search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    இந்தியா-ஆஸ்திரேலியா மோதல்: சேப்பாக்கத்தில் நாளை கிரிக்கெட் கோலாகலம்
    X

    இந்தியா-ஆஸ்திரேலியா மோதல்: சேப்பாக்கத்தில் நாளை கிரிக்கெட் கோலாகலம்

    • சேப்பாக்கம் மைதானத்தில் சுமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.
    • டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி ஒருநாள் தொடரையாவது கைப்பற்றி விட வேண்டும் என்ற வேட்டையில் உள்ளது.

    சென்னை:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 4 போட்டிக் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    3 ஒருநாள் தொடரில் மும்பையில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை (புதன்கிழமை) சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடக்கிறது.

    இந்தப் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா, ஆஸ்திரேலியா வீரர்கள் நேற்று மாலை சென்னை வந்தனர். இரு அணி வீரர்களுக்கும் விமான நிலையத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இரு அணி வீரர்களும் லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலில் தங்கினார்கள்.

    ஆஸ்திரேலிய வீரர்கள் இன்று பிற்பகலில் சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டனர். இந்திய வீரர்கள் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை பயிற்சி பெறுகிறார்கள்.

    இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி ஒரு நாள் தொடரை கைப்பற்றும். ஒருநாள் தொடரை வெல்வது இந்தியாவா? ஆஸ்திரேலியாவா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் சமபலத்துடன் மோதுவதால் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும்.

    2-வது போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது. 117 ரன்னில் சுருண்டது பரிதாபமே. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சேப்பாக்கத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளயைாட வேண்டும்.

    நாளைய போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை பந்து வீச்சில் வலுவாக திகழ்கிறது. கடந்த ஆட்டத்தில் ஸ்டார்க் 5 விக்கெட் வீழ்த்தி இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்தார். இதேபோல ஆடம் சம்பா, அபோட் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

    டிரெவிஸ் ஹெட், மிச்சேல் மார்ஷ் கடந்த ஆட்டத்தில் சிறப்பாக பேட்டிங் செய்தனர். இதே போல கேப்டன் ஸ்டீவ் சுமித்தும், வார்னரும் நல்ல நிலையில் இருக்கிறார்கள்.

    டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி ஒருநாள் தொடரையாவது கைப்பற்றி விட வேண்டும் என்ற வேட்டையில் உள்ளது. அதே நேரத்தில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி டெஸ்ட்டை போலவே ஒருநாள் தொடரையும் வென்று விட வேண்டும் என்ற ஆர்வத்தில் இருக்கிறது.

    சேப்பாக்கம் மைதானத்தில் சுமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இந்தப் போட்டியை எதிர்நோக்கி உள்ளனர். அவர்கள் கிரிக்கெட் கோலாகலத்துக்கு தயாராக உள்ளனர்.

    இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்டேடியம் நிரம்பி வழியும் என்று கருதப்படுகிறது.

    தங்களது அபிமான வீரர்களின் ஆட்டத்தை நேரில் காணும் குதுகலத்தில் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

    Next Story
    ×