search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    நல்ல தொடக்கத்துக்கு பிறகு புதிய பேட்ஸ்மேன்கள் உடனே அதிரடியாக விளையாடுவது கடினம்- ரிஷப் பண்ட்
    X

    ரிஷப் பண்ட்

    நல்ல தொடக்கத்துக்கு பிறகு புதிய பேட்ஸ்மேன்கள் உடனே அதிரடியாக விளையாடுவது கடினம்- ரிஷப் பண்ட்

    • பேட்டிங்கின் நடுவரிசையில் சிறப்பாக நாங்கள் செயல்படவில்லை.
    • இந்தியாவில் மிடில் ஓவர்களில் பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்த சுழற்பந்து வீச்சாளர்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர்.

    விசாகப்பட்டினம்:

    இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்று இரவு விசாகப்பட்டினத்தில் நடந்தது. இதில் இந்தியா 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 179 ரன் எடுத்தது. பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்கா 19.1 ஓவரில் 131 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது.

    இந்திய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் 4 விக்கெட்டும், சுழற்பந்து வீச்சாளர் சாகல் 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் ரிஷப்பண்ட் கூறியதாவது:-

    திட்டங்களை செயல்படுத்துவதை பற்றி பேசி இருந்தேன். அதை பேட்ஸ்மேன் மற்றும் பந்து வீச்சாளர்களிடம் இருந்து நாம் பார்த்தோம்.

    நாங்கள் 15 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம் என்று நினைத்தோம். ஆனால் அதை பற்றி அதிகம் யோசிக்கவில்லை. பந்து வீச்சாளர்கள் அற்புதமாக செயல்பட்டனர். குறிப்பாக இந்தியாவில் மிடில் ஓவர்களில் பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்த சுழற்பந்து வீச்சாளர்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர்.

    இதனால் அவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டிய அழுத்தம் உள்ளது. இதுபோன்ற போட்டிகளில் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்படும்போது வெற்றி கிடைக்கும்.

    பேட்டிங்கின் நடுவரிசையில் சிறப்பாக நாங்கள் செயல்படவில்லை. ஆனால் ஒரு நல்ல தொடக்கத்துக்கு பிறகு புதிய பேட்ஸ்மேன்கள் உடனே அதிரடியாக விளை யாடுவது கடினம். இதில் அடுத்த போட்டியில் முன்னேற முயற்சிப்போம்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    தென்ஆப்பிரிக்க அணி கேப்டன் பவுமா கூறும் போது, "நாங்கள் எங்களது சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தவில்லை. இந்திய பந்து வீச்சாளர்கள் எங்களை அழுத்தத்துக்கு உள்ளாக்கினர். பார்ட்னர் ஷிப் அல்லது உத்வேகத்தை பெற முடியவில்லை.

    நாங்கள் உலகின் சிறந்த அணிகளில் ஒன்றாக இருக்கிறோம். ஆனால் இந்தபோட்டியை மட்டும் வைத்து கொண்டு எங்களை நான் மதிப்பிட மாட்டேன். தொடக்கத்தில் மூன்று விக்கெட்டுகளை இழந்ததால் நெருக்கடி ஏற்பட்டது என்றார்.

    5 ஆட்டம் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் முதல் மற்றும் 2-வது போட்டியில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. இதனால் 2-1 என்ற கணக்கில் தென்ஆப்பிரிக்கா முன்னிலையில் உள்ளது. 4-வது 20 ஓவர் போட்டி வருகிற 17-ந்தேதி ராஜ்கோட்டில் நடக்கிறது.

    Next Story
    ×