search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    கோலிக்கு வயது 35- டெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை முறியடிப்பது கடினம்- லாரா
    X

    கோலிக்கு வயது 35- டெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை முறியடிப்பது கடினம்- லாரா

    • டெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை எட்டுவதற்கு கோலிக்கு இன்னும் 20 சதங்கள் தேவை.
    • ஆண்டுக்கு அவர் 5 சதங்கள் அடித்தாலும் கூட டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்வதற்கு அவர் மேலும் 4 ஆண்டுகள் தொடர்ந்து விளையாட வேண்டியது அவசியம்.

    புதுடெல்லி:

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பிரையன் லாரா அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

    இந்திய வீரர் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இதுவரை 80 சதங்கள் (ஒரு நாள் போட்டியில் 50 சதம், டெஸ்டில் 29 சதம், 20 ஓவர் கிரிக்கெட்டில் ஒரு சதம்) அடித்துள்ளார். சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை எட்டுவதற்கு இன்னும் 20 சதங்கள் தேவை. இப்போது கோலிக்கு 35 வயதாகிறது. ஆண்டுக்கு அவர் 5 சதங்கள் அடித்தாலும் கூட டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்வதற்கு அவர் மேலும் 4 ஆண்டுகள் தொடர்ந்து விளையாட வேண்டியது அவசியம். அப்போது அவருக்கு 39 வயதாகி விடும். இதன்படி பார்த்தால் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பது மிக மிக கடினம்.

    இன்னும் 20 சதங்கள் அடிப்பதற்கு நீண்ட காலம் தேவைப்படும். நிறைய வீரர்கள் தங்களது கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் விளையாடி கூட 20 சதங்களை எடுத்ததில்லை. கோலியால் இதை செய்ய முடியாது என்று சவால் விடமாட்டேன். ஆனால் உங்களுடைய வயது எப்போதும், எதற்காகவும் நிற்காது. கோலியால் பல சாதனைகளை படைக்க முடியும். என்றாலும் 100 சதம் என்பது மிகவும் கடினம் என்றே தோன்றுகிறது.

    அதே நேரத்தில் கோலியால் மட்டுமே இச்சாதனையை நெருங்க முடியும். அவரது கட்டுக்கோப்பான பேட்டிங், ஒழுக்கம், அர்ப்பணிப்புக்கு நான் ரசிகன். ஒவ்வொரு போட்டிக்கும் அவர் தயாராகும் விதம், அதற்காக அவர் வழங்கும் கடின உழைப்பு இவற்றை எல்லாம் பார்க்கும் போது அவருக்கு எப்படி ரசிகராக இல்லாமல் இருக்க முடியும். டெண்டுல்கர் போன்று அவரும் 100 சதங்கள் அடித்தால் மகிழ்ச்சி அடைவேன். டெண்டுல்கர் எனது அன்பான நண்பர். ஏற்கனவே சொன்னது மாதிரி விராட் கோலிக்கு நான் தீவிர ரசிகன்.

    இந்த தலைமுறை கிரிக்கெட் வீரர்களில் திறமை வாய்ந்த பேட்டராக இந்தியாவின் சுப்மன் கில் திகழ்கிறார். வரும் ஆண்டுகளில் அவர் கிரிக்கெட் களத்தில் வெகுவாக ஆதிக்கம் செலுத்துவார். அவரால் என்னுடைய சாதனைகளையும் தகர்க்க முடியும். அவர் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடும் பட்சத்தில், என்னுடைய முதல்தர கிரிக்கெட் சாதனையையும் (501 ரன்), டெஸ்ட் கிரிக்கெட்டில் எனது அதிகபட்ச ரன் சாதனையையும் (400 ரன்) நிச்சயம் தாண்ட முடியும்.

    சுப்மன் கில் மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் செஞ்சுரி அடிக்கிறார். ஒரு நாள் போட்டியில் இரட்டை சதம் அடித்துள்ளார். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நிறைய வெற்றிகரமான இன்னிங்ஸ் ஆடியுள்ளார். வருங்காலத்தில் அவர் நிறைய ஐ.சி.சி. தொடர்களை வெல்வார்.

    இவ்வாறு லாரா கூறியுள்ளார்.

    Next Story
    ×