search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    இறுதிப் போட்டிக்கு சிஎஸ்கே தகுதிபெறுமா? குஜராத் டைட்டன்சுடன் சேப்பாக்கத்தில் நாளை மோதல்
    X

    இறுதிப் போட்டிக்கு சிஎஸ்கே தகுதிபெறுமா? குஜராத் டைட்டன்சுடன் சேப்பாக்கத்தில் நாளை மோதல்

    • இரு அணிகளும் மோதிய 3 ஆட்டத்திலும் குஜராத் வெற்றி பெற்றுள்ளது.
    • சொந்த மண்ணில் விளையாடுவது சி.எஸ்.கே. அணிக்கு கூடுதல் பலமாகும்.

    சென்னை:

    16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா மார்ச் 31-ந் தேதி அகமதாபாத்தில் தொடங்கியது.

    10 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் நேற்றுடன் லீக் ஆட்டங்கள் முடிந்தன. ஒவ்வொரு அணியும் 14 போட்டியில் விளையாடின.

    லீக் முடிவில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் 20 புள்ளிகள் பெற்று முதல் இடத்தை பிடித்தது. சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகியவை தலா 17 புள்ளிகள் பெற்றன. நிகர ரன் ரேட் அடிப்படையில் சென்னை அணி 2-வது இடத்தையும், லக்னோ 3-வது இடத்தையும் பிடித்ததன. இந்த 3 அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி இருந்தன.

    நேற்றைய போட்டி முடிவில் மும்பை இந்தியன்ஸ் 4-வது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

    ராஜஸ்தான் ராயல்ஸ் 5-வது இடத்தையும் (14 புள்ளிகள்), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 6-வது இடத்தையும் (14), கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 7-வது இடத்தையும் (12), பஞ்சாப் கிங்ஸ் 8-வது இடத்தையும் (12), டெல்லி கேப்பிட்டல்ஸ் 9-வது இடத்தையும் (10), சன்ரைசர்ஸ் ஐதராபாத் கடைசி இடத்தையும் (8) பிடித்து வெளியேறின.

    இன்று ஓய்வு நாளாகும். பிளே ஆப் சுற்று நாளை தொடங்குகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் 2 போட்டி நடக்கிறது.

    இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறுவதற்கான முதல் தகுதி சுற்று ஆட்டமும் (குவாலிபையர்-1), வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) ஆட்டமும் சென்னையில் நடைபெறுகிறது.

    2-வது தகுதி சுற்று ஆட்டமும் (குவாலிபையர்-2), இறுதிப்போட்டியும் அகமதாபாத்தில் நடக்கிறது.

    சேப்பாக்கத்தில் நாளை (23-ந் தேதி) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் குவாலிபையர் 1 ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். தோற்கும் அணி குவாலிபையர்-2 ஆட்டத்தில் விளையாடும்.

    24-ந் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் லக்னோ-மும்பை அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி குவாலிபையர்-2 போட்டியில் விளையாடும். தோற்கும் அணி வெளியேற்றப்படும். குவாலிபையர்-2 ஆட்டம் 26-ந் தேதியும், இறுதிப்போட்டி 28- தேதியும் நடக்கிறது.

    நாளை நடைபெறும் முதல் தகுதி சுற்று ஆட்டத்தில் டோனி தலைமையிலான சி.எஸ்.கே. அணி குஜராத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. அகமதாபாத்தில் நடந்த தொடக்க ஆட்டத்தில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்திடம் தோற்று இருந்தது. அதற்கு பதிலடி கொடுத்து 10-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    குஜராத் அணி மிகவும் பலம் பொருந்தியதாக இருக்கிறது. இதனால் அந்த அணியை வீழ்த்த சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் முழு திறமையை பயன்படுத்த வேண்டும்.

    சி.எஸ்.கே. அணி இந்த சீசனில் மும்பை, டெல்லியை 2 முறையும், லக்னோ, பெங்களூர், ஐதராபாத், கொல்கத்தாவை ஒரு தடவையும் வீழ்த்தியது. ராஜஸ்தானிடம் 2 முறையும், குஜராத், பஞ்சாப் கொல்கத்தாவுடன் ஒரு முறையும் தோற்றது. லக்னோவுடன் மோதிய மற்றொரு போட்டி மழையால் கைவிடப்பட்டது.

    சி.எஸ்.கே. அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சம பலத்துடன் திகழ்கிறது.

    தொடக்க ஜோடி பேட்டிங்கில் முக்கிய பங்கு வகிக்கிறது. கான்வே 6 அரை சதத்துடன் 585 ரன் எடுத்து 5-வது இடத்தில் இருக்கிறார். மற்றொரு தொடக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட் 3 அரை சதத்துடன் 504 ரன்கள் எடுத்து உள்ளார்.

    இது தவிர ஷிவம் துபே (385 ரன்), ரகானே, கேப்டன் டோனி போன்ற அதிரடி பேட்ஸ்மேன்களும் அணியில் உள்ளனர். மொய்ன் அலி, அம்பதிராயுடு ஆகியோர் தங்களது ஆட்டத்தை மேம்படுத்துவது அவசியமாகும்.

    பந்து வீச்சில் துஷார் தேஷ் பாண்டே (20 விக்கெட்), ஜடேஜா (17), பதிரனா (15) ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். தொடக்கத்திலும், கடைசி ஆட்டத்திலும் ரன்களை கொடுக்காமல் இருப்பது முக்கியமானதாகும்.

    சொந்த மண்ணில் விளையாடுவது சி.எஸ்.கே. அணிக்கு கூடுதல் பலமாகும். இதை வீரர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் அணி தொடர்ந்து 2-வது முறையாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளது. சி.எஸ்.கே.வை விட குஜராத்தின் பேட்டிங், பந்து வீச்சு மிகவும் நன்றாக இருக்கிறது.

    குஜராத் அணியில் சுப்மன்கில் (680 ரன்), கேப்டன் ஹர்த்திக் பாண்ட்யா, விஜய்சங்கர், விருத்திமான் சகா, மில்லர், திவேதியா போன்ற அதிரரடி பேட்ஸ்மேன்களும் முகமது ஷமி, ரஷீத்கான (தலா 23 விக்கெட்), மோகித் சர்மா (17 விக்கெட்), போன்ற சிறந்த பவுலர்களும் உள்ளனர்.

    இரு அணிகளும் மோதிய 3 ஆட்டத்திலும் குஜராத் வெற்றி பெற்றுள்ளது. இதனால் அந்த அணி சி.எஸ்.கே.வை அதன் சொந்த மண்ணில் நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும்.

    சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிகளை ரசிகர்கள் திரண்டுவந்து ரசிக்கிறார்கள் ஒவ்வொரு ஆட்டத்திலும் சி.எஸ்.கே. வீரர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்கள். நாளைய போட்டியிலும் ரசிகர்களின் கோலாகலத்துக்கு பஞ்சம் இருக்காது.

    Next Story
    ×