search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    2வது சூப்பர் ஓவரில் வெற்றி: டஃப் கொடுத்த ஆப்கானிஸ்தானை ஒயிட்வாஷ் செய்த இந்தியா
    X

    2வது சூப்பர் ஓவரில் வெற்றி: டஃப் கொடுத்த ஆப்கானிஸ்தானை ஒயிட்வாஷ் செய்த இந்தியா

    • இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான 3வது டி20 ஆட்டம் நேற்று நடைபெற்றது.
    • இதில் முதல் சூப்பர் ஓவரிலும் ஆட்டம் சமனில் முடிந்ததால் 2-வது சூப்பர் ஓவர் வீசப்பட்டது.

    பெங்களூரு:

    இந்தியா, ஆப்கானிஸ்தான் இடையிலான 3வது டி20 போட்டி பெங்களூருவில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 212 ரன்கள் குவித்தது. பவர் பிளேயில் முன்னணி வீரர்களின் விக்கெட்டுகளை இழந்து திணறியது. 22 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.

    5வது விக்கெட்டுக்கு ரோகித் சர்மாவுடன் ரிங்கு சிங் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக ஆடி அணியை மீட்டது.

    இறுதியில் இந்திய அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 212 ரன்களைக் குவித்தது. ரோகித் சர்மா 121 ரன்னும், ரிங்கு சிங் 69 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அதிரடி ஆடியது. முதல் 3 வீரர்களும் அரை சதம் கடந்தனர்.

    இதனால் ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 212 ரன்கள் எடுத்ததால் ஆட்டம் சமனில் முடிந்தது.

    இதையடுத்து, சூப்பர் ஓவர் வீசப்பட்டது. முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் ஒரு விக்கெட்டுக்கு 15 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்தியா 1 ஓவரில் 15 ரன்கள் எடுத்ததால் முதல் சூப்பர் ஓவர் சமனில் முடிந்தது.

    இதனால், வெற்றியை தீர்மானிக்க 2-வது சூப்பர் ஓவர் வீசப்பட்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 2வது சூப்பர் ஓவரில் 11 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ஆப்கானிஸ்தான் 1 ரன் மட்டுமே எடுத்து 2 விக்கெட்டுகளை இழந்தது. எனவே ஆப்கானிஸ்தானை 2வது சூப்பர் ஓவரில் 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தானை 3-0 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி டி20 தொடரை இந்தியா முழுமையாக கைப்பற்றி அசத்தியது.

    ஆட்ட நாயகன் விருது ரோகித் சர்மாவுக்கும், தொடர் நாயகன் விருது ஷிவம் துபேவுக்கும் அளிக்கப்பட்டது.

    2-வது சூப்பர் ஓவர் வரை வீசி கடைசி கட்டம் வரை பரபரப்பை ஏற்படுத்திய இந்தியாவுக்கு கடும் சவால் அளித்த ஆப்கானிஸ்தான் அணியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

    சர்வதேச போட்டிகளில் 2 சூப்பர் ஓவர்கள் வீசப்பட்டது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×