search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி தொடரை வெல்லுமா? நாளை 4-வது 20 ஓவர் போட்டி
    X

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி தொடரை வெல்லுமா? நாளை 4-வது 20 ஓவர் போட்டி

    • கவுகாத்தி போட்டியில் 222 ரன் குவித்தும் தோற்றது பரிதாபமே.
    • பேட்டிங்கில் ருதுராஜ் கெய்க்வாட் மிகவும் நல்ல நிலையில் உள்ளார்.

    ராய்ப்பூர்:

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான 5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.

    விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்திலும், திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 2-வது போட்டியில் 44 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது. கவுகாத்தியில் நடந்த 3-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது 20 ஓவர் போட்டி சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

    சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி கடந்த ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து தொடரை கைப்பற்றுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    கவுகாத்தி போட்டியில் 222 ரன் குவித்தும் தோற்றது பரிதாபமே. பனிப்பொழிவு பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது. அதே நேரத்தில் பந்துவீச்சில் முன்னேற்றம் அடைவது அவசியமாகும்.

    பேட்டிங்கில் ருதுராஜ் கெய்க்வாட் மிகவும் நல்ல நிலையில் உள்ளார். அவர் 1 சதம், 1 அரைசதத்துடன் 181 ரன் குவித்துள்ளார். கேப்டன் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் , ஜெய்ஷ் வால், ரிங்கு சிங் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்களும் உள்ளனர். கடந்த 3 போட்டியில் இடம் பெறாத ஸ்ரேயாஸ் அய்யர் அணியோடு இனணகிறார். அவரது வருகை கூடுதல் பலம் சேர்க்கும். அவர் ஆடும் போது திலக்வர்மா நீக்கப்படலாம்.

    பந்துவீச்சில் பிஷ்னோய் 6 விக்கெட் வீழ்த்தி இந்த தொடரில் முன்னிலையில் உள்ளார். பிரசித் கிருஷ்ணா இடத்தில் தீபக்சாஹர் இடம் பெற வாய்ப்பு உள்ளது.

    மேத்யூ வேட் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இந்த ஆட்டத்திலும் வென்று தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்யும் ஆர்வத்தில் இருக்கிறது.

    கடைசி 2 போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதிரடி பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல், ஸ்டோனிஸ், ஜோஷ் இங்லிஸ், அபோட் ஆகியோர் நாடு திரும்பியுள்ளனர். 3-வது போட்டிக்கு முன்பே ஸ்டீவ் சுமித், ஆடம் ஜம்பா ஆஸ்திரேலியா சென்று விட்டனர்.

    பென் மெக்டர்மட், ஜோஷ் பிலிப்பி, , பென் துவரீஷுயிஸ், கிறிஸ் கிரீன் ஆகியோர் அணியோடு இணைந்துள்ளனர். ஆஸ்திரேலியா பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சமபலத்துடன் திகழ்கிறது.

    இரு அணிகளும் நாளை மோதுவது 30-வது 20 ஓவர் போட்டியாகும். இதுவரை நடந்த 29 ஆட்டத்தில் இந்தியா 17-ல், ஆஸ்திரேலியா 11-ல் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி முடிவு இல்லை.

    இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் ஜியோ சினிமாவில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    Next Story
    ×