search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    அஸ்வினை ஏன் தேர்வு செய்யவில்லை என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை: சச்சின் தெண்டுல்கர்
    X

    அஸ்வினை ஏன் தேர்வு செய்யவில்லை என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை: சச்சின் தெண்டுல்கர்

    • 2-வது இன்னிங்சில் நாதன் லயன் 4 விக்கெட் வீழ்த்தினார்
    • இந்திய பேட்ஸ்மேன்கள் முதல் இன்னிங்சில் ரன்கள் குவிக்க தவறினர்

    ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியின்ஷிப்பில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா மோசமான தோல்வியை சந்தித்தது. அஸ்வினை தேர்வு செய்யாததும், டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்ததும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன.

    இதனைத் தொடர்ந்து ஏமாற்றமடைந்த ரசிகர்கள் தங்கள் கருத்துக்களையும், விமர்சனங்களையும் சமூக ஊடகங்களில் தெரிவித்து வர, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    தோல்வி குறித்தும், அஸ்வினை நீக்கியது குறித்தும் சச்சின் தெண்டுல்கர் கூறியிருப்பதாவது:-

    அஸ்வின் போன்ற திறமையான ஆஃப் ஸ்பின்னர்கள், சாதகமில்லாத ஆடுகளங்களில் கூட சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடியவர்கள். வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் அவரின் திறமையை பயன்படுத்த முடியாது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

    போட்டியின் முதல் இன்னிங்சில் நிலைத்து நின்று, பெரிய ஆட்டத்தை இந்தியா வெளிப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், அவர்களால் அது இயலவில்லை.

    திறமையான சுழற்பந்து வீச்சாளர்கள், 'டர்னிங் ட்ராக்' எனப்படும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை மட்டுமே நம்பி இருப்பதில்லை.

    அவர்கள் காற்றின் சுழற்சியையும், பவுன்சரையும் சாமர்த்தியமாக பயன்படுத்தி வெற்றி தேடித்தருவார்கள். இந்த கருத்தை ஏற்கனவே ஆட்டத்தின் தொடக்கத்திற்கு முன்பாகவே நான் வெளிப்படுத்தியிருந்தேன். டாப் ஆர்டர் எட்டு பேட்ஸ்மேன்களில் 5 இடது கை பேட்ஸ்மேன்களுடன் ஆஸ்திரேலியா களமிறங்கியதை நாம் மறந்து விடக்கூடாது.

    இவ்வாறு சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

    209 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை ஆஸ்திரேலியா தோற்கடித்த நிலையில், எதிரணியில் 4 இடது கை பேட்ஸ்மேன் இருப்பது தெரிந்தும், வானிலையின் இருள்சூழ்ந்த தோற்றத்தினால் நான்காவதாக ஒரு பிரத்யேக வேகப்பந்து வீச்சாளருடன் போட்டிக்கு சென்றதாக பயிற்சியாளரும் முன்னாள் இந்திய அணியின் கேப்டனும், சாதனையாளருமான ராகுல் டிராவிட் தெரிவித்திருக்கிறார்.

    ஆனால், டெஸ்ட் போட்டியின் 5 நாட்களுமே, பிரகாசமான சூரிய ஒளி வீச முதல் நாளிலேயே ஆஸ்திரேலியா 300 ரன்களுக்கு மேல் குவித்தது. இதன் மூலம் இந்திய வெற்றிக்கான கதவுகள் முதல் நாளே மூடப்பட்ட சூழ்நிலை உருவானது.

    ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அஸ்வின் 13 ஆட்டங்களில் 61 விக்கெட்கள் எடுத்துள்ளார் எனபது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×