search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    தோல்விக்காக முகமது சமியிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்- ஹர்திக் பாண்ட்யா
    X

    தோல்விக்காக முகமது சமியிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்- ஹர்திக் பாண்ட்யா

    • ராகுல் திவேதியா அதிரடியாக விளையாடி எங்களை மீண்டும் ஆட்டத்திற்கு கொண்டு வந்தார்.
    • பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். ஆனால் பேட்ஸ்மேன்கள் ஏமாற்றத்தை அளித்துவிட்டனர்.

    அகமதாபாத்:

    ஐ.பி.எல். போட்டியில் டெல்லி அணி பரபரப்பான ஆட்டத்தில் குஜராத்தை வீழ்த்தி 3-வது வெற்றியை பெற்றது. அகமதாபாத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 130 ரன் எடுத்தது. இதனால் குஜராத் அணிக்கு 131 ரன் இலக்காக இருந்தது.

    பின்னர் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 125 ரன் எடுத்தது. இதனால் பரபரப்பான இந்த போட்டியில் டெல்லி அணி 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் குஜராத் அணி 3-வது தோல்வியை தழுவியது. 131 ரன் இலக்கை எடுக்க முடியாமல் டெல்லியிடம் அந்த அணி தோற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஹர்திக் பாண்ட்யா கடைசி ஓவரில் களத்தில் இருந்தபோது 12 ரன்னை எடுக்க முடியாமல் போனது பரிதாபமே. இஷாந்த்சர்மா கடைசி ஓவரில் 6 ரன்னே கொடுத்து திவேதியா விக்கெட்டை கைப்பற்றி டெல்லியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார்.

    குஜராத் அணியின் தோல்விக்கு கேப்டன் ஹர்திக் பாண்டயா பொறுப்பேற்றுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    இந்த எளிய இலக்கை எந்த நாளாக இருந்தாலும் நாங்கள் வெற்றிகரமாக துரத்தி இருப்போம். முக்கியமான கட்டத்தில் விக்கெட்டுகளை இழந்து விட்டோம். ராகுல் திவேதியா அதிரடியாக விளையாடி எங்களை மீண்டும் ஆட்டத்திற்கு கொண்டு வந்தார். இதனை பயன்படுத்திக் கொண்டு அணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என நினைத்தேன்.

    ஆனால் என்னால் அது முடியவில்லை. மிடில் ஓவர்களில் மிகப்பெரிய ரன்னை குவிக்கலாம் என்று எதிர்பார்த்தோம். நான் கடுமையாக முயற்சித்தேன். இந்த தோல்விக்கு நான்தான் முக்கிய காரணம். இந்த தோல்விக்கு முழு பொறுப்பேற்கிறேன்.

    டெல்லி அணியை நான் பாராட்டுகிறேன். அவர்கள் உண்மையிலேயே சிறப்பாக பந்துவீசி எங்களுக்கு நெருக்கடி கொடுத்தார்கள். ஆடுகளத்தை நான் குறை சொல்ல விரும்பவில்லை. ஏனென்றால் நாங்கள் இங்கு தான் பயிற்சி பெற்றோம். இந்த தோல்விக்காக முகமது சமியிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அவருக்காக நான் நிச்சயம் வருந்துகிறேன். பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். ஆனால் பேட்ஸ்மேன்கள் ஏமாற்றத்தை அளித்துவிட்டனர். முகமது சமி தனது திறமையான பந்துவீச்சால் எதிர் அணியை திணறடித்து விட்டார்.

    இன்னும் போட்டிகள் இருக்கிறது. இந்த போட்டி மூலம் நாங்கள் பல விஷயங்களை கற்றோம். நல்ல கிரிக்கெட்டை வெளிப்படுத்துவது அவசியமானது.

    இவ்வாறு ஹர்திக் பாண்டயா கூறியுள்ளார்.

    டெல்லி அணி 3-வது வெற்றியை பெற்றது. இந்த வெற்றி குறித்து அந்த அணியின் கேப்டன் டேவிட் வார்னர் கூறியதாவது:-

    எங்களது பேட்டிங் மோசமாக இருந்தாலும் பந்து வீச்சாளர்கள் அபாரமாக செயல்பட்டனர். ராகுல் திவேதியா களத்துக்குள் வந்தபோது பதட்டம் இருந்தது. இஷாந்த்சர்மா மிகவும் சிறப்பாக பந்துவீசி வெற்றியை பெற்று தந்தார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    டெல்லி அணி 10-வது ஆட்டத்தில் பெங்களூரை 6-ந்தேதி சந்திக்கிறது. குஜராத் அடுத்த போட்டியில் ராஜஸ்தானை 5-ந்தேதி எதிர்கொள்கிறது.

    Next Story
    ×