search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    கடைசி ஓவரில் 5 சிக்சர்கள் அடிப்பேன் என நினைக்கவில்லை- ரிங்குசிங்
    X

    கடைசி ஓவரில் 5 சிக்சர்கள் அடிப்பேன் என நினைக்கவில்லை- ரிங்குசிங்

    • கடைசி வரை நம்பிக்கையுடன் பேட்டிங் செய்தேன்.
    • கடந்த ஆண்டு லக்னோவுக்கு எதிராக இதுபோன்ற இன்னிங்ஸ் விளையாடியதால் என்னால் அதிரடியாக ஆட முடியும் என்ற நம்பிக்கை இருந்தது.

    அகமதாபாத்:

    ஐ.பி.எல். போட்டியில் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் வீரர் ரிங்கு சிங் கடைசி ஓவரில் 5 சிக்சர்கள் அடித்து சாதனை புரிந்தார்.

    அகமதாபாத்தில் நேற்று நடந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 204 ரன் குவித்தது.

    205 ரன் இலக்குடன் ஆடிய கொல்கத்தா அணிக்கு ஆட்டத்தின் கடைசி ஓவரில் 29 ரன் தேவைப்பட்டது. கைவசம் 3 விக்கெட் இருந்தது. ரிங்கு சிங், உமேஷ் யாதவ் களத்தில் இருந்தனர்.

    யாஷ்தயாள் கடைசி ஓவரை வீசினார். உமேஷ் யாதவ் முதல் பந்தில் ஒரு ரன் எடுத்தார். 5 பந்தில் 28 ரன் என்ற நிலை இருந்தது. இதை எடுக்க முடியாமல் கொல்கத்தா அணி தோற்று விடும் என்று தான் அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் ரிங்கு சிங் தொடர்ச்சியாக 5 சிக்சர்கள் விளாசி புதிய சாதனை நிகழ்த்தி அணியை வெற்றி பெற வைத்தார். மிகவும் பரபரப்பான இந்த ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஆட்ட நாயகன் விருது பெற்ற ரிங்கு சிங் கூறியதாவது:-

    நான் 5 சிக்சர்களை அடிப்பேன் என்று நினைக்கவில்லை. தொடர்ந்து அடித்தேன். எனக்கு நம்பிக்கை ஏற்பட்டது. நாங்கள் வெற்றி பெற்றோம். இதற்காக நான் அதிகம் யோசிக்கவில்லை. கடைசி வரை நம்பிக்கையுடன் பேட்டிங் செய்தேன்.

    கடந்த ஆண்டு லக்னோவுக்கு எதிராக இதுபோன்ற இன்னிங்ஸ் விளையாடியதால் என்னால் அதிரடியாக ஆட முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. கேப்டனும் என்னை ஊக்குவித்தார். நான் அடித்த ஒவ்வொரு பந்தும் மைதானத்துக்கு வெளியே அர்பணிக்கப்பட்டது.

    இவ்வாறு ரிங்கு சிங் கூறினார்.

    ரிங்கு சிங் இந்த ஆட்டத்தில் 21 பந்தில் ஒரு பவுண்டரி, 6 சிக்சர்கள் அடித்து 48 ரன் எடுத்தார்.

    25 வயதான அவர் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து கிரிக்கெட்டுக்குள் நுழைந்தவர் ஆவார். சிறு வயதிலேயே துப்புரவு பணியாளராக வேலை செய்து இருந்தார்.

    16 வயதில் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமாகி முதல் ஆட்டத்திலேயே 83 ரன்களை எடுத்தார். 2017-ம் ஆண்டு ஐ.பி.எல்.லில் பஞ்சாப் அணிக்காக அறிமுகம் ஆனார். கடந்த ஆண்டு கொல்கத்தா அணியில் இடம் பெற்றார். அதில் அவர் திறமையை வெளிப்படுத்தினார். இதனால் அணி லெவனில் தொடர்ந்து இடம் பெற்றார்.

    தற்போது தனது அதிரடியான ஆட்டத்தால் நம்ப முடியாத வெற்றியை ரிங்கு சிங் பெற்றுக் கொடுத்து அனைவரது உள்ளங்களிலும் இடம் பெற்று உள்ளார்.

    Next Story
    ×