search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    3வது போட்டியிலும் வெற்றி - ஒருநாள் தொடரில் நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது ஆஸ்திரேலியா
    X

    சதமடித்த ஸ்டீவ் ஸ்மித்

    3வது போட்டியிலும் வெற்றி - ஒருநாள் தொடரில் நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது ஆஸ்திரேலியா

    • ஆஸ்திரேலிய அணி 3வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றது.
    • நியூசிலாந்துடனான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்தது ஆஸ்திரேலியா.

    கெய்ர்ன்ஸ்:

    நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. அத்தொடரின் முதல் 2 ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

    இந்நிலையில், தொடரின் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 267 ரன்கள் குவித்தது. பொறுப்புடன் ஆடிய ஸ்டீவ் ஸ்மித் சதமடித்து அசத்தினார். அவர் 105 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். லபுஸ்சேன் 52 ரன்களும், அலெக்ஸ் கேரி 42 ரன்களும் எடுத்தனர்.

    நியூசிலாந்து அணி சார்பில் போல்ட் 2 விக்கெட்டும், டிம் சவுதி, லாக்கி பெர்குசன், சான்ட்னர் தலா 1 விக்கெட்டு வீழ்த்தினர்.

    இதையடுத்து, 268 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. அந்த அணியில் அதிகபட்சமாக கிளென் பிலிப்ஸ் 47 ரன்கள் எடுத்தார்.ஜேம்ஸ் நீஷம் 36 ரன்னும், பின் ஆலன் 35 ரன்னும், சாண்ட்னர் 30 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில் நியூசிலாந்து அணி 49.5 ஓவர்களில் 242 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி ஒருநாள் தொடரில் 3-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்துள்ளது.

    ஸ்டீவ் ஸ்மித்துக்கு ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது ஆகியவை அளிக்கப்பட்டது.

    Next Story
    ×