search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    சிறந்த சமூக சேவை - நடிகர் ராகவா லாரன்சுக்கு அன்னை தெரசா விருது வழங்கி கவுரவம்
    X

    சிறந்த சமூக சேவை - நடிகர் ராகவா லாரன்சுக்கு அன்னை தெரசா விருது வழங்கி கவுரவம்

    அன்னை தெரசா பிறந்தநாளையொட்டி சிறந்த சமூக சேவைக்கான விருதை பெற்ற நடிகர் ராகவா லாரன்ஸ் அந்த விருதை அவரது தாய்க்கு காணிக்கையாக வழங்குவதாக தெரிவித்தார். #RaghavaLawrence #MotherTeresaAward
    அன்னை தெரசாவின் 108-வது பிறந்த நாள் விழாவையொட்டி, சென்னை காமராஜர் அரங்கத்தில் விருது வழங்கும் விழா நடந்தது.

    மதர் தெரசா சாரிட்டபிள் டிரெஸ்ட் சார்பில் நடந்த இந்த விழாவுக்கு அதன் நிறுவனர் ஜி.கே.தாஸ் தலைமை தாங்கினார். அன்னை தெரசா பேரவை மாநில தலைவர் டி.வி. பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

    விழாவில், மிகச் சிறந்த சமூக சேவைக்கான விருது திரைப்பட நடிகர், இயக்குனர் ராகவா லாரன்சுக்கு வழங்கப்பட்டது. இதை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வழங்கினார்கள்.

    விருது பெற்றது குறித்து ராகவா லாரன்ஸ் பேசியதாவது:-

    இந்த உலகத்தில் உள்ள முதல் கடவுளாக தாயைத் தான் நான் நினைக்கிறேன். நாங்கள் ராயபுரத்தில் இருந்த போது எனக்கு 10 வயது. அப்போது நான் ‘பிரெயின் டியூமர்’ நோயால் பாதிக்கப்பட்டு இருந்தேன். பஸ்சுக்கு காசு இல்லாத நிலையில் என்னை எனது அம்மா, தோளில் சுமந்து ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அன்று என்னை அம்மா நம்பிக்கையோடு காப்பாற்றவில்லை என்றால், இன்று நான் இல்லை.

    எனவே இந்த விருதை என் அம்மாவுக்கு காணிக்கையாக்குகிறேன். நான் இந்த அளவு உயர்வதற்கு நிறைய பேர் காரணமாக இருந்திருக்கிறார்கள். முதலில் சூப்பர் சுப்பராயன் மாஸ்டர், எனக்கு கார்துடைக்கும் வேலை கொடுத்து ஆதரவு அளித்தார்.



    அங்கு என்னைப் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினி சார், எனக்கு கடிதம் கொடுத்து நான் டான்ஸ் மாஸ்டர் ஆக உதவி செய்தார். அமர்க்களம் படத்தின் மூலம் நடிகராகி இன்று இயக்குனர், தயாரிப்பாளர் என்று உருவாக எத்தனையோ பேர் உதவி இருக்கிறார்கள்.

    குறிப்பாக சூப்பர் சுப்பராயன், ரஜினிசார், விஜய், அஜீத், சிரஞ்சீவி, இயக்குனர் சரண், என்னை இயக்குனராக அறிமுகம் செய்த நாகார்ஜூனா சார் என்று பட்டியல் நீண்டு கொண்டே இருக்கும்.

    ராயபுரத்தில் இருந்து கோடம்பாக்கத்துக்கு வந்து நானும், 3 சகோதரிகளும் எப்படியெல்லாம் வறுமையை அனுபவித்தோம் என்று சொல்லிமாளாது. பொறுமையாக வளர்ந்து நான் சம்பாதிப்பதை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்று நினைத்து கொடுக்கிறேன். மக்கள் திலகத்தின் ‘தர்மம் தலைகாக்கும்’, பாடலையும், மரத்தை வைச்சவன் தண்ணி ஊத்துவான்’ என்ற ரஜினி சார் பாடலையும் மதில் வைத்துக் கொண்டு உதவி செய்து வருகிறேன்.



    சாதாரணமாக இருந்த என்னை இந்த அளவுக்கு உயர்த்திய மக்கள் தந்த பணத்தை நான் திருப்பிக் கொடுக்கிறேன். மத்திய மந்திரியாக அன்புமணி ராமதாஸ் இருந்த போது 10 குழந்தைகள் இருதய ஆபரே‌ஷனுக்கு உதவினார். திருநாவுக்கரசர் பேச்சு எனக்கு ஊக்கம் அளிக்கிறது. பணம் எவ்வளவு சம்பாதித்தாலும் போகும் போது எடுத்துக் கொண்டு போவது இல்லை. ஜெயலலிதா அம்மாவும், கலைஞர் அய்யாவும் அவர்கள் செய்த தானதருமங்களைத்தான் எடுத்துப் போனார்கள். அதை மனதில் வைத்து இனி அன்னை தெரசா வழியில் செயல்பட முடிவு செய்துள்ளேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் பேராயர் எஸ்றா சற்குணம், குமரி அனந்தன், ராகவா லாரன்ஸ் தாயார் கண்மணி, மவுலானா இலியாஸ் ரியாஸ், முன்னாள் நீதிபதி பால் வசந்தகுமார், ரூபி மனோகரன், எல்.ஐ.சி. ஆர்.தாமோதரன், முன்னாள் போலீஸ் அதிகாரி ஜான் நிக்கல்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #RaghavaLawrence #MotherTeresaAward

    Next Story
    ×