search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பெண்கள் தான் படைப்பு கடவுள்.. என் தாயும் மனைவியும் வணங்க வேண்டியவர்கள் - நடிகர் சிவகுமார்
    X

    சிவகுமார்

    பெண்கள் தான் படைப்பு கடவுள்.. என் தாயும் மனைவியும் வணங்க வேண்டியவர்கள் - நடிகர் சிவகுமார்

    • நடிகர் கார்த்தியின் உழவன் அறக்கட்டளை சார்பாக ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.
    • இதில் ஒரு விதவை தாயால் நான் உருவாக்கப்பட்டவன் என்று நடிகர் சிவகுமார் கூறினார்.

    நடிகர் கார்த்தியின் உழவன் அறக்கட்டளை சார்பாக ஒவ்வொரு ஆண்டும் விவசாயத்தில் புதிய உத்திகளை செய்பவர்களுக்கும், அதனைக் காப்பாற்ற முயற்சி எடுத்து வருபவர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இந்த விழாவில் சிவகுமார் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

    இதில் நடிகர் சிவகுமார் பேசியதாவது, " பெண்கள் தான் படைப்பு கடவுள். அதில் எந்த குழப்பமும் வேண்டாம். 5000 ஆண்கள் சேர்ந்தாலும் ஒரு குழந்தையை பெற்றெடுக்க முடியாது. ஒரு ஆண்கள் கூட இல்லாத நிலை வந்தாலும், பெண்களிடம் இருந்து செல்களை எடுத்து குளோனிங் முறையில் உயிர்களை உருவாக்கலாம் என்று விவசாயிகள் கூறியிருக்கிறார்கள். இந்த அடிப்படையில் ஒரு விதவை தாயால் நான் உருவாக்கப்பட்டவன்.


    அந்த காலத்தில் நாங்கள் இப்போது இருப்பது போல், கிரில் அமைத்து போந்தா கோழிகளை வளர்க்கவில்லை. பாம்பு வந்து லேசாக மூச்சு விட்டாலே கோழி இறந்து விடும். அதற்காக பொடாப்பு என்று கூறுவோம். கல்லிலேயே அமைத்து 6 இன்ச் அளவிற்கு மட்டும் வழி விட்டு கோழிகள் அடைந்ததும், கல்லின் குறுக்கே பலகையை வைத்து எந்த உயிரினமும் உள்ளே போகாதபடி அடைத்து விடுவோம். விடியற்காலை 4 மணிக்கு பலகையின் முன்னே இருக்கும் கல்லை நகர்த்தி பலகையை எடுத்தால் தாய்க்கோழி, சேவல் என்று அனைத்தும் அதனதன் வேலையை செய்ய வெளியே வந்துவிடும்.

    மாடு மேய்த்தவன் என்று கூறுவதில் எனக்கு கேவலம் இல்லை. 7 வயதிலிருந்து சுமார் 8 வருடங்கள் சனி ஞாயிறு கிழமைகளில் மாடு மேய்த்து இருக்கிறேன். ஒரு காட்டிருக்கும் இன்னொரு காட்டிருக்கும் இடையில் உள்ள பகுதியில் அருகு (அருகம்புல்) நிறைய இருக்கும். அங்குதான் மாடு மேய்க்கக் கொண்டு செல்வேன். அப்போது மாட்டின் வாய்க்கு மேல் பகுதி கருப்பாக இருக்கும் இரண்டு மூக்கின் வழியே மூக்கணாங் கயிறு கட்டி இருக்கும். மூச்சு சத்தம் புஸ் புஸ் என்று கேட்கும். அதோடு அருகம்புல்லை மென்று திங்கும் சத்தமும் இன்னும் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அங்கு ஆசியா கத்தி என்று ஒரு வேர் இருக்கும். நிறைய பேருக்கு அது பற்றி தெரியாது. அதை மாடு தெரியாமல் தின்று விட்டால் மூன்று நாட்களுக்கு பாலில் அந்த வாசனை வரும். இப்படி எல்லாம் தான் நான் வாழ்ந்து வந்தேன்.


    இப்போது டாக்டர் சிவராமன் கூறியது போல, சிறு தானியங்கள் எங்களுடைய அன்றாட வாழ்க்கையில் இருந்தது. அரிசி சாதமே கிடையாது. கம்பு, சோளம், வரகு, திணை இவைகளை சமைத்து தான் சாப்பிடுவோம். அதில் பெரும்பாலும் முதல் நாள் செய்த சோழ சோறு மீதம் இருக்கும். அடிப்பகுதியில் தீஞ்சு போனதால் சிவந்து இருக்கும் அதை சீவச்சுறு என்று கூறுவோம். அது எடுத்து பாத்திரத்தில் போட்டு தயிரை அதில் ஊற்றுவோம். தயிர் விழாத அளவிற்கு கட்டியாக இருக்கும் இப்போதெல்லாம் அப்படி தயிர் இல்லை. இந்த கெட்டி தயிரை விரல் வைத்து எடுத்து ஊற்றி சாப்பிடுவோம். சனி, ஞாயிறுகளில் கொள்ளு, தட்டை பயிர், பச்சை பயிரை தாளித்து வைத்துக்கொண்டு, பொன்வண்ணன் கூறியது போல மல்லாந்து படுத்துக்கொண்டு நட்சத்திரங்களை வைத்து நேரத்தைக் கணக்கிட்டு சாப்பிட்டு வாழ்ந்த காலம். இவை எல்லாம் சாப்பிட்டு வளர்ந்ததால் தான் என்பது வயதிலும் நான் இங்கு நின்று பேசிக் கொண்டிருக்கிறேன்.

    அதன் பிறகு, வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று இங்கு வந்தேன். எனது அம்மா ஏழு வருடங்கள் வெறும் ராகி கூழை சாப்பிட்டு காலை 7:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை வயலில் வேலை செய்தது நான் முன்னேற வேண்டும் என்பதற்காக தானே?! எதற்காக தான் பட்டணம் வந்து படித்தேன். அந்த ஒத்தை பொம்பளை 32 வருடங்களாக விதவையாக இருந்து என்னை வளர்த்ததால்தான் நான் இங்கு நிற்கிறேன். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், வீரபாண்டிய கட்டபொம்மனாகவே இருந்தாலும், தாய் இல்லை என்றால் யாரும் இல்லை தாய் தான் கடவுள். அவள் போட்ட பிச்சையால் தான் நான் இங்கு இருக்கிறேன்.

    அதன் பின் என் தாய் போலவே என்னுடைய வாழ்க்கை இன்னொரு பொம்பளை இருக்கிறார். நான் தாடி வைத்துக் கொண்டு ஓவியம் வரைந்து கொண்டு கல்யாணம் செய்து கொள்ளாமல் பரதேசியாகவே வாழலாம் என்று இருந்தேன். ஆனால், எனக்கு ஒரு வாழ்க்கை கொடுத்து என் வாழ்க்கையை மாற்றி எனக்கு இரு மகன்களை கொடுத்தார். அவர்களால் அகரம் அறக்கட்டளை மற்றும் உழவன் அறக்கட்டளை என்று ஆனது. சாமியாக போனவனை இரண்டு மகன்களை கொடுத்து உருவாக்கி இருக்கிறார். அன்று என் தாய் வணங்க வேண்டியவள்; இன்று என் மனைவி வணங்க வேண்டியவள்!" என்று கூறினார்.

    Next Story
    ×