search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    2ம் இன்னிங்சில் 231 ரன்னில் சுருண்டது வங்காளதேசம்

    • வங்காளதேச வீரர்கள் ஜாகிர் ஹசன் 51 ரன்கள், லித்தன் தாஸ் 73 ரன்கள் எடுத்து நம்பிக்கை அளித்தனர்.
    • 145 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடி வரும் இந்தியா 37 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.

    மிர்பூர்:

    இந்தியா- வங்காளதேசம் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மிர்பூரில் நடைபெற்று வருகிறது. வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 227 ரன்னில் சுருண்டது. இந்தியா முதல் இன்னிங்சில் 314 ரன் குவித்தது. இது வங்காளதேசம் ஸ்கோரை விட 87 ரன் கூடுதலாகும். இந்திய அணி ஒரு கட்டத்தில் 94 ரன்னில் 4 விக்கெட்டை இழந்தது. 5-வது விக்கெட்டான ரிஷப் பண்ட்-ஸ்ரேயாஸ் அய்யர் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது.

    ரிஷப் பண்ட் 93 ரன்னும், ஸ்ரேயாஸ் அய்யர் 87 ரன்னும் எடுத்தனர். கேப்டன் சகீப்-அல்-ஹசன், தஜி ஜூல் இஸ்லாம் தலா 4 விக்கெட் கைப்பற்றினார்கள்.

    87 ரன்கள் பின்தங்கிய நிலையில் வங்காளதேசம் 2-வது இன்னிங்சை ஆடியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 7 ரன் எடுத்து இருந்தது.

    இன்று 3வது நாள் ஆட்டம் நடந்தது. 2-வது ஓவரிலேயே அஸ்வின் வங்காளதேச அணியின் தொடக்க ஜோடியை பிரித்தார். நஜிமுல் உசேன் 5 ரன்னில் அவரது பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார். அப்போது ஸ்கோர் 13 ஆக இருந்தது. 2-வது விக்கெட் டுக்கு ஜாகீர் ஹசனுடன், மொமினுல் ஹக் ஜோடி சேர்ந்தார்.

    இந்த ஜோடியையும் இந்திய பவுலர்கள் நிலைத்து நிற்கவிடவில்லை. ஸ்கோர் 26ஆக இருந்தபோது வங்காளதேச அணியின் 2வது விக்கெட் சரிந்தது. மொமினுல்ஹக் 5 ரன்னில் முகமது சிராஜ் பந்தில் பெவிலியன் திரும்பினார்.

    3-வது விக்கெட்டுக்கு ஜாகீர்ஹசனுடன் சகீப்-அல்-ஹசன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடியது. 23.1-வது ஓவரில் 50-வது ரன்னை தொட்டது. இந்த ஜோடியை ஜெயதேவ் உனட்கட் பிரித்தார். சகீப்-அல்-ஹசன் 13 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

    அடுத்து வந்த முஷ்பிகுர் ரகீம் 9 ரன்னில் அக்‌ஷர் படேல் வீசிய பந்தில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். வங்காளதேசம் 70 ரன்னில் 4 விக்கெட்டை இழந்தது. மதிய உணவு இடைவேளையின்போது அந்த அணி 4 விக்கெட் இழப்புக்கு 71 ரன் எடுத்து இருந்தது.

    நிதானமாக ஆடிய ஜாகிர் ஹசன் 51 ரன்களும், லித்தன் தாஸ் 73 ரன்களும் எடுத்து நம்பிக்கை அளித்தனர். நூருல் ஹசன், தஸ்கின் அகமது தலா 31 ரன்கள் சேர்க்க, வங்காளதேச அணி 231 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அக்சர் பட்டேல் 3 விக்கெட்டுகள் எடுத்தனர். முகமது சிராஜ், அஷ்வின் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து இந்தியாவின் வெற்றிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த எளிய இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி தடுமாறியது. கேப்டன் கே.எல்.ராகுல் 2 ரன், ஷூப்மான் கில் 7 ரன், புஜாரா 6 ரன், விராட் கோலி ஒரு ரன், என முன்னணி வீரர்கள் ஏமாற்றம் அளித்தனர். இன்றைய ஆட்டநேர முடிவில் இந்தியா நான்கு விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் எடுத்திருந்தது. அக்சர் பட்டேல் 26 ரன்களுடன் களத்தில் இருக்கிறார்.

    Next Story
    ×