search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா தொடரை வெல்லுமா? 4-வது டெஸ்ட் ராஞ்சியில் நாளை தொடக்கம்
    X

    இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா தொடரை வெல்லுமா? 4-வது டெஸ்ட் ராஞ்சியில் நாளை தொடக்கம்

    • இரு அணிகளும் நாளை மோதுவது 135-வது டெஸ்டாகும்.
    • இதுவரை நடந்த 134 போட்டியில் இந்தியா 33-ல், இங்கிலாந்து 51-ல் வெற்றி பெற்றன. 50 டெஸ்ட் 'டிரா' ஆனது.

    ராஞ்சி:

    பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 5 டெஸ்ட் கொண்ட தொடரில் ஐதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 28 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சிகரமாக தோற்றது. இதற்கு விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் 106 ரன் வித்தியாசத்தில் வென்று பதிலடி கொடுத்தது. ராஜ்கோட்டில் நடந்த 3-வது போட்டியிலும் 434 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 3 டெஸ்ட் முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 4-டெஸ்ட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நாளை (23-ந் தேதி) தொடங்குகிறது.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த டெஸ்டிலும் வென்று தொடரை கைப்பற்றுமா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது.

    கே.எல். ராகுல் இந்த போட்டியிலும் ஆடவில்லை. காயம் காரணமாக அவர் 2- வது மற்றும் 3-டெஸ்டில் விளையாடவில்லை. முன்னணி வேகப்பந்து வீச்சாளாரான ஜஸ்பிரீத் பும்ராவுக்கு இந்த போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர் 3 டெஸ்டில் 17 விக்கெட் கைப்பற்றி முத்திரை பதித்தார்.

    தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் இரண்டு இரட்டை சதம் அடித்து இந்த தொடரில் 545 ரன் குவித்து முதல் இடத்தில் உள்ளார்.

    கேப்டன் ரோகித் சர்மா மீண்டும் நல்ல நிலைக்கு திரும்பியுள்ளார். ராஜ்கோட்டில் அவர் சதம் அடித்தார். சர்பிராஸ் கான் தனது முதல் டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் அரை சதம் எடுத்தார். இதேபோல மற்றொரு புதுமுக வீரரான ஜூரலும் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டார்.

    ஆல்ரவுண்டர் பணியில் ஜடேஜா சிறப்பாக செயல்படுகிறார். காயத்தால் 2-டெஸ்டில் ஆடாத அவர் கடந்த போட்டியில் சதம் அடித்தார். அவர் 4 இன்னிங்சில் 12 விக்கெட் கைப்பற்றியுள்ளார்.

    இதேபோல அஸ்வின் (11 விக்கெட்), குல்தீப் யாதவ் (8), முகமது சிராஜ் ஆகியோரும் பந்துவீச்சில் நல்ல நிலையில் உள்ளனர். பும்ரா இடத்தில் முகேஷ் குமாருக்கு வாய்ப்பு அளிக்கப்படும். அதே நேரத்தில் புதுமுக வீரர் ஆகாஷ் தீப்பும் போட்டியில் உள்ளார்.

    மற்றபடி அணியில் மாற்றம் இருக்காது என்றே கருதப்படுகிறது. ஒருவேளை ரஜத் படிதார் நீக்கப்பட்டால் தேவ்தத் படிக்கலுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

    பென்ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கு இந்த டெஸ்ட் போட்டி நெருக்கடியாகும். தோல்வியை அந்த அணி தவிர்க்க வேண்டும். தோற்றால் தொடரை இழந்து விடும். இதனால் அந்த அணி வீரர்கள் வெற்றி பெற கடுமையாக போராடுவார்கள்.

    இங்கிலாந்து அணியின் பேட்டிங்கில் டக்கெட் (288 ரன்), ஆலி போப் (285), கிராவ்லி (226) ஆகியோரும், பந்து வீச்சில் ஹார்ட்லே (16 விக்கெட்), ரேகான் அகமது (11), ஆண்டர்சன் (6) ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

    இரு அணிகளும் நாளை மோதுவது 135-வது டெஸ்டாகும். இதுவரை நடந்த 134 போட்டியில் இந்தியா 33-ல், இங்கிலாந்து 51-ல் வெற்றி பெற்றன. 50 டெஸ்ட் 'டிரா' ஆனது.

    நாளைய டெஸ்ட் காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்போர்ட்ஸ் 18 சேனலில் நேரடியாக ஒளிப்பரப்பு செய்யப்படுகிறது.

    Next Story
    ×