search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    அதிரடியில் மிரட்டிய டிராவிஸ் ஹெட், வார்னர் - நியூசிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா 388 ரன்கள் குவிப்பு
    X

    அதிரடியில் மிரட்டிய டிராவிஸ் ஹெட், வார்னர் - நியூசிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா 388 ரன்கள் குவிப்பு

    • டாஸ் வென்ற நியூசிலாந்து பவுலிங் தேர்வு செய்துள்ளது.
    • முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 388 ரன்களை குவித்தது.

    தரம்சாலா:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், இமாசல பிரதேசத்தின் தரம்சாலாவில் உலக கோப்பை தொடரின் 27-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற நியூசிலாந்து பவுலிங் தேர்வு செய்துள்ளது.

    அதன்படி, ஆஸ்திரேலியா அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். ஆரம்பம் முதலே இருவரும் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர்.

    அதிரடியாக ஆடிய வார்னர் 65 பந்தில் 81 ரன்கள் எடுத்து அவுட்டானார். டிராவிஸ் ஹெட் 67 பந்தில் 109 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 175 ரன்களைக் குவித்தது.

    மிட்செல் மார்ஷ் 36 ரன்னும், ஸ்மித் மற்றும் லபுசேன் தலா 18 ரன்னும் எடுத்தனர். மேக்ஸ்வெல்லும் அதிரடியில் மிரட்டினார். அவர் 24 பந்தில் 41 ரன் எடுத்து அவுட்டானார். ஜோஷ் இங்லிஸ் 38 ரன்னில் வெளியேறினார்.

    நியூசிலாந்து அணி வீசிய 48வது ஓவரில் ஆஸ்திரேலிய அணி 4 சிக்சர்கள் உள்பட 27 ரன்கள் குவித்தது. கடைசி கட்டத்தில் பாட் கம்மின்ஸ் அடித்து ஆடி 14 பந்தில் 37 ரன்கள் குவித்தார்.

    49-வது ஓவரை வீசிய போல்ட் ஒரு ரன் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இறுதியில், ஆஸ்திரேலியா அணி 49.2 ஓவரில் 388 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    நியூசிலாந்து சார்பில் கிளென் பிலிப்ஸ், போல்ட் தலா 3 விக்கெட்டும், சான்ட்னர் 2 விக்கெட்டும், நீஷம், மேட் ஹென்றி தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 389 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி நியூசிலாந்து களமிறங்குகிறது.

    Next Story
    ×