search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    தனது சொந்த சாதனைக்காக விளையாடினார்- விராட் கோலியை விமர்சித்த சைமன் டவுல்
    X

    தனது சொந்த சாதனைக்காக விளையாடினார்- விராட் கோலியை விமர்சித்த சைமன் டவுல்

    • பாபர் அசாம் 2023 பிஎஸ்எல் தொடரின் போது சொந்த சாதனைக்காக விளையாடினார் என இவர் விமர்சித்திருந்தார்.
    • சாதனைக்காக விளையாடாமல் அணிக்காக விளையாடுங்கள் என்று வெளிப்படையாக விமர்சித்திருந்த சைமன் டவுல் தற்போது விராட் கோலியையும் நேரடியாக விமர்சித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 15-வது லீக் போட்டியில் பெங்களூர் அணியும் லக்னோ அணியும் மோதினர். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 20 ஓவர்களில் 212 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக விராட் கோலி 61, கேப்டன் டு பிளேஸிஸ் 79, மேக்ஸ்வெல் 59 என ரன்களை குவித்தனர்.

    அதைத்தொடர்ந்து 213 ரன்களை துரத்திய லக்னோ கடைசி பந்தில் 1 ரன் தேவைப்பட்ட போது மன்கட் செய்வதில் ஹர்ஷல் படேல் சொதப்பிய நிலையில் தினேஷ் கார்த்திக் ரன் அவுட் செய்வதில் சொதப்பியதால் லக்னோ போராடி த்ரில் வெற்றி பெற்றது.

    முன்னதாக இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூருக்கு 2019-க்குப்பின் சதமடிக்காமல் இருந்த கதைக்கு சமீபத்தில் முற்றுப்புள்ளி வைத்து முழுமையான ஃபார்முக்கு திரும்பிய விராட் கோலி ஆரம்பத்திலேயே அதிரடி துவக்கி விரைவாக ரன்களை சேர்த்தார்.

    குறிப்பாக தனது கேரியரிலேயே உச்சகட்டமாக பவர் பிளே ஓவர் முடிவதற்குள் 42 ரன்கள் குவித்த அவர் சரவெடியாக பேட்டிங் செய்தார். ஆனால் அரை சதத்தை தொட வேண்டும் என்பதற்காக சற்று மெதுவாக விளையாடிய அவர் அடுத்த 7 பந்துகளில் 8 ரன்களை எடுத்து 50 ரன்களைத் தொட்டார்.

    அதனால் அதிருப்தியடைந்த முன்னாள் நியூசிலாந்து வீரர் சைமன் டவுல் தன்னுடைய சொந்த சாதனைக்காக விராட் கோலி மெதுவாக விளையாடியதாக நேரலையில் விமர்சித்தார்.

    இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-

    விராட் கோலி அதிரடியாக தனது இன்னிங்சை துவங்கினார். அவர் அடித்து நொறுக்கும் ஷாட்டுகளை அடித்தார். ஆனால் 40 முதல் 42 ரன்களில் இருந்த போது அவர் 10 பந்துகளை எதிர்கொண்டு சொந்த சாதனைக்காக விளையாடினார். ஆனால் இந்த போட்டியில் அது போன்ற எண்ணத்துடன் விளையாடுவதற்கான இடமே இல்லை என்று நான் நினைக்கிறேன். குறிப்பாக இது போல விக்கெட்டுகள் கைவசம் இருக்கும் சூழ்நிலையில் நீங்கள் தொடர்ந்து அதிரடியாக விளையாட வேண்டும்.

    என்று கூறினார்.

    முன்னாதாக சமீப காலங்களில் அடித்து நொறுக்க வேண்டிய ஓப்பனிங் இடத்தில் தடவலாக செயல்பட்டு வரும் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 2023 பிஎஸ்எல் தொடரின் ஒரு போட்டியில் 83 (46) ரன்களில் இருந்த போது மெதுவாக விளையாடி அடுத்த 14 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து சதத்தை தொட்டது இறுதியில் அவருடைய அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

    அப்போது சாதனைக்காக விளையாடாமல் அணிக்காக விளையாடுங்கள் என்று வெளிப்படையாக விமர்சித்திருந்த சைமன் டௌல் தற்போது விராட் கோலியையும் நேரடியாக விமர்சித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×