search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    இளையராஜா இசை நிகழ்ச்சியை தடையின்றி நடத்துவோம், மார்ச் 3-ந்தேதி பொதுக்குழு கூடும் - விஷால்
    X

    இளையராஜா இசை நிகழ்ச்சியை தடையின்றி நடத்துவோம், மார்ச் 3-ந்தேதி பொதுக்குழு கூடும் - விஷால்

    இளையராஜா இசை நிகழ்ச்சியை தடையின்றி நடத்துவோம் என்று கூறிய நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு மார்ச் 3-ஆம் தேதி கூடும் என்று கூறியுள்ளார். #Ilayaraja75 #Vishal #ProducersCouncil
    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள 5,000 சதுர அடி கொண்ட தயாரிப்பாளர் சங்கத்தின் கிளை அலுவலகத்தை திறந்து வைத்தார்.

    அதே கட்டடத்தில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் மைக்ரோப்ளெக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட இருக்கும் தமிழ்த் திரைப்படங்களுக்கான டிஜிட்டல் மாஸ்டரிங் தொழில்நுட்பத்தை மும்பையின் பிரைம் போகஸ் நிறுவனத்துடன் இணைந்து தொடங்கி வைத்தனர்.

    இந்த ‘மைக்ரோப்ளெக்ஸ்’ வசதி ‘ஐடி’ நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் தான் அமைந்திருக்கும். ஆனால் முதன்முறையாக தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு அதற்கான அலுவலகத்தில் அமைந்து இருக்கிறது. முக்கியமாக இலவசமாக கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி. அதற்காக ‘மைக்ரோப்ளெக்ஸ்’ ஆல்பர்ட்டுக்கு நன்றி.



    சங்கத்திற்கு முதன்மை அலுவலகம் இருக்கிறது. அதேபோல் தி.நகரிலும் ஒரு அலுவலகம் இருக்கிறது. ஆனால் இந்த இடம் சிறு தயாரிப்பாளர்களுக்கு உதவிகரமாக இருக்கும். பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு, படத்தின் பிரத்யேக காட்சிகள் மற்றும் இசை வெளியீட்டு விழா ஆகியவற்றிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த அலுவலகத்திற்கு வாடகை கிடையாது.

    தயாரிப்பாளர்களாகிய நாங்கள் பல வருடங்களாக எங்களுக்கு சம்பந்தமே இல்லாத புரொஜக்டருக்கு செலவழித்து வருகிறோம். இந்த விவாதத்திற்கு இப்போது தான் ப்ரைம்போக்கஸ் மூலம் ஒரு தெளிவு கிடைத்திருக்கிறது. இந்த இரண்டு நிறுவனங்களும் அந்த தொகையைக் குறைத்து இருக்கிறார்கள். தயாரிப்பாளர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு தொகையை அளித்து மாஸ்டர் யூனிட்டை அமைக்கலாமா என்ற எங்களது யோசனையை நிஜமாக்கி தந்தவர் ஆல்பர்ட்.

    மேலும் ஒரு சிறப்பம்சம் 50 ரிப்லைனிங் இருக்கைகள் கொண்ட ஒரு ப்ரீவியூ தியேட்டர் இருக்கிறது. அதை சென்சார் மற்றும் திரைப்பட வெள்ளோட்டத்திற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார்கள். நான் படம் தயாரிக்கும் போது தான் ஒரு தயாரிப்பாளருடைய கஷ்டம் புரிந்தது.



    ஆனால், அவர்கள் தயாரிக்காமலே தயாரிப்பாளர்களின் கஷ்டத்தைப் புரிந்துகொண்டு இந்த சலுகையை அளித்திருக்கிறார்கள். இப்படிபட்ட நண்பர்களை இழந்து விடாமல் எல்லோரும் நேர்மையாக செயல்பட வேண்டும். அப்படி செயல்பட்டால் எந்தவிதமான தடையாக இருந்தாலும் அதை உடைத்துவிடலாம்.

    எந்த வி‌ஷயமாக இருந்தாலும் அலுவலகம் வாருங்கள் என்று சொல்வது தான் பெருமையாக இருக்கும். இனிமேல் நாங்கள் அதைக் கூறுவோம். எங்களுக்கென்று ஒரு அலுவலகம் அமைந்திருக்கிறது.

    ‘இளையராஜா 75’ விழா பிப்ரவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கோலாகலமாக நடைபெறும். இந்த விழாவை இசைஞானிக்காக நடத்துவதில் பெருமை அடைகிறேன். இப்படிப்பட்ட மாமனிதருக்கு விழா எடுப்பது எல்லோருடைய கடமை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    சங்க துணை தலைவர் பார்த்திபன் கூறியதாவது:-

    ஒரு மனிதன் தன் வாழ்நாளில் முதன்மையாகக் கருதுவது திருமணம் தான். ஆனால் அதைவிட தலைவர் பொறுப்பில் இருக்கும் போதே சங்கத்திற்கு சிறந்ததை செய்துவிட வேண்டும் என்று செல்படுகிற விஷாலை நான் தரிசிக்கிறேன். ஆல்பர்ட் உடனும், ரஞ்சித்துடனும் அவர் பேசிக் கொண்டிருந்ததை நான் கவனித்துக் கொண்டிருந்தேன். இதைவிட தெளிவாக, சங்கத்திற்கு நன்மை செய்துவிட முடியுமா? என்று ஆச்சரியமாக இருந்தது.

    இதில் அரசியல் இல்லை. நான் யாருக்கும் விரோதி அல்ல. தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு மிகப்பெரிய தொகையை வைப்பு நிதியாக சேமித்து வைக்க நினைக்கும் விஷாலின் திட்டத்திற்கு எனது பங்களிப்பும் இருக்கும் என்பதில் மகிழ்ச்சி’.

    இவ்வாறு அவர் பேசினார்.



    விஷால் தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது தயாரிப்பாளர் ஜே.சதிஷ்குமார் இளையராஜா நிகழ்ச்சிக்குத் தடைக் கேட்டு வழக்கு தொடர்ந்தது குறித்து கேட்டதற்கு ’நீதிபதிகளை தெய்வமாக மதிக்கிறோம். இந்த வழக்குகள் எல்லாம் நல்லபடியாக முடியும். 1,000 படங்களுக்கு மேல் இசையமைத்த இளையராஜா என்ற இசை மேதையைக் கொண்டாடும் நிகழ்ச்சி இது.

    ஜே.சதிஷ்குமார் எங்கள் சங்க உறுப்பினர். எனது நண்பர் தான். எந்த வி‌ஷயமாக இருந்தாலும் அவர் நேராக கேட்டு இருந்தால் சொல்லி இருப்போம். அந்த வழக்கு போட்ட செலவில் இளையராஜா 75 நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கி பார்த்து இருக்கலாம்.

    இளையராஜாவை கவுரவிக்கும் நிகழ்ச்சியில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு யாராலும் பூட்டு போட முடியாது. நீதிமன்றத்தில் உள்ள வழக்கினை முறையாக சந்தித்து நிச்சயமாக வெற்றி பெறுவோம். நிகழ்ச்சிக்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம். எந்த தடையும் ஏற்படாது.

    சங்கத்தில் நாங்கள் எந்த முறைகேடும் செய்யவில்லை. எல்லாவற்றுக்கும் கணக்கு வைத்துள்ளோம். எனக்கு மறைமுக எதிரி என்று யாரும் இல்லை.

    தயாரிப்பாளர் சங்க வைப்பு நிதி மற்றும் கணக்கு வழக்குகள் குறித்த அனைத்தையும் பொதுக்குழுக் கூட்டத்தில் சமர்ப்பிப்போம். மார்ச் 3-ந்தேதி தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளோம் என்று கூறினார். #Ilayaraja75 #Vishal #ProducersCouncil

    Next Story
    ×