search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    புஜாரா மாதிரி கவுண்டி கிரிக்கெட் விளையாடுங்கள்- ராகுலுக்கு அறிவுரை வழங்கிய வெங்கடேஷ் பிரசாத்
    X

    புஜாரா மாதிரி கவுண்டி கிரிக்கெட் விளையாடுங்கள்- ராகுலுக்கு அறிவுரை வழங்கிய வெங்கடேஷ் பிரசாத்

    • சிலர் கேஎல் ராகுலுக்கு எதிராக நான் தன்னிச்சையாக வெறுப்பைக் கொண்டுள்ளதாக நினைக்கிறார்கள்.
    • ஃபார்முக்கு திரும்பி நாட்டுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதே இந்த விமர்சனத்திற்கு உங்களது பதிலாக இருக்க முடியும்.

    கர்நாடகாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல் 2014-இல் டெஸ்ட்டில் அறிமுகமாகி இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். இவர் 3 வடிவ கிரிக்கெட்டிலும் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதனால் இவரை அணியில் இருந்து விடுவிக்குமாறு கிரிக்கெட் ரசிகர்கள் வலியுறுத்தி வந்தனர்.

    ஆனால் அதற்கு மாறாக அவரைத் துணை கேப்டனாக அறிவித்த பிசிசிஐ மற்றும் தேர்வு குழுவினர் தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து வருவது சமீப காலங்களாகவே ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

    அப்படி ஆரம்பத்தில் ரசிகர்கள் மட்டும் விமர்சித்து வந்த ராகுலை முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் சமீபத்தில் தனது டுவிட்டரில் வெளிப்படையாகவே ஆதாரங்களுடன் விமர்சித்தார். குறிப்பாக 8 வருடங்களாக விளையாடி 40-க்கும் குறைவான பேட்டிங் சராசரியை கொண்டிருந்தும் தொடர்ந்து வாய்ப்பு பெறும் நீங்கள் அதிர்ஷ்டசாலி என்று தெரிவித்த அவர் உங்களால் சுப்மன் கில் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாக வெளிப்படையாக தாக்கினார்.

    அத்துடன் உங்களை விட அஷ்வின் துணை கேப்டனாக இருப்பதற்கு தகுதியானவர் என்று தெரிவித்த அவர் ஆஸ்திரேலிய தொடரில் சொதப்பலான பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் ராகுலை மீண்டும் டுவிட்டரில் விமர்சித்தார். அதனால் ராகுல் மீதிருக்கும் பகைமை காரணமாகவே வெங்கடேஷ் பிரசாத் இவ்வாறு பேசுவதாக அவரது ரசிகர்கள் பதிலடி கொடுத்து வந்தனர்.

    இந்நிலையில் ராகுல் மீது எந்த பகைமையும் இல்லை என்றும் அவர் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற அக்கறையில் தான் ஆரோக்கியமான விமர்சனங்களை வெளிப்படுத்தியதாக வெங்கடேஷ் பிரசாத் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    சிலர் கேஎல் ராகுலுக்கு எதிராக நான் தன்னிச்சையாக வெறுப்பைக் கொண்டுள்ளதாக நினைக்கிறார்கள். ஆனால் அது அப்படியே நேர்மாறானது. ஏனெனில் அவர் சிறப்பாக விளையாட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இருப்பினும் இந்த பார்மில் தொடர்ந்து விளையாடுவது நிச்சயமாக அவருடைய தன்னம்பிக்கையை அதிகரிக்காது.

    எனவே அவர் டெஸ்ட் அணியில் மீண்டும் தனது இடத்தை பிடிக்க உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும். ஆனால் உள்ளூர் (ரஞ்சி) சீசன் முடிவுக்கு வந்து விட்டது. எனவே புஜாரா நீக்கப்பட்ட போது இங்கிலாந்தின் கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் விளையாடி ரன்களை அடித்து மீண்டும் தனது இடத்தை பிடித்தது போல் ராகுலும் விளையாட வேண்டும். ஃபார்முக்கு திரும்பி நாட்டுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதே இந்த விமர்சனத்திற்கு உங்களது பதிலாக இருக்க முடியும். ஆனால் இதற்காக உங்களால் ஐபிஎல் தொடரை புறக்கணிக்க முடியுமா.

    இவ்வாறு பிரசாத் கூறியுள்ளார்.

    Next Story
    ×