக்குத் தகுதியானவர்களாகவும் ஆவோம் என்பதில் சந்தேகம் இல்லை.
    தர்மம் செய்யும்பொழுது எப்படி தர்மம் செய்ய வேண்டும் என்பதை இயேசு பிரான் கூறுவதில் இருந்து உணரலாம்.

    ‘எல்லோரும் நம்மைப் பார்க்க வேண்டும் என்று தர்மம் செய்யாதீர்கள். எச்சரிக்கையாய் இருங்கள். இல்லையென்றால் வானுலகத் தந்தையிடம் இருந்து உங்களுக்கு எந்தவிதக் கை மாறும் கிடைக்காது. நீங்கள் பிறருக்குக் கொடுக்கும்பொழுது, தம்பட்டம் அடித்து, தற்பெருமையாய் நடந்து கொள்ள வேண்டாம். வெளிவேடக்காரர்கள்தான், பிறர் தங்களைப் புகழ வேண்டும் என்று, தொழுகைக் கூடாரங்களிலும், சந்துகளிலும் நின்று, அவ்விதம் செய்வார்கள். அப்படிச் செய்யக் கூடாது’.

    ‘நீங்கள் தர்மம் செய்யும்பொழுது, உங்களுடைய வலது கை செய்வது இடது கைக்குத் தெரியாமல் இருக்கட்டும். அப்பொழுதுதான் நீங்கள் செய்யும் தர்மம் மறைவாக இருக்கும். மறைவாய் உள்ளதைக் காணுகிற உங்கள் தந்தையும், உங்களுக்குக் கைம்மாறு அளிக்கத் தவற மாட்டார்’.

    வெளி வேடக்காரர்கள், மக்கள் பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்களாக இருக்கிறார்கள்.

    நீங்கள் இறைவனிடம் வேண்டும் பொழுது, உங்களின் உள்ளறைக்குள் செல்லுங்கள். கதவைத் தாழிட்டுக் கொள்ளுங்கள். மறைவாக இருக்கும் உங்கள் தந்தையை நோக்கி வேண்டுங்கள். மன்றாடுங்கள். அவரும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்.

    மேலும் நீங்கள் நோன்பிருக்கும் பொழுது, வெளிவேடக் காரர்களைப்போல, வாட்டமான முகத்துடன் இருக்க வேண்டாம். தாங்கள் நோன்பு இருப்பது வெளியே தெரிய வேண்டும் என்று வெளிவேடக்காரர்கள் எண்ணுகிறார்கள். அதற்காகத் தங்கள் முகங்களை விகாரமாக்கிக் கொள்கிறார்கள்.

    நீங்கள் நோன்பை மேற்கொள்ளும்பொழுது, உங்கள் தலையில் எண்ணெய் தேய்த்துக் கொள்ளுங்கள். முகத்தைக் கழுவி சுத்தம் செய்து விடுங்கள். அப்பொழுதுதான் நீங்கள் நோன்பு இருப்பது பிறருக்குத் தெரியாமல் இருக்கும். ஆனால் உங்கள் தந்தைக்கு மட்டும் தெரியும். மறைவாய் உள்ளதைக் காணும், உங்களின் மறைவான தந்தையும் தகுந்த கைம்மாறை அளித்து உங்களை மகிமைப்படுத்துவார்.

    இயேசு பிரானின் இப்போதனையை எண்ணிப் பார்க்க வேண்டும். இந்த உலகில் தர்மம் செய்வோர் எவ்வளவு ஆடம்பரமாகச் செய்கிறார்கள் என்பதை நாம் அறிகிறோம். இயேசு பிரான் இப்படிப்பட்ட தர்மத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. அவரது மாசற்ற பார்வையில் இவை மாசு உடையதாகத் தெரிகின்றன.

    வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரியக்கூடாது என்று கூறுகிறார். அந்த அளவுக்கு ரகசியம் இருக்க வேண்டும் என்கிறார். இதை விட எளிமையாக இயல்பாக யாரும் சொல்லி விட முடியாது.



    அதைப்போல ‘நோன்பு’ இருக்கும்பொழுது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற கருத்தையும் வலியுறுத்துகிறார். வெளிவேடம், மனிதருக்குள் இயல்பாக வெளிப்படுவது. நூற்றுக்கு தொண்ணூறு சதவீதம் பேர் இப்படித்தான் இருக் கிறார்கள். ஒரு சதவீதம் பேர் மட்டும்தான் உணர்ந்து செயல்படுகிறார்கள்.

    நோன்பு இருக்கும்போது முக வாட்டத்துடன் இருப்பதைப் போலக் காட்டிக்கொள்வது; பிறர் காண வேண்டும் என்பதற்காகத் தர்மம் செய்வது என்பதெல்லாம், வெளிவேடக்காரர்களின் செயல்பாடுகள் ஆகும்.

    விண்ணுலகத் தந்தை எதை விரும்புகிறார் என்பதைக் கண்டறிய வேண்டும். இருவேறுபட்டவர்களுக்கு இருவேறுவிதமான கைம்மாறுதான் கிடைக்கும். ‘எதை ஒருவன் விதைக் கிறானோ அதைத்தான் அறுவடை செய்வான்’ என்பதைப் போலவும், ஜீவியம் எப்படியோ அப்படித்தான் மரணமும் என்பதைப் போலவும் உணர்ந்து தெளிந்து செயல்பட வேண்டும்.

    ‘தம்பட்டம்’ என்ற ஒரு வார்த்தையை, இயேசு பிரான் பயன்படுத்துகிறார். தற்பெருமையாகப் பேசி, தன்னை வெளிக்காட்டிக் கொள்ளுதல் என்பதுதான் இதன் பொருள். தன்னைத் தானே பீற்றிக் கொள்ளுதல் என்று பேச்சுவழக்கில் சொல்வதை இன்றும் கேட்கலாம்.

    இந்த நற்செய்தியில் மூன்றுவிதமான செயல்பாடுகளைப் பற்றிக் கூறுகிறார்.

    ‘எல்லோரும் புகழ வேண்டும் என்பதற்காகத் தர்மம் செய்யாதீர்கள். தர்மம் என்பது பிறரின் புகழைப் பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக இருக்கக் கூடாது. இது முற்றிலும் ‘வெளிவேடம்’ ஆகும். வெளிப்பகட்டும், ஆடம்பரமும் ஏற்றுக் கொள்ளக்கூடிய உன்னதமான ஒன்று அல்ல. வெளிவேடக் காரர்களிடம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்’ என்று நம்மை எச்சரிக்கிறார். வெளிவேடக்காரர்கள் நம்பத்தகுந்த வரும் அல்லர்.

    தர்மம் கொடுப்பது நம் கையில்தான் இருக்கிறது. கை வழியாகத்தான் தர்மம் செய்கிறோம். இரு கைகளை இறைவன் அருளால் பெற்ற நாம் ஒரு கையால் அதிலும் குறிப்பாக வலக் கரத்தால் வழங்குவது, இடக்கரத்திற்குத் தெரியக்கூடாது என்கிறார். இந்த அளவுக்கு ரகசியம் பேணப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் இயேசு பிரான், வெளிவேடக்காரர்களை எப்படி ஏற்றுக்கொள்வார்?

    தங்களைத் தாங்களே உணர்ந்து நல்வழியில் நடப்பதற்கும், நல்லொழுக்கத்தைப் பேணி இறைவனை நாடுவதற்குமே நோன்பு நோற்கிறோம்.

    அத்தகைய நோன்பை எப்படி ஏற்க வேண்டும்? அதைப் பிறருக்குக் காட்டிக் கொண்டு பெருமையாக இருக்கக் கூடாது. எப்போதும் போல இயல்பாக இருக்க வேண்டும். தனக்காகவும், இறைவனுக்காகவும் செய்கின்ற காரியங்களைப் பிரபல்யப் படுத்த வேண்டியதில்லை. இந்தக் கருத்துகளையும் நம் சிந்தனையில் தேக்கி ஒழுக வேண்டும்.

    வெளிவேடக்காரர்களைப் போல் இல்லாமல் நம்மை நாமே சோதித்துப் பார்த்து, இயேசு பிரானின் போதனைப்படி நடந்தால் இவ்வுலகில் வெற்றி பெற்றவர்களாகவும், விண்ணுக்குத் தகுதியானவர்களாகவும் ஆவோம் என்பதில் சந்தேகம் இல்லை.

    கோவை திரித்துவ ஆலயத்தில் புனித அந்தோணியாரின் அழியாத உடல் உறுப்புகளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. அதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    கத்தோலிக்க கிறிஸ்தவர்களால் புனிதராக போற்றப்படும் அந்தோணியாரின் ஆலயங்கள் பல்வேறு இடங்களில் உள்ளன. 786 ஆண்டுகளுக்கு முன் மறைந்த புனித அந்தோணியாரின் அழியாத உடல் உறுப்புகள் (எலும்பு, சதை) திருப்பண்டம் என்று அழைக்கப்படுகிறது.

    இந்த உறுப்புகள் புனித அந்தோணியாரின் சொரூபத்தின் நெஞ்சுப்பகுதியில் கண்ணாடிப்பேழை அமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த சொரூபத்துடன் கூடிய திருப்பண்டம் இத்தாலி நாட்டில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. இது கோவை ராமநாதபுரத்தில் உள்ள தூய திரித்துவ ஆலயத்திற்கு நேற்று காலை கொண்டு வரப்பட்டது.

    ஆலயத்தின் பங்கு குரு ஜான்சன் வீபாட்டுப்பரம்பில் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பின்னர் மறைமாவட்ட ஆயர் பால் ஆலப்பாட் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து ஆலய வளாகத்தில் புனித அந்தோணியாரின் சொரூபம் காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணி வரை வழிபாட்டுக்கு வைக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். ஆண்கள் மற்றும் பெண்கள் தனித்தனியே சென்று தரிசனம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    இது குறித்து ஆலய நிர்வாகிகள் கூறியதாவது:-

    கோடி அற்புதங்கள் செய்ததால் கோடி அற்புதர் என்று அழைக்கப்படும் புனித அந்தோணியார் 1231-ம் ஆண்டு ஜூன் 13-ந் தேதி மறைந்தார். 32 ஆண்டுகளுக்கு பிறகு அவரது கல்லறையை திறந்து பார்த்தபோது, உயிர் துடிப்புள்ள அவரது நாவும், சிதையாத எலும்புகளும், அழுகாமல் உறுதியுடன் காணப்பட்டது. இந்த புனித திருப்பண்டங்கள் இத்தாலியில் உள்ள பதுவை நகரின் பிரான்சிஸ்கன் குருவானவர்களின் பராமரிப்பின் கீழ் உள்ள திருத்தல ஆலயத்தில் பாதுகாப்பாக வைத்து இன்று வரை பராமரிக்கப்பட்டு வருகிறது.

    பிரான்சிஸ்கன் குருவானவர்களின் முயற்சியால் இந்த திருப்பண்டம் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டு, தற்போது கோவைக்கு எடுத்து வரப்பட்டு உள்ளது. இது புனித அந்தோணியாரின் பக்தர்கள் மற்றும் கிறிஸ்தவ மக்களுக்கு காண கிடைத்த அரிய வாய்ப்பாகும். திருப்பண்டம் வந்த இடத்தில் அற்புதங்கள் நடக்கும். இதனால் அனைவருக்கும் இறை ஆசீர்வாதம் கிடைக்கும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    அதைத்தொடர்ந்து மதியம் 2 மணிக்கு புனித அந்தோணியாரின் திருப்பண்டம் கோவையை அடுத்த எட்டிமடையில் உள்ள அசிசி சினேகாலயா மையத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு எலியாஸ் தலைமையில் வரவேற்பு அளித்தனர். 3.30 மணிக்கு கப்புச்சின் சபை பெர்னாட்ஷா தலைமையில் திருப்பலி நடைபெற்றது. பின்னர் 4.30 மணி முதல் 7 மணி வரை வழிபாடு நடைபெற்றது. அதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பின்னர் புனித அந்தோணியாரின் திருப்பண்டம் கேரளாவுக்கு எடுத்து செல்லப்பட்டது.
    வழிபாட்டில் கிறிஸ்தவர்கள் சிலுவையை சுமந்தபடி திருத்தலத்தை சுற்றி வந்தனர்.
    மதுரையை அடுத்த வாடிப்பட்டியில் ஆரோக்கிய அன்னை ஆலயம் உள்ளது. தென்னகத்து வேளாங்கண்ணி என்று அழைக்கப்படும் இந்த ஆலயத்தில் கிறிஸ்தவர்கள் 41 நாட்கள் தவக்கால வழிபாடாக அனுசரிக்கின்றனர்.

    இந்த நாட்களில் ஆலயத்தில் சிலுவைப்பாதை வழிபாடு உள்பட பல்வேறு வழிபாடுகள் நடைபெறும். ஏசு சிலுவையில் அறையப்பட்ட வெள்ளிக்கிழமை புனிதவெள்ளியாக கடைபிடிக்கப்படுகிறது.

    அவர் 3-வது நாள் உயிர்தெழுந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் திருநாளாக கொண்டாடப்படும். இந்த நிகழ்ச்சிகள் ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தவக்கால வழிபாடாக தொடங்கியது. அதில் சிலுவைப்பாதை வழிபாட்டில் கிறிஸ்தவர்கள் சிலுவையை சுமந்தபடி திருத்தலத்தை சுற்றி வந்தனர். மேலும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தொடர்ந்து சிலுவைப்பாதை வழிபாடு நடைபெறுகிறது. முன்னதாக சாம்பல் புதன் வழிபாடு சிறப்பு திருப்பலியும் நடந்தது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர். ஏற்பாடுகளை ஆரோக்கிய அன்னை ஆலய பாதிரியார், திருத்தல அதிபர் மற்றும் இருபால் துறவியர்கள் செய்து வருகின்றனர்.
    இறைவனுக்கு எதிராக நாம் செய்த பாவங்களை, இறைவன் தன் இரக்கத்தை வெளிப்படுத்தி தள்ளுபடி செய்து நம்மை இருகரம் விரித்து ஏற்றுக்கொள்ளும் காலம்.
    தவக்காலம் என்பது உடையை கிழிக்க அல்ல, உள்ளத்தை கிழிக்க. உடலை வருத்த அல்ல, உள்ளத்தை திருத்த. இது தள்ளுபடியின் காலம். இறைவனுக்கு எதிராக நாம் செய்த பாவங்களை, இறைவன் தன் இரக்கத்தை வெளிப்படுத்தி தள்ளுபடி செய்து நம்மை இருகரம் விரித்து ஏற்றுக்கொள்ளும் காலம். பாவியை அல்ல.

    பாவத்தை வெறுத்து, அந்த பாவியை அரவணைக்கும் அருளின் காலம். எனவே தவத்துக்கு இது ஏற்ற காலம். நாம், நம் வழிமுறைகளை, வாழ்வு முறைகளை, எண்ணங்களை, சிந்தனைகளை மதிப்பீடு செய்து நம் தவறுகளுக்காகவும் அநீத செயல்களுக்காகவும் வருந்தி அதிலிருந்து திருந்தி இயேசுவை நோக்கி நடைபோட இந்த காலம் நம்மை அழைக்கிறது.

    தரையில் தூங்குபவன் தவறி விழுவதில்லை. நாம், நம் வாழ்க்கையில் ஒரே சமநிலையில் வாழ்ந்தால் தவறி விழமாட்டோம். நம் வாழ்வில் ஏற்ற, இறக்கங்கள் உண்டு. எனவே தான் நாம் தவறுகிறோம். தவறுதான் மனித இயல்பு. ஆனால் அந்த தவறு என்னவென்பதே அறியாமல் இருப்பதும், அறிந்தாலும் அதை ஏற்காமல் இருப்பதும், வருந்தி திருந்தாமல் இருப்பதும், இறைவனிடமிருந்து நம்மை வெகுதூரமாய் தள்ளி வைத்துவிடும். வருந்துவதும், திருந்துவதும் நம் வாழ்வின் வழிமுறையாக மாற வேண்டும்.



    நம் வாழ்வில் நாம் யூதாசுகளாக வாழ்கிறோமா? அல்லது பேதுருவாக வாழ்கிறோமா? என்று சிந்தித்து பார்க்க இந்த தவக்காலத்தில் அழைக்கப்படுகிறோம். யூதாசு தான் செய்த தவறு குறித்து வருந்தினான். ஆனால் திருந்தி இயேசுவிடம் வரவில்லை. புதிய வாழ்வை பெறவில்லை. பேதுருவோ வருந்தினார். திருந்தினார். இயேசுவிடம் வந்தார். மனம் திரும்பினார். இன்று அவர் புதிய வாழ்வைப் பெற்று புனிதராக வாழ்கிறார்.

    எனவே, கடவுள் நம் பாவங்களுக்கேற்ப தண்டனை கொடுப்பதை அவர் விரும்பவில்லை. பாவிகள் சாக வேண்டும் என்பது அவரது விருப்பம் அல்ல. கடவுள், தாம் செய்ய நினைத்த தீங்கு குறித்து மனம் மாறுகிறவர். கடவுள் நமக்கு தண்டனை வழங்க அல்ல. மாறாக, வாழ்வை வழங்கவே தன் ஒரே மகனை அனுப்பினார். எனவே வருந்துவோம். நம் வாழ்வெல்லாம் வசந்தமாகட்டும்.

    அருட்திரு. ஜான்நெப்போலின், செயலர்,

    புனித ஜோசப் பாலிடெக்னிக் கல்லூரி, திண்டுக்கல்.
    “மனித உறவு இன்றி இறை உறவு சாத்தியமில்லை. இறை உறவின்றி மனித உறவு சாத்தியமில்லை“ என்பதே விவிலிய கருத்து. எனவே தவக்காலத்தில் இறை உறவோடு ஒன்றி வாழ்ந்து பயணிப்போம்.
    புதிதாக ஒரு மூங்கில் செடி முளைத்து மண்ணை விட்டு வெளிவர 5 ஆண்டுகள் ஆகும். அந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு அந்த மூங்கில் செடியானது ஒரு நாளைக்கு இரண்டு அடி வீதம் உயரமாக வளர்ந்து மரமாகும். அதன்பிறகு அந்த மூங்கில் மரமானது தனது உயரத்தை தக்க வைத்து கொள்ள 5 ஆண்டுகள் வரை தனது வேர்களை ஆழப்படுத்தி, அகலப்படுத்தும். அதுபோல நாமும் நம்முடைய உறவுகளை ஆழப்படுத்தி, அகலப்படுத்தி, சமூகத்தில் வியக்க வைக்கும் மனிதர்களாக இருப்போம்.

    கிறிஸ்தவர்களே! நீங்கள் உண்மை கிறிஸ்தவர்களாக மாற வேண்டுமா? அப்படியானால் உங்கள் கருத்துக்களில் சிலுவையை அணியாதீர்கள். மாறாக உங்கள் கருத்துக்களை சிலுவையில் அணியுங்கள் என்றார் ஓஷோ. சிலுவை என்பது கடவுளையும், மனிதனையும் இணைக்கும் பாலம். கடவுள் ஒருவரே, மனிதர் அனைவருக்கும் சமம்.

    மனித உறவில் தான் இறை உறவு வளர்கிறது என்பதே சிலுவை உணர்த்தும் ஆன்மிக சிந்தனை ஆகும். படுக்கை வசமான மரமும், செங்குத்தான மரமும் இணைகின்ற போது தான் சிலுவை தோற்றம் உருவாகிறது. அது முழுமை அடைகிறது. இதில் செங்குத்தாக இருக்கக்கூடிய மரம், இறைவனோடு நாம் கொண்டுள்ள உறவை வலுப்படுத்துகின்றது. படுக்கை வசமான மரம் மனிதர்களோடு நாம் கொண்டுள்ள உறவை குறிக்கிறது. இங்கு இறையுறவும் மனித உறவும் சங்கமிக்கின்ற போது தான் சிலுவை முழுமை அமைகிறது.



    “கடவுள் ஒருவரே, வேறு கடவுள் உமக்கு இல்லாமல் போவதாக“ என்ற கிறிஸ்தவ விசுவாச கூற்றை இங்கு நினைவு கூறுவோம். படுக்கை வசமான மரம் உணர்த்த கூடிய செய்தி மாந்தர் அனைவரும் சமம். பிறப்பாலோ, வாழ்வாலோ யாரும் உயர்வு, தாழ்வு பாராட்டக்கூடாது. கிறிஸ்துவுக்கு முன் அனைவரும் சமம்.

    “மனித உறவு இன்றி இறை உறவு சாத்தியமில்லை. இறை உறவின்றி மனித உறவு சாத்தியமில்லை“ என்பதே விவிலிய கருத்து. எனவே தவக்காலத்தில் இறை உறவோடு ஒன்றி வாழ்ந்து பயணிப்போம்.

    அருட்சகோதரி. ராஜீ, அமலவை சபை, புனித அந்தோணியார் கல்லூரி, திண்டுக்கல்.
    இயேசுபிரான் இறைமகனாக இருந்தும், குற்றமற்றவராக இருந்தும், பொய்க்குற்றங்கள் சுமத்தப்பட்டு பிலாத்து ஆளுநரால் தீர்ப்பளிக்கப்பட்டு சிலுவை சுமந்து சிலுவையிலேயே மரித்தார்.
    சிலுவை என்பது ஒரு தண்டனையுடன் தொடர்பு கொண்ட கருவியாகத்தான் பர்சியா (தற்போதைய ஈரான்) கீழை நாடுகளில் பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்டது. ரோம் போன்ற மேலைநாடுகளுக்கு இத்தண்டனைப் படிப்படியாகப் பரவியது. அரசுக்கு எதிராக கலகம் செய்தவர்கள், கொலையாளிகள், கொள்ளையர்கள் போன்ற கொடுங்குற்றவாளிகளுக்கு மட்டுமே அதுவும் அடிமைகளுக்கு மட்டுமே இத்தண்டனை வழங்கப்பட்டது.

    ரோம் குடியுரிமைப் பெற்றவர்களுக்கு அவர்கள் எவ்வித குற்றம் செய்திருந்தாலும், இந்த சிலுவைத்தண்டனை அவர்களுக்கு வழங்கப்படவில்லை. பழைய ஏற்பாட்டில் இஸ்ரேல் மக்களிடையே இந்தசிலுவைத் தண்டனை வழக்கில் இல்லவே இல்லை.

    சிலுவை என்ற சொல் சிலுவை வடிவிலான + ஒரு மரத்தை குறிக்கிறது. குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர் ஒரு நீண்ட மரத்தை தானே தன் தோளில் தீர்ப்பு நிறைவேறும் இடத்திற்கு சுமந்து சென்றவுடன் அந்த மரத்தை இரு துண்டுகளாக்கி + வடிவில் அமைத்து, அந்த குற்றவாளியின் கைகளையும், கால்களையும் மரத்தில் பதியும் வண்ணம் கட்டி அல்லது ஆணிகளால் தைத்து அந்த அறையப்பட்ட நபரோடுகூடிய சிலுவையை நிமிர்த்தி நட்டுக்காட்டுவது வழக்கமான தண்டனையாக இருந்தது. பெரும்பாலும் குற்றவாளிகள் அனைவரும் நிர்வாணப்படுத்தியே சிலுவையில் அறையப்பட்டனர்.



    நண்பர்கள் உறவினர்கள் அனைவரும் பெரும்பாலும் பயந்து ஓடியிருப்பர். ஒரிருவர் துணிவுடன் அங்கே இருந்தால் அந்த நிர்வாணத்தை சிறு, சிறு துணிகளால் மறைப்பர். குற்றவாளியின் பெயரும் பட்டமும் ஒரு குறும்பலகையில் எழுதப்பட்டு, அவரது தலைக்குமேல் பொருத்தப்பட்டது. இந்த அவமானமிக்க கொடூரமான சிலுவைத்தண்டனையை கான்ஸ்டன்டைன் பேரரசன் கி.பி. 3-ம் நூற்றாண்டில் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்ட பிறகு வரலாற்றிலிருந்தே விலக்கி விட்டான். இதன் பிறகு எவரும் சிலுவையில் ஏற்றி கொல்லப்பட்டதாக வரலாறு இல்லை.

    இயேசுபிரான் இறைமகனாக இருந்தும், குற்றமற்றவராக இருந்தும், பொய்க்குற்றங்கள் சுமத்தப்பட்டு பிலாத்து ஆளுநரால் தீர்ப்பளிக்கப்பட்டு சிலுவை சுமந்து சிலுவையிலேயே மரித்தார். இயேசுபிரான் அந்தச் சிலுவையைத் தொட்டதும் அது தண்டனைக்கருவி என்ற முகவரியை இழந்து மீட்பின் கருவி என்ற புதிய விலாசத்தைப் பெற்றது. அன்று சிலுவையை வெறுத்தவர்கள் இன்று அதை அன்பு செய்ய அணிதிரண்டனர். இயேசுபிரான் சிலுவைக்குப் புதிய அடையாளத்தை வழங்கினார்.

    - அருட்தந்தை சி.குழந்தை, காணியிருப்பு.
    திருவண்ணாமலை மாவட்டத்தில் சாம்பல் புதனை முன்னிட்டு கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
    உலகம் முழுவதும் டிசம்பர் 25-ந் தேதி இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாள் கிறிஸ்துமஸ் விழாவாக கொண்டாடப்படுகிறது. அதேபோல் அவர் சிலுவையில் அறையப்பட்டு மரித்த (உயிரிழந்த) நாளை புனித வெள்ளியாக அனுஷ்டித்து அதன்பின்னர் 3 நாட்கள் கழித்து இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளை ஈஸ்டர் பண்டிகையாக கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர்.

    இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய 40 நாட்களை கிறிஸ்தவர்கள் தவக்காலம் என்று குறிப்பிடுவார்கள். 40 நாட்கள் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் உபவாச நிலையை கடைப்பிடிப்பாார்கள். இத்தகைய தவக்காலத்தின் முதல்நாள் சாம்பல் புதனாக அழைக்கப்படும். அதன்படி தவக்காலத்தின் முதல்நாளான நேற்று கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    இளையாங்கன்னி புனித கார்மேல் அன்னை தேவாலயத்தில் நேற்று காலை 6 மணியளவில் பங்கு தந்தை ஜெயசீலன், அருள் தந்தை பால்வேளாங்கன்னி ஆகியோர் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

    இதில் கடந்த ஆண்டு குருத்தோலை ஞாயிறு தினத்தன்று கிறிஸ்தவர்கள் ஊர்வலமாக கொண்டு சென்ற ஓலைகளை எரித்து அந்த சாம்பலை பங்கு தந்தை ஜெயசீலன் கிறிஸ்தவர்கள் நெற்றியில் சிலுவையாக பூசிவிட்டார். அதனை தொடர்ந்து சிறப்பு வழிபாடு, பிரார்த்தனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    இதேபோல் பெருந்துறைப்பட்டு காணிக்கை அன்னை தேவாலயம், தென்கரும்பலூர், சோவூர், அள்ளிகொண்டாப்பட்டு, கல்லேரி, தளையாம்பள்ளம், அந்தோனியார்புரம் உள்ளிட்ட பகுதியில் உள்ள தேவாலயங்களில் சாம்பல் புதனை முன்னிட்டு சிறப்பு பிராாத்தனை நடை பெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    போளூர் தூய இருதய ஆண்டவர் தேவாலயத்தில் சிறப்பு ஆராதனை மற்றும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் கிறிஸ்தவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருவண்ணாமலை உலக மாதா தேவாலயம், கர்மேல் தேவாலயம் உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்களில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
    ×