என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    பத்துகாணி குருசுமலையில் திருப்பயண திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கி ஏப்ரல் 2-ந்தேதி வரை 8 நாட்கள் நடக்கிறது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    பத்துகாணி குருசுமலையில் திருப்பயண திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கி ஏப்ரல் 2-ந்தேதி வரை 8 நாட்கள் நடக்கிறது. நேற்று நெய்யாற்றின்கரை மறைமாவட்ட ஆயர் இன்சென்ட் சாமுவேல் கொடியேற்றி வைத்து, திருப்பலியை நிறைவேற்றினார். குருசுமலையில் குருசு ஸ்தாபித்து 60 ஆண்டுகள் ஆவதையொட்டி இந்த ஆண்டு வைரவிழாவாக கொண்டாடப்படுகிறது.

    இதற்கான கூட்டு திருப்பலி திருவனந்தபுரம் மறை மாவட்ட ஆயர் சூசைபாக்கியம் தலைமையில் நடந்தது. தொடர்ந்து நடந்த பொதுக்கூட்டத்துக்கு ஆயர் வின்சென்ட் சாமுவேல் தலைமை தாங்கினார். இதில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், அறநிலைய துறை மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.

    30-ந்தேதி மாலை கோட்டார் மறை மாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் திருப்பலியும், 31-ந்தேதி ரத்தசாட்சி திருப்பலி, பரிகார சிலுவை பாதை, ஜெபவழிபாடு ஆகியவை நடைபெறுகிறது.

    ஏப்ரல் 1-ந்தேதி காலையில் கடையாலுமூடு பங்குதந்தை சூசைராஜ் தலைமையில் திருப்பலியும், ஜெபமாலை பவனி, சிலுவை பாதை நிகழ்ச்சிகள், 2-ந்தேதி காலை 9 மணிக்கு வின்சென்ட் சாமுவேல் தலைமையில் ஆடம்பர கூட்டு திருப்பலியும், பகல் 3 மணிக்கு திருவனந்தபுரம் மறை மாவட்ட துணை ஆயர் கிறிஸ்துதாஸ் தலைமையில் திருவிழா நிறைவு திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. தொடர்ந்து கொடி இறக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து உள்ளனர்.
    மனஸ்தாபம் கொள்வோம், மனஸ்தாபம் நம்மை மனம் திரும்புதலுக்கு கொண்டு வரட்டும், மனம் திரும்புதல் நம்மை பாவ மன்னிப்புக்கு அழைத்து வரட்டும். பாவ மன்னிப்பு நமக்கு மீட்பைப் பெற்றுத் தரட்டும்.
    தவக்காலம் என்பது வசந்தகாலம் போன்றது. பழைய வாழ்வின் இலைகள் எல்லாம் உதிர்ந்து புதிய வாழ்வின் துளிர்கள் வரவேண்டும் என்பதற்காகவே தவக்காலம் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு புதிய மாற்றம் உருவாகவேண்டும் எனும் சிந்தனை அடிப்படையாக அமைந்திருக்க வேண்டும்.

    அந்த மாற்றத்தை நமக்குப் பெற்றுத் தருவது இறைமகன் இயேசுவின் சிலுவை. மீட்பு என்பது நிலைவாழ்வு. இறைவன் தரும் நிறைவாழ்வு. அந்த நிலைவாழ்வை அடையவேண்டு மெனில் நாம் கீழ்க்கண்ட நிலைகளைக் கடக்க வேண்டும்.

    மனம் வருந்துதல், மனம் திரும்புதல், பாவ மன்னிப்பு பெறுதல், மீட்பைப் பெற்றுக் கொள்தல்.

    மனம் வருந்துதல் அதாவது மனஸ்தாபம் முதலில் வரவேண்டும். அது தான் நம்மை மனம் திரும்புதலை நோக்கி வழிநடத்தும். மனம் திரும்புதல் பாவ மன்னிப்பை நோக்கி நம்மை வழி நடத்தும். பாவ மன்னிப்பு நம்மை மீட்பை நோக்கி வழிநடத்தும்.

    மனஸ்தாபமே அடிப்படை. மனஸ்தாபம் படும்போது தான் தந்தையின் விருப்பத்துக்கு நம்மை அர்ப்பணிக்க முடியும். ஆனால் வெறும் மனஸ்தாபம் மட்டுமே நம்மை மீட்புக்குள் கொண்டு செல்லாது.

    இயேசுவைக் காட்டிக்கொடுத்தவன் யூதாஸ் இஸ்காரியோத்து. அவன் இயேசுவைக் காட்டிக் கொடுத்தபின் மனம் வருந்தினான். மனம் வருந்திய அவன் தற்கொலை செய்து கொண்டு செத்துப் போனான். அவனுடைய மனஸ்தாபம் அவனை மனம் திரும்புதலுக்கு கொண்டு செல்லவில்லை. வெறுமனே மனஸ்தாபம் கொள்வது மீட்புக்கு நம்மை அழைத்துச் செல்லாது என்பதன் உதாரணமாக இதைக் கொள்ளலாம்.

    மனம் திரும்புதல் என்பது, மனதிலிருக்கும் பாவங்களை ஒத்துக் கொள்வதும், மனதிலும் செயலிலும் மாற்றங்களைப் பெற்றுக் கொள்வதும் ஆகும். ‘மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அவ்வாறே அழிவீர்கள்’ (லூக்கா 13:3) என்கிறார் இறைமகன் இயேசு.

    நினிவே நகர மக்கள் பாவ வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். எனவே அவர்களை அழிக்க இறைவன் முடிவெடுத்தார். அதை அறிந்த மக்கள் மனஸ்தாபப்பட்டு, மனம் திரும்பினார்கள். அவர்கள் மனம் திரும்பியதைப் பார்த்த இறைவன் மனஸ்தாபப்பட்டார். அது இறைவனின் அன்பை வெளிப்படுத்துகிறது.

    கெட்ட குமாரன் உவமையில் இளைய மகன் தந்தையிடமிருந்து சொத்தையெல்லாம் வாங்கிக் கொண்டு வெளியூர் போய் அனைத்தையும் அழிக்கிறான். கடைசியில் வாழ வழியின்றி தவிக்கிறான். தனது தவறை உணர்ந்து மனம் வருந்துகிறான். தந்தையிடம் வந்து தனது பாவத்தை அறிக்கையிடு கிறான். உடனே மீட்பைப் பெற்றுக்கொள்கிறான்.

    இளைய மகன் பாவியாய் வரும்போது தந்தை மனதுருகுகிறார். தனது ஸ்தானத்தை விட்டு இறங்கி ஓடோடிச் சென்று அவனை அரவணைக்கிறார். மனம் வருந்தி, மனம் திரும்பி, பாவமன்னிப்பு கேட்கும் மனநிலைக்கு நாம் வரும்போது இறைவன் மனம் இரங்கி வருகிறார், தனது நிலையை விட்டும் இறங்கி வருகிறார்.

    1. மனம் திரும்புதலின் அழைப்பு இறையரசுக்கானது!

    மனம் திரும்புதலுக்கான அழைப்பு பரலோக ராஜ்ஜியத்தை முன்வைத்து அழைக்கப்படுகிற அழைப்பாக இருக்கிறது. ‘மனம் திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது’ என இயேசு தனது போதனைகளில் அடிக்கடி குறிப்பிட்டார்.



    இயேசுவின் காலத்தில் மக்கள் ஒரு பூலோக அரசரை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். ஆனால் இறைமகன் இயேசுவோ, இறை அரசுக்கான வாழ்க்கைக்கு மக்களை தயாரிக்க வந்தார். எனவே தான் இயேசு தனது போதனைகளின் முதல் அறை கூவலாக, ‘மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது’ என்றார்.

    இயேசு மட்டுமல்ல, இயேசுவின் சீடர்களும் மனம் திரும்புங்கள் எனும் செய்தியையே பறை சாற்றுகின்றனர். பெற்றுக் கொள்கிற ஆசீர்வாதத்தோடு நமது கிறிஸ்தவ வாழ்க்கை நின்று விடக்கூடாது. நம் மூலமாக இறையரசின் செய்தியை பிறரும் அறிந்து கொள்ள வேண்டும்.

    2. மனம் திரும்புதலின் அழைப்பு மகிழ்ச்சிக்கானது

    யார் ஒருவர் இந்த மனம் திரும்புதலின் அழைப்பைப் பெற்றுக் கொள்கிறார்களோ அவர்கள் மகிழ்ச்சியை பெற்றுக் கொள் கிறார்கள். கூடவே அவர்களைச் சுற்றி இருப்பவர்களுக்கும் அந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கின்றனர்.

    கெட்ட குமாரனின் கதையிலும் அந்த மனம் திரும்பிய மகனுடைய வாழ்க்கையில் மகிழ்ச்சி கிடைத்தது. அத்துடன் தந்தையையும், கூட இருந்தவர்களையும் அதிக மகிழ்ச்சிக்குள்ளாக்கியது.

    ‘கொடியவர் தம் வழிமுறையையும், தீயவர் தம் எண்ணங் களையும் விட்டுவிடுவார்களாக; அவர்கள் ஆண்டவரிடம் திரும்பி வரட்டும்; அவர் அவர்களுக்கு இரக்கம் காட்டுவார்; அவர்கள் நம் கடவுளிடம் வரட்டும்; ஏனெனில் மன்னிப்பதில் அவர் தாராள மனத்தினர்’ என்கிறது (ஏசாயா 55:7) விவிலியம்.

    3. மனம் திரும்புதலின் அழைப்பு தேசத்தின் நன்மைக்கானது.

    ‘நீங்கள் மனம் திரும்பினால் தேசத்தின் நன்மையைக் காண்பீர்கள்’ என்கிறது ஏசாயா நூல். எங்கெல்லாம் மனமாற்றம் நிகழ்கிறதோ அங்கெல்லாம் தேசம் மிகப்பெரிய நன்மையைப் பெற்றுக் கொள்கிறது.

    மோசே தனியே வாழ்ந்து கொண்டிருந்தபோது கடவுள் அவரை அழைத்தார். எரியும் முட்செடியில் அவரிடம் பேசு கிறார். எரியும் முட்செடி எரிந்து கொண்டிருக்கும் இஸ்ரேல் மக்களுக்கு ஒப்பானது. அவர்கள் கண்ணீர் கவலை துக்கத்தோடு இருக்கின்றனர். ஆனால் மடிந்து போகவில்லை. அந்த மரண வேதனையில் இருக்கும் மக்கள் விடுதலையை பெற்றுக் கொள்ள வேண்டும் என இறைவன் விரும்பினார்.

    மோசே எனும் மனிதனுடைய மனமாற்றம் இஸ்ரவேல் மக்களின் விடுதலைக்கு காரணமாயிற்று. யோனா எனும் ஒரு இறைவாக்கினரின் மனமாற்றத்தால் நினிவே தேசம் நன்மையைப் பெற்றுக் கொண்டது.

    தவக்காலத்தில் இந்த சிந்தனைகளை மனதில் இருத்துவோம். மனஸ்தாபம் கொள்வோம், மனஸ்தாபம் நம்மை மனம் திரும்புதலுக்கு கொண்டு வரட்டும், மனம் திரும்புதல் நம்மை பாவ மன்னிப்புக்கு அழைத்து வரட்டும். பாவ மன்னிப்பு நமக்கு மீட்பைப் பெற்றுத் தரட்டும்.

    இறையாசீர் உங்களை நிரப்பட்டும்.

    ஞா.வெலிங்டன் ஜேசுதாஸ், நல்மேய்ப்பர் ஆலயம், வேளச்சேரி, சென்னை.
    இயேசு சிலுவையில் தொங்கும் போது கூட, “தந்தையே, இவர்களை மன்னியும், இவர்கள் என்ன செய்வதென்று அறியாமல் செய்கிறார்கள்“ என்று சகித்து கொண்டு அவர்களுக்காக தம் தந்தையிடம் பரிந்து பேசுகின்றார்.
    கடவுள், மனிதனை படைத்த போது, அருள் நிறைந்த நிலையில் உருவாக்கினார். பாவம் இழைத்த மனிதத்தை புறம் தள்ளி நித்தியசாபம் அவர் கொடுக்கவில்லை. மாறாக, அன்பின் ஊற்றாகிய அவர் இரக்கம் நிறைந்து மனிதனின் குற்ற உணர்வை சகித்துக்கொண்டார். ஆதிப்பெற்றோர் பாவத்தை சகித்ததன் விளைவாக தனது திருமகனையே மீட்பராக அனுப்பும் அளவிற்கு சகித்துக்கொண்டார்.

    எகிப்தில் அடிமைகளாக இருந்த இஸ்ராயேல் மக்களை மீட்டு காணான் தேசத்திற்கு அழைத்துவர பாலைவனத்தில் 40 ஆண்டுகள் அவர்களோடு இருந்து பயணித்த இறைவன் அந்த மக்களின் மறத்த இதயத்தையும், வணங்கா கழுத்தையும் சகித்து ஏற்றார். விடுதலை பயணத்தின் தலைவரான மோசே பல சமயங்களில் ஆண்டவரிடம் மக்களின் மனநிலையை பற்றி முறையிட்டார்.

    ஆனால் ஆண்டவர், பாலை நிலத்தில் மக்களின் தேவைகளான உண்ண உணவு, குடிக்க தண்ணீர், மனதிற்கேற்ற மாமிசம் ஆகியவற்றை கொடுத்தார். இருப்பினும் மக்கள் முணுமுணுத்தனர். ஆண்டவரிடம் மோசே அந்த முணுமுணுத்தலை சொல்லும் போது, ஆண்டவர் மோசே, உனக்கு எதிராக மக்கள் முணுமுணுக்கவில்லை. எனக்கு எதிராக செய்கிறார்கள். ஆகவே, கவலை கொள்ளாதே என்றார்.

    இயேசுவின் காலத்தில் எருசலேமை நோக்கி அழுது புலம்பினார். (லூக் 13:34) “பேதுரு இயேசுவிடம் சகோதரன் ஒருவனை ஏழு முறை மன்னிக்கலாமா? என்று கேட்க, அவர் பல முறை மன்னிக்க வேண்டும், மன்னிப்பதில் எண்ணிக்கையில்லை“ என்றார். சகிப்பு தன்மை இருந்தால் தான் மனதிற்கு இளகிய நிலை என்பது சாத்தியமாகும்.

    இயேசு தனக்கு ஏற்பட்ட அனைத்து துன்பங்களையும் சகித்து கொண்டார். சிலுவையில் தொங்கும் போது கூட, “தந்தையே, இவர்களை மன்னியும், இவர்கள் என்ன செய்வதென்று அறியாமல் செய்கிறார்கள்“ என்று சகித்து கொண்டு அவர்களுக்காக தம் தந்தையிடம் பரிந்து பேசுகின்றார். நாமும் பலவீனப்பட்டவர்கள். நாம் ஒருவரை ஒருவர் ஏற்று, சகித்து கொண்டு வாழ்ந்தால் இந்த தவக்காலம் சகிப்பின் காலமாக அமையும் என்பதில் ஐயமில்லை.

    அருட்திரு பீட்டர்ராஜ், பங்குத்தந்தை, தவசிமடை.
    மற்றவர்களை மாற்ற முயற்சிக்காமல் நம்மையே நாம் மாற்றிக்கொள்ள இந்த தவக்காலத்தில் முயற்சி செய்வோம். அடுத்தவருடைய நன்மைக்காகவும், வளர்ச்சிக்காகவும் செயல்பட்டு மீட்பர் இயேசுவின் ஆசீர் பெறுவோம்.
    மன்னர் ஒருவர் இருந்தார். அவருக்கு தாங்க முடியாத தலைவலி வந்து விட்டது. அமைச்சர்கள், வைத்தியர்கள், அனைவரும் பல முறையிலும் குணமாக்க முயன்றும் முடியவில்லை. காட்டிலிருந்து முனிவரை அழைத்து வந்தால் சரியாகி விடும் எனக்கூறி அழைத்து வந்தனர். முனிவர், மன்னரை பார்த்து விட்டு, ‘மருந்துகள் உன்னை குணமாக்க முடியாது மன்னா!

    ஆனால், நீங்கள் பார்க்கும் இடமெல்லாம் பசுமையாக இருக்கும் படி பார்த்துக்கொள்ளுங்கள்,’ என்றார். உடனே அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது. அரண்மனை முழுவதும் பச்சை வர்ணம் பூசப்பட்டது. மக்களுக்கும் ஆணை அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் பசுமை புரட்சி ஏற்படுத்தப்பட்டது. சிறிது நாளில் மன்னனின் தலைவலி நீங்கியது.

    ஒருநாள் முனிவர் மன்னனை பார்க்க வந்தார். மன்னனை பார்த்து, ‘அரசே! அரண்மனைக்கு உங்களிடம் வர்ணம் பூச சொன்னது யார்? என்று கேட்க, ‘நீங்கள் தானே’ என்றார் மன்னர். உங்கள் பார்வையை மாற்றிக்கொண்டால் போதாதா? என்றார் முனிவர். என்ன சொல்கிறீர்கள்? ஆம். ஒரு பச்சைநிற கண்ணாடியை அணிந்து கொண்டால் போதுமே, பார்க்கிற யாவும் பச்சையாக தெரியுமே. பணத்தை வீணாக செலவு செய்து விட்டீர்கள் என்றார் முனிவர்.

    வாழ்க்கையை மாற்ற விரும்புகிறவர்கள் இந்த உலகத்தை பார்க்கிற பார்வையை மாற்றிக்கொள்வோம். மன்னரை போல பிறரை மாற்ற முயற்சி செய்வது வெற்றி பெறாது. குறுகிய காலத்திற்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம். எனவே, மற்றவர்களை மாற்ற முயற்சிக்காமல் நம்மையே நாம் மாற்றிக்கொள்ள இந்த தவக்காலத்தில் முயற்சி செய்வோம்.

    “தீயவரோ தாம் செய்த பாவங்கள் அனைத்தையும் விட்டு மனம் மாறி, என் நியமங்கள் அனைத்தையும் கைக்கொண்டு, நீதியையும் நேர்மையையும் கடைப்பிடித்தால் அவர்கள் வாழ்வது உறுதி” (எசேக்கியேல் 18:21)

    “தீமைக்கு பதில் தீமை செய்யாதீர்கள்; எல்லா மனிதரும் நலமென கருதுபவை பற்றியே எண்ணுங்கள். தீமை உங்களை வெல்ல விடாதீர்கள். நன்மையால் தீமையை வெல்லுங்கள்!” (உரோமையர் 12:17-21) என தூய பவுல் கூறுகின்றார். அடுத்தவருடைய நன்மைக்காகவும், வளர்ச்சிக்காகவும் செயல்பட்டு மீட்பர் இயேசுவின் ஆசீர் பெறுவோம்.

    அருட்திரு வி.டேவிட்ராஜ், பங்குத்தந்தை, ஒட்டன்சத்திரம்.
    “நீயே என் ஊழியன்... உன்வழியாய் நான் மாட்சியுறுவேன்” (எசாயா 49:3) பசுவின் பால் முழுவதும் கன்றுக்கில்லை. நமது பணிவாழ்வு தவக்காலத்தில் மட்டுமல்ல, வாழ்நாள் முழுவதுமே பயனுள்ள வாழ்வாக வாழ்வோம்.
    “நீயே என் ஊழியன்... உன்வழியாய் நான் மாட்சியுறுவேன்” (எசாயா 49:3) பசுவின் பால் முழுவதும் கன்றுக்கில்லை. பூவின் நறுமணம் முழுவதும் சோலைக்கில்லை. அனைத்து உயிர்களுமே பிறருக்கு உழைக்க காண்கின்றேன். என் வாழ்வும், பிறருக்கு உழைக்க வேண்டுமையா என்பது போல மனிதராக பிறந்த நாம் அனைவருமே ஊழியர்களாக (தொண்டர்களாக) வாழத்தான் அழைக்கப்பட்டிருக்கின்றோம்.

    இறைவனால் அழைக்கப்பட்ட, தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருமே திருவிவிலியத்தில் ஊழியன் என்ற அடைமொழியில் குறிப்பிடப்படுகின்றனர். இறைவன் தேர்ந்த ஆபிரகாம், ஆபிரகாமின் வழிமரபினராகிய யாக்கோபு, எகிப்திலிருந்து மக்களை வழி நடத்திய மோசே, இஸ்ராயேலை ஆள அபிஷேகம் செய்யப்பட்ட தாவீது மற்றும் யோபு, எசாயா, எரேமியா, எசேக்கியேல், திருமுழுக்கு யோவான், இறுதியாக தன்மகன் இயேசு கிறிஸ்து என திருவிவிலியத்தில் ஊழியன் என்ற சொல்லாடல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

    ஆண்டவர் இயேசுவும் ‘பணியாளர்’ என்ற வார்த்தையை இதே பின்னணியில் தன் அன்பு சீடர்களுக்கு பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது. நாம் அனைவரும் இறைவனின் பார்வையில் விலையேறப்பெற்றவர்கள். (எசாயா 49:5) நமது வாழ்வும் பணியும் இறைவனை மாட்சிப்படுத்துவதாக இருக்க வேண்டும். அனைவரையும் நமது அன்பால், பணிவாழ்வால் இறைவனிடம் கொண்டு வந்து சேர்க்க வேண்டும். ஆண்டவரின் பிரதிநிதியாக இருந்து அவரை அறிவிக்க வேண்டும். நமது பணியின் வழியாக அவரை நாம் வாழும் சமுதாயத்தில் பிரசன்னப்படுத்த வேண்டும். இறைவனின் அன்பு பிள்ளைகளாக, அவரின் சாட்சிகளாக நாம் வாழ வேண்டும்.

    எனவே தான் “அன்பர் பணி செய்ய எனை ஆளாக்கி விட்டாய். இன்பநிலை தானே வந்து எய்தும் பராபரமே” என்ற கூற்றிற்கு சொந்தக்காரர்கள் ஆவோம். அப்போது நமது பணிவாழ்வு தவக்காலத்தில் மட்டுமல்ல, வாழ்நாள் முழுவதுமே பயனுள்ள வாழ்வாக வாழ்வோம்.

    அருட்பணி. அ.ஜோசப் செல்வராஜ், வட்டார அதிபர், மாரம்பாடி.
    இயேசு பிரான் எடுத்துரைத்த செய்தியைப் பின்பற்றி, சகோதர நேயத்தோடு மனிதாபிமானத்தோடு வாழ்வோம். அவரின் நற்செய்தியை மீண்டும் மீண்டும் எண்ணிப் பார்ப்போம். வாழ முற்படுவோம்.
    நற்செய்தியாளர் புனித லூக்கா எழுதிய நற்செய்தியை உற்று நோக்குவோம். இந்த அத்தியாயத்தில் இயேசு பணக்காரர், ஏழை பற்றி எடுத்துரைக்கிறார்.

    நிறைந்த செல்வம் வைத்திருக்கும் பணக்காரர் ஒருவர் இருந்தார். அவர் நாள்தோறும் விலை உயர்ந்த ஆடைகளை அணிவார். தினமும் அறுசுவை விருந்துண்பார். எப்பொழுதும் இன்பமாக இருப்பார். ‘லாசர்’ என்ற பெயர் கொண்ட ஏழை ஒருவர் இருந்தார். அவர் உடல் முழுவதும் புண்ணாக இருந்தது. அவர் அந்தப் பணக்காரனின் வீட்டு வாசல் அருகே கிடந்தார்.

    அவர் பணக்காரரின் மேஜையில் இருந்து விழும், சில உணவுப் பருக்கைகளை உண்டு பசியாற விரும்பினார். நாய்கள் வந்து அவரது புண்களை நக்கும். ஒருநாள் அந்த ஏழை இறந்தார். வானத் தூதர்கள், அவரை அபிரகாமின் மடியில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். பணக்காரரும் இறந்தார். அவர் அடக்கம் செய்யப்பட்டார். அவர் பாதாளத்தில் வதைக்கப்பட்டார். அண்ணாந்து பார்த்தார்.

    மிகத் தொலைவில் அபிரகாம் இருப்பதையும், அவர் மடியில் லாசர் கிடப்பதையும் கண்டார். அங்கிருக்கும் மகிழ்ச்சியை கண்ட அவர் அபிரகாமைப் பார்த்து, “அபிரகாமே! என் மேல் இரங்கும். லாசர், தன் விரல் நுனியைத் தண்ணீரில் நனைத்து என் நாவைக் குளிரச் செய்ய அவரை இங்கு அனுப்பும். நான் இங்கு தீப்பிழம்பில் வேதனைப்படுகிறேன்” என்று மிகவும் சப்தத்துடன் கூறினார்.

    அதற்கு அபிரகாம் அந்தச் செல்வந்தரை நோக்கி, “மகனே! நீ, இவ்வுலகில் வாழ்ந்தபோது, நலன்களையே பெற்றாய். அதே சமயத்தில் லாசர் துன்பங்களையே அடைந்தார். அதை எண்ணிப் பார். அவர் இப்பொழுது ஆறுதல் பெறுகிறார். நீயோ மிகுந்த வேதனைப்படுகிறாய். அதுமட்டுமல்ல, உங்களுக்கும் எங்களுக்கும் இடையில் பெரும் பிளவு இருக்கிறது. அதனால் இங்கிருந்து ஒருவர் அங்கு வர விரும்பினாலும் வர இயலாது; அங்கிருந்து நீங்களும் எங்களிடம் கடந்து வர இயலாது” என்றார்.

    உடனே அந்தப் பணக்காரர், அபிரகாமை நோக்கி, “தந்தையே! அவரை என் தந்தை வீட்டிற்கு அனுப்பும்படி உம்மை வேண்டுகிறேன். எனக்கு ஐந்து சகோதரர்கள் இருக்கிறார் கள். அவர்களும் வேதனையான இந்த இடத்திற்கு வந்து விடக்கூடாது. அவர்களை எச்சரிக்கலாமே” என்றார்.

    அதற்கு அபிரகாம் மறுமொழியாக, “மோசேயும், இறைவாக்கினர்களும் அவர்களுக்கு உண்டு. அவர்களுக்கு இவர்கள் செவி சாய்க்கட்டும்” என்றார்.

    அதற்கு அந்தச் செல்வந்தர், அபிரகாமை நோக்கி, “தந்தை அபிரகாமே! இறந்த ஒருவர், அவர்களிடம் போனால் அவர்கள் மனம் மாறுவார்கள்” என்றார்.

    “மேசேக்கும், இறைவாக்கினருக்கும் செவி சாய்க்காதவர்கள், இறந்த ஒருவர் உயிர்த்து எழுந்து அவர்களிடம் போனாலும் நம்ப மாட்டார்கள்” என்று அபிரகாம் கூறினார்.

    இயேசு பிரான் சொன்ன செய்தியில் இருந்து சில உண்மைகளை நாம் உணர வேண்டும்.

    ‘செல்வத்து பயனே ஈதல்’ என்று கூறுகிறது தமிழ் மரபு. பிறருக்குக் கொடுத்தல் என்பதுதான் இயல்பானது. செல்வந்தர்கள் இதற்கு முரண்படுபவர்களாக இருக்கக் கூடாது. எளிமையாக, மக்களின் அன்றாட வாழ்க்கையில் நடை பெறும் ஒரு நிகழ்வாக மக்கள் உணர, இச்சம்பவத்தை இயேசு பிரான் எடுத்துரைக்கிறார்.

    இந்த உலகில் துன்பங்களை அனுபவிப்பவர்கள், மறு உலகில் இன்பம் அடைகின்றனர். இவ்வுலகம் நிரந்தரமானது அல்ல. மனிதர்கள் அனைவரும் ஒருநாள் மறைந்தே தீர வேண்டும். ஆகவே மனித நேயத்தோடு வாழ வேண்டும் என்பதுதான் அடிப்படையான தத்துவம் ஆகும்.

    “ஊசியின் காதில் ஒட்டகம் நுழைந்தாலும் நுழையலாம்; ஆனால் செல்வந்தன் பேரின்பத்தை அடைய மாட்டான்” என்று வேறு ஓர் இடத்தில் இயேசு பிரான் கூறுவதையும் எண்ணிப் பார்த்து செயல்பட வேண்டும்.

    சிந்தனை:

    இந்தச் சம்பவத்தை மீண்டும் நம் நினைவுக்குக் கொண்டு வருவோம். இருவேறு வாழ்க்கை வாழும் இரண்டு மனிதர்களை நமக்குக் காட்டுகிறார். தினமும் பகட்டான ஆடை உடுத்தி அன்றாடம் விருந்து உண்ணும் செல்வந்தர் ஒரு பக்கம்; சிதறும் உணவுக்காக ஏங்கும் ஏழை மறுபக்கம். அதுமட்டுமல்ல, உடல் முழுவதும் புண்ணாகி, நாய்கள் அப்புண்ணை நக்கிக் கொண்டிருக்கும் நிலையை நமக்குக் காட்டுகிறார்.

    இவ்வளவு இழிவான தன்மையில் வாழ்ந்து கொண்டிருக்கும் இவருக்கு இரக்கம் காட்டாத செல்வந்தர் இறந்த பிறகு நடக்கும் நிகழ்வையும் சுட்டிக் காட்டுகிறார்.

    பேரின்ப வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கும் அந்த ஏழை லாசர், இவ்வுலகில் வாழ்ந்தபோது செல்வந்தரால் கொஞ்சம்கூட கவனிக்கப்படவில்லை.

    துன்பம், துயரம் போன்றவைகளை இவ்வுலகில் காணாத செல்வந்தர், பாதாளத்தில் ஒரு கணம்கூட இருக்க முடியவில்லை. நா வறட்சியால் துடிக்கிறார். ஏழை லாசரின் விரல் நுனியால் நீர் தொட்டு, தன் தாகத்தைத் தீர்க்க வேண்டி கெஞ்சுகிறார். தனக்கு ஏற்பட்ட துன்பம், தன்னைச் சார்ந்து வாழ்ந்த தனது சகோதரர்களுக்கு ஏற்பட்டு விடக்கூடாது என்ற ஏக்கத்தில் தவிக்கிறார்.

    இவற்றையெல்லாம் சிந்தித்துப் பார்த்து, எப்படி வாழ வேண்டும்? எப்படி வாழக்கூடாது? என்பதற்கு இயேசு பிரான் எடுத்துரைத்த இச்செய்தியைப் பின்பற்றி, சகோதர நேயத்தோடு மனிதாபிமானத்தோடு வாழ்வோம். அவரின் நற்செய்தியை மீண்டும் மீண்டும் எண்ணிப் பார்ப்போம். வாழ முற்படுவோம்.
    நம் பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட காலம் அர்த்தமுள்ளதாக அமையவேண்டும். நாம் வாழும் காலம் நமக்கு மட்டுமின்றி பிறருக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும்.
    தவக்காலத்தின் தொடக்கமே, “மனிதனே நீ மண்ணாக இருக்கிறாய், மண்ணுக்கு திரும்புவாய், மறவாதே” என்ற அறிவுறுத்தலை ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் முன் வைக்கிறது. நம் பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட காலம் அர்த்தமுள்ளதாக அமையவேண்டும். நாம் வாழும் காலம் நமக்கு மட்டுமின்றி பிறருக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும்.

    இதுபோன்ற பயனுள்ள வாழ்வை வாழ்ந்து காட்டியவர் இயேசு கிறிஸ்து. அவர், தூய ஆவியால் நிறைந்தவராய் சென்ற இடமெல்லாம் நன்மை செய்து கொண்டே இருந்தார் என்று இயேசுவின் வாழ்வுக்கு திருவிவிலிய வரிகள் சான்று பகர்கின்றன. 33 ஆண்டுகள் உலகில் வாழ்ந்த இயேசு, தன் இறுதி மூன்றாண்டுகள் சமூகப்பணி வாழ்க்கைக்கு முன் 40 நாட்கள் உண்ணாநோன்பு மேற்கொண்டார்.

    சாத்தானை வென்று சரித்திரம் படைத்தார். சகல துன்பங்களையும் அவமானங்களையும் தாங்கி சிலுவை சாவிற்கு தன்னையே அர்ப்பணித்தார். எந்த மனிதரும் ஏற்காத அவரது சிலுவை மரணமும், உயிர்ப்பும் இன்று வரை இயேசுவை உயிருள்ள தெய்வமாக உலகிற்கு வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறது.



    மரணித்து விட்டால் திரும்ப கிடைக்குமா இந்த உடல்? எனவே தூய ஆவியின் ஆலயமாக விளங்கும், நம் உடலுக்கு கேடு விளைவிக்கும் வேண்டாத பாவச்செயல்களை விட்டொழிப்போம். இறந்து விட்டால் திரும்பக்கிடைக்குமா இதே வாழ்வும், உறவும்? ஆகவே அறுபட்ட உறவுகளை ஒன்றிணைப்போம், உடைந்த உறவுகளை சீராக்குவோம். மடிந்த பின் இந்நாட்டிற்கும், நகருக்கும் திரும்பி வருவோமா? எனவே சாதி, மத, இன, மொழி பேதமை தவிர்த்து பரந்த மனதுடன் பலரையும் நேசிப்போம்.

    ‘இன்றே இறக்கப்போகிறேன் என்ற மனநிலையோடு வாழ்’ இது புனித பெரிய அந்தோணியாரின் கூற்று. இதை மனதில் வைத்து இன்றே வாழ பழகுவோம். நன்றே செய்வோம், அதையும் இன்றே செய்வோம். இறையருள் நம்மை வாழி நடத்தி பாதுகாக்கட்டும்.

    அருட்திரு. சுரேஷ், மறைக்கல்வி ஒருங்கிணைப்பாளர், என்.ஜி.ஓ.காலனி பங்கு, திண்டுக்கல்.
    இறைவனின் அளவற்ற மன்னிப்பை பெற்று மகிழும் பேறுபெற்றுள்ள நாம், பிறரையும் மன்னித்து ஏற்க வேண்டும் என்பது அவரது விருப்பம். இத்தகைய அன்பே மன்னிக்கும் பேரன்பு ஆகும்.
    “பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பிரிவு காட்டுபவர் இறைவன்” என்கிறது திருவாசகம். அதுபோல் இறைவனின் எல்லையற்ற பேரன்பை திருவிவிலியம் முழுவதும் உணர்ந்தாலும் இயேசு கூறும் ‘காணாமல் போன மகன்’ என்னும் உவமை (லூக் 15:11-32) அன்பின் விளக்கத்தை தெளிவாக நமக்கு உணர்த்துகிறது.

    செல்வ சுகபோகங்களில் மூழ்கி பாவ வாழ்வில் திளைத்து மனம் போன போக்கில் வாழ்ந்த இளையமகன், செல்வ செழிப்பின் நிலையற்ற தன்மையை உணர்ந்தான். பாவ வாழ்வுக்கு கிடைத்த தண்டனையாக மனித மாண்பை இழந்த நிலையில் தன்னிலை உணர்ந்து மனம் வருந்தினான். மீண்டும் தந்தையின் அன்பை நாடினான்.

    எட்டி உதைக்கும் பிள்ளையை கட்டி அணைக்கும் தாய் போல மகனின் வருகைக்காக காத்திருந்த தந்தையும் பேரன்போடு பரிவுகாட்டி அரவணைக்கிறார். இந்த தந்தையின் அன்பு, தாயின் அன்பை மிஞ்சிய பேரன்பாகும். “இடறி விழுவது பலவீனம். அதில் விழுந்தே கிடப்பது மதியீனம்“. மாறுவது மனித இயல்பாக காட்டப்பட்டாலும் அதிலிருந்து மீள்வதே மகத்தான வாழ்வுக்கு மகுடம் சூட்டும்.



    சரண் அடைந்தவருக்கு இறைவன் அரணாவார். தன்னிலை அறிந்து, தவறுகள் களைந்திட ஒவ்வொருவரும் முன்வர வேண்டும். “உங்கள் கவனத்தை உங்கள் அகம் நோக்கி குவியுங்கள்” என்கிறார் பரமஹம்ச யோகானந்தர்.

    தம்பியை ஏற்றுக்கொள்ள மனமில்லாத மூத்த மகன் போன்று, பிறரது குறைகளை மிகைப்படுத்தி, அவர்களை ஏற்றுக்கொள்ளாத ‘மனோபாவம்‘ மாற வேண்டும். இத்தகைய மனநிலையே தன்னை சுற்றியுள்ள சமுதாயத்திலும் பல பிரிவினைகளை உண்டாக்கி, ஒதுக்கி வைத்து, பிரித்தாளும் கசப்பான மனநிலையை உருவாக்குகிறது.

    எனவே, வாழ்க்கை என்ற அழகிய பயணத்தில் அன்பின் பதிவுகளை விட்டு செல்வோம். நிபந்தனையற்ற அன்பையும், இரக்கத்தையும் கடவுள் தமது மன்னிப்பின் வழியாக நம்மிடம் வெளிப்படுத்துகின்றார். இறைவனின் அளவற்ற மன்னிப்பை பெற்று மகிழும் பேறுபெற்றுள்ள நாம், பிறரையும் மன்னித்து ஏற்க வேண்டும் என்பது அவரது விருப்பம்.

    மனித மனங்கள் கலங்குவது அணுகுண்டுகளால் மட்டுமல்ல, அன்பற்ற இதயங்களாலும் தான். ‘அன்பெனும்‘ உளிகொண்டு பாறைகளையும் சிற்பங்கள் ஆக்குவோம். இத்தகைய அன்பே மன்னிக்கும் பேரன்பு ஆகும்.

    அருட்சகோதரி. பீ.இன்பென்டா,

    மரியின் ஊழியர் சபை, திண்டுக்கல்.
    உங்கள் வியாதிகள் எத்தனை கொடியதாக இருந்தாலும் அது நம் அருமை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பார்வையில் அற்ப காரியம். அவரையே அண்டிக் கொள்ளுங்கள். பூரண சுகத்தை நிச்சயம் உங்களுக்கு அருளுவார்.
    பிரியமானவர்களே! ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் வாழ்த்துக்கள்!

    கர்த்தர் உணர்த்திய வார்த்தைகளை தேவசெய்தியாக உங்களுக்கு எழுதுகிறேன். வாசித்து கர்த்தருக்குள் விசுவாசத்தோடு ஏற்றுக் கொண்டு ஜெபியுங்கள். கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்.

    போராட்டங்களில்...

    “கர்த்தாவே, பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும், உதவிசெய்கிறது உமக்கு லேசான காரியம். எங்கள் தேவனாகிய கர்த்தாவே, எங்களுக்குத் துணை நில்லும். உம்மைச் சார்ந்து உம்முடைய நாமத்தில் ஏராளமான இந்தக் கூட்டத்திற்கு எதிராக வந்தோம். கர்த்தாவே, நீர் எங்கள் தேவன். மனுஷன் உம்மை மேற்கொள்ள விடாதேயும் என்றான்”. (2.நாளா.14:11)

    இக்காலங்கள் மிகவும் கொடியதும், நாட்கள் பொல்லாதவைகளுமாக இருக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். எல்லா பக்கங்களிலும் சொல்ல முடியாத போராட்டங்களோடு மக்கள் வாழ்ந்து வருவதுதான் இந்நாட்களின் நிலைமையாகும்.

    இச்சூழ்நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும்? மனுஷனை நம்புவதை கர்த்தர் ஒருநாளும் விரும்புகிறவரல்ல.

    ஆசா என்ற ராஜாவுக்கு விரோதமாக எத்தியோப்பியனாகிய சேரா என்பவன் பெரிய மாபெரும் சேனையோடு யுத்தம் பண்ண எதிரிட்டு வந்தபோது ராஜாவாகிய ஆசா செய்த முதல் காரியம் ‘ஜெபம்’ ஆகும்.

    இரண்டாவதாக, தன் ஜெபத்தில் அவர் குறிப்பிட்டுள்ள வார்த்தைகளை வாசித்துப் பார்க்கும்போது தன்னுடைய பெலத்தை நம்பாமல் கர்த்தருடைய பெலனை முற்றிலும் சார்ந்து கொள்கிறவன் என்பதைக் காண முடியும்.

    இதுதான் கர்த்தருடைய பிள்ளைக்கும், உலகப் பிரகாரமானவர்களுக்கும் உள்ள வித்தியாசம் ஆகும். ஆம், உங்கள் வாழ்விலும் ஏதாகிலும் போராட்டத்தின் வழியாக கடந்து வந்துக் கொண்டிருக்கிற இந்நாட்களில் ஆசா ராஜா ஒரு முன்மாதிரியாகும்.

    சிலர் கர்த்தருடைய பெலனையும் அவர் களுடைய சுயபெலனையும் வைத்துக் கொண்டு போராடுவார்கள். அது முற்றிலும் தோல்வியில் தான் முடிகிறது.

    இயேசு சொல்கிறார், ‘இவ்வுலகில் நமக்கு உபத்திரவங்கள் உண்டு. ஆனாலும் போராட்டங்களை மேற்கொள்ள நாம் செய்ய வேண்டியது என்ன? தேவனை நோக்கி பிரார்த்தனை செய்து முற்றிலுமாய் அவரை சார்ந்து கொள்ளுங்கள்’.



    ‘கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்ன செய்வான்’ (எபி :13:6)

    மேலும், ‘எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன். வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்’ (சங் : 121:1,2) என்று வாய்களைத் திறந்து அறிக்கை செய்து கர்த்தரைத் துதியுங்கள். உங்கள் போராட்டங்களிலிருந்து மாபெரும் வெற்றியைக் காண்பது நிச்சயம்.

    வியாதிகளில்...

    “கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மன உத்தமமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம் பண்ணி, எசேக்கியா மிகவும் அழுதான். நீ போய் எசேக்கியாவை நோக்கி: உன் தகப்பனாகிய தாவீதின் தேவனாயிருக்கிற கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்்் உன் கண்ணீரைக் கண்டேன். இதோ, உன் நாட்களோடு பதினைந்து வருஷம் கூட்டுவேன்” (ஏசா:38:3,5).

    எனக்கன்பானவர்களே! போராட்ட நேரங்களில் மட்டுமல்ல பெலவீனங்கள் மற்றும் வியாதிகளிலும் ஜீவனுள்ள தெய்வமாகிய ஆண்டவராகிய இயேசுவை அண்டிக்கொள்கிறவர்கள் நிச்சயம் பாக்கியவான்கள்.

    உதாரணமாக, வியாதியின் படுக்கையில் ராஜாவாகிய எசேக்கியாவின் விண்ணப்பத்தையும் அதற்கு கர்த்தர் அளிக்கும் பதிலையும் ஏசா: 38:3,5 வசனங்களில் காண்கிறோம் அல்லவா.

    உங்கள் வியாதிகளைவிட இயேசு பெரியவர் என்பதை மறந்து போகாதீர்கள். உலகப்பிரகாரமான மருத்துவருடைய ஆலோசனைக்கு கட்டாயமாக நீங்கள் செவி கொடுக்க வேண்டும். அதே வேளையில் பூரண சுகத்தைக் கொடுப்பது தேவனுடைய கரத்தில் அல்லவா இருக்கிறது.

    வேதம் கூறுகிறது, “விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்” (யாக்.5:15). மேலும் நம் அருமை ஆண்டவர் ‘என் நாமத்தினால் நீங்கள் எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன்’ என்று யோவான்: 14:14-ல் வாக்கு அருளியுள்ளார் அல்லவா?

    அவர் மாம்சத்திலிருந்த நாட்களில் ‘சகல வியாதியஸ்தர்களையும் குணமாக்கினார்’ (மத்:4:24).

    அதுமட்டுமல்ல, ‘அவரைத்தொட்ட யாவரும் சுகமானார்கள்’ என மாற்கு 6:56 கூறு கிறது எத்தனை உண்மை.

    ஆகவே உங்கள் வியாதிகள் எத்தனை கொடியதாக இருந்தாலும் அது நம் அருமை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பார்வையில் அற்ப காரியம். அவரையே அண்டிக் கொள்ளுங்கள். பூரண சுகத்தை நிச்சயம் உங்களுக்கு அருளுவார். நீங்கள் பாக்கியவான்களாக இருப்பீர்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

    சகோ.ஜி.பி.எஸ். ராபின்சன், இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள், சென்னை-71.
    கடவுளின் அன்பைப் பிரதிபலிப்பதே பரிசுத்தம். கடவுளுக்கேற்றபடி அன்பு, அமைதி, சந்தோஷத்தை வெளிப்படுத்துவதே பரிசுத்தம். கடவுள் ஐக்கியத்தின் பிரதிபலிப்பு தான் பரிசுத்தம்.
    தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னவென்று பகுத்தறியதக்கதாக உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள் ( ரோமர் -12:2 )

    தந்தை ஒருவர் இறப்பதற்கு முன்பு ஒரு பெரிய வீட்டை தன் மகன்களிடம் கட்டசொன்னார். அந்த வீட்டை மிக மிக சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றார். அந்த வீட்டை சுற்றிலும் அழகான பூந்தோட்டம் அமைத்து அதனை நன்றாக பராமரிக்க வேண்டும் என்றார். சில காலங்களுக்குப்பிறகு தந்தை இறந்து விட்டார். மகன்கள் தந்தையின் விருப்பப்படி அழகான வீட்டை கட்டி அதற்குள் ஒரு சிறுதூசி கூட இல்லாதபடி தினமும் சுத்தமாக வைத்திருந்தனர்.

    அழகான பூந்தோட்டம் அமைத்து மிகச்சிறப்பாக பராமரித்தனர். ஆனால் ஒரு வேடிக்கை என்னவென்றால் வீட்டை சுத்தமாக வைப்பதற்கும், பூந்தோட்டத்தை பராமரிப்பதற்கும் அதிகமாக கவனம் செலுத்திய அவர்கள் ஒருபோதும் அந்த வீட்டை தங்குமிடமாக உபயோகிக்கவில்லை. தந்தை சொன்னபடி செய்த போதிலும் தந்தையின் நோக்கம் அவர்களுக்கு விளங்கவில்லை.

    சிலருடைய ஆன்மிக வாழ்க்கையும் இப்படியாகவே உள்ளது. அவர்கள் தங்களின் வாழ்க்கையை மிகச்சுத்தமாக வைத்துக் கொள்வதுதான் கடவுளின் விருப்பம் என்று எண்ணி அதில் கவனமாயிருக்கின்றார்கள்.



    அவர்கள் எதைச்செய்தாலும், எங்குபோனாலும் பரிசுத்தம் பரிசுத்தம் என்று மட்டும் சிந்திக்கின்றனர். அவர்கள் அசுத்தத்திற்கும், ஆகாதவைகளுக்கும் இடம் தராமல் அவற்றை தூரமாக்குகின்றனர். தங்களை ஏதாவது ஒன்று தீட்டுபடுத்திவிடுமோ? என்று மிகவும் ஜாக்கிரதையாக இருக்கின்றனர்.

    ஆனால் இந்த பரிசுத்தத்தின் மேல் உள்ள கடவுளின் நோக்கம் அவர்களுக்குத் தெரியவில்லை. நாம் கடவுளின் உறவில் வாழ வேண்டும். கடவுள் நம்மோடு தங்கி நம்மை வழி நடத்த வேண்டும். நம் மூலமாக கடவுள் தம்முடைய அன்பை, கிருபையை, கருணையை, அனேகருக்கு வெளிப்படுத்த வேண்டும். பரிசுத்தராகிய தேவன் நம்மோடு தங்கியிருந்து செயல்படுவதற்காகத்தான் கடவுள் நம்மிடம் பரிசுத்தத்தை எதிர்பார்க்கின்றார்.

    சிலரிடம் சுத்தம் உண்டு. ஆனால் அது பரிசுத்தம் அல்ல. அது சுயபலத்தால் சாதிக்கப்பட்ட சுயநீதி வாழ்க்கை. பரிசுத்தம் என்பது கடவுள் உறவு சார்ந்தது. கடவுளின் அன்பைப் பிரதிபலிப்பதே பரிசுத்தம். கடவுளுக்கேற்றபடி அன்பு, அமைதி, சந்தோஷத்தை வெளிப்படுத்துவதே பரிசுத்தம். கடவுள் ஐக்கியத்தின் பிரதிபலிப்பு தான் பரிசுத்தம். நம்மைச் சுத்தம் செய்து கொண்டேயிருப்பது பரிசுத்தம் அல்ல. கடவுள் உறவினை அதிகமாக நமக்குள் தேடுவதே பரிசுத்தம்.

    “தாழ்த்திக் கொள்கின்ற நிலையில் நீ நல்லவனாயிரு

    உன்னை உயர்த்த வேண்டிய நிலையில் கடவுள் வல்லவராயிருப்பார்“

    -சாம்சன் பால்
    பிறர் நமக்கு எதிராக எந்த வகையிலும் செய்கிற துரோகங்கள், குற்றங்களை மனதார மன்னிப்போம். நாம் மாறினால் இந்த உலகமே மாற்றமடையும்.
    இறைவன் நம் மீது காட்டும் மன்னிப்பும், இரக்கமும் நாம் அதை பிறருக்கு வெளிப்படுத்த வேண்டும் என்பதற்கே. ஜெர்மனியில், ஹிட்லர் ஆட்சிக்காலத்தில் அவருடைய நாஜி படை முகாமில் கொடுமைப்படுத்தப்பட்டவர்களில் இரண்டு நண்பர்கள் இரு வேறுபட்ட மனநிலையில் இருந்தனர். அந்த இருவரும் விடுதலை செய்யப்பட்ட பிறகு பல ஆண்டுகளுக்கு பின் சந்தித்து கொண்டனர்.

    அப்போது முதலாமவர் மகிழ்ச்சியாக காணப்பட்டார். அதற்கு காரணம், தன்னை கொடுமைப்படுத்தியவர்களை அவர் மன்னித்து விட்டார். அதனால் அவருக்கு மகிழ்ச்சி கிடைத்தது. இரண்டாமவர், சோர்ந்து நோய்வாய்ப்பட்டு மகிழ்ச்சியில்லாமல் இருந்தார். அதற்கு காரணமும் இருந்தது. அவர், பகைவர்களை மன்னிக்கவில்லை.

    ‘மன்னிப்பு‘ என்ற மதிப்பீட்டிற்கு ‘உரு‘ கொடுத்தவர் இயேசு. இறைவன் நமக்குத்தரும் மன்னிப்பு அனுபவம் என்பது சுழற்சியானது. அவர் நமக்கு கொடுத்ததை நாமும் பிறருக்கு கொடுக்க வேண்டும். இந்த சுழற்சி நின்று விடும் போது மனிதநேயமும், பிறரன்பும் இல்லாமல் போய்விடும். நம்மில் பலர் உடலில், உள்ளத்தில், உறவுகளில் நோயாளிகளாக இருக்கின்றோம்.



    இந்த நோய்களுக்கு காரணிகளாக இருப்பது அறியாமை, பிடிவாதம், மனக்கசப்பு, பகை, வெறுப்பு, கோபம் ஆகியவையே. இதற்கு காரணமானவர்களை நாம் மன்னிக்கும் போது மன்னித்தவர்களை ஏற்று, அன்பு செய்து, அவர்களுக்கு உதவும்போது வானக தந்தையின் மக்களாக நாம் சான்று பகரமுடியும். (மத் 5:45)

    நண்பர்களையும், பகைவர்களையும் ஒரே விதமாக பார்க்கும் மனப்பக்குவம் மன்னிப்பின் முழுமையை காட்டுகிறது. மன்னிக்கும் போது மனதில் ஆற்றல் பெருகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். எனவே மன்னிப்பு ஒரு அருமருந்து. நாம் ஒருவரை ஒருவர் மன்னிக்காத போது நம்மை இறைவன் மன்னிக்க வேண்டும் என எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம்? “பிதாவே, இவர்கள் செய்கிறது இன்னதென்று அறியாமல் செய்கிறார்கள். இவர்களை மன்னியும்“ (லூக் 23:34) என்றார் இயேசு.

    எனவே, பிறர் நமக்கு எதிராக எந்த வகையிலும் செய்கிற துரோகங்கள், குற்றங்களை மனதார மன்னிப்போம். நாம் மாறினால் இந்த உலகமே மாற்றமடையும். அப்போது தான் அன்பு, அமைதி, மகிழ்ச்சி, உண்மை, சமத்துவம், சகோதரத்துவம் போன்ற மதிப்பீடுகள் ஓங்கி உயர்ந்து நிற்கும்.

    டி.செபாஸ்டின், வேதியர், புனித தோமா அருட்பணி மையம், திண்டுக்கல்.
    நற்செய்தியைப் படிக்கும் நாமும் அன்பால் சாதிக்க முடியும்; அன்பு ஒன்றுதான் பலம் வாய்ந்தது என்பதை உணர்ந்து, நற்செய்தி வழி நடப்போமாக.
    ‘நிலையான வாழ்வு’ பெறுவது எப்படி என்பதை இயேசு கூறுவதில் இருந்து உணரலாம். முதலில் நிலையான வாழ்வு என்பது என்ன? ‘நிலையான வாழ்வு’ என்பதற்கு ‘முடிவில்லாத வாழ்வு’ என்பதே பொருளாகும். இவ்வுலக வாழ்க்கை நிலைத்த வாழ்வு அல்ல. நிலையில்லாத இந்த உலகத்தில் இருந்து விடுபட்டு, பேரின்பமான வீட்டை அடைய வேண்டும்.

    புனித மத்தேயு இந்தச் செய்தியை அறிவிக்கிறார்.

    இயேசு பிரான், தன் சீடர்களை நோக்கி இவ்விதம் கூறு கிறார்:

    வான தூதர்கள் சுற்றி இருக்க, மாட்சிமை பொருந்திய அரியணையில், மானிட மகன் அமர்ந்திருப்பார். மக்கள் அனைவரும் அவர் முன்பு ஒன்று திரட்டப்படுவர்.

    ஓர் ஆயர் செம்மறி ஆடுகளையும், வெள்ளாடுகளையும் வேறு வேறாகப் பிரித்து, வலது பக்கத்தில் செம்மறியாடுகளையும், இடது பக்கத்தில் வெள்ளாடுகளையும் நிறுத்தி வைப்பதுபோல, அங்கிருந்த மக்களை அவர் வேறுவேறாகப் பிரித்து நிறுத்துவார்.

    பிறகு வலப்பக்கத்தில் இருப்பவர்களைப் பார்த்து, ‘என் தந்தையிடம் இருந்து ஆசீர் பெற்றவர்களே, வாருங்கள். இவ்வுலகம் தோன்றியது முதல், உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பேறுகளைப் பெற்றுக்கொள்ளுங்கள்’.

    ஏன் நான் இவ்விதம் கூறுகிறேன் என்றால், ‘நான் பசியாக இருந்தபொழுது நீங்கள் எனக்கு உணவு கொடுத்தீர்கள். தாகமாய் இருந்தேன். தாகத்தைத் தீர்த்தீர்கள். நோயுற்று இருந்தேன். என்னைக் கவனித்தீர்கள். அந்நியரான என்னை ஏற்றுக் கொண்டீர்கள். ஆடையில்லாமல் இருந்த எனக்கு ஆடை தந்தீர்கள். சிறையில் இருந்த என்னைத் தேடி வந்தீர்கள்’ என்றார்.

    இதைக் கேட்ட நேர்மையாளர்கள், ‘ஆண்டவரே! எப்பொழுது உங்கள் பசி கண்டு உணவளித்தோம்? தாகம் உள்ளவராக இருந்த உமக்குத் தாகத்தை எப்பொழுது தணித்தோம்? எப்பொழுது அந்நியராகக் கண்டு ஏற்றுக் கொண்டோம்? ஆடை எப்பொழுது அளித்தோம்? நோயுற்றவராக, சிறையில் இருந்தவராக எப்பொழுது இருந்தீர்? நாங்கள் எப்பொழுது நாடி வந்தோம்?’ என்று கேட்டார்கள்.

    அதற்கு அவர், ‘இச்சிறியோராகிய, என் சகோதர, சகோதரிக்குச் செய்ததை எல்லாம் எனக்கே செய்தீர்கள்’ என்றார்.

    பின்பு இடப்பக்கத்தில் இருப்பவர்களைப் பார்த்து, ‘சபிக்கப்பட்டவர்களே! என்னிடம் இருந்து தள்ளிச்செல்லுங்கள். சாத்தானுக்கும் அதன் தூதுவர்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற அணையாத நெருப்புக்குள் செல்லுங்கள். ஏனெனில் பசியாய் இருந்த எனக்கு நீங்கள் உணவு தரவில்லை. தாகமாய் இருந்தேன். தாகத்தைத் தணிக்கவில்லை. அந்நியராக இருந்த என்னை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆடை இல்லாமல் இருந்தேன். நீங்கள் எனக்கு ஆடை அளிக்கவில்லை. நோயிலும் சிறையிலும் இருந்த என்னை நீங்கள் கவனிக்கவில்லை.’ என்றார்.

    அதற்கு அவர்கள், ‘ஆண்டவரே! எப்பொழுது நீர், பசியாகவோ, தாகமாகவோ, அந்நியராகவோ, நோயுற்றவராகவோ, சிறையில் இருந்தவராகவோ இருந்தீர்’ என்று கேட்டார்கள்.



    அதற்கு அவர் மறுமொழியாக, ‘மிகச் சிறியோராகிய இவர் களுள், ஒருவருக்கு நீங்கள் எதையெல்லாம் செய்யவில்லையோ, அதை எனக்கும் செய்யவில்லை என, உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ஆகவே இவர்கள் முடிவில்லாத தண்டனையைப் பெறுவர். நேர்மையாளர்கள் நிலைத்த வாழ்வைப் பெறுவர்’ என்றார்.

    இருவேறுபட்ட இச்செய்திகளை எண்ணிப் பார்ப்போம்.

    நேர்மையாளர்களைச் செம்மறி ஆட்டின் கூட்டத்திற்கு ஒப்பிட்டும், வெள்ளாடுகளை நேர்மையற்றவர்களுக்கு ஒப்பிட்டும் கூறுகிறார். செம்மறி ஆடுகள் தன்னை மேய்ப்பவர்களுக்குக் கீழ்ப்படிந்து ஒற்றுமையாகச் செயல்படும். சாதுவாக இருக்கும். ஆனால் வெள்ளாடுகளோ பிரிந்தே செயல்படும். முரட்டுத் தன்மை உடையது. ‘வேலி தாண்டும் வெள்ளாடு’ என்பதுதான், வழக்குப் பேச்சு. ஆகவே அவர் காட்டும் ஒப்புமை, இயல்பும் இயற்கையும் இணைந்த ஒன்றாக இருக்கிறது.

    இவ்வுலக முடிவில், மனிதர்கள் எவ்வாறு பிரிக்கப்படு கிறார்கள் என்பதை இந்நற்செய்தி, தெளிவாக விளக்குகிறது.

    சிந்தனை:-

    இந்நற்செய்தியை இன்னும் ஆழமாக ஊன்றிப் படிப்போம். படிக்கும்பொழுது அதன் உட்பொருளை உணர்ந்து படிப்போம். இயேசு பிரானின் அடிப்படையான நோக்கமே, ஏழைகளுக்கு உதவிடு; தன்னைப்போல பிறரையும் நேசி என்பதுதான். இச்சிறியோரில் ஒருவருக்குச் செய்ததை எனக்கே செய்தாய் என்று சொல்வதில் இருந்தே, இயேசுவின் அடிப்படையான எண்ணம் எப்படிப்பட்டது என்பதை நம்மால் உணரமுடிகிறதல்லவா?

    ஒருவருக்கு ஒருவர் உதவி செய்வதும், குறிப்பாக கைவிடப்பட்டவர்களை நேசிப்பதும் அவர்களோடு அன்பைப் பரிமாற்றம் செய்து கொள்வதும்தான் கிறிஸ்தவக் கோட்பாடாகும்.

    நம்மில் எத்தனை பேர் இவற்றைப் பின்பற்றுகிறோம்? இயேசுவின் உண்மையான அந்தப் போதனைக்குச் செவிமடுக் கிறோமா? என்பதையெல்லாம் எண்ணிப்பார்க்க வேண்டும்? இந்த உலகில் எப்படி வாழ்கிறோம் என்பதைப் பொறுத்துத்தான், மறு உலகில் நமக்கான வாழ்வு அமைகிறது என்பதை எடுத் துரைக்கிறார். ஓர் ஆயர் வளர்க்கும் இரு வேறுபட்ட ஆடுகளை எடுத்துக்காட்டி மக்களுக்குத் தெளிவை ஊட்டுகிறார்.

    இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ‘கண்ணுக்குக் கண்’, ‘பல்லுக்குப் பல்’ என்ற நிலை இருந்தது. அந்தக் காலகட்டத்தில் இந்த உலகில் தோன்றிய இயேசு பிரான், அன்பை மட்டுமே போதித்து, மக்களை நெறிப்படுத்துகிறார். இந்த நற்செய்தியைப் படிக்கும் நாமும் அன்பால் சாதிக்க முடியும்; அன்பு ஒன்றுதான் பலம் வாய்ந்தது என்பதை உணர்ந்து, நற்செய்தி வழி நடப்போமாக!
    ×