என் மலர்
கிரிக்கெட் (Cricket)
20 வருடங்களுக்குப் பிறகு இறுதிப் போட்டியில் நேருக்குநேர் மோதும் இந்தியா- ஆஸ்திரேலியா
- 2003-ல் கங்குலி தலைமையிலான அணி இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை சந்தித்தது.
- தற்போது 20 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் இரு அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன.
50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. சொந்த மண்ணில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்தியா, தோல்வியை சந்திக்காமல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இரண்டு தோல்விகளை சந்தித்த ஆஸ்திரேலியா நேற்று தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இந்தியா லீக் ஆட்டங்களில் சிறப்பாக விளையாடி, நாக்அவுட்டில் சொதப்பும் நிகழ்வு கடந்த காலங்களில் நடைபெற்றது. 2015-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும், 2019-ல் நியூசிலாந்துக்கு எதிராகவும் தோல்வியடைந்திருந்தது. தற்போது அந்த தடையை தகர்த்துள்ளது.
இந்தியா இதுவரை உலகக் கோப்பையில் இதற்கு முன்னதாக மூன்று முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 1983-ல் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி இறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
2003-ம் ஆண்டு கங்குலி தலைமையிலான அணி இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. 2011-ல் தோனி தலைமையிலான அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இந்த மூன்று உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், 2003-ல் மட்டுமே ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டு தோல்வியடைந்தது. அதன்பின் தற்போது 20 ஆண்டுகள் கழித்து ஆஸ்திரேலியாவை இறுதிப் போட்டியில் எதிர்கொள்கிறது.
தற்போது இந்திய அணி சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இதனால் இந்தியாவுக்கு வாய்ப்பு அதிகம் என எதிர்பார்க்கப்படுகிறது.
2003 கதைக்களம் தற்போது உருவாகியுள்ளது. இதில் இந்தியா கிளைமாக்ஸை மாற்றி அமைக்கும் என இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
2003-ல் இந்தியா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்பிற்கு 359 ரன்கள் குவித்தது. ரிக்கி பாண்டிங் ஆட்டமிழக்காமல் 140 ரன்கள் விளாசினார். பின்னர் விளையாடிய இந்தியா 39.2 ஓவரில் 234 ரன்னில் சுருண்டு கோப்பையை தவறவிட்டது. சேவாக் 82 ரன்களும், டிராவிட் 47 ரன்களும் சேர்த்தனர்.








